Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தெய்வங்கள் மனிதர்கள் மற்றயவை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தெய்வங்கள் மனிதர்கள் மற்றயவை

-------------------------------------------------------

பிள்ளையார் மாம்பழம் பெற்றது போல இப்படி ஒரு தலைப்பு வைத்தே பிரபஞ்சம் முழுவதையும் இழுத்துக் கொண்டு வந்துவிடலாம். இங்கே ஆக மொத்தம் மூன்று வகைகள் தான் இருக்கின்றன என்று சந்தேகமற தோன்ற ஆரம்பித்து சில காலம் ஆகிவிட்டது. மீண்டும் மீண்டும் ஒரே நிகழ்வுகள் நடப்பதும், அவை முன்னரே தெரிந்த முடிவுகளை அடைவதும் ஏற்படுத்தும் சலிப்புகளினாலேயே மூன்று கடகத்துக்குள்ளேயே எல்லாவற்றையும் தூக்கிப் போடக் கூடிய ஒரு மனநிலையை உண்டாகியிருக்கின்றது என்று நினைக்கின்றேன். சதிக் கோட்பாடுகள் போன்றவற்றில் அல்லது இதுவரை நடக்காத ஒன்று நடந்து விடும் என்ற கண்மூடித்தனமான நம்பிக்கை இருந்தால் காலம் கொஞ்சம் சுவாரசியமாக ஓடும் போல.     

வீட்டில் மூன்று பூனைக் குட்டிகள் நிற்கின்றன. நான்கு பூனைக் குட்டிகள் என் வீட்டுக்கு வந்து சேர்ந்த கதையை முன்னர் எழுதியிருக்கின்றேன். பின்னர் அவை மூன்றாகின. மூன்றும் வீட்டிலேயே தங்கிவிட்டன. சகோதரங்கள் இவ்வளவு ஒற்றுமையாக இருக்குமா என்று அவை ஆச்சரியப்பட வைக்கின்றன. மூன்றுமே ஒன்றுக்கு ஒன்று துணை என்பது போல ஒன்றை ஒன்று பார்த்துக் கொள்ளுகின்றன. தெய்வங்கள் - மனிதர்கள் - மற்றயவை என்றும் மூன்று மட்டுமே இருந்தாலும், இவை பல சமயங்களில் ஒன்றுக்கு ஒன்று துணையாக இருப்பதில்லை, மாறாக ஒன்றுக்கு இன்னொன்று துன்பமாகவே ஆகின்றன என்றும், இன்னும் ஒரு படி மேலே போய், ஒன்றே தனக்கு பெரும் துன்பமாக ஆகின்றது என்றும் தான் எனக்கு கிடைத்த வாழ்க்கை எனக்கு காட்டியிருக்கின்றது. 


1. தெய்வத்தின் பாவம்

---------------------------------

large.GodSittingOutside.jpg

இங்கு வந்த பின் சில வருடங்களாக கோவில் எதற்கும் போகவில்லை. போகவில்லை என்றால் தெய்வத்துடன் கோபம் என்று அர்த்தம் இல்லை. இங்கு நாங்கள் இருந்த இடங்களில் கோவில் எதுவும் இருக்கவில்லை என்பதே ஒரேயொரு காரணம். அத்துவானக் காடு என்ற சொல்லைப் புரிய வைத்த சில வருடங்கள் அவை. அங்கே மனிதர்கள் இருந்தார்கள். ஆனால் எங்களுடைய மனிதர்கள் இருக்கவில்லை. இருபது வருடங்கள் ஊரில் வாழ்ந்திருந்தேன். அங்கே எல்லோரும் எங்களின் மனிதர்களே, ஒருவர் கூட எவ்வகையிலும் வித்தியாசமானவர் கிடையாது. முழு இலங்கையிலுமே அதிக கோவில்கள் கொண்ட ஊர் என்றால் அது நான் வளர்ந்த ஊரே. கும்பகோணமா அல்லது நான் வளர்ந்த ஊரிலா கோவில்கள் அதிகம் என்ற சந்தேகம் காரணமாகவே முழு இலங்கையுடன் முழு இந்தியாவையும் சேர்த்து உறுதியாக என்னால் சொல்ல முடியவில்லை. ஆனால் ஊரில் வாழ்ந்த அந்த இருபது வருடங்களிலும் கூட கோவிலுக்கு போகவில்லை. அங்கே அந்த இருபது வருடங்களில் ஏன் போகவில்லை என்றால், சரியாகத் தெரியவில்லை, 'ஏனடா போகவில்லை...............' என்று கேட்கின்றேன்.

