Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"கோழைச் சோழன் (சரித்திரகதை)

Featured Replies

ஆதித்த குலத்தவனும் இணையிலா வீரனுமான சோழன் தித்தன் தனது அரண்மனை வாயிலில் புகுமுன்பு நான்கு திக்குகளிலும் தனது வீர விழிகளைச் செலுத்தினான். அரண்மனையிருந்த அரச வீதியிலும் கூட வாட்போர் வீச்சும் வேலெறிப் பந்தயமும், விற்போரும் மற்போருமாகப் பல வீர விளையாட்டுகள் அன்று நடந்து கொண்டிருந்ததைக் கண்ட தித்தன் மனத்தில் மட்டும் அவ்விளையாட்டுகள் எந்தவித மகிழ்ச்சியையும் அளிக்கவில்லை. இந்திர விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் புகாரில் போலவே உறையூரிலும் நடந்து வந்த அந்தக் கோலாகலக் காட்சிகள், தூரத்தே காவிரிக் கரையில் அந்த நள்ளிரவிலும் நடந்து வந்த கேளிக்கைக் கூத்துக்கள் இவையனைத்தின் ஒலிகள் கூட அவன் காதில் விழுந்தும் வீரனான தித்தன் மனம் சோகத்தில் ஆழ்ந்து கிடந்தது. உலகெலாம் தன வீரப்புகழ் பாட, உறையூரை ஆண்ட தித்தன் அன்று 'நாம் என் இந்தப் பிறவி எடுத்தோம்?' என்று ஏங்கினான் உள்ளூர. ஏங்கியவன் கனத்த மனத்துடன் அரண்மனைக்குள் நுழைந்து காவலர் செலுத்திய வணக்கத்தையும் கவனிக்காது படிகளில் ஏறி முதல் உப்பரிகையை அடைந்தான். அங்கொரு திடீர் சிரிப்பொலி! பகடைகள் உருளும் சத்தம்! இவற்றைக் காதில் வாங்கிய தித்தன் தனது மடியில் இருந்த குறுவாளை எடுத்துக் கொண்டு அந்த ஒலிகள் எழுந்த இடத்தை நாடிச் சென்றான்.

அங்கு தலையில் பட்டுச் சீலையால் முக்காடிட்டுக் கொண்டு தோழியர் பலருடன் பகடைகளை உருட்டிக் கொண்டிருந்தான் அவன் ஒரே மகனான நற் கிள்ளி. அரசன் வந்ததை அவன் கவனிக்கவில்லை ஆயினும் தோழிகளுள் ஒருத்தி கவனித்ததால் பகடையிடத்திலிருந்து சரேலென்று எழுந்திருக்க அவள் முயல, அவள் சேலை முந்தானையைப் பிடித்துக் கொண்ட நற் கிள்ளி, "எங்கே ஓடுகிறாய் பாதி ஆட்டத்தில்? உட்கார்" என்று அவளை வலிய இழுத்தான்.

முந்தானையை நற் கிள்ளி பிடித்ததால் மீதி ஆடையை மார்பில் பிடித்துக் கொண்டதோழி, "விடுங்கள் இளவரசே!" என்று கெஞ்சினாள்.

"வெற்றி கிடைக்கும் சமயத்தில் யார் விடுவான்? உட்கார்." என்று அதட்டினான் நற் கிள்ளி.

"இளவரசே! விடுங்கள்! பகடை வெற்றி ஒரு வெற்றி அல்ல. உங்கள் வெற்றி, வீரத்தில் இருக்க வேண்டும்" என்றாள் தோழி.

நற் கிள்ளி வேகமாக நகைத்தான். "அடி தோழி! பகடை வெற்றியிடம் வீரத்தின் வெற்றி பலிக்காது. சகுனி பகடையால் வெற்றி கொல்லவி;ல்லை பாண்டவரை? நாடு கடத்தவில்லை அவர்களை?" என்று கூறி மீண்டும் பகடையை உருட்டினான். தலையில் இருந்து நழுவ இருந்த பட்டாடையையும் மீண்டும் இழுத்துப் போர்த்திக் கொண்டான்.

இந்தச் சமயத்தில் தித்தன் குரல் கூரிய வாளென நுழைந்தது, அந்த உரையாடலுக்குக் குறுக்கே." "டேய் நற் கிள்ளி! விடு அவள் முந்தானையை" என்றான் தித்தன் சினம் பீரிட்ட குரலில்.

