Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊருக்குப் போனேன்- பாகம் 4 (இறுதிப் பாகம்) -வாசுதேவன்

Featured Replies

ஊருக்குப் போனேன்- பாகம் 4 (இறுதிப் பாகம்) -வாசுதேவன்

இதுதானா என் வீடு ? இத்தனைவருட காலமாகக் காணக் கனவு கண்டு கொண்டிருந்த என் வீடு இதுதானா ? முற்றத்தில் தென்னைமரமில்லாமல், வேப்பமரமில்லாமல்,வேலியில் பூவரசமரமில்லாமல், கடதாசிப்பூக்கள் இல்லாமல், முருங்கைமரங்கள் இல்லாமல், புல்பூண்டு சூழக் கிடந்த இது என் வீடா ?

என் வீட்டிற்கு வடக்குப் பக்கத்தில் ஒரு வீடு இருந்தது. அதையடுத்து இன்னும் பல வீடுகள் இருந்தன. அதைத் தொடர்ந்து பனங்கூடல் இருந்ததே ? என் வீட்டிற்குத் தெற்குப் பக்கத்தில் ஒரு வீடு இருந்தது . அதைத்தொடர்ந்து இன்னும் பல வீடுகள் இருந்தன. என் வீட்டு வேப்பமர உச்சியிலிருந்து பார்த்தாலும் கண்ணுக்கெட்டிய தூரம் வரையும் வீடுகள் இருந்தனவே ? என் வீடு என்பது நாற்திசையும் பரந்திருந்த வீடுகளுக்கு மத்தியிலிருந்ததால் தானே என் வீடாக இருந்தது. எல்லைச் சண்டை பிடித்தவர்களும், வரம்புச் சண்டை பிடித்தவர்களும் இருந்ததால் தானே என் வீட்டுக்கு எல்லை இருந்தது ? எங்கே என் வீடு ? எங்கே என் ஏரி ?

அது உருமாறியிருந்தது. உடல்மாறியிருந்து. இவ்விடத்தில் என் வீடு இருந்தது, என் வேலியிருந்தது, என் முற்றமிருந்தது, என் கிணறிருந்தது. இல்லாமற்போன இவையெல்லாம் நானல்ல.

என் வீடென நான் பார்க்கச் சென்ற அந்த வீடு என்னைப் பார்த்துப் பரிதாபமாய்க் கண்ணீர் விட்டது. எதற்காக என்னை அடையாளம் காண மறுக்கிறாய் என் மகனே என்று ஆவேசமாய்அலறியழுதது. நன்றாக உற்றுப்பார், ஆடைமாறிப்போய் நிற்கும் கோலம் மாறிப்போய் நிற்கும், சுற்றம் கலைந்து போனபின் கைவிடப்பட்ட கைம்பெண்ணாக நிற்கும் என்னை உன்னால் அடையாளம் காண முடியவில்லையா ?

என்னைத் தொட்டுப்பார், என் முற்றத்தை முகர்ந்து பார், வடகிழக்கு மூலையில் தூர்ந்து கொண்டிருக்கும் என் கிணற்றில் நீர் மொண்டு வாயிலிட்டுச் சுவைத்துப் பார், நான்தான் உன் வீடு, நீ தவழ்ந்த முற்றம்தான் இந்த முற்றம், உன் தாகம் தீர்த்த கிணறுதான் இக்கிணறு. அடையாளம் காண், அடையாளம் காண், அடையாளம் காண். உருவழிந்து வந்திருக்கும் என் குழந்தையே, என் மடியில் தவழ்ந்து, இந்த உவர் மண்ணில் உருப்பெற்ற உன்னால் என்னை அடையாளம் காணமுடியவி;ல்லையா ?

