Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செம்மொழி மாநாடு: கலைஞர் எதற்காகக் கூச்சப்படவேண்டும்?

Featured Replies

முதல்வர் கருணாநிதி நடத்தியிருக்கும் செம்மொழி மாநாடு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முன்னர் நடத்திய வளர்ப்புமகன் திருமணத்தை அப்படியே நினைவுபடுத்தியது. வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு அமைச்சர் பெருமக்கள் விழா ஏற்பாடுகளை கவனித்ததாக இருக்கட்டும், போலீசு அதிகாரிகள் குவிக்கப்பட்டதாக இருக்கட்டும், பட்டுப் புடவைகள் சரசரக்க மன்னர் குடும்பத்தினர் முன் வரிசை சோபாக்களில் கொலுவிருந்ததாகட்டும்.. எல்லாம் அதே காட்சிகள்தான். எனினும் இரண்டுக்கும் இடையில் சிறியதொரு வேறுபாடு இருப்பதை நாம் மறுத்துவிட முடியாது. சுதாகரனின் திருமணத்தை தமிழக அரசு நடத்தவில்லை. செம்மொழி மாநாட்டை தமிழக அரசுதான் நடத்தியிருக்கிறது.

அரசு எந்திரம் முழுவதையும் அடித்து வேலை வாங்கி, ஐ.ஜி முதலான அதிகாரிகளை சாம்பார் வாளி தூக்கவைத்த போதிலும், குடும்ப விழாவை அரசு விழா என்று அறிவிக்கத் தயங்கிய புரட்சித்தலைவியின் நேர்மையுள்ளத்தை வியப்பதா, அன்றி, அரசு விழா என்ற அறிவிப்பின் கீழ் குடும்ப விழாவை நடத்திக் காட்டிய கலைஞரின் ராஜதந்திரத்தை வியப்பதா தெரியவில்லை. என்ன பெயரிட்டு அழைத்தாலென்ன, ரோஜா ரோஜாதான்!

இது சுயவிளம்பர மாநாடு அல்ல என்று ஜெயலலிதாவுக்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார் கருணாநிதி. “சூரியக் குடும்பம் அழைக்கிறது” என்று சுவரொட்டி ஒட்டியிருக்கிறார்கள் உடன்பிறப்புகள். அவர்கள் பிரச்சினை அவர்களுக்கு. கலைஞர் அழைக்கிறார், தளபதி அழைக்கிறார், அழகிரி அழைக்கிறார் என்று தனித்தனியாக போஸ்டர் அடித்து எதிர்கோஷ்டியின் பொல்லாப்பை சம்பாதிப்பதை விட குடும்பம் என்று குறிப்பிடுவது பாதுகாப்பானதல்லவா?

செம்மொழி மாநாட்டின் இனியவை நாற்பது பேரணியைப் பார்வையிடுவதற்குப் போடப்பட்டிருந்த மேடையில் நாற்காலிகள் அனைத்தையும் சூரியக் குடும்பத்தின் கோள்கள் ஆக்கிரமித்துக் கொண்டுவிட்டதால், வ.மு.சேதுராமன் உள்ளிட்ட தமிழறிஞர் பெருமக்கள் நாற்காலிகளுக்குப் பின்னால் நின்றபடி பேரணியை எக்கி எக்கிப் பார்த்தனர் என்று எழுதி அந்தக் காட்சியை புகைப்படம் எடுத்து வெளியிட்டிருந்தது ஜூனியர் விகடன். சாலையில் “இனியவை நாற்பது”. மேடையில் “இன்னா நாற்பது” என்று எடுத்துக் கொள்ளவேண்டியதுதான்

“லூயி போனபார்ட்டின் பதினெட்டாம் புரூமேர்” என்ற தனது நூலில், பிரான்சில் திடீர்புரட்சியின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றிய லும்பன் கூட்டத்தைப் பற்றி கார்ல் மார்க்ஸ் எழுதியது நினைவுக்கு வருகிறது.

