Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பணச்சுழற்சி பற்றி விளங்க மறுக்கும் புலம் பெயர் தமிழர் போக்கு !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பணச்சுழற்சி பற்றி விளங்க மறுக்கும் புலம் பெயர் தமிழர் போக்கு !

ஒரு கல்லை கிணற்றில் போட்டு வைத்தால் அது கிடப்பிலேயே கிடக்கும் அதனால் எந்த பயனும் இல்லை என்று கூறுவார்கள். பழைய காலங்களில் கன்னக்கோலிட்டு திருடும் திருடர்கள் திருடிய பெறுமதியான பொருட்களை மூட்டையாகக் கட்டி கிணற்றில் போட்டு வைப்பார்கள். பணத்தை சுழர்ச்சிக்குள் அனுமதிக்காது பதுக்கி வைப்பதும், திருட்டுப் பணத்தை பதுக்கி வைப்பதும் வேறு வேறு காரியங்களல்ல இரண்டும் ஒன்றுதான் என்பது இதனுடைய கருத்து.

பாடுபட்டு பணத்தை சேர்த்து புதைத்து வைத்து மடிவோரை கேடுகெட்ட மாந்தர் என்று அவ்வை கூறுவார். கொலை, களவு, திருட்டு போன்ற கேடுகெட்ட செயலை செய்பவர்கள் மட்டும் கேடுகெட்டவர்கள் அல்ல, பணத்தை பதுக்கி வைத்து அழகு பார்ப்பவர்களும் கேடுகெட்டவர்களே என்பது அவருடைய உறுதியான கருத்து.

ஈழத்தமிழரிடம் பணமிருந்தால் போதும் என்பதே நீண்ட காலமாக தேசிய கொள்கையாக இருந்து வந்துள்ளது. இதற்கு உதாரணமாக பல சம்பவங்களை வரிசைப்படுத்திக் காட்ட முடியும். பாடுபட்டு, உண்ணாமல் குடியாமல் பணத்தைச் சேர்த்து வைப்பார்கள். எதற்காக பிள்ளைகளுக்கு சீதனம் கொடுக்க. யாழ்ப்பாணத்து விவசாயிகளும், தொழிலாளிகளும் நெற்றி வியர்வை சிந்தி பாடுபட்டது இதற்குத்தான்.

பெண்களை பாடசாலைக்கு அனுப்பாமல் சிறு வயதிலேயே தடுத்துவிடுவார்கள். பதுக்கி வைத்திருக்கும் பணத்தால் சீதனம் கொடுத்து, படிக்காத பெண்ணை படித்த வாலிபருக்கு கட்டிக் கொடுக்கலாம் என்பது அவர்களுடைய சமுதாய எண்ணம். படிக்காத ஒரு பணக்கார முதலாளியின் மகளை பணத்திற்காக திருமணம் செய்ய படித்தவர்கள் நிறையப்பேர் இருந்தார்கள், இன்றும் வரிசையில் நிற்கிறார்கள். நமது சமுதாயம் பணத்தை பதுக்கி வைத்திருப்பதே வெற்றிக்கு வழியென கருதும் சமுதாயம் என்பதற்கு இது ஓர் உதாரணம்.

இலட்சங்களை பானைகளுக்குள் போட்டு புதைத்துவிட்டு இறுமாந்து நின்ற நமது சமுதாயம், இருக்கும் பணத்தை சுழர்ச்சியில் விடாமல் போதுதான் நமது சீரழிவிற்கு பிரதான காரணமாகும். ஆயிரம் ரூபா முட்டிக்குள் முடங்கிக் கிடந்தால் அதனுடைய பெறுமதி பூஜ்ஜியம். அதே ஆயிரம் ரூபா பத்துப்பேருக்கு ஊதியமாக கைமாறினால் சமூகத்தில் அதன் பெறுமானம் பத்தாயிரம் ரூபா. அதனால் சமுதாயத்தில் தொழில்கள் பெருகும், நாடு பணக்கார நாடாக மாறும்.

