Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு துணை நில்லுங்கள் - பழ. நெடுமாறன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு துணை நில்லுங்கள்

தமிழீழத்தின் விடிவில்தான்

உலகத் தமிழினத்தின் விடிவு இருக்கிறது

உலகத் தமிழர்களுக்கு பழ. நெடுமாறன் வேண்டுகோள்

தென்னாப்பிரிக்கா நாட்டின் டர்பன் நகரில் கடந்த நவம்பர் 27 அன்று நடந்த மாவீரர் தின விழாவில் கலந்து கொண்டு பழ. நெடுமாறன் ஆற்றிய சிறப்புரை :

பண்டைய தமிழகத்தில் போர்க்களத்தில் உயிர்நீத்த வீரர்களுக்கு நடுகல் நாட்டி வழிபடும் வழக்கம் நிலவியது. சங்க இலக்கியங்களில் இதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.

பழந்தமிழரின் இந்த மரபினை இன்றைக்கு விடுதலைப்புலிகள் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறார்கள். தமிழீழ மண்ணை மீட்கும் போரில் உயிர்த்தியாகம் செய்த வீரவேங்கைகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நாளாக நவம்பர் 27 உலகெங்கும் தமிழர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

முதல் மாவீரனான சங்கர் எங்கள் ஊரான மதுரை மண்ணில்தான் வீரச்சாவைத் தழுவிக்கொண்டான். சிங்கள இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் மதுரைக்குக் கொண்டுவரப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். மருத்துவர்கள் எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டும் அவனது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. அப்போது மதுரையில் இருந்த தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் மடியில் அவன் உயிர் பிரிந்தது. தனது ஆரூயிர்த் தோழன் மரணத்தைத் தழுவிக்கொண்டபோது பிரபாகரனின் வைரநெஞ்சம் கலங்கியது. தனது தோழனுக்காக இரத்தக் கண்ணீர் வடித்த காட்சியை அருகில் இருந்து கண்டு நானும் கலங்கினேன்.

விடுதலைப்புலிகளின் முதல் மாவீரனான சங்கர் சாவைத் தழுவிக்கொண்ட நவம்பர் 27ம் தேதியை மாவீரர் நாளாகக் கொண்டாடும்படி பிரபாகரன் அறிவித்தார். கடந்த 25 ஆண்டுகாலத்திற்கு மேலாக 20,000த்திற்கு மேற்பட்ட விடுதலைப் புலிகள் தாயக விடுதலைப் போரில் உயிர்நீத்துள்ளனர். அவர்களின் நினைவாக தமிழீழத்தில் மட்டுமல்ல உலகெங்கும் தமிழர்கள் வாழும் நாடுகள் எல்லாவற்றிலும் மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டு வருகிறது.

சங்க காலத் தமிழர்கள் கடைப்பிடித்த உன்னதமான வீரமரபினை விடுதலைப்புலிகள் மீட்டுருவாக்கம் செய்துள்ளனர். மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவதின் மூலம் உலகத் தமிழர்கள் தங்கள் உரிமைகளை மீட்க உறுதி பூணுகிறார்கள். தமிழ்த் தேசிய உணர்வு அவர்களின் உள்ளங்களில் அரும்பி மலர்கிறது. நாம் தமிழர்கள் என்ற உன்னதமான உணர்வுடன் அவர்கள் தலைநிமிர்ந்து நிற்கிறார்கள்.

20ம் நுற்றாண்டு அடிமைப்பட்ட மக்கள் தங்களின் அடிமைச் சங்கிலிகளைத் தகர்த்தெறிய ஆர்த்தெழுந்த நூற்றாண்டாகும். உலங்ெகும் பல்வேறு நாடுகளில் பல்வேறு தேசிய இனங்கள் விடுதலைக்காக வீறுகொண்டெழுந்து போராடின. விடுதலை பெற்றன. அதற்கு அவர்கள் கொடுத்த விலை அளப்பரியதாகும்.

இந்தியாவில் காந்தியடிகள் தலைமையில் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக அறவழியிலும், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் மறவழியிலும் விடுதலைப் போராட்டம் நடைபெற்று, இந்திய நாடு சுதந்திரம் பெற்றது தனி வரலாறாகும்.

பாலஸ்தீன அராபியர்கள் யாசர் அராபத் அவர்கள் தலைமையில் அரைநூற்றாண்டுகாலத்திற்கு மேலாக நடத்திவரும் விடுதலைப்போராட்டம் உலகப்புகழ்ப்பெற்றதாகும்.