“அதிகமான கூச்சல் போட்டுக் கொண்டு கவுரவம் என்பதே சிறிதுமில்லாமல் பிடுங்கித் தின்பதைப் பிழைப்பாகக் கொண்ட கூட்டம்… கோமாளித்தனமான கம்பீரத்தோடு, விலையுயர்ந்த கோட்டுகளுக்குள் உடலைத் திணித்துக் கொண்டு.. அரசவைக்குள், மந்திரிசபைக்குள், நிர்வாகத்தின் தலைமையான இடத்துக்குள்.. முண்டியடித்துக் கொண்டு நுழைகிறது… இந்தக் கூட்டத்திலேயே மிக நல்லவர்களைக் கூட அவர் எங்கே இருந்து வருகிறார் என்று யாருக்கும் தெரியாது என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்?” என்கிறது மார்க்ஸின் வருணனை.

மன்னார்குடி குடும்பத்துக்குப் பொருந்தக் கூடிய இந்த வருணனை கோபாலபுரம் குடும்பத்துக்குப் பொருந்தாதா என்ன? நீ மந்திரியா நானும் மந்திரி; நீ கவிதாயினியா, நானும் கவிதாயினி; உன் மகன் சினிமா தயாரிப்பாளனா, என் மகனும் சினிமா தயாரிப்பாளன்; நீ கேபிள் டிவியா, நானும் கேபிள் டிவி; உனக்கு வி.ஐ.பி நாற்காலியா, எனக்கும் வி.ஐ.பி நாற்காலி; உனக்கு வலப்புறமா, எனக்கு இடப்புறம்; உனக்குத் தலைமாடா, எனக்கு கால்மாடு… என்ற இந்த அடிதடியில் தமிழறிஞர்களுக்கு நாற்காலி கிடைக்காததா பிரச்சினை? மிதிபட்டுச் சாகாமல் தப்பினார்களே, அதுவே தமிழ்த்தாய் செய்த தவப்பயன்.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் மொத்தம் பதினைந்து இருபது நிமிடம் செம்மொழி மாநாட்டுக் கவியரங்கத்தை மட்டும் தொலைக்காட்சியில் பார்த்திருப்பேன். “இப்படியொரு கூட்டத்தை யார் கூட்டமுடியும், கலைஞரே நீர் கூட்டமுடியும்” – இது அப்துல் ரகுமான். “மேகங்களே நீங்கள் அங்கிருந்தே கைதட்டுங்கள், கீழே தமிழர்கள் இருக்கிறார்கள் கைதட்டுவதற்கு”- இது வைரமுத்து. “நீங்கள் தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்ததனால்தான் தண்டவாளமும் தமிழ் கற்றுக் கொண்டது” – இது ந.முத்துக்குமார். இவர்களையெல்லாம் கவிஞர்கள் என்று ஒப்புக்கொள்ளும் தமிழ் கூறும் நல்லுலகம், அழகிரியின் மகள் கயல்விழியை மட்டும் கவிஞர் இல்லை நிராகரித்துவிடுமா?

தமிழ் சினிமாவின் கிளைமாக்ஸ் காட்சியில், ஹீரோவின் பாட்டையும் அய்யனார் சிலையின் குளோசப்பையும் மாற்றி மாற்றிக் காட்டுவது போல, கலைஞரைப் புகழ்ந்து பாடப்படும் ஒவ்வொரு வரிக்கும், முன்வரிசையில் அமர்ந்திருக்கும் கலைஞரின் முகத்தை நோக்கி காமெரா திரும்பியது. பெரும்பாலும் கலைஞரின் முகத்தில் சலனம் இல்லை.

“ஒன்று இரண்டு என்று வகைப்படுத்தி என்னைப் பாடு” என்று சிவபெருமான் சொன்னவுடனே கே.பி.சுந்தராம்பாள் “ ஒன்றானவன் உருவில் இரண்டானவன்..” என்று பாடுவதையும், அதற்கு சிவபெருமான் ரியாக்சன் கொடுப்பதையும் பார்த்திருக்கிறோம். ஒரு அவ்வையார் பாடினால் ரியாக்சன் கொடுக்கலாம். இருபது முப்பது அவ்வையார்களை மேடையேற்றி விட்டு, அடுத்தடுத்துப் பாடவிட்டால் எப்பேர்ப்பட்ட சிவாஜி கணேசனாக இருந்தாலும் முகபாவம் காட்டுவது கஷ்டம்தானே? “முடியலடா சாமி” என்று கலைஞர் எழுந்து போய்விடுவார் என்றுதான் நினைத்தேன். இல்லையே.

