Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நாகூர் ஹனீபாவுடன் ஒரு நேர்காணல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாகூர் ஹனீபாவுடன் ஒரு நேர்காணல்

இசைமுரசு நாகூர் ஹனீபாவை அவரது இல்லத்தில் வைத்து ‘ராணி’ வார இதழ் ஆசிரியர் அ.மா.சாமி சந்தித்தபோது நடந்த நேர்காணல் இது:

அரசியல் அனுபவங்கள்

எப்படி அரசியல் மேடைகளில் பாடத் தொடங்கினீர்கள்?

தமிழ் ஆர்வம்தான் அதற்குக் காரணம். இயற்கையாகவே என்னிடம் தமிழார்வம் இருந்தது. 1938-ஆம் ஆண்டில் தமிழ் நாட்டின் முதலமைச்சராக இருந்த ராஜாஜி, பள்ளிக்கூடங்களில் இந்தியை கட்டாயப் பாடம் ஆக்கினார். இதை எதிர்த்துத் தமிழ்நாடு எரிமலையாக வெடித்தது. முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்தது. அப்போது (1939) ராஜாஜி நாகூருக்கு வந்தார். அங்கே அவருக்குக் கறுப்புக்கொடி காட்டி கைது செய்யப்பட்ட நாலு பேரில் நானும் ஒருவன். அப்போது எனக்கு 13 வயதுதான்!

அந்தச் சின்ன வயதிலேயே உங்களிடம் தமிழ் எழுச்சி ஏற்பட்டு விட்டதா?

ஆமாம். இன்றும் அந்தத் தமிழ்க் கனல் என் உள்ளத்தில் எரிந்து கொண்டிருக்கிறது!

நல்ல தமிழர் நீங்கள்! பிறகு ..?

அந்நாளில் திராவிடர் இயக்கத்தில் “டார்பிடோ” ஜனார்த்தனம் என்ற நல்ல பேச்சாளர் இருந்தார். அவரை அழைத்து நாகூரில் கூட்டம் நடத்தினோம். நான் கூட்டத்தில் பாடினேன். பாவேந்தன் பாரதிதாசன் எழுதிய ‘ஓடி வந்த இந்திப் பெண்ணே கேள் – நீ தேடி வந்த கோழையுள்ள நாடு இது அல்லவே” என்ற பாடலை உணர்ச்சி பொங்கப் பாடினேன். அது முதல் அரசியல் மேடைகளில் பாடத் தொடங்கி விட்டேன்.

உங்களுக்கு நல்ல குரல் வளம் இருக்கிறது. தமிழை இனிமையாக, தெளிவாக உச்சரிக்கிறீர்கள். பேச்சாளர் ஆகியிருக்கலாமே?

திராவிட இயக்கத்தில் பேச்சாளர்கள் அதிகம். எல்லாரும் சேர்ந்து என்னை அமுக்கி இருப்பார்கள்.! ஆனால், பாட்டு எனக்குக் கை கொடுத்தது. என்னைப் போல எடுப்பாகப் பாடக் கூடியவர் வேறு எவரும் இல்லை. அதனால்தான் போட்டியில்லாமல், இந்த 81-வது வயதிலும் திருமண வீடுகள், கழக மேடைகள், மாநாடுகளில் பாடிக் கொண்டிருக்கிறேன். இதில் இன்னொரு ஆதாயமும் கிடைத்தது.

என்ன?

பெரியார் முதல் அண்ணா, கலைஞர், பேராசிரியர், நாவலர், நாஞ்சிலார் என்று எல்லத் தலைவர்களும் என்னிடம் பாசத்துடன் இருந்தார்கள். இன்று கூட கலைஞர், “வா, அனிபா. உட்கார்” என்று அன்புடன் என்னை வரவேற்பார். நான் கலந்துக் கொண்டு பாடாத கழக நிகழ்ச்சிகள், சிறப்புக் கூட்டங்கள், மாநாடுகள் கிடையாது. “நீங்கள் பாடி முடித்தபின்தான் எங்களை மேடைக்கே அழைக்கிறார்கள்” என்று ஒருமுறை முரசொலி மாறன் அவர்கள் என்னிடம் வேடிக்கையாகக் கூறினார்.

தந்தை பெரியாருடன் உங்களுக்கு எப்படி பழக்கம் ஏற்பட்டது?

