Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நூற்றாண்டுகால தனிமையும் தொடரும் துரோகமும்.....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நூற்றாண்டுகால தனிமையும் தொடரும் துரோகமும்.....

- தமிழ்நாட்டிலிருந்து பொன்னிலா -

இன்றைய அறிக்கை நாளைய ஆவணம்.

தமிழகத்தின் தமிழினத் தலைவர்களின் அறிக்கைகள் கூட எதிர்கால இளம் தலைமுறையினருக்கு கடந்த காலத்தின் சாட்சியமாய் இருக்கும். துரோகமும் பெருந்துரோகமுமாய் கொந்தளிப்பாய் நம்மை இதுவரை கடத்தி வந்த தலைவர்களின் வாக்குமூலங்களாய் அவைகள் பல்லிளிக்கக்கூடும்.

முன்னெப்போதையும் விட கடந்த பத்து நாட்களில் தமிழக அரசியல் அறிக்கைகளால் ஆனதாய் மாறியிருக்கிறது.

வாழும் காலத்தில் காந்திகளாகவும் மடிந்த பிறகு ஹிட்லர்களாகவும் வாழ்க்கை தலைவர்களை புரட்டிப் போட்டிருக்கிறது.

ஆனால் இவர்கள் மகாத்மாக்களா? ஹிட்லர்களா என கணிப்பதே சிரமமாக இருக்கிறது.

இந்த அம்மணமான அவமான அரசியலுக்கு அவர்கள் வைத்துக்கொண்ட பெயர் 'அரசியல் இராஜதந்திரம்". நாமோ அதை '‘தொடரும் துரோகம்" என்கிறோம்.

'கொடுங்கையூரில் ராஜீவ் காந்தி சிலை உடைக்கப்பட்டதன் மூலம் தமிழகத்தில் புலிகளின் நடமாட்டம் இருப்பது உறுதியாகி இருக்கிறது" இப்படி ஒரு அறிக்கையை அண்மையில் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு விட்டிருந்தார். படித்தவுடன் கண்ணைக் கட்டியது இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த மக்கள் தலைவர் ஒருவரின் சிலையை அல்லவா? உடைத்திருக்கிறார்கள் ஆனாலும் புலிகள் இப்படி கொடுங்கையூருக்கு வந்து ராஜீவ் காந்தி சிலையை உடைத்திருக்கக் கூடாது என்பதே என் கருத்து.

அதுவும் கிளிநொச்சி சிங்கள இராணுவத்தின் முற்றுகையில் இருக்கும் போது தமிழ் மக்களை பாதுகாப்பதை கைவிட்டு கொடுங்கையூருக்கு தங்களின் பிரதான தளபதிகளை சிலை உடைக்க அனுப்பி வைத்ததை மானமுள்ள, தேசபக்தி உள்ள, பாரத மாதாவின் உண்மை புத்திரர்கள் யாரும் கண்டிக்காமல் இருக்க முடியாது. ஆகவே புலிகளை நானும் கண்டிக்கிறேன் ராஜீவ் காந்தியின் சிலையை உடைத்ததற்காக, இன்னும் எதைக் கண்டிக்க வேண்டும். எதைப் பாராட்ட வேண்டும்.

'ஈழத் தமிழர் படுகொலைக்கு இந்தியாவே மௌன சாட்சி என்றும் இந்தியா கொடுக்கிற ஆயுதங்களில் தான் ஈழ மக்கள் கொல்லப்படுகிறார்கள்" என்றும் சொன்ன ஜெயலலிதாவை பாராட்டுவதா? அல்லது மறுநாளே. 'இலங்கைப் போரை நிறுத்தச் சொல்லும் அதிகாரம் இந்தியாவுக்குக் கிடையாது. புலிகள் பயங்கரவாதிகள் அவர்கள் என்னை கொல்லத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்" என்று சொன்ன ஜெயலலிதாவை கண்டிப்பதா?