கண்முன்தோன்றிய காட்சி மறைய, கண்முன் தோன்றிய கட்டடம் மறைய, என் வீடு தெரிந்தது. கட்டடத்திற்குள் ஒரு குடிசையின் உயிர் உறங்கிக் கொண்டிருந்தது. என் செவிகளில் வீழ்ந்து கொண்டிருந்தது அக்குடிசையின் குரல். இல்லாமற் போன என் வீட்டின் குரல். என்னுக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் என் வீட்டின் குரல். தவித்துத் தேடியலைந்து சந்திக்க வந்த என் வீடு எங்குமில்லை. அது நான் வாழும் வரையும் என்னுள் வாழப்போகும் என் வீடு.

"காண்பதெல்லாம் மறையுமென்றால், மறைவதெல்லாம் காண்பமென்றோ" என என்னுள் தெளிவு பெற எத்தனித்தேன். சாத்தியமற்ற எத்தனிப்புகள் எனினும் சமாதானம் கொள்வதற்காகவேனும் எனக்கே நான் பொய்ச் சாட்சி கூறினேன்.

இருந்துமென்ன, வீட்டுக்குப்போதலைச் சாத்தியப்படுத்தலில் இருந்த நம்பிக்கை கோடைகால வயலைப்போல் ஆவியாகி வரண்டது.

ஓ காலமே. ஓ இடமே. நேற்று ஓடிய ஆற்று வெள்ளம்தான் இன்னும் இப்போதும் இங்கே ஓடுகிறதென ஒரு மாயையைக் கொணர்வாயா ? தென்னோலைகளில் நேற்று வந்தமர்ந்த கிளிகள்தான் இன்னும் இங்கே அமர்ந்திருக்கின்றன எனும் ஒரு பிரமையைத் தருவாயா ? எங்கே அவர்களெல்லாம் ? எங்கே அவைகளெல்லாம் ? இங்கே, இக்கணத்தில், இவையவையெல்லாம்... ஓ காலமே! ஓ இடமே! அருளைக் காணவில்லை. தேவனைக் காணவில்லை. கணேசனைக் காணவில்லை. குணத்தைக் காணவி;லை, அப்பனைக் காணவில்லை, வரைவதனால் மட்டும் அன்பு வரையாக உயர்வதுண்டோ என மடல் வரைந்தவனைக் காணவில்லை, யாரும் இங்கில்லை. இருப்பவர்கள் எல்லோரும் வேறெவெரோவாக... தேவனைக் கண்டேன்: ஆனால் அவன் தேவனில்லை. அருளைக் கண்டேன்: ஆனால் அவன் அருளில்லை. ஓடிப்போனவர்கள் எல்லோரும் ஓடிப்போனவர்களாகவே...

தனிமையின் அதீதம் ஒருகணம் எனைச் சிதறடித்தது.

அனைத்தையும் விழுங்கி ஏப்பம்விட்டு இக்கணத்தில் என்னை அநாதையாக்கிய கொடூரமே. உனக்கு நான் எவ்வாறு நாமமிடுவேன் ? உன்னைக் காலமென்பேனா ? கடவுளென்பேனா ? எதனாலும் தேற்றமுடியாத, எதனாலும் ஈடுசெய்யமுடியாத என்னிழப்பை உன்னிடமிருந்து மீட்டெடுப்பதற்கு நான் என்ன செய்யவேண்டும் என யார் உரைப்பர் ? யாரைத் துணைக்கழைப்பது ? இன்னமும் எல்லாமும் இங்கிருக்கிறது என நம்பி வந்து , எல்லாமே இல்லாமற் போயின என உணர்ந்து சலனமுறவா இங்கு வந்தேன் ? என் இருத்தலின் பின்ணணி ஆதாரமியிருந்த இருப்புகள் எல்லாம் இல்லாமற் போயின என்றானபின், என்னிருப்பை இனியெங்கே நானினித் தக்கவைப்பது ? பட்டம் அறுந்த கயிறுபோல் பரிதவித்தேன்.