பின்னர் வேலை எடுத்து வந்த இடத்தில் இருந்து ஒரு ஐம்பது மைல்கள் தொலைவில் ஒரு கோவில் இருப்பதாகச் சொன்னார்கள். மைல்கள் என்று அளவைப் பார்த்த உடனேயே இது எந்த நாடு என்று உங்களுக்கு புரிந்திருக்கும். அடியும், அங்குலமும், இறாத்தலும், மைலும் என்று தான் இன்றும் இங்கு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஒரு உருண்டைக்குள் இரண்டு உலகங்கள் போல இந்த நாடும், மற்றைய உலக நாடுகளும் பிரிந்து இருக்கின்றன. நாங்கள் மூவரும், அப்பொழுது மகள் பிறந்திருக்கவில்லை, அந்தக் கோவிலுக்கு போய் வந்த பின்னர் அந்தக்  கோவில் தமிழ் படங்களில் வர ஆரம்பித்தது. பிரசாந்த், ஐஸ்வர்யா ராய் அந்த கோவிலுக்கு வந்து போனார்கள். வேறு இந்திய மொழிப் படங்களிலும் பளிங்கு வெள்ளை நிறத்திலான அந்தக் கோவில் வந்தது. அந்தக் கோவிலின் உள்ளே கடும் கருமை நிறத்திலான வெங்கடேசப் பெருமாள் இருந்தார். அவருக்கு பரிவாரங்களாக வேறு தெய்வங்களும் உள்ளே அவருடனும், வெளியே பிரகாரத்திலும் இருந்தார்கள். சைவம், சாக்தம், வைஷ்ணவம், இன்னும் மூன்று அடங்கலாக மொத்தமாக இந்து மதத்தில் ஆறு பிரிவுகள் இருக்கின்றன என்று  சமயப் பரீட்சைக்காக தெரிந்து வைத்திருந்ததைத் தவிர வேறு எந்த தரிசனமும் எனக்கிருக்கவில்லை. இன்றும் அவை கிட்டவில்லை. ஆனால் இவை ஆறு தரிசனங்கள் என்று சொல்லக் கேட்டிருக்கின்றேன்.

இந்தியாவில் இருந்து தொழில்நுட்ப துறைக்கு அவர்களின் வல்லுனர்கள் இங்கு கூட்டம் கூட்டமாக வர ஆரம்பித்தனர். வெங்கடேசப் பெருமாளிடமும் கூட்டம் அதிகமாகியது.  'வெங்கடேசப் பெருமாள் அவர்களின் தெய்வம், எங்களின் தெய்வத்திற்கு எங்கே கோவில்.......' என்று அங்கே இருந்த பளிங்கு நிறக் கோவிலை ஒட்டி ஒரு சிவன் கோவிலை சிலர் கட்டினார்கள். வெங்கடேசப் பெருமாள் உயரத்திலும், சிவபெருமான் தரையிலும் இருந்தார்கள். வெங்கடேசப் பெருமாளிடம் போய் விட்டு, அந்தக் கோவிலின் வடக்கு பக்கமாக இருக்கும் படிக்கட்டுகளில் இறங்கி சிவபெருமானிடம் போய் விட்டு, அங்கிருந்து தெற்குப் பக்கமாக வெளியேறினால், வெங்கடேசப் பெருமாள் இருக்கும் தளத்திற்கு கீழே ஒரு மண்டபமும், கோவிலின் சிறிய உணவுச்சாலையும் இருந்தன. இங்கு மிக மலிவு விலையில் சில உணவுகள் கிடைக்கும். அக்ரஹாரத்து சமையல், கண் முன்னேயே சமைப்பார்கள். அங்கேயே ஆறுதலாக இருந்து சாப்பிட்டு விட்டு, பின்னர் வீடு போவோம். கோவிலுக்கு போவதற்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணங்கள்.