ரியாக்சன் காட்டவில்லை என்ற காரணத்தினால், இத்தகைய “முகத்துதிக் கவிதைகளை கலைஞர் விரும்பவில்லை போலும்” என்று அவசரப்பட்டு முடிவுக்கு வருபவர்கள் வரலாறு தெரியாதவர்கள். அல்லது மாநாட்டில் கலைஞர் ஆற்றிய துவக்கவுரையைக் கேட்காதவர்கள். அஞ்சுகம் முத்துவேலருக்கு மகனாகப் பிறந்து, அரை டவுசர் போட்ட காலத்திலேயே தமிழ்த்தொண்டாற்றி.. என்று தனது உரையைத் தொடங்கினார் கலைஞர். இந்தக் கதையை எத்தனை ஆயிரம் முறை கூறிய பின்னரும் “போதும்” என்று அவருக்குத் தோன்றவில்லை. இது தெரிந்திருப்பதனால்தான் ரத்தம் வரும் வரை சொறிகிறார்கள் கவிஞர்கள்.

இருப்பினும் எந்தப் புகழுரையைக் கேட்டாலும், நினைவாற்றல் மிக்க கலைஞருக்கு அது ஏற்கனவே எங்கேயோ கேட்டது போலப் பொறி தட்டுகிறது. 460 கோடியை வாரி இரைத்தும் கலைஞரை முகம் மலரச் செய்யும் ஒரு கவிதை வரியைக் கூட கவிஞர்களால் துப்பமுடியவில்லை. கலைஞர் முகம் மலர்வது இருக்கட்டும். கூட்டத்திடமிருந்து கூட கைதட்டல் வாங்கமுடியவில்லை. முகத்துதியில் ஒருவரை ஒருவர் முந்த முயன்று மூச்சிரைத்த கவிஞர்களுக்கும் கூட “முடியலடா சாமி” என்ற நிலைதான்.

அன்றாடம் புதிது புதிதாக மன்னனைப் புகழ்ந்து பாட வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்த அரசவைக் கவிஞர்கள் எனப்படுவோர், தம் பதவியைத் தக்கவைத்துக் கொள்ள அந்தக் காலத்தில் என்னபாடு பட்டிருப்பார்கள், தமிழ் என்னபாடு பட்டிருக்கும் என்ற கோணத்தில், தமிழின் வரலாற்றையும், தமிழனின் வரலாற்றையும் புரிந்து கொள்வதற்க்கு ஏற்ற மிகச்சிறந்த காட்சி விளக்கமாக அமைந்திருந்தது கவியரங்கம்.

“கலைஞருக்குக் கொஞ்சம் கூடக் கூச்சமாக இருந்திருக்காதா?” என்று ஒரு நண்பர் என்னிடம் கேட்டார். கூச்சமா? வசனத்துக்கு வாயசைக்கும் நடிகன் தனக்கு ரசிகர் மன்றம் வைத்துக் கொள்ளக் கூச்சப்படுகிறானா? தெருமுனைக்குத் தெருமுனை தனது திருமுகத்தையே டிஜிட்டல் பானரில் பார்த்துக் கொள்ள தலைவர்கள் கூச்சப்படுகிறார்களா? லஞ்சம் கேட்க போலீசார் கூச்சப்படுகிறார்களா? பேராசிரியப் பெருமக்கள் வட்டிக்கு விடக் கூச்சப்படுகிறார்களா? ஐந்திலக்க சம்பளம் வாங்கும் ஐ.டி ஊழியர்கள் ஊதாரித்தனமாக செலவு செய்ய கூச்சப்படுகிறார்களா? அதிகாரிகளும் அறிஞர் பெருமக்களும் அழகிரிக்கு கூழைக்கும்பிடு போடக் கூச்சப்படுகிறார்களா? கலைஞர் மட்டும் எதற்காகக் கூச்சப்படவேண்டும்?

