Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒன்பது ரூபாய் நோட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்பது ரூபாய் நோட்டு

- சுந்தர்

img107120102211nz5.jpg

தன்னைச் சுற்றியிருப்பவர்கள் நலனில் அக்கறை கொண்டு, அவர்களை வாழவைக்கும் ஒர் உன்னத மனிதர், குடும்பச் சூழல் காரணமாக ஒன்பது ரூபாய் நோட்டாக (செல்லாத நோட்டு) மாற நேரும் நிலையை இயல்பு மீறாமல் பதிவு செய்திருப்பதே இப்படம்!

தன் மண்ணையும் விவசாயத்தையும் உயிராக நேசிப்பவர் மாதவர் படையாட்சி (சத்யராஜ்). பூமியையே சாமியாக நினைத்து வாழும் அவர், மண்ணில் விளைவதை முடிந்தவரை பிறர்க்கும் கொடுப்பவர். அவரது பிள்ளைகளுக்கு திருமணமாகி, ஒரு வருத்தம் மிகுந்த சம்பவம் நிகழ்ந்தவுடன், கட்டியத் துணியோடு வீட்டை விட்டு வெளியேறிவிடுகிறார் மனைவி வேலாயியுடன் (அர்ச்சனா).

சுய கெளரவத்தை மட்டுமே மூலதனமாகக் கொண்டு எந்தத் தொழிலும் செய்ய முடியாத நிலையில், தன் நண்பன் ஹாஜாபாய் (நாசர்) உதவியுடன் கிடை ஆடு போட்டு வளர்த்து தனியே வசிக்கிறார்கள், அந்தத் தம்பதியர். அதன்பின், அவர்கள் சந்திக்கும் வாழ்க்கைப் போராட்டமும், பாசப் போராட்டமும் மீதிக்கதை.

sathyarajarchananazar03gw3.jpg

வர்த்தக நோக்கம் கலந்திடாமல் தமிழ் மக்களின் மண், மொழி, கலாச்சாரம் சார்ந்த யதார்த்த வாழ்வை உலக சினிமா தரத்தில் வடித்திருக்கிறார், தங்கர்பச்சான்.

ஒரு பேருந்து பயணத்தில் தொடங்கி, அப்பயணம் நிறைவடையும்போது கதையும் முடிவடைகிறது. இந்த உத்தியும், கதைச் சொல்லலும் அருமையான வடிவம்.

கதைக்களமாக முந்திரிக்காடு, பலா மரத் தோப்பு, எள் வயல் என அழகும் உண்மையும் கலந்த கலவை, நம்மை பிரம்மிக்கமட்டுமின்றி, சிலிர்க்கவும் வைக்கிறது.

மாதவர் படையாட்சியாக வாழ்ந்திருக்கும் சத்யராஜ், நடிப்பின் உச்சத்தைத் தொட்டுவிட்டார். உன்னத உழைப்பாளராக மட்டுமின்றி, இறந்த பிறகு சடலமாக சில நிமிடங்கள் நடித்தும் அசத்தியுள்ளார்.

சத்யராஜுக்கு சரிநிகர் சமமாக அசத்தியிருக்கிறார் அர்ச்சனா. ஒரு தாயின் சுய மரியாதையை மட்டுமல்ல; பாசத்தையும் அழகாகப் பதிவு செய்திருக்கிறார்.

நாசரும், ரோகிணியும் படத்துக்கு உறுதுணைபுரியும் பாத்திரங்கள். தண்டபாணியாக நடித்திருக்கும் டான்ஸ்மாஸ்டர் சிவங்கர், கோவணம் கட்டிய வில்லன், பள்ளிக் கூடத்தானாக வரும் சூர்யகாந்த், ராமலிங்கமாக வரும் நிதிஷ்குமார் உள்ளிட்டோர் படத்துக்கு உயிரூட்டுகின்றனர். புதுமுகம் இன்பநிலா, கிராமங்களில் உலா வரும் நிஜ தேவதை.

ஒளிப்பதவு (தங்கர்), இசை (பரத்வாஜ்), பாடல்கள் (வைரமுத்து)... இம்மூன்று முக்கனிகளாய் திகழ்கின்றன!

மொத்தத்தில் இந்த 'ஒன்பது ரூபாய் நோட்டு'க்கு எதிரான மதிப்பினைக் கொண்ட டாலர்களை டெபாசிட் செய்ய, ஓரிலக்க எண்ணிக்கையிலான வங்கிகள் போதாது எனலாம்!

(மூலம் - வெப்துனியா)

http://in.tamil.yahoo.com/Entertainment/Fi...071201022_1.htm

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் இத்திரைப்படம் பார்த்தேன்.எல்லோரும் பார்க்கக்கூடிய படம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒன்பது ரூபாய் நோட்டு - விமர்சனம்

ஒன்பது ரூபாய் நோட்டு - கோடிக்கு சமம்!

சத்யராஜ்-அர்ச்சனா-நாசர்-ரோகினி

கதை, திரைக்கதை, ஒளிப்பதிவு, இயக்கம்: தங்கர்பச்சான்.

தயாரிப்பு: டாக்டர் ஏ.எஸ்.கணேசன்.

நடிகர்கள்: சத்யராஜ், அர்ச்சனா, நாசர், ரோகினி.

பாடல்கள்: வைரமுத்து.

இசை: பரத்வாஜ்.

மீண்டும் ஒரு அற்புதமான கதையுடன் தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களை நெகிழ வைக்க வந்துள்ளார் ஒளி ஓவியர் - எதார்த்த இயக்குநர் தங்கர் பச்சான்.

3 மணி நேரம் ரசித்து விட்டுப் போகக் கூடிய வகையில் இல்லாமல், நாம் எதையெல்லாம் இழந்து கொண்டிருக்கிறோம், எதையெல்லாம் மறந்து கொண்டிருக்கிறோம் என்பதை பாடம் போல படத்தின் மூலம் காட்டும் புரட்சி இயக்குநர் தங்கர் பச்சான்.