சமீபத்தில் ஐரோப்பாவில் பெரும் பொருளாதார மந்தமும், வேலையில்லா திண்டாட்டங்களும் ஏற்பட்டன. உடனடியாக ஐரோப்பிய வங்கிகள் பத்து ஆண்டுகளில் திருப்பி செலுத்த ஆரம்பிக்கலாம் என்று கூறி பணப்பெட்டிகளை திறந்துவிட்டன. வீடு வீடாக வங்கி அதிகாரிகள் தொடர்பு கொண்டு பணம் கடனாக வேண்டுமா என்று கேட்டுக் கேட்டு வழங்கினார்கள். வரித்திணைக்களத்தில் சுயமாக தொழிலை ஆரம்பிப்பதாக பதிவு செய்தால் மறுநாளே ஏராளம் நிதி நிறுவனங்கள் ஒரு மணி நேரத்தில் தருகிறோம் எவ்வளவு கடன் வேண்டும் என்று கேட்பார்கள், கேட்கிறார்கள். இப்படி ஐரோப்பாவில் உருவான பொருளாதார மந்தத்தை டென்மார்க் வங்கிகள் ஒரே வருடத்தில் வெற்றி கண்டன. இன்று வேலைக்கு ஆட்கள் இல்லை, வெளிநாடுகளில் இருந்து 70.000 பேரை வேலைக்காக இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதை விளங்கிக் கொள்ளாத இங்கிலாந்தில் உள்ள புலம் பெயர் ஈழத் தமிழர், இந்தியர்கள் என்று ஆசிய சமூகத்தினரில் பலர் வங்கிகளின் கடன்களை எடுத்துக் கொண்டு நாட்டை விட்டே ஓடிவிட்டார்கள். இதனால் தமிழருக்கும், ஆசியருக்கும் வங்கிக் கடன்களை தர மறுக்கிறார்கள். பணச்சுழற்சி பற்றிய அறிவின்மையே நமது மக்களில் பலர் இவ்விதம் செய்யக் காரணம் என்று அவர்கள் கருதுகிறார்கள்.

ஐரோப்பாவின் பொருளாதார மந்த நிலை நமக்கும் ஏற்பட்டிருந்தால் என்ன செய்திருப்போம் ? ஆகா நாடு வறுமையடைந்துவிட்டது, நாம் நமது பணத்தை பதுக்குவோம் என்று முடிவு செய்திருப்போம். ஒருவன் தொழிலில் நட்டமடைந்தால் உடனடியாக அவனுக்குக் கொடுத்த கடனை அறிவிட வரிசையில் நிற்போம். மேலும் பணத்தை கொடுத்து அவனை பொருளாதாரத்தில் உயர்வுகாண நாம் அனுமதிக்கமாட்டோம். பதுக்கல் ஒரு சமுதாயக் கொலை என்பதை இன்றுவரை நாம் அடையாளம் காணவில்லை. பணத்தை மட்டுமல்ல சமூகத்திற்கு பயன்படாது எதைப் பதுக்கினாலும் அது குற்றமே.

இவ்விதம் பதுக்குவது யாருடைய தவறு, நாம் நன்றாக யோசிக்க வேண்டும். இது தொடர்பாக பல பெண்களிடமும், பல ஆண்களிடமும் நீங்கள் கதைத்துப் பாருங்கள், ஆச்சரியப்படத்தக்க அனுபவங்களை பெறுவீர்கள். கணிதத்தில் வீராதி வீரர் என்று நம்மைப் புகழுவோம் ஆனால் கூட்டல், பெருக்கல், பிரித்தல், கழித்தல், வர்க்கமூலம், கனமூலம் போன்ற கணித அடையாளங்களும் அவை கையில் இருக்கும் பணத்தின் மீது ஏற்படுத்தும் பாதிப்புக்கள் பற்றியும் எமக்கு எதுவித ஞானமும் இல்லை என்பதை கசப்புடன் உணர்வீர்கள்.

