Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீரவணக்கம் லெப்.கேணல் ராஜன் - லெப்.கேணல் மாருதியன்

Featured Replies

27.08.1992ம் ஆண்டு யாழ். மாதகல் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் ராஜன் அவர்களின் 18ம் ஆண்டு நினைவும் 27.08.1995 அன்று அம்பாறை மாவட்டம் வம்மியடிக்குளம் பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் ரஞ்சன்(மாருதியன்) அவர்களின் 15ம் ஆண்டு நினைவும்

இன்றாகும்.

ltcolranjan.jpg

உறுதியின் உறைவிடம்.

ltcolrajan.jpg

அன்றையநாள் தமிழீழத்திற்குத் துயரந்தரும் நாளாய் விடிந்தது. அன்று காலைதான் ராஜன் எம்மைவிட்டுப் பிரிந்தான்.

முதல்நாள் மாலை, பண்டத்தரிப்பில் நின்ற போராளிகளைப் பார்க்க வந்த ராஜனிடம், எதிரியின் சிறிய படையணி ஒன்றின் மீதான சிறியதாக்குதல் திட்டம் ஒன்றைக் கூறினர் கோபியும் தோழர்களும்.

எதிரியின் புதிய நில அக்கிரமிப்பை கண்டு குமுறிக்கொண்டிருந்த ராஜன் உடனடியாக ஒப்புதல் தந்துவிட, சிறிதாய்த் திட்டமிடப்பட்டிருந்த அந்தத் தாக்குதலுக்கான ஒழுங்குகள் இரவோடிரவாக நடந்து முடிந்தன.

திட்டம் மிகவும், சிறியதாகவும், சுலபமானதாகவும் எதிர்பார்க்கப்பட்டதால், திட்டம்பற்றி அதில் நின்றவர்களைத் தவிர வேறு எவருக்கும் எதுவுமே தெரியாது போய்விட்டது.

திட்டத்தின் வெற்றி பற்றிய “வோக்கி”ச் செய்தியை எதிர்பார்த்தபடி காந்திருந்தான் ராஜன்.

கிளைமோர் சத்தம் கேட்டவுடன் கோபி... கோபி... என்று கூப்பிட்டும் தொடர்பில்லாமற்போனது.

தலையில் காயத்துடன் கோபியைக் கண்டதும் அவன் வழமையான போர்க்களத்து ராஜனாய் மாறிப்போனான்.

என்ன நடந்ததோ? இரவு கிளைமோர் வைத்தவர்கள் கவனமின்றி நிற்க எதிரி கண்டானோ? இல்லை எம்மவர் ஏதேனும் “வோக்கி”யில் மாறிக் கதைத்துவிட்டனரோ? வேவு பார்த்தோர் தவறோ? வேறு பிழைகளோ?

கோபியின் அணியைச் சூழ்ந்து எதிரிகள். தனி ஆளாய் உள்ளே புகுந்த ராஜன், எல்லோரையும் பின்னுக்கு அனுப்பி, நின்று அடிபட்டு... அவன் வரவில்லை.

கணேஸ், கிங்ஸ்லி என்று எட்டுப் பேருடன் ஒன்பதாவது ஆளாய் ராஜனும் வரவில்லை.

ராஜன் இல்லை என்ற செய்தி மெல்லப்பரவ அதிர்ந்து துடித்தது தமிழீழம்.

அவன் மீது கொள்ளை அன்பை வைத்திருந்த தலைவர், உயிராய்ப் பழகிய நண்பர்கள், அவனால் உருவான போராளிகள், அவனைக் காத்த மக்கள் என்று தமிழீழம் அழுது துடித்தது.

ராஜன்-றோமியோ நவம்பர்.

எங்கள் போராளிகள் மனத்தில் நிறைந்துவிட்ட இனியபுயல், இறுகிய பாறை.

அடிக்கடி ரவைகளால் தைக்கப்பட்டு, பிய்பட்டு, இரத்தம் கொட்டி, தழும்புகளால் நிறைந்த தேகம்.

அவனது மனம் மட்டும் தளரவில்லை அது இறுகிப் பாறையாய் உருவாகியிருந்தது.

1987ன் தொடக்கப் பகுதியில் ஓர் இருண்டபொழுது. யாழ். பொலீஸ் விடுதியும் தொலைத்தொடர்புக் கட்டடமும் கோட்டைக்குத் துணைாய் நிமிர்ந்து நின்றன.

அதைநோக்கி இருளோடு இருளாய் நகரும் புலிவீரர்கள்

அதில் ஒருவானாய் ராஜன்.

