Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா - ஐரோப்பிய ஒன்றியத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்!

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை (Free Trade Deal) இறுதி செய்துள்ளன. 

இது இந்தியாவின் பரந்த சந்தையை ஐரோப்பிய ஒன்றியத்திற்குத் திறந்துவிடுவதுடன், உலகப் பொருளாதாரத்தில் சுமார் கால் பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு பிரம்மாண்டமான பொருளாதாரக் கூட்டமைப்பை உருவாக்குகிறது. 

பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ளதாகவும் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய வர்த்தகச் செயலாளர் ராஜேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். 

ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் ஐரோப்பிய ஓன்றிய தலைவர் அன்டோனியோ லூயிஸ் சாண்டோஸ் டா கோஸ்டா ஆகியோர் டெல்லி வந்துள்ளதுடன், அங்கு இந்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அமெரிக்காவிலிருந்து வரும் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் அழுத்தங்களை எதிர்கொண்டு வரும் நிலையில், இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் உலகின் ஏனைய நாடுகளுடன் தங்களது மூலோபாய மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்த முனைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://adaderanatamil.lk/news/cmkw9cw3d04h4o29n8adprqxz

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் ஒப்பந்தம் டிரம்புக்கு சொல்லும் செய்தி என்ன?

ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இந்தியாவிற்கும் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் டிரம்புக்கு என்ன செய்தியை வழங்குகிறது?

பட மூலாதாரம்,Getty Images

கட்டுரை தகவல்

  • ரஜ்னீஷ் குமார்

  • பிபிசி செய்தியாளர்

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

அமெரிக்கா இந்திய இறக்குமதிகள் மீது 50% வரியையும், ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த 27 நாடுகளின் இறக்குமதிகள் மீது 15% வரியையும் விதித்தது.

தற்போது இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை அறிவித்துள்ளன. இது அமெரிக்காவுக்கு விடுக்கப்படும் ஒரு செய்தியாகப் பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா தற்போது ஆக்ரோஷமான நிலையில் இருப்பதாகத் தெரிகிறது. ஜனவரி 24 அன்று அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசன்ட், "ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது வரி விதிக்க எங்கள் ஐரோப்பிய நட்பு நாடுகள் மறுத்துவிட்டன. ஏனெனில், அவர்கள் இந்தியாவுடன் ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தத்தை விரும்பினர். யுக்ரேனுக்கு எதிரான போரில் ஐரோப்பாவே ரஷ்யாவுக்கு உதவுகிறது" என்றார்.

இந்தியாவுக்கு எதிராக ஐரோப்பாவும் வரிகளை விதிக்க வேண்டும் என்று அமெரிக்கா விரும்பியது, ஆனால் அது நடக்கவில்லை.

யுக்ரேன் மீதான ரஷ்யத் தாக்குதலை ஐரோப்பா தனக்கு நேர்ந்த பெரிய அச்சுறுத்தலாகக் கருதுகிறது. இருப்பினும், ரஷ்ய எண்ணெய் வாங்குவதைக் காரணம் காட்டி அமெரிக்கா இந்தியா மீது வரிகளை விதித்தது.

கடந்த மாதம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியாவுக்கு வருகை தந்தார். அடுத்த மாதம் ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்டத் தலைவர்கள் இந்தியா வந்தனர்.

ஐரோப்பிய ஒன்றியம் - இந்தியா இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்து அல்பானி பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் பேராசிரியர் கிறிஸ்டோஃபர் கிளேரி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

"மற்ற நாடுகளுக்கும் மாற்று வழிகள் உள்ளன என்பதை இந்த ஒப்பந்தம் நினைவூட்டுகிறது. அமெரிக்கா தனது பொருளாதார ஆதிக்கத்தின் அடிப்படையில் வரி கொள்கையை வகுத்து அதைத் தவறாகப் பயன்படுத்தினால், அதன் அழுத்தம் பலனற்றதாகிவிடும். அமெரிக்காவின் தன்னிச்சையான போக்குக்கு உலகளாவிய எதிர்ப்பு அதிகரித்து வருகிறது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஒப்பந்தம் அமெரிக்கா மீதான இந்தியாவின் சார்புத்தன்மையைக் குறைக்கும் என்று பிரபல உத்தி விவகார நிபுணர் பிரம்மா செலானியும் நம்புகிறார்.

"விநியோகச் சங்கிலிகள் பாதிக்கப்பட்டு, பாதுகாப்புவாதம் அதிகரித்து வரும் இக்கட்டான காலத்தில், இது ஒரு சாதாரண வர்த்தக ஒப்பந்தத்தை விட முக்கியமானது" என்று செலானி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

"வரிகளை ஆயுதமாகப் பயன்படுத்தும் டிரம்பின் உத்தியை இது பலவீனப்படுத்துகிறது. இந்த ஒப்பந்தம் அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளின் மீதான இந்தியாவின் சார்பைக் குறைக்கிறது" என்றும் அவரது பதிவு கூறுகிறது.

திங்களன்று இந்தியாவின் 77-வது குடியரசு தினத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் போது, இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர், "அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட விமானங்கள் இந்திய வானில் பறப்பதைப் பார்ப்பது மிகவும் உற்சாகமாக இருந்தது" என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், இந்திய வானில் அமெரிக்க விமானங்கள் மட்டுமல்ல, ரஷ்ய விமானங்களும் பறந்தன.

குடியரசு தின அணிவகுப்பில் ரஷ்யாவின் எஸ்-400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பும் காட்சிப்படுத்தப்பட்டது.

இந்தியாவின் குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுக்கு இது சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.

ஏனெனில், நேட்டோ அமைப்பு எஸ்-400ஐ தங்களுக்கு எதிரான அச்சுறுத்தலாகக் கருதுகிறது.