தித்தன் குரலைக் கேட்டதும் நடுங்கிய நற்கிள்ளி பகடையை அவசர அவசரமாக எடுத்து மடியிற் செருகிக் கொண்டு போர்வையை நன்றாகப் போர்த்திக் கொண்டு எழுந்து நின்றான். "தந்தையே! தாங்களா!" என்று வினவினான் நற் கிள்ளி நடுக்கம் ஒலித்த குரலில்.

"நான் தான்! ஆனால் உன் தந்தையல்ல" என்றான் தித்தன்.

நற்கிள்ளியின் கண்களில் அச்சம் தெரிந்தது. "நீங்கள் என் தந்தை இல்லையா?" என்று வினவினான் மெல்ல.

"இல்லை! சகுனிக்கு ஒரு தந்தை இருந்ததாகப் புராணங்களில் குறிப்பிடவில்லை"

"நான்...."

"சகுனி பகடையில் வல்லவன். பெண்களிடை பழகுபவன், குதிரை ஏற்றம் பயில வேண்டிய காலத்தில் குலாவுகிறாய் அரண்மனைச் சேடிகளிடம் ! வில்லையும், வாளையும் பிடிக்க வேண்டிய கைகள் பகடையையும் கழங்குகளையும் பிடிக்கின்றன." என்ற மன்னன் "டேய் நற்கிள்ளி! உன்னை அரண்மனைத் தோழிகள் என்னவென்று அழைக்கிறார்கள் தெரியுமா?" என்று வினவினான்.

"என்னவென்று..?" நற்கிள்ளி அக்கம் பக்கத்திலிருந்த தோழியரை நோக்கினான். அவர்கள் தலைகள் தாழ்ந்து கிடந்தன. கமலக் கண்கள் தரையை நோக்கின!

"மடையா! எப்பொழுதும் பெண்களைப் போல உடலைப் பட்டாடை கொண்டு போர்த்தியிருக்கிறாய் அல்லவா?"

"ஆம்."

"அதனால் போர்வைக் கோப்பெரு நற்கிள்ளி என்று அழைக்கிறார்கள். உன் கோழைத்தனத்துக்கு அரண்மனைத் தோழிகள் சூட்டியுள்ள பட்டம் அது."

என்று வெறுப்புடன் சொன்னான் மன்னவன்.

நற்கிள்ளி பக்கத்திலிருந்த தோழியரை நோக்கினான், "பட்டத்து இளவரசனான என்னையா அப்படிப் பழிக்கிறீர்கள்?" என்று வினவினான் அவர்களை நோக்கி. இந்த சமயத்தில் சுரீலென வாளைப் பாய்ச்சுவது போலக் கேட்டான் தித்தன். "நீ பட்டத்து இளவரசனென்று யார் சொன்னது?"

நற்கிள்ளியின் கண்கள் சலனத்தைக் காட்டின."யார் சொல்ல வேண்டும்? நான் உங்களுக்கு ஒரே மகன்...." என்ற நற்கிள்ளியின் சொற்களை, "நீ என் மகனல்ல என்று முன்னமேயே சொன்னேன்." என்று பாதியிலேயே வெட்டினான் தித்தன்.

"அப்படியானால்.....?" நற்கிள்ளியின் குரல் நடுங்கியது.

"நீ நாடு கடத்தப் பட்டாய். நாளைக்குப் பிறகு உறையூரில் நீ தலை காட்டினால் தலை கொய்யப் படும். ஒரு கோழையை மகனாகத் தினம் காண்பதை விடக் காணாதிருத்தல் நன்று" என்ற மன்னன் அவ்விடத்தை விட்டு வேகமாக அகன்றான். தோழியரும் பறந்தனர், பட்டத்தரசியிடம் அச் செய்தியைச் சொல்ல.

அரண்மனை உப்பரிகைக் கூடத்தில் தனியே நின்ற போர்வைக் கோப்பெரு நற்கிள்ளி சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்தான். அவன் இதழ்களில் புன்னகை அரும்பியது. அவன் அழகிய கண்களும் சிரித்தன. போர்வையை நன்றாகப் போர்த்திக் கொண்டு அரண்மனையை அடுத்திருந்த புறக்காட்டை நோக்கிச் சென்றான்.

