Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களின் தன்மானத்திற்கு அறைகூவல்,இனியும் தயக்கம் ஏன்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் தன்மானத்திற்கு அறைகூவல்

இனியும் தயக்கம் ஏன்?

- பூங்குழலி

தமிழகத்தின் மய்யத்தில் இருக்கும் தமிழர்களின் பாரம்பரியம் மிக்க சிதம்பரம் நடராசர் கோயிலில் மாபெரும் போராட்டத்திற்கு பின் ஒரு வழியாக தேவாரம் பாடப்பட்டது.

உண்மை.. சிற்றம்பல மேடையில் தேவாரம் முழங்கியது. ஆனால் இது உண்மையிலேயே தமிழ் வழிபாட்டு ரிமைக்குக் கிடைத்த வெற்றியா?

சிதம்பரம் நடராசர் கோவில் பல நூற்றாண்டு பழமையானது. பன்னெடுங் காலமாக சைவர்களுக்கு (சிவனை வழிபடுபவர்கள்) இதுதான் முக்கிய வழிபாட்டு தலமாக இருக்கிறது.

வரலாற்று ரீதியாகவும் சிதம்பரம் கோயில் முக்கியத்துவம் வாய்ந்தே இருந்தது. சோழ மன்னர்களின் முடி சூட்டு விழா சிதம்பரம் கோயிலிலேயே நடந்ததாக வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன. பிற்காலச் சோழ மன்னர்களான முதலாம் ஆதித்தனும் அவனைப் பின் தொடர்ந்து முதலாம் பராந்தகனும் சிதம்பரம் கோயிலுக்குப் பொன் கூரை வேய்ந்தனர் என்றும் வரலாறு கூறுகிறது.

சோழ மன்னர்கள் மட்டுமல்லாது பாண்டிய மன்னர்களும், நாயக்க மன்னர்களுமே சிதம்பரம் கோவிலுக்கு முக்கயத்துவம் அளித்து பல மானியங்களையும் புனரமைப்புப் பணிகளையும் மேற்கொண்டுள்ளனர்.

சிவபக்தர்களில் முதன்மை யானவர்களாக கருதப்படும் நாயன்மார்களில் முக்கியமானவர்களான திருநாவுக்கரசர், திருஞான சம்பந்தர், சுந்தரர், மாணிக்க வாசகர் ஆகிய நால்வருமே சிதம்பரத்தைப் பற்றி பாடியுள்ளனர்.

இன்று வரை எங்கு சிவ பூசை நடந்தாலும் பூசை தொடங்குவதற்கும் முன்னும் முடித்தப் பிறகும் திருச்சிற்றம்பலம் என்று சொல்லியே நடத்துவது வழக்கமாக உள்ளது. அந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்த தலம் அது.

அதிலும் குறிப்பாக ஈழத் தமிழர்கள் தங்கள் வாழ்வில் ஒரு முறையேனும் சிதம்பரம் கோயிலைத் தரிசிப்பதை முக்கியமாக கருதுகின்றனர்.

இந்த அளவிற்கு சிதம்பரம் கோயிலுக்கு முக்கியத்துவம் அளித்த இன்று வரை தொடர்ந்து அளிக்கக் கூடிய சிவ பக்தர்கள் யாரும் வட நாட்டினரோ அல்லது வேற்று மொழியினரோ அல்ல. அனைவருமே சுத்தமான தமிழர்கள். வட நாட்டில் சிவனை வழிபடுபவர்கள் முக்கியமாகக் கருதுவது வடக்கில் காசியையும் தெற்கில் இராமேசுவரத்தையும் மட்டுமே.

ஆனால், இவ்வாறு தமிழர்கள் போற்றி துதிக்கும் நடராசனின் காதில் தமிழ் விழுந்தால் அது அந்த நடராசனைத் தீட்டுப் படுத்திவிடும் என்று ஒரு கும்பல் கூச்சலிடுகிறது. அதை பல நூற்றாண்டுகளாக சாதித்தும் வருகிறது.

ஏறத்தாழ ஏழாம் நூற்றாண்டு காலத்தில் சிதம்பரத்தில் குடியமர்ந்த தீட்சிதர்கள், இன்று சிதம்பரம் கோவிலே சட்டப்படி தங்களுக்கு மட்டுமே சொந்தம் என்று உரிமை கொண்டாடுகின்றனர். அதில் தாங்கள் வைத்ததே சட்டம் எனவும், வேறு எந்த சட்டமும் அங்கு செல்லுபடியாகாது எனவும் துணிச்சலாகக் கூறுகின்றனர்.

சிதம்பரம் கோயில் ஒரு பொதுக் கோயில் என்பதும் அதன் மீது தீட்சிதர்களுக்கு எந்த சட்டப்படியான அதிகாரமும் கிடையாது என்றும், இக்கோயில் தீட்சிதர்களின் சொந்த சொத்து என்பதற்குத் துளியளவு கூட ஆதாரம் கிடையாது என்றும் 1888-இலும், 1951-இலும் நீதிமன்றத் தீர்ப்புகள் வெளிவந்துள்ளன. அதிலும் 1888-இல் சர். டி. முத்துசாமி அய்யர் என்ற பார்ப்பனரும், 1951-இல் சத்தியநாராயண ராவ், ராஜ கோபாலன் என்ற இரண்டு பார்ப்பன நீதிபதிகளை கொண்ட டிவிசன் பெஞ்சுமே இத்தீர்ப்புகளை வழங்கியுள்ளன.

1922-இல் இந்து அறநிலையப் பாதுகாப்புத்துறை நீதிக்கட்சி அரசால் ஏற்படுத்தப்பட்டு அது 1925-இல் செயலாக்கத்திற்கு வந்த உடனேயே தீட்சிதர்கள் இந்த சட்டம் சிதம்பரம் கோயிலுக்குச் செல்லாது என வாதிடத் தொடங்கிவிட்டனர். ஆனால் அவர்கள் வாதம் தவறு என்று நீதிமன்றம் தெளிவுற உரைத்த பின்னும், 60 ஆண்டுகளுக்கு பின்னரும் இன்னமும் சிதம்பரம் கோயில் இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறையின் கீழ் கொண்டுவரப்படவில்லை.

முழுமையாக தீட்சிதர்களின் நிருவாகத்தின் கீழ் இருக்கும் சிதம்பரம் கோயிலில் அம்பாள் கழுத்திலிருந்த தாலி உட்பட கோயிலுக்குச் சொந்தமான நகைகள் மட்டுமல்ல சோழ மன்னர்கள் வேய்ந்த பொன் கூரையின் பகுதிகளே காணாமல் போய்விட்டதாக இதே தீட்சிதர்கள் பல முறை அறிவித்திருக்கின்றனர்.

நிலைமை இப்படியே தொடர்ந்தால், ஒரு நாள் கோயில் நகைகள் அனைத்தும் காணாமல் போவதும், பொன் கூரை தகரக் கூரையாக மாறுவதற்கும் பெரும் வாய்ப்பிருக்கிறது.

இது மட்டுமல்ல. பல்வேறு மன்னர்களால் பல்வேறு காலக்கட்டங்களில் கோயிலுக்கு மானியமாக அளிக்கப்பட்ட நிலங்களைக்.. கொஞ்சம் நஞ்சமல்ல.. ஏறத்தாழ ஆயிரம் ஏக்கர் நிலங்களை முழுவதுமாக தீட்சிதர்களே அனுபவித்து வருகின்றனர்.