தி ஹிந்து நாளிதழின் தூதரக விவகாரங்கள் பிரிவின் ஆசிரியர் சுஹாசினி ஹைதர் இது குறித்து வெளியிட்டுள்ள தனது எக்ஸ் தளப் பதிவில், "இந்தியாவின் உத்தி சார்ந்த சுயாட்சி குடியரசு தின அணிவகுப்பில் முழுமையாக வெளிப்பட்டது. எஸ்-400 அமைப்பு, டி-90 டாங்கிகள் மற்றும் கூட்டாகத் தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணைகள் உள்ளிட்ட ரஷ்ய ராணுவத் தளவாடங்கள், சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்ற ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் முன்னிலையில் காட்சிப்படுத்தப்பட்டன" என்று கூறியிருந்தார்.

டிரம்ப் மற்றும் ஐரோப்பா ஆகிய இரு தரப்புமே ரஷ்யாவுடனான இந்தியாவின் நெருக்கத்தைக் குறைக்க விரும்புகின்றன. ஆனால், அமெரிக்காவைப் போல இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்க ஐரோப்பா வரிகளை விதிக்கவில்லை.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இந்தியாவிற்கும் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் டிரம்புக்கு என்ன செய்தியை வழங்குகிறது?

பட மூலாதாரம்,Getty Images

உத்தியாக மாறிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்

டெல்லியைச் சேர்ந்த 'குளோபல் டிரேட் ரிசர்ச் இனிஷியேட்டிவ்' அமைப்பின் அஜய் ஸ்ரீவஸ்தவா, இந்தச் சங்கடங்களைப் பற்றி இந்தியா கவலைப்படவில்லை என்றும், டிரம்ப் இதை விரும்பவில்லை என்றும் கூறுகிறார்.

"அமெரிக்காவின் ராஜீய சூழல் இப்போது பழையபடி இல்லை. டிரம்ப் நிர்வாகத்தின் கவனம் உள்நாட்டு அரசியல் மற்றும் பரிவர்த்தனை சார்ந்த உறவுகளிலேயே உள்ளது. அமெரிக்காவுடனான தனது கூட்டாண்மையைத் தொடர இந்தியா விரும்புகிறது, ஆனால் தற்போதைய சூழ்நிலையில் அதிகப்படியான சார்பு ஆபத்தானது என்பதையும் இந்தியா புரிந்துகொண்டுள்ளது" என்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், "டிரம்பின் வெளியுறவுக் கொள்கையில் ஒரு நிலையான தன்மை இல்லை. பாகிஸ்தான், சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் குறித்த அவரது நிலைப்பாடு அடிக்கடி மாறியுள்ளது. இது இந்தியா ஒரு நீண்ட கால உத்தியை வகுப்பதைக் கடினமாக்குகிறது" என்று குறிப்பிடுகிறார் அஜய் ஸ்ரீவஸ்தவா.

அமெரிக்க வரிகளின் தாக்கத்தைக் குறைக்க இந்தியா பல நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறது.

"ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவின் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படுவதற்கு டிரம்பின் கொள்கைகளே ஒரு காரணமாக அமைந்தன. ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்காக இரு தரப்புமே தங்களை தாராளமயமாக்கிக்கொண்டுள்ளன. இப்போது கேள்வி என்னவென்றால், ஐரோப்பிய ஒன்றியத்துடனான இந்த ஒப்பந்தம் டிரம்பின் வரிகளின் தாக்கத்தைக் குறைக்குமா என்பதுதான்" என்கிறார்.

மேலும், "அமெரிக்கா ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு மிகப்பெரிய சந்தை. கடந்த இரண்டு மாதங்களில் அமெரிக்காவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 20 சதவிகிதம் குறைந்துள்ளது. ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக ஒப்பந்தம் அமலுக்கு வர சுமார் ஒரு வருடம் ஆகும். நிச்சயமாக, இது அமல்படுத்தப்பட்டவுடன் இந்தியாவின் ஏற்றுமதி அதிகரிக்கும் மற்றும் டிரம்பின் வரிகளால் ஏற்படும் அழுத்தம் குறையும்.'' என்றார்

''நான் டிரம்புக்கு நன்றி கூறுகிறேன், ஏனென்றால் யாரையும் சார்ந்து இருக்க வேண்டாம் என்ற உண்மையை அவர் உணர்த்தியுள்ளார். டிரம்பின் நடவடிக்கைகளால் இந்தியா ஏற்கெனவே பல சீர்திருத்தங்களைச் செயல்படுத்தத் தொடங்கிவிட்டது, மேலும் பல நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகின்றன. அமெரிக்காவை மட்டுமே நம்பியிருப்பது ஆபத்தானது" என்கிறார் அஜய் ஸ்ரீவஸ்தவா.

முன்னதாக, இந்தியா ஓமன், நியூசிலாந்து மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தாலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கொள்கைகளால் உலகம் கொந்தளிப்பில் இருக்கும் வேளையில் இது தற்போது இறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க வரிகளின் தாக்கத்தைக் குறைக்க இந்தியா பல நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறது.

பட மூலாதாரம்,@narendramodi

ஒப்பந்தத்தின் தாக்கம் என்ன?

அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளின் மீதான தங்கள் சார்பைக் குறைக்க இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் விரும்புகின்றன.

இதற்கு முன்பு இந்தியா தனது சந்தையை முழுமையாகத் திறக்க முன்வராத ஒரு 'பாதுகாப்புவாத' நாடாகக் கருதப்பட்டது. ஆனால், இப்போது இந்தியா அந்த பிம்பத்திலிருந்து விடுபட்டு வருவது போல் தோன்றுகிறது.

டிரம்பின் கொள்கைகளால் ஏற்படும் பாதிப்புகளைச் சரிசெய்வதும், அதே நேரத்தில் ரஷ்யாவுடன் வலுவான உறவைப் பேணுவதும், ஐரோப்பிய ஒன்றியத்துடன் தனக்குச் சாதகமான வர்த்தகத்தை மேற்கொள்வதும் இந்தியாவுக்கு ஒரு பெரிய சவாலாக உள்ளது.

டிரம்பின் கொள்கைகளைச் சுற்றியுள்ள "நிச்சயமற்ற சூழலில்", நாடுகள் தங்கள் கடந்த கால கசப்புகளை மறந்து ஒன்றுசேரத் தயாராகி வருவதாக, தெற்காசிய ஆய்வுகள் நிறுவனத்தின் வர்த்தக மற்றும் பொருளாதார ஆராய்ச்சித் தலைவர் அமிதேந்து பாலித் 'ப்ளூம்பெர்க்' செய்தியில் தெரிவித்துள்ளார்.