கைவிடப்பட்டுக் கிடந்த வயிரவர் கோவில் மணிக் கயிற்றை மானசீகமாக உந்தி இழுத்து ஒரு கணம் பித்தளையை அதிர வைத்தேன். வேருடன் பிடுங்கி எறியப்பட்டு வெறுமையை விரவி நின்ற வேப்பமரத்தின் நினைவுகள் மட்டும் தான் அவர்களும், அவைகளும் இங்கும், இப்போதும் நிற்பதற்கான ஆத்மீகச் சாட்சியங்கள். பற்றைக@டாக நடந்தபோது பாதங்களில் குத்திய நெருஞ்சி முட்கள்தான் நெஞ்சில் குத்திய இறந்தகாலத்தின் சுவடுகள்.

ஓ காலமே! ஓ இடமே !

பற்றைகளாய்ப் படர்ந்த பசுமைகளுக்குள் சிலவேளைகளில் கைவிடப்பட்ட , சிதைந்த நிலையில் வீடுகள் மண்டிக்கிடந்தன. கலகலவென வாழ்க்கைத் துண்டங்களைச் சுமந்த வீடுகள், கதைகதையாய்க் கேட்டுவைத்த சுவர்கள், தம் நிசப்தத்தில் ஓவென அலறின. வரண்ட குளத்தை விட்டுக் கொக்குகள் ஓடிப்போனபின் பொருக்கு வெடித்துக் கிடக்கும் நிலமாய் ஒரு கிராமமே உருவகம் கொண்டிருந்தது. யாழ் நகரில், கொட்டாஞ்சேனையில், எங்கோவொரு ஐரோப்பிய நகரில் எனவெல்லாம் சிதறிப்போய்விட்ட மண்ணின் குழந்தைகள் கைவிட்டுப் போன கானல் நீராகப் பல வீடுகள் கண்ணீர் விட்டன. சில இடங்களில் வீடுகள் இருந்ததற்கான சாட்சியங்களாக எதுமேயிருக்கவில்லை. சில இடங்களில் சரிந்து வீழ்ந்த சுவரிருந்தது. இன்னும் சில இடங்களில் சில கற்கள் கிடந்தன. முகவாயில் நிலைமட்டும் தன் தனிமைக்குள் வீடின்றி நின்ற காட்சிகள் வேதனையின் மூலங்களாயிருந்தன. வேறு சில இடங்களில் இறுகிய அமைதியைத் தவிர வேறெதுவும் இருக்கவி;ல்லை.

வயல் வெளிகளில், மனிதர்கள் நடமாடத் தடைவிதிக்கப்பட்டிருந்த கட்டாந்தரைகளிலெல்லாம் கேட்பாரற்ற, பார்ப்பாரற்ற மாடுகள் சுயாதீன வாழ்க்கை வாழ்ந்தன.

அறியா முகங்கள் பல வீதிகளில் அசைந்து திரிந்தன. மறந்துபோன மரங்கள், செடிகொடிகளின் பெயரை மற்றவர்களிடம் விசாரித்து ஞாபகப்படுத்திக் கொண்டேன். கடதாசிப்பூவும், செவ்வரத்தைப் பூவும் யாருக்காகவும் காத்திராமல் தம் கடமையை நிறைவேற்றின. வரண்ட நிலத்திலும் வனப்பாய் பூத்திருக்கும் எருக்கம் பூவுடன் நெருக்கமாய்ச் சில கணங்களைக் கழித்தேன். அறுகம் புற்களை ஆசுவாசமாய் சுகம் விசாரித்தேன். எப்போதுமே பெயரறிந்திராத பூண்டுகளிடம் பெயர் வினாவிப் பார்த்தேன். கொழுத்தும் மதிய வேளைக் கொடுவெய்யிலில் வெளிச்சென்று சனசந்தடியற்ற மரநிழல்களில் அமர்ந்து காற்று வாங்கியவாறே கையில் கொண்டு சென்ற பல்ஸாக்கின் "பள்ளத்தாக்கு லில்லி மலர்கள்" ஐ வாசிக்க முனைந்தேன். விமானத்தில் பறந்து வந்தபோது சுவைமிகுந்ததாயிருந்த கியாதி பெற்ற பிரஞ்சு இலக்கியம் மரநிழல்களின் கீழ் மணமிழந்து, சுவையிழந்தது.