பிரெஞ்சு ஏகாதிபத்திய பிடியிலிருந்து விடுதலைப் பெற ஹோசிமின் அவர்கள் தலைமையில் வியட்நாம் மக்கள் நடத்திய வீரஞ்செறிந்த விடுதலைப்போராட்டம் வரலாறு காணாததாகும். பிரெஞ்சு ஏகாதிபத்தியத்துக்கு துணைநின்ற அமெரிக்க வல்லாதிக்க இராணுவத்தையும் எதிர்த்து வியட்நாமிய விவசாயிகள் ஹோசிமின் வழி காட்டலில் நடத்தியப் போராட்டத்திற்கு ஈடுஇணை எதுவும் இல்லை.

27 ஆண்டுகாலமாக வெஞ்சிறையில் வாடியபோதிலும் சிறைக்குள்ளே இருந்தே தென்னாப்பிரிக்க மக்களின் விடுதலைப் போராட்டத்தை வழிநடத்திய நெல்சன் மண்டேலா உலக நாடுகளின் துணையுடன் தனது மக்களின் அடிமை விலங்குகளை உடைத்தெறிந்த வரலாறு மெய்சிலிர்க்க வைக்கும் வரலாறாகும்.

சின்னஞ்சிறிய கியூபா நாட்டை விழுங்குவதற்கு முயன்ற அமெரிக்காவை எதிர்த்து பிடல் காஸ்ட்ரோ, சேகுவேரா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற விடுதலைப் போராட்டம் உலக மக்களை வியப்பில் ஆழ்த்திய ஒன்றாகும்.

இன்னும் பல்வேறு நாடுகளின் விடுதலைப்போராட்டங்கள் 20ஆம் நூற்றாண்டின் நெடுகிலும் நடைபெற்றன. அந்த வகையில் இலங்கையில் வாழும் தமிழர்கள் சிங்களப் பேரினவாத அரசினால் ஒடுக்கப்பட்டபோது, அதற்கு எதிராக தந்தை செல்வா தலைமையில் கிளர்ந்தெழுந்து அறவழியில் 30 ஆண்டுகாலத்திற்கு மேலாகப் போராடினார்கள். அவர்கள் தொடர்ந்து கொடிய அடக்குமுறைகளுக்கு ஆளானார்கள். அறவழிப் போராட்டங்கள் பயனளிக்காத நிலையில் அந்த நாட்டு இளைஞர்கள் பிரபாகரன் அவர்கள் தலைமையில் ஆயுதம் ஏந்தி தங்கள் மக்களைக் காப்பற்றப் புறப்பட்டார்கள்.

1977ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளின் இயக்கம் பிறந்தது. கொரில்லா இயக்கமாக தொடங்கப்பட்ட அவர்களது போராட்டம் 30 ஆண்டுகாலத்தில் முழு வளர்ச்சிபெற்று முப்படைப் பரிமாணத்தை அடைந்து மரபுவழியில் இராணுவமாக முழு வளர்ச்சி பெற்றுள்ளது. தரைப்படை, கடற்படை, விமானப்படை ஆகியவை கொண்ட விடுதலை இராணுவம் உலகத்தில் இது ஒன்றுதான். உலகில் எந்த ஒரு நாட்டின் ஆதரவோ எந்த அரசின் உதவியோ இல்லாமல் உலகெங்கும் வாழும் தமிழர்கள் உதவியை மட்டும் நம்பி களத்தில் போராடி தங்கள் மண்ணின் பெரும்பகுதியை மீட்டு சுதந்திர அரசை நடத்திவரும் விடுதலைப்புலிகளின் வீரவரலாறு எண்ணி எண்ணி வியக்கத்தக்கதாகும்.

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் சீரிய தலைமையின் கீழ் விடுதலைப்புலிகளின் இந்த மகத்தான சாதனைக்கு பின்கண்ட காரணங்களே அடிப்படையாகும்.

1. 30 ஆண்டுகாலமாக திடமான, உறுதியான விடுதலைப் போராட்டத்தை மக்கள் ஆதரவுடன் மக்கள் போராட்டமாக விடுதலைப்

புலிகள் நடத்தி வருகின்றனர்.

2. ஈழத் தமிழர்களின் உண்மையான விருப்பங்களை எதிரொலிக்கும் வகையில் எத்தனையோ ஆபத்து களையும் அழுத்தங்களையும் தாங்கி விடுதலைப்புலிகள் உறுதியாகப் போராடி வருகின்றனர்.

3. விடுதலைப்புலிகளின் மகத்தான தியாகங்களின் விளைவாக தமிழர்களின் முழுமையான ஆதரவினையும் மதிப்பினையும்

புலிகள் பெற்றள்ளனர்.

4. விடுதலைப்புலிகளின் வீரஞ்செறிந்த போராட்டம்தான் தமிழர்களின் தேசியப்பிரச்சினைக்கு சர்வதேச முக்கியத்துவத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளது.

