Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பொல்லா வேடச் சாக்கியப் புல்லர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொல்லா வேடச் சாக்கியப் புல்லர்

-மறவன்புலவு க. சச்சிதானந்தன் (தமிழர் விடுதலைக் கூட்டணி அரசியல் குழுவின் முன்னாள் உறுப்பினர்)

புத்தத் துறவியான வணக்கத்துக்குரிய அத்துரிலிய இரத்தின தேரர், இலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினர். தேசிய எல (ஈழ) உறுமல் கட்சியின் நாடாளுமன்றக் குழத் தலைவர். 45 வயதினர்.

புத்த சமயத்தவர் ஆய்தம் ஏந்திப் போராட வேண்டும், போர்மூலம் தமிழரின் எதிர்ப்பை முறியடிக்க வேண்டும். சிங்கள புத்த மேலாட்சியை நிலை நிறுத்த வேண்டும். இவ்வாறாக அவர் கடந்த ஆறு ஆண்டுகளாக எழுதியும் பேசியும் வருகிறார்.

சிங்களச் சிற்றூர்கள் தொடக்கம் நகரங்கள் வரை அனைத்து இடங்களுக்கும் பயணித்து இலங்கைப் போர்ப் படைக்குச் சிங்கள இளைஞர்களைத் திரட்டுகிறார். போர் முனைகளுக்குச் சென்று சிங்களப் படை வீரர்களை உற்சாகிக்கும் உரைகளை நிகழ்த்துகிறார்.

அன்பு, அறம், கருணை, இரக்கம் என்பனவற்றைப் பேச வேண்டியவர், போர்களை நிறுத்தி அமைதிக்கு வழிகாட்ட வேண்டியவர், புத்தரின் போதனைகளை மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டியவர், போர்முரசம் அறைகிறார்.

போர் நிகழவுள்ளது என்ற செய்தி காதுக்கு வந்த உடனேயே நிகழவுள்ள இடத்துக்கு ஓடோடிச் செல்வதும் போர் நிகழாது தடுப்பதும், அறத்தைப் போதித்து அமைதியை நிலைநாட்டுவதும் புத்தரின் வழிமுறைகள்.

கபிலவஸ்துவில் அணையில் தேங்கிய நீருக்காகப் போரிட முயன்ற தன் உறவுக்காரராய் இருந்தவர்களிடம் விரைந்து சென்ற புத்தர், பயனற்ற ஒன்றிற்காக விலைமதிப்பற்ற உயிர்களைப் பலியிடப் போகிறீர்களா என வினவினார். புத்தரின் போதனைகளைக் கேட்ட ஆற்றின் எதிர் எதிர்க் கரைகளின் அரசர்கள் இருவரும் போரைக் கைவிட்டனர். அமைதி உடன்படிக்கை எழுதினர்.

முன்னோர் விட்டுச் சென்றதோ, இரத்தின அரியணை. தத்தமக்கே உரியது என மாமன் மகோதரன் ஒருபுறமும் மருகன் குலோதரன் மறுபுறமும் ஆகினர். செங்கண் சிவந்தனர். நெஞ்சு புகை உயிர்த்தனர். தம்பெருஞ்சேனையொடு வெஞ்சமருக்கு முயன்றனர். அந்த யாழ்ப்பாணத்துத் தமிழ் மன்னர் இருவரிடமும் புத்தர் ஓடோடி வந்தார், இருஞ்சமர் ஒழிமின் என்றார். பெருந்தவ முனிவர் கூறியதை மாமனும் மருகனும் ஏற்றனர். பொருதுவதைக் கைவிட்டனர். மணிமேகலை (காதை 8, வரி 58) நூலில் கூறிய இச்செய்தியை பின்வந்த மகாவமிசமும் (காதை 1, வரி 45-62) விரிக்கிறது.