பெரியாரை நாகூருக்கு அழைத்து நான் கூட்டங்கள் நடத்தியிருக்கிறேன். அந்தக் கூட்டங்களில் நான் பாடியதைக் கேட்டு மகிழ்ந்தார், பெரியார். “அனிபா அய்யா பாட்டுக்கு ஒலிபெருக்கித் தேவையில்லை” என்பார். மயிலாடுதுறை, நாகப்பட்டினம் வரும்போது என்னை அழைத்து வரச்சொல்லி பாட வைத்துக் கேட்டு மகிழ்வார், பெரியார். சிலநேரம் என் பாட்டைக் கேட்டு, ஒரு ரூபாய் இனாம் கூடக் கொடுத்திருக்கிறார்.

காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிபு அவர்களுடன் உங்கள் தொடர்பு பற்றிச் சொல்லுங்களேன்.

அவரது கண்ணியத்தால், சமுதாயத் தொண்டால் கவரப்பட்டவன், நான். எனது இசையால் ஈர்க்கப்பட்டவர், அவர். எனது பாடல்களை மிகவும் விரும்பிக் கேட்பார்.

நாகூரில் நான் கட்டிய “அண்ணா இல்லம்” என்ற புதிய இல்லத்தை காயிதே மில்லத் திறந்து வைப்பதாக இருந்தது. ஆனால், அன்று அவரால் வர இயலவில்லை. எனக்கு மடல் எழுதி அதைத் தெரிவித்தார். அதன்பின் ஒருமுறை அல்ல, இருமுறை எனது இல்லத்துக்கு காயிதே மில்லத் அவர்கள் வந்திருக்கிறார். அவர் எப்போது நாகூருக்கு வந்தாலும் முதலில் தர்காவுக்குப் போவார். என்னையும் அழைத்துப் பாடச் சொல்லிக் கேட்டு மகிழ்வார்.

அறிஞர் அண்ணாவுடன் உங்களுக்கு எப்படித் தொடர்பு ஏற்பட்டது?

அது பற்றிச் சொல்லுவது என்றால், பக்கம் பக்கமாக எழுத வேண்டியிருக்கும்

எழுதுகிறேன், சொல்லுங்கள்

அந்த நாளில் திராவிட இயக்கத்தில் பட்டுக்கோட்டை அழகிரிசாமி என்ற கருஞ்சட்டை வீரர் இருந்தார். அவரை ‘அஞ்சா நெஞ்சன் அழகிரிசாமி’ என்பார்கள். அவ்வளவு துணிச்சலானவர். மன்னார்குடியை அடுத்த மதுக்கூரில் ஒரு பொதுக்கூட்டம். அதில் பேச அழகிரி வந்தார். நான் பாடினேன். “எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு” என்று நான் முழங்கினேன். அழகிரிக்கு மிகவும் பிடித்து விட்டது. அது முதல் எங்கே கூட்டம் நடந்தாலும் , என்னை அழைப்பார், பாடச் சொல்லுவார்.

ஒருமுறை பட்டுக்கோட்டையில் கூட்டம். அண்ணா பேசுவதாக இருந்தது. “டேய் கருப்பா நீயும் வந்து விடு” என்று என்னையும் அழைத்தார். என்னை ‘கருப்பா’ என்றுதான் அழகிரி கூப்பிடுவார். நானும் போனேன். மாலையில் அழகிரி வீட்டில் சிற்றுண்டி சாப்பிட்டோம். அப்போது அண்ணாவுக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தார், அழகிரி.

அதன்பின் அண்ணாவுடன் பழக எவ்வளவோ வாய்ப்புகள். ஒருமுறை நான் குடும்பத்துடன் காஞ்சிபுரத்துக்குப் போய், அண்ணாவின் விருந்தாளியாக இருந்தேன். அண்ணாவே எங்களுக்குப் பரிமாறியதை என்றைக்கும் மறக்க இயலாது!

அதைச் சொல்லுங்கள்

முதல் முதல் நான் காஞ்சியில் அண்ணாவின் வீட்டுக்குப் போனபோது வெறும் லுங்கி, சட்டையுடன் அண்ணா எங்களை வரவேற்றார். “அண்ணா.. அண்ணா.. என்று சொல்லுவீர்களே, அந்த அண்ணாத்துரை இவர்தானா?” என்று என் மனைவி ஆச்சரியத்துடன் கேட்டாள்! பிறகு அண்ணா எங்கள் வீட்டுக்கு வர, குடும்ப நண்பர்கள் ஆகிவிட்டோம்.