தமிழகத்தின் மய்யத்தில் இருந்து கொண்டு, சுற்றிலும் தமிழர்களுக்கு நடுவே வாழ்ந்து கொண்டு, தமிழர்கள் இடும் தட்சிணைக் காசில் வயிறு வளர்த்துக் கொண்டு, தமிழர்களின் கோயிலையும் நிலங்களையும் ஆக்கிரமிக்கவும், தமிழைத் தீட்டு மொழி என்று சொல்லவும், தமிழர்களைக் கோயிலுக்குள் விட மாட்டோம் என்று சொல்லவுமான துணிவு எங்கிருந்த வந்தது இவர்களுக்கு?

தீட்சிதர்களின் கணக்குப்படியே வைத்துக் கொண்டாலும், சிதம்பரத்தில் இன்று அவர்கள் முன்னூறு குடும்பங்களாக வாழ்கின்றனர். இந்த முன்னூறு குடும்பங்களுக்காக, அவர்களின் மிரட்டலுக்கும் பார்ப்பனத் திமிருக்கும் அடி பணிந்து, ஒட்டு மொத்தத் தமிழினமும் தமிழ் மன்னர்களால் தமிழ் மக்களை கொண்டு கட்டப்பட்ட, தங்களுக்கு உரிமையான, தாங்கள் போற்றி வழிபடக் கூடிய கோயிலை, அக்கோயிலில் தங்கள் தாய் மொழியில் வழிபடும் உரிமையை விட்டுக் கொடுக்க வேண்டுமா?

இதை விட அவமானம் தமிழர்களுக்கு நேர முடியாது.

பல்லவ மன்னர்கள் காலத்தில் கோயில்களில் வட மொழி நுழைந்த காலம் தொட்டு இன்று வரை ஏறத்தாழ 13 நூற்றாண்டுகளாக தமிழர்கள் நடுவே, தமிழ் நீச மொழி என்றும் வட மொழியே உயர்ந்த மொழி என்றும் கைப்பிடி அளவு கூட இல்லாத பார்ப்பனர்கள் தொடர்ந்து துணிவாகச் சொல்லி வருகிறார்கள், நாம் இன்று வரை அரசாணை மேல் அரசாணையாகப் போட்டு கையை பிசைந்து கொண்டு நிற்கிறோம்

கோயிலகளில் வடமொழியில் மட்டுமல்லாது தமிழிலும் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று அரசாணைப் போட்டால், "தமிழிலிலும் அர்ச்சனை செய்யப்படும்" என்று எழுதி வைத்து அவமானப் படுத்துகிறான். அதற்கு ஒரு போராட்டம் நடத்த வேண்டியிருந்தது.

"தமிழில் மட்டுமே அர்ச்சனை செய்ய வேண்டும்" என்று அரசாணை போட நமக்கு இன்னமும் துணிச்சல் வரவில்லை. தமிழ்நாட்டுக் கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்பது அப்படி என்ன பஞ்சமா பாதகமா? உண்மையில் அதுதானே இயற்கையாக இருக்க இயலும்? வடமொழி வழிபாடு என்பது இடையில் வந்ததுதானே?

ஆங்கிலேயர் பெயர் சூட்டிய மதராஸ் சென்னையாக மாற்றம் கொள்வது போலத்தானே இடையில் வந்த வடமொழி வழிபாட்டை நீக்கிவிட்டு தமிழ் வழிபாட்டை உறுதியாக்குவது?

இதை நடைமுறைப்படுத்த நமக்கு எதனால் அச்சம்? யாரைக் கண்டு பயம்? நிச்சயம் வாக்குக்காக இருக்க இயலாது. ஏனெனில் பார்ப்பனர்கள் மொத்தமே 3 விழுக்காட்டினர்தான். அப்படியானால், பன்னெடுங்காலமாக நமக்குள் ஊறிப் போன சூத்திர அடிமை மனோபாவம்தான் இன்றளவிலும் பார்ப்பனர்களை எதிர்க்கத் தடையாக இருக்கிறதா?

சிற்றம்பல மேடையில் தேவாரம் பாட அனுமதி அளித்து அரசே ஒரு ஆணையிடுகிறது. அந்த ஆணையை செயல்படுத்த சென்றவர்களையும், அரசாணையை மதிக்காமல் அதனை செயல்படுத்த விடாமல் தடுத்தவர்களையும் ஒன்றாக பாவித்து இரு தரப்பினரையும் அதே அரசு கைது செய்கிறது.

இந்த செய்கையால் துணிவுப் பெறப் போவது யார்? யாரை திருப்திப்படுத்த இந்த நடவடிக்கை?

தமிழ் வழிபாடு, தமிழ் வழிக் கல்வி, நீதிமன்றத்தில் தமிழ், தமிழ்த் தேசிய சிக்கல்களான காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு, ஈழம் என எல்லாவற்றிலும் தமிழர்களின் நலனுக்கு, தமிழ் மொழிக்கு எதிர் நிலை எடுத்து தமிழர்களிடமே அது குறித்து வெளிப்படையாகப் பேசி தொடர்ந்தும் தமிழ்நாட்டில் இவர்களால் வாழ முடிகிறது என்றால் எந்த அளவிற்கு நாம் தன்மானம் அற்றவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது புலப்படும்.

"உங்களை சூத்திரர்களாகவே விட்டுச் செல்கிறேனே" என்று பெரியார் தனது இறுதி காலத்தில் மனம் நொந்து கூறினார். அவர் இறந்து 30 ஆண்டுகளுக்குப் பிறகும் நாம் இன்னமும் சூத்திரர்களாக, அடிமை மனோபாவத்தோடே வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் என்பது மிகுந்த அவமானத்திற்குரியது. சூத்திர இழிவை நீக்குவதற்கான சட்டங்கள் இயற்றப்பட்ட போதிலும்,, அரசாங்கம் மட்டுமல்லாது மக்களும்.. அதனைச் செயல்படுத்துவதில் விழிப்புணர்வோடு வேகம் காட்டாவிடில், செயல்படுத்த தடையாய் இருப்பவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக அணி திரளாவிடில், எத்தனை நூற்றாண்டுகளானாலும் நாமும் நம் தலைமுறையினரும் சூத்திரர்களாக நீச மொழியைப் பேசிக் கொண்டு வாழ்ந்து மடிய வேண்டியதுதான்.

-தென் செய்தி

நியாயமான கேள்வி..!

தமிழில் பூசை பண்ணினால் தீட்சிதர்களின் பிழைப்பில் மண் விழுமே.....?

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கட்டுரை ஏற்கனவே கந்தப்பு இதைத்திருந்தார்.

உங்களை சூத்திரர்களாகவே விட்டுச் செல்கிறேனே" என்று பெரியார் தனது இறுதி காலத்தில் மனம் நொந்து கூறினார். அவர் இறந்து 30 ஆண்டுகளுக்குப் பிறகும் நாம் இன்னமும் சூத்திரர்களாக, அடிமை மனோபாவத்தோடே வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் என்பது மிகுந்த அவமானத்திற்குரியது. சூத்திர இழிவை நீக்குவதற்கான சட்டங்கள் இயற்றப்பட்ட போதிலும்,, அரசாங்கம் மட்டுமல்லாது மக்களும்.. அதனைச் செயல்படுத்துவதில் விழிப்புணர்வோடு வேகம் காட்டாவிடில், செயல்படுத்த தடையாய் இருப்பவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக அணி திரளாவிடில், எத்தனை நூற்றாண்டுகளானாலும் நாமும் நம் தலைமுறையினரும் சூத்திரர்களாக நீச மொழியைப் பேசிக் கொண்டு வாழ்ந்து மடிய வேண்டியதுதான்

********

*******

*******கருத்துடன் சம்பந்தப்படாத விடயம் நீக்கப்பட்டுள்ளது. - மோகன்

மன்னிக்கவும்!