காட்டுக்குள் புகுந்து சிறிது தூரம் நடந்ததும் தூரத்தே தெரிந்த ஒரு விளக்கை நோக்கிச் சென்று அங்கிருந்த சிருவீட்டின் கதவைத் தட்டினான் மும்முறை! கதவைத் திறந்து தலையை வெளியே நீட்டினான் பிரம்மாண்டமான ஒரு மனிதன். அவன் உடற்கூறு இரும்பாய் இருந்தது. சதைகள் கெட்டிப்பட்டுக் கிடந்தன.கன்னக் கதுப்புகள் பெரியதாயிருந்தமையால் கண்கள் சிறிதாகத் தெரிந்தன.இளவரசனைக் கண்டது, "வாருங்கள் உள்ளே" என்று அழைத்துச் சென்றான். வீட்டிற்குள் கூடத்தை அடைந்ததும் கேட்டான். "எங்கே வந்தீர்கள் இங்கே?"என்று.

"நல்ல சேதி சொல்ல வந்தேன்" என்றான் நற்கிள்ளி.

"என்ன சேதி இளவரசே?"

"என் தந்தை என்னை நாடு கடத்தி விட்டார்."

இதைக் கேட்ட அந்த மனிதன் சிறிதும் பதறவில்லை. பெருமூச்சு மட்டும் விட்டான். "நீங்கள் நினைத்தது நடந்து விட்டது?" எண்டு வினவினான் அந்த மனிதன்.

"ஆம்!" என்றான் நற்கிள்ளி மகிழ்ச்சியுடன்.

"இது சரியல்ல இளவரசே!" என்றான் அந்த மனிதன்.

"பெருஞ்சாத்தனாரே! என் ஆசானான நீருமா இதை ஏற்க மறுக்கிறீர்? என் ஆசையை ஏன் தடை செய்கிறீர்?" என்று கேட்டான் நற்கிள்ளி.

"நீங்கள் உறையூரை விட்டுப் போவதால்......?" என்று பெருஞ்சாத்தான் வாசகத்தை முடிக்காமல் விட்டான்.

"ஒரு கோழையை உறையூர் இழக்கிறது!"

"ஆனால் உலகம் ஒரு........"

"நிறுத்துங்கள் சாத்தனாரே! காலம் புதிரை அவிழ்க்கட்டும் நான் வருகிறேன்" என்ற நற்கிள்ளி ஆசானை வணங்கி விடைபெற்று வெளியே சென்றான்.

முக்காவல் நாட்டின் சிறப்புற்ற சிற்றூரான ஆமூருக்கு ஆண்டுதோறும் ஒரு அதிர்ஷ்டமுண்டு! அந்த ஊர் முருகவேல் கோட்டத்தின் பெருந்திருநாளன்று அந்த நாட்டின் பல பகுதிகளினின்று வணிகரும் வீரரும் கூடி முருக வேளைத் தொழுது மறு ஆண்டைப் பயனுற்றதாகச் செய்து கொள்ளும் வழக்கம் இருந்ததால், பெருங்கோழியூர் நாய்கன் என்ற வீரர் பெருமானும் தனது நெடுநாளையக் குறை ஒன்றைப் போக்கிக் கொள்ள, தனது மகள் நக்கண்ணையுடன் ஆமூருக்கு வெளியே உள்ள தோப்பு வீட்டில் தங்கியிருந்தான்.

பெருந்திருநாளின் மாலைப் பூசை நடந்து தம் குறி சொல்லும் பூசாரி கர்ப்பக் கிரகத்தை அடுத்த மண்டபத்தில் குழுமியிருந்த கூட்டத்தைக் கற்பூரத் தட்டுடன் அணுகிக் கூட்டத்தின் மீது கண்களை ஓட விட்டான் ஒரு வினாடி. பிறகு தூரத்தே தோழியருடன் ஒரு தூணுக்கருகில் நின்றுகொண்டிருந்த நக்கண்ணையைக் கை காட்டி அழைத்து, "பெண்ணே! முருகவேள் அருள் உனக்குக் கிட்டி விட்டது. இன்னும் பத்து நாள் இங்கே இருந்து, கொட்டக் குளத்தில் நீராடி அவனை வணங்கு. பத்தாவது நாள் உன்னை மணப்பவன் உன் இல்லம் தேடி வருவான்." என்று கூறித் தட்டை நீட்டினான்.

