Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கண்தழையே கந்தளாய் ஆனது

Featured Replies

பண்டையில் திருமலை இராஜ்யத்தை ஆட்சி செய்த வன்னி அரசர்கள் ஆளும் வசதி கருதித் திருக்கோணமலைப் பிரதேசத்தை மூன்று பற்றுக்களாகப் பிரித்தனர்.

மாவட்டத்தின் மத்திய பற்றின் தலைமை இடமான தம்பலகமத்துக்குத் தெற்கே பதினான்கு மைல் தூரத்தில் கந்தளாய் ஊர் அமைந்துள்ளது. இந்த ஊருக்கு பண்டைக்காலத்தில் சதுர்வேத மங்கலம் என்ற பெயர் இருந்தது. நான்மறை ஓதும் வேதியர்கள் வாழ்ந்து வந்ததால் இந்தப் பெயர் காரணப்பெயராக வந்ததாக அறிய முடிகிறது. இந்த ஊரில் பெரிய குளம் ஒன்றை அமைப்பதாக அநுராதபுர அரசி ஆடக சௌந்தரியுடன் விவாக ஒப்பந்தம் செய்து கொண்ட குளக்கோட்டு மன்னர், அரசியின் துணையுடன் இங்கு கட்டிய பெரிய குளத்துக்குத் திருக்குளம் என்ற பெயரே வழக்கில் இருந்து வந்தது.

பிற்காலம் அநுராதபுரத்தில் இருந்து அரசாண்ட புவனேயகயவாகு என்னும் மன்னன் சமணனாக மதம்மாறி திரிசங்கபோதி என்ற மற்றுமோர் நாமத்தை பெற்றான் என்று திருக்கோணாசலப் புராணம் கூறுகின்றது.

இவ்வேந்தன் சைவ ஆலயங்களை இடித்தழிக்கும் நோக்கில் படைகளுடன் காட்டு வழியே சதுர்வேதமங்கலத்தை நோக்கி வந்தபோது, அவனது தீய எண்ணத்துக்கு தெய்வ தண்டனையாக திடீரென அவன் கண்கள் பார்வை குன்றி குருடாகியது.

மன்னனும் படைகளும் ஆறாத்துயரத்தில் ஆழ்ந்து அவ்விடத்திலேயே கூடாரமிட்டுத் தங்கினர். கவலையில் மூழ்கிக்கிடந்த அரசனின் கனவில் ஒரு முதியவர் தோன்றி உன் தீய எண்ணத்துக்குத் தகுந்த தண்டனை பெற்றாய் ஆயினும் இறைவனைத் துதித்து தர்மசீலனான குளக்கோட்டன் அமைத்த நன்னீர்க் குளத்தில் தீர்த்தமாடினால் உன் துயர் அகலும் என்று கூறி மறைந்தார்.

அப்பெரியாரின் கூற்றுக்கமைய பக்திப்பரவசம் அடைந்த அரசன் திருக்குளத்தில் தீர்த்தமாடிய போது அதிசயிக்கத்தக்க விதமாகக் கெட்டுப்போன கண்பார்வை மீண்டும் ஒளிவீசி பிரகாசித்தது.

கெட்டுப்போன கண் தழைத்த காரணத்தால் திருக்குளம் என்று வழக்கில் இருந்த பெயர் மறைந்து கண்தழை என்ற காரணப்பெயரே வழங்கலாயிற்று.

அடுத்துள்ள சதுர்வேத மங்கலம் என்ற பெயரும் மறைந்து, கண் தழை என்ற பெயரே ஊருக்கும், குளத்துக்கும் வழங்கப்பட லாயிற்று. இப்பெயரே காலப்போக்கில் திரிந்து கந்தளாய் என்று அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

நோக்கு கண் விளங்கக் கண்ட

நுவலரும் கயத்துக்கன்பால்

தேக்கு கண்டழையாமென்னச்

சிறந்ததோர் நாமம் நாட்டிக்

கோக்குல திலகனாய குளக்

கோட்டு மன்னன் செய்த

பாக்கியம் விழுமிதென்னா

வியந்தனன் பரிந்து மன்னோ.