இரண்டு நாள் கழித்து. டில்லியில் பத்திரிகையாளர்களிடம் பேசிய பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் இராமதாஸ். 'விடுதலைப் புலிகள் இயக்கம் தீவிரவாத இயக்கம் அல்ல. தமிழர்களின் விடுதலைக்காக போராடும் இயக்கம்." என்று சொன்னதை பாராட்டுவதா? இல்லை மறுநாளே பாட்டாளி மக்கள் கட்சியின் ஜி.கே.மணி 'புலிகள் பற்றி மருத்துவர் இராமதாஸ் சொன்னது வருத்தத்திற்குரியதுதான். புலிகளை நாங்கள் பார்த்தது கூட கிடையாது. (நல்ல வேளை ஈழம் என்பது எங்கிருக்கிறது என்பது கூடத் தெரியாது என்று சொல்லாமல் விட்டாரே) மருத்துவர் அப்படி (போராளிகள் என்று) சொல்லியிருக்கக்கூடாது" என்று சொன்ன மணியைக் கண்டிப்பதா?

அடுத்து அதிரடியாக காட்சிக்கு வந்தார் கருணாநிதி,

'இதோ, இன்று வெளிவந்துள்ள 'ஹிந்துஸ்தான் ரைம்ஸ்" ஆங்கிலப் பத்திரிகையில் ஜெயலலிதா நம்முடைய அனைத்துக் கட்சி தீர்மானத்திற்கு பதிலாக வெளியிட்ட மறுப்பறிக்கையை பாராட்டி, சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் மூத்த ஆலோசகர் பசில் ராஜபக்ச என்பவர் கொடுத்த பேட்டி வெளிவந்துள்ளது. அதில் அவர் என்ன கூறியிருக்கிறார் தெரியுமா?.

'நிலைமையை நாங்கள் கவனித்து வருகிறோம். இந்திய அரசு ஏதாவது அறிக்கை வெளியிடுகிறதா என்பதை நாங்கள் பார்ப்போம். அது மாத்திரமல்ல, கருணாநிதிக்கு எதிராக ஜெயலலிதா பேசியிருப்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்". 'இந்த அளவிற்கு சிங்கள அரசுக்கு ஆதரவாக ஜெயலலிதா இருப்பதை அவர்களே ஒத்துக்கொண்டு சொல்லியிருப்பதைப் படிக்கும்போது, தமிழா, இப்போதாவது புரிகிறதா?. உண்மையில் காட்டிக்கொடுக்கின்ற கபட நாடகம் ஆடுவது யார் என்று?" என்று கருணாநிதி சொன்னதை உணர்ச்சிவசப்பட்டு பாராட்டுவதா...

இல்லை இப்போது போர் நிறுத்தக் கோரிக்கையை தூக்கி ஓரமாக வைத்து விட்டு 'நாற்பதாண்டு காலப் போரை நான்கு நாளில் முடிவுக்கு கொண்டு வர முடியாது." என்கிற பிரணாப் முகர்ஜியின் கருத்தையே வழிமொழிந்து 'இந்த விடயத்தில் மத்திய அரசுக்கு திமுக எவ்வித நெருக்கடிகளையும் கொடுக்காது" என்கிற கருணாநிதியைக் கண்டிப்பதா?

நம்மை வழிநடத்திச் செல்கிற செல்லப் போகிற ஜயாக்களையும், அம்மாக்களையும், புரட்சிப் போராளிகளையும், சரியாக கணித்த ஒருவர் இருக்கிறார் அவரை பாராட்டியே ஆக வேண்டும். போர் வெறி பிடித்த பாசிச சிறிலங்கா அரசின் ஊடகத்துறை அமைச்சராக இருக்கும் லகஸ்மன் யாப்பாதான் அவர்.

தமிழகத்தில் எழுந்த ஈழத் தமிழர் ஆதரவுக் கொந்தளிப்புகள் தொடர்பாக ஊடகத்துறையினரிடம் பேசிய அவர். 'இந்தியாவில் தேர்தலொன்று நடைபெறவுள்ள நிலையில், தமிழ்நாட்டில் எழுந்திருக்கும் இந்த சூடான நிலைமை, தேர்தல் முடிவடைந்த பின்னர் தணிந்து விடும். இதை கண்டு கொள்ளத் தேவையில்லை" என்றிருக்கிறார்.

நமது தமிழினத் தலைவர்களை நம்மை விட நமது எதிரி எவ்வளவு துல்லியமாக கணித்திருக்கிறார். அந்த பாசிச அரசின் பிரதிநிதியை பாராட்டாமல் என்ன செய்ய? அவர் தேர்தல் முடிந்த பிறகு தணிந்து விடும் என்றார். மத்தியில் தேர்தல் வர இன்னும் ஆறு மாதங்கள் இருக்கிறது. அதற்குள்ளாகவே முடிந்து போய் விட்டதே.