ஒருமுறை அறந்தாங்கி அருகே ஒரு கூட்டம். அண்ணா கலந்துக் கொண்டார். என்னையும் அழைத்துக் கொண்டார். அதற்கு முன் இரண்டு நாள் அடை மழை. வழியில் தண்ணீர் தேங்கிக் கிடந்தது. அண்ணா வேட்டியைத் தூக்கி கட்டிக் கொண்டு, தண்ணீரில் நடந்தார். நானும் நடந்தேன். ஒரு மைல் நடந்து, கூட்டம் நடந்த இடத்துக்குப் போய்ச் சேர்ந்தோம்.

ஒருமுறை அண்ணா மலேசியா, சிங்கப்பூருக்குப் போய்விட்டு வந்தார். அவரைப் பார்க்க நான் போனேன். “அனிபா! நான் போன இடத்திலெல்லாம் நீதான் இருந்தாய்” என்று அண்ணா சொன்னார். எனக்குப் புரியவில்லை. “வீட்டுக்கு வீடு உன் பாட்டுதான் ஒலித்துக் கொண்டிருக்கிறது” என்று அண்ணா சிரித்தார். பிறரை பாராட்ட அண்ணா தயங்கவே மாட்டார்.

கலைஞருக்கும் உங்களுக்கும் உள்ள உறவு பற்றிச் சொல்லுங்களேன்

அது 65 ஆண்டுக்கதை!. அத்தனையும் சொல்லுவது என்றால் அதையே ஒரு தனி நூலாக எழுத வேண்டியிருக்கும்.

எழுதி விடலாம், சொல்லுங்கள்.

நானும் கலைஞரும் ஏறத்தாழ ஒரே வயது. கலைஞர் 1924-இல் பிறந்தார். நான் 1925-இல் பிறந்தேன். அந்தக் காலத்தில் அவரை “மு.க.” என்று சொல்லுவேன். அவ்வளவு நெருக்கம்.

நாகூரில் ஏழாம் வகுப்புடன் எனது படிப்பு முடிந்தது. அதற்கு மேல் படிக்க வறுமை இடம் கொடுக்கவில்லை. திருவாரூரில் எனது சிறிய தகப்பனார் இருந்தார். அவரது வீட்டுக்குப் போய் தங்கிக் கொண்டு, அவரது பலசரக்குக் கடையில் வேலை பார்த்தேன்.

திருவாரூரில் ஓடம்போக்கி ஆறு ஓடுகிறது. தண்ணீரை போக்கிவிட்டு மணல்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த ஆற்று மணலில் அடிக்கடி நீதிக்கட்சியின் கூட்டம் நடைபெறும். கூட்ட ஏற்பாட்டாளர்களில் கலைஞரும் ஒருவர்! அப்போது அவர் பள்ளிக்கூட மாணவர். அரைக்கால் சட்டை போட்டிருப்பார். பம்பரம் போல சுழன்று சுறுச்சுறுப்பாக இயங்குவார். நான் அவரையே பார்த்துக் கொண்டு இருப்பேன்.

இரவு ஏழு மணிக்குக் கூட்டம் என்றால், ஆறு மணிக்கே நான் போய்விடுவேன். மேடையில் ஏறிப் பாடி கூட்டம் சேர்ப்பேன். கூட்டம் சேர்ந்ததும், பொதுக்கூட்டம் தொடங்கும். கூட்டத்துக்குத் தலைவர் யார் தெரியுமா? பெரும்பாலும் அரைக்கால் சட்டை போட்டிருக்கும் கலைஞர்தான்.!

அன்று தொடங்கிய எங்கள் நட்பு இன்றும் தொடர்கிறது. என்றும் தொடரும். நாகூரில் நான் கட்டிய வீட்டுக்குக் ‘கலைஞர் இல்லம்’ என்று பெயர் சூட்டினேன். கலைஞரே வந்து திறந்து வைத்தார். எங்கள் வீட்டில் என்ன விழா நடந்தாலும் கலைஞர் வந்து கலந்துக் கொள்ளுவார். என் பிள்ளைகளின் திருமணத்துக்கு வந்து வாழ்த்தியிருக்கிறார்.

