Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கை கடற்றொழிலாளர்கள் மீது இந்திய கடற்படையினர் தாக்குதல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

New-Project.jpg?resize=600%2C300&ssl=1

சர்வதேச கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கை கடற்றொழிலாளர்கள் மீது இந்திய கடற்படையினர் தாக்குதல்!

சர்வதேச கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கை கடற்றொழிலாளர்கள் இந்திய கடற்படையினரால் தாக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது

தாக்குதலுக்குள்ளான மீனவர்கள் கராப்பிட்டிய மற்றும் வென்னப்புவ பகுதிக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்

ஆழ்கடல் பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக வென்னப்புவ துறைமுகத்தில் இருந்து சென்ற இலங்கை மீனவ படகுமீது இந்திய கடலோர காவல்படையினரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளiமை அண்மையில் தெரியவந்தது

குறித்த மீனவர்கள் மீது கடுமையாக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன் மீனவர்களின் உடலில் காயங்கள் ஏற்பட்டிருந்தது

போதைப்பொருள் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட நிலையில் தாக்குதல் நடாத்தியதாக குறித்த மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆழ்கடலில் மீன்பிடி நடவடிக்கையினை நிறைவு செய்து மீண்டும் இலங்கை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போது இலங்கை கடல் எல்லைக்குள் வைத்து இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது

இதேவேளை தாம் எதிர்கொண்ட அசம்பாவிதம் தொடர்பாக தாக்குதலுக்குள்ளான மீனவர்கள் இலங்கை கடற்படையினருக்கு தகவல் வழங்கியிருந்ததைடுத்து அவர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்

தாக்குதலுக்குள்ளான மீனவர்கள் நால்வர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்குட்படுத்தப்பட்டுள்ளதுடன் மற்றுமொருவர் வென்னப்புவ பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்

இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக இந்த அரசுடன் ராஜதந்திரமட்டத்தில் கலந்துரையாடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

https://athavannews.com/2026/1462572

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச கடற்பரப்பில் இலங்கை மீனவர்கள் மீது இந்திய கடற்படை தாக்குதல்; 4 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

Published By: Vishnu

02 Feb, 2026 | 04:46 AM

image

( செ.சுபதர்ஷனி)

சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் நிறைவு செய்ததன் பின்னர் மீண்டும் கரைக்கு திரும்பிக்கொண்டிருந்த வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் மனிதாபிமானமற்ற முறையில் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் காயமடைந்த 12 மீனவர்களில் நால்வர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில், இலங்கை கடற்படையினரின் உதவியுடன் மீட்கப்பட்டு காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி வென்னப்புவ மீன்பிடித் துறைமுகத்திலிருந்து தினிதி துவ உள்ளிட்ட இரு ஆழ்கடல் மீன்பிடி படகுகளில் 12 மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்றுள்ளனர். கடந்த 28 ஆம் திகதி அவர்கள் மீன்பிடிப் பணிகளை முடித்துக்கொண்டு மீண்டும் வென்னப்புவ நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த போது, சர்வதேச கடற்பரப்பில் வைத்து இந்திய கடற்படையினரின் கப்பலொன்று இவர்களை வழிமறித்துள்ளது. அதனைத் தொடர்ந்து மீன்பிடி படகிற்குள் அத்துமீறி நுழைந்த இந்திய அதிகாரிகள், மீனவர்களிடம் போதைப்பொருள் மற்றும் செய்மதித் தொலைபேசிகள் உள்ளனவா எனக் கேட்டு சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

இந்தத் தாக்குதல் குறித்து பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் தெரிவிக்கையில், இந்திய கடற்படையினர் மீனவர்களை விலங்குகளைப் போலக் கீழே தள்ளி மிதித்தும், ஐஸ் கட்டிகள் மீது படுக்க வைத்தும் முதுகுப் பகுதியில் கடுமையாகத் தாக்கியதாகக் குறிப்பிட்டனர். போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதாகச் சந்தேகம் எழுப்பி, படகிலிருந்த உபகரணங்கள் மற்றும் உடமைகளைச் சேதப்படுத்தியதோடு, மீனவர்களுக்குக் கடும் உடல் ரீதியான சித்திரவதைகளை இந்திய அதிகாரிகள் வழங்கியுள்ளனர். இலங்கை எல்லைக்கு மிக அண்மித்த பகுதியில் வைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக உறவினர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