(திருக்கோணேஸ்வர புராணம்)

பிரமாண்டமான நீர்த்தேக்க அணைக்கட்டின் இருபுறங்களிலும் பாலை, வீரை, தேக்கு, முதிரை போன்ற மரங்கள் வானுயர வளர்ந்து அணைக்கட்டை அழகு செய்தன. அணைக்கட்டின் உச்சியில் நின்று பள்ளத்தாக்கைப் போல் தெரியும் கந்தளாய் என்ற ஊரைப் பார்த்தால் ஊரில் நெடிந்துயர்ந்து நிற்கும் தென்னைமர உச்சியில் காலைவைத்து விடலாம் போல் தோன்றும்.

இன்று இது போன்ற அரிய பல சரித்திரங்கள் மாற்றப்பட்டுவிட்டன. அணைக்கட்டோரங்களில் நின்று அழகு செய்த வான் தருக்கள் வெட்டி அழிக்கப்பட்டுள்ளன.

பழைமையில் இந்தப்பகுதியில் இன்னொரு தெய்வீகச்சிறப்பும் காணப்பட்டது. அணைக்கட்டுக்கு பாதுகாப்பாக குளக்கோட்டனின் வேண்டுதலுக்கமையவே, நாராயண மூர்த்தியால் அணைக்கட்டோரம் விநாயகர் ஆலயம் ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இக்குளத்திலிருந்து குதித்தோடி வரும் பேராறு படிப்படியாக உள்ள கற்பாறைகளில் விழுந்து சலசலத்த ஓசையுடன் ஆலயத்தை வலமாக வளைந்து அஞ்சலி செய்து செல்வது பார்க்கப் பரவசமூட்டுவதாக இருக்கும்.

ஆற்றோரம் எங்கும் பலா மரங்கள் காய்களைச் சுமந்து கொண்டு நிற்கும் காட்சி மனதிற்கு உவகை ஊட்டுவதாக இருக்கும்.

இத்தகைய அழகுமிகு இயற்கைக்காட்சிகள் இன்றில்லை. ஆலயத்தை சுற்றிவளைத்து ஓடிய ஆற்றின் கிழக்குப் பகுதியைத் தூர்த்து குடியிருப்புக்களை உண்டாக்கிவிட்டார்கள். ஒரு காலத்தில் இந்த பழம் ஊரில் வேதம் ஓதும் மறையோர்கள் வாழ்ந்ததும் அதன் காரணமாக சதுர்வேத மங்கலம் என்ற காரணப்பெயர் இருந்ததும் அடியோடு மாறிவிட்டது. நாடு சுதந்திரமடைந்த பின் துரித வளர்ச்சி அடைந்து கந்தளாய்ப் பட்டினம் என்ற பெயரே நிலை கொண்டுள்ளது.

1986 இல் கந்தளாய் நீர்த்தேக்கம் உடைத்துக்கொண்ட போது நாராயணமூர்த்தியால் ஸ்தாபிக்கப்பட்ட அணைக்கட்டு விநாயகர் ஆலயம் முற்றாக அழிக்கப்பட்டாலும் சைவப்பெருமக்கள் ஆலயத்தைத் திரும்பக்கட்டி இருப்பது பாராட்டுக்குரியதாகும்.

கந்தளாய் நீர்தேக்கத்தை அமைத்தவன் இரண்டாம் அக்கிரபோதி என்று இலங்கைச் சரித்திரம் கூறுகிறது. ஆனால் இம்மன்னனுக்கு முன்முப்பத்திமூன்று வருடம் ஆட்சிசெய்த முதலாம் அக்கிரபோதி மின்னேரியாக் குளத்தைக் கந்தளாயுடன் இணைக்க ஒரு கால்வாயையும் வெட்டினான் எனச் சரித்திரம் முன்னுக்குப்பின் முரணாகக் குறிப்பிடுகிறது.