5. விடுதலைப்புலிகள் இயக்கம் மட்டுமே தமிழீழத்திலும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் நடுவிலும் உலகத் தமிழர்களிடமும் மகத்தான செல்வாக்கைப் பெற்றுள்ளது.

6. மற்ற அமைப்புகள் சிங்கள அரசின் கைக்கூலிகளாகத் திகழ்பவை. விடுதலைப் புலிகளே ஈழத்தமிழர்களின் உண்மையான பிரதிநிதிகள்.

எல்லாவற்றுக்கும் மேலாக விடுதலைப்புலிகளின் இயக்கத்திற்கும் தமிழீழ மக்களுக்கும் அற்புதமான ஒரு தலைமை பிரபாகரன் வடிவில் கிடைத்துள்ளது. 20ஆம் நூற்றாண்டின் தமிழர் எழுச்சி வடிவமாக அவர் திகழ்கிறார்.

ரஷ்யப் புரட்சியை லெனினும், சீனப்புரட்சியை மாசேதுங்கும், வியட்நாம் புரட்சியை ஹோசிமின்னும், பாலஸ்தீனப் புரட்சியை யாசர் அராபத்தும், தென்னாப்பிரிக்கப் புரட்சியை நெல்சன் மண்டேலாவும், இந்தியப் புரட்சியை, நேதாஜி சுபாஷ் சந்திரபோசும் தலைமை தாங்கி நடத்தினார்கள். இந்த மாபெரும் தலைவர்களோடு ஒப்பிடும்போது வயதாலும் அனுபவத்தாலும் பிரபாகரன் மிகமிக இளையவர். மற்ற தலைவர்களுக்குக் கிடைத்த உதவியில் கோடியில் ஒருபங்குகூட பிரபாகரனுக்கு கிடைக்கவில்லை. ஆனாலும் தனது இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள், இளம் பெண்கள் ஆகியோரைத் திரட்டி, அவர்களுக்கு விடுதலை வேட்கையை ஊட்டி, உலகத்தமிழர்களின் உதவிகளைப் பெற்று, தனது தாயகத்தின் விடுதலைக்காக கொஞ்சமும் தளராமல் போராடிவருபவர் பிரபாகரன் ஆவார்.

2000 ஆண்டு காலத் தமிழர் வரலாற்றில் இவரைப்போல ஒரு மாவீரன் தோன்றியதில்லை. தமிழ் இனத்திற்கு காலம் அளித்த பெரும்கொடை அவர். வாராது போல் வந்துஉதித்த மாமணியாகத் திகழ்பவர். இந்தத் தலைவனின் காலத்திலேயே நாம் விடிவைக் காணவேண்டும் என்ற உறுதியுடனும் நம்பிக்கையுடனும் தமிழர்கள் அவர்களுக்குப் பின்னால் அணிதிரண்டுள்ளனர்.

தமிழர் வரலாற்றில் ஆயுதம் தாங்கிய போராட்டத்தின் மூலம் புரட்சிகரமான மாற்றத்தைக் கொண்டுவந்த பெருமை அவருக்கு உண்டு. சாதி, மத பேதங்களால் பிளவுபட்டுக் கிடந்த தமிழர்களுக்குத் தேசிய உணர்வையூட்டி அவர்களை ஒன்றுபடுத்தினார்.

போர்க்குணமும், இலட்சிய வேட்கையும் நிறைந்தவர்களாக அவ,ர்களை மாற்றினார். இனஅழிவை எதிர்நோக்கியிருந்த தமிழினத்திற்கு நம்பிக்கை ஒளியை ஊட்டினார். ஆண்களோடு சரிநிகர் சமானமாக விடுதலைப் போரில் பெண்களை ஈடுபடச் செய்து முதலில் பெண் விடுதலைக்கு வழிவகுத்தார்.

சொந்தமண்ணில் வாழமுடியாமல் பிறநாடுகளில் ஏதிலிகளாகத் தஞ்சம் புகுந்த தமிழரிடையே ஒற்றுமை, நம்பிக்கை, இலட்சிய உறுதி ஆகிய வற்றை ஊட்டி வலிமை வாய்ந்த மக்களாக மாற்றினார்.

தனது போராட்டத்தை கொரில்லா நிலையிலிருந்து படிப்படியாக வளர்த்து முப்படை பரிமாணத்தைப் பெற்று சிங்களப் படையை மட்டுமல்ல அதற்கு உதவியாக வந்த இந்தியப் படையையும் பின்னடையச் செய்தார். சீனா, பாகிஸ்தான், இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா போன்ற பல்வேறு நாடுகள் ஆயுத உதவிகளை சிங்களருக்கு அளித்தன. அந்த ஆயுதங்களைச் சிங்களரிடமிருந்து போராடிப் பறித்தும் புலம்பெயர்ந்த தமிழர்கள் அளித்த உதவியினால் ஆயுதங்களை வாங்கியும் தாங்களே தயாரித்த ஆயுதங்களைக் கொண்டும். தங்களுக்குத் தாங்களே அளித்துக்கொண்ட பயிற்சியின் துணை கொண்டும் தங்கள் மண்ணின் பெரும்பகுதியை மீட்ட பெருமை விடுதலைப்புலிகளுக்கும் அதன் தலைவர் பிரபாகரனுக்கும் உண்டு.