"ஏதோ ஒரு நாட்டை மட்டும் சார்ந்திருப்பதை முடிவுக்குக் கொண்டு வருவது இப்போது மிகவும் அவசியமாகியுள்ளது," என்று அவர் கூறியுள்ளார்.

எம்கே குளோபல் ஃபைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் தலைமைப் பொருளாதார நிபுணர் மாதவி அரோராவின் அறிக்கை, ஐரோப்பிய ஒன்றியத்துடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் 2031ஆம் ஆண்டுக்குள் ஐரோப்பாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதியை 50 பில்லியன் டாலர்கள் வரை அதிகரிக்கும் என்று தெரிவிக்கிறது.

இந்த ஒப்பந்தம் இந்தியாவின் மருந்து, ஜவுளி மற்றும் ரசாயனத் துறைகளுக்கு நேரடிப் பலன் அளிக்கும் என்று அந்த அறிக்கை கூறுகிறது.

கடந்த நிதியாண்டில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் 136.5 பில்லியன் டாலர்களாக இருந்தது. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 17 சதவிகிதத்திற்கும் அதிகமான பங்கினை ஐரோப்பிய ஒன்றியம் கொண்டுள்ளது.

இந்தியா, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒன்பதாவது பெரிய வர்த்தகக் கூட்டாளியாகத் திகழ்கிறது.

இந்த ஒப்பந்தம் மூலம் 1.4 பில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகையைக் கொண்ட, உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றான இந்தியச் சந்தையை ஐரோப்பிய ஒன்றியம் அணுக முடியும்.

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளியாக அமெரிக்கா உள்ளது.

வர்த்தக அமைச்சகத்தின் தரவுகளின்படி, 2024-25 ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான இருதரப்பு வர்த்தகம் 131.84 பில்லியன் டாலர்களாக இருந்தது.

கடந்த நிதியாண்டில் அமெரிக்காவுடனான வர்த்தகத்தில் இந்தியா 41.18 பில்லியன் டாலர் வர்த்தக உபரியைக் கொண்டிருந்தது. அதாவது, அமெரிக்காவிடம் இருந்து வாங்கியதை விட அதிகமான பொருட்களை இந்தியா அங்கு விற்றுள்ளது.

இதில் அதிருப்தி அடைந்துள்ள அதிபர் டிரம்ப், இந்த வர்த்தக உபரி அமெரிக்காவுக்குச் சாதகமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்.

புளூம்பெர்க் எகனாமிக்ஸ் கணிப்பின்படி, டிரம்பின் வரி விதிப்புகளால் அமெரிக்காவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 52 சதவிகிதம் வரை குறையக்கூடும்.

டிரம்பின் வரி விதிப்பால் 41 பில்லியன் டாலர் வர்த்தக உபரி மோசமாகப் பாதிக்கப்படும் என்று அஜய் ஸ்ரீவஸ்தவா கூறுகிறார்.

இருப்பினும், இந்தியா தற்போது மேற்கொண்டு வரும் வர்த்தக ஒப்பந்தங்கள் இந்த இழப்பை உடனடியாக இல்லாவிட்டாலும், அடுத்த ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில் ஈடுசெய்யும் என்று அவர் கருதுகிறார்.

"ஐரோப்பிய பொருளாதாரங்கள் அமெரிக்காவை விட இந்தியாவுக்கு அதிக நன்மை பயக்கும். ஐரோப்பாவிலிருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் முக்கிய பொருட்களில் ஜெட் என்ஜின்கள் மற்றும் தொழிற்சாலை கட்டுப்பாட்டு வால்வுகள் போன்ற உயர் தொழில்நுட்ப இயந்திரங்கள் அடங்கும். இதற்கு நேர்மாறாக, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களை மிகவும் பொதுவானவை. இதில் சோளம் மற்றும் சோயாபீன்ஸ் போன்ற விவசாய பொருட்கள் அடங்கும். இந்தியாவிலிருந்து ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் முக்கிய பொருட்கள் ஜவுளி மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்கள் அடங்கும்" என்று ஸ்ரீவஸ்தவா கூறுகிறார்.

இந்தியா - ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்தத்தின்படி, 90 சதவிகிதத்திற்கும் அதிகமான ஐரோப்பியப் பொருட்கள் மீதான வரிகளை இந்தியா நீக்கவோ அல்லது குறைக்கவோ செய்யும்.

குறிப்பாக, ஐரோப்பிய கார்கள் மீதான வரி தற்போதுள்ள 110 சதவிகிதத்திலிருந்து படிப்படியாக 10 சதவிகிதமாகக் குறைக்கப்படும். இந்த சலுகை ஆண்டுக்கு அதிகபட்சமாக 2,50,000 வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

இயந்திரங்கள், ரசாயனப் பொருட்கள் மற்றும் மருந்துகள் மீது இந்தியா விதித்து வரும் வரிகள் முழுமையாக நீக்கப்படும் என்றும் முக்கிய விவசாயப் பொருட்கள் மீதான வரிகள் குறைக்கப்படும் அல்லது நீக்கப்படும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, ஐரோப்பிய கார்கள் மீதான வரி தற்போதுள்ள 110 சதவீதத்திலிருந்து படிப்படியாக 10 சதவீதமாகக் குறைக்கப்படும்.

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,இந்தியாவும் நியூசிலாந்தும் கடந்த ஆண்டு டிசம்பரில் ஒரு தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன

இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம்

கடந்த டிசம்பர் மாதம் இந்தியாவும் நியூசிலாந்தும் ஒரு தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை அறிவித்தன. உலகளாவிய பொருளாதார ரீதியில் தனது எல்லையை விரிவுபடுத்த இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இது பார்க்கப்படுகிறது.

நியூசிலாந்து வர்த்தக அமைச்சர் இதனை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் என்று வர்ணித்துள்ளார்.