தன் கை ஆயுதத்தைத் தான் பார்க்கமுடியதாக காரிருள்.

பின்னால் நிற்பவரின் மூச்சுச் சுடும்.

வியர்வைாற் குளிக்கும் தேகம்.

தாகம் தண்ணீருக்காய் மட்டுமல்ல, அதற்கும் மேலாய், உயர்வாய்,

தாகம் தணிக்க உயிர்கொடுக்கத் தயங்காத வேகம், உறுதி,

இது எம் தாயகம், எங்கள் பூமி.

இங்கு அந்நியனுக்கு என்ன வேலை?

இன்று வெல்வோம்.

அந்நியன் பாடம் படிப்பான்.

அக்காலத்தில் அவன் காரைநகர் கடற்படைக் காவலரண் பொறுப்பாளன். அதற்கு முந்திய சண்டையிலெல்லாம் தன் முத்திரையை ஆழமாய்ப் பதித்திருந்தான். கிட்டண்ணை அவனைக் கவனித்து வைத்திருந்தார். இந்தச் சண்டைக்கொன கிட்டண்ணையால் விசேடமாக அழைக்கப்பட்டிருந்தான். ராதா அண்ணை தலைமையில் உள்நுழைந்த குழுவில் ராஜனும் ஒருவன்.

உள்நுழைந்தோருக்கு குறுகியதாயும், வெளியில் நிற்போருக்கு நீண்டதாயும் அமைந்த இரவு விடிந்தபோது...

தனது படைவீரர்களை “யாழ்ப்பாணக் காடுகளில்” தேடிக்கொண்டிருந்தது சிறிலங்கா அரசு.

யாழ்ப்பணத்திற் காடுகளைத் தேடிக்கொண்டிருந்தது உலகு.

தன் நண்பர்கள் சிலரையும் தன் கைவிரல்கள் இரண்டையும் இழந்த பின் மருத்துவமனையில் இருந்து அந்தச் சண்டையில் தனது அனுபவத்தை மீட்டுக்கொண்டிருந்தான் ராஜன்.

இந்திய இராணுவக் காலம், அந்த இரும்பை உருக்காக உருவாக்கிய நாட்கள்.

இந்தியக் காலத்தில் ராஜனின் நாட்கள் வீரம் செறிந்த நாட்கள். அவன் நின்று பிடித்த வெறும் அதிஸ்டத்தினால் மட்டுமல்ல. வீரம், விவேகம், அவதானம், அன்புக்கினிய எம்மக்களின் பாசம் இவைதான் அவனைக் காப்பாற்றிய கவசங்கள். தொடர்ச்சியான முற்றுகைக்குள் - தொடர்ந்த தூக்கமற்ற இரவுகள்.

முற்றுகை ஒன்றிலிருந்து பாய்ந்தோடித் தப்பித்து வந்த நாளின் மறுநாட்காலை ஒருவாரக் கசகசப்புத்தீர குளித்துவிட்டு நொண்டிக்கொண்டு வந்தான். அன்புத் தோழனின் மடியில் ஈரம் ஊறிய காலை முள்ளெடுக்கக் கொடுத்துவிட்டு இருந்தவன் அப்படியே தூங்கிப்போனான் பாவம்.

எத்தகு நெருக்கடிகள் மத்தியிலும், உறுதிதளராத இரும்பு மனம். அதிகம் பேசாதவன். போர்க்களத்திற் பேசுபவான். உறுதியாய்த் தன்னம்பிக்கையுடன், சகபோராளிகளை இலகு நிலையில் வைத்திருக்கும் நகைச்சுவையுடன்.

இந்தியச் சண்டையின் தொடக்க நாட்கள். எமது பொன்னாலைப் பனைவெளியூடாக அந்நியப்பாதங்கள். அனுபவம் குறைந்த எமது வீரன் ஒருவனிடம் இயந்திரத்துப்பாக்கி. அவனது சூடுகள் உயர்ந்து மேலாய், மிக மேலாய் வீணாகிப்போயின. இதைக்கண்ட ராஜன் “டேய் தம்பி ஆமி இன்னும் பனையிலை ஏறேல்லை. கொண்டா ஜிபிஎம்ஜி யை”. ஆயுதம் கைமாற ஒரு சூட்டுத் தழும்பினைப் பதித்து வைக்கிறது.