அவருடைய ஒவ்வொரு படத்திலும் தமிழர்களின் தொலைந்து போன தடங்கள், மறந்து போன கலாச்சாரங்கள், மரபுகளை வடித்துக் கொடுப்பவர் தங்கர்.

இன்று வரும் படங்களையெல்லாம் பார்க்கும்போது தங்கரின் படம் ஒவ்வொன்றும் சொக்கத் தங்கம். அவருடைய ஒன்பது ரூபாய் நோட்டும், தங்க முலாம் பூசப்பட்ட ஒரு அற்புதப் படைப்புதான்.

தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்லாது, ஒவ்வொரு தமிழனுக்கும் புதிய பரிமாணத்தைக் காட்டும் வகையில் உருவாகியுள்ளது ஒன்பது ரூபாய் நோட்டு.

அப்பழுக்கில்லாத கிராமத்து வெள்ளந்தி மனிதர்களின் வாழ்க்கையை, ஜீவன் குறையாமல் அப்படியே கொடுப்பது சாதாரணமான காரியம் அல்ல. அந்தக் கலையை பாரதிராஜாவுக்குப் பிறகு தங்கர்தான் மிகச் சரியாக செய்து வருகிறார்.

பாரதிராஜா தெற்கத்திக் கதைகளில் மன்னர் என்றால், வடக்கத்தி கிராமங்களின் ஜீவனை சீரும், சிறப்புமாக கொடுப்பதில் தங்கர் மன்னாதி மன்னராக மாறி வருகிறார்.

அவரது ஒவ்வொரு படத்திலும் வட மாவட்ட மக்களின் வாழ்க்கை பிரதிபலிக்கும். இந்த முறை, இதுவரை யாருமே போயிராத வேலூர் மாவட்ட கிராமங்களுக்கு விசிட் அடித்துள்ளார் தங்கர்.

நேர்த்தியான திரைக்கதை, உயிரோட்டமான வசனங்கள், நேட்டிவிட்டி குறையாத கேரக்டர்கள் என உருக்கியிருக்கிறார் ஒன்பது ரூபாய் நோட்டுப் படத்தில்.

படத்தில் வரும் மண் மணம் மாறாத ஒவ்வொரு வசனமும், மயிலறகால் இதயத்தை வருடும் வகையில் உள்ளன. படத்தைப் பார்ப்பவர்களின் கண்களில் தானாகவே கண்ணீர்க் கதவு திறந்து கொள்வதை பார்க்க முடிகிறது. மூடத்தான் முடியாமல் அனைவரும் திகைத்துப் போய் திண்டாடி தியேட்டர்களை விட்டு வெளியேறுகிறார்கள்.

தங்கர் படங்களில் இன்னொரு விசேஷத்தையும் பார்க்கலாம். கதை சொல்லும் நேர்த்தி, அழகு. அது இதுவரை எந்த இயக்குநரிடத்திலும் காண முடியாத ஒரு அற்புதக் கலை. கதையுடன் சேர்த்து நம்மையும் கட்டிப் போட்டு விடுவார் தங்கர். இந்த விஷத்தில் பாரதிராஜாவையும் கூட மிஞ்சியுள்ளார் தங்கர் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி ஒரு அற்புதமான படத்தை தங்கர் இயக்க வாய்ப்பளித்த தயாரிப்பாளர் டாக்டர் ஏ.எஸ்.கணேசனுக்குத்தான் முதலில் நன்றி சொல்ல வேண்டும்.

சத்யராஜ், நாசர், ரோகினி, அர்ச்சனா என அற்புதமான கலைஞர்களைக் கொண்டு தங்கர் பின்னியுள்ள வாழ்க்கைச் சித்திரம்தான் ஒன்பது ரூபாய் நோட்டு.

மாதவ படையாச்சி கேரக்டரில் சத்யராஜ் வாழ்ந்துள்ளார். படம் முழுக்க நிறைய பிளாஷ்பேக் காட்சிகள். ஆனாலும் ஒவ்வொன்றும் சிறப்பாக காட்டப்பட்டுள்ளன.

சென்னையிலிருந்து பஸ்சில் தனது கிராமத்துக்கு வரும் சத்யராஜ் தனது கதையைக் கூறுவது போல படத்தை அமைத்திருக்கிறார் தங்கர்.

மாதவர் படையாச்சி, பண்ருட்டி அருகே உள்ள பத்திரக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர். அந்த ஊர் மக்களால் மதிக்கப்படுகிற ஒரு மனிதர். அவருக்கு வேலாயி (அர்ச்சனா) என்ற மனைவியும், 5 மக்களும்.

விவசாயம்தான் படையாச்சியின் உயிர். அவருடைய நெருங்கிய நண்பர்தான் காஜா பாய் (நாசர்). வாழ்க்கையில் முன்னேற முடியாமல் தவிக்கும் ஒரு அப்பாவி ஜீவன். அவரது நிலையைப் பார்த்து மாதவரும், வேலாயியும் உதவுகின்றனர். தனக்கென ஒரு தொழிலைத் தொடங்குமாறு கூறி நிறையப் பணத்தையும் கொடுக்கின்றனர்.

சில வருடங்களுக்குப் பிறகு வளர்ந்த விட்ட மாதவரின் பிள்ளைகள், மாதவருக்கு எதிராக திரும்புகின்றனர். சொத்தில் பங்கு கேட்கின்றனர். இவர்களுக்கு மாதவரின் உறவினரான தண்டபாணி (டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர்) உடந்தை. மாதவருக்கு எதிராக பிள்ளைகளைத் தூண்டி விடுகிறார் தண்டபாணி.

இதை வயதான மாதவரும், அவரது மனைவியும் எதிர்பார்க்கவில்லை, அதிர்ச்சியில் சமைகின்றனர். இறுதியில் பிள்ளைகளை விட்டுப் பிரிய முடிவு செய்கிறார்கள்.