இந்தக் கட்டுரை ஏற்கனவே இணைக்கப்பட்டிருப்பது எனக்கு தெரியாது

தமிழர்கள் எப்படி ஒன்று பட முடியும். இத்தனை சாதிகள் மதத்தின் பெயரில் திணிக்கப்பட்டிருக்கும் போது எப்படி ஒன்றிணைய முடியும். ஒன்றிணைவதற்கு தடையாக உள்ளவற்றை நாம் நீக்க வேண்டும்.

ஆனால் அதற்கு யாரும் தடையாக இல்லை. செத்துப் போன கிழவனை திட்டுவதில் காட்டும் அக்கறை, சாதிகளை இல்லாது ஒழிப்பதில் இல்லை. மதத்தின் பெயரிலும், சம்பிரதாயத்தின் பெயரிலும் உள்ள வர்ணாச்சிரமத்தை இல்லாது ஒழிக்க முயலும் எமது போராளிகளுக்கு நாம் கரம் கொடுக்க வேண்டும்.

ஆனால் இந்து மாமன்றம் மறைமுக எச்சரிக்கைதான் விடுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்து மாமன்றம் எங்கே எச்சரிக்கை விடுகின்றது. சுயநினைவில் இருந்து எழுதிக் கொள்ளுங்கள் நண்பரே.

அது என்றைக்குமே அரசியல் விடயங்களில் தலையிடுவதில்லை. இலங்கையில் மதத்தலைவர்கள் அரசியலில் தலையிட்டுத் தான் இத்தனை பிரச்சனை என்பதை அது தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கின்றது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தில்லைக் கோவிலுக்கும்

தீட்சிதர்களுக்கும் தொடர்பில்லை

- முனைவர் புலவர் செ. இராசு

சைவர்களால் கோயில் என்று சிறப்புடன் அழைக்கப்பெறும் சிதம்பரம் நடராசப் பெருமான் திருமுன் சிற்றம்பல மேடையில் தேவாரம், திருவாசகம் பாடக்கூடாது என்ற இடைக்காலத் தடையை நிரந்தரத் தடை உத்தரவாக சிதம்பரம் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் 7.8.06 அன்று பிறப்பித்துள்ளது. இத்தீர்ப்பு சைவர்களுக்கு மட்டுமின்றி தமிழ் மக்கள் அனைவருக்கும் அதிர்ச்சி தரக்கூடியதாகும்.

திருஞானசம்பந்தரும், திருநாவுக் கரசரும், சுந்தரரும் சிதம்பரம் சென்று 11 தேவாரத் திருப்பதிகங்கள் பாடியுள்ளனர். "பூவொடு நீர் சுமந்து ஏந்திப் புகுவார் அவர்பின்" புகுந்து கருவறைக்குள் சென்று திருப்பதி கங்கள் பாடிப் பரவி வழிபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் எல்லாச் சைவத் தலங்களிலும் பாடப்பட்ட மூவர் தேவாரமும் சிதம்பரம் நடராசர் கோயிலில் தான் ஒன்றாகத் தொகுத்து வைக்கப் பட்டிருந்தன. முதலாம் இராசராசன் (கி.பி. 985-1014) கரையான் அரித்தது போக எஞ்சியவற்றை நம்பியாண்டார் நம்பி மூலம் எடுத்துக் காப்பாற்றினார்.

இராசராசன் தான் எடுத்த தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் பல தலங்களில் சிறப்பாகத் தேவாரப் பதிகங்கள் பாடிய 48 பிடாரர்களை ( ஓதுவார்கள் ) பெரிய கோயிலில் பாட நியமித்தார். அவர்களில் சிலர் தில்லையைச் சேர்ந்தவர்கள். எனவே இராசராசனுக்கு முன்பே சிதம்பரத்தில் தேவாரம் பாடப்பட்டுள்ளது என்பது தெரிகிறது.

கல்வெட்டுக்களில் நடராசர் உடையார் திருச்சிற்றம்பலம் உடை யார் என்றும், சிவகாமி திருக்காமக் கோட்டத்துப் பெரிய நாச்சியார் என்றும்தான் தூய தமிழில் கூறப் பட்டுள்ளனர். நடராசர் சிவகாமி என்பது பிற்கால வழக்கு. திருச்சிற்றம்பலம் - "சிற்றம்பலம்" என்ற சொல்லே சிதம்பரம் என்று மாறியது.

முதலாம் குலோத்துங்க சோழனின் அமைச்சர் நரலோக வீரன் காலிங்கராயன். அவனுக்குக் கூத்தப் பெருமாள், மணவிற் கூத்தன் என்ற பெயர்களும் உண்டு. அவன் இரவு, பகல் எப்பொழுதும் "இடைவிடாமல் அங்கு திருஞானசம்பந்தர்" தேவாரப் பதிகங்களைப் பாடிக் கொண்டிருக்கப் பெரும் கொடை அளித்தான்.

"நட்டப் பெருமான் ஞானம் குழைந்தளித்த

சிட்டப் பெருமான் திருப்பதிகம் - முட்டாமை"

பாட ஏற்பாடு செய்ததாக அவன் பாடல் கல்வெட்டுக் கூறுகிறது. (தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுதி 4: கல்வெட்டுத் துறை ஆண்டறிக்கை 1888ஆம் வருடம் எண். 120)

ஓலைச் சவடியில் இருந்தால் தேவாரம் அழிந்துவிடும் என்று கரு திய நரலோக வீரன் காலிங்கராயன் அவை முழுவதையும் செப்பேடுகளில் பொறித்து சிதம்பரம் கோயிலில் சிற்றம்பலத்தில் வைத்தான். மேற் கூறிய கல்வெட்டில் இச்செய்தி

"முத்திறத்தார் ஈசன் முதல்திறத்தை பாடியவாறு

ஒத்தமைத்த செப்பேட்டின் உள்எழுதி - இத்தலத்தில்

எல்லைக் கிரிவாய் இசைஎழுதினான் கூத்தன்

தில்லைச் சிற்றம்பலத்தே சென்று"

என்று கூறப்படுகிறது.

திருப்பள்ளி எழுச்சி" முதல், இரவு சந்தி பூசை முடிந்து இறைவன் இறைவி பள்ளியறை செல்லும் வரை எட்டு வேளை சந்திகளிலும் தமிழ்த் திருமுறைகள் ஓதப்பட்டன. அவை இறைவன், இறைவி "முன்" பாடப் பட்டுள்ளன. "கேட்டருளினர்" என்பது வழக்கு. இதற்குப் பல சான்று கள் உள்ளன.

