Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் நெறித் திருமணம்

Featured Replies

நெடுக்காலபோவான்!

இன்னமும் என்னுடைய திருமணம் பற்றி நான் எழுதி முடிக்கவில்லை. அதற்குள் அவசரப்பட்டு நீங்கள் ஒரு முடிவுக்கு வரவேண்டாம்.

நான்தாலி பற்றி எழுதிய அதே கருத்தியலில் இருந்தே என்னுடைய திருமணத்தை செய்தேன்.

"தாலி எப்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டது என்று தெரியவில்லை. சங்க இலக்கியங்களில் தாலி பற்றி பெரிதான குறிப்புக்கள் எதுவும். மற்றைய ஆபரணங்களைப் போல் ஒரு சாதரணமான ஆபரணமாகவே தாலியும் குறிப்பிடப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. "

இது அன்றைக்கு எழுதியது. நான் தாலிக்கு கொடுக்கப்படும் அர்த்தமற்ற முக்கியத்துவத்தை கண்டித்து வந்திருக்கிறேன். அதை நான் என்னுடைய திருமணத்திலும் ஏதோ ஒரு வகையில் செய்தேன். அனைத்தையும் படித்த பின்பு நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.

நெடுக்காலபோவான் தாலியை அன்பின் அடையாளம் என்று சொல்வார், அப்படியும் இருக்கலாம் என்று அன்றைக்கும் சொல்லியிருக்கிறேன். தாலி அடிமைச் சின்னமாகவும் அன்புச் சின்னமாகவும் இருக்கிறது என்று சொல்லியிருக்கிறேன். என்னுடைய திருமணத்தில் தாலி அன்புச் சின்னமாக கொள்ளப்பட்டது. அதையும் நீங்கள் அனைத்தையும் படிக்கும் போது உணர்ந்து கொள்வீர்கள்

  • Replies 180
  • Views 42.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் முன்பு சொன்னது: ஒரு வேளை மொகலாயர்களிடம் இருந்து காத்துக் கொள்வதற்காகத்தான் எமது முதாதையர்கள் இந்த தாலியை நடைமுறைப்படுத்தினார்கள் என்றால், தாலி என்பது கையாலாகத்தனத்தின் ஒரு அடையாளம்தானே?

ஹிஹிஹி

:rolleyes:

மணமகனும் மணமகளும் ஒரே நேரத்தில் வரமுடியாதா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. தமிழ் நெறித் திருமணத்தில் இப்படித்தான் வர வேண்டும் என்று எந்த விதியும் இல்லை. வேண்டுமென்றால் முதலில் மணமகள் வரலாம், அல்லது மணமகன் வரலாம், அல்லது ஒரே நேரத்தில் இருவரும் சேர்ந்து வரலாம். அது திருமணம் செய்பவர்களின் விருப்பத்தை பொறுத்தது.

நான் முன்னே சென்று காத்திருந்து என்னுடைய மனைவி வரும் போது எழுந்து சென்று அவரை வரவேற்று அமரச் செய்தேன். என்னுடைய பார்வையில் இது நான் என் மனைவிக்கு செய்த கௌரவம். வேறுவிதமான கருத்து உள்ளவர்கள் வேறு மாதிரிச் செய்யலாம். அதில் ஒன்றும் பிரச்சனை இல்லை.

சரி இனி மிகுதியை தொடருகிறேன்.

தமிழ் முறைப்படி திருமணம் செய்த சபேசனுக்கு வாழ்த்துக்கள்....!!

ஆங்கில முறைப்படி பதிவு திருமணமும் செய்தீர்கள்தானே...??

திருமண உறுதிமொழியை இருவரும்படித்ததன் பின்பு

6. மாலை மாற்றுதல்

மணமக்கள் மாலை மாற்றும் போது ஓதுவது

கலந்து நின்றாள் கன்னி காதலனோடும்

கலந்து நின்றாள் உயிர் கற்பனை எல்லாம்

கலந்து நின்றாள் கலை ஞானங்கள் எல்லாம்

கலந்து நின்றாள் கன்னி கால் முக்காலமே

7. மங்கலநாண்கள் அடங்கிய தட்டை ஆசீர்வாதத்திற்கு அனுப்புதல்

மங்கலநாண் அனுப்பப்பட்டதும் ஓதப்படும் மணிமொழிகள்

மணமகனை நோக்கி:

மணமகனே!

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்

நல்ஆற்றின் நின்ற துணை

(இல்லறத்தோடு கூடி வாழ்பவன் என்று சொல்லப்படுபவன் இல்வாழ்வான். இவன் இயல்பாகவே தன்னை சார்ந்திருக்கும் பெற்றோர் மனைவி மக்கள் ஆகிய மூன்று திறத்தோர்க்கும் பல நன்மைகளைச் செய்து துணைநிற்றல் வேண்டும்)

துறத்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்

இல்வாழ்வான் என்பான் துணை

(உலகப் பற்றை துறந்தவர்க்கும் உண்பதற்கில்லா வறியவர்க்கும், ஒருவருமின்றித் தன்னிடம் வந்து அடைக்கலம் அடைந்தோர்க்கும் இல்லறத்தான் எப்போதும் துணையாக நிற்றல் வேண்டும்)

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது

(ஒருவனுடைய இல்வாழ்க்கையானது தன் மனைவியிடம் செலுத்தும் அன்பினையும் பிறர்க்குப் பங்கிட்டுக் கொடுப்பதாகிய அறத்தினையும் உடையதானால், அதற்கேற்ற குணமும் பயனும் ஆகும்)

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்

முயல்வாருள் எல்லாம் தலை

(இல்லற வாழ்க்கையில் இருந்து கொண்டு இயல்பாகவே அதற்குரிய தன்மைகளுடன் வாழ்பவன் ஆசைகளை அறுத்து வாழும் துறவறத்தானை விட தலைமையானவான் ஆவான்)

அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை அஃதும்

பிறன் பழிப்பது இல்லாயின் நன்று

(இல்லறம் பிறரால் பழிக்கப்படாத தூய்மையுடையதாக இருத்தல் வேண்டும். பிறன் பழிக்கும் இல்வாழ்க்கை என்பது விருந்தோம்பாமையாலும், பிறனில் விழைவாலும், வரையின் மகளிர் தொடர்பாலும் நேர்வதாகும். அவற்றை களைந்து வாழ்வதே இல்லறத்தானுக்கு நன்மையாகும்)

மணமகள் நோக்கி ஓதப்படும் மணிமொழிகள்:

மணமகளே!