பொன்னாலையில் கால் கிழிந்து, இந்தியாவில் காயம் ஒழுங்காக மாறமுதல் நாட்டுக்கு என்று துடிதுடித்து புறப்பட்டு, மீன்பிடிப்படகில் தீவுக்கு வந்து, இங்கு வந்தால், எங்கும் இந்தியத் தலைகள் தடங்கள்.

“எங்கட ஆட்கள் எங்கே” என்று எல்லாச் சனத்தையும் கேட்டுத்திரிந்து சந்தித்தான்.

யாழ்ப்பாணத்தில் எங்கும் இராணுவ முகாம்கள் நிறைந்திருந்த காலத்தில் ராஜன் வந்து சேர்ந்ததும் இந்தியப் படையினர் பிரச்சினையை வேறுவிதமாகச் சந்தித்தார்கள். அவனது உறுதி அவர்களை திணறவைத்தது.

அரைத்தூக்கம் கலையாத அதிகாலைப்பொழுது, ஊரில் உள்ள நாய்கள் எல்லாம் குரைக்கத் தொடங்க, உடலில் உள்ள இரத்தம் எல்லாம் ஒன்றாகிச் சூடாகிப்பாயும்.

“டேய் தும்பன், வெற்றி, எழும்புங்கோடா”

“ரங்கன்”

“அண்ணை நான் முழிப்புத்தான்”

“வெளிக்கிடுங்கோ...”

சிரிப்புத்தான் வரும். என்னத்தை வெளிக்கிடுவது? ஜீன்ஸ் போட்டபடி, கோல்சர் கட்டியபடி வெறுநிலத்திற் படுக்கை, தலைமாட்டில் ஆயுதம் வைக்கவென விரித்திருக்கும் சாரத்தை எடுத்துச் சூருட்டி இடுப்பில் கட்டினால் சரி.

“சரி வெளிக்கிட்டாச்சு.”

நாய்கள் குரைக்கும் சத்தம் நகர நகர, அது இராணுவத்தின் நகர்வை நிழலாய்க்காட்டும்.

முன்படலை பிசகென்று பின்வேலியால் பாய, காலில் நெருஞ்சி குத்தும். முந்தநாள் வாங்கிய செருப்பு நேற்றைய ரவுண்டப்பில் தவறிப்போனது நினைவுக்கு வரும்.

விரைவாய் சத்தமின்ற, சத்தமின்றி விரைவாய் அல்லது உள்ளே ரவுண்டப்புக்குள்ளே.

ராஜன் அருகில் இருந்தால் அனைவருக்கும் நம்பிக்கை. எப்படியும் ரவுண்டப்பை உடைக்கலாம்.

“கட்டாயம் உடைக்கலாம். ஒருத்தரும் பயப்படாதேங்கோ”

“டேய் தும்பன் நீ முன்னுக்குப் போய் எத்தனை வாகனம் நிக்குதெண்டு பார். கண்டிட்டான் எண்டால் அடியாமல் வராத”

“ரங்கனும், வெற்றியும் அங்காலைபோய் அடுத்த சந்தியைப் பாருங்கோ. டேய் ரங்கன் ஜி-3 ரவுண்ஸ் தட்டுப்பாடு சும்மா அடிக்காதை”

“தம்பி நீங்கள் என்ன கிறனைட்டோ வைத்திருக்கிறியள். பயப்படாதேங்கோ. என்னோடை நில்லுங்கோ. நான் சொல்லேக்கை கிறனைட் அடிக்கவேணும்”

“அம்மா எல்லோரும் இதில குவிஞ்சு நிண்டால்தான் கட்டாயம் காணுவான். நீங்கள் பிள்ளையளைக் கூட்டிக்கொண்டு உள்ளுக்குப் போங்கோ, இந்தாங்கோ கோப்பையையும் கொண்டு போங்கோ.”

கொஞ்சநேரத்தின் பின் கேட்கும் வெடிச்சத்தங்கள் ஓயும்போது, தேநீர் கொடுத்த அம்மா “ஆர் பெத்த பிளையளோ முருகா காப்பாத்து” என வேண்டிக் கொண்டிருக்கும்போது,

இரண்டு றோட்டுக்கடந்து நின்று வரும் ஆட்களிடம் சைக்கிள் கேட்டுக்கொண்டிருப்பார்கள் ராஜனும் அவனின் ஆட்களும்.

கிறனைட்டுடன் வந்த சின்னப்பொடியன் “ராஜண்ணை நான் உண்மையாய்ப் பயந்திட்டன். இனிப்பயப்பட மாட்டன். நான் அடிச்ச கிறனைட்டில் ஆமி செத்திருப்பானே?” என்று கேட்டுக்கொண்டிருப்பான்.