கந்தளாய்க் குளம் இருந்தபடியால் தானே முதலாம் அக்கிரபோதி கால்வாய் வெட்டி வந்தான் என்றும் ஆகிறது. முதலாம் அக்கிரபோதி கந்தளாய்க்கு கால்வாய் வெட்டி வந்தான் என்ற சரித்திரத்தின் கூற்று முதலாம் அக்கிரபோதியின் ஆட்சிக்கு முன்பும் கந்தளாயில் குளம் இருக்கிறது என்பதை ருசுப்படுத்துவதாக உள்ளது.

திருமலை இராஜ்ஜியத்தின் ஒரு பகுதியாக இருந்த சதுர்வேத மங்கலத்தை இன்றைய கந்தளாயை தென்னிலங்கை வேந்தன் ஒருவன் வென்றான். அவன் வென்றரசன் என்றே அழைக்கப்பட்டான்.

ஏற்கனவே இருந்த கந்தளாய் குளத்தின் கிழக்குப்புற அணைக்கட்டுடன் தானும் ஒரு குளத்தை அமைத்தான் இவன். அந்தக்குளம் வென்றரசன் குளம் என்று இன்றும் அழைக்கப்படுகிறது.

அணைக்கட்டின் உச்சியில் நின்று குளத்தின் நீர்ப்பரப்பைப் பார்த்தால் கடல்போலவும், கட்டின் அடிவாரத்தில் நின்று அணையின் உச்சியை நோக்கினால் கட்டு பெரிய மலை போலவும் தெரியக்கூடியதாகக் குளம் பிரமாண்டமானதாக அமைக்கப்பட்டதெனக் காவியம் கூறுகிறது.

இந்தக்குளத்தின் அணைக்கட்டை முதல்முதலாக பார்ப்பவர்கள் வியப்பிலாழாமல் இருக்கமுடியாது. இயந்திர சாதனங்கள் அற்ற அந்தக்காலத்தில் இப்படி ஒரு பிரமாண்டமான அணையை அமைக்க இலட்சக்கணக்கான சனங்கள் தினந்தோறும் வேலை செய்தாலும் பல்லாயிரம் வருஷங்களாவது செல்லுமே என்ற எண்ணம் எவருக்கும் வரவே செய்யும் .

இந்த அணைக்கட்டில் தம்பலகாமம் ஆதிகோணேஸ்வரத்தின் சுற்று ஆராதனைகளாக வேள்வி, பொங்கல், மடை போன்ற வழிபாடுகள் பல இலட்சம் ரூபா செலவில் வருடந்தோறும் நடைபெறுவது வழக்கம்.

இந்தக்குளத்து வேள்வி ஆராதனைகளிலும், தம்பலகாமம் ஆதிகோணேஸ்வரர் ஆலயத்திலும் ஊழியம் புரிந்து கோயிலால் மாதச்சம்பளம், வயல்மானியம் பெறும் நாற்பத்தைந்துக்கும் மேற்பட்ட தொழும்பாளர் குடும்பங்கள் திருக்கோணமலை மாவட்டம் முழுவதும் பரந்து வாழ்ந்துவருகின்றனர்.

தம்பலகாமம்.க.வேலாயுதம்

மேலும் வாசிக்க

http://vellautham.blogspot.com/

Edited by TJR

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தகவல்களை தந்தீர்கள் நன்றி

நல்ல தகவல்களை தந்தீர்கள் நன்றி

  • தொடங்கியவர்

நன்றி theeya

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வேந்தன் சைவ ஆலயங்களை இடித்தழிக்கும் நோக்கில் படைகளுடன் காட்டு வழியே சதுர்வேதமங்கலத்தை நோக்கி வந்தபோது, அவனது தீய எண்ணத்துக்கு தெய்வ தண்டனையாக திடீரென அவன் கண்கள் பார்வை குன்றி குருடாகியது.

மன்னனும் படைகளும் ஆறாத்துயரத்தில் ஆழ்ந்து அவ்விடத்திலேயே கூடாரமிட்டுத் தங்கினர். கவலையில் மூழ்கிக்கிடந்த அரசனின் கனவில் ஒரு முதியவர் தோன்றி உன் தீய எண்ணத்துக்குத் தகுந்த தண்டனை பெற்றாய் ஆயினும் இறைவனைத் துதித்து தர்மசீலனான குளக்கோட்டன் அமைத்த நன்னீர்க் குளத்தில் தீர்த்தமாடினால் உன் துயர் அகலும் என்று கூறி மறைந்தார்.