நக்கண்ணையும் தட்டில் இருந்த விபூதியையும், குங்குமத்தையும் எடுத்து நெற்றியில் தீட்டிக் கொண்டாள். பிறகு தோழியருடன் தோப்பு வீட்டுக்குத் திரும்பினாள்.

கோட்டத்தில் நடந்ததைத் தோழியர் எடுத்துக் கூற, பெருங்கோழியூர் நாய்கன் இரும்பூதெய்தி முருகவேளை மனத்துள் துதித்தான். "என் குறை தீர்ந்தது அப்பனே!" என்று தனக்குள் சொல்லிக் கொண்டு பெண்ணின் தலையைக் கோதி விட்டு "நக்கண்ணை! உன் புலமைக்கேற்ற புருஷன் நிச்சயம் கிடைப்பான்" என்றும் ஆறுதல் கூறினான் அவளுக்கு.

நக்கண்ணை தனது நளினமான அழகிய விழிகளை நிலத்தில் ஓட்டினாள். போன கோட்டங்கள் கணக்கில்லை. செய்த வழிபாடுகள் குறைவில்லை. "இரண்டு ஆண்டுகளாக நடக்காதது இப்பொழுது எங்கே நடக்கப் போகிறது?" என்று நினைத்தாள் நக்கண்ணை. இருப்பினும் தந்தையிடம் பதில் பேசாது இடை துவள அழகு நடை நடந்து உள்ளே சென்றாள்

ஆனால் பூசாரி சொன்னது போல அடுத்த நாளும் அதற்கு அடுத்த நாளும் முருகவேளின் கோட்டத்திற்குச் சென்றாள். வாவியில் நீராடினாள். அங்கிருந்த செங்கழுநீர்ப் பூவை பறித்துத் தலையில் சூட்டிக் கொண்டு சந்நிதானம் சென்று வழிபாடு செய்தாள். எட்டுநாட்கள் இப்படி ஓடியும் பயனேதுமில்லை என்றாலும் தந்தையைத் திருப்தி செய்ய விரதத்தை விடாமல் தொடர்ந்து செய்து கொண்டு வந்தாள். ஒன்பதாம் நாள் ஒரு விதமாக வழி பிறந்தது. ஆனால் அது நல்வழியல்ல.அன்று காலை வழக்கம் போல வாவியில் நீராடி, கரையில் தோழியர் தன்னைச் சுற்றித் திரைபோல் பிடித்த பட்டாடைக்குள் ஈர ஆடையைக் களைந்து புத்தாடை சுற்றிக் கச்சையணிந்து தலையில் செங்கழுநீர் மலர் சூடி வாவிப் படிகளில் ஏறினாள். அங்கு நின்று அவள் வழியை மறித்தான் திடகாத்திரமான ஒரு மனிதன். அவனை ஏற இறங்கத் தீ விழி கொண்டு நோக்கினாள் நக்கண்ணை. "யார் நீங்கள்?" என்றும் வினவினாள்.

"ஊரில் யாரைக் கேட்டாலும் சொல்வார்கள்" என்ற அவன் பதிலில் தற் பெருமையும் இருந்தது.

"அத்தனை போக்கிரியா நீ?" இம்முறை மரியாதையைக் கைவிட்டுக் கேட்டாள் நக்கண்ணை.

"போக்கிரியா?" வியப்பிருந்தது அவன் கேள்வியில்.

"பெண்ணை வழிமறிக்கும் ஆடவருக்கு வேறு பெயர் ஏதாவது இருக்கிறதா?"

"எதற்கும் ஒரு விதிவிலக்கு உண்டு."

"இது அப்படி ஒரு விலக்கு?"

"ஆம். உன் அழகு, ஆமூர் மல்லனையும் இவ்வழிக்கு இழுத்தது."

"இவ்வூர்ப் பெரு மல்லரா நீங்கள்?"

"ஆம்!" இதைப் பெருமையாகச் சொன்னான் மல்லன். அத்துடன் விடவில்லை அவன். "உனக்கு மணாளனைத் தேட, இரண்டு ஆண்டுகளாக உன்தந்தை முயலுவதாகக் கேள்வி. அந்தக் கஷ்டம் இனி இல்லை என்று அவரிடம் சொல். உன்னைப் பெண் கேட்க இன்று மாலை வருகிறேன்." என்று கூறி வழியினின்று விலகினான்.