அவர்களின் அநேக நாட்கள் இப்படித்தான் விடியும்.

இன்னொரு காலைவேளையில், படுத்திருந்த வீட்டு ஒழுங்கையால் தெருவுக்கு வர, முன்னால் இராணுவ அணி. மற்றவர்கள் காணமுதல் ராஜன் கண்டுவிட்டான். “இண்டைக்குப் பொழுது சூடாகத்தான் விடிஞ்சிருக்கு. நான் இதில வைச்சுத் தொடங்கிறன். நீங்கள் இரண்டு பேரும்மற்றப் பக்கத்தாலை வாங்கோ”. இராணுவம் நிற்கும் செய்தியை அலாதியாய்ச் சொல்வதுடன், அந்தக் கணத்திலேயே திட்டமும் தாக்குதலும். எத்தகையை சூழ்நிலையிலும் ஆபத்தை எதிர்கொள்ள கொஞ்சமுந் தயங்காத நெஞ்சுறுதி. பல கட்டங்களில் ராஜன் சாவின் விளிம்பில் ஏறி நடந்து வந்துள்ளான்.

எமது மண்ணில் அந்நியன் சுதந்திரமாய்த் திரிவதா? நிம்மதியாய் வாழ்வதா? என்று குமுறுவான். அவன் அடிக்கடி கூறும் வார்த்தைகள். “மச்சான் உவங்களை இப்படியே விடக்கூடாது. இண்டைக்கு ரெண்டு ஆமி எண்டாலும் கொல்லவேணும்.”

ஒரு நாள் பண்டத்தரிப்பு முகாம். “என்ன வெடிச்சத்தம்?” என இந்தியப்படையினர் சனத்தை விசாரித்துக் கொண்டிருக்கையில் ராஜனும் தும்பனும் தங்கள் பிஸ்டலை இடுப்பில் வைத்தபின்னர், இறந்த படையினரின் துப்பாக்கிகளை ஆளுக்கொன்றாய் எடுத்தபடி சைக்கிளில்...

சுழிபுரம் சந்தி முகாம் அருகே, இந்திய இராணுவம் ஜீப்புடன் செத்தபடி கிடக்க....

எம் போராளி காசிமை இழந்த பின்னர், நடு நெஞ்சில் துப்பாக்கி ரவை துளைத்த ராஜனைத் தூக்கிக்கொண்டு வந்தனர் தும்பனுடன் நகுலனும் நித்தியும்.

இந்திய அடிவருடிகள் முகாமிட்டிருந்த சுன்னாகம். இருபுறமும் இராணுவக் காவல். அதனுள்ளே கும்மாளமிட்டனர் எம்மினத்தின் அவமானச் சின்னங்கள். திட்டமிட்ட பெரிய தாக்குதல். அதிக ஆட்கள். முதல்நாள் றோட்டுக்கடக்க முடியாமல் ஒத்திவைத்த தாக்குதல். அடுத்த நாள் முயற்சி செய்தபோது,

இரவு ரோந்து இராணுவத்தை எதிர்கொள்ள, எல்லாமே பாழ்.

ராஜனை இருட்டுக்குள்ளால் இழுத்தவந்து குப்பியைக் கழட்ட, வந்தது நூல்மட்டுமே.

“மச்சான் சுபாஸ் பிறண் அடி கொளுவியிட்டுது.” எனக்கு பெரிய காயம்... இந்தமுறை சரிவராது... எல்லோரும் சாகாமல் இவர்கள் இரண்டுபேரையும் கொண்டுபோங்கோ.

சொன்னவர் பின்னர் கரைச்சல் தாங்காமல் மயங்கிப்போனார்.

“ஐயோ ராஜண்ணை...” என்று சூட்டும் ரங்கனுமாய் வாய்க்குள் விரலைவிட்டுத் தோண்டி,

தேங்காய் எண்ணை பருக்கு, தேங்காய் உடைத்து பால் பிழிந்து பருக்கி, காரில் வைத்து, ஸ்ராட் ஆகவில்லை என்று கத்தி, பிறகு வேலிவெட்டி பாதை செய்து, தள்ளு தள்ளு என்று, தள்ளிக்கொண்டு போய். உள் ஒழுங்கை வீட்டில் வைத்து, நீர்வேலிச் சனத்தை காவலுக்கு விட்டு,

அந்தநாள் விட்டு அடுத்த நாள், வாதரவத்தைக்குப் போய்ச்சேர, ராஜனும், முரளியும் மயக்கம் தெளிய, லோலோ மயங்கிப்போய், பின்னர் போய்விட்டான். எம்மைவிட்டு போயேவிட்டான்...

