Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போரை ஆதரித்த இரானியர்கள் இப்போது சந்தேகப்படும் விஷயம் என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போரை ஆதரித்த இரானியர்கள் இப்போது சந்தேகப்படும் விஷயம் என்ன?

இரானில் போரின் பாதிப்புகளை காட்டும் ஒரு புகைப்படம்

பட மூலாதாரம்,Reuters

கட்டுரை தகவல்

  • சோரூஷ் நெகாதார்தாரி

  • இரான் நிபுணர், பிபிசி மானிட்டரிங்

  • 13 மார்ச் 2026, 11:02 GMT

    புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

"அவர்கள் ஆட்சியின் அனைத்து உயர்நிலை நபர்களையும் கொன்றுவிடுவார்கள், ஒரு சில நாட்களில் இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் இப்போது இரண்டாவது வாரம் நடக்கிறது. ஒவ்வொரு இரவும் வெடிப்புச் சத்தங்களைக் கேட்டு நான் விழிக்கிறேன்," என்று தெஹ்ரானில் குடியிருப்பவர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

அவர் ஆரம்பத்தில் இந்தப் போரை ஆதரித்தார். ஆனால் இப்போது அவரது ஏமாற்றம் அதிகரித்து வருகிறது.

தங்கள் நாட்டின் தலைமையை எதிர்க்கும் சில இரானியர்களுக்கு, அரசியல் மாற்றத்தை துரிதப்படுத்தும் என்று அவர்கள் ஆரம்பத்தில் நம்பிய இந்தப் போர், இப்போது ஒரு வேதனையான மறுபரிசீலனைக்கு அவர்களைத் தள்ளுகிறது.

மேலும் இந்த மோதலின் விலை, இறுதியில் கிடைக்கும் எந்தவொரு அரசியல் முடிவையும் விட அதிகமாக இருக்குமோ என்று அவர்கள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

இருப்பினும், மற்றவர்கள் இன்னும் வெளிநாட்டு ராணுவ அழுத்தமே இந்த அமைப்பை பலவீனப்படுத்துவதற்கான ஒரே யதார்த்தமான வழியாக இருக்கலாம் என்று வாதிடுகின்றனர்.

இரானில் போரின் பாதிப்புகளை காட்டும் ஒரு புகைப்படம்

பட மூலாதாரம்,AFP via Getty Images

மக்கள் மனநிலை என்ன?

பல அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகள், இந்த நடவடிக்கையை பெரும்பாலும் இரான் நாட்டின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திறன்கள் மற்றும் அச்சுறுத்தல்களைக் குறைப்பதற்கான ஒரு முயற்சியாகவே கட்டமைத்துள்ளனர்.

ஆனால், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட சிலர், இதன் இறுதி நோக்கம் ஆட்சி மாற்றமாக இருக்கலாம் என்றும் சூசகமாகத் தெரிவித்துள்ளனர்.

ஆரம்பத்தில் இந்த வெளிப்புற அழுத்தம் அந்த மாற்றத்தை கணிசமாக துரிதப்படுத்தக்கூடும் என்ற நம்பிக்கையை இரான் மத குருமார்களின் ஆட்சி அமைப்பை விமர்சிப்பவர்கள் சிலருக்கு ஏற்படுத்தியது.

இருப்பினும், நாட்டிற்குள் இருக்கும் சில இரானியர்களுடனான உரையாடல்கள், இப்போது நிலைமை மிகவும் சிக்கலானது என்று உணர்த்துகின்றன.

பிப்ரவரி 28 முதல் அரசு மீண்டும் ஒரு முழுமையான இணைய முடக்கத்தை அமல்படுத்தியுள்ளதால், மோதல் தொடங்கியதிலிருந்து இரான் நாட்டிற்குள் இருப்பவர்களைத் தொடர்பு கொள்வது பத்திரிகையாளர்களுக்கு பெரிதும் கடினமாகியுள்ளது.

தகவல் தொடர்பு கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், இஸ்லாமியக் குடியரசிற்கு எதிரான ராணுவ நடவடிக்கையை ஆரம்பத்தில் எதிர்க்காத, அரசை எதிர்க்கும் பல இரானியர்களிடம் பிபிசியால் பேச முடிந்தது. குறிப்பாக மற்றொரு எழுச்சி முயற்சியும் நாடு தழுவிய போராட்டங்களும், இஸ்லாமியக் குடியரசு வரலாற்றிலேயே மிகக் கொடூரமான போராட்ட ஒடுக்குமுறையாகக் கருதப்படும் நிகழ்வில் ஒடுக்கப்பட்ட பிறகு அவர்களின் எண்ணம் இவ்வாறு இருந்தது.