அப்பெரியாரின் கூற்றுக்கமைய பக்திப்பரவசம் அடைந்த அரசன் திருக்குளத்தில் தீர்த்தமாடிய போது அதிசயிக்கத்தக்க விதமாகக் கெட்டுப்போன கண்பார்வை மீண்டும் ஒளிவீசி பிரகாசித்தது.

இப்படியான நம்ப முடியாத ,புராணக்கதைகளை எமது சரித்திரத்தில் அதிகம் இருப்பதனால் தான் எமது பூர்வீக வரலாற்றை பலர் நம்புகிறார்களில்லை ,முக்கியமாக சிங்கள வரலாற்று ஆசிரியர்கள்

  • தொடங்கியவர்

இப்படியான நம்ப முடியாத ,புராணக்கதைகளை எமது சரித்திரத்தில் அதிகம் இருப்பதனால் தான் எமது பூர்வீக வரலாற்றை பலர் நம்புகிறார்களில்லை ,முக்கியமாக சிங்கள வரலாற்று ஆசிரியர்கள்

உங்கள் கருத்துரைக்கு நன்றிகள்....

உங்கள் கருத்துக்கள் தொடர்பான சிலவிடையங்கள்

01. பௌத்த பாளிநூல்களான தீபவம்சம், மகாவம்சம் போன்று தமி்ழர் வரலாறு தொடர்பான ஆதி்நூல்கள் அரிதாகவே கிடைக்கின்றன. எனவே திருகோணமலை தமிழர் வரலாறு தொடர்பான விடையங்களுக்கு திருக்கோணேஸ்வர புராணம் போன்ற தொல்நூல்கள் தரும் தகவல்கள் இன்றியமையாதனவாக இருக்கின்றது...

02. புராணங்கள் எமது வரலாற்றின் முடிந்த முடிவல்ல, நாம் அவற்றையும் அறிந்துகொண்டு எமது இருப்புகளின் ஆதாரங்கள் தேடி நீண்டதூரம் பயணிக்கவேண்டியவர்களாக இருக்கிறோம்.

03. கி.மு 6 ஆம் நூற்றாண்டில் ஆரிய இளவரசன் விசயனின் வருகையிலிருந்தே சிங்களவரின் வரலாறு தொடங்குகிறது.மகாவம்சம் 6 ஆம் நூற்றாண்டில் மகாநாம என்ற புத்ததேரரால் பாளி மொழியில் எழுதப்பட்ட இதிகாசம் ஆகும். சிங்கள வரலாற்று ஆசிரியர்களால் போற்றிக் கொண்டாடப்படும் மகாவம்சம் பின் வருமாறு கூறுகிறது. வட இந்தியாவில் "லாலா" என்று ஒரு நாடு அதனைச் சிங்கபாகு என்பவன் ஆட்சி புரிந்தான். இவனது தந்தை சிங்கன் என்பவன் ஆவான். மிருக இராசவாகிய சிங்கமே இவன் . வங்க நாட்டு இளவரசியான சுபதேவி ஒரு நாள் அரண்மனையை விட்டு வெளியேறி லாலா எனும் நாட்டை அடைந்தபோது அங்கு மனிதர்களைக் கொன்று தின்னும் சிங்கன் என்பவன் அவளைக் கடத்திக் கொண்டு போய் குகை ஒன்றில் அடைத்து வைத்தான் பகலில் வெளியில் போய் மனிதர்களை வேட்டை ஆடுவதும் இரவில் குகைக்குள் வந்து சுபதேவியுடன் காலம் கழிப்பதுமாய் இருந்து வந்தான், நாளடைவில் இருவருக்கும் சிங்கபாகு சிங்கவல்லி என ஓர் ஆணும் ஒரு பெண்ணுமாய் இரு குழந்தைகள் பிறந்தன.சிங்கபாகுவின் மகனே விசயன் ஆவான்......