அப்படியெல்லாம் கூச்சப்படுவதென்றால் அதற்கு ஒரு பண்பாடு வேண்டும். அந்தப் பண்பாட்டுக்கு ஒரு அறமும் சில விழுமியங்களும் அடிப்படையாக இருக்கவேண்டும். அவ்வாறு கூச்சப்படாதவர்களைக் கண்டு காறி உமிழும் மனோபாவம் அந்தச் சமூகத்தின் உளவியலில் கொஞ்சமாவது எஞ்சியிருக்க வேண்டும். இருக்கிறதா?

இந்தக் கூத்தில் பங்கேற்ற ஆன்றோர்கள், சான்றோர்கள். அறிஞர்களில் எத்தனை பேர் அடிக்கு பயந்து வந்தவர்கள். எத்தனை பேர் அப்படி சொல்லிக் கொள்கின்ற காரியவாதிகள்? யாராவது கண்டுபிடிக்க முடியுமா?

ஈழத்தமிழனுகாகக் குரல்கொடுத்த தமிழர்களையெல்லாம் தடாவில் தூக்கி உள்ளே போட்ட காலத்தில்தான் தஞ்சையில் உலகத்தமிழ் மாநாடு நடத்தினார் ஜெயலலிதா. சிவத்தம்பி அதற்கும் வர விழைந்தார். எனினும் விரட்டப்பட்டார். இன்று ஈழத்தின் கல்லறை மீது நடக்கும் செம்மொழி மாநாட்டுக்கு வருகை தந்து “அரசியல் வேறு – தமிழ் வேறு” என்று தத்துவம் கூறுகிறார். இலங்கை அரசு முள்ளிவாய்க்காலில் ஒரு முத்தமிழ் மாநாட்டை நடத்தினால் அதற்கும் அவரே தலைவர். ஒருவேளை தனி ஈழம் கண்டு அங்கே ஒரு உலகத்தமிழ் மாநாட்டை தம்பி நடத்தியிருக்கக் கூடுமானால், அதற்கும் அவரே தலைமை தாங்கியிருக்க கூடும்.

கலைஞர் மட்டும் எதற்காகக் கூச்சப்பட வேண்டும்?

தான் ஆற்றியிருக்கும் தமிழ்த் தொண்டுக்கு உரிய மரியாதையை வழங்கத் தெரியாத தமிழனுக்கு, அவன் வரிப்பணத்திலிருந்தே தமிழ்ப் பண்பாட்டைக் கற்றுக் கொடுக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் கலைஞரும், நியாயமான முறையில் பாகம் பிரிக்கப்படாத தங்களது பிதுரார்ஜித சொத்தாக தமிழகத்தைக் கருதும் அவரது குடும்பத்தினரும் எப்படிக் கூச்சப்பட முடியும்? கனிமொழிதான் பாவம், ரொம்பவும் கஷ்டப்பட்டு கூச்சப்படுகிறார்.

இலக்கியவாதிகள் முகத்தில்தான் என்ன கம்பீரம்! வார்த்தைகளால் நக்கிய புலவர் பெருமக்களின் மீசையில்தான் எத்தனை முறுக்கு? மேடையை அலங்கரித்த நாற்காலிகளுக்குத்தான் எத்தனை மிடுக்கு!

யாரும், எதுவும் கடுகளவும் கூச்சப்பட்ட மாதிரி தெரியவில்லை. நாணமும் அச்சமும் நாய்கட்கு வேண்டும் – அவை தமிழனுக்கு எதற்கு? திராவிட இயக்கத்தின் நிழலில் தழைத்த புலவர் பெருமக்களின் பாரம்பரியம் மிக்க பிழைப்புவாதம் ஒருபுறம். தாராளமயக் கொள்கைகளால் அதிகாரபூர்வப் பண்பாடாக ஞானஸ்நானம் பெற்றிருக்கும் புதிய பிழைப்புவாதம் ஒருபுறம். செம்மொழி மாநாடு முன்னைப் பழைமையும் பின்னைப் புதுமையும் இணைந்த புதியதொரு வீரிய ஒட்டு ரகத் தமிழ்ப் பண்பாட்டை நம் கண்முன்னே விரித்துக் காட்டியது.