இரானில் போரின் பாதிப்புகளை காட்டும் ஒரு புகைப்படம்

பட மூலாதாரம்,Getty Images

இரான் நாட்டில் மாற்றுக் கருத்துகளை வெளிப்படுத்துவது கைது அல்லது சிறைவாசத்திற்கு வழிவகுக்கும் என்பதால், அவர்களின் பாதுகாப்பிற்காகப் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

தெஹ்ரானில் வசிக்கும் 31 வயது பொறியாளர் சமா, தாக்குதல்கள் பற்றிய செய்தி முதலில் வந்தபோது அவர் ஒரு கணம் நம்பிக்கையை உணர்ந்ததாகத் தெரிவித்தார்.

"பல ஆண்டுகளாக நாங்கள் போராடி வருகிறோம்," என்று அவர் கூறினார். "ஒவ்வொரு முறையும் அவர்கள் எங்களை மௌனமாக்குகிறார்கள், எங்களைக் கொல்கிறார்கள்."

"தாக்குதல்கள் தொடங்கியபோது, இந்த ஆட்சி தப்பிக்க முடியாது என்று நான் நினைத்தேன்."

அமெரிக்க - இஸ்ரேலியத் தாக்குதல்களில் இரான் நாட்டின் அதிஉயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமனெயி கொல்லப்பட்டதாக செய்திகள் வந்தபோது, தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடியதாகவும் சமா கூறினார்.

"அந்தப் பெரிய செய்தி உறுதியானபோது நான் மகிழ்ச்சியில் கூச்சலிட்டேன்," என்று அவர் கூறினார்.

ஆனால் மோதல் தொடங்கி இரண்டு வாரங்கள் ஆன நிலையில், தன்னை சுற்றியுள்ள மற்றும் பலரின் மனநிலை மாறியுள்ளதாக அவர் கூறுகிறார்.

இரான்

பட மூலாதாரம்,Reuters

படக்குறிப்பு,அரசியல் மாற்றத்தை எதிர்பார்த்த இரான் நாட்டினர், இப்போது தங்கள் நாடு சீர்குலைந்து குழப்பத்தில் ஆழ்ந்துவிடுமோ என்று கவலைப்படுகிறார்கள்.

கவலை என்ன?

"இப்போது சிலர் பீதியடைந்துள்ளனர், எனக்குத் தெரிந்தவர்கள் தங்கள் பகுதி அடுத்த இலக்காக இருக்குமோ என்று பயப்படுகின்றனர்," என்று சமா கூறினார்.

"என்னால் இப்போது தூங்க முடியவில்லை. வெடிப்புச் சத்தத்தைக் கேட்டோ அல்லது அவற்றைப் பற்றிய கனவுகள் கண்டோ நான் விழிக்கிறேன்."

ஆரம்பகட்ட மதிப்பீடுகளின்படி, நடந்து வரும் மோதலின் விளைவாக 6,00,000 முதல் ஒரு மில்லியன் வரையிலான இரானியக் குடும்பங்கள் இப்போது இரான் நாட்டிற்குள்ளேயே தற்காலிகமாக இடம்பெயர்ந்துள்ளதாக ஐநா அகதிகள் முகமை தெரிவிக்கிறது. அதாவது இதில் 3.2 மில்லியன் மக்கள் வரை இருக்கலாம்.

போர் நீடிப்பதால் இந்த எண்ணிக்கை தொடர்ந்து உயரும் என்றும், இது மனிதாபிமானத் தேவைகள் கவலைக்குரிய வகையில் அதிகரிக்கப்போவதை குறிக்கிறது என்றும் அது கூறியுள்ளது.

காமனெயி ஆட்சிக்கு எதிரான போரை ஆதரித்த இரானியர்கள்  கவலைப்படும் விஷயம் என்ன?

பட மூலாதாரம்,Getty Images

ஒரு வடக்கு நகரத்தைச் சேர்ந்த 28 வயது ஆசிரியை மினா, தான் இன்னும் ஆளும் மதகுருமார்களின் ஆட்சி முடிவுக்கு வர வேண்டும் என்று விரும்புவதாகவும், ஆனால் போரின் நீண்டகால விளைவுகளைக் கண்டு அஞ்சுவதாகவும் கூறினார்.

"எனக்குத் தெரியும் இந்த ஆட்சிதான் இந்தப் போரை நமக்குக் கொண்டு வந்தது," என்று அவர் கூறினார்.

"ஆனால் நீங்கள் பிரமாண்டமான தீப்பிழம்புகளைப் பார்த்து, வெடிப்புகளைக் கேட்கும்போது, சிறு குழந்தைகள் பயந்து அழுவதைப் பார்க்கும்போது, நீங்கள் நேசித்து வாழும் நாட்டை இது அழித்துவிடுமா என்று நீங்கள் நினைக்கத் தொடங்குகிறீர்கள்."