எனவே இப்படியொரு வராற்றின் வழிநிர்க்கும் சிங்கள வரலாற்றாசிரியர்கள் நம்புவார்களா இல்லையா என்பதற்கப்பால் நம்மை நாமறியவேண்டும் என்தே இன்றைய தேவையென நினைக்கிறேன்..

04.கந்தளாய்க்குளத்தைச் சுற்றி நம்முடைய நிறைய வரலாறு புதைந்து கிடக்கிறது...

உ+ம்

..................கட்டி முடிக்கப்பட்ட திருக்குளத்தைப் பார்வையிட இரு திறப்படைகளும் கடலெனச் சூழந்து வர அரச தம்பதியினர் கந்தளாய் வந்தனர். கடலென விரிந்து காணப்பட்ட குளத்தைச் சுற்றிப் பார்வையிட்டு வந்தபோது கிழக்கு அணையில் ஒரு இடம் பதிந்து இருத்தலைக் கண்ட அரசி ஆடகசௌந்தரி ஒரு கல்லைத்தூக்கி அந்தப் பதிவில் வைத்தார். அரசியைத் தொடர்ந்து வந்த நூற்றுக்கணக்கான தோழிகளும் கற்களைத் தூக்கி வைத்து உயரமாகக் கட்டினர். பெண்கள் கட்டியதால் கந்தளாய்க் குளத்துக்கு கிழக்கு அணை, பெண்டுகள் கட்டு என்றே இன்றும் அழைக்கப்பட்டு வருகிறது.

மேலும் வாசிக்க

ஆடகசௌந்தரி

http://vellautham.blogspot.com/2009/02/blog-post_9454.html

Edited by TJR

  • தொடங்கியவர்

ஆடக சௌந்தரி

வரராமதேவன் என்ற சோழ மன்னன் திருக்கோணமலையிலுள்ள சுவாமி மலையின் தவப் பெருமையைப் புராண வாயிலாக அறிந்து கடல் கடந்து திருமலை வந்து சுவாமி மலையில் கோணேஸ்வரர் ஆலயத்தை அமைக்கும் திருப்பணி வேலைகளைச் செய்து வந்தான் எனத் திருக்கோணாசலப் புராணம் பின்வருமாறு கூறுகின்றது.

அந்தநன் மொழியைக் கேளா

அரும் குறள் அடைவிற் கூறும்

முந் தொர் ஞான்று வெற்பின்

மொய்கதிர்க் குலத்து வேந்தன்

மந்திரம் அனைய பொற்றோள்

வரராம தேவன் என்போன்

வந்திவன் ஈசற்காக வான்

திருப்பணிகள் செய்தான்

குறள் - பூதம்

தந்தை வரராமதேவன் திருமலையில் கட்டிய கோணேஸ்வரர் ஆலயத்தைத் தரிசிக்கத் தனயனான குளக்கோட்டன் படைகளுடன் திருமலை வந்தான். திருக்கோணமலைக்குத் தெற்கே உள்ள தம்பலகாமத்தில் ஒரு பெரும் சிவாலயம் இடிபட்டு அழிந்து கொண்டு இருப்பதாகக் கேள்விப்பட்டான். தந்தையைப்போல் தானும் ஒரு சிவாலயம் அமைக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டு இருந்தவனாதலால், உடனே அங்கு விரைந்து உடைபட்ட கோயிலில் கட்டடச் சிதைவுகளைப் படைவீரர்களைக் கொண்டு அப்புறப்படுத்திக் கோயில் குடியிருப்பு என்ற இடத்திலேயே கோயிலைத் திரும்பக் கட்டி ஆலய பராமரிப்புக்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்களையும் தென்னந்தோப்புக் களையும் ஆக்கி இவைகளுக்கு நீர்பாய்ச்சக் குளம் ஒன்று அமைக்க வேண்டும் என்ற யோசனையோடு இளவரசன் அங்கு தங்கி இருந்தான்.