அன்று பெருஞ் சீற்றத்துடன் முருகவேளை நோக்கினாள் நக்கண்ணை. "இவன் தான் நீ தரும் மணாளனா?" என்றும் வினவினாள் மனத்துள்.

முருகவேளின் வதனத்தில் புன்சிரிப்பு இருந்தது. கண்களில் அருள் இருந்தது. அந்தச் சிலை அவளுக்குப் பதில் சொல்லவில்லை தான். ஆனால், அவனுக்குப் பேச்செதற்கு? விழிகள் போதுமே!

இதை உணராத நக்கண்ணை ஆத்திரத்துடன் வீட்டை எய்தினாள். தந்தையிடம் நடந்ததைச் சொன்னாள். பெருங்கோழியூர் நாய்கன் மனம் எரிமலையாய் இருந்தது. அன்று மாலை ஆமூர் மல்லன் வந்தபோது வாயிலிலேயே நின்று விடை பகர்ந்தான்: "வல்லூறு புறாவை மணக்க முடியாது" என்று.

"நாய்கரே! ஆமூர் மல்லனை அவமதிப்பவர் செய்ய வேண்டிய கடமை ஒன்றிருக்கிறது!" என்றான் மல்லன்.

"தெரியும்! உன்னுடன் மற்போர் புரிய வேண்டும்." என்றான் நாய்கன்.

"ஆம்! நீயோ உன்னிடமுள்ள மல்லரோ இன்றிலிருந்து மூன்றாவது நாள் ஆமூர் மற்போர்க் கூடத்துக்கு வாருங்கள்!" என்று கூறி விட்டு அகன்றான் மல்லன். இதைக் கேட்ட நாய்கன் தன உயிர் இன்னும் இரண்டு நாட்கள் தான் என்று தீர்மானித்துக் கொண்டான். ஆமூர் மல்லன் கிழித்தெறிந்த உடல்கள் பல என்பதை அறிந்த நக்கண்ணை அன்று முழுதும் உறங்கவில்லை.

பத்தாவது நாளும் பிறந்தது.தோப்பு வீடு துன்பத்தில் ஆழ்ந்து கிடந்தது. அன்றும் முருகவேல் கோட்டத்திற்குக் கிளம்பிய நக்கண்ணை வெறுப்புடனேயே கிளம்பினாள். தமிழ்ப் புலமையை அன்று முருகவேளிடமே காட்டி இகழ்ப்பா பாடினாள் உள்ளூர. முருகன் முகத்தில் அதைக் கேட்டும் முறுவல் இருந்தது. அன்று கடைசித் தினமானதால் மாலையிலும் கோட்டம் வந்து விரதம் முடித்துத் தோழியருடன் வீடு திரும்பினாள்.

விரதம் முடித்துத் தோழியருடன் வீடு திரும்பினாள்.

வீட்டின் திண்ணையில் தூணுக்கருகில் முக்காடிட்டு ஓர் உருவம் பதுங்கி இருந்தது. உடல் முழுவதும் பட்டுப் புடவை மூடிக் கிடந்தது. "யார்?" என்று வினவினாள் நக்கண்ணை. பதில் கிடைக்காததால், பக்கத்திலிருந்த ஒரு மரக்கிளையில் சிறிது உடைத்து அதன் உதவி கொண்டு முக்காட்டைத் தூக்கிப் பார்த்தாள். கரிய இரு விழிகள் அவளை நோக்கின.முகம் சந்திர பிம்பமாக இருந்தது. அது ஆடவன் என்பதற்கு ஒரே அறிகுறி உதட்டின் மீது மிக அழகாக வளர்ந்திருந்த அரும்பு மீசை.

"எழுந்திரு" என்று அதட்டினாள் நக்கண்ணை.

எழுந்திருந்தான் முக்காட்டுக் காளை! அவன் இடையில் ஒரு வாளும் இருந்ததை அவள் கண்டாள். அவன் எழுந்ததில் ஒரு கம்பீரமும் இருந்தது அவளுக்குப் புலனாயிற்று. "யார் நீ?" என்று மீண்டும் வினவினாள் நக்கண்ணை.