சிதம்பரம் நடராசர் "தென்வேந்தன் கூன் நிமிர்த்த செந்தமிழர்" என்றே கூறப்படுகிறார். தில்லைக் கோயிலில் இறைவனை "வேளூர்கிழவன் கூத்தாழ்வான்" தன் துணைவி கொத்தலர் குழலியோடு "புகழ்த் தமிழ்ப் பாமாலை" பாடி வணங்கியுள்ளான். இப்படி எத்துணையோ பேர் தமிழில் பாடிப் பரவியுள்ளனர்.

"அம்பலம்" என்றாலே பொது இடம் என்று பொருள். அங்கு எல்லா மக்களுக்கும், எல்லா மொழிக்கும் இடம் உண்டு. மாணிக்கவாசகர் திரு வாசகத்தின் பல பகுதிகளை சிதம் பரத்தில் நடராசப் பெருமான் முன்னி லையில்தான் பாடினார். அப்போது நடராசப் பெருமான் திருவாசகத்தின் ஒரு பிரதியைத் தன்கையில் எடுத்து வைத்துக் கொண்டதாக சைவ உலகில் வழங்குவர்.

உலகம் அனைத்தும் அழியும் இறுதி ஊழிக்காலத்தில் பிறப்பும் இறப் பும் இல்லாத சிவபெருமான் மட்டும் எஞ்சியிருப்பாராம். தனியாக இருக் கும் சிவபெருமான் (நடராசர்) தன் தனிமைத் துயரை நீக்கப் படிப் பதற்காகத் திருவாசப் பிரதியை எடுத்து வைத்துக் கொண்டாராம். இதை மனோன்மணீயத்தில் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை

"கடையூழி வருந்தனிமை கழிப்பதற்கோ அம்பலத்துள்

உடையார் வாசகத்தில் ஒரு பிரதி கருதினதே"

என்று கூறுகிறார். நடராசர் திருக் கரங்களில் இன்னும் திருவாசகம் இருப்பதாக ஐதீகம்.

பெரும்பாலான நடராசப் பெருமானின் செப்புப் படிமத்தின் கீழ் பேய் வடிவம் விரும்பி ஏற்ற காரைக்காலம்மையாரைத் "தாயே" என்று அழைத்து அருகில் வைத்துக் கொண்டார் என்பர்.

சோழர்களின் குலதெய்வம் தில்லை நடராசப் பெருமான். "தன் குலநாயகன் தாண்டவம் பயிலும் தில்லையம்பலம்" என்பது இலக்கிய வரிகள், சோழர்கள் காலத்தில் அரசன் ஓலை "கண்காணி செய்வார்" "cகார்யம் செய்வார்" "சமுதாயம் செய்வார்" "கோயில் நாயகம் செய்வார்" திருமாளிகைக் கூறு செய்வார்" "கோயில் கணக்கர்" ஆகியோருக்கே அனுப்பப்பட்டது. இவர்கள் எவரும் தீட்சிதர் இல்லை. அரசன் கட்டுப் பாட்டிலேயே கோயில் நிர்வாகம் இருந்தது.

கி.பி. 1311 முதல் 76 ஆண்டுகள் சிதம்பரத்தில் பூசையே இல்லை. விசயநகர இரண்டாம் அமைச்சன் முத்தய்ய தண்டநாயகன் தான் பூசைக்கு ஏற்பாடு செய்தான். பீஜப்பூர் சுல்தான் போன்றோர் தொல்லையால் சிதம்பரம் நடராசர் 1648 வரை துறையூர்ப் பாளையக்காரர் ரெட்டியார் பாது காப்பிலும், பின் 40 மாதங்கள் குடுமியான் மலையிலும், பின் 37 வருடம் 10 மாதம், 20 நாட்கள் மதுரையிலும் சிதம்பரம் நடராசர் இருந்தார். செஞ்சி மன்னன் சாம்போசி காலத்தில் தான் நடராசர் மீண்டும் வந்தார்.

17ஆம் நூற்றாண்டில் ஒருமுறை பூசை முட்டுப்பட்ட போது லிங்கம நாயக்கர் என்ற வீரசைவர் முயற்சியால் பூசைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

சிதம்பரம் கோயில் பின் தொடர்ந்து சைவ அடியார்களா லேயே நிர்வகிக்கப்பட்டு வந்தது. 1610-ல் கும்பகோணம் சைவ வேளாளர் சிவப்பிரகாசரும் 1684-ல் தில்லைச் சிற்றம்பலத் தவமுனியும், 1702-ல் பாத பூசை அம்பலத்தாடு வாரும், 1711-ல் தில்லை காசித் தம்பிரானும், 1827-ல் முத்தைய தம்பிரானும் சிதம்பரம் கோயில் நிர்வாகிகளாக இருந்துள்ளனர். இவர்கள் காலத்தில் உறுதியாக "தமிழிலும்" பாடப்பட்டிருக்கும். திருவாரூர்க் கோயிலிலும், திருப்பனந்தாள் மடத்திலும் சிதம்பரம் செப்பேடுகள் பத்து உள்ளன. அவற்றில் மேற்கண்ட குறிப்பு உள்ளது.

தில்லைக் கோயில் வளாகத்தில் நாற்பத் தெண்ணாயிரவன் மடம், அம்பலப் பெருந்தெரு திருநாவுக்கரசு தேவன் திருமடம், அறுபத்து மூவர் மடம், கந்த தேசிகர் மடம். புதுமடம் போன்ற பல மடங்கள் இருந்தன. இவை அனைத்தும் தமிழ்ச் சைவ மடங்கள். தீட்சிதர் தொடர்பு இல்லை.

அண்மைக் காலம் வரை பிச்சா வரம் ஜமீன்தார் நிர்வாகத்தில் தான் சிதம்பரம் கோயில் இருந்தது. இரவு பூசைக்குப் பின் கோயில் சாவி அவர்கள் மாளிகை சென்று காலையில் கோயிலுக்கு வரும். தீட்சிதர்கட்குள் ஏற்படும் வழக்கை அவர்களே தீர்த்துள்ளனர். 5.11.1911-ல் கூட 12 தீட்சிதர்கள் பிச்சாவரம் ஜமீன்தார் சூரப்ப சோழனாருக்கு எழுதிய கடிதத்தில்கூட இது உறுதிப்படுகிறது.

ஆவணங்களின் அடிப்படையில் பார்த்தால் தீட்சிதர்கட்குத் தில்லைக் கோயில் ஆட்சி, நிர்வாகம் இவற்றில் பெரும்பங்கு இருந்தது என்பது ஐயத்திற்கு இடமாகவே உள்ளது.

மேற்கண்ட வரலாற்றுச் செய்தி களின்படி சிதம்பரம் கோயிலில் நட ராசர் முன் தமிழ்ப் பதிகங்கள் பாடப்பட்டது என்பது தெளிவாகிறது. நடராசர் திருமுன் தமிழ்த்திருமுறை ஓதக் கூடாது என்பது எந்த வகையிலும் நியாயம் இல்லை.

-தென் செய்தி

-----------------------------------------

தமிழினத்தின் மானத்திற்குச் சவால்

- தமிழோசை

சைவ சமயத்தில் கோயில் என்றால் அது தில்லைச் சிற்றம்பலமாகிய சிதம்பரத்தையே குறிக்கும். அதைப் போலவே, வைணவ உலகில் கோயில் என்றால் திருவரங்கம், இவ்விரண்டும் - இவ்விரு சமயங்களின் இதயம் போன்றவை மட்டுமல்ல. தில்லை - தேவார மூவரின் பண்ணிசைப் பாடல்களைப் பெற்ற தலம். அதைப் போலவே, திருவரங்கம் - ஆழ்வார்களின் அமுதப் பாசுரங்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற பழம்பதி.