இரண்டு வார காலத்திற்குள் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட இந்தியா வழியேற்படுத்தா விட்டால் தமிழகத்தின் நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களின் பதவி விலகல் கடிதங்களை மத்திய அரசுக்கு அனுப்புவார்கள் என்ற முடிவு அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து எடுத்த முடிவு.

திமுகவின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடிதமும் கருணாநிதியின் கைக்குப் போனது. முடிவுகள் முடிவுகளாக இருந்தது. பாட்டாளி மக்கள் கட்சியோ தங்கள் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவி விலகல் குறித்து கருத்துச் சொன்ன போது. 'பதவி விலகல் தங்களை தி.மு.க. தலைவர் அனுப்பினால் நாங்களும் அதனை பின்பற்றுவோம்" என்றார் இராமதாஸ்.

திமுக தன் பதவி விலகல் கடிதங்களை மத்திய அரசுக்கு அனுப்பாவிட்டாலும் பாட்டாளி மக்கள் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் பதவி விலகல் கடிதங்களை மக்களவைத் தலைவருக்கு அனுப்புவார்கள் என்று சொல்ல பாட்டாளி மக்கள் கட்சிக்கு கசக்கிறது.

ஓட்டுச்சீட்டு அரசியலையும் நாடாளுமன்ற பதவிகளையுமே பிரதானமாக நினைக்கும் இவர்கள் அரசியலற்ற அரசியல் நடத்துகிறார்கள். மக்களையும் அரசியலற்ற அரசியலுக்கு தூண்டுகிறார்கள். உண்மையில் இந்த கொந்தளிப்பை நீங்கள் உருவாக்கவில்லை. அது தமிழக மக்களிடம் தன்னெழுச்சியாய் உருவான ஒன்று அதை நீங்கள் அறுவடை செய்யலாம் என தமிழினத் தலைவர்கள் முயன்றார்கள். காங்கிரஸ் கட்சி ஈழ மக்களுக்கு ஆதரவான போர் நிறுத்தக் கோரிக்கையை விடுதலைப் புலிகளின் பிரச்சனையாக மாற்றியது திமுக தன் ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள வன்னிப் போர்முனையில் சிக்கியுள்ள பல லட்சம் மக்களின் வாழ்க்கையை பலிகடாவாக்கி இருக்கிறது.

நாடகங்கள் வெகு வேகமாக அரங்கேறின.

இந்தியத் தரப்பில் இருந்து போரை நிறுத்தக் கோரி எவ்விதமான கோரிக்கைகளும் சிறிலங்கா அரசுக்கு விடப்படவில்லை. இலங்கை இனப்பிரச்சனைக்கு இராணுவத் தீர்வின் மூலம் முடிவு காண முடியாது என்கிற மட்டில் கருத்துச் சொன்னார்கள்.

அவைகள் முடிவுகள் அல்ல கருத்துகள்.

அதே சமயம் சிறிலங்கா அரசுக்கு ஆயுதங்கள் வழங்குவதாக எடுக்கப்பட்டது கருத்தல்ல முடிவு. அந்த முடிவுகளை இந்திய அரசாங்கம் செயல்படுத்தியது. சிறிலங்கா கடற்படையோடு சேர்ந்து கூட்டு ரோந்து என்பதும் கருத்தல்ல முடிவு.

சிறிலங்கா இராணுவத்தினருக்கு இந்தியாவில் பயிற்சியளிப்பதாக எடுக்கப்பட்டதும் கருத்தல்ல முடிவு.

இந்நிலையில் தான் தமிழகத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஒன்று சேர்ந்து இலங்கையில் போர் நிறுத்தம் என்ற கோரிக்கையை தமிழகத்தின் முடிவாக எடுத்து அதை மத்திய அரசுக்கு கோரிக்கையாக அனுப்பி வைத்தார்கள், இரண்டு வார காலத்திற்குள் இந்தியா தலையிட்டு போர் நிறுத்தம் அறிவிக்காவிட்டால் நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகுவார்கள் என்பதுதான் அந்த முடிவு.

ஆமாம், தமிழகத்தின் முடிவு. மத்திய அரசுக்கோ அது ஒரு கோரிக்கை அவ்வளவுதான்.