ஆட்சி கவிழ்ப்புக்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஒரு காலத்தில் பகிரங்கமாக விவாதித்த சில நண்பர்கள், போர் நீடிப்பதாலும் பல உயர் அதிகாரிகள் இன்னும் பதவியில் இருப்பதாலும் இப்போது எச்சரிக்கையுடன் இருப்பதாக மினா கூறினார்.

"நமக்குக் கிடைப்பது இடிபாடுகளும் அதே முல்லாக்களும் அதே அரசாங்கமும் மட்டுமென்றால் என்ன செய்வது? அது இன்னும் ஒடுக்குமுறை நிறைந்ததாகவும் இன்னும் சவாலானதாகவும் இருந்தால் என்ன செய்வது?"

மற்றவர்களுக்கு அரசாங்கம் வீழுமா என்பது மட்டுமே கவலையாக இல்லை, அது வீழ்ந்தால் எத்தகைய சூழல் ஏற்படும், குறிப்பாக கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலைகளில் என்ன நடக்கும் என்பதும் கவலையாக உள்ளது.

காமனெயி ஆட்சிக்கு எதிரான போரை ஆதரித்த இரானியர்கள்  கவலைப்படும் விஷயம் என்ன?

பட மூலாதாரம்,Getty Images

'ஒரு நாடு மிஞ்சியிருக்க வேண்டும்'

ஜனவரி மாதப் போராட்டங்களின் போது காயமடைந்த 31 வயது கடைக்காரர் அலி, ஸ்திரமின்மை அல்லது உள்நாட்டு மோதலுக்கான சாத்தியக்கூறுகள் குறித்து தான் கவலைப்படுவதாகத் தெரிவித்தார்.

"ஆட்சி மாற்றம் என்பது எளிமையான ஒரு மாற்றம் என்பதைப் போல் அனைவரும் பேசுகிறார்கள்," என்று அவர் கூறினார்.

"ஆனால் யார் அதிகாரத்தைக் கைப்பற்றுவார்கள்? ஏதோ ஒரு வகையில் அவர்கள் ஆட்சியை வீழ்த்தினாலும், நாடு குழப்பத்தில் வீழ்வதை எது தடுக்கும்?"

இந்த நிச்சயமற்ற தன்மை, அரசைக் கடுமையாக எதிர்ப்பவர்கள் மீது கூட பெரும் சுமையாக உள்ளது என்று அவர் கூறினார்.

"எனக்கு சுதந்திரம் வேண்டும்," என்று அவர் கூறினார்.

"ஆனால் இது முடியும் போது ஒரு நாடு மிஞ்சியிருக்க வேண்டும் என்றும் நான் விரும்புகிறேன்."

போராட்டம் மற்றும் மாற்றுக்கருத்துகளை ஒடுக்கும் விஷயத்தில், அதிகாரிகளை பலவீனப்படுத்துவதற்குப் பதிலாக போர் அவர்களைப் பலப்படுத்தியுள்ளது என்றும் சிலர் வாதிட்டனர்.

27 வயது கிராஃபிக் டிசைனர் பாத்திமா, வெளிநாட்டுத் தாக்குதல்கள் பெரும்பாலும் "எதிரி" பற்றிய அரசின் நீண்டகால கதையை உறுதிப்படுத்துகின்றன என்று கூறினார்.

"அவர்கள் இதை விரும்புகிறார்கள்," என்று அவர் கூறினார்.

"பார்த்தீர்களா? இதெல்லாம் எதிரியின் திட்டம் என்று நாங்கள் சொன்னோமே என்று இப்போது அவர்கள் சொல்கிறார்கள். விமர்சனம் என்பது தேசத் துரோகமாகிவிட்டது, அதை அவர்கள் தங்கள் சொந்த மக்களுக்கு எதிராகப் பயன்படுத்துகிறார்கள்."

போர் தொடங்கியதிலிருந்து தெருக்களில் துணை ராணுவ படைகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.

"மக்கள் குரல் கொடுப்பது மென்மேலும் கடினமாகி வருகிறது"

காமனெயி ஆட்சிக்கு எதிரான போரை ஆதரித்த இரானியர்கள்  கவலைப்படும் விஷயம் என்ன?

பட மூலாதாரம்,Getty Images

'வேறு வழியில்லை'

இருப்பினும், உள்நாட்டு மாற்றத்தை ஏற்படுத்துவது எவ்வளவு கடினம் என்பதை இத்தகைய கவலைகள் கவனிக்கத் தவறிவிடுகின்றன என்று மற்றவர்கள் வாதிடுகின்றனர்.

பல தசாப்த கால ஒடுக்குமுறைகள் வேறு வழியில்லாமல் செய்துவிட்டதாகக் கூறி, இந்த ராணுவ நடவடிக்கையை இவர்கள் தொடர்ந்து ஆதரிக்கின்றனர்.