காயமடைந்த மீனவர்களில் நால்வரின் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால், அவர்கள் நடுக்கடலில் வைத்து இலங்கை கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டு இன்று அதிகாலை கரைக்கு அழைத்து வரப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களில் இருவரது நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏனைய மீனவர்கள் படகுகளுடன் கரைக்குத் திரும்பிக்கொண்டிருக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே, இந்த விவகாரத்தை அரசாங்கம் மிகவும் தீவிரமாகக் கையாள்வதாகக் குறிப்பிட்டார். இது தொடர்பாக முறையான மற்றும் விரிவான விசாரணைகளை உடனடியாக முன்னெடுக்குமாறு இலங்கை கடற்படைக்கும் வெளிவிவகார அமைச்சுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் உறவினர்களால் வைத்தியசாலைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

https://www.virakesari.lk/article/237584

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியக் கடலோரக் காவல்படையின் தாக்குதல்: அமைச்சர் சந்திரசேகர் கடும் கண்டனம்

Feb 2, 2026 - 07:17 PM

இந்தியக் கடலோரக் காவல்படையின் தாக்குதல்: அமைச்சர் சந்திரசேகர் கடும் கண்டனம்

பொய்க் குற்றச்சாட்டுகளை முன்வைத்து இலங்கை மீனவர்கள் குழுவொன்றின் மீது இந்தியக் கடலோரக் காவல்படை அதிகாரிகள் நடத்திய தாக்குதலுக்குத் தனது கடும் கண்டனத்தைத் தெரிவிப்பதாகக் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். 

இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் இன்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அமைச்சர், இச்சம்பவம் குறித்து இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். 

வென்னப்புவ, வெல்லமன்கரை துறைமுகத்திலிருந்து கடற்தொழிலுக்காகப் புறப்பட்டுச் சென்ற இரண்டு படகுகளில் இருந்த 12 மீனவர்கள் மீது, கடந்த 29ஆம் திகதி இலங்கை கடற்பரப்பில் வைத்து இந்தியக் கடலோரக் காவல்படை அதிகாரிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். 

சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடித்துவிட்டு நாடு திரும்பிக்கொண்டிருந்த போதே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். 

தாக்குதலுக்குள்ளான மீனவர்களில் நால்வர் கடற்படையினரின் படகு மூலம் கரைக்கு அழைத்து வரப்பட்டு காலி, கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் 6 மீனவர்களை அழைத்து வருவதற்காகக் கடற்படைக் கப்பல் ஒன்று புறப்பட்டுச் சென்றுள்ளதாகக் கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமான்டர் புத்திக சம்பத் தெரிவித்துள்ளார். 

இதேவேளை, இச்சம்பவம் குறித்து அரசாங்கம் வெளிப்படையான விசாரணையை நடத்த வேண்டும் என அகில இலங்கைநெடுநாள் மீன்பிடி படகு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் டிரோன் மென்டிஸ் வலியுறுத்தியுள்ளார். 

"மூன்று படகுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதில் இரண்டு படகுகள் இலங்கை கடற்பரப்பிலேயே தாக்கப்பட்டுள்ளன. எல்லையில் இருந்து எமது கடற்பரப்பிற்குள் நுழைந்தே அவர்கள் தாக்கியுள்ளனர். அவ்வாறு தாக்கும் வரை எமது அதிகாரிகள் என்ன செய்தார்கள் என நாம் முதலில் கேட்க வேண்டும். இது குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும். மனிதாபிமானமற்ற முறையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது குறித்து ஆராயுமாறு நாம் எமது இரு அமைச்சர்களிடமும் கோருகிறோம். கடற்படையினரிடமும் முறையான விசாரணையைக் கோருகிறோம். எமது மீனவர்களைத் தாக்கிவிட்டுச் செல்லும் வரை என்ன செய்தீர்கள் எனக் கடற்படையினரிடமும் கேட்கிறோம்." என அவர் தெரிவித்தார். 