எனது கழகப் பற்றும், பணியும் கலைஞருக்குத் தெரியும். அவர் எனக்கு “எம்.எல்.சி.” (மேல் சபை உறுப்பினர்) பதவி கொடுத்துச் சிறப்பித்தார். “கலைமாமணி” விருது வழங்கிப் போற்றினார். எல்லாவற்றிற்கும் மேலாக எனக்குக் “கலைஞர் விருது” தந்து, என்னை புகழ்க் கோபுரத்தில் ஏற்றி வைத்தார்.

இப்போது அவர் புகழின் உச்சியில் இருக்கிறார். தமிழ் நாட்டின் முதல்வராக ஐந்தாவது முறை பதவி ஏற்று சாதனை படைத்துள்ளார். பதவி ஏற்றதும், பதவி மேடையிலேயே, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி, ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய், உழவர்களின் கூட்டுறவுக் கடன் ரத்து, சத்துணவில் வாரம் இரண்டு முட்டை என்று மூன்று ஆணைகள் பிறப்பித்து புதிய வரலாறு படைத்து விட்டார். அந்த ஆணைகளில் கலைஞர் கையெழுத்திடுவதை டி.வி.யில் பார்த்து மெய்ச்சிலிர்த்துப் போனேன்! முஸ்லிம் சமுதாயத்திக்கு இரு அமைச்சர் பதவியை கலைஞர் அளித்திருப்பது பெருமையாக இருக்கிறது.

இந்தத் தேர்தலில் கூட நீங்கள் பிரச்சாரம் செய்தீர்கள் போலிருக்கிறதே?

ஆமாம். வாணியம்பாடியில் இரண்டு நாளும், சென்னையில் மூன்று நாளும் முகாமிட்டு தெருத் தெருவாகப் பாட்டுப் பாடி, தி.மு.க. கூட்டணிக்கு வாக்குச் சேகரித்தேன்.

தி.மு.க.வும் வெற்றி பெற்று கலைஞர் முதல்வர் ஆகிவிட்டார்

அந்த மகிழ்ச்சியில் எனக்கு இளமைத் திரும்பி விட்டது.

கழகத்தில் இவ்வளவு ஈடுபாடு கொண்ட நீங்கள், கழகம் நடத்திய போராட்டங்களில் கலந்து கொண்டீர்களா? ‘கலைஞர்கள் கலந்துக் கொள்ள வேண்டியதில்லை’ என்று அறிஞர் அண்ணா விலக்கு அளித்தார் அல்லவா?

போராட்டம் என்றதும் ஓடி ஒளியும் கோழைகளாக, சிறை என்றதும் நடுங்குகிற கோழைகளாக சில கலைஞர்கள் கழகத்தில் இருந்தார்கள். அவர்களுக்காக அண்ணா இந்த விலக்கை அளித்தார். ஆனால், நான் வீரத்தமிழன், என் உடம்பில் தமிழ்க்குருதி ஓடுகிறது. கழகம் நடத்திய எல்லாப் போராட்டங்களிலும் நான் கலந்துக் கொண்டேன். 11 முறை சிறைக்குப் போயிருக்கிறேன்.

கழகத்தில் இவ்வளவு ஈடுபாடு கொண்ட நீங்கள், முஸ்லிம் லீக்குடனும் தொடர்பு வைத்திருந்தீர்களே, எப்படி?

அரசியல் பணிக்குக் கழகம், சமுதாயப் பணிக்கு முஸ்லீம் லீக் என்று வைத்துக் கொண்டேன்.

திராவிட இயக்கம், நாத்திக இயக்கம். முஸ்லிம் லீக், இஸ்லாமிய இயக்கம். இரண்டும் எப்படி ஒத்துப் போகும்?

‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்றார் அண்ணா. ‘ஏக இறைவன்’ என்பதுதான் இஸ்லாமியக் கொள்கையும். ‘நான் கைலி கட்டாத முஸ்லிம்’ என்றும் அண்ணா சொல்லியிருக்கிறார். எனவே இரண்டு இயக்கத்துக்கும் எந்த வேறுபாடு இல்லை.

நீங்கள் நாத்திகரா? ஆத்திகரா?