தில்லையைப் பொறுத்த அளவில், சமய அடிப்படையில் மேலும் பல சிறப்புக்கள் உண்டு. பஞ்சபூத தலங்கள் ஐந்தில் "ஞானாகாசத் தலமாக"வும் விளங்குவது. மணிவாசகப்பிரான் திருவாசகமும், திருக்கோவையாரும் பாடி அருளிய பதி. சைவக் கோயில்கள் அனைத்திலும் உள்ள சிவகலைகள் முழுவதும இக்கோயிலுக்குள் உள்ள மூலட்டானத்தில் ஒடுங்குவதால், "திரு மூலட்டானம்" என்ற தனிப் பெயரையும் பெற்றது. தில்லை அம்பலவாணர் மீது, வடலூர் வள்ளற்பிரான் பலப்பல பாடல்களை - கீர்த்தனைகளை இயற்றியுள்ளார். ஆகமக் களஞ்சியமாகிய திருமந்திரத்தில் "மானுட ராக்கையின் வடிவமே . சிதம்பரம்" என்று திருமூலநாயனார் போற்றுகிறார். தெய்வத் தமிழ் மாலைகளைச் சூடியுள்ள சுத்தபிரானின் திருக் கோயிலில் - இதன் பூசாரிகளான தீட்சிதர்களால் ஒருகாலகட்டத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தேவாரத் திருமுறைகளை இராசராச சோழன் வெளிக்கொணர்ந்து, தமிழுலகில் இப்பண்ணிசைக் கருவூலத்தை அரங்கேற்றி வைத்த நிகழ்ச்சி சைவ உலகில் நிலைத்து நிற்பது.

இப்பொழுது அதே தீட்சிதர்கள் - கூத்தபிரான் திருநடனம் புரியும் இடமாகிய சிற்றம்பலத்தில் தேவாரம் பாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பதன்மூலம், தமிழுலகத்தின் வெறுப்பைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். 60 ஆண்டுகளுக்கு முன்பு வரை, இக்கோயிலின் சிற்றம்பல மேடையில் தேவாரம் பாடி வழிபாடு நடத்தப் பெற்றுள்ளது. பின்னர், தீட்சிதர்கள் சிற்றம்பல மேடையில் தேவாரம் பாடுவதைப் பிடிவாதமாகத் தடுத்துவிட்டார்கள். தமிழர்களால் எடுக்கப்பட்ட தமிழ்க் கோயிலில் - தெய்வத்தமிழில் பாடுவதைத் தடுப்ப தென்றால், அந்த வன்நெஞ்சத்தை எப்படி வருணிப்பது?

எனினும், தமிழ் ஆர்வத்தோடு, துணிவுமுடைய ஓதுவார் ஆறுமுகச்சாமி என்பவர் சிலகாலத்திற்குமுன் - சிற்றம்பல மேடையில் தேவாரம் பாடி வழிபட முயன்றபோது, தீட்சிதர்கள் அதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் நிற்கவில்லை. தேவாரம் பாடத் தடை விதிக்கவேண்டுமென, மயிலாடுதுறையிலுள்ள இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையரிடம் இத்தீட்சிதர்கள் கூப்பாடு போட்டிருக்கிறார்கள். அவரும் இவர்களுடைய ஓலத்திற்கு இசைந்து தடை விதித்துவிட்டார்.

எனினும், இத்தடையை எதிர்த்து அறநிலையத் துறை ஆணையர் பிச்சாண்டியிடம் ஓதுவார் ஆறுமுகச்சாமி மேல்முறையீடு செய்ததில் - தடை உத்தரவை, நீக்கித் தேவாரம் பாட இசைவு அளிக்கப்பட்டது. ஆயினும், தீட்சிதர்கள் இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். உயர்நீதிமன்றமோ, இந்த மேல்முறையீட்டை அறநிலையத் துறை செயலாளரிடந்தான் செய்ய வேண்டும் என்றுகூறி தீட்சிதர்களின் மனுவைத் தள்ளுபடி செய்து விட்டது. அதையொட்டி, தீட்சிதர்கள் மூன்று நாட்களுக்கு முன் மேல்முறையீடு செய்ததில் - நடராசர் கோயில் சிற்றம்பலத்தில் பூசைகள் முடிந்தவுடன் சிவனடியார் ஆறுமுகச்சாமி தேவாரம் பாடி வழிபடலாம் - தேவாரம் பாடக் கூடாது என்று கூறுவது பக்தர்களின் வழிபாட்டு உரிமையைப் பறிப்பதாகும் - என்று அறநிலையத் துறைச் செலயாளர் தீர்ப்பளித்திருக்கிறார்.

அதன்விளைவாக, கடந்த ஞாயிறன்று காலை -தமிழ் ஆர்வலர்கள், மனித உரிமைப் பாதுகாப்பு இயக்கத்தினர், புரட்சிகர மாணவர் இளைஞர் இயக்கத்தினர், தமிழ் உணர்வுகொண்ட பா.ம.க. திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு போன்றவற்றின் தொண்டர்கள் புடைசூழ - ஆறுமுகச்சாமி தேவாரம் பாடுவதற்காக கோயிலுக்குள் நுழைந்தார். சட்டபூர்வமான அனுமதியுடன் தேவாரம் பாட வந்துள்ள அவருக்கு காவல் துறையினர் பாதுகாப்பளித்தனர். ஆயினும், பல்லாயிரக் கணக்கில் கோயிலுக்குள் நுழைவதற்குப் பதிலாக 25 பேருடன் உள்ளே சென்று - தேவாரத்தில் வழிபாடு செய்யுமாறு காவல்துறை விதித்த நிபந்தனையுடன் திருச்சிற்றம்பல மேடையில் ஆறுமுகச்சாமி ஏறியபோது, அவரைத் தீட்சிதர்கள் தாக்கி யிருக்கிறார்கள். "சிற்றம்பலத்தில் தேவாரம் பாடினால், அது தீட்டு" என்றும் கூக்குரல் எழுப்பியிருக்கிறார்கள். எனினும், தீட்சிதர்களை அப்புறப்படுத்தி விட்டு - காவல்துறையினர் ஆறுமுகச்சாமியைச் சிற்றம்பல மேடையில் ஏற்றிய போது, காவலர்களுடனேயே கை கலக்குமளவுக்கு - தீட்சிதர்களின் வெறி தறிகெட்டு ஓடிவிட்டது. இவ்வளவும் நடந்து முடிந்தபிறகு, "தேவாரம் பாடியதால் - சிற்றம்பலமே தீட்டுபட்டு விட்டதாக தீட்சிதர்கள் ஊளையிட்டதுடன் நிற்காமல், தீட்டுக் கழிப்பதற்கான வேள்வியையும் நடத்தியிருக்கிறார்கள்.