மனைத்தக்க மாண்புடையாள் ஆகித்தற் கொண்டான்

வளத்தக்காள் வாழ்க்கைத் துணை

(இல்லறத்திற்கேற்ற நற்குண நற்செய்கைகளை உடையவளாகித் தன்னை மணம் செய்து கொண்ட கணவனது வருவாய்க்கு தக்க வாழ்க்கை உடையவள் அந்த இல்லறத்திற்கு துணையாவாள்)

பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பெனும்

திண்மை உண்டாகப் பெறின்

(ஒருவன் இந்த உலகத்தில் பெறக்கூடியவற்றில் மனைவியை விட சிறந்தது வேறு ஒன்றும் இல்லை. ஆகவே மனைவியிடத்தில் ஒழுக்கம் மாறாத நிலை அமைந்திருக்க வேண்டும்)

மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை

எனைமாட்சித் தாயினும் இல.

(இல்லறத்திற்கேற்ற சிறப்பு மனைவியிடம் இல்லாமல் போனால், அவ்வில் வாழ்க்கை செல்வம் முதலிய வேறு வகைகளில் எவ்வளவு சிறப்புடையதாக இருந்தாலும் பயனில்லாமல் போய்விடும்.)

தற்காத்துத் தற்கொண்டாற் பேணி தகைசான்ற

சொற்காத்து சோர்விலாள் பெண்

(தன்னையும் காத்து தன் கணவனையும் பேணி, உலக மதிப்பையும் காத்து பிறர்க்குச் செய்யும் அறவினைகளில் சோர்வு இல்லாதிருப்பவளே இல்லறத்திற்கு ஏற்ற பெண்ணாவாள்)

புகழ்புரிந் தில்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்

ஏறுபோல் பீடு நடை

(தனக்கும் தன் கணவனுக்கும் புகழ்தரக் கூடிய செயலைச் செய்ய மனைவி தவறினால் தம்மை பழித்துரைக்கும் பகைவர்முன் ஏறு போல் பீடு நடை போட கணவனால் முடியாது போய் விடும்)

8.மங்கல நாண்கள் வந்து சேர்தல்

மங்கல நாண்கள் வந்த பின்பு அந்தத் தட்டை ஏந்தியபடி சொல்லும் மணிமொழிகள்:

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

நிலமிசை நீடுவாழ்வார்

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க

நெறிநின்றார் நீடுவாழ்வார்

அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து

இன்புற்றார் எய்துஞ் சிறப்பு

இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம் விருந்தோம்பி

வேளாண்மை செய்தற் பொருட்டு

9. மங்கலநாண்கள் அணிவித்தல்

இதில் திருமணத்தின் போது ஒரு சிறுமாற்றம் நடந்தது. மங்கலநாண் வந்து சேர்ந்ததும் மணமகள் மணமகளுக்கு ஒரு கூறைச் சேலையை கொடுத்து கட்டிவர அனுப்புவார். அது அவசியம் இல்லை என்று எனக்குப் பட்டதால், அதை நிகழ்ச்சி நிரலில் சேர்க்கவில்லை. ஆனால் என்னுடைய மனைவி தன்னால் ஒரு இடத்தில் தொடர்ந்து இருக்க முடியாது என்று சொல்லி விட்டார். கூறைச் சேலை சம்பந்தமான நிகழ்வு இருந்தால் நல்லது என்று அவர் விரும்பினார். கடைசியில் அவசரமாக ஒரு கூறைச் சேலை வாங்கி அதையும் நிகழ்ச்சியில் சேர்த்தேன்

தமிழ்நெறித் திருமணத்தில் இந்தச் சடங்கு கட்டாயம் இருக்க வேண்டும் என்று இல்லை. அவரவர் வசதிக்கு ஏற்றபடி செய்யலாம்.

என்னுடைய திருமணத்தில் தமிழ் மறை ஓதப்பட்டு மங்கலநாண், கூறைச் சேலை போன்றவையும் இடம்பெற்றதால் வந்திருந்த அனைவரும் ஒரு திருமணத்தில் கலந்து கொண்ட உணர்வைப் பெற்றார்கள். என்னுடைய முதலாவது நோக்கம் வெற்றி பெற்றது.

மணமகள் மணமகன் தந்த கூறைச் சேலையை அணிந்த மணவறைக்கு வந்த பின்பு மங்கலநாண்கள் அணிவிக்கப்பட்டன.

நான் அவருக்கு தாலியோடு கூடிய நாணினை அணிவித்தேன். அவர் எனக்கு தங்கச் சங்கிலி ஒன்றை அணிவித்தார்.

இந்த இரண்டு மங்கல நாண்களும் வந்தவர்களிடம் ஆசீர்வாதத்திற்கு அனுப்பப்பட்டு, சபையோரால் சமமான முறையில் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தன.

அதன்பிறகு மங்கல நாண்கள் பற்றிய பிரகடனத்தை நானும் என்னுடைய மனைவியும் இணைந்து படித்தோம்

இந்தப் பிரகடனம் என்னால் மனைவியின் சம்மதத்தோடு சேர்க்கப்பட்டது. பொதுவாக தமிழ் நெறித் திருமணத்தில் இவ்வாறான பிரகடனம் இடம் பெறுவதில்லை. தமிழ் நெறித் திருமணத்தில் தாலி இடம் பெறலாம். இடம் பெறாதும் போகலாம். அது அவரவர் விருப்பத்தை பொறுத்தது.

தாலி கட்ட வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டதால், என்னுடைய திருமணத்தில் தாலி பற்றிய ஒரு பிரகடனத்தை செய்வது என்ற முடிவை நான் எடுத்து என்னுடைய மனைவியின் சம்மதத்தையும் பெற்றேன்.

அந்தப் பிரகடனம் மங்கலநாண்கள் பற்றிய எமது தீர்மானத்தை சபையோர் முன்பு வெளிப்படுத்தியது

பிரகடனம்:

நாம் இருவரும் ஒருவருக்கு ஒருவர் அணிவித்திருக்கும் இந்த மங்கலநாண்கள் நாம் ஒருவர் மீது ஒருவர் கொண்ட அன்பினால் அணிவித்தவை ஆகும். இந்த இரண்டு மங்கல நாண்களும் சம அந்தஸ்து உள்ளவைகள். இந்த மங்கலநாண்களை அணிவிப்பதற்கு காரணமான எங்களுடைய அன்பு உன்னதம் நிறைந்தது ஆகும். இந்த மங்கலநாண்கள் உற்றாரினதோ உறவினரதோ சமூகத்தினரதோ செல்வாக்குக்கு உட்பட்டவை அல்ல என்றும் இவைகள் எமது பூரணமான தனியுரிமைகள் என்றும் நாம் பிரகடனம் செய்கிறோம்.