இந்த ஒப்பந்தத்தின்படி, இந்தியாவுக்கான தற்போதைய ஏற்றுமதிகளில் 95 சதவிகிதப் பொருட்களுக்கு வரி நீக்கப்படும் அல்லது கணிசமாகக் குறைக்கப்படும் என்று அவர் கூறினார். இதில் நிலக்கரி, ஆட்டுக்கறி மற்றும் குழந்தைகளுக்கான பால் பவுடர் வரை பல பொருட்கள் அடங்கும்.

குறிப்பாக, நியூசிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள்களுக்கு இந்தியா தனது வரிச் சலுகையை வழங்கியுள்ளது.

அமெரிக்க ஆப்பிள்களுக்கு இந்தியச் சந்தையைத் திறக்க வேண்டும் என்று அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வரும் வேளையில், இந்தியா நியூசிலாந்துக்கு இந்த வாய்ப்பை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்குப் பதிலாக, இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் நியூசிலாந்து வரிகளை ரத்து செய்யும். மேலும், இந்திய மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களின் இடப்பெயர்வு விதிகளையும் அந்த நாடு எளிதாக்கும்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியும், நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோஃபர் லக்சனும் தொலைபேசி மூலம் உரையாடி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் இருதரப்பு வர்த்தகத்தை இரட்டிப்பாக்க நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மேலும், அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் 20 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய நியூசிலாந்து ஒப்புக்கொண்டுள்ளது.

இருப்பினும், தற்போதைய வர்த்தக அளவு குறைவாக இருப்பதால், இது உடனடியாக இந்தியாவின் ஏற்றுமதிக்கு மிகப்பெரிய உத்வேகத்தைத் தந்துவிடாது. 2024-25 ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையிலான மொத்த வர்த்தகம் சுமார் 1.3 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது.

இதில், இந்தியாவின் ஏற்றுமதி 711 மில்லியன் டாலராகவும், நியூசிலாந்தின் இறக்குமதி 587 மில்லியன் டாலராகவும் உள்ளது.

பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர்  ஸ்டார்மர்  -  நரேந்திர மோதி

பட மூலாதாரம்,Getty Images

பிரிட்டன் உடனான வர்த்தக ஒப்பந்தம்

கடந்த ஆண்டு மே மாதம் இந்தியாவும் பிரிட்டனும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

இந்த ஒப்பந்தம் இருதரப்பு வர்த்தகத்தை 34 பில்லியன் டாலர்கள் அதிகரிக்கும் என்று பிரிட்டன் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பிரிட்டன் விஸ்கி மற்றும் ஜின் மீதான வரிகள் தற்போது பாதியாகக் குறைக்கப்பட்டு, பின்னர் 40 சதவிகிதமாகக் குறைக்கப்படும். மேலும், 100 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்த கார்கள் மீதான வரிகளையும் இந்தியா 10 சதவிகிதமாகக் குறைக்கும் (குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கார்களுக்கு மட்டும்).

மறுபுறம் பிரிட்டன் ஆடை, காலணிகள் மற்றும் இறால் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் மீதான வரிகளைக் குறைத்துள்ளது.

2024 ஆம் ஆண்டின் பிரிட்டன் அரசாங்கத் தரவுகளின்படி, பிரிட்டன் மற்றும் இந்தியாவுக்கு இடையிலான சரக்கு மற்றும் சேவைகளின் மொத்த வர்த்தக மதிப்பு 58 பில்லியன் டாலராக இருந்தது.

இது பிரிட்டனின் 11-வது பெரிய வர்த்தகக் கூட்டாளியாக இந்தியாவை மாற்றியுள்ளது.

மேலும், கடந்த டிசம்பர் மாதம், இந்தியாவும் ஓமனும் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

2024 ஆம் ஆண்டின் பிரிட்டிஷ் அரசாங்கத் தரவுகளின்படி, பிரிட்டன் மற்றும் இந்தியாவிற்கு இடையிலான சரக்கு மற்றும் சேவைகளின் மொத்த வர்த்தக மதிப்பு 58 பில்லியன் டாலராக இருந்தது.

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,ஓமன் சுல்தானுடன் நரேந்திர மோதி (கோப்புப் படம்)

அடுத்து கனடா மற்றும் பிரேசில்?

பிரேசில் அதிபர் லூலா டா சில்வா பிப்ரவரி 19 முதல் 21 வரை இந்தியாவுக்கு வருகை தர உள்ளார். அண்மையில் பிரதமர் நரேந்திர மோதியுடன் அவர் மேற்கொண்ட தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து இந்தப் பயணம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரேசில் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுமே பிரிக்ஸ் (BRICS) அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளன. தற்போது இரு நாடுகளுமே டிரம்பின் வர்த்தக வரிகளால் சவால்களை எதிர்கொண்டு வருகின்றன.

மேலும், கனடாவின் பிரதமர் மார்க் கார்னி மார்ச் முதல் வாரத்தில் இந்தியாவுக்கு வருகை தர உள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cx2p14nk3xdo

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பிய ஒன்றியமும் இந்தியாவும் வரலாற்று சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன

பக்க உள்ளடக்கங்கள்

ஐரோப்பிய ஒன்றியமும் இந்தியாவும் இன்று வரலாற்று சிறப்புமிக்க, லட்சியமான மற்றும் வணிக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கான (FTA) பேச்சுவார்த்தைகளை முடித்தன, இது இரு தரப்பினராலும் இதுவரை முடிக்கப்பட்ட மிகப்பெரிய ஒப்பந்தமாகும். அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் உலகளாவிய பொருளாதார சவால்களின் போது, உலகின் இரண்டாவது மற்றும் நான்காவது பெரிய பொருளாதாரங்களுக்கு இடையேயான பொருளாதார மற்றும் அரசியல் உறவுகளை இது வலுப்படுத்தும் , பொருளாதார வெளிப்படைத்தன்மை மற்றும் விதிகள் சார்ந்த வர்த்தகத்திற்கான அவர்களின் கூட்டு உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது .

ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் கூறுகையில்,  " ஐரோப்பிய ஒன்றியமும் இந்தியாவும் இன்று வரலாற்றை உருவாக்கி, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளுக்கு இடையிலான கூட்டாண்மையை ஆழப்படுத்துகின்றன. 2 பில்லியன் மக்களைக் கொண்ட ஒரு சுதந்திர வர்த்தக மண்டலத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம், இரு தரப்பினரும் பொருளாதார ரீதியாக ஆதாயமடைய உள்ளனர். விதிகள் அடிப்படையிலான ஒத்துழைப்பு இன்னும் சிறந்த விளைவுகளை அளிக்கிறது என்பதற்கான சமிக்ஞையை உலகிற்கு அனுப்பியுள்ளோம். மேலும், எல்லாவற்றிற்கும் மேலாக, இது ஒரு ஆரம்பம் மட்டுமே - இந்த வெற்றியை நாங்கள் கட்டியெழுப்புவோம், மேலும் எங்கள் உறவை இன்னும் வலுவாக வளர்ப்போம்."

ஐரோப்பிய ஒன்றியமும் இந்தியாவும் ஏற்கனவே ஆண்டுக்கு € 180 பில்லியன் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் சேவைகளை வர்த்தகம் செய்கின்றன, இது கிட்டத்தட்ட 800,000 EU வேலைகளை ஆதரிக்கிறது. இந்த ஒப்பந்தம் 2032 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிற்கான EU பொருட்களின் ஏற்றுமதியில் 96.6% மதிப்பில் வரிகளை நீக்குவதன் மூலமோ அல்லது குறைப்பதன் மூலமோ இந்தியாவிற்கான EU பொருட்களின் ஏற்றுமதியை இரட்டிப்பாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . ஒட்டுமொத்தமாக, கட்டணக் குறைப்புக்கள் ஐரோப்பிய தயாரிப்புகள் மீதான வரிகளில் ஆண்டுக்கு சுமார் € 4 பில்லியன் சேமிக்கும்.

இது இந்தியா ஒரு வர்த்தக கூட்டாளிக்கு வழங்கிய மிகவும் லட்சிய வர்த்தக தொடக்கமாகும் . இது முக்கிய ஐரோப்பிய ஒன்றிய தொழில்துறை மற்றும் வேளாண் உணவுத் துறைகளுக்கு குறிப்பிடத்தக்க போட்டி நன்மையை வழங்கும், 1.45 பில்லியன் மக்கள்தொகை கொண்ட உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாட்டிற்கும், ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி €3.4 டிரில்லியன் உடன் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரத்திற்கும் நிறுவனங்களுக்கு சலுகை வழங்கும் .

அனைத்து அளவிலான ஐரோப்பிய வணிகங்களுக்கும் வாய்ப்புகள்

இந்தியா தனது மற்ற வர்த்தக கூட்டாளிகள் யாரும் பெறாத கட்டணக் குறைப்புகளை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வழங்கும் . எடுத்துக்காட்டாக, கார்கள் மீதான வரிகள் படிப்படியாக 110% இலிருந்து 10% வரை குறைந்து வருகின்றன, அதே நேரத்தில் ஐந்து முதல் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு கார் பாகங்களுக்கு அவை முழுமையாக ரத்து செய்யப்படும். இயந்திரங்களுக்கு 44%, ரசாயனங்களுக்கு 22% மற்றும் மருந்துகளுக்கு 11% வரையிலான கட்டணங்களும் பெரும்பாலும் நீக்கப்படும்.

புதிய ஏற்றுமதி வாய்ப்புகளை சிறு ஐரோப்பிய ஒன்றிய வணிகங்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள ஒரு பிரத்யேக அத்தியாயம் உதவும். உதாரணமாக, இரு தரப்பினரும் FTA பற்றிய பொருத்தமான தகவல்களை SME களுக்கு வழங்கவும், FTA விதிகளைப் பயன்படுத்த முயற்சிக்கும்போது அவர்கள் எதிர்கொள்ளும் எந்தவொரு குறிப்பிட்ட பிரச்சினையிலும் அவர்களுக்கு உதவவும் பிரத்யேக தொடர்பு புள்ளிகளை அமைப்பார்கள். இதற்கு மேலதிகமாக, ஒப்பந்தத்தால் வழங்கப்படும் கட்டணக் குறைப்புக்கள், ஒழுங்குமுறை தடைகளை நீக்குதல், வெளிப்படைத்தன்மை, நிலைத்தன்மை மற்றும் முன்கணிப்பு ஆகியவற்றிலிருந்து SME கள் குறிப்பாக பயனடைவார்கள்.

வேளாண் உணவு வரிகளைக் குறைத்தல்

இந்த ஒப்பந்தம் ஐரோப்பிய ஒன்றிய வேளாண் உணவுப் பொருட்களின் ஏற்றுமதி மீதான தடைசெய்யும் வரிகளை (சராசரியாக 36% க்கும் அதிகமாக) நீக்குகிறது அல்லது குறைக்கிறது, இது ஐரோப்பிய விவசாயிகளுக்கு ஒரு பெரிய சந்தையைத் திறக்கிறது. எடுத்துக்காட்டாக, ஒயின்கள் மீதான இந்திய வரிகள் அமலுக்கு வரும் போது 150% இலிருந்து 75% ஆகவும், இறுதியில் 20% வரையிலான குறைந்தபட்ச அளவுகளாகவும் குறைக்கப்படும், ஆலிவ் எண்ணெய் மீதான வரிகள் ஐந்து ஆண்டுகளில் 45% இலிருந்து 0% ஆகக் குறையும், அதே நேரத்தில் ரொட்டி மற்றும் மிட்டாய் போன்ற பதப்படுத்தப்பட்ட விவசாயப் பொருட்கள் 50% வரையிலான வரிகள் நீக்கப்படும்.

மாட்டிறைச்சி, கோழி இறைச்சி, அரிசி மற்றும் சர்க்கரை போன்ற பொருட்கள் தாராளமயமாக்கலில் இருந்து ஒப்பந்தத்தில் விலக்கப்பட்டுள்ளதால், உணர்திறன் வாய்ந்த ஐரோப்பிய விவசாயத் துறைகள் முழுமையாகப் பாதுகாக்கப்படும். அனைத்து இந்திய இறக்குமதிகளும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கடுமையான சுகாதார மற்றும் உணவுப் பாதுகாப்பு விதிகளை தொடர்ந்து மதிக்க வேண்டும்.