போர் வேண்டாம் என்ற புத்தரின் வழிவந்தோர் வேண்டுகோளை அசோக மன்னன் ஏற்றதால் கலிங்கத்துடன் அசோகப் படையெடுப்பு நின்றது. புத்தரின் வழிவந்தோர் அனைவரும் புத்தரின் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்லவில்லை. புத்தர் காலத்தில் நிகழ்ந்த கோசம்பிக் குழப்பம் தீராமலே போயிற்று. வெறுப்பை வெறுப்பாலே தீர்க்க முடியாது. தாம் அணிந்திருக்கும் துவராடைகளுக்குப் பொருத்தமானவர்களாகத் துறவிகள் வாழவேண்டும் எனக் கோசம்பியில் கூறினார் புத்தர்.

துவராடைகளுக்குப் பொருத்தமானவராகப் புத்தத் துறவிகள் இருப்பதில்லை என்ற கருத்தைக் காலத்துக் காலம் பலர் மீள உரைத்து வருகின்றனர். துறவியின் ஆடைகளுக்குள் புகுந்து பிறவியின் ஆசைகளுள் மூழ்குவோராய் இருந்தனர் புத்தத் துறவிகள்.

பொல்லா வேடச் சாக்கியராகிப் புல்லராகுவார் (தி.12 பு.34 பா.7) எனக் கருதிய சாக்கிய நாயனார், புத்த சமயத்தை விட்டு நீங்கிச் சிவ அடியவராயினர்.

புற ஆடைகள் துறவிக்கு உரியதாய்க் கொண்டு, உள்ளத்தில் பிறரை ஏமாற்றும் கொள்கை உடையவரை எத்தர், ஈனர் என்பார் திருஞான சம்பந்தர் (தி.2 ப.107.பா.10; தி.3 ப.39.பா.3).

திருத்தெளிச்சேரியில் இத்தகைய தலைமைப் புத்தத் துறவி ஒருவரின் தலையைத் துண்டித்த தம் அடியவரிடம், "எதிர்த்த விலக்கு நீங்க உற்ற விதி அதுவேயாம்" (தி.12 பு.28 பா.910) என அச்செயலை நியாயப்படுத்துவர் திருஞானசம்பந்தர்.

சேறு படிந்த சிந்தனைகளும் நிறைந்த ஏமாற்றும் துணிவும் கொண்டவன் மஞ்சளாடை அணிவது பொருந்துமா? தன்னியல்பை ஆள்பவன் எவனோ, ஒளியும் தெரிவும் உண்மையுமானவன் எவனோ அவனே மஞ்சளாடை அணியலாம் என்கிறது தம்மபதம். தம்ம என்பதற்கு இங்கு விதி அல்லது கட்டுப்பாடு என்பது பொருள். பதம் என்றால வழி என்பது பொருள்.

தியானத்துக்கு உரியவரா? பரப்புரைக்கு உரியவரா? சமுகப் பணிக்கு உரியவரா? என்ற வினாக்களைப் புத்தர் காலத்திலிருந்தே துறவிகள் கலந்துரையாடி வருகின்றனர்.

புத்தரின் கொள்கைகளைப் பரப்புரை செய்வோரால், புத்த மதம் ஆசியாவெங்கும் பரவியது.

இலங்கைத் தீவின் மக்கள் தொகையில் 69% புத்த சமயத்தவர். இவர்கள் யாவருமே சிங்கள மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். ஏறத்தாழ 40,000 புத்தத் துறவிகள் துவராடைக்குள் உள்ளனர். துறவுக்குள் புகுந்தும் பின்னர் வெளியேறியும் வரும் வழமையும் உண்டு. துறவுக்குள்ளே தொடரும் வழமையும் உண்டு.

மூன்று முக்கிய மடங்களுள் இந்தத் துறவிகள் தம்மை அடையாளம் காணுவர். வேளாள சாதியினருக்கான சியாம் நிக்காய மடம், கரையார் மற்றும் சலாகமச் சாதியினர்க்கான அமரபுரம் நிக்காய மடம். சாதி வேறுபாடற்ற இராமண்ண நிக்காய மடம்.