மங்கலநாண் எண்று எழுதி இருக்கிறீர்களே சபேசன் அந்த சமஸ்கிருத சொல்லுக்கு நல்ல தமிழ் சொல் "தாலி" என்பதாகும்

மங்களம், நாண் இரண்டுமே சமஸ்கிருதம்....

Edited by தயா

என்னுடைய அறிதலின் படி மங்கலம் என்பது தமிழ்ச் சொல். தமிழில் இருந்து வடமொழிக்கு சென்றதாக தமிழறிஞர்கள் சொல்கிறார்கள். "நாண்" என்ற சொல் பற்றி எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. "நாண்" என்பதும் தமிழ் சொல்லாக இருக்கும் என்றுதான் நினைக்கிறேன். எதற்கும் ஒரு முறை ஆராய்ந்து பார்த்துச் சொல்கிறேன்.

இப்பொழுது மீண்டும் என்னுடைய திருமணத்திற்கு வருகிறேன்

இந்தப் பிரகடனத்தை நாம் இருவரும் படித்து முடித்த பின்பு ஆச்சரியப்படும் வகையில் சபையோரிடம் இருந்து கைதட்டல் எழுந்தது.

எமது பிரகடனத்தின் மூலம் நாம் சிலவற்றை சொல்லியுள்ளோம்

இந்த மங்கல நாண்களை எந்த சமூக, மதவியல் காரணங்களிற்கு நாம் அணியவில்லை, அன்பினாலேயே அணிவிக்கின்றோம். இந்தத் தங்கச் சங்கிலியும் தாலியுள்ள நாணுக்கும் நாம் இருவரும் ஒரே மதிப்பையே கொடுக்கிறோம். மங்கலநாண்கள் உன்னதமானதோ, தெய்வீகமானதோ அல்ல, அவற்றை அணிவிப்பதற்கு காரணமான அன்பே அவ்வாறனது ஆகும். முக்கியமாக இந்த மங்கலநாண்கள் வேறு யாருடைய செல்வாக்குக்கும் உட்பட்டவை அல்ல. மங்கலநாண்கள் பற்றி தீர்மானத்தை சமூகம் எடுக்க முடியாது. அது எங்களுடைய தனி உரிமை. நாம் விருப்பமென்றால் அணிவோம், விருப்பமில்லையென்றால் விடுவோம். எங்களுடைய தாலி பற்றிய உரிமைக்குள் யாரும் எக்காலத்திலும் தலையிட முடியாது.

இதைத்தான் நாம் எமது பிரகடனத்தின் மூலம் சொன்னோம். தாலி என்பதை வைத்து சமூகம் செய்யும் அடாவடிகளால் நொந்து போயிருந்த வர்கள் இந்தப் பிரகடனத்தைக் கேட்டு கைதட்டியிருக்கலாம் என்று நினைக்கிறேன்.

சபேசன்...

உங்களின் இல்லற வாழ்வு இன்புற்றுச் செழிக்க எனது வாழ்த்துக்கள்.

மற்றும் உங்களின் முடிவில் எனக்கு உடன்பாடு இல்லை எனினும்

முயற்சிக்கு உளம்கனிந்த வாழ்த்துக்கள். "சுயமரியாதைத்" திருமணத்துக்கும்

"தனித் தமிழ்த்" திருமணத்துக்கும் (தமிழ்நெறித் திருமணம்) இடையில்

தள்ளாடிவிட்டீர்களோ என்று படுகிறது. இதுவரை காலமும்

நீங்கள் எப்படி வாழ்ந்தீர்களோ, அப்படியே வாழ்ந்திருக்கலாம் என்றும்

படுகிறது. சமூகத்துக்கு வழிகாட்டப் போகிறேன் என்று, உங்களின்

இயல்பை மாற்றிக்கொண்டது (?!) சரியாகப்படவில்லை.

இருந்தாலும் உங்கள் எண்ணங்களைப் புரிந்துகொள்ள முடிகிறது.

உங்கள் இலக்குகளை நீங்கள் அடைய வாழ்த்துக்கள்.

பிரகடனம் முடிந்தும் பக்தி இலக்கியத்தில் இருந்து ஒரு பாசுரம் படிக்கப்பட்டது

செங்கமலத் திறை சிந்தையின் ஆற்றி

அங்கையின் ஈந்திட ஆண்டகை கொண்டே

மங்கல நாணினை மணிக்களம் ஆர்ப்ப

நங்கையின் கழுத்தில் நறுந்தொடை சூழ்ந்தான்

மாது நல்லாளும் மணாளனும் இருந்திடப்

பாதி நல்லாளும் பகவனும் ஆனது

சோதி நல்லானைத் துணை பெய்யவல்லீரேல்

வேதனை தீர்தரும் வெள்ளடையாமே

உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்

10. மணமக்களை சபையோர் மலர்தூவி வாழ்த்துதல்

11. மணமக்களுக்கு அறமொழிகள் சொல்லி வாழ்த்துதல்

மணமகன் நோக்கி:

ஒருமை மகளிரே போலப் பெருமையும்

தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு

ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்வதே பெருமை. அவ்வாறு வாழ வாழ்த்துகிறோம்

திருமந்திரம்:

ஆத்த மனையாள் அகத்தில் இருக்கவே

காத்த மனையாளைக் காமுறுங் காளையர்

காய்ச்ச பலாவின் கனியுண்ண மாட்டாமல்

ஈச்சம் பழத்துக் கிடருற்ற வாறே.

திருத்தி வளர்த்ததோர் தேமாங் கனியை

அருத்தமென் றெண்ணி அறையிற் புதைத்துப்

பொருத்தமி லாத புளிமாங் கொம்பேறிக்

கருத்தறி யாதவர் காலற்ற வாறே.