####

அனுராதபுரத்தில் இருந்து இலங்கையை ஆளும் மனுநேய கயவாகு மன்னன் வேட்டையாடப் படைகளுடன் கரையோரப் பகுதிகளுக்கு வந்து கூடாரமிட்டுத் தங்கியிருந்தான்.கடலில் பேழைபோன்று மிதந்து வந்து ஒதுங்கும் செய்தி அறிவிக்கப்பட்டதும் மன்னன் கடற்கரைக்கு விரைந்து சென்று பேழையை எடுத்து ஆவலோடு திறந்தான். என்னே அதிசயம்! பேழைக்குள் தங்க விக்கிரகம் போலக் குழந்தை ஒன்று படுத்துக் கிடப்பதைக் கண்ட அரசன், குழந்தையை வாரி எடுத்து மக்கள் செல்வம் இல்லாத வறியோனுக்கு இறைவன் வழங்கிய அருட்கொடை... என்று இயம்பி, தாமரைப் பூப்போன்ற குழந்தையின் அழகிய வதனத்தில் முத்தமிட்டான். அந்த அதிசயக் குழந்தை மன்னன் முகத்தைப் பார்த்து மகிழ்ச்சி பொங்கச் சிரித்தது. பால் மணம் மாறாப் பச்சிளம் குழவி சிரித்த காரணத்தால் மட்டக்களப்புப் பிரதேசத்தில் உள்ள அந்த ஊருக்கு பானகை என்ற காரணப் பெயர் ஏற்பட்டு காலப்போக்கில் திரிந்து பாணகை என்று இன்று அழைக்கப்பட்டு வருகின்றது.

நித்திய தரித்திரனுக்கு பெருந்தனம் கிடைத்ததுபோல் மகிழ்ந்து மன்னன் கண்ணை இமை காப்பதுபோல் அரசனும், இராணியும் குழந்தையைக் கண்ணும், கருத்துமாக வளர்த்து வந்தனர். அரசர் மதியூகியான தனது பிரதம மந்திரிக்கு கடலில் வந்த இக்குழந்தை பற்றிய எல்லா விபரங்களையும் கூறியதுடன் பேழையில் கண்டெடுக்கப்பட்ட ஓலைச் சுருளையும் காட்டினார். அதில் ஆடக சௌந்தரி என்று எழுத் தாணியால் வரையப்பட்டிருந்தது. அப்பெயரே அப்பெண்ணுக்குப் பிற்காலம் பெயராக நிலைத்தது. சிறுகுழந்தையிலே சிங்கள மன்னனால் வளர்க்கப் பட்ட ஆடக சௌந்தரி தான் ஒரு சிங்களப் பெண் என்றே எண்ணி இருந்தாள். தலைமை அமைச்சர் யாவும் அறிவார் ஆயினும், சமயம் வரும்போது சொல்லலாம் என்று எண்ணி இருந்தார்.

வயது முதிர்ந்த அரசர் ஆடக சௌந்தரிக்கு வரன்தேடி திருமணம் செய்து வைக்கும் பொறுப்பையும் மந்திரியிடமே ஒப்படைத்திருந்தார். மனுநேய கயவாகு காலமானதும், அவன் வளர்ப்பு மகளான ஆடக சௌந்தரி அனுராதபுர இராஜ்யத்தின் அரசு கட்டில் ஏறினாள். தம்பலகாமத்தில் சைவன் ஒருவன் கோயில் கட்டுவதாக அறிந்த அரசி, தந்தையின் ஸ்தானத்திலுள்ள பிரதமரை அழைத்து, ஆலோசித்ததுடன் ஒரு படையை அனுப்பிச் சைவனை இந்தியாவுக்கு துரத்தி விடுமாறும் கேட்டுக் கொண்டாள். பிரதமர் தாமே படையுடன் போய் வருவதாகக் கூறிச் சென்றார். சேனைகளை ஒர் இடத்தில் நிறுத்திவிட்டு கோயில் கட்டும் இடத்திற்குத் தனித்துப்போய்க் குளக்கோட்டனைச் சந்தித்தார்.