நான் இஸ்லாத்தை பின்பற்றுபவன். மார்க்கக் கடமைகளில் ஒரு சிறுகுறைகூட வைக்க மாட்டேன். எனது ஏழாம் வயதில் நோன்பு வைக்க என் அம்மா எனக்கு கற்றுக் கொடுத்தார்கள். அன்று முதல் 74 ஆண்டுகளாக தொடர்ந்து நோன்பு வைக்கிறேன். ஒரு நோன்பைக் கூட விட்டதும் இல்லை, விட்டுவிட்டு, பிறகு நோன்பு வைத்ததும் இல்லை. நாகூர் தர்கா ஆலோசனைக்குழு உறுப்பினராக இருந்தேன். வக்ப் வாரிய உறுப்பினராகவும், தலைவராகவும் இருந்திருக்கிறேன். நபிகள் நாயக (ஸல்) பிறந்தநாள் விழாக்கள், பள்ளிவாசல் திறப்பு விழாக்கள், தர்கா விழாக்களில் பாடுகிறேன். புனித ஹஜ் யாத்திரை போய் வந்தேன்.

நீங்கள் முஸ்லிம் லீக் உறுப்பினரா?

இல்லை. முஸ்லிம் லீக்கில் என்னை சேரச் சொன்னார்கள். மறுத்து விட்டேன். கழகம் உடைந்த போதுகூட என்னை மாற்று முகாமுக்கு இழுக்க மிகப்பெரிய முயற்சி நடந்தது. நான் கொஞ்சம் கூட இடம் தரவில்லை. என் இரத்தத்தை எடுத்து சோதித்தால் கூட அதில் வேறு கட்சியின் கலப்பு இருக்காது

அரசியல் பாட்டுக்களும் பாடுகிறீர்கள். ஆன்மீகப் பாடல்களும் பாடுகிறீர்கள். இரண்டுக்கும் ஏதாவது வேறுபாடு தெரிகிறதா?

நிச்சயமாகத் தெரிகிறது. அரசியல் பாடல்களில் ஒரு மிடுக்கு வேண்டும்! வீரம் வேண்டும்! ஆன்மீகப் பாடல்கள் என்றால், மெய்மறந்து பாடுவேன். அரசியல் பாட்டு உணர்ச்சிமயமான வேகம். ஆன்மீகப் பாட்டு உள்ளுணர்வு கூடிய பக்தி தாகம்.

ஆயிரக்கணக்கான பாடல் பாடியிருக்கிறீர்கள். அவற்றில் உங்களுக்கு மிகவும் பிடித்த பாடல்கள் என்று சில பாடல்கள் இருக்கும் அல்லவா?

ஒரு தாய் நூறு பிள்ளைகள் பெற்றாலும், எல்லாப் பிள்ளைகள் மீதும் ஒரே மாதிரி பாசத்துடன்தான் இருப்பாள். அதுபோல நான் பாடிய எல்லாப் பாடல்களுமே எனக்கு பிடித்தவைதான்.

ஆனாலும் ரசிகர்கள் திரும்பத் திரும்ப விரும்பிக் கேட்கும் பாடல்கள் என்று சில இருக்கும் அல்லவா?

அப்படியென்றால், அரசியலில் ‘அழைக்கின்றார் அழைக்கின்றார் அண்ணா’, ‘கல்லக்குடி கொண்ட கலைஞர் வாழ்கவே’, ‘எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு’ என்ற பாடல்களைச் சொல்லலாம்.

ஆன்மீகப் பாடல்களில், ‘இறைவனிடம் கையேந்துங்கள்’, ஐயாயிரம் ஆண்டுக்கு முன்னே நடந்தது அரபு நாட்டிலோர் தியாகம்’, மக்கத்து மலரே, மாணிக்கச் சுடரே’ ‘ மதினா நகருக்குப் போக வேண்டும்’ ‘மண்ணிலே பிறந்ததேனோ எங்கள் பெருமானே’ என்ற பாடல்களை குறிப்பிடலாம்.

தமிழ் தவிர வேறு மொழிகளில் பாடுவிர்களா?

இலங்கைக்குப் போயிருந்தபோது அன்றைய அமைச்சர் ஜெயவர்த்தனாவின் விருப்பப்படி சிங்கள மொழியில் ஒரு பாட்டு பாடினேன். மும்பைக்கு போயிருந்தபோது ‘ஓ துனியாகே ரக் வாலே’ என்ற இந்திப் பாடலை பாடினேன். அரபு நாடுகளில் அரபுப் பாடல்களை பாடியிருக்கிறேன். ஐதராபாத்தில் உருது பாட்டு பாடி, ரசிகர்களை மகிழ்வித்தேன்.

உங்கள் பாடல்களுக்கு யார் இசை அமைப்பது?