எவ்வாறாயினும், இலங்கை கடற்பரப்பிற்குள் மீனவர்கள் மீது இந்தியக் கடலோரக் காவல்படை நடத்திய இத்தாக்குதலின் போது, மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தவறியதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து 'அத தெரண' கடற்படையினரிடம் வினவியது. 

இதற்குப் பதிலளித்த கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமான்டர் புத்திக சம்பத், இலங்கை கடற்பரப்பை முழுமையாக ஒரே நேரத்தில் கண்காணிப்பது நடைமுறைச் சாத்தியமற்றது எனக் குறிப்பிட்டார்.

https://adaderanatamil.lk/news/cml584kzb04r6o29nuwy6a6x6

  • கருத்துக்கள உறவுகள்

'எமது வீட்டுக்குள் வந்து எங்களை தாக்குவது போன்றது' - அடையாளம் தெரியாத குழுவால் தாக்கப்பட்ட இலங்கை மீனவர்கள்

இந்திய கரையோர பாதுகாப்பு பிரிவு இலங்கை மீனவர்களை தாக்கியதாக குற்றச்சாட்டு - நடந்தது என்ன?

கட்டுரை தகவல்

  • பிபிசி சிங்கள சேவை

  • 3 பிப்ரவரி 2026

''இந்த சம்பவம் இலங்கை கடற்பரப்பிலேயே நடந்தது. காலி பிரதேசத்திற்கு நேராக மேற்கு கடற்பரப்பில் இந்த சம்பவம் நேர்ந்தது. இது எமக்கு புதுமையாகவுள்ளது. இந்த கப்பல் எமது நாட்டு ரேடார் கட்டமைப்பில் நிச்சயமாக பதிவாகியிருக்கும்''

''எமது நாடு... எமது வீட்டுக்குள் வந்து, எம்மீது தாக்கியதை போன்றதொரு சம்பவம் தான் இது. எமது எல்லைக்குள் வந்து தாக்குதலை நடத்தியமையானது, எமது வீட்டுக்குள் வந்து தாக்கியதை போன்றது அல்லவா'' என இலங்கை மீனவர் சுரங்க நிசல் பிபிசி சிங்கள சேவையிடம் தெரிவித்துள்ளார்.

மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்ற இலங்கை மீனவர்கள் மீது நடுக்கடலில் வைத்து, வெளிநாட்டவர்கள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சம்பவமானது நடந்துள்ளது.

தம்மீது இந்திய பாதுகாப்பு பிரிவினரே தாக்குதல் நடத்தியதாக, தாக்குதலுக்கு இலக்கான இலங்கை மீனவர்கள் கூறி வருகின்ற நிலையில், இது ராஜீய பிரச்னையாக உருவெடுத்துள்ளது.

'ராஜீய ரீதியில் தீர்த்துக்கொள்ள வேண்டிய பிரச்னை'

இது ராஜீய ரீதியில் தீர்த்துக்கொள்ள வேண்டிய பிரச்னை என கடற்றொழில் பிரதி அமைச்சர் ரத்ன கமகே, பிபிசி சிங்கள சேவையிடம் தெரிவித்துள்ளார்.

''29ம் தேதி இரண்டு படகுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 30ம் தேதி மற்றுமொரு படகில் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 29ம் தேதி தாக்குதல் தொடர்பான தகவல் கிடைத்தவுடன், கடற்படைக்கு நாங்கள் அறிவித்து, படகொன்றை விரைவில் அனுப்பி அவர்களை காலிக்கு அழைத்து வந்தோம். அவர்களை மருத்துவமனையில் அனுமதித்து, சிகிச்சைகளின் பின்னர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்''

''இந்திய பாதுகாப்பு பிரிவினர் தாக்குதல் நடத்தியதாக மீனவர்கள் கூறுகின்றார்கள். எனினும், எமக்கு அது தொடர்பில் உறுதியாக தெரியாது. அதனால், வெளிவிவகார அமைச்சுக்கும், கடற்படைக்கும் நாங்கள் அறிவித்தோம். தாக்குதலை நடத்துவதற்கு வருகைத் தந்த படகு இலங்கைக்கு சொந்தமானதா? அல்லது வெளிநாட்டுக்கு சொந்தமானதா என்பது தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்காகவே நாங்கள் அவர்களுக்கு அறிவித்தோம்'' என்கிறார் ரத்ன கமகே.