ஒரு நாள் நாங்கள் கோவில் வெளிவாசலை அடைந்த போது, அங்கே சிலர் கூட்டமாக நின்றார்கள். மெல்லிய குரல்களில் கோஷங்களையும் எழுப்பிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் சிலரின் கைகளில் பதாதைகள் இருந்தன. அச்சடித்த ஒரு காகிதத்தையும் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களைத் தாண்டி நாங்கள் கோவிலுக்குள் போய்விட்டோம். ஆனாலும் காதில் விழுந்தவை மனதில் ஓடிக் கொண்டிருந்தது. கோவில் தலைவரையும், பொறுப்புக்குழுவையும் மாற்றும் போராட்டமே அது. தேர்தல்கள் இல்லாமல் தலைவரும், குழுவும் பல வருடங்களாக இருக்கின்றனர், கணக்கு வழக்கு எங்கே என்பது போன்ற பல கேள்விகளை பதாதைகளில் பல மொழிகளில் கேட்டிருந்தார்கள். ஈழத்தில் இருந்து இங்கு பல காலம் முன்னரேயே வந்து பெரும் செல்வந்தர் ஆகிய ஒருவரே தலைவராக, அறங்காவலராக இருப்பதாகக் கேள்விப்பட்டிருந்தேன். பெரும்பாலான வட மற்றும் தென் இந்தியர்களின் இடையே ஒரு ஈழத்தவர் அறங்காவலராக இருப்பது ஆச்சரியமான விடயம் என்றாலும், கீழ் தளத்தில் சமைக்கும் ஶ்ரீ வைஷ்ணவரின் நிலை என்னவாகும் என்றே என் மனம் சஞ்சலப்பட்டது. அவரது தாய் மொழி தெலுங்கு, ஆனால் தமிழும் மிக நன்றாகவே அவருக்கு தெரிந்திருந்தது.

பின்னரும் சில நாட்கள் அந்தக் கோவிலுக்கு போய் வந்து கொண்டிருந்தோம். வெளிவாசலில் போராட்டம் தொடர்ந்து கொண்டிருந்தது. சில நாட்களில் சமையல் இருக்கும், சில நாட்களில் இருக்காது. அவர்கள் எல்லோர் முகங்களிலும் அமைதியின்மை நன்றாகவே தெரிந்தது. ஒரு நாள் ஶ்ரீ வைஷ்ணவர்கள் பூசைகள் எதுவும் செய்யாமல் கோவிலின் முன் மண்டபத்தில் உட்கார்ந்து இருந்தார்கள். அதன் பின்னர் அங்கு போகாமல் நின்றுவிட்டோம். 

சில மாதங்களின் பின்னர் வீட்டருகிலேயே ஒரு கோவில் ஆரம்பித்து இருப்பதாக மனைவி போனார். ஒரு விஷேச நாளில் என்னையும் கூட்டிச் சென்றார். வெளியில் இருந்து பார்க்கும் போது அது ஒரு தேவாலயம் போன்றே தெரிந்தது. ஒரு நீண்ட ஊசிக் கோபுரம் அதன் கூரை மேல் நின்று கொண்டிருந்தது. அந்த ஊசிக் கோபுரத்ததை அகற்றுவது மிகச் செலவு அதிகமான ஒரு விடயமாக இருந்திருக்கக்கூடும். உள்ளே வெள்ளைப் பளிங்குகளால் ஆன கடவுளின் சிலைகள் இருந்தன. ராமபிரானும், சீதாபிராட்டியும் நடுநாயகமாக இருந்தார்கள். கறுப்பு நிறத்திலான ஒரு பெரிய சிவலிங்கம் முன்னே இருந்தது. அங்கிருந்த ஐயர் நாங்கள் முன்னர் போய்க் கொண்டிருந்த கோவிலில் இருந்த ஒருவரே. அவர் ஒரு தமிழர் என்றும், கும்பகோணத்தைச் சேர்ந்தவர் என்றும் அன்று தான் எனக்கு தெரிந்தது. இந்தக் கோவிலில் எந்த தடையும் இருக்கவில்லை. எவரும் எவ்வளவு அருகிலும் சென்று வரலாம் என்றே இருந்தது.