கடந்த ஐம்பதாண்டு கால ஈழத் தமிழரின் துரோக வரலாற்றில் இதுவரை தமிழகம் கை நனைக்காமலேயே இருந்து வந்தது. அதை மட்டும் விடுவானேன் அதையும் செய்து விடுவோம் என்று நினைத்தார்களோ என்னவோ. ஒரு இன அழிப்பின் மீதான இந்தியத் தீர்ப்புக்கு இவர்கள் குறிப்பாக அதிமுகவும், திமுகவும், பாட்டாளி மக்கள் கட்சியும் குறிப்பெழுதிக் கொடுத்து விட்டார்கள். அதனால்தான் கருணாநிதி இலங்கை தொடர்பாக இந்தியா எடுக்கும் முயற்சிகளுக்கு நன்றி தெரிவிக்கிறார்.

அதாவது போர் தீர்வல்ல என்று கருத்துச் சொல்கிறவர்களை பாராட்டுகிறார்.

சூழலை ஆனது ஆனபடி ஒப்பேற்றிய படி இனவெறியன் பசில் ராஜபக்சவோடு விருந்து உண்ட கையோடு வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி சென்னைக்கு வந்து கருணாநிதியைச் சந்தித்தார்.

'இந்தியா 800 தொன் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை இலங்கைக்கு அனுப்பும் என்றும். இதை முறைப்படி சிறிலங்கா அரசே தமிழ் மக்களுக்கு வழங்கும் என்றும், நாற்பதாண்டு காலமாக நடக்கிற போரை நான்கு நாட்களில் முடிவுக்கு கொண்டு வர முடியாது என்றும். நோர்வேயின் தலைமையில் அமைதி முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், கிழக்கு மக்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவதன் மூலம் அங்குள்ள மக்களின் நம்பிக்கையை பெற முடியும்" என்றும் கலந்து கட்டி சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் கருத்துக்களை சென்னையில் திமுகவின் ஆதரவோடு கொட்டிக்கொண்டிருந்தார் பிரணாப் முகர்ஜி.

இதில் வேடிக்கையான தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்ததான ஒன்றும் இருந்தது. இனி சிறிலங்கா அரசு கடல் எல்லையை அளந்து இந்தியாவிடம் சொல்லுமாம் அதன் படி அங்கீகரிக்கப்பட்ட படகுகளில் எல்லை தாண்டிச் செல்லும் மீனவர்களை பத்திரமாக சிறிலங்கா திருப்பி அனுப்புமாம்.

அப்படி சிறிலங்கா அரசு சொன்ன போது 2005 இல் சிறிலங்கா அரசோடு போடப்பட்ட ஒப்பந்தத்தை நிறைவேற்றும் படி இந்தியா கேட்டுக்கொண்டதாம்.

2005 இல் போடப்பட்ட சிறிலங்கா-இந்திய ராணுவ ஒப்பந்தம் என்பது தமிழக மீனவர்களின் வாழ்வுரிமையை ஒட்டுமொத்தமாக சிறிலங்கா அரசிடம் அடகு வைக்கிற ஒப்பந்தம்.

தவிரவும் சிறிலங்கா கடற்படையும் இந்திய கடற்படையும் சேர்ந்து நிகழ்த்தும் கூட்டு ரோந்து என்கிற முடிவு இருக்கிறதல்லவா? அந்த முடிவும் இந்த இராணுவ ஒப்பந்தத்தின் கீழ்தான் வருகிறது.

இதில் தமிழகம் வைத்த போர் நிறுத்தக் கோரிக்கை எங்காவது வந்ததா? அதற்குப் பதில் மத்திய அரசு என்ன செய்திருக்கிறது என்று பார்த்தால், இதுவரை தமிழகத்தில் எழுந்த அரசியல் எதிர்ப்பு காரணமாக தற்காலிகமாக ஒத்திவைத்திருந்த கூட்டு ரோந்து, இராணுவ ஒப்பந்தம் போன்ற விடயங்களை மிகவும் தந்திரமாக மாநில முதல்வரிடம் ஒப்புதல் வாங்கிச் சென்றிருக்கிறது மத்திய அரசு.

இதில் வெற்றி தோல்வி யாருக்கு என்று பார்த்தால் தோல்வி தமிழக மக்களுக்கும் ஈழ மக்களுக்கும்தான்.

இம்முறையும் வெற்றி சிங்களர்களுக்குத்தான்.

எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவதாக கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் பசில் ராஜபக்ச எரிகிற தீயில் தண்ணீரை ஊற்றி அணைத்து விட்டு வெற்றியோடு கொழும்புக்கு சென்றிருக்கிறார். இவர்களோடு கூட்டுச்சேர்ந்த தமிழக தலைவர்கள் டில்லி காங்கிரஸ்காரர்களோடு சேர்ந்து தமிழகத்துக்கு பட்டை நாமம் போட்டு விட்டுப் போய் விட்டார்.

சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவரும் பாசிச தலைவருமான ஜெயவர்த்தன விரித்த வலையில் எப்படி ராஜீவ் காந்தி சிக்கிக் கொண்டாரோ அப்படி அண்ணனும் தம்பியுமான மகிந்த ராஜபக்சவும், பசில் ராஜபக்சவும் விரித்த வலையில் மன்மோகன் சிங் வகையாக சிக்கிக் கொண்டிருக்கிறார்.

இப்போது தமிழினத் தலைவர் கருணாநிதி என்ன சொல்கிறார் என்றால்,

'கிட்டத்தட்ட அவர் (பிரணாப் முகர்ஜி) சொல்கிற மாதிரி 40 ஆண்டுகளாக நீடிக்கிற போர் நான்கு நாட்களில் முடியாது. நாம் போர் நிறுத்தம் வேண்டும் எனச் சொன்னது பொதுமக்களை இன்னல்களில் இருந்து காப்பற்றத்தான். இப்பொழுது சிறிலங்கா அரசு நாங்கள் பொதுமக்களை நிச்சயம் தாக்க மாட்டோம் என்ற உறுதிமொழியை அளித்திருக்கிறது" என்கிறார் கருணாநிதி.

நண்பர்களே,

இந்திய அரசின் அக்கிரமமான இந்த முடிவை கருணாநிதி ஆதரிக்கிற போது ~நாம்| என்ற சொல்லை பயன்படுத்துகிறார்.

அதாவது, அனைத்துக் கட்சித் தலைவர்களும் போர் நிறுத்தம் என்று சொன்னது மக்களை இன்னல்களில் இருந்து காக்கத்தான் என்பதை தந்திரமாக சுருக்கிக் கதைக்கிறார்.

ஈழ மக்களை சோற்றால் அடித்தால் விழும் பிண்டங்கள் என நினைக்கிறார். அதனால்தான் போர் முனையில் வன்னிக்காடுகளில் பாம்புக்கும் தேளுக்கும் மத்தியில் குண்டு மழைக்கு செத்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு தயிர்ச்சாதமும் புளிச்சாதமும் போடக் கேட்கிறார்.

இவர்களின் இந்த கூட்டுச்சதியை கூட்டு நாடகத்தை மருத்துவர் இராமதாஸ் மத்திய அரசு இறங்கி வந்து விட்டது போல புகழ்கிறார். அவர்கள் தமிழ் மக்களுக்கு வீசி வைத்திருக்கும் வலையை புரிந்து கொண்டே இவர்கள் இந்த நூற்றாண்டு கால துரோகத்தைச் செய்கிறார்கள்.

சரி, சிறிலங்கா அரசு ஒப்புக் கொண்டபடி வன்னிப் பகுதிக்கு உணவுப் பொருட்களை அனுப்புமா? என்றால் அனுப்பும் உணவோடு கூடவே இராணுவத்தினருக்கு தேவையான தளவாடங்களையும் சேர்த்தே அனுப்பும்.

தற்காப்புத் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கும் புலிகளோ ஆயுதம் வரும் போது அதை தாக்கக் கூடும். உடனே 'இதோ பாருங்கள் இந்தியா கொடுத்த உணவுப் பொருட்களை நாங்கள் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கினோம் ஆனால் புலிகள் அதை தாக்கியளித்து விட்டார்கள்" என்று சிறிலங்கா பிரச்சாரம் செய்யும்.

தமிழகத்தில் எப்போதெல்லாம் கொந்தளிப்புகள் எழுந்து வந்தனவோ அப்போதெல்லாம் அதை தங்களுக்கு சாதகமாக மாற்றுவதுதான் போர் வெறி பிடித்த சிறிலங்கா அரசின் போர்த்தந்திரம்.