இலங்கை மீனவர் சுரங்க நிசல்

படக்குறிப்பு,இலங்கை மீனவர் சுரங்க நிசல்

''அது வெளிநாட்டுக்கு சொந்தமானது என்றால், அது அதிகாரப்பூர்வமானதா அல்லது அதிகாரப்பூர்வமற்றதா என்பது குறித்தும் ஆராயுமாறு கூறியுள்ளோம். அதன்பின்னர் போலீஸ் தரப்பிலும் விசாரணைகளை நடத்துமாறு நாங்கள் அறிவித்துள்ளோம். தாக்குதலுக்கு இலக்கான நபர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்து, அது தொடர்பிலான முழுமையான அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு கோரியுள்ளோம்'' என்கிறார் ரத்ன கமகே.

எனினும், இந்த தாக்குதலை இந்திய தரப்பினால் மேற்கொள்ளப்பட்டது என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என கடற்றொழில் பிரதி அமைச்சர் குறிப்பிடுகின்றார்.

''எனினும், இது வெளிநாடொன்றுடன் தொடர்புப்பட்டுள்ளமையினால், ராஜீய ரீதியில் இதற்கு தீர்வு காண வேண்டும்'' என அவர் கூறுகின்றார்.

இந்திய கரையோர பாதுகாப்பு பிரிவு இலங்கை மீனவர்களை தாக்கியதாக குற்றச்சாட்டு - நடந்தது என்ன?

படக்குறிப்பு,தாக்குதலுக்கு இலக்கான ஒருவர்

நெடுநாள் மீன்பிடி படகின் உரிமையாளர் என்ன சொல்கின்றார்?

இலங்கை கடல் எல்லைக்குள் மற்றும் சர்வதேச கடல் எல்லையில் இலங்கை நெடுநாள் மீன்பிடி படகிலிருந்த மீனவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் 8 பேர் காயமடைந்துள்ளதுடன், அவர்களில் பலத்த காயமடைந்த நால்வர் காலி போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அனைத்து இலங்கை நெடுநாள் மீன்பிடி படகின் உரிமையாளர் சங்கம் தெரிவிக்கின்றது.

வெல்லமன்கரய மீன்பிடி துறைமுகத்திலிருந்து தொழிலுக்கு சென்ற சிலாபம் - தொடுவாவ பிரதேசத்தின் 'தினிதி துவ' பெயரை கொண்ட இரண்டு படகுகள் மற்றும் 'சந்துன் புதா' ஆகிய மூன்று படகுகளில் சென்ற மீனவர்களே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக சங்கத்தின் செயலாளர் ருவன் பெர்ணான்டோ தெரிவிக்கின்றார்.

'தினிதி துவ 1' மற்றும் 'தினிதி துவ 2' ஆகிய இரண்டு படகுகளில் சென்றவர்களும் ஒரு மாதத்திற்கு மேல் தொழில் செய்து, மீண்டும் வெண்ணப்புவ நோக்கி வருகைத் தந்துகொண்டிருந்த போது, கடந்த ஜனவரி மாதம் 29ம் தேதி தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

அத்துடன், தியேகோ கார்சியா தீவுக்கு அருகில் வைத்து ஜனவரி மாதம் 30ம் தேதி சந்துன் புதா படகில் சென்ற மீனவர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் நடத்தப்படும் தருணத்தில் இந்திய பாதுகாப்பு பிரிவினருடன் சிங்கள மொழியை பேசிய இரண்டு நபர்கள் இருந்துள்ளதுடன், அவர்கள் மொழிபெயர்ப்பு உதவிகளை செய்துள்ள நிலையில், அவர்கள் கறுப்பு நிறத்திலான கடற்படை சீருடையை அணிந்திருந்ததாக தாக்குதலுக்கு இலக்கான இலங்கை மீனவர்கள், இலங்கை நெடுநாள் மீன்பிடி படகின் உரிமையாளர் சங்கத்திடம் கூறியுள்ளனர்.