மல்லிகையும், கனகாம்பரமும், இன்னும் பல பூச்செடிகளையும் வீட்டைச் சுற்றி வளர்த்து, மாலைகளை கட்டிக் கொண்டு மனைவி இந்தக் கோவிலுக்கு போய்க் கொண்டிருந்தார். வீட்டுக்கு மிக அருகிலேயே கோவில் இருப்பது மிகவும் வசதியாகப் போய்விட்டது. சில வருடங்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது. பின்னர் இங்கேயும் மெதுமெதுவாக அதிகமானோர் வர ஆரம்பித்தனர். 'வேதா சர்க்கிள்' என்று ஒன்று அங்கே ஆரம்பிக்கப்பட்டது. வேதம் தெரிந்தவர்கள் என்றில்லை, எவரும் இணையலாம் என்று யாரோ சொன்னார்கள். இவர்களில் சிலரை நான் வாலிபால் அல்லது கிரிக்கெட் விளையாட்டில் சந்திப்பதுண்டு. இவர்களின் சில நடவடிக்கைகள் உள்ளும், புறமும் வேறு வேறாக இருக்கின்ரது என்பதே என்னுடைய அபிப்பிராயமாக இன்றும் இருக்கின்றது. அப்படியான சில நிகழ்வுகளும் ஏற்கனவே நடந்திருக்கின்றன. இவர்கள் என்ன தான் சொன்னாலும், வேத வட்டத்தின் பின்னணி என்னைப் போன்ற பலருக்கும் தெளிவாக இருந்தது.

அடுத்த தடவை இந்தக் கோவிலுக்கு போகும் போது, சிவலிங்கத்தின் முன்னால் கோவில் மண்டபத்தின் குறுக்காக ஒரு தடித்த இரும்புச் சங்கிலி இருந்தது. அது இன்றும் அங்கே இருக்கின்றது. அந்த இரும்புச் சங்கிலியை தாண்டி நாங்கள் போகக் கூடாது என்ற விதி வந்திருந்தது. அங்கிருக்கும் தெய்வங்களை வட்டங்களுக்குள் நிற்பாட்டியிருந்தார்கள். சில தெய்வங்களின் கழுத்துகளில் இருந்த மாலைகள் வீட்டில் கட்டப்பட்டனவே. அதன் மூலம் அறிந்த மனிதர்கள் அங்கே கிடையாது. வட்டங்களை ஊடறுத்து ஒருவர் போய் வந்துகொண்டிருந்தார்.   

இந்தக் கோவிலில் வட்டங்கள் வர ஆரம்பித்து இருந்த அதே காலத்தில் ஈழத்தைச் சேர்ந்த ஒருவர், அவருக்கு துணையாக இன்னும் சிலர் சுற்றியிருக்க, கோவில் ஒன்றை ஆரம்பித்தார். அந்தக் கோவில் என்னுடைய வீட்டிலிருந்து இன்னொரு திசையில் ஒரு நாற்பது மைல்கள் தூரத்தில் இருந்தது. அங்கு முன்னர் ஒரு முன்பள்ளிக் கூடமே இருந்தது. அதை அவர்கள் கோவிலாக மாற்றினார்கள். அங்கு முன்னுக்கு நின்ற சிலர் எனக்கு ஓரளவுக்கு தெரிந்தவர்களே. எவ்வகையிலும் இப்படியான ஒரு அக்கறையோ அல்லது ஒரு ஆன்மீகத் தேடலோ அவர்களிடம் இருப்பதாக எனக்கு முன்னர் தெரிந்திருக்கவில்லை. நான் ஒரு கோவில் ஆரம்பித்தால் அந்தச் செயல் எப்படியிருக்குமோ, அப்படித்தான் இவர்களின் செயலும் எனக்குத் தோன்றியது. ஆனாலும், நம்மவர்கள் முன்னெடுக்கும் எந்த முயற்சிக்கும் முழு ஆதரவு கொடுக்க வேண்டும் என்ற ஒரு கருத்தும் இருப்பது நான் அறிந்ததே. 

முன்பாடசாலையில் சில தெய்வ விக்கிரகங்களை வைத்திருந்தார்கள். அது ஒரு பிள்ளையார் கோவில் என்றே நினைக்கின்றேன். என் நினைவு தப்பாகவும் இருக்கலாம். நாங்கள் போயிருந்த முதல் நாள் அன்றே பூஜை மிகவும் நீண்டு கொண்டு போனது. அவ்வளவு நீண்ட பொழுது முழுவதும் மௌனமாக இருந்து எதையாவது நினைத்துப் பார்க்கும் அல்லது சிந்திக்கும் திறமை எனக்கில்லை. இலங்கை முறைப்படி பூசை செய்வதாக அங்கு பலர் சொல்லிக் கொண்டார்கள். மிகவும் அருமை என்றார்கள். யார் சொல்வதையும் நான் பொருட்படுத்தவில்லை, மனைவி என்ன சொல்லப் போகின்றார் என்றே நான் காத்துக் கொண்டிருந்தேன். 'சரியான நீட்டுப் பூசை.............' என்று நானே ஆரம்பித்தேன். 