இதுதான் தமிழகம்.

“ஈழப்படுகொலைக்குப் பின்னரும் திமுகவும் காங்கிரசும் தமிழகத்தில் வெற்றி பெற முடிந்தது எப்படி?” என அன்று வியந்தோர் உண்டு. “தமிழர்களின் வாக்குகளைப் பணம் கொடுத்து வாங்கிவிட்டார்கள்” என்பது பாதி உண்மைதான். “விற்றுக் கொள்ள முன்வந்தது” மீதி உண்மை. அன்று ஈழப்படுகொலைக்கு எதிராகப் பாமரத் தமிழர்கள் சிலர் தீக்குளித்தார்கள், பலர் சிறை சென்றார்கள். இன்று படித்த அறிஞர்கள் யாரும் “குற்றம் குற்றமே” என்று முழங்கிச செம்மொழி மாநாட்டை எதிர்த்துச் சிறை சென்றதாகத் தகவல் இல்லை.

பாலைவனச் சோலை போல மதுரை வழக்குரைஞர்கள், உயர்நீதிமன்றத்தில் தமிழ் கோரி உண்ணாவிரதத்தைத் துவக்கினார்கள். சென்னை வழக்குரைஞர்கள் தொடர்ந்தார்கள். “நீதிமன்ற வளாகத்துக்குள் நீதியின் குரலையும் காக்கையின் குரலையும் தவிர வேறு எந்தக் குரல் ஒலித்தாலும் அது சட்டவிரோதம்” என்று நீதியரசர்கள் கூறிவிட்டார்கள். “வளாகத்துக்கு வெளியே காக்கையின் குரலைத் தவிர வேறு எந்தக் குரல் ஒலித்தாலும் அது செம்மொழிக்கு விரோதம்” என்று காவல்துறை கூறிவிட்டது. எனவே, உலக மொழிகளுக்கெல்லாம் தாய் மொழியான தமிழ், தற்கொலை செய்து கொள்ள முயன்ற குற்றத்துக்காக ரிமாண்டில் வைக்கப்பட்டு மாநாடு முடியும் வரை பாதுகாக்கப்பட்டது.

“சூரியக் குடும்பம் அழைக்கிறது” என்று உடன்பிறப்புகள் கூறியிருந்த உண்மையை மொழிபெயர்த்து, “இது கருணாநிதியின் குடும்பவிழா”என்று சுவரொட்டி ஒட்டினார்கள் ம.க.இ.க தோழர்கள். “அதை நாங்க சொல்ல்லாம். நீ சொல்லக்கூடாது” என்று சிறை வைக்கப்பட்டார்கள்.

தமிழகமெங்கும் தேடுதல் வேட்டை, கியூ பிரிவின் கண்காணிப்பு. ஒரு பகுதியில் ஓட்டைப் பிரித்து வீட்டுக்குள் குதித்து தமிழ் விரோதிகளான ம.க.இ.க தோழர்களைத் தேடியது போலீசு. திருச்சியில் ரயில்வே பிளாட்பார்மில் சுமை இறக்கிக் கொண்டிருந்த புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியைச் சேர்ந்த தொழிலாளர்கள் 15 பேரை, அங்கேயே போலீசு வளைத்துப் பிடித்தது. சென்னையில் சுவரொட்டி ஒட்டியதற்காக கைது செய்யப்பட்ட பெண்கள் விடுதலை முன்னணியின் செயலர், ஊடகங்களைத் தொலைபேசியில் அழைத்து செய்தி சொன்னபோது, “அம்மா நாங்கள் செம்மொழி மாநாட்டுக்கு எதிராக எந்தச் செய்தியும் கவர் பண்ணுவதில்லை” என்று பதிலளித்திருக்கின்றனர் பத்திரிகையாளர்கள். ஊடகங்கள் செம்மொழியால் எப்படி கவர் பண்ணப்பட்டிருக்கின்றன என்பது தினமணி தலையங்கத்தைப் பார்த்த மாத்திரத்தில் தெரிந்ததே! தினமலர் பரவாயில்லை, “செம்மொழி மாநாட்டை எதிர்த்த நக்சலைட்டுகள் கைது” என்று செய்தி போட்டு, தமிழின விரோதிகளைத் தமிழர்களுக்கு அடையாளம் காட்டியது.