இந்த சமயத்தில்தான் அவர்களுக்கு காஜா பாயின் நினைவு வருகிறது. அடுத்த ரயிலைப் பிடித்து ஆம்பூருக்கு ஓடுகிறார்கள். அங்கு காஜா பாய் பெரிய தொழிலதிபராக செட்டிலாகியிருக்கிறார். மாதவரையும், வேலாயியையும் சந்தோஷத்துடனும், பாசத்துடனும் வரவேற்கின்றனர் காஜா பாயும், அவரது மனைவி கமீலாவும்.

விரும்புகிற வரை எங்களுடேனேயே இருங்கள் என்றும் கேட்டுக் கொள்கின்றனர். ஆனால் அதை மறுக்கும் மாதவர், யாருக்கும் எந்தத் தொந்தரவும் இல்லாமல் தான் பிழைக்க வழி செய்யுமாறு கோருகிறார் மாதவர்.

மாதவரின் உணர்வுகளை மதிக்கும் காஜா பாய், தனக்குச் சொந்தமான 6 ஏக்கர் நிலத்தை கொடுக்கிறார். சில ஆடுகளை வாங்கவும் மாதவருக்கு உதவுகிறார்.

ஒரு நாள் தான் ஆசையுடனும், சொகுசாகவும் வளர்த்த தனது இளைய மகன் சொந்த ஊரிலேயே அடிமை போல நடத்தப்படுவதை அறிகிறார் மாதவர். மனைவியிடம் சொல்லி வருத்தப்படுகிறார். இதையடுத்து இருவரும் சொந்த ஊருக்குச் செல்ல முடிவு செய்கின்றனர். ஆனால் அன்று இரவே வேலாயி இறந்து போகிறார்.

அடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் ஜீவன்.

இப்படி ஒரு நடிப்பை எப்படி இத்தனை நாள் மறைத்து வைத்திருந்தீர்கள் சத்யராஜ் என்று எல்லோரது மனதிலும் கேள்வியை எழுப்பும்படி செய்து விட்டார் சிறப்பாக நடித்துள்ள சத்யராஜ்.

மாதவர் படையாச்சியாக வாழ்ந்திருக்கிறார். சாதாரண கிராமத்து மனிதர்களின் எளிமையான, கிழிந்த உடையுடன் வலம் வந்துள்ள சத்யராஜ், அனைவரையும் கவர்ந்து இழுந்து விட்டார். எந்த வித மிகையும் இல்லாத இயல்பான நடிப்பு.

கிளைமாக்ஸ் காட்சியில், கோவணத்துடன் அவர் குளிக்கும் காட்சியில் நெக்குருக வைத்துள்ளார்.

அர்ச்சனா தனது இத்தனை கால நடிப்பனுபவத்தைக் கொட்டி அசத்தியுள்ளார். தேசிய விருது பெற்றதற்கான நியாயத்தை இந்தப் படத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார். ஏன் இப்படிப்பட்ட அற்புதமான நடிகையை தமிழ் சினிமா பயன்படுத்திக் கொள்ள மறுக்கிறது என்ற கேள்விதான் அர்ச்சனாவைப் பார்த்தபோது மனதில் தோன்றுகிறது.

உணர்வுகளை வெளிப்படுத்திப் பேசும் காட்சிகளில் உருக்கியிருக்கிறார் அர்ச்சனா. அவரது கண்களும் கூட அழகாக நடித்துள்ளன, நம்மை அழ வைக்கின்றன.

நாசரும், ரோகினியும் நிறைவாகச் செய்திருக்கிறார்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கேரக்டர்களை.

எடிட்டிங்கில் லெனின் பிரமிக்க வைத்திருக்கிறார். அவருடைய விரல்களில் சிக்கி பண்ருட்டி பக்க கிராமங்களின் எழில் சிதையாமல் சிறப்பாக வந்திருக்கின்றன.

படத்தில் சண்டைக் காட்சியும் உண்டு. ஆனால் அதைக் கூட ரசிக்கும் வகையில், இயல்பாக படமாக்கியிருக்கிறார் தங்கர்.

வைரமுத்துவின் வரிகளை எப்படிச் சொல்லி பாராட்டுவது என்று தெரியவில்லை. அதிலும் பரத்வாஜின் அற்புதமான இசையில், வைரமுத்துவின் அத்தனைப் பாடல்களும் பாடங்களாக வைக்கத் தகுதி படைத்தவை.

குறிப்பாக வேலாயி, யார் யாரோ, மார்கழியில் ஆகிய பாடல்கள் மனதை விட்டு இன்னும் கூட நீங்காமல் ரீங்காரமிடுகின்றன.

இந்தப் படத்தின் மூலம் பல விஷயங்களை நமக்குச் சொல்லியிருக்கிறார் தங்கர். உறவுகளின் நிதர்சனம், மத ஒற்றுமையின் மகத்துவம், கிராமத்து வாழ்க்கையின் நிம்மதி என அவற்றைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

முஸ்லீம் தம்பதியின் சவ ஊர்வலத்தில் இந்துக்களின் சாவுக்கு அடிக்கப்படும் மேளம் முழங்குவது படத்தின் முத்தாய்ப்புக் காட்சிகளில் ஒன்று.

மனித உணர்வுகளும், மனிதாபிமான உணர்வுகளும் மக்கிப் போய் இந்த நாளில், இப்படி ஒரு படத்தைக் கொடுத்ததற்கா தங்கருக்கு கோவில் கட்டிக் கும்பிடலாம்.

ஒன்பது ரூபாய் நோட்டு - கோடிக்கு சமம்!

:)

thanks:

http://thatstamil.oneindia.in/movies/revie...iew-031207.html

ஒன்பது ரூபாய் நாயகன் வெண்புறா அமைப்பினால் நடாத்தப்படும் இசைவிழாவில் கலந்து கொள்ள பிரித்தானியா வருகிறார்..