'இவ்வளவு தூரம் வர வேண்டும் என்றில்லை................. வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கே நாங்கள் போகலாம்.................' என்றார் மனைவி. கணவர்மார்களைப் பற்றி மனைவிமார்களுக்கு நன்றாகவே தெரியும் தானே.

(தொடரும்....................)                                 

    

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

சில மாதங்களின் பின்னர் வீட்டருகிலேயே ஒரு கோவில் ஆரம்பித்து இருப்பதாக மனைவி போனார்.

கோவில்கள் எங்கெங்க இருக்கின்றன என்பதை எப்படியாவது கண்டறிந்து விடுவார்கள்.

ம் தொடருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எங்கெங்கு கோவில்கள் இருக்கு என்று தேடித் திரிவதில் பெண்களுக்கு சலிப்பு ஏற்படுவதில்லை . ..... வீட்டுக்கு வீடு வாசற்படி ..........!

சைவம் சிவன் , வைஷ்ணவம் திருமால் , சாக்தம் அம்பாள் ,

காணாபத்யம் விநாயகர் , கௌமாரம் முருகன் , சௌரம் சூரியன்.

என ஆறு பிரிவுகள் உண்டு ........!

தொடருங்கள் . .........!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, suvy said:

எங்கெங்கு கோவில்கள் இருக்கு என்று தேடித் திரிவதில் பெண்களுக்கு சலிப்பு ஏற்படுவதில்லை . ..... வீட்டுக்கு வீடு வாசற்படி ..........!

சைவம் சிவன் , வைஷ்ணவம் திருமால் , சாக்தம் அம்பாள் ,

காணாபத்யம் விநாயகர் , கௌமாரம் முருகன் , சௌரம் சூரியன்.

என ஆறு பிரிவுகள் உண்டு ........!

தொடருங்கள் . .........!

மிக்க நன்றி சுவி ஐயா...................❤️.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2. கடன்கார கடவுள்கள்

------------------------------------

large.GodInTheBank.jpg

பணம் கொட்டும் தெய்வம் என்றால் திருப்பதியே உடனேயே நினைவில் வரும். அங்கு நாங்கள் தலைமுடியையும் கொடுத்து, காணிக்கையாக  திருப்பதி ஏழுமலையானுக்கு ஏராளமாக அள்ளியும் கொடுக்கின்றோம். மனிதர்கள் தான் கடவுளுக்கு கொடுக்கின்றார்கள், அதை வேறு மனிதர்களே எடுக்கின்றார்கள் என்று நினைக்கின்றேன். இந்தியாவில் மொழிவாரியான மாநிலங்கள் உருவாகும் போது, சென்னையை தமிழ்நாடும், திருப்பதியை ஆந்திராவும் எடுத்துக் கொண்டதாகச் சொல்லுகின்றார்கள். சரியான முடிவை தமிழர்கள் அன்று எடுத்திருக்கின்றார்கள். சினிமா மோகம் அவ்வளவாக தமிழர்களை அன்று ஆட்டிப் படைக்கவில்லை போல. ஒரு காலத்தில் கொழும்பில் இருந்த மயூராபதி அம்மன் கோவிலில் வேண்டப்பட்ட ஒருவரே பொறுப்பில் இருந்தார். அங்கு அப்பொழுது போயிருக்கின்றேன். அவரே மிகவும் வசதியானவர். அந்தக் கோவிலும் வசதியாகவே இருந்தது. 

இந்தியர்களும், ஈழத் தமிழர்களும் பெருமளவில் புலம் பெயர்ந்ததால் உலகெங்கும் கோவில்கள் ஆரம்பிக்கப்பட்டன. பல செல்வாக்காக இருந்தன அல்லது அப்படியான ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியிருந்தார்கள். 'வட அமெரிக்காவில் முதன் முதலாக பஞ்சமுக ஆஞ்சநேயர்...............' என்று கூட ஒரு விளம்பரத்துடன் ஒரு கோவில் இங்கே எனக்கு அருகில் ஆரம்பிக்கப்பட்டது. அந்த விளம்பரத்தின் பின்னேயே ஆஞ்சநேயருக்கு ஐந்து முகங்கள் இருப்பது எனக்கு தெரியவந்தது. அவருக்கு தனியாக கோவில் இருப்பது கூட அப்பொழுது தான் தெரியவந்தது. பின்னர் இலங்கையிலும் ஆஞ்சநேயர் கோவிலைக் கண்டேன். மனைவியின் மார்க்கம் பெரும்பாலும் முழுமுதற் கடவுள்களைச் சுற்றியே இருந்தபடியால், இப்படியான பல கோவில்களின் உள்ளே செல்லும் சந்தர்ப்பங்கள் அமையவில்லை.