பொருள்கொண்ட கண்டனும் போதத்தை யாளும்

இருள்கொண்ட மின்வெளி கொண்டுநின் றோரும்

மருள்கொண்ட மாதர் மயலுறு வார்கள்

மருள்கொண்ட சிந்தையை மாற்றகில் லாரே

மீண்டும் குறள்

உட்கப்படாஅர் ஒளிலழப்பர் எஞ்ஞான்றும்

கட்காதல் கொண்டொழுகுவார்

இல்லற வாழ்வை இழிவடையச் செய்வது குடிவகைகளாகும். எக்காலத்திலும் மனத்தையும் மானத்தையும் மாசுபடுத்தும் குடிவகைகளை தொடாது இல்லறவியலின் தன்மையோடு வாழ வாழ்த்துகிறோம்

வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்

தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று

தூண்டிலை விரும்பி விழுங்கிய மீன் உயிர் விடும். அது போன்று சூது விளையாட்டுக்களில் விருப்பம் கொள்ளலும் தீமை பயக்கும். ஆகவே தீய செய்கைகளுக்கு ஆட்படாமல் வாழ வாழ்த்துகிறோம்

ஈதல் இசைபட வாழ்தல் அது அல்லது

ஊதியம் இல்லை உயிர்க்கு

பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை. நீவிர் பழியஞ்சி பொருளை நேர்வழியில் திரட்டி உம்மின் குடும்ப கடமைகளை ஆற்றி வருவதோடு உம்மை நாடி வரும் வறிஞர்க்கும் பொருளைக் கொடுத்து உதவி புகழோடு வாழ்கவென்பது திருவள்ளுவரின் கூற்று. மணமகனார் இதனை மனதிற்கொண்டு மாண்போடு வாழ்கவென வாழ்த்துகிறோம்

மணமகள் நோக்கி:

பெறுமவற்றுள் யாமறிவதில்லை யறிவறிந்த

மக்கட் பேறல்ல பிற

அறிவிற் சிறந்த நல்ல பிள்ளைகளை பெறுவதை விட இல்வாழ்வில் சிறந்த பேறு வேறு இல்லை. அதன்படி பெருவாழ்வு வாழ்க

அகழ்வாரை தாங்கும் நிலம்போலத் தம்மை

இகழ்வாரை பொறுத்தல் தலை

மணமகளாரே! வாழ்வு என்பது மலர்படுக்கை அல்ல. பள்ளமும் மேடும் இன்பமும் துன்பமும் ஏற்றமும் தாழ்வும் நிறைந்ததே. ஆதலால் எதுவரினும் பொறுமை என்னும் சிறந்த குணத்தைப் பெற்று பெரிய இல்லக் கிழத்தியாய் பொலிவாயாக

சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்

நிறைகாக்கும் காப்பே தலை

நீ கற்பு நெறி வழுவாது நல்ல அறங்கள் பலவற்றை செய்து கொழுநன் விரும்பும் மனைக்கிழத்தியாய் வாழ்வாயாக

மோப்பக் குழையும் அனிச்சம் முகம் திரிந்து

நோக்கக் குழையும் விருந்து

மணமகளாரே! உன் கணவனை தேடி வரும் விருந்தினரை இன்முகம் காட்டி வரவேற்பதோடு அறவோர்க்கு அளித்தலும் துறவோர்க்கு ஈதலும் நின்னை மனைவியாப் பெற்றவனைப் பேணும் மங்கையாகக் கடவாயாக

12. பெற்றோர்களிடம் ஆசீர்வாதம் பெறல்

13. நற்பணி செய்தல்

Edited by சபேசன்

சபேசன்

சில விடயங்கள் சொல்வதற் எழிது. ஆனால் கைக்கொள்ளும் போதுதான் அதன் சிரமங்கள் தெரியும். உங்களைப் பொறுத்தவரை உங்கள் உபதேசங்கள் யாவும் வெறும் ஊருக்கு மட்டுமே உபதேசமாகவே உள்ளன. அதனை உங்களால்க் கூட கைக்கொள்ள முடியவில்லையென்பதை நீங்கள் ஒப்புக் கொள்ள மாட்டீர்கள். உதாரணமாக திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வதென்று முடிவெடுத்து பலவருடங்கள் சேர்ந்து வாழ்ந்த நீங்கள் ஊராரின் பழிச் சொல்லிற்குப் பயந்தே உங்கள் முடிவை மாற்றி இப்போது திருமணம் என்று ஒரு காட்சியை அரங்கேற்றியுள்ளீர்கள். இதில் கூட உங்கள் கொள்கைகள் தடம் புரண்ட உங்கள் செய்கைகளை நியாயப்படுத்தவே பாவித்துள்ளீர்கள்.

முதலில் தாலி பற்றி வருவோம். தாலியையே அடிமைச்சின்னம் என்று கருதிய நீங்கள் அதை ஏன் கட்ட முன் வந்தீர்கள். உங்கள் கூற்றுப்படி அப்படித் தாலி அணிவித்தால் தான் நடந்தது திருமணம் என்று சமூகம் ஏற்றுக் கொள்ளுமென்றால் அதற்கு பவுணில் தான் தாலி கட்ட வேண்டுமா?? இங்கே சமூதாயத்தின் மூடப் பழக்கவழக்கங்களை ஏற்கனவே சாடிய நீங்கள் தான் அதே சமூதாயத்தைச் சாட்டாக வைத்து உங்கள் செய்கைகளை நியாயப்படுத்தப் பார்க்கின்றீர்கள். ஆணிற்குப் பெண் சரிசமர் என்பதை ஏற்ற நீங்கள் இருவருக்கும் மங்களநாண் ஏற்றல் எனும்போது ஏன் மனைவிக்கு அணிவித்த அதே தாலிபோல் நீங்களும் ஏற்றிருக்கலாமே?? உங்களுக்கு மட்டும் ஏன் தங்கச்சங்கிலி?? அப்படியாயின் உங்கள் மனைவிக்கும் தாலிக்குப் பதில் ஒரு தங்கச்சங்கிலியை அணிவித்திருக்கலாமே??

மொத்தத்தில் உங்கள் கொள்கைகளையே உங்களால் கடைப்பிடிக்க முடியவில்லை. அதற்குச் சமுதாயத்தின் மேல்ப் பழி போடுவதால் உங்கள் செய்கைகள் நியாயமாகி விட முடியுமா?? முன்பு பெரியார்,அண்ணா,கலைஞர் போன்றவர்களால் நடாத்தப்பட்ட சீர்திருத்தத் திருமணங்களைக் கேவலப்படுத்துவது போலவேயிருக்கின்றது உங்கள் சீர்திருத்தத் திருமணம். பெரியார்,அண்ணா,கலைஞர் போன்றவர்கள் சீர்திருத்தத் திருமணங்களை நடாத்தி வைத்தபோது அவற்றை விளம்பரப்படுத்தியே செய்தார்கள். காரணம் அபப்டிப்பட்ட திருமணங்களில் மற்றையவர்களுக்கு நாட்டம் ஏற்பட வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகவே. ஆனால் இங்கு நீங்கள் உங்கள் திருமணம் பற்றிச் செய்யும் விளம்பரம் தி.ஆபிரகாம் குறிப்பிட்டது போல் வெறும் சுயவிளம்பரம் தான்.