ஒன்பது ரூபாய் நோட்டு இன்னும் பார்க்கவில்லை. ஆனால் விமர்சனங்களை படிப்பது வழமை. விமர்சனம் என்பது அவரவர் சிந்தனைபாற்பட்டதாகவே இருக்கும். மேலே உள்ள இரண்டு விமர்சனங்களும் படத்தை புகழ்ந்து வந்தவை. அதற்கு மாற்றாக கீழே உள்ள விமர்சனத்தையும் படித்து பாருங்கள்.

ஒன்பது ரூபாய் நோட்டு - திரைப்பட விமர்சனம்

ஆதிக்க சாதிவெறி மறைத்த யதார்த்தம் !

மக்களின் யாதார்த்த வாழ்க்கையினை சொல்வதும், சமூக ரீதியில் அவர்களை சிந்திக்க தூண்டுவதும், பிற்போக்கு அடிமைத்தனங்களில் இருந்து விடுவிக்கும் வகையிலும், போராட்டத்தின் அவசியத்தை உணரும் வகையிலும் இருப்பதும் - இருக்கவேண்டியதும் தான் கலை இலக்கியம். "கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே" என்பதன் அர்த்தம் இதுதான்.

இன்று யதார்த்தம் என்ற பேரில் இல்லாததையும் - திரித்தும், சமூக பிரச்சினைகளை தனிப்பட்ட ரீதியிலானது என்று திசை திருப்பியும், அடிமைத்தனங்களை மெஞ்சியும், போராட்டம் என போலிஎதிர்ப்பையும் கொண்ட கலைஞர்களை அன்றாடம் பார்ப்பனியமும், மறுகாலனியாதிக்கமும் உற்பத்தி செய்து வருகிறது.

அதில் திரைப்பட துறை உற்பத்தியில் தற்போது முன்னணியில் இருப்பவர்கள் தங்கர்பச்சன், சேரன், சீமான் போன்றவர்கள். அவர்களில் தங்கர்பச்சான் உடைய 'ஒன்பது ரூபாய் நோட்டு' என்ற 'திரைப்பட'த்தை பற்றிய பார்வையே இந்த பதிவு.

படம் வெளிவருவதற்கு முன்னர் இசை வெளியீட்டு விழா என்ற பேரில் நிறைய கலைஞர்கள் (?) பங்கேற்று ஒருவரை ஒருவர் சொறிந்து மன்னிக்கவும் புகழ்ந்து கொண்டார்கள். அப்ப படத்தை பற்றி கூறிய வார்த்தைகள் படையாச்சி (சத்யராஜ்) அரிக்கன் லைட்டை துடைக்கும் அழகு, ஊருல எல்லோரும் தூங்கியிருப்பாங்கல ( வாழ்ந்து கெட்டவராக வரும் சத்யராஜ் சொந்த ஊருக்கு இரவில் போகும் போது கேட்கும் கேள்வி) என்று சில வசனங்களை கூறி தங்கர் புகழை பாடினர்.

இப்படி லைட்ட துடைப்பதில் என்னடா அழகு, இரவு-ல் தானடா மனிதன் தூங்குவான் என்ற கேள்வி யாருக்கும் கோபமாக கேட்க தூண்டும். சரி படம் வெளிவந்துவிட்டது, பார்த்துவிட்டும் வந்தாச்சு. என்ன சொல்லியிருக்கார் தங்கர்பச்சான் என்று பார்ப்போம்.

"சத்யராஜ் பஸ்-க்கு போதுமான காசு இல்லாமல் கண்டக்டரிடம் தன்னை பத்திரக்கோட்டை ஊருக்கு அழைத்து செல்லும்மாறு கெஞ்சி கேட்டும் அவர் மறுத்துக்கொண்டும் இருக்க பஸ்-ல் இருக்கும் சத்யராஜ் ஊரை சேர்ந்த ஒரு இளைஞன் சத்யராஜ்-க்கு டிக்கெட் போட்டு உடன் அழைத்து வருகிறார்...படம் ஆரம்பம் இதுதான். இந்த பயணத்தில் தன்னுடைய கடந்த கால வாழ்க்கையினை மாதவ படையாச்சி (சத்யராஜ்) நினைத்துப்பார்க்கிறார்.

ஊரூல விவசாயம் செழிப்பாக செய்து, வசதி வாய்ப்பாக வாழ்கிறார் மாதவ படையாச்சி . தன் ரெண்டு பெண்களை திருமணம் செய்து கொடுத்துவிட்டு, தன் மூன்று மகன்களில் இரண்டு பேருக்கு திருமணம் செய்து மருமகள்கள், பேரன் பேத்தி என கூட்டுக் குடும்பமாக வாழ்கிறார். வர்ற வருமானத்தில் ஊரில கஷ்டப்படுபவர்கள், தன் நண்பர் ஹாஜா பாய் (நாசர்)க்கும் என நிறைய உதவிகள் செய்து வருகிறார். இந்நிலையில் திருமணம் ஆகாமல் இருக்கும் மகன் அந்த ஊர் வண்ணார் வீட்டு பெண்னை காதலித்து அந்த பெண்னும் கர்ப்பம் தரித்து விடுகிறாள். இந்த விஷயம் மாதவ படையாச்சியின் மனைவிக்கு (அர்ச்சணா) தெரிய வருகிறது. படையாச்சி மனைவி இந்த திருமணம் மட்டும் நடந்தது என்றால் நம் சாதி சனம் எல்லாம் காரிதுப்பும் அதனால் கூடாது என மகனை அடிக்கிறாள், மகன் கண்டிப்பாக அந்த பெண்ணை தான் கட்டுவேன் என சொல்கிறான். இதை தூரத்தில் இருந்து கேட்டுவிடுறார் படையாச்சி.