அவனது தோழர்களின் இழப்புக்கள் ஒன்வொன்றின் போதும் அவன் அமைதியாய்க் குமுறுவான். கண்கள் வெறிக்க அவன் பாறையாய் இறுகுவான்.

ராஜனது இளமைக்கால நண்பன் தெய்வா, பாலைசாலைக் காலத்திலிருந்து ஒன்றாய்க் கடலுக்குத் தொழிலுக்குப் போய்வந்து..., படித்து பந்து விளையாடி..., இயக்கத்திற்கு வந்து..., ஒரே படகில் இந்தியா போய்..., கூமாட்டி பயிற்சி முகாமில் ஒன்றாய் இருந்து..., மலைக்கு மூட்டை சுமந்து..., கழுதை கலைத்தது..., பணிஸ்மன்ற் வாங்கி...., பயிற்சி முடித்து..., கரைக்கு வந்து..., எல்லாம்வரை ஒன்றாய் இருந்த தெய்வா பிரிந்துவிட்டான். கடலில் ஓட்டியாய்ப் போனவன் வரவில்லை. அவன் வரவில்லை என்று மாதகல் அழுதது. ராஜன் அழவில்லை. அந்தப் பாறை இறுகியது.

ராஜனும் தும்பனும் பிரிந்தது கிடையாது. ராஜன் என்றால் தும்பன். தும்பன் என்றால் ராஜன். துப்பாக்கிகள் பங்கிடும்போது “தும்பனுக்கு கையேலாது எம்-16 தான் வேணுமம்மான்.” ராஜன் சொல்ல சூடுபட்டு உடைந்து வளைந்த கையை தும்பன் மேலும் வளைத்து வந்து வாங்கிவிட்டு மறைவாய் போய் பெரிதாய்ச் சிரித்தார்கள்.

ஒன்றாய்ச் சாப்பிட்டு, அடிபட்டு, கலைபட்டு ராஜனின் உயிருடன் இணைந்த நட்பு. சுன்னாகத்தில் காலில் இரண்டு வெடிபட்டு காயம் மாறி இந்தியாவில் இருந்து வந்தபோது, தும்பன் இல்லை என்ற செய்தி அவனுக்குத் தெரிந்துதானிருந்தது.

இராணுவத்தின் சூடுதானா? விபத்தா என எல்லோரையும் ஓடிஓடிக்கேட்டு ஓய்ந்திருந்தவேளையில், தும்பன் இல்லாத ஏழாலைக் கிணற்றுக்கட்டு, வாழைத்தோட்டங்கள், பனங்கூடல்கள், கலைபட்டு பாய்ந்தவேலிகள், துரையண்ணை வீட்டு ஊஞ்சல்கள் என்று எல்லாமே வெறுமையாய்த் தெரிய ரங்கன் அழுவான். ராஜன் அழமாட்டான். அந்தப் பாறை இறுகியது.

ரங்கன் சைக்கிள் உழக்க “பாரில்” ராஜன். சுட்டுவிரல் விசைவில்லையொட்டியபடி, கொஞ்சம் அழுத்தினால் ரவைபாயும், எங்கும் போகும் சைக்கிள். சடசட என்று வெடிகேட்கும், சைக்கிள் ஒன்றுடன் கொஞ்ச ரவையும் செலவாகும்.

“தப்பியது ரங்கனால்” என்பான் ராஜன். “ராஜண்ணை இல்லையென்றால் நானில்லை” என்பான் ரங்கன்.

மாவிட்டபுரத்தில் வைத்து வரிசையாய் வந்த மொட்டை ஜீப்புக்கு அடிக்க நல்லாய் நடந்த சண்டை நெடுமாறன் இறந்து, ரங்கன் காயம்பட திசைமாறியது.

திருச்சியில், “ராஜண்ணை... ராஜண்ணை” என்று ரங்கன் உரத்துக்கூவி அழுது துடித்து மௌனித்தபோதும் யாழ்ப்பாணத்தில் நின்ற ராஜன் அழவில்லை. பாறை இறுகியது.

மாதகலில் தன்னுடன் நின்ற ஏழுபேரை வைத்து பெருங்கூட்டமாய் வந்த இந்தியப் படையினரை அடித்துக்கொன்று, கலைத்து, பெருந்தொகையாய் ஆயுதங்கள் அள்ளிவந்தபோது, எல்லா நாளும் ராஜனுடன் திரிந்த வெற்றி திரும்பிவரவில்லை.