நானே இசையமைப்பேன். ‘அழைக்கின்றார் அழைக்கின்றார் அண்ணா’ பாடலும்’ ‘இறைவனிடம் கையேந்துங்கள்’ பாடலும் நானே இசை அமைத்தவை. என் குழுவினரும் இசை அமைப்பார்கள்.

உங்கள் பாட்டுக்கு இளையராஜா இசை அமைத்திருக்கிறாராமே?

ஆமாம். நான் எம்.எல்.சி.யாக இருந்தபோது ஒருநாள் காலையில் ராசா என் அறைக்கதவைத் தட்டினார். எனது பாடல்களுக்கு இசை அமைக்க விரும்புவதாகச் சொன்னார். “நாளை வந்து பாருங்கள் என்றேன். மறுநாள் வந்தார். ஒரு பாடல் தந்தேன்.இசை அமைத்தார். அது இசைத்தட்டில் பதிவாயிற்று. “தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு! கொஞ்சம் நில்லு! எங்கள் திருநபியிடம் போய்ச் சொல்லு! சலாம் சொல்லு” என்பது அந்தப் பாடல்.

உங்கள் புகழுக்கும் சிறப்புக்கும் முதல் காரணம் யார் என்று சொல்ல முடியுமா?

சந்தேகம் இல்லாமல் என் மதிப்புக்குரிய ஆசிரியரான புலவர் ஆபிதீன்தான். அவரே ஒரு பாடகர்தான். நான் மேடையேறிய பின் அவர் பாடுவதை நிறுத்திக் கொண்டார். எனக்கு பாடல்கள் எழுதிக் கொடுத்தார். இந்தப் பாடல்களே எனது சிறப்புக்கு முதல் காரணம்.

வேறு யார், யார் பாடல்கள் எழுதிக் கொடுத்தார்கள்?

அது ஒரு பெரிய பட்டியல். குணங்குடி மஸ்தான் சாகிபு, பாவேந்தன் பாரதிதாசன் பாடல்களை நான் பாடுகிறேன். பேராசிரியர் அப்துல் கபூர், சிக்கல் மதிதாசன், தா.காசிம் என்று சிலரைக் குறிப்பிடலாம். உடுமலை நாராயண கவியின் பாடலையும் பாடியிருக்கிறேண்.

திரைப்படங்களில் கூடப் பாடியிருக்கிறீர்கள் அல்லவா?

அதில் அவ்வளவு ஆர்வமில்லை. விரும்பி அழைப்பவர்களின் படங்களில் மட்டும் பாடுகிறேன்.

நீங்கள் மிகவும் ரசித்துப் பாடல் எது?

‘தாயிப் நகர வீதியிலே எங்கள் தாஹா ரசூல் நபி நடக்கையிலே, பாவிகள் செய்த கொடுமையினை, என்ணிப் பார்த்தால் நெஞ்சம் உருகுதம்மா! கண்களில் கண்ணீர் பெருகுதம்மா’ என்ற பாடலை என்னையே மறந்து அனுபவித்துப் பாடுவேன்.

உங்கள் கச்சேரிகளில் மறக்க முடியாதது இருக்கிறதா?

எவ்வளவோ இருக்கிறது. ஒன்று சொல்லுகிறேன். திருச்சியில் முஸ்லிம் லீக் மாநாடு. தேவர் மன்றத்தில் காங்கிரஸ் கூட்டம். அப்போதைய அமைச்சர் வெங்கட்ராமன் பேசுவதாக இருந்தது. மாநாட்டில் நான் பாடினேன். “இறைவன் மீது ஆணை! இனத்தின் மீது ஆணை! இறைமறை மீது ஆணை!” என்று பெருங்குரலில் பாடினேன். “ஈட்டியின் முனையில் நிறுத்தியபோதும், ஈமான் இழக்க மாட்டோம்! காட்டிக் கொடுக்கும் கயவர்கள் தம்மை, கனவிலும் விடமாட்டோம்!” என்று எனது பாட்டு தொடர்ந்தது. வெங்கட்ராமனுக்கு காது கிழிந்துவிடும் போல இருந்ததோ என்னவோ! “பிறகு வருகிறேன்” என்று சொல்லிவிட்டு பேசாமலே எழுந்து போய் விட்டார்.