இலங்கைத் தமிழர்கள் இங்கு கணிசமான அளவில் அப்போதும் இருந்தார்கள், இப்போதும் இருக்கின்றார்கள். ஆனால் சிறு சிறு குழுக்களாகவே பழகி வருகின்றார்கள். படிப்பு,வசதி, அதனால் அவர்கள் நினைத்துக் கொள்ளும் அந்தஸ்து போன்ற காரணங்கள் இங்கு குழுக்கள் உருவாகுகின்றன என்று நினைக்கின்றேன். நாங்கள் இலங்கை தமிழர் ஆரம்பித்த கோவிலுக்கு போகாதது இங்கிருக்கும் பலருக்கு ஒரு விசயமாக இருக்கவில்லை. பலருக்கு என்னைத் தெரிந்திருக்கவே வழியில்லை. ஆனால் நாங்கள் பழகிக் கொண்டிருக்கும் கூட்டத்தில் அது ஒரு பேசுபொருள் ஆகியது. நாங்கள் நாலு பேர்கள் சேர்ந்தால் பொதுவாகவே எங்களிடம் பேசுவதற்கு புதிது புதிதாக விடயங்கள் இருப்பதில்லை. கூட்டத்தில் பலரும் ஒரே தொழிலைச் செய்பவர்களாக இருந்தால் அந்த தொழில் பற்றிப் பேசிக் கொள்வார்கள். ஒரு பல்கலைக்கழகத்தில் இருந்து வந்தவர்கள் என்றால் அந்தக் கதைகள் திரும்ப திரும்ப வரும். இப்படி ஒரு திசையில் மட்டுமே பேச்சுகள் இருக்கும். நடுவில் சம்பந்தம் இல்லாத ஒருவர் வந்து மாட்டுப்பட்டு விட்டால், அடுத்த தடவை அவர் நிச்சயம் வரமாட்டார்.

எங்கள் ஆட்களின் முயற்சிகளை ஆதரிக்கவில்லை என்பதே பொதுவான குற்றச்சாட்டு. எல்லா விடயங்களிலும் இதே குற்றச்சாட்டு உண்டு.  ஆரம்பிக்கப்படும் முயற்சிகளின் அடிப்படை நோக்கத்திலேயே சந்தேகம் வந்தால், எப்படி அவற்றை ஆதரிக்கமுடியும்? முயற்சிகள் மிகவும் பழமையானவையும், தேய்ந்து போனவையாகவும் இருந்தாலும் ஆதரவு என்று மற்றவர்களும் போய் நிற்க முடியாதுதானே. ஒருவர் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கின்றார் என்றால், இன்று அதை எப்படி ஆதரிக்கமுடியும். இல்லை, இங்கிருந்து ஆரம்பித்து, மேலே போகலாம் என்று காரணம் சொல்லப்படுவதும் உண்டு. ஆனால் மீண்டும் மீண்டும் இங்கேயே ஆரம்பித்தால், இங்கேயே நின்று கொள்ளவே சாத்தியங்கள் உள்ளன. அப்படித்தான் நடந்து கொண்டும் இருக்கின்றன.