ஆக, இது ஏதோ ஒரு திருத்தலத்தில் நடந்த நிகழ்ச்சியல்ல. தமிழுக்கும் - தமிழினத்தின் மானத்துக்கும் விடுக்கப் பட்டுள்ள அறை கூவலாகும். "பைந்தமிழை - கண்ணுதல் பெரும் கடவுளே, கழகமொடு அமர்ந்து பண்ணுறத் தெரிந்து ஆய்ந்ததாக" பரஞ்சோதி முனிவர் ஏத்துகிறார். திருஞானசம்பந்தப் பெருமான் "ஊறும் இன்தமிழால் உயர்ந்தார் உறை தில்லை தன்னுள் சிற்றம்பலத்து ஈசனைப் பாடியதாகப்" பரவசத்துடன் கூறுகிறார். ஆனால், அத்தில்லைக் கோயில் எத்தகைய சாதி வெறியர்களின் ஆதிக்கப்பிடியில் சிக்கிக்கிடக் கிறது - என்பதற்குத் தில்லைச் சம்பவம் சான்றாகும். இத்தகைய காட்டுமிராண்டித் தனத்தின் மூலம், தீட்சிதர்கள் இத்தலத்தின் நிர்வாகத்தை வகிக்கத் தகுதியற்றவர்கள் என்பதை நிரூபித்து விட்டார்கள். அதோடு, வடமொழியையும் தமிழினத்தின் ஒட்டுமொத்த வெறுப்புக்கு உள்ளாக்கி விட்டார்கள்.

- தமிழோசை 4 - 3- 2008

------------------------

தமிழ் வழிபாடு - தமிழறிஞர்கள் வலியுறுத்தல்

முனைவர் மு. வரதராசனார்

கோயில் இந்திர சாலங்களோ மற்றப் புரட்டு வித்தைகளோ செய்யும் இடமல்ல. இதயம் கனிந்து பரம் பொருளை நினைந்து வழிபடும் இடம் அது. அத்தகைய கனிந்த நினைவுகள் பல நாளும் எண்ணி நினைந்து பழகிய தாய்மொழியிலேயே முடியும். அது இலக்கிய வளமற்ற மொழியாக இருந்தாலும், எழுத்து வழக்கே அற்ற மொழியாக இருந்தாலும், ஊமை மொழிக்கு அடுத்த நிலையில் உள்ளதாகவே இருந்தாலும், ஒருவன் தன் தாய்மொழியிலேயே கனிந்த நினைவுகளை நினைந்து உருக முடியும். ஆனால், தமிழ்நாட்டுக் கோயில்களில் தமிழில் வழிபாடு இல்லை. ஏன்? தமிழில் இலக்கிய வளம் இல்லையா? வேறு சிறப்புக்கள் இல்லையா? உலகில் வேறு எங்கும் இல்லாத அளவிற்குப் பக்திப் பாடல்கள் தமிழ் மொழியில் இருக்கும்போது, ஏன் இந்தத் தவறு செய்யவேண்டும்? ஊர் ஊராகச் சுற்றி ஆழ்வார்களும் நாயன்மார்களும் அன்பு கனிந்த பாடல்களைத் தமிழில் பாடி வைத்திருக்கும்போது, அந்த நன்றியெல்லாம் மறந்து, நன்றிகொன்ற பாவிகளாய், கோயிலில் தமிழில் வழிபாடு செய்யக் கூசுவதா? இதயக் கனிவிற்குத் துணை செய்யாத, பெரும் பாலோர்க்குப் பொருளும் விளங்காத, தாய் மொழி அல்லாத வடமொழியில் ஏன் வழிபாடு செய்யவேண்டும்? அதையும் தான் செய்யாமல், பிறரைக் கூலிக்குச் செய்விப்பது ஏன்? இது வழிபாடுதானா? அல்லது ஏமாற்றமா? ஏமாறுகின்ற மக்கள் இருக்கின்றார்களே என்றால், அவர்களைக் கண்டு அறிஞர்கள் இரங்கவேண்டும் அல்லவா? அதைவிட்டு, அவர்களுடைய ஏமாற்றத்தைத் தன்னலத்திறகுப் பயன்படுத்திக்கொள்வது ஆத்திகமா?

கோயில், கடவுளாட்சியை மதித்து வழிபடுதற்கு அமைந்த இடம் - ஆத்திகம் வளர்வதற்கு அமைந்த இடம். அத்தகைய இடத்தில் நாத்திகம் வளர விடுதல் தகுமோ? - கோயிலில் கடவுளாட்சியை மறுக்கும் செயல்கள் பெருகவிடுதல் தகுமோ?

கோயிலுக்கு வெளியே உள்ள நாத்திகம் பேச்சளவில் நிகழ்வது; ஆனால், மேற்கண்டவை செயலளவில் நிகழ்பவை. கோயிலுக்கு வெளியே நிலவும் நாத்திகம் கடவுளைப் பற்றிக் கவலை இல்லை என்பவர் பேசும் கொள்கை; ஆனால் மேற்கண்டவை கடவுளைக் கருதி வாழ்வதே வாழ்க்கை என்பவர் செய்யும் கொடுமை, மற்ற மூடப் பழக்க வழக்கங்கள் அறிவு குறைந்த மக்கள் இருளில் கிடந்து உழலுவதால் ஏற்பட்டவை; ஆனால், மேற்கண்டவை அறிவைத் தன்னலத்திற்குப் பயன் படுத்தும் வன்னெஞ்சர்கள் போற்றும் பழக்கங்கள். அதனால் மற்ற மூடப் பழக்க வழக்கங்களைவிட, நாத்திகப் பேச்சைவிட, கோயிலுக்குள்ளேயே கையாளப்படும் மேற்கண்ட நாத்திகப் பழக்கங்கள் மிகப்பொல்லாதவை; இவற்றைச் சீர்திருத்துவது முதல் கடமையாக வேண்டும்.

பேரா. அ. கி. பரந்தாமனார்

கோவில்களில் வழிபாடு நடத்துபவர்கள் பிராமணர்களாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. அறிவும் ஒழுக்கமும் உண்மை பக்தியும் தற்காலக்கலையறிவும் உள்ளவர்கள் - யாராயிருப்பினும் வழிபாடு நடத்துபவர்களாக இருக்கவேண்டும். அவர்கள் தமிழில் வழிபாடு நடத்த வேண்டும். இவை மிக விரைவில் வரவேண்டிய சீர்திருத்தங்கள் பூசைகளிலும் அலங்காரங்களிலும் வீண் உற்சவங்களிலுமட்டும் கவனம் செலுத்துவது பலன் தராது. கோவில்கள் தக்க அறநிலையங்களாக இருந்தால் கோவில் செல்வோர் தொகை எப்படிக் குறையும்? அங்கு அறிவுக்கு இடமில்லாமலிருப்பதாலும், அன்புக்கு வழியில்லாமலிருப்பதாலும், உயர்ந்த ஒழுக்கத்திற்கு வழிகாட்டிகள் இல்லாமலிருப்பதாலும் கோவில்கள் இன்று பயனற்றுக் கிடக்கின்றன.

சிலம்புச் செல்வர் ம. பொ. சி

ஆனால், சமயத்துறையில் மட்டும் தமிழுக்குரிய இடத்தை வடமொழி ஆக்கிரமித்திருக்கும் நிலை இன்னும் அகன்றபாடில்லை. இந்த நிலை நீங்கி, மக்கள் வாழும் இல்லங்கள் தோறும் - வழிபடும் கடவுளரின் ஆலயங்கள் தோறும் - தமிழே ஆட்சி பெறச் செய்ய வேண்டும்.