இந்திய பாதுகாப்பு பிரிவினர் என கூறப்படும் தரப்பினர் இலங்கை மீனவர்களின் படகுகளை சோதனை செய்துள்ளதுடன், போதைப்பொருள் இருக்கின்றதா என வினவியுள்ளனர் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

"இரான் படகு, போதைப்பொருள் குறித்து கேட்டார்கள்"

இந்த சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை நடத்துமாறு இந்தியாவை கோர வேண்டும் என தாக்குதலுக்கு இலக்கான மீனவர்களின் உறவினர்கள் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைக்கின்றனர்.

தொடுவாவ, மாரவில, குடா மடுவெல்ல, மாதம்பே, சிலாபம் உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த 18 பேரே இந்த மூன்று படகுகளில் பயணித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை நெடுநாள் மீன்பிடி படகின் உரிமையாளர் சங்கத்திடம், மீனவர்கள் வழங்கிய அறிவிப்புக்கு அமைய விசாரணைகளை ஆரம்பித்ததாக கடற்றொழில் திணைக்களம் குறிப்பிடுகின்றது.

தாக்குதலுக்கு இலக்கான மீனவரான சுரங்க நிசல், பிபிசி சிங்கள சேவையிடம் கருத்து தெரிவித்துள்ளார்.

''சிறிய ரக படகொன்றில் ஐவர் வருகைத் தந்தார்கள். படகை சோதனை செய்து, தாக்குதலை நடத்தினார்கள். சேட்டிலைட் தொலைபேசி, இரான் படகு, போதைப்பொருள் தொடர்பில் வினவினார்கள். நாங்கள் தெரியாது என கூறிய போதிலும், அவர்கள் தாக்குதலையே நடத்தினார்கள்.'' என்கிறார் சுரங்க நிசல்.

அதன்பின்னர், தன்னை கப்பலுக்கு அழைத்து சென்று மீண்டும் தாக்குதலை நடத்தியதாக அவர் குறிப்பிடுகின்றார்.

''இந்த மூன்று பேரையும், படகையும் பணயக்கைதிகளாக எடுக்குமாறு ஒருவர் வந்து கூறினார். நீ என்ன கூறுகின்றாய் என கேட்டார். 'அவர்களை கொலை செய்தாலும், என்னை கொலை செய்தாலும் என்னால் இதை மாத்திரமே கூற முடியும்' என நான் கூறினேன். 'எனக்கு ஒன்றும் தெரியாது. நாங்கள் ஒன்றையும் கொண்டு வரவும் இல்லை. ஒன்றும் கிடைக்கவும் இல்லை.' என கூறினேன்''

''அதிலிருந்த சிங்களவர்கள் இருவர் என்னிடம் மீண்டும் விசாரணைகளை நடத்தினார்கள். சிங்களவர்களும் எம்மீது தாக்கி விசாரணைகளை நடத்தினார்கள்''

''எம்மீது மீண்டும் தாக்குதல் நடத்த முயற்சி செய்த சந்தர்ப்பத்தில், 'என்னால் கூறுவதற்கு இதற்கு மேல் ஒன்றும் இல்லை' என்று கூறினேன். அதன்பின்னர் 'இவர்களிடம் ஒன்றும் இல்லை' என கூறி விடுவித்தார்கள்''

தாக்குதலை நடத்திய கப்பலை அடையாளம் கண்டுக்கொள்ள முடியுமா என தாக்குதலுக்கு இலக்கான மீனவரிடம் வினவிய போது, ''கப்பலில் 55 என்ற இலக்கம் இருந்தது. ஆங்கில எழுத்துக்கள் இருந்தன. எனக்கு நினைவில்லை'' என குறிப்பிட்டார்.