மத்திய நகரமான இஸ்ஃபஹானைச் சேர்ந்த 40 வயது பொறியாளர் ரேசா, வெளிப்புற அழுத்தம் அவசியம் என்பது மட்டுமல்ல, அது மட்டுமே சாத்தியமான ஒரே வழி என்று தான் நம்புவதாகத் தெரிவித்தார்.

"ஏதோ நாங்கள் முயற்சி செய்யவில்லை என்பது போல் மாற்றம் உள்ளிருந்து வர வேண்டும் என்று சொல்கிறார்கள்," என்று அவர் கூறினார்.

"கடவுள் ஆணையாக சொல்லுங்கள், கொல்லப்பட்ட போராட்டக்காரர்களின் பிணப் பைகளின் குவியல்களை இந்த மக்கள் மறந்துவிட்டார்களா? அது இரண்டு மாதங்களுக்கு முன்புதானே நடந்தது?"

அரசாங்கத்தின் ராணுவ மற்றும் பாதுகாப்பு இயந்திரத்தை பலவீனப்படுத்துவது அதிகாரத்தின் சமநிலையை மாற்றக்கூடும் என்று ரேசா நம்புகிறார்.

"இந்த அமைப்பு நாளை கவிழ்ந்துவிடாவிட்டாலும், அதன் ஆற்றலைக் குறைப்பது சமன்பாட்டை மாற்றும்," என்று அவர் கூறினார்.

மத்திய கிழக்கு நாடான இரானில் ஆட்சி மாற்றத்திற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அழைப்பு விடுத்த பிப்ரவரி 28 முதல், அந்த நாட்டிற்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

பட மூலாதாரம்,Reuters

டிரம்பின் வாக்குறுதி குறித்து கேள்வி

தற்போதைய அமைப்பு அதிகாரத்தில் நீடிப்பதற்கு கொடுக்கும் விலை, போரிற்கான விலையை விட இறுதியில் அதிகமாக இருக்கும் என்று மற்றவர்கள் வாதிடுகின்றனர்.

தெற்கு மாகாணமான குசெஸ்தானைச் சேர்ந்த மென்பொருள் உருவாக்குநர் மிலாட், இந்த அரசு தப்பிப் பிழைத்தால் அதன் கொள்கைகள் இன்னும் பெரிய அழிவுக்கு வழிவகுக்கும் என்று தான் அஞ்சுவதாகத் தெரிவித்தார்.

"இவர்கள் பதவியில் இருந்தால், அமைதி நிலவும் அல்லது இந்தப் போரில் நாம் காண்பதை விடக் குறைவான அழிவுதான் ஏற்படும் என்று இந்த மக்கள் நினைக்கிறார்களா?" என்று அவர் கேட்டார்.

"'அமைதி' காலத்தில் அவர்கள் என்ன செய்தார்கள் என்று பாருங்கள். பொருளாதாரம் இல்லை, தண்ணீர் இல்லை, பெண்களுக்கு உரிமைகள் இல்லை, எதிர்காலம் இல்லை."

"எங்கள் நாட்டிற்கு இதைச் செய்தவர்கள் என்னுடன் சேர்ந்து இறப்பதாய் இருந்தால், இந்தத் தாக்குதல்களில் நான் சாகத் தயார்."

ராணுவ நடவடிக்கையை இன்னும் ஆதரிப்பவர்களில் சிலர் டிரம்பின் வாக்குறுதிகள் குறித்துச் கேள்வி எழுப்புகின்றனர்.

போர் தொடங்கிய பிறகு இரானியர்களுக்கு வழங்கிய செய்தியில், "நாங்கள் முடித்த பிறகு, உங்கள் அரசை பொறுப்பேற்றுக்கொள்ளுங்கள். அது உங்களுடையதாக இருக்கும். இது அநேகமாக பல தலைமுறைகளுக்கு உங்களுக்குக் கிடைக்கும் ஒரே வாய்ப்பாக இருக்கலாம்" என்று டிரம்ப் கூறினார்.

ஜனவரி மாதம் நடந்த ஆட்சிக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்ற மற்றொரு இளைஞரான சயீத், தான் இப்போது ஆழ்ந்த சந்தேகத்தில் இருப்பதாகத் தெரிவித்தார்.

"இந்த ஆட்சிக்கு எதிராகப் போரைத் தவிர வேறு வழியில்லை," என்று அவர் கூறினார்.

"ஆனால் இந்த டிரம்ப் உண்மையிலேயே இன்னும் ஆட்சி மாற்றத்தைத்தான் தேடுகிறாரா? வேலையை முடிப்பதில் அவர் தீவிரமாக இருக்கிறாரா?"

"எனக்கு இப்போது ஒன்றும் தெரியவில்லை. அவர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாகப் பேசுகிறார்."

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cx24z074k23o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.