Edited by Vasampu

நற்பணி செய்வது பற்றி ஒரு சிறு விளக்கம்

திருமணம் முடிந்ததும் முதற்காரியமாக ஒரு நற்பணி செய்ய வேண்டும் என்று சொல்லி பார்ப்பனர்கள் தானம் பெறுவது ஒரு வழக்கமாக இருக்கிறது.

இதுதான் தர்மம் என்று எம்மவருக்கு போதிக்கப்பட்டிருக்கிறது.

இதை மாற்றி நற்பணி என்பது எமது மக்களுக்கு செய்வதே நற்பணி என்று கருத்தோடு நாம் எம்மால் முடிந்ததை தாயகத்திற்கு வழங்கினோம்.

வாழ்த்துரை வழங்கியவர்கள் "இதை ஒரு முன்னுதாரணமாகக் கொண்டு, தமிழர்களின் ஒவ்வொரு நிகழ்விலும் தாயகத்தை எண்ணி நற்காரியம் செய்ய முன் வரவேண்டும்" என்று சபையோரைக் கேட்டுக் கொண்டார்கள்.

வாழ்த்துரைகளின் பின்பு விருந்து நடைபெற்று அதன் பிறகு புகைப்படங்கள் எடுத்து எமது திருமணம் இனிதே முடிந்தது.

நான் செய்த தமிழ் நெறித் திருமணத்தைப் பற்றி இங்கே எழுதியதன் காரணம், யாராவது தமிழ் நெறித் திருமணங்கள் செய்ய விரும்பினால், இதிலே உள்ள குறள்களும் பாடல்களும் பயன்படட்டும் என்பதற்காகத்தான்.

தமிழ்நெறித் திருமணத்திற்கு ஏற்ற நல்ல குறள்களும் பாடல்களும் உங்கள் யாருக்காவது தெரிந்தால் அவற்றையும் இங்கே இணையுங்கள்.

நான் பயன்படுத்தியதை மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் என்று இல்லை. அதை முறையில்தான் பயன்படுத்த வேண்டும் என்று இல்லை. தமிழ் நெறித் திருமணம் மேலும் மெருகூட்டப்பட்டால் அது நல்லதே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மங்கலநாண், கூறைச் சேலை போன்றவையும் இடம்பெற்றதால் வந்திருந்த அனைவரும் ஒரு திருமணத்தில் கலந்து கொண்ட உணர்வைப் பெற்றார்கள்.

இதே தான் என்னுடைய திருமணத்திலும் நடந்தது. ஐயர் வந்து சமஸ்கிருத மந்திரம் சொல்லி தாலி கட்டினால்தான் வந்தவர்களுக்குத் திருமணத்தில் கலந்து கொண்ட உணர்வினைப் பெறுவார்கள் என்ற படியால் அதே ஆரிய முறைப்படி மணம் செய்து கொள்ளவேண்டியதாய்ப்போனது. எல்லாம் வந்தவர்களை அதாவது திருமணத்திற்கு வந்தவர்களைப் பொறுத்தது.

சபேசன் - கர்ப்ப காலத்தில் தாலி கட்டக்கூடாது எனச்சொல்வதனால் அதை முறியடிக்க கட்டினேன் என்றால் நாளையே எல்லோரும் திருமணத்திற்கு தாலியே கட்டக்கூடாது கட்டினால் காரியம் பிழைக்கும் என்றால் அப்போ இல்லை தாலி கட்டினால் காரியம் பிழைக்காது என காட்ட தாலி கட்டுவீர்கள் போல படுகிறது.

அவர்கள் தாலி கட்டக்கூடாதென்பதற்காக சொல்லும் காரணம் - மூடநம்பிக்கை

நீங்கள் தாலி கட்டக்கூடாதென்பதற்காக சொல்லும் காரணம் - பகுத்தறிவு

அவர்கள் கட்டக்கூடாதென்றாலும் - அதற்கும் உங்கள் முடிவுக்கும் சம்பந்தமில்லை - நான் கட்டாது இருப்பது என் சிந்தனையறிவு - அதனால் கட்டாமல் இருப்பேன் எனச் சொல்ல முடியவில்லை என்பது சோகம்தான் -

வந்தவர்களுக்கு திருமணமென்ற உணர்வை ஏற்படுத்தச் செய்கிறேன் என்ற காரணம் எல்லோருக்கும் ஏற்புடையாகும்.

Edited by காவடி

தாலி என்பதை வைத்துச் செய்யப்படும் அனைத்து மூடநம்பிக்கைகளையும் நான் எதிர்க்கிறேன்.

என்னுடைய பார்வையில் அது ஒரு ஆபரணம். ஆகக் கூட அதை ஒரு அன்புச் சின்னமாக வழங்கலாம். அதற்கு மேல் வேறொரு அர்த்தமும் அதற்கு இல்லை.

தாலி கட்ட வேண்டும் என்று சமூகம் சொல்வதற்கு காரணம்தாலி பற்றிய அர்த்தமற்ற கற்பிதங்கள்.

குறிப்பிட்ட நேரங்களில் தாலி கட்டக் கூடாது என்று சொல்வதற்கு காரணமும் அதே கற்பிதங்களே.

நான் எதிர்ப்பது தாலியை வைத்து உருவாக்கப்பட்டுள்ள கற்பிதங்களை.

நான் என்னுடைய கொள்கையில் தெளிவாக இருக்கிறேன்.

கோயில் வேண்டாம் என்று சொல்கின்ற நான், கோயில் தமிழில் வழிபாடு செய்யுங்கள் என்று வலியுறுத்துவதும் உண்டு.

பகுத்தறிவு என்பது இப்படி இப்படித்தான் என்று வரையறுக்கப்பட்ட ஒன்றல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியெனில் பகுத்தறிவு என்பது தங்களுடைய தனிப்பட்ட நியாயங்களை முன்நிறுத்தி வெளிப்படுகின்றது என எடுத்துக் கொள்ளலாமா?