இதற்கு இணையாக, ஐரோப்பிய ஒன்றியமும் இந்தியாவும் தற்போது புவியியல் குறியீடுகள் (GIs) குறித்த தனி ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன, இது பாரம்பரிய சின்னமான EU விவசாயப் பொருட்கள் இந்தியாவில் அதிகமாக விற்பனை செய்ய உதவும், போலிகள் வடிவில் நியாயமற்ற போட்டியை நீக்குகிறது.

சேவை சந்தைகள் மற்றும் பாதுகாக்கப்பட்ட அறிவுசார் சொத்துரிமைக்கான சலுகை பெற்ற அணுகல்

இந்த ஒப்பந்தம் ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்களுக்கு இந்திய சேவை சந்தையில் சலுகை பெற்ற அணுகலை வழங்கும் , இதில் நிதி சேவைகள் மற்றும் கடல்சார் போக்குவரத்து போன்ற முக்கிய துறைகளும் அடங்கும். எந்தவொரு வர்த்தக ஒப்பந்தத்திலும் இந்தியாவால் நிதி சேவைகள் மீதான மிகவும் லட்சிய உறுதிமொழிகளைக் கொண்டுள்ளது, இது மற்ற கூட்டாளர்களுக்கு அவர்கள் வழங்கியதைத் தாண்டிச் செல்கிறது.

பதிப்புரிமை, வர்த்தக முத்திரைகள், வடிவமைப்புகள், வர்த்தக ரகசியங்கள் மற்றும் தாவர வகை உரிமைகள் உள்ளிட்ட அறிவுசார் சொத்துரிமை (IP) உரிமைகளின் உயர் மட்ட பாதுகாப்பையும் அமலாக்கத்தையும் இந்த ஒப்பந்தம் வழங்குகிறது . இது தற்போதுள்ள சர்வதேச அறிவுசார் சொத்துரிமை ஒப்பந்தங்களை அடிப்படையாகக் கொண்டது மற்றும் இந்திய மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அறிவுசார் சொத்துரிமைச் சட்டங்களை நெருக்கமாகக் கொண்டுவருகிறது. இது அறிவுசார் சொத்துரிமையை நம்பியிருக்கும் EU மற்றும் இந்திய வணிகங்கள் ஒருவருக்கொருவர் சந்தைகளில் வர்த்தகம் செய்து முதலீடு செய்வதை எளிதாக்கும்.

நிலைத்தன்மை உறுதிமொழிகளை மேம்படுத்துதல்

இந்த ஒப்பந்தம் ஒரு பிரத்யேக வர்த்தகம் மற்றும் நிலையான வளர்ச்சி அத்தியாயத்தைக் கொண்டுள்ளது, இது சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்துகிறது மற்றும் காலநிலை மாற்றத்தை நிவர்த்தி செய்கிறது , தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கிறது, பெண்கள் அதிகாரமளிப்பை ஆதரிக்கிறது, வர்த்தகம் தொடர்பான சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை பிரச்சினைகள் குறித்த உரையாடல் மற்றும் ஒத்துழைப்புக்கான தளத்தை வழங்குகிறது மற்றும் திறம்பட செயல்படுத்துவதை உறுதி செய்கிறது.

காலநிலை நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு மற்றும் ஆதரவிற்காக EU-இந்தியா தளத்தை நிறுவும் நோக்கில் EU மற்றும் இந்தியா ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும். இந்த தளம் 2026 ஆம் ஆண்டின் முதல் பாதியில் தொடங்கப்படும். மேலும், EUவின் பட்ஜெட் மற்றும் நிதி விதிகள் மற்றும் நடைமுறைகளுக்கு உட்பட்டு, அடுத்த இரண்டு ஆண்டுகளில் EU ஆதரவில் €500 மில்லியன் நிதியுதவி, பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்கும் அதன் நீண்டகால நிலையான தொழில்துறை மாற்றத்தை விரைவுபடுத்துவதற்கும் இந்தியாவின் முயற்சிகளுக்கு உதவும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

அடுத்த படிகள்

ஐரோப்பிய ஒன்றிய தரப்பில், பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட வரைவு உரைகள் விரைவில் வெளியிடப்படும் . இந்த உரைகள் சட்ட திருத்தம் செய்யப்பட்டு அனைத்து அதிகாரப்பூர்வ ஐரோப்பிய ஒன்றிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்படும் . பின்னர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு முடிவெடுப்பதற்காக ஆணையம் தனது முன்மொழிவை கவுன்சிலிடம் சமர்ப்பிக்கும். கவுன்சிலால் ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன் , ஐரோப்பிய ஒன்றியமும் இந்தியாவும் ஒப்பந்தங்களில் கையெழுத்திடலாம் . கையொப்பமிட்டதைத் தொடர்ந்து, ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதற்கு ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் ஒப்புதலும் , கவுன்சிலின் முடிவும் தேவை . இந்தியாவும் ஒப்பந்தத்தை அங்கீகரித்தவுடன், அது நடைமுறைக்கு வரலாம்.

பின்னணி

ஐரோப்பிய ஒன்றியமும் இந்தியாவும் முதன்முதலில் 2007 இல் ஒரு சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடங்கின. பேச்சுவார்த்தைகள் 2013 இல் இடைநிறுத்தப்பட்டு பின்னர் 2022 இல் மீண்டும் தொடங்கப்பட்டன. 14 வது மற்றும் கடைசி முறையான பேச்சுவார்த்தை சுற்று அக்டோபர் 2025 இல் நடந்தது, அதைத் தொடர்ந்து தொழில்நுட்ப மற்றும் அரசியல் மட்டத்தில் இடைநிலை விவாதங்கள் நடந்தன.

FTA பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கப்பட்ட அதே நேரத்தில், EU மற்றும் இந்தியா புவியியல் குறியீடு ஒப்பந்தம் மற்றும் முதலீட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளையும் தொடங்கின. இந்த ஒப்பந்தங்களுக்கான பேச்சுவார்த்தைகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன.

https://ec.europa.eu/commission/presscorner/detail/en/ip_26_184

  • கருத்துக்கள உறவுகள்

619659903_1431659361750722_5069304117429

  • கருத்துக்கள உறவுகள்

'மிகுந்த ஏமாற்றம்': இந்தியா - ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தம் பற்றி அமெரிக்கா கூறுவது என்ன?