ஆயுதங்கள் எல்லாம் அப்படியே குவிந்து கிடக்க, காயப்பட்ட தம்பியையும், வெற்றியின் உடலையும் குப்பிளானில் பின்ற கிளியிடம் அனுப்பிவிட்டு, ஆயுதங்களிற்கு காவலாய் நின்றபோது ராஜன் அழவில்லை. அந்தப் பாறை இறுகியது.

இந்தியா போனது. தமிழீழ வீடெங்கும் மகிழ்ச்சிக் குரல்கள், தெருவெங்கும் புலிவீரர். மிச்சமாயிருந்தன இந்திய எச்சங்கள். புலனாய்வுப் பணியில் ராஜன்.

அவனது மனம் விடுதலைப் போரையும், அதனுடன் இணைந்தவற்றையும் தவிர வேறொன்றைப் பற்றியும் எண்ணியதே கிடையாது. இப்படித்தான் ஒரு நாள் பாடசாலையில் அவனுடன் படித்தவள். இயக்கத் தொடர்பில் அறிமுகமாகி பழகிக் கடிதமொன்றில் என்னவோ எழுதி அவனிடம் அனுப்பிவிட்டு காந்திருந்தாள் பாவம்.

கடிதத்தைப் படித்தவன் பக்கத்தில் நின்றவனுடன் நேரே போய்க் கடிதத்தைக் கிழித்துக் கொடுத்துவிட்டு “போராட்டம் தவிர வேறொன்றும் நான் நினையேன்” என்றான்.

தன் ஆசைமகன் போகும் வாகனத்தையென்றாலும் பார்போமென்று தாய்க்கிழவி றோட்டில் கால்கடுக்க காந்து நிற்க, இவன் மாதகலில் தான் போன வேலையை முடித்து திரும்பி வருவான்.

சிறிலங்காவுடன் சண்டை தொடங்கியது. ராஜன் ஒய்வின்றிச் சுழன்றான். அடிக்கடி அண்ணைச் சந்தித்தான். எல்லா இடமும் திரிந்தான். ஒவ்வொரு பங்கருக்கும் ஒவ்வொரு மண்மூட்டைக்கும் இடம் சொன்னான்.

மயிலிட்டியில் பெருஞ்சமர். ராஜன் ஊண் உறக்கமின்று நின்று வழிநடத்தினான். மழையாய்ப் பொழியும் செல்கள் - ரவைகள்.மயிலிட்டிச் சண்டையில் மட்டும் இரண்டு தடவைகள் குண்டுச்சிதறல்கள் அவனைத் துளைத்துச் சென்றன. ஓய்வில்லை - அங்கு நடந்து கொண்டிருந்த சண்டையில் இருந்து அவனால் ஒதுங்கியிருக்க முடியவில்லை.

கோட்டை முற்றுகை இறுக இறுக எங்கள் தளபதிகளின் தூக்கமற்ற இரவுகள் பெருக்கொண்டிருந்தன. மணியந்தோட்டத்திலிருந்து பொன்னாலைவரை நின்ற இளம் போராளிகள் ராஜனைக் கண்டு சிரிப்பர். இரவில்லை, பகலில்லை, ஓய்வில்லை, உணவில்லை, தன்னைப் பிழிந்து முற்றுகைக்கு உரம் கொடுத்தான். பாணுவின் உற்ற துணையாய் முற்றுகைக்குத் துணை நின்றான்.

எம்மால் உள்ளிறங்க முடியாமல்போய்விட்ட, இரண்டாவது கோட்டை உட்புகல் நடவடிக்கை முடிந்து விடிந்தபோது, “றோமியோ நவம்பர்” என்று பாணுவின் “வோக்கி” கூப்பிட்டபோதும் பதிலில்லை.

மானிப்பாய் மருத்துவமனையில் பேச்சு மூச்சின்றி கிளி, ஜவான் ஆகியோருக்கு இடையில் கந்தல் துணிபோற் சுருண்டு கிடந்தான்.

காயம் மாறி கொஞ்சம் தேறி எழும்பி வந்தவன். இப்போது சாள்ஸ் அன்ரனி சிறிப்புப் படையணியில்.

இந்தக் காலம் ராஜனை ஒரு சிறந்த நிர்வாகியாக உருவாக்கியது. பால்ராஜின் துணைவனாய் நின்று படைப்பிரிவை உருவாக்குவதில் பெரும்பங்காற்றினான். சகல போராளிகளுடனும் அன்புடன், கண்டிப்புடன் நடைபெற்ற கடுமையான பயிற்சிக் காலம்.