பிரமாண்டமான சமுத்திரங்களாக முன்னர் தோன்றிய குளங்களெல்லாம் குட்டைகளாய்த் தோன்றின. புளியங்கூடல், சுருவில், நாரந்தனை, கரம்பொன் எனவெல்லாம் வலம் வந்தபோது நாடு சிறுத்துவிட்டதாய்ப்பட்டது.

------------------------

இருள்பட்ட நேரங்களில், சுத்தமாகக் கூட்டிவாரப்பட்ட முற்றங்களில், இதமான மாலைப்பொழுகளின் போது நான் அயலவர்களுக்குக் கதை சொல்லியானேன். ஐரோப்பிய நகர வாழ்க்கையைப் பற்றியும் நம்மவர்களின் இருப்பு நிலைகளைப் பற்றியும் என் கண்ணோட்டங்களை விபரித்தேன். புகையிலைப் போரணை பிடித்தவர்களிடம் சென்று உரையாடினேன். மிளகாய்த் தோட்டத்தில் தண்ணீர் மாறினேன். வெறுங்காலுடன் கொதிவெய்யிலில் பாத்திக்குப் பாத்தி தண்ணீர் மாறும்போது உள்ள சுகம் சொல்லக்கூடியதா ? மைத்துனர் ஒருவருடன் பள்ளிவாசற் கடற்கரைக்குக் குளிக்கப் போனேன். வெளிநாட்டுக்காரரை ஏற்றி வந்த, குளிரூட்டிய "டொல்பின்" வான்கள் வரிசையாய் நின்றன. வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் இப்படித்தான் வருவார்கள் எனவும் அறிந்து கொண்டேன்.

"இந்தப் பெடியனைப் பார்த்தால் வெளிநாட்டிலிருந்து வந்ததென்று யாரும் சொல்ல மாட்டினம். கையில ஒரு மோதிரமில்ல, கழுத்தில ஒரு சங்கிலியில்ல. ஒரு ஓட்டைச் சயிக்கிள்ள சுத்தித் திரியிது" என்னும் என் மீதான விமர்சனம் காதில் விழுந்தபோது என்னையுமறியாமல் சிரித்தேன்.

நீங்கள் பெருமைக்குரியவர்கள். இம்மண் உங்களின் சந்ததிக்குரியது. போனவர்கள் இங்கு ஊர்சுற்ற வருவார்கள். அவர்களின் சந்ததிகள், அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ ஆங்காங்கே அடையாளம் அருகித் தொலைந்துவிடும். நீங்களும் தம்மவர்கள் எனக் கோசம் போட்டு வரும் மனிதர்களின் "பொழுதுபோக்கு" உதவிக்கரங்களும், "குற்ற உணர்வுப்" பச்சாதாபங்களும் உங்களுக்குத் தற்காலிக உதவிகளை வழங்கும். ஆனால், அவர்கள்முன்னே என்முன்னே நீங்கள் பெருமைக்குரியவர்கள். நிமிர்ந்து நில்லுங்கள். மெலிந்து, கொடுவெயிலால் கறுத்த உங்கள் உடல்களும், அழுக்கடைந்த உங்கள் ஆடைகளும் கூடப் பெருமையின் சின்னங்களே என அவர்களிடம் உண்மையாகக் கூறிவைத்தேன். திமிருடன் இங்கு வந்து யாரும் திரும்பிப் போகும்போது தெரியாத விடயத்தை சில வருடங்கள் கழித்துத்தான் அவர்கள் புரிந்து கொள்வார்கள் எனவும் கூறி வைத்தேன். போகும்போது வீட்டு நாயையும் தவறவிடாமல் கூட்டிச்சென்றுவிட்டு, இதுதானே என்நாடு என உரிமை கோரிவரும் "இங்கிருந்தவர்கள்" உங்களுக்குக் கடமைப்பட்டவர்கள். பெருமைக்குரியவர்களே, நிமிர்ந்து நில்லுங்கள். புகைப்படக் கருவிகளையும், வீடியோக்களையும் கொண்டு வந்து வேடிக்கையாய் படம் பிடித்துச் செல்லும் இவர்களை வினோதப் பொருட்களாய்ப் பாருங்கள்.