இந்தியா மீதான 'அழுத்தத்தை அதிகரிக்க', அமெரிக்கா 25 சதவீத கூடுதல் வரியை விதித்ததாகவும், ஆனால் ஐரோப்பா அவ்வாறு செய்யவில்லை என்றும் பெசென்ட் கூறினார்.

பட மூலாதாரம்,Press Information Bureau (PIB)/Anadolu via Getty Images

29 ஜனவரி 2026

இந்தியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா எதிர்வினையாற்றியுள்ளது.

இந்தியாவும் ஐரோப்பாவும் இந்த வர்த்தக ஒப்பந்தத்தை 'அனைத்து ஒப்பந்தங்களின் தாய்' என்று அழைக்கின்றன.

ஆனால் அமெரிக்க கருவூலத்துறை செயலாளர் ஸ்காட் பெசென்ட் இந்த ஒப்பந்தத்தை விமர்சித்துள்ளார்.

சிஎன்பிசி செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், "அவர்கள் தங்களுக்கு எது சிறந்ததோ அதைச் செய்யட்டும். ஆனால் ஐரோப்பாவின் இந்த அணுகுமுறை எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது," என்று கூறினார்.

"யுக்ரேன் - ரஷ்யா போரினால் பாதிக்கப்பட்டவர்களின் வரிசையில் இவர்கள்தான் முன்னணியில் இருக்கிறார்கள். இந்தியா முதலில் தடை செய்யப்பட்ட ரஷ்ய எண்ணெயை தள்ளுபடி விலையில் கிடைத்ததால் வாங்கத் தொடங்கியது. பின்னர், ஐரோப்பா அதே சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயை இந்தியாவிடமிருந்து வாங்கத் தொடங்கியது. இதன் பொருள் அவர்கள் தங்களுக்கு எதிரான போருக்கு அவர்களே நிதியளிக்கிறார்கள் என்பதுதான்," என்று ஸ்காட் பெசென்ட் குறிப்பிட்டார்.

இந்தியா மீதான 'அழுத்தத்தை அதிகரிக்க', அமெரிக்கா 25 சதவீத கூடுதல் வரியை விதித்ததாகவும், ஆனால் ஐரோப்பா அவ்வாறு செய்யவில்லை என்றும் பெசென்ட் கூறினார்.

"ஐரோப்பியர்கள் எப்போதும் யுக்ரேன் மக்களின் நலனைப் பற்றிப் பேசுகிறார்கள், ஆனால் இந்தியாவுடன் இந்த ஒப்பந்தத்தைச் செய்ததன் மூலம், அவர்கள் யுக்ரேன் மக்களை விட வர்த்தகத்தில்தான் அதிக அக்கறை கொண்டுள்ளனர் என்பதைக் காட்டியுள்ளனர்'' என்று கூறினார்.

பெசென்ட் இதற்கு முன்பும் இந்த ஒப்பந்தத்தை விமர்சித்திருந்தார்.

ஜனவரி 26 அன்று ஏபிசி நியூஸிடம் பேசிய அவர், "யுக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவர ஐரோப்பாவை விட அமெரிக்கா அதிக தியாகம் செய்துள்ளது. ரஷ்ய எண்ணெயை வாங்கியதற்காக இந்தியா மீது நாங்கள் 25 சதவீத வரி விதித்தோம். ஐரோப்பா இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்யப் போகிறது," என்று கூறினார்.

அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேம்சன் கிரேர்

பட மூலாதாரம்,Chris J. Ratcliffe/Bloomberg via Getty Images

படக்குறிப்பு,ஜேமிசன் கிரீர்

'இந்தியாவுக்கு சாதகமான ஒப்பந்தம்'

முன்னதாக, அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீர், ஃபாக்ஸ் பிசினஸ் ஊடகத்திடம் பேசுகையில், இந்த ஒப்பந்தம் ஐரோப்பாவை விட இந்தியாவிற்கு சாதகமாக இருப்பதாகத் தெரிவித்தார்.

"இதுவரை இந்த ஒப்பந்தத்தின் சில விவரங்களை நான் பார்த்துள்ளேன். தெளிவாகச் சொல்லப்போனால், இதன் மூலம் இந்தியா அதிக பலன்களைப் பெறுவது போல் தெரிகிறது. ஐரோப்பிய சந்தைகளில் இந்தியாவிற்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும்," என்றார்.

இந்தியா ரஷ்ய எண்ணெயை இன்னும் வாங்குகிறதா என்ற கேள்விக்கு கிரீர் பதிலளிக்கையில், "அவர்கள் இந்த திசையில் நிறைய முன்னேற்றம் அடைந்துள்ளனர். ஆனால் இந்த விவகாரத்தில் அவர்கள் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. அவர்களுக்குத் தள்ளுபடி விலையில் கிடைக்கும் ரஷ்ய எண்ணெய் பிடித்துள்ளது. எனவே அதை விட்டுக்கொடுப்பது அவர்களுக்கு கடினமாக உள்ளது," என்று கூறினார்.

இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தம்

ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன்

பட மூலாதாரம்,Prakash Singh/Bloomberg via Getty Images

ஜனவரி 27 அன்று, இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அந்தோனியோ லூயிஸ் சாண்டோஸ் டா கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோர் இணைந்து இந்தியா - ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தை அறிவித்தனர்.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோதி, ''இந்தியா தனது வரலாற்றிலேயே இதுவரை இல்லாத மிகப்பெரிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை நிறைவு செய்துள்ளது. இன்று 27-ஆம் தேதி, ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகளுடன் இந்தியா தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை செய்திருப்பது ஒரு மகிழ்ச்சியான நிகழ்வு" என்றார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் , மற்ற நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்க வர்த்தகத்தை ஒரு ராஜீய ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்.