அப்படி மக்களின் எழுச்சியை போருக்கு பலியாக்குகிற அளவுக்கு நமது தமிழக தலைவர்கள் இருந்தார்கள் இன்றும் இருக்கிறார்கள். அதிவேகத்தில் தமிழகத்தில் எழுந்த ஈழ ஆதரவு அலை ஓய்ந்து விட்டதா? என்றால் இல்லை.

அது எளிய மக்களிடம் பெரும் கொந்தளிப்பாக இருக்கிறது.

காங்கிரஸ் கட்சிதான் இந்த எழுச்சியை புலிகள் பிரச்சனையாக மாற்றுகிறது. எழுகின்ற ஆதரவு அலையை விட அதிக சத்தம் கேட்கும் படியாக இந்த ஆதரவோடு விடுதலைப் புலிகளை முடிச்சுப் போட்டு பேசுகிறவர்களின் வாயை அடைக்கிறது.

தேர்தல் நெருங்கி வரும் போது கூட்டணியைக் கணக்கிட்டே இந்த துரோகங்கள் அரங்கேறுகின்றன. திமுகவை தவிர்த்து விட்டு காங்கிரஸ் தலைமையில் அணிசேர வேண்டும் என நினைக்கிறது பாட்டாளி மக்கள் கட்சி.

அடுத்தவன் முதுகில் ஏறியே இதுவரை சவாரி செய்த காங்கிரசோ விஜயகாந்தோடும் இரகசிய பேரத்தை நடத்தி முடித்திருக்கிறது.

ஒருவேளை இன்னும் மீதியிருக்கிற ஆறு மாத காலத்தை முழுவதுமாக காங்கிரஸ் அரசு பூர்த்தி செய்து பின்னர் வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும் என்றால். தமிழகத்தில் திமுக காங்கிரஸ் கூட்டணி தொடரும் பட்சத்தில். அதிமுக பிஜேபியோடு கூட்டணி சேரும் பட்சத்தில் கம்யூனிஸ்டுகள் தனித்தோ விஜயகாந்துடனோ சேர்ந்து தேர்தலைச் சந்திக்கும் பட்சத்தில் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் கருணாநிதி நினைக்கிற மாதிரி இருக்காது.

அது போல மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிய அமைய வாய்ப்பே இல்லை.

மக்கள் விரோத காங்கிரஸ் கட்சியை மக்கள் தூக்கி எறிவார்கள். பாசிச பிஜேபி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்.

ஆனால் மாநிலத்தில் ஆளும் திமுக காங்கிரஸ் தயவில் இன்னும் இரண்டரை ஆண்டுகளை ஒட்டியாக வேண்டும் என்கிற சூழலில். நண்பர்களே இதை முடிந்தால் நினைவில் வையுங்கள் திமுக அரசை காங்கிரஸ் கவிழ்த்து விடும்.

காரணம் காங்கிரஸ் விஜயகாந்தின் முதுகில் குதிரை ஏறப் போய்விடும். துரோகம் என்றால் அதற்கு மறுபெயர் காங்கிரஸ் இது கருணாநிதிக்கும் தெரியும்.

காங்கிரஸ்காரர்கள் ஏன் ஈழ மக்கள் மீது இவ்வளவும் வன்மத்தோடு நடந்து கொள்கிறார்கள் என்றால். ராஜீவ் காந்தியை கொன்று விட்டார்கள் என்கிறார்கள்.

ஆமாம் கொன்று விட்டார்கள்.

கடந்த பதினைந்து ஆண்டுகளாக இந்தக் கொலையை கண்டித்தாயிற்று. எராளமாய் அழுதாயிற்று இப்போது மீண்டும் கண்டிக்கிறேன். ராஜீவ் கொலை படுபாதகம்.

இந்தியாவுக்கு மட்டுமல்ல அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்ரிக்கா, போன்ற அகில உலகத்துக்கே பேரிழப்பு.

குறிப்பாக ராகுல் காந்தியும், ப்ரியங்காவும் தகப்பனை இழந்து போதிய வருவாய் இல்லாமல் கஷ்டப்படுவதைப் பார்க்கும் போது மிகவும் வேதனையாக இருக்கிறது. ஆகவே நான் ராஜீவ் கொலையை கண்டிக்கிறேன்.