நானும் அவர்களும் அகதிகள். இருக்கும் உரிமையை இரந்து பெற்றவர்கள். நாங்கள் வெள்ளைக்காரர்களின் தாழ்வாரங்களில் வேடிக்கை வாழ்க்கை வாழ்பவர்கள்.

நாம் அணிந்து வரும் நாகரீக ஆடைகளும், எம் உடல் சுமந்துவரும் தங்க நகைகளும் உங்களுக்கு எமது சிறுமையைத் தவிர வேறெதையும் பிரதிபலிப்பதில்லை என்பதை உணர்ந்து விடுங்கள். பின் உங்கள் தாழ்வு மனோநிலை நீங்கிவிடும். உங்களுக்கு உங்களின் உரிமைக்குரிய பெருமை என்னவென்று புரிந்துவிடும் என அவர்கள் மத்தியல் உரையுறுத்தேன். ஆனந்தம் அவர்களிடத்திலே இழையோடியது.

---------------------------------------------------------

பதின்மூன்று நாட்கள், பார்த்த வண்ணமிருக்கப் பறந்தோடின. கையிருலிந்த என் அகதி விசாவும், கடமையும் திகதிகளை நினைவில் கொண்டு வந்து நிறுத்தின.

பசியிருந்தவன் அறுசுவையுணவின் முன்னமர்ந்து இரு கவளம் எடுத்துண்கையில் எழுந்துபோக வேண்டியதாகி விட்டதைப் போல், நான் மீண்டும் புறப்பட்டேன். என் பயணம் மீண்டும் தொடங்கிது. நான் படம் பார்க்கப் புறப்பட்டேன். யாழ்ப்பாணத்திலிருந்து முகமாலையை நோக்கிச் செல்லும் நெரிசலான பஸ்வண்டியொன்றிற்குள் நானும் என் பொதியுமாக...

________________________

Edited by vasudevan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவசரப்பட்டு முடிச்சமாதிரிக் கிடக்கிது. கொஞ்சம் விரிவாய் போயிருக்கலாம்.

  • தொடங்கியவர்

உங்கள் கருத்திற்கு நன்றி. ஆனால் சிலர் ஏற்கெனவே குறைப்பட்டுக்கொள்கிறார்கள் கட்டுரை நீண்டு விட்டதாகவும், வாசிப்பதற்குப் பொறுமையில்லையெனவும் கூறி....

என்னுடன் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் வரிவான கட்டுரையை அனுப்பி வைக்கிறேன்.

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாசுதேவன்

உங்கள் வீட்டு முற்றத்தில் நீங்கள் நின்றுகொண்டு உங்கள் உள்உணர்வைப் பிரதிபலிக்கும் போது

என் வீட்டு முற்றத்தில் நான் நிற்பதுபோல உணர்வு. வாசிக்கும்போது என் விழிகள் கனத்து உதிருத்

துடிக்கும் நீர்த்துளிகள் செய்தி சொன்ன வரிகளுக்கு கிடைத்த பாராட்டு. நன்றிகள்

  • தொடங்கியவர்

உங்களது கருத்துக்கு நன்றிகள் கணமணி,

இப்பயணக்கட்டுரையை எழுதியபோது அழுதுகொண்டே எழுதிளேன். இதை மீண்டும் வாசிக்கும் ஒவ்வொரு முறையும் எனக்கு அழவேண்டும் போலுள்ளது. என் வீடு சம்பந்தமாக என் கண்ணிலிருந்தும் மனத்திலிருந்தும் வழியும் கண்ணீர்த்துளிகளால் என் "வேருக்கு" நீர் பாய்ச்சுகிறேன். வேறென்ன செய்ய முடியும் ?

"ஊருக்குப் போனேன்" ஒரு அற்புதமான பதிவு. படிக்கின்ற போது மனது மிகவும் பாரமாகியது.