''அதில் இந்தியர்கள் இருந்தார்கள் என்பதை நூறு வீதம் உறுதியாக என்னால் கூற முடியும். இந்தியாவின் கப்பல் என என்னால் கூற முடியும். அதில் தமிழர்களும் இருந்தார்கள். தலையில் துண்டை கட்டிய பஞ்சாபியர்களும் இருந்தார்கள். ஹிந்தி மொழியிலும் கதைத்தார்கள். தமிழ் மொழியிலும் கதைத்தார்கள். சிங்களவர்கள் இருவரும் இருந்தார்கள். அந்த இரண்டு சிங்களர்களுமே என்னிடம் விசாரணை செய்தார்கள். இரண்டு சிங்களவர்களும் எம்மீது தாக்குதல் நடத்தினார்கள். கொண்டு வந்ததை கூறுமாறு சொல்லி தாக்கினார்கள். இல்லையென்றால் நிச்சயமாக கொலை செய்வோம் என அச்சுறுத்தினார்கள்''

இந்த கப்பலில் 75 முதல் 100 பேர் வரை இருந்தார்கள் என சுரங்க கூறுகின்றார்.

இலங்கை கடற்படை கூறுவது என்ன?

கடற்றொழில் திணைக்களம் வழங்கிய தகவலுக்கு அமைய, மருத்துவ நடவடிக்கைகளுக்காக இந்த மீனவர்கள் கரைக்கு அழைத்து வரப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் புத்திக்க சம்பத் பிபிசி சிங்கள சேவைக்கு தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு கடற்படையினர் ஆதரவை வழங்குவதாகவும் அவர் கூறுகின்றார்.

''இலங்கையின் தெற்கு பகுதிக்கு சென்றே இவர்களை நாங்கள் மீட்டெடுத்தோம். அவர்கள் கூறும் இடம், தாக்குதல் நடத்திய தரப்பினர் யார் என்பது குறித்து கடற்படையினர் உறுதிப்படுத்திய பின்னரே கூற முடியும்."

''ஒவ்வொரு தரப்பினர் வெவ்வேறு கருத்துக்களை கூறுகின்றனர். ஒரு சந்தர்ப்பத்தில் இந்திய கடலோர காவல்படை என கூறுகின்றனர். இன்னுமொரு தருணத்தில் இந்திய கடற்படை என கூறுகின்றார்கள்.''

''நாங்கள் தொழில்நுட்ப ரீதியில் விசாரணைக்கு ஆதரவை வழங்குவோம். அந்த இடத்தில் யார் இருந்தார்கள் என்பது குறித்து உறுதிப்படுத்திய பின்னரே எங்களால் அதனை கூற முடியும்'' என கடற்படை ஊடகப் பேச்சாளர் குறிப்பிடுகின்றார்.

இலங்கை மீனவர்கள்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,கோப்புப்படம்

கொழும்பு இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பதில்

இந்த விடயம் தொடர்பில் பிபிசி சிங்கள சேவை, கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தை தொடர்புகொண்டு வினவியுள்ளது.

இந்திய கடற்படை அல்லது இந்திய கடலோர காவல்படை பிரிவினால் இலங்கை மீனவர்கள் தாக்கப்படவில்லை என கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களின் ஊடாக வினவப்படுகின்றதே தவிர, அரசாங்கத்தினால் உரிய முறையில் இதுவரை தம்மிடம் அறிவிக்கப்படவில்லை என இந்திய உயர்ஸ்தானிகராலயம் பிபிசி சிங்கள சேவையிடம் தெரிவித்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cjrzwlpd713o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்


இலங்கை மீனவர்கள் மீதான தாக்குதல் குற்றச்சாட்டுக்கு இந்தியா மறுப்பு!

இலங்கை மீனவர்கள் மீதான தாக்குதல் குற்றச்சாட்டுக்கு இந்தியா மறுப்பு!