நான் தமிழ் நெறித் திருமணம் செய்து கொண்டது எனக்காக அல்ல. ஏறக்குறைய நான்கு வருடங்கள் நான் என்னுடைய மனைவியுடன் மனமொத்து வாழ்ந்து வருகிறேன். நாங்கள் இருவரும் வாழ்வதற்கு எமக்கு எந்தச் சடங்குகளும் தேவையில்லை.

எனக்கு கோயில் தேவையில்லை. ஆனால் கோயில் செல்லும் தமிழர்கள் தமிழில் வழிபாடு செய்ய வேண்டும் என்பது என்னுடைய கருத்து. அந்தக் கருத்தை வலியுறுத்தி என்னாலான பரப்புரை செய்து கொண்டு வருகிறேன். நாளை கோயிலில் தமிழில் வழிபாடு செய்வதற்கு தலைமையேற்க வேண்டும் என்றால் அதற்கும் நான் தயார்.

கோயில் வேண்டாம் என்பது என்னுடைய கொள்கை, ஆகவே நான் கோயில் காரியங்களில் ஈடுபட மாட்டேன் என்று நான் பின்வாங்க மாட்டேன். ஓதுவார் ஆறுமுகசாமி போன்ற போராடவும் நான் தயார்.

காரணம் என்னுடைய கொள்கைகள் குறித்து நான் தெளிவாகவே இருக்கிறேன். மற்றவர்கள் குழப்பம் அடைவதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது.

அதே போன்று ஒரு திருமணம் செய்தேன். என்னுடைய நோக்கம் என்ன?

தமிழர்கள் தமிழில் திருமணம் செய்ய வேண்டும். இதுதான் என்னுடைய முதலாவது நோக்கம். (தாலி மறுப்பு, கடவுள் மறுப்பு என்பவை அடுத்த கட்டங்கள்)

தமிழர்கள் தமிழ் நெறித் திருமணம் செய்ய முன் வராததன் காரணங்கள் என்ன?

தாலி மீதான அர்த்தமற்ற கற்பிதங்கள்

மத நம்பிக்கை

இப்பொழுது என்னுடைய திருமணத்தின் மூலம் தமிழர்களுக்கு சொல்கிறேன்.

தாலி மீது நம்பிக்கையுள்ளவர்களும், கடவுள் மீது நம்பிக்கையுள்ளவர்களும் கூட இந்தத் தமிழ் நெறித் திருமணத்தை செய்யலாம்.

நான் எனக்காக திருமணத்தை செய்யவில்லை. திருமணத்தை காண வருபவர்கள் இதை பின்பற்ற வேண்டும் என்ற நோக்கம்தான். வந்தவர்கள் கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள். தாலி மீது நம்பிக்கையுள்ளவர்கள்.

இவர்களுக்கு தாலி பற்றி புரிய வைத்து, கடவுள் பற்றி புரிய வைத்து, அதன் பிறகு தமிழ் நெறித் திருமணத்தை நடத்துவது என்பது உடனடியாக ஆகின்ற காரியமா?

ஆகவே நான் சில சமரசங்களை செய்து கொண்டேன். என்னுடைய முதன்மையான நோக்கம் நிறைவேற வேண்டும் என்பதே என் குறிக்கோள்.

எந்த நம்பிக்கையோடும், எந்தக் கொள்கையோடும் இருந்தாலும், தமிழர்கள் எனப்படுபவர்கள் இந்த தமிழ் நெறித் திருமணத்தை செய்ய முடியும். அதை வலியுறுத்துவதுதான் என்னுடைய நோக்கம்.

அதில் நான் வெற்றி பெற்றிருக்கிறேன். எனக்கு இது குறித்து முழுத் திருப்தி உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

வேண்டாம் சபேசன். இதைப் பற்றி நாங்கள் கதைத்தால் உங்களின் தனிப்பட்ட வாழ்வினைக் கொச்சைப்படுத்துவது போல அமைந்துவிடும். வந்தவர்கள் உறவினர்களும், உங்களின் சுற்றத்தினரும் என்பதால் அவர்கள் கொண்டிருந்த மத நம்பிக்கைகளுக்கு மதிப்பளித்து, அதைக் கொச்சைப்படுத்தக் கூடாது என்ற நோக்கத்தில் அவ்வாறு செய்தீர்கள். ஆனால் நீங்கள் அறிவுரை கூறுவதாக நினைத்துக் கொள்ளும் சந்தர்ப்பங்களில் நீங்கள் சொல்வது முகம் தெரியாத தமிழ் மக்களுக்கு. அதனால் எழுந்தமானத்துக்கு, மத நம்பிக்கைகளைக் கொச்சைப்படுத்தி எழுதிக் கொண்டிருந்தீர்கள்.

நீங்கள் இந்துவாக, அல்லது பிற மதக் கொள்கை கொண்டு திருமணம் செய்யுங்கள். அது தவறே அல்ல. ஆனால் காலம் காலமாக ஒரு குறித்த மக்கள் கொண்டிருக்கின்ற நம்பிக்கைகளை எழுந்தமானத்துக்கு அசிங்கப்படுத்தாதீர்கள் என்றே நான் சொல்வேன். நீங்கள் கொண்டிருப்பது சரியோ பிழையோ என்பது தனியான கதை. ஆனால் உங்களின் உறவினர் என்றவுடன் பக்குவமாகவும், மற்றவர்கள் என்றால் தூசித்தும் பேசுவதும் நியாயமாகப் படவே இல்லை

திருமணம் தொடர்பாக தாங்கள் முன்பு தெரிவித்த பல கருத்துக்களை இங்கே சொல்லுவேன். ஆனால் அதை உங்களின் திருமணத்தோடு இணைத்து அசிங்கப்படுத்த முடியவில்லை.

ஏதோ ஐரோப்பாவில் நீங்கள் தான் முதன்முதலில் இப்படித் திருமணத்தை நடாத்தியது போல் ஒருரு மாயையை உருவாக்க முயல்கின்றீர்கள். இங்கு சுவிசில் பல வருடங்களுக்கு முன்னரே எனக்குத் தெரிய இரண்டு திருமணங்கள் நடைபெற்றுவிட்டன. அதில் ஒரு திருமணத்தில் புனர்வாழ்வுக்கழகத்திற்கு நிதிப்பங்களிப்பும் மணமக்கள் செய்தனர்.