ஊருக்குப் போகின்ற கனவு எல்லோருக்கும் உண்டு. நீங்கள் ஊருக்குப் போய் வீட்டைத் தேடினீர்கள். என்னைப் போன்று பலர் நாட்டுக்குப் போய் ஊரை தேட வேண்டும்.

எங்களுடைய வீடுகள், கிணறுகள், பாதைகள், ஒழுங்கைகள், சந்திகள், மரங்கள் என்று அவைகள் இருந்த இடங்களை தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். ஆம், வீடுகளையோ, பாதைகளையோ கண்டுபிடிக்க முடியாது. இருந்த இடங்களைத்தான் கண்டுபிடிக்க வேண்டும். மீண்டும் எங்களுடைய ஊரை புதிதாக எழுப்ப வேண்டும். அப்படி எழுப்பினாலும் எங்களுடைய ஊர் எங்களுக்கு கிடைக்காது.

குடிசை இருந்த இடத்தில் மாடி வீடு இருக்கும். வயல்வெளிகள் அழிந்து போய் வீடுகள் தோன்றும். அரச மரம், ஆல மரம் எதையும் இனி நாம் மீண்டும் நடமுடியாது.

உண்மையில் எங்களுடைய பல கிராமங்கள் இறந்து விட்டன. அவைகள் இனி மீண்டும் பிறக்கப் போவதில்லை. நினைக்கவே நெஞ்சு பதறுகிறது!

Edited by சபேசன்

உங்களது தத்ரூபமான இப்பதிவிற்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். உங்களது எழுத்தாற்றல் அபாரம். எனக்குத் தெரிந்த எத்தனையோ (யாழ் களம் வராதவர்கள்) பேரிற்கு இதனை அனுப்பி வைத்தேன்.

எனினும் ஒரு சிறிய ஆதங்கம், முதல் மூன்று பாகங்கள் தந்த உணர்வைக் கடைசிப் பாகம் தரவில்லை. நான்காவது பாகம் புகைப்போட்டுப் பழுக்க வைத்த வாழைப்பழம் போல் எனக்குச் சற்று ஏமாற்றம் தந்தது.

முடியுமானால், இந்த நான்காவது பாகத்தை முதல் மூன்றோடு ஒத்துளைக்கும்

வண்ணம் மீள எழுதிப் பிரசுரியுங்கள் என்போன்று பலர் ஆவலுடன் வாசித்து

இன்புறுவர்.

  • தொடங்கியவர்

சபேசன், இன்னுமொருவன் இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

"வீட்டைத் தேடுதல்" அல்லது "வீட்டைக் கண்டடைதல்" எனும் விடயங்கள் சம்பந்தமான பல்வேறு இலக்கியப் படைப்புகளையும் பல மட்டங்களில் ஆய்வு செய்து இவ்விடயத்திலான ஒரு முழுமைiயான ஒரு படைப்பை உருவாக்க வேண்டும் எனும் ஒரு திட்டம் ஒன்று என்னிடம் உள்ளது. அதை நிறைவேற்றுவேன் என எண்ணுகிறேன்.

அதனை உங்கள் ஒவ்வொருவருடனும் பகிர்ந்து கொள்வதில் பேர்மகிழ்வடைவேன் என்பதையும் உவகையுடன் உரைக்கின்றேன்.

மீண்டும் நன்றிகள்.

வாசுதேசன் அண்ணை,

இன்னொமொருவன் சொன்னமாதிரி.. ஆரம்பத்தில இருந்த ஈர்ப்பு கதையிண்ட இறுதிப் பாகத்தில காண இல்ல. இதற்கான காரணம் உங்களுக்குத்தான் தெரியக்கூடும். ஆரம்பம் வாசிக்க மிக நல்லா இருந்திச்சிது.

  • தொடங்கியவர்

நன்றி கலைஞன்,

உங்களின் கருத்தை உள்வாங்கியுள்ளேன். உங்களது விருப்பை வரைவில் நிறைவேற்றி வைப்பேன் எனவும் எண்ணுகிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.