நாங்கள் அங்கே அதிகமாக போகா விட்டாலும், அந்தக் கோவில் விளம்பரமாகவே நடந்தது. நல்ல நாட்கள், பெரு நாட்கள் என்று கொண்டாடப்பட்டன. சிலரின் வாழ்வில் அது ஒரு அங்கம் ஆகியது என்று தான் சொல்லவேண்டும். கலை வளர்க்கின்றோம், கலாச்சாரத்தை கடத்துகின்றோம் என்றும் நல்ல பக்க விளைவுகள் இருப்பதாகச் சொல்லிக் கொண்டார்கள். பின்னர் திடீரென ஒரு நாள், அந்தக் கோவில் பெரும் கடனில் மூழ்கியிருக்கின்றது என்றார்கள். திருப்பதி, மயூராபதி அளவுக்கு இல்லாவிட்டாலும், ஓரளவாவது இலாபம் அவர்களுக்கு கிடைக்கும் என்பதே என் எண்ணமாக இருந்தது. கடன் என்பது அதிர்ச்சியாகவே இருந்தது. கடவுளே கடனில் இருப்பார் என்பது நான் நினைத்திருக்காத ஒன்று. அவர் மீது இவர், இவர் மீது அவர் என்று குற்றச்சாட்டுகள் பொதுவெளியிலும் வைக்கப்பட்டது. சிலர் பிரிந்து போய் இன்னொரு கோவிலை ஆரம்பித்தனர். இந்தக் கோவிலும் சில நாட்கள் இயங்கி, இறுதியில் மூடப்பட்டது என்று நினைக்கின்றேன். ஐயர் இங்கிருந்து அங்கு போனார் அல்லது வேறு எங்கோ போனார் என்று ஞாபகம். அங்கே இருந்த கடவுளின் விக்கிரகங்கள் என்ன ஆயின என்று நான் யாரையும் கேட்கவில்லை.

இரண்டாவது தடவை மின்னல் தாக்குவது போல இன்னொரு சம்பவம் நடந்தது. ஊரில் உள்ள கோவில் ஒன்றின் திறப்புகளை வங்கி எடுத்துச் சென்று விட்டதாக ஒரு தகவல் சொன்னார்கள். ஒரு மண்டபம் கட்ட வங்கியில் கடன் எடுத்திருந்ததகவும், அதை திருப்பிச் செலுத்தாததால் வங்கி இப்படிச் செய்தது என்றும் சொன்னார்கள். ஊரையே காக்கும் தெய்வம் என்று தான் ஊரில் எல்லோரும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இப்படியுமா நடக்கும் என்று ஆச்சரியமும், அதைவிட அதிக வருத்தமும் ஏற்பட்டது.  சிவனே என்று அவர்களின் பாட்டுக்கு இருக்கின்ற கடவுள்களை மனிதர்கள் சும்மா இருக்க விடமாட்டார்கள் போல.

பின்னர் இன்னும் பல இதே போன்ற கோவில் கதைகள் கனடா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா இப்படி உலகெங்கும் இருந்து வந்தன. தமிழ்ப் படங்கள் சில வெற்றிப் படங்களாகவும், பலதும் தோல்விப் படங்களாகவும் ஆவது போல, கோவில்களும் வெற்றி தோல்விகளை சந்தித்து கொண்டிருக்கின்றன. ஆனாலும், அதே திரைக்கதைகளுடன், அதே உற்சாகத்துடன் புதிது புதிதாக ஆரம்பிக்கின்றார்கள், சினிமாக்களையும் கோவில்களையும்.  பொதுவாகவே மனிதர்களுக்கு மறதி அதிகம் என்பதாலும், எதையும் பின்னிருந்து முன்னாக ஒரு காலக் கோட்டில் இணைத்துப் பார்க்கும் பொறுமை இருப்பதில்லை என்பதாலும், இதுவரையிலும் இல்லாத புது முயற்சிகளாகவே இவை எப்போதும் பார்க்கப்படுகின்றன.

(தொடரும்.................)

             

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரசோதரன் said:

மனிதர்கள் தான் கடவுளுக்கு கொடுக்கின்றார்கள், அதை வேறு மனிதர்களே எடுக்கின்றார்கள் என்று நினைக்கின்றேன்

இதில் என்ன சந்தேகம்?

2 hours ago, ரசோதரன் said:

மனைவியின் மார்க்கம் பெரும்பாலும் முழுமுதற் கடவுள்களைச் சுற்றியே இருந்தபடியால், இப்படியான பல கோவில்களின் உள்ளே செல்லும் சந்தர்ப்பங்கள் அமையவில்லை.

நேரடியாக தலைவர்மாருடனே தொடர்பு கொள்வது நல்லது தானே.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

இதில் என்ன சந்தேகம்?

நேரடியாக தலைவர்மாருடனே தொடர்பு கொள்வது நல்லது தானே.

அது சரிதான் பிரியன் சார்..

இந்த தலைவர்மார் யாரென்று அறியலாமா

4 hours ago, ரசோதரன் said:

2. கடன்கார கடவுள்கள்

------------------------------------

காலத்தில் கொழும்பில் இருந்த மயூராபதி அம்மன் கோவிலில் வேண்டப்பட்ட ஒருவரே பொறுப்பில் இருந்தார். அங்கு அப்பொழுது போயிருக்கின்றேன். அவரே மிகவும் வசதியானவர். அந்தக் கோவிலும் வசதியாகவே இருந்தது. 