இலங்கையில் வாழ்ந்த காலத்தில் கடன் வாங்கி, வட்டிப்பணம் கட்டாமல் வாழ்ந்த பலர் இங்கு வந்து கையில் பணம் வந்த பிறகும் அதே வட்டிக்கடனும், வாங்கிய பணத்தை திருப்பித் தரமாட்டேன் செய்வதை செய்துபார் என்ற டயலாக்கும் பேசுவது ஏன்? நடுக்கடலில் போனாலும் நாய்க்கு நக்குத்தண்ணி என்பதுதான் உண்மை. பணச்சுழர்ச்சி, பணத்தை கையாளும் கலை பற்றிய சமூக விழிப்புணர்ச்சி, பொருளாதார மேம்பாட்டு பயிற்சிக் கல்வி நமக்கு சமூக ரீதியாகக் கிடையாது என்பதற்கு இந்த நக்குத்தண்ணி வாழ்வு நல்லதோர் உதாரணமாகும்.

பணம் ஓர் இயந்திரம், அது இயங்கிக் கொண்டிருக்க வேண்டும், அதை நிறுத்தக் கூடாது என்பதற்காக அன்று தொடங்கிய அவ்வையின் போராட்டம் இன்றும் முடிவடையவில்லை. இன்று புலம் பெயர் நாடுகளில் உள்ள தமிழர்கள் செய்யும் காரியங்களை பட்டியலிடுங்கள், நாம் வெளிநாடு வந்தும் திருந்தவில்லை என்பதை உணர்வோம்.

இலங்கையில் இருந்த பாராளுமன்ற உறுப்பினர்களில் உருப்படியாக சிந்தத்தவர் பருத்தித்துறை எம்.பி காலம் சென்ற துரைரத்தினமாகும். சிறீலங்கா பாராளுமன்றத்தில் இருப்பவர்களுக்கு ஒரு நாசமும் விளங்காது என்பதால் தென்னங்கன்று ஒன்றுடன் பாராளுமன்று சென்றவரும் அவர்தான். வெங்காயம், தென்னை, தேக்குமர வளர்ப்பு என்று தொழில் வளர்ச்சி பற்றி சிந்தித்தவர். இஸ்ரேலிலில் இருந்து முந்திரிகைப்பழ செய்கையை எடுத்துவந்து யாழ்ப்பாணத்தில் அறிமுகம் செய்தவரும் அவர்தான்.

ஒரு நாள் அவர் வெளிநாடுகளுக்கு கப்பலில் செல்லும் இளைஞர்களுக்கான கருத்தரங்கொன்றில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது சொன்னார், தம்பிமாரே வெளிநாடு போனால் கோவணத்தை இறுக்கிக் கட்டுங்கோ, பொக்கற்றை இறுக்கிப் பூட்டுங்கோ என்றார். வெளிநாடு போய் தீய பழக்கங்களை பழகி, உழைத்த பணத்தை நாசமாக்காதீர்கள் என்பதுதான் இதனுடைய கருத்து.

அப்படியானால் அவரும் பணத்தைப் பதுக்கி வைக்கச் சொல்கிறாரா என்று கேட்காதீர்கள். அடுத்ததாக சொன்னார், வெளிநாட்டில் இருந்து வந்ததும் உழைத்த பணத்தில் நகைகளை வாங்கிக் கொட்டி, வீட்டைக் கடடிப்போட்டு மறுபடியும் வெளிநாடு போகாதீர்கள் என்றார். உழைத்த பணத்தை வீட்டிலும் நகையிலும் போட்டால் அது கிணற்றில் போட்ட முதலாகிவிடும். அவற்றை தொழில்களில் போட்டு சுழலவிடுங்கள் என்றார். அதற்கு அமைவாக அவர் வாழ்ந்தும் காட்டினார்.