இளவரசனின் தெய்வீகக்களை ததும்பும் முகத்தைக் கண்டதும் அரசிக்குத் தகுந்த வரன் இவர்தான் என்று எண்ணி மகிழ்ந்த மந்திரி ஆடக சௌந்தரியின் வரலாறு முழுவதையும் கூறி ஆடக சௌந்தரியை திருமணம் செய்துகொள்ள இசைந்தால், மன்னன் ஆக்க எண்ணும் குள அமைப்பைத் தானே முடித்துத் தருவதாக உறுதிகூறி விவாக ஒப்பந்தம் செய்து கொண்டார்.

அனுராதபுரம் திரும்பியவுடன் ஆடகசௌந்தரியின் தலைமை அமைச்சர், சோழ இளவரசனின் தெய்வீகக்கலை பொலியும் சௌந்தரியம், அவனுடன் குளம் கட்டித் தருவதாகத் தான் செய்துகொண்ட விவாக ஒப்பந்தம், ஆகிய முழு விபரங்களையும் மறைந்த மன்னர் தன்னிடம் ஒப்படைத்த பொறுப்பான பணிகளையும் விபரமாகக் கூறினார். எல்லாவற்றையும் ஆச்சரியத்துடன் கேட்ட ஆடகசௌந்தரி தன் முழுச் சம்மதத்தையும் தெரிவித்தாள். புத்திசேர் அமைச்சர்களின் தலைவரின் நேரடிக் கண்காணிப்பில் திருக்குளம் என்ற பெயரில் கந்தளாய் நீர்த்தேக்கம் பிரமாண்டமாய் அமைக்கப்பட்டது. அணைக்கட்டின் உச்சியில் நின்று பார்த்தால் குளத்தின் நீர்ப்பரப்பு பெரிய கடல்போல் தெரியும். கட்டின் அடிவாரத்தில் நின்று அணையின் உச்சியைப் பார்த்தால் அணை பெரிய மலைபோலத் தெரியும். குளம் பிரமாண்டமாக இருந்தது என்று குளக்கோட்டுக் காவியம் கூறுகின்றது.

கந்தளாய்க் குளத்தை முதன் முதலாகப் பார்ப்பவர்கள் வியப்பில் ஆளாமல் இருக்க முடியாது. இயந்திர சாதனங்கள் அற்ற பழைய காலத்தில் இரண்டு மைல்வரை, மலைபோல் அணையை அமைத்திருக் கிறார்களே! தினமும் லட்சக்கணக்கானவர்கள் வேலை செய்யினும் இப்படி ஒர் அணையை அமைக்கப் பலவருடங்கள் செல்லுமே! என்ற எண்ணம் குளத்தையும் அணையையும் பார்ப்பவர்கள் மனத்தில் எழவே செய்யும். குள அமைப்பு முடிவுற்றதும் ஒப்பந்தப் பிரகாரம் அரசரை மேள வாத்தியங்கள் முழங்க படைகள் சூழ்ந்துவர அனுராதபுரத்துக்கு அழைத்துச் சென்று குளக்கோட்டனுக்கும் ஆடகசௌந்தரிக்கும் அமைச்சர் ஒரு தந்தையின் ஸ்தானத்தில் இருந்து திருமணத்தை மிக விமரிசையாக நடத்தி வைத்தார்.

கட்டி முடிக்கப்பட்ட திருக்குளத்தைப் பார்வையிட இரு திறப்படைகளும் கடலெனச் சூழந்து வர அரச தம்பதியினர் கந்தளாய் வந்தனர். கடலென விரிந்து காணப்பட்ட குளத்தைச் சுற்றிப் பார்வையிட்டு வந்தபோது கிழக்கு அணையில் ஒரு இடம் பதிந்து இருத்தலைக் கண்ட அரசி ஆடகசௌந்தரி ஒரு கல்லைத்தூக்கி அந்தப் பதிவில் வைத்தார். அரசியைத் தொடர்ந்து வந்த நூற்றுக்கணக்கான தோழிகளும் கற்களைத் தூக்கி வைத்து உயரமாகக் கட்டினர். பெண்கள் கட்டியதால் கந்தளாய்க் குளத்துக்கு கிழக்கு அணை, பெண்டுகள் கட்டு என்றே இன்றும் அழைக்கப்பட்டு வருகிறது.

தம்பலகாமம்.க.வேலாயுதம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.