மேலும் கோயில் வேண்டாமென்பேன் ஆனால் கோவிலுக்குப் போவேன். தாலி வேண்டாமென்பேன் ஆனால் தாலி கட்டுவேன் என்ற உங்களின் வாதம் உங்களுக்கே நகைச்சுவையாகத் தெரியவில்லையா?? ஆக மொத்தத்்தில் வெறும் ஊருக்குத் தான் உபதேசம்் என்பதை ஒத்துக்கொள்கின்றீர்்கள். இந்த இலட்சணத்தில் மற்றவர்களுக்கு ஏனுங்க உபதேசம்???

முதலாவது உங்கள் திருமணத்திற்கு வாழ்த்துக்கள்.

சபேசன், நீங்கள் வாழ்க்கை முழுவதும் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்திருந்தால், உங்களைக் கொள்கையாளி என ஏற்றுக் கொண்டிருக்கலாம். ஆனால், மற்றவர்களைத் திருப்திப்படுத்த வேண்டும் என்ற சாக்கோடு திருமணத்தைச் செய்தது, நீங்கள் கொள்கைகளில் முரண்பட்டவர் என்பதையே எடுத்துக் காட்டுகிறது. பகுத்தறிவு என்பது ஒவ்வொருவரும் தானாக உணரவேண்டுமே தவிர, மற்றவர்கள் திணிப்பதன் மூலம் வருவதல்ல. அப்படித் திணிக்கப்படும்போது, அது பகுத்தறிவல்ல. எனக்குத் தெரிந்து எத்தனையோ பேர் தனித்தமிழ் திருமணங்கள் செய்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் யாரும் விளம்பரப்படுத்திச் செய்யவில்லை. முதலாவது, திருமணம் என்பது மணமகன், மணமகள் ஆகிய இருவரும் அந்நாளிலிருந்து ஒன்றாக வாழ்வார்கள் என்பதை, உற்றார், உறவினருக்குத் தெரிவிப்பதற்கும், அவர்களின் ஆசிர்வாதத்திற்காகவுமே நடத்தப்படுகிற ஒரு சடங்கு. நீங்கள் ஏற்கனவே ஒன்றாக வாழ்ந்ததினால், உங்களுக்கு அந்தச் சடங்கு தேவையில்லை. அடுத்தது, எல்லாக் காலத்திலும், எல்லா சமூகத்திலும் தாலி இருந்திருக்கிறது. அதன் வடிவம்தான் வேறுபடுகிறது. ஒவ்வொர காலகட்டத்திலும் ஒவ்வொரு அணிகலன் தாலியாக இருந்திருக்கிறது. அது, மெட்டி, சலங்கை, தண்டை, மோதிரம், தாலி என காலத்திற்குக் காலம் வேறுபட்டிருக்கிறது.

உங்கள் திருமணம் உங்களது தனிப்பட்ட விடயம். ஆனால், அதனை நீங்கள் விளம்பரப்படுத்தியதன் பின்னர், அது பொதுப்பிரச்சனையாகி விடுகிறது. நீங்கள் திருமணம் செய்ததன் மூலம் நீங்கள் தனித்தமிழ் திருமணத்தைப் பரப்பியதாக நினைக்கலாம். ஆனால் சமூகம், "பகுத்தறிவு என்று கதைத்துக் கொணடிருந்த சபேசனே பிறகு தாலிகட்டித்தானே திருமணம் செய்தவர்" என்று வேறுவிதமாகத் தான் எடுத்துக் கொள்ளும். இனிமேல், உங்கள் பகுத்தறிவிற்கு இருக்கும் வரவேற்பைப் பாருங்கள். உங்களுக்கே விளங்கும்.

கொள்கைகளை பேசுவதிலும், எழுதுவதிலும் எந்தச் சிரமமும் இல்லை. ஆனால் அவற்றோடு வாழ்வதுதான் கடினம். எல்லோருக்கும் கொள்கைகள் உண்டுதான். அது அவரவர் விருப்பம். மற்றவர்களின் கொள்கைகள் தவறென்று சொல்லும்போது, எம்முடையதும் தவறுதான்.

சுவிஸில் ஒரு திருமணம் நடந்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன். இரண்டு திருமணங்கள் நடந்ததாக அறிந்து மகிழ்ச்சி.

இப்படியான திருமணங்கள் வெளியில் தெரியவருவது இல்லை. இதனால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை. இப்படி திருமணங்கள் நடக்கின்றன என்ற செய்தி வெளியில் வரவேண்டும்.

எத்தனையோ பேருக்கு குறள் நெறித் திருமணம், பக்தி நெறித் திருமணம் போன்றவற்றில் ஓதப்படக் கூடிய பாடல்கள் பற்றி எதுவும் தெரியாது. நாம் அவைகளை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும்.

நாளை யாராவது தமிழ் நெறித் திருமணம் செய்ய விரும்பினால், தேவாரங்களை தேடியோ, குறள்களை தேடியோ எங்கும் அலையத் தேவையில்லை.

நான் யாழ் களத்தில் இணைந்தவற்றில் இருந்தே பெற்றுக் கொள்ளலாம். இங்கே யாழ் களத்தில் நான் இவைகளை எழுதுவதற்கு இதுதான் காரணம்.

வசம்பு!

என்னுடைய நிலைப்பாட்டில் எந்த நகைச்சுவையும் இருப்பதாக தெரியவில்லை. எமது பகுத்தறிவு பரப்புரையின் நோக்கம் என்ன என்பதில் எமக்கு தெளிவு உண்டு.

தாலியை தேவையில்லை என்று சொன்ன நான் சில மாதங்களுக்கு முன்பு ஒரு பெண்ணின் கழுத்தில் இருந்து தாலி கழற்றப்பட்டதை கண்டித்ததை இங்கே நினைவுபடுத்திப் பார்க்க வேண்டும்.

ஒரு இடத்தில் தாலி கட்டுவது மூடநம்பிக்கையாக இருக்கிறது. இன்னொரு இடத்தில்தாலியை கழற்றுவது மூடநம்பிக்கையாக இருக்கிறது. இன்னோர் இடத்தில் தாலியை கட்டாது விடுவது மூடநம்பிக்கையாக இருக்கிறது.

நாம் எந்த இடத்தில் நிற்கின்றோம் என்பதை வைத்துத்தான் எமது போராட்டத்தின் வடிவம் அமையும்.