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மேல் பயங்கரவாத முத்திரை குத்தி தடைவிதித்த பலநாடுகளும் இன்றைக்கு ஈழத்தமிழர்களின் ஏகப்பிரதிநிதியாக புலிகளை ஏற்கும் நிலையை ஏற்படுத்திய பெருமை பிரபாகரன் அவர்களையே சாரும்.

உலக நாடுகளின் மிரட்டலுக்கோ அல்லது ஆசை வார்த்தைகளுக்கோ பணியாமல் தனது மக்களுக்காக பிரபாகரன் மேற்கொண்ட உறுதியான நிலைப்பாடு தமிழீழ விடுதலைப்போராட்டத்தை உலக நாடுகள் அங்கீகரிக்க வழிசெய்துள்ளது. விடுதலைப்போராட்டத்தின் இறுதிக் கட்டம் நெருங்கியுள்ள இந்த வேளையில், இந்தப் போராட்டத்திற்கும் அதற்கு தலைமை தாங்கி நடத்தும் பிரபாகரன் அவர்களுக்கும் எல்லா வகையிலும் உறுதுணையாக நிற்கவேண்டிய கடமை உலகத் தமிழர்களுக்கு உண்டு. அந்தக் கடமையைச் செய்ய முன்வரும்படி உலகத் தமிழர்களை வேண்டிக்கொள்கிறேன். தமிழீழத்தின் விடிவில்தான் உலகத் தமிழினத்தின் விடிவு இருக்கிறதென்பதை ஒருபோதும் மறக்கக் கூடாது என்பதை நினைவுபடுத்தி அப்போராட்டத்திற்குத் துணை நிற்கும்படி மீண்டும் வேண்டிக்கொள்கிறேன்.

-தென்செய்தி

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தென்னாப்பிரிக்காவில்

பழ.நெடுமாறன் சுற்றுப்பயணம்

தென்னாப்பிரிக்காவில் 15 நாட்கள் சுற்றுப்பயணம் செய்துப் பல்வேறு நகரங்களில் நடைபெற்ற தமிழர் கூட்டங்களில் கலந்துகொண்டும் அங்குள்ள பலவேறு தமிழர் அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்களை உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் சந்தித்துப் பேசினார்.

நவம்பர் 27ஆம் தேதி டர்பன் நகரில் நடைபெற்ற மாவீரர் நாள் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். பிறகு லெனாசியா, ஜோகன்ஸ்பர்க், பிரிட்டோரியா ஆகிய இடங்களில் நடைபெற்ற தமிழர் கூட்டங்களிலும் கலந்துகொண்டார்.

தென்னாப்பிரிக்கத் தமிழர் கூட்டிணைப்புக் கழகத் தலைவர் மிக்கி செட்டி, நேட்டால் தமிழர் கூட்டிணைப்புக் கழகத் தலைவரும் டர்பன் காவல் துறை உதவியாணையாளருமான பாலாநாயுடு, தென்னாப்பிரிக்க மனித உரிமை ஆணையர் கார்த்திக் கவுண்டர், மனித உரிமை ஆணையத்தின் தலைவர்

ஜே. கோலப்பன், முன்னாள் அமைச்சர் ரோவூப் மேயர், துணை அமைச்சர், இராய் படையாச்சி, ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் சர்வதேச உறவு பொறுப்பாளரான இப்ராஹிம், வெளியுறவுத் துறையின் தென்னாசிய பிரிவின் துணை இயக்குநர் கேரி ஸ்மித் ஆகியோரைச் சந்தித்து ஈழத்தமிழர் பிரச்சினைகுறித்து விளக்கினார்.

தென்னாப்பிரிக்காவின் ஆளுங்கட்சியான ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியைத் சேர்ந்தவரும் நாடாளுமன்ற சர்வதேச உறவுக்குழு உறுப்பினருமான சிசான் ஜேம்ஸ் மற்றும் அக்கட்சியைச் சேர்ந்த மூன்று பிரதிநிதிகளையும் சந்தித்துப்பேசி ஆதரவு திரட்டினார்.

டர்பன், ஜோகன்ஸ்பர்க் வானொலிகளிலும் நேர்காணல் அளித்தார். தென்னப்பிரிக்கச் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு 10-12-07 அன்று சென்னை திரும்பினார்.

-தென் செய்தி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.