"காட்டிலே மறைக்கதவம் திறந்தது எங்கள் கன்னித் தமிழ்; எலும்பைப் பெண்ணுருவாக்கியது எங்கள் இன்பத் தமிழ்; முதலையுண்ட பாலனையழைத்தது எங்கள் முத்தமிழ்" என்றெல்லாம் கன்னித் தமிழுக்குக் கடவுள் தன்மை கூறாத புலவர் இல்லை. ஆனால், இவ்வளவு பெருமையுள்ள தமிழுக்கு ஆலயத்தில் வாழ உரிமை இருக்கின்றதா? அதுதான் இல்லை. தமிழகத்திற்கு வந்த மொழியான வடமொழிக்குள்ள உரிமை நம் சொந்த மொழியான செந்தமிழுக்கு இல்லையென்றால் இதை விட அவமானம் நமக்கு வேறென்ன வேண்டும். முருகனைத் தமிழ்த் தெய்வம் என்றனர் முன்னோர். "முத்தமிழால் வைதாரையும் வாழ வைப்பான் முருகன்" என்றார் அருணகிரியார். அந்த முருகன் கோயில்களில்கூட தமிழுக்கு முதலிடம் இல்லை! இந்த நிலை மாறி தமிழகத்துக் கோயில்கள் எல்லாவற்றிலும் தமிழ்மறையே ஓதப்பட வேண்டும். தேவாரம், திருவாசகம், திருமந்திரம், பிரபந்தம் போன்ற தமிழ் மறைகளைப் பண்ணோடு கலந்து பாடப் பயிற்சி பெற்றவர்களையே அர்ச்சகர்களாகவும் பட்டாச்சாரியர்களாகவும் அமர்த்த வேண்டும்.

முனைவர் மா. இராசமாணிக்கனார்

விசயாலயன் மரபினரான பிற்காலச் சோழப் பேரரசர் காலத்தில் (கி.பி. 700-1300) சிவநெறி மிக உயர்ந்த நிலைமை அடைந்தது. முன்னர்ப் பாடல் பெற்ற கோவில்கள் அனைத்தும் கற்கோல்களாக மாற்றப்பட்டன; நாயன்மார் உருவச் சிலைகள் எழுந்தருளப் பெற்றன; திங்கள் தோறும் விழாக்கள் நடைபெறவும் நாள் தோறும் பூசை நடைபெறவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பெரும் பாலான கோவில்களில் திருமுறைகள் ஓதப்பட்டன. அக்காலத்தில் பிராமணர். தேவரடியார் - குருடர் முதலியவரும் ஓதுவாராக இருந்தனர் என்பதை முறையே திருத்தவத்துறை (லால்குடி), திருவொற்றியூர், திருஆமத்தூர்க் கல்வெட்டுகளால் அறியலாம். பெருங்கோவில்களை அடுத்து மடங்கள் உண்டாகிச் சமயக் கல்வி புகட்டி வந்தன. சில கோவில்களை அடுத்து கன்னி மாடங்கள் இருந்தன. அதன்கண் சைவப் பெண்மணிகள் இருந்து (சமணக் குரத்தியர்போல) சமயத் தொண்டாற்றி வந்தனர். கோவில்களில் இசை - நடனம் - நாடகம் வளர்ச்சி பெற்றன; புராண நூல்கள் படித்து பொதுமக்களுக்கு விளக்கப்பட்டன. திருநீடூரில் புராணநூல் விரிக்கும் புரசை மாளிகை இருந்தது. திருப்பூந்துருத்திக் கோவிலில் இராஜராஜ நாடகம் நடிக்கப்பட்டது. திருவொற்றியூர்க் கோவிலில் ஆளுடைய நம்பி c புராணம்படிக்கப் பட்டது. நாயன்மார் வரலாறுகள் ஓவியம் - (தஞ்சைப் பெரிய கோவில் ஓவியங்கள் நினைக்கத்தக்கவை) சிற்பம் - (தாராசுரத்துச் சிற்பங்கள் இங்கு நினைக்கத்தக்கவை) விழாக்கள் - சொற்பொழிவுகள் வாயிலாக விளக்கம் பெற்றன; செப்புத் திருமேனிகள் செய்விக்கப்பெற்றன. திருமுறைகள் பாதுகாக்கப்பட்டன; மூவர் தேவாரங்களும் செப்பேடுகளில் எழுதப்பட்டன.

-தென் செய்தி

-----------------------------------------------------------------------------

முக்கண்ணனின் கண் எதிரே

"தென்னாடுடைய சிவனே போற்றி....

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி"

எனப் போற்றி வணங்கப்பட்டு வரும் சிவபெருமானைப் புகழ்ந்து பாடி தமிழைச் செழிக்கச் செய்த ஆன்மீகச் சோன்றோர்கள் வாழ்ந்த நாடு நம் நாடு.

குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயும் எனத் தொடங்கி, சிவனது பொற்பாதகம் காணப்பெற்றால் மனிதப் பிறவியும் வேண்டுவரோ இம் மாநிலத்தே என பக்தியுடன் பாடினார்கள்.

தமிழ் இலக்கிய வளர்ச்சியில் அந்நாள் தொட்டு இந்நாள் வரை பக்தி இலக்கியத்திற்கு தனிப்பெரும் பங்கு உண்டு. இடையிலே வடமொழி ஆதிக்கம் தமிழ்நாட்டில் நுழைந்தபின் இறைவழிபாட்டிலும் வடமொழியின் ஆதிக்கம் தலை தூக்கியது.

பன்னிரு ஆழ்வார்களும், அறுபத்து மூன்று நாயன்மார்களும், சைவ வைணவர் கருத்துக் களைத் தமிழின் மூலமே பரப்பினார்கள். எல்லாச் சிறப்புகளம் பெற்ற தமிழ்மொழியை இறைவழி பாட்டிலிருந்து அகற்றியது என்பது தமிழுக்கு எதிரான சதியே.

இந்த இழுக்கை துடைத்திட தமிழர்கள் இன்றும் போராட வேண் டிய சூழல் எழுவது தமிழனுக்கு ஏற்பட்ட அவமானம்.

சிதம்பரம் நடராசர் ஆலயத்தில் தேவாரம் இசைப்பதற்குக்கூட அந்த ஆலயத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தீட்சிதர்கள் தடை போட்டு வந்தார்கள்.

இதனை நீதிமன்றமும் விசாரித்தது. கடந்த மாதம் 29ந் தேதி நடராசர் கோயிலின் திருச்சிற்றம்பலம் மேடை யிலிருந்து தேவாரம், திருவாசகம் பாடி வழிபடலாம் என அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

மார்ச் 2ந் தேதி தேவாரம், திரு வாசகத்தை அக்கோயிலில் இசைக்க சிவனடியார் ஆறுமுகசாமி தலை மையில் சென்றவர்கள், காவல்துறை துணையோடு சென்றபோதும், தீட்சிதர் களால் தாக்கப்பட்டுள்ளனர். அது மட்டுமின்றி சிவபெருமானை பார்க்க விடாமல் தன்னை தடுத்தார்கள் என்றும் சிவனடியார் ஆறுமுகசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

ஆலயத்தில் தமிழால் பாடி இறை வனை வழிபட ஏற்படும் தடைகளை நிரந்தரமாக நீக்கிட தமிழர்கள் அனைவரும் ஒன்று திரள வேண்டும்.