தமிழீழத்தின் எல்லா இடங்களிலிருந்தும் வந்திருந்த போராளிகள்.

குடும்பத்தைப் பிரிந்து வந்தவர்களிற்கு தாயாக, தந்தையாக, நண்பனாக ஆசானாக.

தமிழேந்தி அண்ணனிடம் காசுவாங்கி, இல்லையென்றால் ஊரில் கடன்வாங்கி, அதுவும் முடியாவிட்டால் வீட்டுக்குப் போய் பொருட்களைத் தூக்கி, தமையன் வியாபரத்திற்கு வைத்திருக்கும் சாமான்களை அள்ளி வாகத்தில் ஏற்றி...

எப்படியோ போராளிகளைத் தனது பிள்ளைகளாய் உயிராய் பார்த்தான். பராமரித்தான்.

வன்னி யுத்த களம். எங்கள் வன்னிக் காடுகளை எதிரியின் பல்லாயிரம் படைகள் ஊடறுத்துவர முற்பட்ட “வன்னிவிக்கிரம” பெரும் படைகொண்டு ராஜன் மோத எதிரிப்படை திணறியது. சுட்டுவீழ்த்தப்பட்ட ஹெலிகப்டர் துண்டுகளை அள்ளி எடுத்து அனுப்பிய பின்னரும் தொடர்ந்தது சண்டை.

எல்லாப் பக்கங்களாலும், பூவரசங்குளம் சந்திக்கு வந்து ஏறிய எதிரிகளை எதிர்கொண்டனர் எம்வீரர்கள். கடும் சண்டை.

ஆகாயத்தை நோக்கி நின்றவைகளும் நிலம் நோக்க, சகல ஆயுதங்களையும் ஏந்திய கரங்களும் உறுதியாய் நிற்க, ஓடினான் எதிரி.

கொஞ்ச நாள் இடைவெளியில் எதிரியின் இன்னொரு முயற்சி. வவுனியாவல் நகர்ந்து தோற்ற எதிரி, இம்முறை மன்னார் பக்கமாய்...

இம்முறை சண்டை கொஞ்சம் கடுமையாய்.. எமது வீரர்களை இருபுறமும் சூழ்ந்தபடி எதிரி. ராஜனை உணர்ச்சிவசப்பட வைக்கும் சண்டை.

எதைப்பற்றியும் யோசிக்காது எதிரியின் முகம் தெரியும் தூரத்தில் நின்று மோதிய, ராஜனின் விரல் இல்லாத உள்ளங்கையை உடைத்தபடி ஒரு ரவை, இன்னொரு ரவை அதே கையில் நடுவில்.

மிக அருகில் எதிரியின் துப்பாக்கிகள் சடசடக்க உறுதியாய் எதிர்த்து நின்றனர் தோழர்கள்.

உள்ள ஆயுதங்கள் எல்லாம் கொண்டுபோய், அடிஅடி என்று அடித்து ஆமியைக் கலைத்துவிட்டு, மயங்கிக்கிடந்தவனை, இழுந்து வந்து சேர்த்தான் ரூபராஜ்.

அன்று ராஜன் திரும்பி வந்தது, நம்பமுடியாத அதிசயம். அவன் மயங்கி வீழ்ந்து கிடந்தபோது, எதிரி மிக அருகில். மிக அருகிலேயே நின்றிருந்தான்.

ஆனையிறவு பெரும் போர்க்களம். ஒன்வின்றிப் பம்பரமாய் ராஜன்.

சென்றி நிற்கும் பங்கருக்குள், பசீலன் பொயின்ரில், சமையற் கொட்டிலில், சந்தியில் இருந்த மெடிக்ஸ் வீட்டில், எங்கும் நின்றான். எல்லா நேரமும் நின்றான்.

கட்டைக்காட்டில் ஆமியின் கவசவாகனம் தகர்ந்தாலும், ஆர்.பி.ஜிக்கு ரோமியோ நவம்பர்.

புல்லாவெளியில் ஆட்டிலறி செல்விழுந்து இரண்டுபேர் செத்து ஐந்து பேர் காயமென்றால் மெடிக்ஸ் வானுக்கு றோமியோ நவம்பர்.

மெடிக்ஸ் வானை போகவிடாமல் கெலி நின்றால் கலிபர் அனுப்பவும் றோமியோ நவம்பர்.