அப்ப இருந்து துக்கமாக இருவரும் இருக்க (அவர்களுக்குள்ளும் இது பற்றி பேசவில்லை) அன்று இரவு தன் சொந்தக்காரன் தூண்டுதல் பேரில் மற்ற இரண்டு மகன்கள் பணம் வேணும், நாங்களும் எங்க பெண்டாட்டிகளும் டூர் போக போறோம் என்கின்றனர். அறுவடை வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு போகவேண்டியது தானே என மாதவ படையாச்சி கேட்க அவர்கள் மறுத்துவிட்டு வாக்குவாதம் ஆகிறது. நாங்க (மாதவ படையாச்சி) ஏற்கனவே நொந்துபோய் இருக்கோம் எங்களை ஏண்டா இப்படி பேசுற என வருந்துகிறார்.

இதற்கிடையில் மருமகள்கள் இருவரும் வந்து நீயே வேலை செய்யலாமே என கேட்க, படையாச்சி மனைவி எழுந்து வந்து, எப்படி மாதவ படையாச்சியை நீ கேள்வி கேட்கலாம், அவரு சாமிடி என பேச ஆரம்பிக்கிறாள். பின் மகன்கள் மாதவ படையாச்சியிடம் 'நீ போனாதான் எங்களுக்கு நிம்மதி' என கூற... அன்று இரவே ஊரை விட்டு கிறம்புகிறார்கள் மாதவ படையாச்சியும் அவர் மனைவியும்.

நேரே ஆம்பூர் வர அங்கு நாசர் வீட்டுக்கு செல்கின்றனர். அவர் இவர்கள் செய்த உதவி காரணமாக தன் சொந்த வீட்டில் தங்க வைக்கிறார். பின் தங்களுக்கு பக்கத்து கிராமத்திலே தங்கி ஆடு வியாபாரம் செய்ய உதவி கேட்க அதனை நாசர் செய்து கொடுக்கிறார். அதற்கான பணத்தை அவ்வப்போது திருப்பிக்கொடுக்கிறார். பின்னர் அந்த ஊருல மாடுபிடிக்க வரும் தன் சொந்த ஊர்க்காரரிடம் தன் கடைசி மகன் கஷ்டப்படுவதை பார்க்கிறார். அப்போது அவன் அந்த வண்ணார் வீட்டு பெண்ணை திருமணம் செய்து கஷ்டப்படுகிறான் என தெரியவருகிறது.

அன்று இரவு இந்த சம்பவத்தை தன் மனைவியிடம் கூறுகிறார். அப்போது நாம மட்டும் ஊருலேயே இருந்து இருந்தா அந்த பெண்னை திருமணம் செய்துகொள்ள விட்டுயிருப்போமா என கோபமாக கதறுகிறாள் மனைவி. (மனைவி மட்டும் தான் இந்த விஷயத்தை பற்றி படத்தில் பேசுகிறாள். இறுதி வரை மாதவ படையாச்சி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.)

ஒரு கட்டத்தில் ஊருக்கு சென்று விடுவது என தீர்மானிக்கிறார்கள். காலையில் கிளம்புவதாக இருக்க, அன்று இரவே மனைவியை பாம்பு கடித்து இறந்து போகிறார். இறக்கும் முன் தன் சாம்பலையாவது நம் சொந்த ஊரில் போய் கரைக்கும் மாறு கேட்டுக்கொள்கிறாள்.

அதன் பின்பும் ஊருக்கு போக நாசர் சொல்ல, எப்படி மனைவியின் பிணத்துடன் சென்றால் 'என்ன நினைக்கும் ஊர் சனம்' என சொல்லி மறுத்துவிட.... மீண்டும் நாசர் வீடு. பின் நாசர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக பெங்களூர் செல்லும் முன் மாதவ படையாச்சி க்கு 6 ஏக்கர் நிலத்தையும் பணமும் கொடுத்துவிட்டு செல்கிறார்.

நிலத்தையும், பணத்தையும் நாசர் மச்சான்கள் பறித்துகொள்ள மாதவ படையாச்சி கிளம்புகிறார். டாஸ்மாக் கடையில் குடித்துவிட்டு ரோடுகளில் அலைகிறார். இறுதியாக பஸ்-ல் கிளம்புகிறார் சொந்த ஊருக்கு, இதுதான் படத்தின் ஆரம்ப காட்சி. ப்ளாஷ்பேக் முடித்துகொண்டு நள்ளிரவில் சொந்த ஊருக்கு (பத்திரகோட்டை) வருகிறார்கள்.

தன் பிள்ளைகள் சொத்துகளை இழந்து கஷ்டப்படுவதையும், தன் கடைசிமகன் வண்ணான் பெண்னை கல்யாணம் செய்ததால் ஊரை விட்டு தள்ளிவைக்கப்பட்டு முந்திரிக்காட்டில் குடியிருப்பதாகவும் தன்னுடன் வந்த இளைஞனின் அம்மா சொல்கிறாள் பின் ஊருக்குள் நடந்து முந்திரி தோப்பில் இருக்கும் தன் மகன் வீட்டுக்கு போய் பார்க்கிறார். அனைவரும் தூங்கி கொண்டு இருக்க குழந்தை ( மாதவ படையாச்சி பேரன்) மட்டும் "பசிக்குது அப்பா" என அழுதுகொண்டு இருக்கிறது.

இறுதியில் ஒருமுறை குழந்தையினை தூக்கி பார்த்துவிட்டு வந்து விடுகிறார் தன் சொந்த வீட்டு திண்ணையில் தூங்குகிறார். அதிகாலை ஒரு மரத்தின் அடியில் இறந்து கிடக்க ஊரே அழுது புலம்ப....மகன்களும், மருமகள்களும் அழுகிறார்கள்."

அன்றாடம் நிகழ்கின்றவற்றை படமாக எடுத்தும் அதில் திட்டமிட்டு சிலவற்றை மறைத்து விடுவதால் மக்களுக்கு உண்மையை அறிய வாய்ப்பு இல்லாமல் போச்சு. ஆனாமுழு பொய்-னை விட அரைகுறை உண்மை ஆபத்தானது என்று தங்கர் மறந்த (மறைத்த) நோட்டை பார்க்கவேண்டியது அவசியம்.