இதுவே இந்த ஒப்பந்தத்திற்கு மிக முக்கிய காரணம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட்

பட மூலாதாரம்,Harun Ozalp/Anadolu via Getty Images

படக்குறிப்பு,ஸ்காட் பெசென்ட்

அமெரிக்காவின் வரி நடவடிக்கைக்குப் பதிலளிக்கும் விதமாக, ஐரோப்பிய ஒன்றியமும் இந்தியாவும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை நோக்கி வேகமாக நகர்ந்தன என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கிரீன்லாந்து மீதான அமெரிக்கக் கட்டுப்பாட்டை ஐரோப்பிய நாடுகள் எதிர்த்ததால், அவர்கள் மீது வரி விதிக்கப்படும் என ஆரம்பத்தில் மிரட்டினார், ஆனால் பின்னர் தனது முடிவிலிருந்து பின்வாங்கினார்.

ரஷ்ய எண்ணெய் வாங்குவதைக் காரணம் காட்டி, இந்தியா மீது அமெரிக்கா 25 சதவீத கூடுதல் வரியை விதித்தது. ஒட்டுமொத்தமாக, டிரம்ப் நிர்வாகம் இந்தியா மீது 50 சதவீத வரியை விதித்துள்ளது.

ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்

இந்தியா - ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தம் பற்றி அமெரிக்காவின் அதிருப்தி என்ன?

பட மூலாதாரம்,Press Information Bureau (PIB)/Anadolu via Getty Images

ஐரோப்பிய ஆணையம் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில், இந்தியா தனது மற்ற வர்த்தக கூட்டாளிகளுக்கு வழங்காத வரிச் சலுகைகளை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வழங்கும் என்று கூறியுள்ளது.

உதாரணமாக, கார்கள் மீதான வரி படிப்படியாக 110%-லிருந்து 10%-ஆகக் குறைக்கப்படும், அதே நேரத்தில் கார் பாகங்கள் மீதான வரி ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் முழுமையாக நீக்கப்படும்.

மேலும், இந்த ஒப்பந்தம் சிறிய ஐரோப்பிய நிறுவனங்கள் புதிய ஏற்றுமதி வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள உதவும்.

இயந்திரங்கள் மீது 44% வரையிலும், ரசாயனங்கள் மீது 22% வரையிலும் மற்றும் மருந்துகள் மீது 11% வரையிலும் விதிக்கப்படும் வரிகள் பெரும்பாலும் நீக்கப்படும்.

2024–25 நிதியாண்டில், இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான பொருட்கள் வர்த்தகம் சுமார் ரூபாய் 11.5 லட்சம் கோடியாகவும், சேவை வர்த்தகம் ரூபாய் 7.2 லட்சம் கோடியாகவும் இருந்தது.

இந்த ஒப்பந்தத்தின் முதல் நாளிலிருந்தே ஜவுளி, ஆயத்த ஆடைகள் மற்றும் உடைகள் மீதான வரி பூஜ்ஜியமாக இருக்கும் என்று இந்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் தெரிவிக்கிறது.

''இந்தச் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், 263.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஐரோப்பிய ஒன்றிய ஜவுளிச் சந்தைக்கான வாய்ப்பைத் திறந்துவிடும். இது கைவினைஞர்கள், பெண்கள், நெசவாளர்கள் மற்றும் குறு, சிறு, நடுத்தரத் தொழில் தொகுப்புகளுக்குப் குறிப்பிடத்தக்க வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.''

பிரதமர் நரேந்திர மோதி, இது உலகின் 2-வது பெரிய பொருளாதாரம் (ஐரோப்பா) மற்றும் 4-வது பெரிய பொருளாதாரம் (இந்தியா) இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது என எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஐரோப்பாவிற்கு 6.41 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்ய இந்தியா தயாராக உள்ளதாக அவரது பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, ''இந்தியாவிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்திற்குச் செல்லும் சுமார் 99 சதவீத ஏற்றுமதிகள் இனி பூஜ்ஜிய வரி வரம்பிற்குள் வரும். அதேபோல், இந்தியா தனது 99 சதவீதத்திற்கும் மேலான ஏற்றுமதிக்கு ஐரோப்பிய சந்தையில் நேரடி மற்றும் எளிதான அணுகலைப் பெறும்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியத் தொழிலாளர்களும் மாணவர்களும் பயனடைவார்கள். ஒப்பந்தத்தின்படி, தகவல் தொழில்நுட்பம் (IT), கல்வி மற்றும் நிதி போன்ற துறைகளில் இந்தியாவிற்கு அனுமதி வழங்கப்படும்.

அதோடு, ஐரோப்பாவிற்குப் படிக்கச் செல்லும் மாணவர்களுக்குப் படிப்பு முடிந்த பிறகு தங்குவதற்கான 9 மாத கால விசா கட்டமைப்பு குறித்தும் ஒப்புக்கொள்ளப்படுள்ளது.'' என தெரிவிக்கப்படுள்ளது

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c20zy1x308wo

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா வசிப்பதற்கு நல்ல நாடு தான். ஆனால், 2016 இலும், பின்னர் 2024 இலும் கிடைத்த பாடங்களின் படி அமெரிக்காவின் கட்டமைப்பில் ஒரு பாரிய "ஓட்டை (vulnerability)" இருப்பது தெளிவாகி விட்டது: ட்ரம்ப் போன்ற உள்ளூரில் பிறந்த எந்த ஒரு பன்னாடையும் கொஞ்சம் காசைச் சேகரித்தால் அமெரிக்காவில் அதிபராகலாம் என்பது தான் அந்த ஓட்டை. இது போன்ற ஒரு ஓட்டையை 1780 களில் அமெரிக்க அரசியல் சாசனத்தை எழுதிய மூத்தோர் குழு எதிர்பார்க்கவில்லை. இனி இந்த ஓட்டையை அடைக்கவும் முடியாது.

எனவே, படிப்படியாக அமெரிக்க டொலர், அமெரிக்க பங்குச் சந்தை, அமெரிக்க தொழில் நுட்பம் என்பவற்றில் இருந்து நாடுகள் விலகிச் செல்ல ஆரம்பிக்கும்.

கனடாவே இனி அமெரிக்காவுடன் பழைய நிலை உறவை நிலைநாட்டப் போவதில்லை எனும் போது, வேறு நாடுகள் விலகி ஓடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.