அன்று அரசாங்கம் மானிய விலையில் வாகனங்களை கொடுக்க அதை வாங்கிய யாழ். மாவட்ட பா.உக்கள் அனைவரும் தாம் பிறந்த ஊருக்கு அந்த வாகனங்களில் படாடோபமாக பவனி வந்தார்கள். இவரோ அதே வாகனத்தை கையில் வாங்காமலே விற்றுவிட்டு, அப்பணத்தில் சவுக்குமர கன்றுகளை நாட்டி தமிழ் ஈழத்திற்கான காடுகளை விருத்தி செய்து, முந்திரிகைத் தோட்டங்களையும், வெங்காய தோட்டங்களையும் உருவாக்கினார்.

சுமார் இருபத்தைந்து வருடங்கள் வரை பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அவர் இறக்கும்போது சாரதா ஆசிரமத்தில் தனது மக்களைப் பிரியாமல் ஏறத்தாழ அகதியாகவே இறந்தார். தனது பாராளுமன்ற உறுப்பினர் வாழ்வில் சேகரித்த பணத்தை பதுக்கி வைக்காத வாழ்வு வாழ்ந்து, உழைத்த பணத்தை சுழலவிட்ட தெளிவு அவரிடம் இருந்தது.

இந்தக் கருத்துக்களை வைத்து, புலம் பெயர் நாடுகளை ஒரு தடவை ஒப்பிட்டுப் பாருங்கள். இன்று எல்லா நாடுகளிலும் வீதிக்கு வீதி இருப்பது நகைக்கடைகள்தான். இந்த நகைகளில் பணத்தை முதலிட்டால் செல்வம் பெருகும் என்று பலர் நினைக்கிறார்கள். இதனால் ஒவ்வொரு குடும்பத்தின் உழைப்பும் இருபத்தி இரண்டு கரட் தங்க நகைகளாக மாறி பெட்டிகளின் அடியில் குவிந்து கிடக்கிறது. தாலிக்கொடிகளின் எடை 120 பவுணை தாண்டிவிட்டது. பணம் தங்கமாகி கிணற்றில் போட்ட கல்லாக முடங்குப்பட்டுக் கிடக்கிறது.

எந்தப் பெண்ணை எடுத்துப் பாருங்கள், நீங்கள் வீடு வேண்டிவிட்டீர்களா என்று கேட்பதுதான் இன்று நாகரிகம். வீடு வாங்கினால் கடைசியில் ஒரு வீடாவது மிஞ்சும் என்று நினைக்கிறார்கள். கனடாவில் ஒரு தமிழரைப் பார்த்தேன். மாளிகைபோல வீட்டை வாங்கிவிட்டு, களிம்பேறிய தலையணை ஒன்றை தலைக்கு போட்டுக் கொண்டு, மீன் வாங்கும் வேனில் உடலை நாலாக மடக்கித் தூங்கிக் கொண்டிருந்தார். வீட்டில் படுக்க நேரமில்லாமல் கணவனும் மனைவியும் குப்பைகளில் கிடந்து வாழ்கிறார்கள். அவர்கள் இருவரும் உழைத்து உடலை அழித்த பின் படுக்க வேண்டிய இடம் மாளிகை வீடல்ல தர்ம ஆஸ்ப்பத்திரிக் கட்டில்தான்.

இது குறித்து வெற்றிபெற்ற ஒரு டேனிஸ்காரர் தனது வாழ்வியல் நூலில் எழுதியுள்ளார். உனது வீட்டை வாங்குவதானால் ஒரு தொழிற் கூடமாக வாங்கி அங்கேயே வாழ்ந்து கொள் என்றார். அதனுடைய கருத்து, மாளிகைகளை வாங்கி வைப்பது பெருமையல்ல, நமது பணம் தொழில்களாக சுழலுவதுதான் பெருமை என்றார்.