படத்தில் வரும் மாதவ படையாச்சியின் வர்க்க பின்னணி என்னவென்று பார்த்தோமானால் ஊரில் வளமான நிலத்துக்கு சொந்தக்காரர். கூடுதலாக படையாச்சி. அதன் உடன் விளைவாக ஆதிக்க சாதி உணர்வில் ஊறி இருப்பவர். பொதுவாக இந்த வர்க்கத்துக்கே உரிய சிந்தனை என்னவென்பதை பலர் பார்த்திருக்கலாம். அந்த சிந்தனையானது வயதான காலத்தில் இத்தகைய ஆண்கள் அதிகார தோரனையில் எதிர்ப்பே இருக்க கூடாது தனக்கு என்று நடந்து வருவார்கள். அவ்வாறு சிந்தித்து வரும் படையாச்சி வாழ்க்கையில் நடக்கும் கதை இது என்பதை கருத்தில் கொண்டு படத்தின் மீதான கண்ணோட்டமே அந்த மறைந்த நோட்டைனை நாம் கண்டறிய முடியும்.

சராசரி நிகழ்வுகளான ஒரு சின்ன விஷயத்துக்கு மகனுடன் கோபித்து கிளம்பி போய் இறுதியில் வருகிறார் மாதவ படையாச்சி. ஆனால் அதைவிட பலமடங்கு முக்கியமான தன் கடைசி மகன் ஒரு வண்ணான் வீட்டு பெண்னை காதலித்தையும், திருமணம் செய்து கொணடதையும் கண்டித்து தன் மனைவி பேசிய போது மெளனமாகவே அதனை ஆமோதிக்கிறார் மாதவ படையாச்சி.

தன் மாமன் வீட்டு பெண்னை சொந்த சாதியினை சேர்ந்தவன் காதலித்து கர்ப்பம் ஆக்கியதை கேட்டு அவனை அவளுக்கு திருமணம் செய்து வைக்கிற படையாச்சி அதுவே தன் வீட்டில் நடக்கும் போது பெண் வன்னார் இனத்தை சேர்ந்தவர் என்பதால் மெளனம் சாதித்து ஆமோதிக்கிறார்.

இங்கு தான் படையாச்சி வர்க்கபார்வையினை சற்றுகீரி பார்க்க வேண்டும்.கதையில் படையாச்சி மகள் இருந்து அவள் ஒரு வண்ணான் வீட்டு பையனை காதலித்து கர்ப்பம் தரித்து இருந்தால் என்ன செய்துயிருப்பார். இதனை திரைப்படத்தில் கவனாமாக தவிர்த்து கதைப்படுத்தப்பட்டு உள்ளது. இதனை திரையில் தேடினால் பார்க்க முடியாது. நிஜத்திலேயே பார்க்க முடியும்.

2003-இல் வன்னியர் சாதியை சேர்ந்த கண்ணகி தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த முருகேசனை காதலித்ததால் இருரையும் விஷம் கொடுத்து கொன்றனர் வன்னிய சாதிவெறியர்கள். போன மாதம் வன்னியர் சாதியை சேர்ந்த சங்கர் என்ற ஐ.டியில் வேலை பார்ப்பவன் தன் அக்கா நாயக்கர் சாதியை சேர்ந்தவரை திருமணம் செய்ததை அடுத்து கர்ப்பினியான அக்காவை அழைத்து வந்து அப்பனுடன் சேர்ந்து கொலை செய்துவிட்டான்.

இதனை எல்லாம் படத்தில் வைக்க முடியாது என்பதலேயே அதற்கேற்ப கதையினை மாற்றி மெளனமாகி விட்டார் மாதவ படையாச்சி. காரணம் என்னவென்றால் இந்த படையாச்சி வேற யாரும் இல்லை தங்கர்பச்சான் தான்.

தங்கர்பச்சான் பற்றி தெரிந்து கொண்டால் மாதவ படையாச்சி சொல்லாதவற்றை அறிய முடியும்.

சாதித்தலைவர் வாழப்பாடி ராமமூர்த்திக்கு தன் சாதிபற்று(வன்னிய) காரணமாக அவருடைய தேர்தல் பிரச்சாரத்தை தயாரித்து வழங்கியவர் தங்கர்பச்சான் அவர்கள்.

பின்னர் 'மருத்துவர்' ராமதாஸ் அவர்கள் தங்கள் வன்னியர் சாதிக்கு துரோகம் செய்கிறீர்கள், தலித்துகளுக்கு வக்காலத்து வாங்கி வருகிறீர்கள் எனவும் "டாக்டர் ஐயா அவர்களுக்கு மனம் திறந்த மடல்" என எழுதியவர்களில் தங்கர்பச்சானும் ஒருவர்.

ஆதலால் படத்தில் மாதவ படையாச்சி தன் மகன் அந்த பெண்னை தனது மகன் மண உறவு இல்லாது (தொடர்பு) மட்டும் வைத்து இருந்தால் இதனை வெளிப்படையாகவே ஆமோதித்து மகிழ்ந்து இருப்பார் படையாச்சி எனபதே யதார்த்தமாக இருக்கிறது.

மொத்தத்தில் படத்தில் 'நிலப்பிரபுத்துவம்' மற்றும் 'சாதி பெருமை'யினை கதாநாயகன் மாதவ படையாச்சி மூலம் தங்கர்பச்சான் அவர்கள் யதார்த்தம் என்று தூக்கி நிறுத்துகிறார்.யதார்த்தம் என்று சாதிவெறியினை காண்பிப்பதை ஒத்துக்க முடியுமா, உன் கருத்தை என்ன அதில் என்று சொல்லு என்பது தான் இந்த போலி யதார்த்த கலைஞர்களை சட்டையினை பிடித்து கேட்க வேண்டிய கேள்வி.

இதற்கிடையில் படத்தில் ஆங்காங்கே விஷமக் கருத்துக்களை தூவி இருக்கிறார்.