தமிழச்சி,

என்னுடைய திருமணத்தை நான் யாரையும் திருப்திப்படுத்த செய்யவில்லை. எமது சமூகம் அறியாத ஒன்றை அறிமுகம் செய்து வைப்பதற்காக செய்தேன். இதை தயவுசெய்து சரியாக புரிந்து கொள்ளுங்கள்.

நான் அறிமுகம் செய்து வைக்கின்ற "தமிழ் நெறித் திருமணம்" அனைவராலும் பயன்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம். ஆகவே என்னுடைய கொள்கைகளுக்கு மட்டும் இடம் கொடுக்காது, கடவுள் நம்பிக்கையுள்ளவர்களும் செய்வது போன்று அதை அமைத்துக் கொண்டேன். என்னுடைய மனைவியின் கடவுள் நம்பிக்கையும் இதற்கு ஒரு காரணமாக அமைந்தது.

தமிழ் நெறித் திருமணத்தை என்னைப் போன்ற பகுத்தறிவாளர்கள் மட்டும் செய்தால் போதாது. அதை அனைத்து தமிழர்களும் செய்ய வேண்டும்.

ஜேர்மனியில் தமிழ் நெறித் திருமணம் செய்கின்ற நூறாவது ஆளாக நான் இருந்திருந்தால், அங்கே தாலியோ, பக்திப் பாசுரங்களோ இருந்திருக்காது. அதை விட நான் திருமணம் என்ற சடங்கையே செய்திருக்க மாட்டேன்.

என்ன செய்வது? தொடங்குபவர்களில் நான் ஒருவனாகப் போய் விட்டேன். திருமணத்திற்கு வந்தவர்களில் ஓரிருவரைத் தவிர வேறு யாருமே இதற்கு முன்பு தமிழ் நெறித் திருமணத்தை அறிந்தவர்கள் அல்ல.

அவர்களுக்கு தமிழ் நெறித் திருமணத்தில் "தாலி இல்லை, கடவுள் இல்லை" என்று கற்றுக் கொடுப்பது கெட்டிக்காரத்தனம் என்று நீங்கள் நம்புகிறீர்களா? அப்படியென்றால் அவர்கள் தமிழ் நெறித் திருமணத்தை பின்பற்ற முன்வருவார்கள் என்று நீங்கள் உண்மையாகவே நம்புகிறீர்களா?

சபேசன்

நான் எழுதியதை நீீங்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. தாலி தேவையில்லை என்றும் சொல்லும் நீீங்கள் இன்னொரு பெண்ணின் கழுத்திலிருந்த தாலியை வலுக்கட்டாயமாக பறித்த போது அதற்காக குரல் கொடுப்பது வேறு. ஆனால் நீங்களே தாலி தேவையில்்லை என்று பிரச்்சாரம் செய்து கொண்டு அதே தாலியை நீங்களே உங்கள் மனைவிக்கு கட்டுவது மற்றயவர்களை முட்டாளாக்குவது போல் நினைத்து உங்களை நீங்களே முட்டாளாக்குவது போன்றது.

அதுபோலவே கோவில்் தேவையில்லை என்று சொன்்ன நீங்கள் ஏனைய மதநம்பிக்கை உள்ளவர்களை தமிழில் வழிபாடு செய்யுங்கள் என்று சொல்வது வேறு. ஆனால் கோவில் தேவையில்லையென்று சொன்ன நீங்களே கோவிலுக்கு சென்று வழிபாடு செய்்தால் அதன் அர்த்தம்????

என்னுடைய போராட்டம் என்பது தாலிக்கு எதிரானது அல்ல. தாலியை வைத்து மக்கள் செய்கின்ற மூடநம்பிக்கைகளைத்தான் நான் எதிர்க்கிறேன்.

ஒரு ஆபரணமாகவோ, அன்பின் அடையாளமாகவோ தாலியை அணிவதில் எனக்கு எதிர்கருத்து இல்லை.

ஆகவே தமிழர்கள் தாலி கட்டி திருமணம் செய்தால் செய்யட்டும். அது பற்றி எனக்கு ஒரு கவலையும் இல்லை. நான் தாலி கட்டேனேன் என்று நினைவில் வைத்திருப்பவர்கள், நான் தமிழில் திருமணம் செய்ததை நினைவில் வைத்து, அவர்களும் தமிழில் செய்ய வேண்டும். அதுதான் இங்கே நோக்கம்.

கடவுளை வணங்குவது பற்றிக் கூட எனக்கு பெரும் ஆட்சேபணை ஒன்றும் இல்லை. வணங்கினால் வணங்கித் தொலையட்டும் என்பது என்னுடைய கருத்து.

ஆனால் கடவுள் பற்றி வளர்க்கப்படும் மூடநம்பிக்கைகளை நான் எதிர்க்கிறேன். தாலி பற்றி வளர்க்கப்படும் மூட நம்பிக்கைகளை நான் எதிர்க்கிறேன்.

சில மாதங்களுக்கு முன்பு ஒரு பார்ப்பனர் ஜேர்மனியில் உள்ள நகரம் ஒன்றி ல் கோயில் கட்டுவதற்கு என்னிடம் தொலைபேசியில் அழைத்து நிதி கேட்டார். (யாரோ வம்பர்கள் வேண்டுமென்றே என்னுடைய இலக்கத்தை கொடுத்திருக்கிறார்கள்)

நான் அவரிடம் சொன்னது இதுதான். "உங்களுடைய ஆலயத்தில் தமிழில் வழிபாடு செய்வீர்கள் என்றால் நான் என்னாலான உதவியை செய்கிறேன். அது மட்டுமல்ல, எனக்கு தெரிந்த அத்தனை ஊடகங்களிலும் உங்கள் கோயில் விளம்பரம் இலவசமாக வருவதற்கு வழி செய்கிறேன். என்னுடைய நகரத்தில் நான் மக்களிடம் போய் நிதி சேகரிக்கிறேன்"

இதை என்னுடைய முழு மனத்தோடு சொன்னேன். அவர் தமிழில் வழிபாடு செய்ய முடியாது என்று மறுத்துவிட்டார்.

இதை நீங்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். எம்மிடம் பல இலக்குகள் உண்டு. ஏதாவது ஒரு இலக்கை நாம் அடைவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும் என்றால், இன்னொரு இலக்கை சற்றுத் தள்ளி வைப்பதில் எந்தத் தவறும் இல்லை.

பகுத்து அறிய முடிபவர்கள் இதை புரிந்து கொள்வார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.