உங்கள் குரலை பாதுகாக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

நான் எதுவும் செய்வதில்லை! இறைவன் கொடுத்ததை அப்படியே வைத்திருக்கிறேன். ஒருமுறை காரைக்காலில் நாயகம் (ஸல்) பிறந்தநாள் விழா. புதுக்கோட்டை திவான் அபிபுல்லா சாகிபு தலைமை தாங்கினார். கோட்டாறு சதாவதானி செய்குத் தம்பிப் பாவலர் உரையாற்றினார். நான் பாடினேன். என் பாட்டை கேட்ட பாவலர், “வாப்பா, இங்கே வா” என்று என்னை அருகில் அழைத்து, வாழ்த்தினார், “இறைவன் உனக்கு இனிய குரலை கொடுத்திருக்கிறான். அதைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது உன் பொறுப்பு” என்று அறிவுரை வழங்கினார். நான் அந்தப் பொறுப்பையும் இறைவனிடமே விட்டுவிட்டேன்.

நான் இளைஞனாக இருக்கும்போது சில நண்பர்கள் கள்ளுக் கடைக்கு போவார்கள். அவர்களுடன் நானும் போவேன். அவர்கள் கடைக்கு நுழைவார்கள். நான் கடலை வாங்கிக் கொண்டு, அருகிலிருந்த புளியமரத்தின் மீது ஏறிக்கொண்டு கடலையை உடைத்து தின்பேன்.

பீடி, சிகரெட்டுகளை தொட்டு அறியேன். இளநீர் விரும்பிக் குடிப்பேன். இந்த வயதிலும் குரல் அப்படியே இருக்கிறது என்றால், அதை இயற்கையின் அதிசயம், இறைவனின் அருட்கொடை என்றுதான் கூற வேண்டும்.

உங்கள் இளமைக் கால இனிய நண்பர்கள் யாரும் இப்போது நாகூரில் இருக்கிறார்களா?

இருக்கிறார்களே! என் இனிய நண்பர்களான இ.எம்.அலி மரைக்காயர், வித்துவான் எஸ்.எம்.ஏ.காதர் இருவரும் இப்போது நாகூரில் இருக்கிறார்கள். காரைக்கால் நண்பர் கலைமாமணி எஸ்.எம்.உமர் அவர்கள் சென்னையில் இப்போது வசித்துக் கொண்டிருக்கிறார். அ.மு.சயீது நீடூரில் இருக்கிறார்.

உங்களுக்கு 81 வயது ஆகி விட்டது. ஏதாவது ஆசை இருக்கிறதா?

சொந்தமாக ஒரு பள்ளிவாசல் கட்ட வேண்டும் என்று ஆசை இருக்கிறது. வக்ப் வாரியத் தலைவராக இருந்தபோது பள்ளிவாசல்கள் கட்ட, விடுதிகள் கட்ட, பள்ளிகள் கட்ட முடிந்த அளவு உதவி செய்தேன். பள்ளி வாசல்கள், பள்ளிக்கூடங்கள் கட்ட கச்சேரி நடத்தி நிதி திரட்டிக் கொடுத்திருக்கிறேன். எனது சொந்தப் பணத்தில் நானே ஒரு பள்ளிவாசல் கட்ட வேண்டும் என்று எனக்கு ஆசை. எனக்கு இனிய குரல் கொடுத்து வாழவைத்த இறைவனுக்கு இந்த நன்றியையாவது நான் செய்ய வேண்டும் அல்லவா? இறைவன் நாடினால் நிச்சயம் இந்த ஆசை நிறைவேறும்.

தட்டச்சு & வலைப்பதிவு : அப்துல் கையூம்

http://nagoori.wordpress.com/2009/10/21/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%A9%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%87-2/

  • கருத்துக்கள உறவுகள்

நாகூர் ஹனீபாவுடன் ஒரு நேர்காணல்

------

------

நாகூர் ஹனீபாவின் குரலுக்கு நான் அடிமை. அற்புதமான ஒரு குரல்.

என்னுடைய பக்திப்பாடல் வரிசையில் அவரது பாடலும் இடம் பிடித்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல குரல் வளமுள்ள் பாடகன்.............ப்திவுக்கு நன்றி

பாடகர்களில் பலர் தமிழ் உச்சரிப்பில் கவனம் செலுத்துவதில்லை, விதிவிலக்காகவும் சிலர் உளர் .உ.ம். சீர்காழி கோவிந்தராஜன் , நாகூர் கனீபா, டீ ஆர் மகாலிங்கம், ரி எம் எஸ். அதி உச்சஸ்தாயியில் பாடும் கனீபாவுக்கு நிகர் அவரே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.