இல்லையில்லை வீடு என்பது பெறுமதி, அதன் பெறுமதி கூடுகிறது, அதை அதிகவிலைக்கு விற்று இலாபமடையலாம் என்கிறார்கள். அப்படியானால் டென்மார்க்கில் 60 வீதமானவர்கள் ஏன் வீடுகளை வேண்ட வசதியிருந்தும் வேண்டாமல் இருக்கிறார்கள் என்ற கேள்வியை நாம்மில் பலர் கேட்பதில்லை. இந்த பணம்பற்றிய அறிவின்மைக்கும் 30 வருடங்களாக ஈழத்தமிழருக்கு கிடைக்காத விடிவின்மைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.

ஈழத் தமிழர் பிரச்சனையை உலக மன்றில் சாதுரியமாக திருப்பி சர்வதேச வெற்றியை பெற்றுத்தரவல்ல அறிஞர் எத்தனையோபேர் இருக்கிறார்கள். அவர்களை நாம் பயன்படுத்துவதே இல்லை, நமக்கு வசதியாக புத்தி ஜீவிகள் என்று புறந்தள்ளுவோம். உங்கள் புத்தி, அறிவு, அனுபவம் எதுவும் எங்களுக்கு வேண்டாம் உங்கள் பணம் மட்டுமே வேண்டுமென பிடிவாதம் பிடிப்போம். பணமே யாவுமென எண்ணும் யாழ்ப்பாணத்து சீதன அறிவினால் வந்த அவலமே இதுவாகும். அவர்களும் பணம் மட்டுமே வேண்டுமென எண்ணும் சமூகத்தில் பிறந்த அவலத்தை எண்ணி ஒதுங்கிவிட்டார்கள்.

சரி பணமே யாவுமென எண்ணுகிறோம் என்றால் அதை சுழர்ச்சியில் ஈடுபடுத்த எமக்கு தெரியுமா என்றால் அதுதான் இல்லை. உங்கள் உறவினருக்கு எத்தனையோ இலட்சங்களை அனுப்பியதாகக் கூறுகிறீர்களே அவர்கள் ஏதாவது தொழில்களை உருவாக்கியிருக்கிறார்களா என்று எண்ணிப்பாருங்கள். பத்துத் தமிழர்கள் ஒன்று சேர்ந்து பல மில்லியன்களுக்கு வாங்கிய வீடுகளை வாங்காமல் ஒரு தொழிலை உருவாக்கியிருந்தால் என்ன நடந்திருக்கும் என்றும் எண்ணிப்பாருங்கள். உடலை முறித்து பணத்தை உருவாக்குவது கட்டை மாட்டு வண்டில் பயணம். பணத்தால் பணத்தை உருவாக்குவது விமானப் பயணம். புலம் பெயர் தமிழர்கள் இது குறித்து இனியாவது ஆழமாக சிந்திக்க வேண்டும். இது மிகவும் ஆழமான விடயம்.

http://www.alaikal.com/news/?p=1495#more-1495

  • கருத்துக்கள உறவுகள்

எந்தப் பெண்ணை எடுத்துப் பாருங்கள், நீங்கள் வீடு வேண்டிவிட்டீர்களா என்று கேட்பதுதான் இன்று நாகரிகம். வீடு வாங்கினால் கடைசியில் ஒரு வீடாவது மிஞ்சும் என்று நினைக்கிறார்கள். கனடாவில் ஒரு தமிழரைப் பார்த்தேன். மாளிகைபோல வீட்டை வாங்கிவிட்டு, களிம்பேறிய தலையணை ஒன்றை தலைக்கு போட்டுக் கொண்டு, மீன் வாங்கும் வேனில் உடலை நாலாக மடக்கித் தூங்கிக் கொண்டிருந்தார். வீட்டில் படுக்க நேரமில்லாமல் கணவனும் மனைவியும் குப்பைகளில் கிடந்து வாழ்கிறார்கள். அவர்கள் இருவரும் உழைத்து உடலை அழித்த பின் படுக்க வேண்டிய இடம் மாளிகை வீடல்ல தர்ம ஆஸ்ப்பத்திரிக் கட்டில்தான்

அருமையான வரிகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.