இந்த மடங்களுக்கு ஊர்கள் தோறும் விகாரங்கள் உண்டு. புத்த விகாரமோ, அதற்குப் பொறுப்பான துறவியோ இல்லாத சிங்களச் சிற்றூர் இலங்கைத் தீவில் இல்லை. தமிழரின் மரபு வழித் தாயகமான வடக்கு மற்றும் கிழக்கு மாகாண ஊர்களில் புத்த விகாரங்களையோ, புத்தத் துறவிகளையோ காண்பது அரிது.

அண்மைக் காலமாக புனைதுகில் அணிந்து எத்தரான துறவிகளையே இலங்கையில் அடையாளம் கண்டு வருகிறோம். 1958இல் பண்டாரநாயக்காவைச் சுட்ட சோமராம தேரர் தொழுத கையுள் படை ஒடுக்கிய (குறள், 828) எத்தரே. அவரைத் தூண்டிய தலைமைத் துறவி புத்தரக்கித்த தேரர் ஈனரே. இருவரும் கொலைக் குற்றவாளிகள் என நீதிமன்று தீர்த்தது.

இத்தகையவரால் ஏனைய புத்தத் துறவிகள் பாதிப்பு அடைகின்றனர். கருணை காட்டுவதால் மட்டும் தீமையை வெல்ல முடியாது என அத்துரிலிய இரத்தின தேரர் கூறி வருகிறார். அந்தக் கண்ணோட்டம் சோமராம தேரருக்கும் புத்தரக்கித்த தேரருக்கும் இருந்தது.

வெளிப்படையாகக் கொலை வெறியைத் தூண்டப் புத்தத் துறவிகள் மறுப்பர். அரசியலில் பங்காற்றிப் போராட்டங்களை நட்த்தி, மக்களின் சிக்கல்களை முன்னிறுத்துவது வியத்நாம், தாய்லாந்து, கம்போடியா, யப்பான், லாவோசு, திபெத்து போன்ற ஆசிய நாடுகளில் வழமையில் உள்ளது. புத்தத் துறவிகள் தம்மைத் தாமே வதைத்துக்கொள்வர். பிறரை வதைக்கும் போராட்டங்களை முன்னெடுக்கார். அதனால்தான், வன்முறை திபெத்தில் தொடருமானால் தொடர்ந்து புத்தத் தலைமையில் இருக்க மாட்டேன் எனத் தலாய் லாமா அறிவித்துள்ளார். அறவழிச் சிந்தனைகளுக்குச் சமுதாய வடிவம் கொடுத்து வளர்த்தெடுத்த முதல் மனிதர் புத்தரன்றோ!

அவர் பெயரைச் சொல்லிப் படையணிக்கு ஆள் திரட்டுவதும் போர் முரசறைவதும் அழிவைத் தூண்டுவதும் அத்துரிலிய இரத்தின தேரருக்கும் அவர் சார்ந்த தேசிய எல (ஈழ) உறுமல் கட்சிக்கும் கொள்கையாகுமானால், அவர்கள் புத்தரல்லர், புனைதுகில் அணியும் எத்தர், பொல்லா வேடச் சாக்கியப் புல்லர். அததகையோரை ஒறுத்தல் "எதிர்த்த விலக்கு நீங்க உற்ற விதி அதுவேயாம்" (தி.12 பு.28 பா.910).

-சிஃபி - சித்திரை 4, 2008

  • கருத்துக்கள உறவுகள்

புத்தரையே வேண்டாம் என்று கைவிட்ட சமுகம் நாங்கள்.தமிழ் பிக்குமார் இருந்தால் அவர்களுமிப்ப சிங்களவரை அடிக்க படை திரட்டியிருப்பார்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.