உயர் தனிச் செம்மொழியாய் உல கோர் ஏற்றுக்கொண்ட தமிழ் மொழிக்கு ஏற்படும் இத்தகைய இன்னல்களை துடைத்தெறிய தமிழக அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

- ஜனசக்தி 4-3-2006

-----------------------------------------------------------------------------

அருளொழுகும் தமிழ் வாய்மொழி

தமிழ் வழிபாடு பற்றி.. தமிழ் நாட்டின் சமய, இலக்கிய சமூக வரலாறுகளை ஆராய்ந்தால் தொல் பழங்காலத்திலிருந்தே வடமொழி மட்டுமே, வழிபாட்டு மொழியாக இருந்தது என்பதற்குப் போதிய சான்றுகள் இல்லை. அது பிற்காலத்தில் அவ்வப்போது ஏற்பட்ட இடைநிலையே. சங்க இலக்கியங்களில் மிகப் பழைமையானதான பத்துப் பாட்டில் முதல் பாட்டான "திருமுருகாற்றுப்படை"யில் காணப் படும் தமிழ்வேள் முருகனைப் பற்றிய பல பாடல்களும்; பரிப்பாடலில் உள்ள முருகன், திருமால், செவ்வேள் பற்றிய சேயோன், திருமால் மற்றும் தமிழ்த் தெய்வங்கள் பற்றிய இயல் இசைப் பாடல்களும்; ஆகமங்களுக்கு முன்பே, தீந்தமிழால் இறைவனை வழிபட்டு முக்தி பெற்ற காரைக்கால் அம்மையாரின் "மூத்த திருப்பதிகத்தில்" உள்ள அரிய அருட்பாடல்களும்; காதலாகிச் கசிந்துருகிக் கண்ணீர் மல்கி இறைவனோடு இழையச் செய்யும் சைவ சமயக் குரவர்களின் "தேவார, திருவாசகங்களும்," அருள் சொட்டச் சொட்ட ஆழ்வார்கள் பாடிய "நாலாயிர திவ்வியப் பிரபந்தங்களும்" திருமூலரின் "திருமந்திரமும்" இன்னோரன்ன தமிழ்ச் சமய பக்திப் பனுவல்களும் வெறும் இலக்கியங்கள் மட்டுமே ஆகா அவை தமிழகத்தில் தமிழ்த் துதி முறைமை நடப்பினிலிருந்ததை விளக்கும் "தமிழ் வாய்மொழியே" யாம். அவற்றில் இறைவனை நெக் குருகப்பாடி ஈர்த்து, அருள் பெறும் வழிபாடுகளும், பூசனை முறைகளும் மந்திரங்களும், மெய்யுணர்வுக் கருத் துக்களும் அடங்கியுள்ளன. அவை தமிழ்ப் பண்பாட்டின சிறப்புக் கூறாக மலர்ந்து, வடமொழி ஆகமங்களுக் கும் அப்பாற்பட்டு அருளோடு விளங்குவதை இன்றும் யாரும் மறுக்க முடியாது.

தமிழ்ப்பூசனை:

பத்து அல்லது பதினொன்றாம் நூற்றாண்டில் திருக்கோயில்களில் வழிபாடு செய்வதற்கென்றே, "திரு விசைப்பா" என்னும் வழிபாட்டு நூல் எழுந்தது. இதிலுள்ள பாடல்கள் இயற்றிய புலவர்கள் ஒன்பது பேர். சேந்தனார், கருவூர்த்தேவர், புந் துருத்தி நம்பிகாடநம்பி, சேதிராயர், கண்டராதித்தர், வேணாட்டடிகள், திரு வாலியமுதனார், புருடோத்தம நம்பி ஆகிய ஒன்பதினர். அக்காலத்தில் தமிழிலதான் வழிபாடு நிகழ்ந்தது என்பதற்கு இந்நூலே அரிய சான்று எனப் பாவலரேறு பெருஞ்சித்திரனார் எடுத்தி யம்புகிறார். தமிழ் வழிபாடு நடப்பிலிருந்ததைக் காட்ட வேறு பல சான்றுகளையும் எடுத்துக் காட்டலாம். ஓதுவார்கள் கோயில்களின் நிலையான உட்துறைப் பணியாளர்களாக அமர்த்தப் பட்டிருந்ததை விசய நந்தி வர்மன் பல்லவர் காலத்துக் கல்வெட்டும்; முதல் பராந்தகன் காலத்தில் சோழ நாட்டின் திருக் கோயில்களில் திருப்பதிகங்கள் ஓதப் பெற்றதையும்; சோழ, தொண்டை மண்டலங்களின் கோயில்களில் திருப்பதிகங்கள் இறைத்துதியாக பாடப் பெற்றதையும் அவை தமிழ் வழிபாட்டு முறையாக அமைந்திருந்ததையும் மணி வாசகரின் "திருசாழல்" வழிபாடாக இருந்து வந்ததையும் திருக்கோயில்களில் திருவெம்பாவை இசைக்கப்பட்டதையும் வேறு பல கல்வெட்டுகளும் தெளி வாக்குகின்றன.

பூ+செய் = பூசெய் = பூசை = பூஜை. பூவிட்டு தமிழில் வழிபாடுகள் செய்யப்பட்டதை "பூசை" என்ற சொல்லே எடுத்துக் காட்டுகிறது. வேதங்களில் பூசையில்லை. நெருப்பை வளர்த்து, வேத மந்திரங்களைச் சொல்லி வேள்விகள் செய்தே வேத வழிபாடு. அதை "நிகம நெறி" "வேத நெறி" என்பர். தமிழ் வழிபாடான பூசையை "பூவை நிலை" என்று தொல்காப்பியமும் (1006) "புக்கோள நிலை" (அகம்; 174; புறம்; 289 - 341) "பூப்பலி" (கலி: 93-24) என்று சங்க இலக்கியங்களும் கூறுகின்றன. ஆண்டவன் அருளைப் பெற உள்ளத்தின் உருக்கம் போதும். அந்த நெகிழ்வைப் பெற தமிழ் வழிபாடுதான் சாலச் சிறந்தது. இக்கருத்தை வடமொழி வழிபாட்டை வலியுறுத்து பவரும் முழுமையாக ஏற்கின்றனர். ஆனால் "சம்சுகாரமாக" "ஆன்மசுகத்திற்கு," "ஆவாகனத்திற்குத், (இறைவனை அழைத்தல்) தமிழ் வழிபாடு தகுதியற்றதாம். இதற்கு எந்த ஆதாரத்தையும் அத்தகையோர் காட்ட முடிவதில்லை.

"பயிலுதற்கும் அறிதற்கும் மிகவும் இலேசுடையதாய், பாடுதற்கும் துதித்தற்கும் மிகவும் இனிமை உடையதாய்ச் "சாகாக் கல்வியை இலேசில் அறிவிப்பதாய்த் திருவருள் வலத்தால் கிடைத்த தென்மொழி (தமிழ்மொழி)" என்றும் "வேதநெறி ஆகமத்தின் நெறி இவைகள் எல்லாம் சூது ஒது கின்றன", என்றும் அருட்பெருஞ்சோதி வள்ளலார் அவர்கள் தமிழ் வழிபாட்டின் தகுதியையும் மெய்ம்மையும் எடுத்தோதுகிறார்.

- கு. ச. ஆனந்தன்

( தமிழ் வழிபாட்டு முறை - தமிழரின் அடிப்படை உரிமை - பக்கம் 8 - 10 )

அரோஓஓஓகராஆ...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.