ஜனவரி 29 அன்று இந்திய கடலோர காவல்படையினரால் இலங்கை மீனவர்கள் குழு மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் மறுத்துள்ளது.

2026 ஜனவரி 29, அன்று கடலில் இலங்கை மீனவர்கள் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல் தொடர்பான ஊடக அறிக்கைகளை கவனித்ததாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் ஒரு அறிக்கையை வெளியிட்டது.

தகவல்களைச் சேகரித்த பின்னர், இந்திய கடற்படை அல்லது இந்திய கடலோர காவல்படை வீரர்களால் அத்தகைய தாக்குதல் நடத்தப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த முடியும் என்று உயர் ஸ்தானிகராலயம் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியது.

அத்துடன், மீனவர்களின் வாழ்வாதாரக் கவலைகளுக்கு மனிதாபிமான அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும் என்றும், எந்த சூழ்நிலையிலும் பலத்தைப் பயன்படுத்தக் கூடாது என்றும் இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது என்று இந்திய உயர் ஸ்தானிகராலயம் மேலும் கூறியது.

இந்த விடயங்கள் குறித்து இலங்கை அரசாங்கத்துடன் உயர் ஸ்தானிகராலயம் தொடர்பில் உள்ளது என்றும் அது குறிப்பிட்டது.

ஜனவரி 29 ஆம் திகதி, வென்னப்புவ மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட இரண்டு மீன்பிடி படகுகளில் இருந்த 12 இலங்கையர்கள், இலங்கையின் கடல் எல்லைக்குள் இருந்தபோது இந்திய கடலோர காவல்படை வீரர்களால் தாக்கப்பட்டதாக மீனவர்கள் குழு ஒன்று குற்றம் சாட்டியது.

சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுவிட்டு இலங்கைக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து அரசாங்கம் வெளிப்படையான விசாரணையை நடத்த வேண்டும் என்று மீனவர் சங்கத்தினர் கோரியிருந்தனர்.

மூன்று மீன்பிடி படகுகள் தாக்கப்பட்டதாகவும், அவற்றில் இரண்டு இலங்கையின் கடல் எல்லைக்குள் இருந்ததாகவும், இந்திய கடலோர காவல்படை வீரர்கள் தாக்குதலை நடத்த இலங்கையின் கடல் எல்லையைத் தாண்டியதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

https://athavannews.com/2026/1463304

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

ஜனவரி 29 அன்று இந்திய கடலோர காவல்படையினரால் இலங்கை மீனவர்கள் குழு மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் மறுத்துள்ளது.

எப்படி கண்டுபிடித்தார்கள்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ஈழப்பிரியன் said:

எப்படி கண்டுபிடித்தார்கள்?

ஆபீசில் இருந்து, அறிக்கை விடுவதற்கு.... ஆதாரம் கேட்கப் படாது.

கேட்டாலும்... அதை எல்லாம், கணக்கில் எடுக்க மாட்டார்கள்.

எல்லோரும்.... தங்கள் உத்தமன் என்று வேஷம் போட்டுக் கொண்டு திரிவார்கள்.

வாயாலை... ஜனநாயகம், அகிம்சை என்று சொந்த மக்களையே பேய்க்காட்டி வைத்துள்ளது இந்திய அரசியல்.

  • கருத்துக்கள உறவுகள்
On 2/2/2026 at 01:34, தமிழ் சிறி said:

வென்னப்புவ துறைமுகத்தில் இருந்து சென்ற இலங்கை மீனவ படகுமீது இந்திய கடலோர காவல்படையினரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளiமை அண்மையில் தெரியவந்தது

பிராந்திய வல்லரசு இதையும் செய்யாவிடில் அதன் கெளர்வம் என்னாவது...

முடிந்தால் அம்பாந்தொட்டை மீனவர்கள் மீது கை வைத்து பார்க்கட்டும்...

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ஈழப்பிரியன் said:

எப்படி கண்டுபிடித்தார்கள்?

இதுதான் டீல்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, alvayan said:

இதுதான் டீல்...

பொருத்தமான சொற்பதம். சரியாகச் சொன்னீர்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.