குணாவின் குறூப்பிற்கு அனுப்பிய காக்குகளுக்கு சாக்குஊசி வேணுமெண்டால் றோமியோ நவம்பர்.

வீரர் வீழ்ந்து வியூகம் உடைந்து எதிரிப்படை முன்னேறும்வேளையில் தனித்த வீரரை ஒன்றாய்ச் சேர்நது எதிரியைத் தடுக்கும்வேலைக்கும் றோமியோ நவம்பர்.

எல்லாவற்றிற்கும் நின்றான். எல்லாப் பாரத்தையும் தானாய்ச் சுமந்தான்.

எப்படிப்பட்டவனை நாம் இழந்துவிட்டோம்.

அனுபவம் மிக்க போர்த்தளபதியாய் ராஜன் நின்றபோதும் அவன் யுத்த களத்திலிருந்து தள்ளியே வைக்கப்பட்டிருந்தான். எங்கள் தலைவரின் பெருங்கனவுகளின் உறைவிடமாக ராஜன் இருந்தான். யாழ்ப்பாணச் சண்டையில் ஈடுபட்டிருந்த குழுக்களுக்கு உணவு விநியோகம் செய்யும் வேலையை அவனிடம் வலிந்து கொடுத்திருந்ததன் காரணம் அவனை யுத்த களத்திற்கு முன்முனையிலிருந்து எட்ட நிற்க வைப்பதற்கன்றி, வேறில்லை.

அனுபவம் மிக்க வீரன்.

அவனது அனுபவங்கள் மெய்சிலிர்க்கும் கதைகள்.

ஓய்வில்லாக் கடும் உழைப்பாளி.

அவன் மறையும்போது தலைவரின் பெரும் கனவில் உருவான அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியின் பொறுப்பாளன். சிறந்த போர் அனுபவங்களை முன்னரே பெற்றிருந்த அவன். இங்கு எல்லா இடமும் இருந்து பொறுக்கி எடுத்த வீரர்களைப் பயிற்றுவித்தான். தன் அனுபவங்களை பிழிந்தெடுத்துக் கொடுத்தான். போர்க்கலை நுட்பங்களைக் கற்றான், கற்பித்தான். நேர்த்தியான வேலைத்திட்ட ஒழுங்கமைப்பை, கண்டிப்பை, அன்பை, கடும்பயிற்சியை,

வியூகங்கள், விநியோகங்கள், வரைபடம்... என்று எல்லாவறறையும் கற்றான். கற்பித்தான்.

ராஜன் அமைதியானவன். தன் செயல்களினால் மட்டும் தன்னை அடையாளம் காட்டியவன். ஆம் செயல்களினால் மட்டும்.

எந்த வேலையாக இருந்தாலும் ராஜன் அதிகம் பேசுபவனல்ல. ஏதாவது இராணுவத் திட்டம் தீட்டப்படும் சந்தர்ப்பத்தில், பேசாது பார்த்தடி, கேட்டபடி இருக்கும் ராஜன் , திட்டம் தீட்டப்படுவது பூர்த்தியாவதற்கு முன்னால் உள்ள இடைவெளியில் பேசுவான். குறிப்பிட்ட திட்டம் செயல் வடிவம் பெறும்போது அவனது யுக்தியின் பெறுமதி தெரியும்.

தனது கடமையைச் பூரணமாகச் செய்வதில் தன்னை வெளிப்படுத்துவான். எந்தச் சந்தர்ப்பத்திலும் மற்றைய ஒருவரைக் குறை செல்வதைக் காண்பதரிது. “கடமையைச் செய், பயனை எதிர்பாராதே” என்பதற்கு உதாரணமாகக் கர்ம வீரனாய் விளங்கினான்.

அவனது வரலாறு முழுமையாக எழுதப்பட்டால், அது பெரும் காவியமாகும். இராணுவ வல்லுநர்களால் மட்டுமல்ல, மருத்துவ வல்லுநர்களாலும் நம்பமுடியாத அதிசயமாய் அவன் வரலாறு திகழும்.

எண்ணற்ற தாக்குதல்கள், எண்ணற்ற தோழர்கள், அவன் செய்தவைகள், அவன் பெற்ற அனுபவங்கள் எண்ணி முடியாதவை. எழுத்தில் அடங்காதவை.

ச.பொட்டு

Edited by மின்னல்

  • கருத்துக்கள உறவுகள்

வீரவணக்கங்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

Keefers_AnimatedCandles3.gif

வீர வணக்கங்கள்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.