வழக்குரைஞர் போராட்டத்தைச் சிக்கெனப் பற்றிக் கொண்ட ஜெயலலிதா, உடனே ஒரு ஆர்ப்பாட்டத்தை அறிவித்து அதில் தோழமைக் கட்சிகளும் கலந்து கொள்ளவேண்டும் என்று ஆணையிட்டார். வலது, இடது கம்யூனிஸ்டு தொண்டர்கள் தலா 4 கொடியுடன் கலந்து கொண்டனர் . ராஜாவும் எச்சூரியும் செம்மொழி மாநாட்டில் கலந்து கொண்டனர். கூட்டணியால் வேறுபட்டாலும் தமிழால் ஒன்றுபடுவது என்பது இதுதான் போலும்!

“தமிழர்களே, கலைஞர் அழைக்கிறார். சாதி, மத, இன, மொழி வேறுபாடுகளைக் கடந்து செம்மொழி மாநாட்டில் ஒன்றுபடுவோம் வாரீர்!” என்று திமுகவினர் சென்னையில் ஒரு விளம்பரத் தட்டி வைத்திருந்தனர். மொழி வேறுபாட்டைக் கடந்த மொழி உணர்வு! அடடா, எப்பேர்ப்பட்ட கவிதை! “சூடு, சொரணை, சுயமரியாதை கடந்து” என்பதையும் சேர்த்து எழுதியிருக்கலாம். விசேடமாகக் குறிப்பிட வேண்டிய அளவுக்கு அவை முக்கியத்துவம் வாய்ந்தவையல்ல என்று உடன்பிறப்புகள் எண்ணியிருக்கக் கூடும்.

ஐந்து நாள் மாநாடு, கவியரங்கம், ஆய்வரங்குகள், 998.4 ஆய்வுக் கட்டுரைகள், ரகுமானின் யாதும் ஊரே யாவரும் கேளீர்.. ஆகிய அனைத்தின் சாரப்பொருளையும் ஒரே வரியில் கூறிவிட்டது, உடன்பிறப்புகளின் விளம்பரத்தட்டி உதிர்த்திருந்த அந்தக் கவிதை.

அம்மா நடத்திய உலகத் தமிழ் மாநாட்டுக்கும் அய்யா நடத்திய செம்மொழி மாநாட்டுக்கும் என்ன வேறுபாடு? அம்மா நடத்திய குடும்ப விழாவுக்கும் அய்யா நடத்தியிருக்கும் அரசு விழாவுக்கும் என்ன வேறுபாடு? அம்மா ஆட்சிக்கும் அய்யா ஆட்சிக்கும் என்ன வேறுபாடு?

“கோலெடுத்தால் குரங்காடும்” என்பது அம்மாவின் அரசாட்சித் தத்துவம். “கோல் முனையில் வாழைப்பழத்தை தொங்கவிட்டால் எப்பேர்ப்பட்ட குரங்கும் கரணம் போடும்” என்பது அய்யாவின் ஆட்சித் தத்துவம்.

மாநாட்டின் இறுதியில் தமிழுக்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கப்போவதாக அறிவித்திருக்கிறார் கலைஞர். அப்படியானால் ஏற்கெனவே செம்மொழி மாநாட்டுக்கு ஒதுக்கப்பட்ட 460 கோடி?

அதுதான் கோலின் முனையில் கட்டப்பட்ட வாழைப்பழம்.

அப்போ இந்த வாழைப்பழம்? அதாண்ணே இது.

http://www.vinavu.com/2010/06/29/karuna-semmozhi-narcissism/

தொடர்புடைய பதிவுகள்

* செம்மொழி மாநாட்டை எதிர்த்த தோழர்கள் தமிழகமெங்கும் கைது ! போஸ்டர் கிழிக்கிறது போலீஸ்

* செம மொழி செம்மொழி ! கேலிச்சித்திரங்கள் !!

* செம்மொழி மாநாடு – கருணாநிதி தமிழுக்கு செலுத்தும் இறுதி மரியாதை !!