சரி, கண்டனங்கள், காரியங்கள், அரசியல் விளையாட்டுகள், கைதுகள் எல்லாவற்றையும் கடந்து இரு கேள்விகள் பாக்கியிருக்கிறன. அவை...

அமீரும் சீமானும் ஏன் கைது செய்யப்பட்டார்கள்?

கலைஞர்களின் (குசநநனழஅ ழுக நுஒpசநளளழைளெ) உணர்வுகளுக்கு சுதந்திரம் உண்டா இல்லையா?

இந்த இரண்டாவது கேள்வியை இவர்களிடம் கேட்பதே அபத்தம்.

முதலாவது கேள்விக்கு அவர்களில் ஒருவர் பிரிவினைவாதம் பேசினார்.

இன்னொருவர் புலிகளை ஆதரித்தார். ஆகவே கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

புலிகளை ஏன் ஆதரிக்கக்கூடாது? என்ற கேள்விக்கு அவர்கள் ராஜீவைக் கொன்று விட்டார்கள் என்பது பதில்.

அவர்கள் ஏன் ராஜீவைக் கொல்ல வேண்டும் என்று ஒரு கேள்வியைக் கேட்டால் அது இந்திய இறையாண்மைக்கு ஊறுவிளைவிகிற கேள்வி என்கிறார்கள்.

ஆனால் பதில் தெரிந்தாக வேண்டிய கேள்வியல்லவா? ஒரு இளம் தலைவனை நாம் ஏன் இழந்தோம் என்று எனது குழந்தை கேட்டால் நான் என்ன பதில் சொல்வது.

இந்திரா காந்தியை அவரது சீக்கிய மெய்ப்பாதுகாவலர்கள் ஏன் கொன்றார்கள்? என்று ஒரு இந்தியக் குழந்தை கேட்டால் மன்மோகன்சிங் பிரதமராக இருப்பதால் இம்மாதிரி கேள்விகளெல்லாம் கேட்கக்கூடாது என்று காங்கிராஸ்காரர்கள் சொல்ல முடியாது.

கேட்கிற உரிமையையும் அதை அறிந்து கொள்கிற உரிமையையும் இந்திய அரசியல் சாசனம் எனக்கும் என் சந்ததிக்கும் வழங்கியிருக்கிறது.

ஆக, ராஜீவ் காந்தி ஏன் மனித வெடிகுண்டின் மூலம் கொல்லப்பட்டார் என்றால் அதற்கான பதிலை ஈழத்தில்தான் தேட வேண்டும்.

ராஜீவ் காந்தி எதற்காக கொல்லப்பட்டார் என்பதை இன்னொரு கட்டுரையில் விரிவாக பார்ப்போம். இந்திராவைப் பற்றி உங்களிடம் யாராவது கேட்டால் நீங்கள் கூட எழுதலாம்.

சரி, காங்கிரஸ்காரன் பிரச்சனை புரிகிறது. நமது தமிழினத் தலைவர்களுக்கு என்னதான் பிரச்சனை என்றால்...

ஒன்றே ஒன்றுதான்.

பிரச்சனை சென்னை ஜார்ஜ் கோட்டையிலே இருக்கிற மாநில முதல்வர் நாற்காலி என்பது ஒன்றுதான்.

அதில் யாராவது ஒருவர்தான் அமர முடியும் அதுதான் இவர்களின் பிரச்சனை.

இந்திய அரசு இப்படி ஒரு முடிவு எடுக்கிறது என வைத்துக்கொள்வோம்.

அதாவது, ஒரு மாநிலத்தை இரண்டு முதல்வர்கள் ஆளலாம்.

அதாவது, இனி மாநில முதல்வர் நாற்காலி என்பது இரண்டு நாற்காலியாக இருக்கும் என்று முடிவெடுக்கிறது என வைத்துக்கொள்வோம். இவர்களின் பிரச்சனை முடிந்தது.

ஜெயலலிதாவும் கருணாநிதியுமே கூட்டணி வைப்பார்கள்.

இராமதாசும் விஜயகாந்தும் கூட ஒன்றாக இணையும் வாய்ப்பு உண்டு.

ஆக, உங்களின் பிரச்சனை உங்களோடு இருக்கட்டும்.

மக்களை மந்தைகளாக்காதீர்கள்.

அவர்களை அரசியலற்ற வெற்று வெடிகளாக்கி வேடிக்கை காட்டாதீர்கள்.