(தொடரும்.................)

             

வல்லிபுரம் அய்யா...சுங்க இலாகா அதிகாரி ...நம்முடன் நல்ல தோஸ்து...மதிப்புகுரியவர்...மயூராபதியின் கோவில் முன்னால்தான் குடியிருந்தனான்...கோவில் தேவைக்காக அந்தவீடு எடுத்தவுடன் ..அதன் 4 வது மாடியில் வீடு வாங்கிவிட்டோம் ...ஒரு வடிவான அய்யரும் அம்மாவும் இருந்தாங்களே... அயல் பொடியளின் ஆக்கினை தாங்காமல் அய்யர் சோல்லாமல் கொள்ளாமல் அம்மாவுடன் ஜெர்மனி போய் ...அங்கு மயூராகணபதி கோவில் நடாத்துகிறார் ..தெரியுமா ...

கடவுல் கவனமா கதையெழுதுங்கோ ....வாசிக்க நல்லாத்தான் இருக்கு...

  • கருத்துக்கள உறவுகள்

5 hours ago, ரசோதரன் said:

சிவனே என்று அவர்களின் பாட்டுக்கு இருக்கின்ற கடவுள்களை மனிதர்கள் சும்மா இருக்க விடமாட்டார்கள் போல.

கடவுள் கதைச்சா என்ன சொல்லியிருப்பார்?!

தொடருங்கள் அண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

அது சரிதான் பிரியன் சார்..

இந்த தலைவர்மார் யாரென்று அறியலாமா

உதாரணம்

முருகன்

தம்பி பிள்ளையார்.

அத விட்டுட்டு கீழ உள்ளவர்களிடம் போய் லஞ்சம் கொடுத்து மேலே போகாமல் இருப்பதும் ஒரு கெட்டித்தனம்.

1 hour ago, alvayan said:

அயல் பொடியளின் ஆக்கினை தாங்காமல் அய்யர் சோல்லாமல் கொள்ளாமல் அம்மாவுடன் ஜெர்மனி போய் ...அங்கு மயூராகணபதி கோவில் நடாத்துகிறார் ..தெரியுமா ...

அடபாவிகளா

ஐயர் அம்மாவைக் கூட விட்டு வைக்கலையாடா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, alvayan said:

வல்லிபுரம் அய்யா...சுங்க இலாகா அதிகாரி ...நம்முடன் நல்ல தோஸ்து...மதிப்புகுரியவர்...மயூராபதியின் கோவில் முன்னால்தான் குடியிருந்தனான்...கோவில் தேவைக்காக அந்தவீடு எடுத்தவுடன் ..அதன் 4 வது மாடியில் வீடு வாங்கிவிட்டோம் ...ஒரு வடிவான அய்யரும் அம்மாவும் இருந்தாங்களே... அயல் பொடியளின் ஆக்கினை தாங்காமல் அய்யர் சோல்லாமல் கொள்ளாமல் அம்மாவுடன் ஜெர்மனி போய் ...அங்கு மயூராகணபதி கோவில் நடாத்துகிறார் ..தெரியுமா ...

கடவுல் கவனமா கதையெழுதுங்கோ ....வாசிக்க நல்லாத்தான் இருக்கு...

மிக்க நன்றி அல்வாயன்.

நீங்கள் சொல்லும் விடயம் பற்றி கேள்விப்பட்டிருக்கின்றேன். நான் அங்கு இருந்ததில்லை, ஆதலால் அவர்கள் எவரையும் எனக்குத் தெரியாது.

கோவில் கதைகள் போன்று இவை தெரிந்தாலும், இவை மனிதர்களின் கதைகளே...............🤣.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஈழப்பிரியன் said:

அடபாவிகளா

ஐயர் அம்மாவைக் கூட விட்டு வைக்கலையாடா?

இங்கு சொன்னால் குத்தமாகிடும் ....இளவயது குடும்பம் ...அய்யர் அழகன் என்றால் ...அம்மாவும் அப்படியே.....கோவ்விலுக்கு வாற அழகான் பெண்களுக்கு...ரோசாப்பூவும் ...பிரசாதமும் அமோகம் ...அப்ப அயல் பொடியள் ..சும்மா இருப்பாங்களா...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.