* செம்மொழி மாநாடு கண்ட கருணாநிதி சோழன் பராக்….பராக்!!

* நீதிமன்றத்திற்குள் செல்லாத தமிழுக்கு செம்மொழி மாநாடு ஒரு கேடா?

post-5592-088395100 1277810435_thumb.jpg

முதல்வர் கருணாநிதி நடத்தியிருக்கும் செம்மொழி மாநாடு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முன்னர் நடத்திய வளர்ப்புமகன் திருமணத்தை அப்படியே நினைவுபடுத்தியது

அரசியலை தாண்டிய செம்மொழி மாநாடு எண்டுதான் விடுதலைப்புலிகள் அழைப்பு விடுத்து ஏற்றுக்கொண்டனர்... ஆனால் திமுக கூட்டணி கட்ச்சிகளால் மட்டும் நடத்தப்பட்டு அவர்களுக்கு மட்டுமே அழைப்பு விடப்பட்ட, கலைஞ்ரை புகழ் எண்று ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்வாகத்தான் செம்மொழி மாநாடு திகழ்ந்தது என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்...

  • கருத்துக்கள உறவுகள்

தயா என்ன காதில பூ சுத்த நினைக்கிறீரோ? விடுதலைப்புலிகள் எங்க அறிக்கை விட்டவையள்? அது தமிழ்நாடு உளவுத்துறையெல்லோ விட்டது.

மன்னார்குடி குடும்பத்துக்குப் பொருந்தக் கூடிய இந்த வருணனை கோபாலபுரம் குடும்பத்துக்குப் பொருந்தாதா என்ன? நீ மந்திரியா நானும் மந்திரி; நீ கவிதாயினியா, நானும் கவிதாயினி; உன் மகன் சினிமா தயாரிப்பாளனா, என் மகனும் சினிமா தயாரிப்பாளன்; நீ கேபிள் டிவியா, நானுமாடும் கேபிள் டிவி; உனக்கு வி.ஐ.பி நாற்காலியா, எனக்கும் வி.ஐ.பி நாற்காலி; உனக்கு வலப்புறமா, எனக்கு இடப்புறம்; உனக்குத் தலைமாடா, எனக்கு கால்

உன் மகன் டாக்டரா என்மகனும் டாக்டர்

நீ புலம் பெயர்புலியா நானும் புலம்பெயர் புலி

நீ துரோகியா நானும் துரோகி

நீ மகிந்தாவை சந்திக்கப்போறீயா நானும் சந்திக்கப்போறன்

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழனுகாகக் குரல்கொடுத்த தமிழர்களையெல்லாம் தடாவில் தூக்கி உள்ளே போட்ட காலத்தில்தான் தஞ்சையில் உலகத்தமிழ் மாநாடு நடத்தினார் ஜெயலலிதா. சிவத்தம்பி அதற்கும் வர விழைந்தார். எனினும் விரட்டப்பட்டார். இன்று ஈழத்தின் கல்லறை மீது நடக்கும் செம்மொழி மாநாட்டுக்கு வருகை தந்து “அரசியல் வேறு – தமிழ் வேறு” என்று தத்துவம் கூறுகிறார். இலங்கை அரசு முள்ளிவாய்க்காலில் ஒரு முத்தமிழ் மாநாட்டை நடத்தினால் அதற்கும் அவரே தலைவர். ஒருவேளை தனி ஈழம் கண்டு அங்கே ஒரு உலகத்தமிழ் மாநாட்டை தம்பி நடத்தியிருக்கக் கூடுமானால், அதற்கும் அவரே தலைமை தாங்கியிருக்க கூடும்.

இந்தியா இராணுவகாலத்தில் இடைக்கால நிற்வாகசபையில் சிவத்தம்பி வருவதை விடுதலைப்புலிகள் விருப்பவில்லை. சிவத்தம்பி எப்படிப்பட்டவர் என்று அப்பொழுதே தெரிந்திருந்தது.

"வினவு: - உலக பயகரவாதிகள் கூட்டமொன்றின் தளம் எனக் கூறுகிறார்கள்!

"வினவு" - உலக பயகரவாதிகள் கூட்டமொன்றின் தளம் எனக் கூறுகிறார்கள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.