ஊருக்கு வரும்போது விவசாயம் பொய்த்து போனதற்கு மாதவ படையாச்சி சொல்கிறார், பூச்சி மருந்து போட்டதால தான் இந்த நிலைமை என. பூச்சி மருந்து போட்டு தான் ஆக வேண்டும் என்ற விதைகளை உருவாக்கி இரண்டை லாபத்தை பன்னாட்டு கம்பெனிகள் பார்ப்பதற்கு 'பசுமை புரட்சி' என்ற பெயரில் வழி ஏற்படுத்தி கொடுத்ததே ஆட்சியாளர்கள் தான். தங்கர் என்னான்னா பூச்சி மருந்து என்று 2007-ல வந்து பூ சுற்றுகிறார்.

லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட நாட்டில், விவசாயத்திலிருந்து துரத்தபட்டு தினமும் ஆயிரக்கணக்கனவர்கள் இந்திய பெருநகரங்களில் கூலிகளாக மாறிவருகின்ற சூழ்நிலையில் இதற்கான காரணத்தை பூச்சி மருந்துகளில் ஆராய்கிறார் தங்கர்பச்சான்.

ஊருக்கு வந்து குழாய் தண்ணீரில் குளிக்கும் போது ஏன் இப்ப கிணற்றில் இருந்து தண்ணீர் கிடைக்கலையா என்று படையாச்சி கேட்க, அதற்கு அந்த இளைஞன் "எப்படி கிடைக்கும் அதான் பக்கத்து நெய்வேலியில் நிலக்கரி சுரங்கம் வெட்டி மின்சாரம் தயாரித்து பக்கத்து மாநிலத்துக்கு கொடுக்கிறார்களே, அதனால 200 அடி தோண்டினாலும் தண்ணீர் கிடைப்பது இல்லை" என்கிறார்.

தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீரை தினமும் கோக்-ம், பெப்சி-யும் எடுத்து பாட்டில் போட்டு "ஆற்றுபடுக்கைகளை" விற்றுக்கொண்டு இருக்கின்ற சூழ்நிலையில் தங்கர்பச்சான் தமிழின வெறியினை தண்ணீர்-ல தேடுகிறார்.

ஊருக்குள் நடந்து போகும் போது அந்த இளைஞன் ஒரு கொடியினை காட்டி இந்த 'மஞ்சள்- நீல கொடி' தான்யா இப்ப 'பெரிய கட்சி' என பா.ம.க வை சுட்டிக்காட்டுகிறார். ஊருள எங்கபார்த்தாலும் மாம்பழ சின்னமாக தான் ஒளிப்பதிவு வேறு தெரியுது . பா.ம.க ஒரு வேளை ஸ்பான்சர் செய்து இருக்கலாம் என யோசிக்காதிங்க, இயக்குனரே பா.ம.க அனுதாபி(இது டிசம்பர் 2007 அப்டேட்)என்பதால் திட்டமிட்ட ஒளிப்பதிவுகள் இவை.

மற்றபடி வைரமுத்து பாடல் வரிகளை பற்றி கூறியே ஆக வேண்டும்.

மார்கழில குளிச்சுபாரு குளுரு பழகி போகும்!

மாதவனா வாழ்ந்துபாரு வறுமை பழகி போகும்!

வறுமை பழகிபோனா வாழ்க்கை பழகி போகும்!

சந்தோஷம் வெறுத்துபோனா சாவு பழகி போகும்!

"பழகி போகும்,பழகி போகும்" என்கிறாராரே இவரு பொன்னுமனி மாளிகை, தாய் பென்கள் விடுதி என இவரிடம் இருந்து எல்லாத்தையும் வாங்கிட்டு ஆளை சொந்த ஊருக்கே அனுப்பிவைப்போம், வாழ்க்கை பழகி போகும் என போவார்களா இந்த வைரமுத்துகள்.

நன்றி

புத்தகபிரியன்.

http://puthagapiriyan.blogspot.com/2007/12/blog-post_09.html

  • கருத்துக்கள உறவுகள்

விமர்சனங்கள் எப்படியும் வரலாம்.அது பார்ப்பவரின் கண்ணோட்டத்தில் உள்ளது.

தங்கர்பச்சான் இயக்கத்தில் சத்யராஜ், அர்ச்சனா, நாசர், ரோகிணி உள்ளிட்ட பலர் நடித்த "ஒன்பது ரூபாய் நோட்டு' திரைப்படம் வரும் ஞாயிற்றுக்கிழமை (டிச.9) தமிழகம் முழுவதும் 100 திரையரங்குகளில் இலவசமாக திரையிடப்படுகிறது. விரும்புபவர்கள் மட்டும் பணம் தரலாம். இதை பிரமிடு சாய்மீரா நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

"ஒன்பது ரூபாய் நோட்டு' மண்ணின் மனிதர்களையும் உறவுகளையும் பற்றிய தரமான படம். இப்படிப்பட்ட ஒரு படைப்பு அனைவரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திற்காகத்தான் இந்தப் புதிய முயற்சி. வேறு லாப நோக்கம் எதுவுமில்லை.ஏனென்றால் எங்கள் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கவுமில்லை; விநியோக உரிமையையும் பெறவில்லை. இதுபோன்ற நல்ல படங்களை மக்கள் ஆதரிக்க வேண்டும் என்பதால் தமிழகம் முழுவதும் நாங்கள் நடத்தி வரும் திரையரங்குகளில் குறிப்பிட்ட 100 திரையரங்குகளில் (ஒரு காட்சி) இந்தப் படத்தைக் கட்டணம் ஏதுமின்றி திரையிடுகிறோம்.

இந்த 100 திரையரங்குகளும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள அதி நவீன திரையரங்குகளாகத்தான் இருக்கும். டிச.9-ம் தேதி காலை 11.30 மணிக்குப் படம் திரையிடப்படும். அந்த நேரத்தில் அந்தத் திரையரங்குகளில் எந்தப் படம் ஓடினாலும்... அது பெரிய நடிகர்கள் படங்களாக இருந்தாலும், அந்தப் படங்கள் நிறுத்தப்பட்டு அதற்குப் பதிலாக "ஒன்பது ரூபாய் நோட்டு' படம் திரையிடப்படும்.