எண்பதுகளில் எழுந்த ஈழ ஆதரவு ஆலையை பயன்படுத்தித்தான் இந்திராவும் அதன் பின்னர் ராஜீவும் ஈழத்தில் தலையிட்டு வேண்டாத நிகழ்வுகளை உருவாக்கிக் கொண்டார்கள்.

உங்களின் தலையீடு இலங்கையில் அவசியம்தான் அது ஈழ மக்களுக்கு மக்களுக்கு ஆதரவாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே இந்தத் தலையீடுகள் பயனளிக்கும்.

அதுவல்லாமல் கூலிக்கு மாரடிக்கிற இராணுவத்தையும் கொள்கைக்காக போராடுகிற ஈழ மக்களையும் ஒன்றாக வைத்து அளவிட வேண்டாம். உங்களின் கோசங்கள் தமிழனத்தின் தலைமைக்கான அறைகூவலகள் எல்லாவற்றையும் உங்கள் மட்டில் மேடைகளில் மட்டும் வைத்துக் கொள்ளுங்கள்.

மக்கள் உங்களை விட மகாத்தானவர்கள்.

அவர்கள் எப்போதும் போராளிகளை ஆதரிக்கிறார்கள். போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஒரு துளி கண்ணீரேனும் சிந்துவார்கள்.

தமிழ்நாதம்

  • கருத்துக்கள உறவுகள்

எண்பதுகளில் எழுந்த ஈழ ஆதரவு ஆலையை பயன்படுத்தித்தான் இந்திராவும் அதன் பின்னர் ராஜீவும் ஈழத்தில் தலையிட்டு வேண்டாத நிகழ்வுகளை உருவாக்கிக் கொண்டார்கள்.

உங்களின் தலையீடு இலங்கையில் அவசியம்தான் அது ஈழ மக்களுக்கு மக்களுக்கு ஆதரவாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே இந்தத் தலையீடுகள் பயனளிக்கும்.

அதுவல்லாமல் கூலிக்கு மாரடிக்கிற இராணுவத்தையும் கொள்கைக்காக போராடுகிற ஈழ மக்களையும் ஒன்றாக வைத்து அளவிட வேண்டாம். உங்களின் கோசங்கள் தமிழனத்தின் தலைமைக்கான அறைகூவலகள் எல்லாவற்றையும் உங்கள் மட்டில் மேடைகளில் மட்டும் வைத்துக் கொள்ளுங்கள்.

மக்கள் உங்களை விட மகாத்தானவர்கள்.

அவர்கள் எப்போதும் போராளிகளை ஆதரிக்கிறார்கள். போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஒரு துளி கண்ணீரேனும் சிந்துவார்கள்.

எவ்வளவு அற்புதமான வரிகள். தமிழகத்து அரசியல் வாதிகளையும் அவர்களின் அரசியல் ராஜதந்திரம் என்ற பெயரில் நடத்தும் துரோகத்தனங்களையும் மிகவும் விளக்கமாக எழுதியிருக்கிறார்.

நன்றி !

சிறந்த ஒரு கட்டுரை. தமிழக நண்பர்களுக்கு இதனை அனுப்புகின்றேன்

யாராவது இதனை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்க முடியுமா? சிங்கள பாடல்களையும் ஈ நியூஸ் இணைய தள ஆங்கில செய்திகளயும் தமிழிற்கு தருபவர்கள் இப்படியான விடயங்களை ஆங்கிலப்படுத்தி தந்தால் நிறைய நன்மை பயக்கும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒர் அடிமை இன்னொரு அடிமைக்கு எப்படி உதவமுடியும் - இது தான் தமிழகத்தின் நிலை

இன்றைய தமிழக அரசியல்வாதிகள் எசமான விசுவாசிகள்!

தமிழக அரசியல் நாடகங்களை அம்பலமாக்குகின்றார் கட்டுரையாளர். இந்த எழுச்சி நிச்சயமாக அரசியல் அசிங்கங்களால் ஏற்பட்டதல்ல. தமிழக மக்களால் தமிழக உறவுகளால் ஏற்பட்டது. அதை இனி திசை திருப்ப முயன்றால் அவாகளே ஏமாறுவார்கள். இணைப்பிற்கு நன்றி. தமிழக அரசியல் வாதிகளின் வால்பிடிகள் படித்தத தெளிய வேண்டிய ஆக்கம்.

ஜானா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.