திரையரங்கின் வெளியே ஓர் உண்டியல் வைக்கப்பட்டிருக்கும். படம் பார்த்துவிட்டு வருபவர்கள் தாங்கள் விரும்பினால் தங்களால் முடிந்த தொகையை அதில் போடலாம். இதற்கு எந்த விலை நிர்ணயமும் கிடையாது. ஏனென்றால் இந்தப் படம் விலைமதிக்க முடியாத ஒரு படைப்பு.

மக்கள் மனமுவந்து அளிக்கும் அந்தத் தொகை, இதுபோன்ற ஒரு நல்ல படத்தை எடுக்க வேண்டும் என்று துணிவுடன் பணம் போட்ட தயாரிப்பாளர் ஏ.எஸ்.கணேசனுக்கு வழங்கப்படும். டிக்கெட் பெற விரும்புபவர்கள் எங்களுடைய "46464646' என்ற கால்சென்டர் எண்ணில் தொடர்புகொண்டு சாய்மீரா நிறுவனம் நடத்தும் திரையரங்குகளில் தாங்கள் விரும்பும் குறிப்பிட்ட திரையரங்கில் இலவசமாக முன்பதிவு செய்துகொள்ளலாம்.

http://aayudhaezhuthu.blogspot.com/2007/12/blog-post_05.html

Edited by nunavilan

  • 2 weeks later...

அழகிய தமிழ் மகன் படத்தையும் சிவாஜி படத்தையும் உச்சந்தலையில் வைத்து கும்மாளமிடும் கூட்டத்திற்கு இந்த ஓன்பது ரூபாய் நோட்டு இழிவாகத்தான் தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட நாட்களின் பின் நல்ல ஒரு படம் பார்த்த உணர்வு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒன்பது ரூபாய் நோட்டு" மிக நல்ல படம். விமர்சனங்கள் பலவாகவும் வரும் ஒன்று நம்மைச் செதுக்கும் ஒன்று விமர்சகரையே சீரழிக்கும் அந்த வகையில் எழுதி இருக்கின்றார் புத்தகப் பிரியன். கதையோடு ஒட்டிய திரைப்பாடல் அது . அதைவிடுத்து வைரமுத்துவிடம் எல்லாம் பிடுங்கி விட்டு எல்லாம் பழகிப்போகுமா என்று கேட்பது அவரின் மனசு பக்குவப்படாத தன்மையைக் காட்டுகின்றது. ஒரு தனிமனிதனை ஒப்பீடு செய்வது எந்த வகையிலும் நியாயம் இல்லை. உதுகள் எல்லாம் எப்ப திருந்தப்போகுதுகளோ?

9 ரூபாய் நோட்டு.

சத்யராஜ் வாழ்ந்திருக்கின்றார் ஒவ்வொரு முக்கிய பாத்திரங்களுமே படத்திற்கு உயிரூட்டுகின்றன. பழைய தலைமுறையும் இளைய தலைமுறைக்குமான பணம்/பாசம் நன்றாக வெளிச்சம் போட்டு காட்டியிருக்கின்றார் இயக்குனர்.

மிக அழகான பசுமையான வளமான கிராமம். காட்சிகளும் சரி கதையும் சரி அற்புதம்.

Edited by Thamilthangai

  • கருத்துக்கள உறவுகள்

மார்கழில குளிச்சுபாரு குளுரு பழகி போகும்!

மாதவனா வாழ்ந்துபாரு வறுமை பழகி போகும்!

வறுமை பழகிபோனா வாழ்க்கை பழகி போகும்!

சந்தோஷம் வெறுத்துபோனா சாவு பழகி போகும்!

என்ற கவிதை நடப்புக்கு ஏற்ப கவிஞரால் எழுதப்பட்டதே தவிர புத்தகபிரியனை கவிதை எழுத யாரும் அழைக்கவில்லையோ என அங்கலாக்கிறார் போல உள்ளது.

புத்தகப்பிரியனின் விமர்சனத்தைப் படித்தபோது திருவிளையாடல் படத்தில் தருமியாக வந்த நாகேஷ் சொன்ன வசனம் தான் ஞாபகம் வந்தது.

'பாட்டெழுதிப் புகழ்பெறும் புலவர்களுமுண்டு. குற்றம் கண்டுபிடித்துப் புகழ் பெறுபவர்களுமுண்டு".

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விமர்சனங்களுக்கப்பால் சில கருத்துகள்

நாம் பிறந்து தவழ்ந்த மண்ணைவிட்டுடு வெகுதொலைவில் வாழும் அகதிகளாகிய என்னைப் போன்றவர்களின் ஆழ்மனத்தின் சுவர்களை இப்படம் அதிரச் செய்துளள்ளது.காலுறை அணிந்து வாழும் பழக்கத்திலுள்ள மேலைநாடுகளிலிருந்து நாம் மீளவும் நமது மண்ணில் செல்வோமாகில் அந்த மண்மணில் புரண்டெழுந்தே வருவோம்.

கதையின் யதார்த்தம் புலம் பெயர்ந்து வாழும் நம்மை ஊடறுத்து உலுக்கியிருக்கிறது.

ஆம் இந்தியச் சினிமா வரலாற்றில் வங்காளிய மற்றும் மலையாளிய சினிமா உலகத்தின் பார்வையைப் பிடித்திருந்தது. தற்போது தமிழ்ச் சினிமாவும் தனது தனித்துவத்தால் தடம்பதித்துவருகிறது.. இந்த வகையில் "ஒன்பது ரூபாய் நோட்டு" தமிழருக்கான பதிவில் உலகத்தின் பார்வையைப் பெற்றிருக்கிறது.

இதனால் பெருமிதமடைவதில் நானும் ஒருவன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.