அவளுடைய அழகிய விழிகளுடன் அந்த வாலிபன் தனது கண்களைக் கலந்தான் ஒரு வினாடி. அந்த வினாடியில் அந்தப் பார்வை மூலம் அவன் தன்னுள் புகுந்து விட்டானென்பதை உணர்ந்து நக்கண்ணை நாணமெய்தினாள். "தோழி! அவர் யாரென்று கேள்!" என்று இம்முறை தோழியை ஏவினாள். தோழி திகைத்தாள். என்றும் யாரிடமும் நேராகப் பேசும் நக்கண்ணை அன்று தன்னைப் பேசச் சொன்னது திகைப்பாகவும் இருந்தது, வியப்பாகவும் இருந்தது அவளுக்கு. இருப்பினும் திகைப்பையும் வியப்பையும் உதறிக் கேட்டாள் "யார் நீ?" என்று.

"கோழைச் சோழன்!" என்று பதில் கூறினான் அவன்.

"கோழைச் சோழனா?!" வியப்புடன் வினவினாள் தோழி.

"ஆம். நான் பட்டாடைப் போர்வையுடன் முக்காடிட்டிருக்கவில்லை?" என்று வினவினான் அவன்.

"இருந்தாய்"

"அப்படிப்பட்டவன் தென்புலத்தில் ஒருவன் தானுண்டு. அவன்...."

"போர்வைக்கோ பெரு நற்கிள்ளி" என்று இடைப்புகுந்து வாசகத்தை முடித்த நக்கண்ணை அதிர்ச்சி வசப்பட்டாள். "சோழ இளவல் இங்கு ஏன் வந்தார்?" என்று வினவினாள்.

"நாடு கடத்தப் பட்டேன்." என்றான் இளவல்.

"கேள்விப் பட்டோம்" என்றாள் நக்கண்ணை.

"கோழைத் தனத்திற்காக" என்று சொன்னான் இளவல்.

நக்கண்ணையின் மனம் குழம்பியது. அவன் முகம் கோழையின் முகமாகத் தெரியவில்லை அவளுக்கு. கண்களும் கோழையின் கண்களல்ல என்பது அவள் புலமை உள்ளத்திற்குப் புலனாயிற்று. ஆகவே "உள்ளே வாருங்கள்" என்று அழைத்துச் சென்றாள். உள்ளே பெருங்கோழியூர் நாய்கன் சோழ இளவலைத் தக்க மரியாதையுடன் எதிர் கொண்டான். மஞ்சத்தில் உட்கார வைத்து எதிரில் நின்று கொண்டான். "என்ன ஆணை?" என்றும் கேட்டான்.

"நாய்கரே! ஒரு உதவி வேண்டும்" என்றான் சோழ இளவல்.

"உத்தரவிடுங்கள்."

"நாளைக் காலையில் நீர் ஆமூர் மல்லனிடம் செல்லுங்கள்."

"உம்"

"சென்று நான் அவனுடன் மற்போர் புரிய விரும்புவதாகச் சொல்லுங்கள்."

இதைக் கேட்ட நாய்கன் திகிலடைந்தான்."இளவரசே இது வேண்டாம். இது வேண்டாம்" என்றான்.

"ஏன்?"

"அவன் உங்களைக் கிழித்துப் போட்டு விடுவான்."

"நாய்கரே!"

"இளவரசே"

"வீரர்கள் போரில் மரிப்பது நல்லதா? கோழையாக வாழ்வது நல்லதா?"

இதற்கு நாய்கன் பதில் சொல்லவில்லை. "ஏன் மரிக்க இஷ்டப் படுகிறீர்கள்?" என்று முடிவில் கேட்டான்.

"நக்கண்ணையின் நளின விழிகளுக்காக. அவளை நேற்று வாவிக் கையில் அவமதித்தான் மல்லன்."

"ஆம். நேற்று என்னையும் போருக்கு அழைத்தான்."

"உங்களுக்குப் பதில் நான் செல்கிறேன்." நற்கிள்ளியின் பதில் உறுதியாயிருந்தது.

இந்த விநோதத்தைக் கேட்டு, மறுநாள் ஆமூரே நகைத்தது. "போர்வைக் கோப்பெரு நற்கிள்ளி மாள ஆமூருக்கா வரவேண்டும்?" என்று ஊர்ப் பெரியவர்கள் நகைத்தார்கள். பெண்கள் கூட நகைத்தார்கள்.'இந்த மற்போர் நடைபெறாது.சமயத்தில் நற்கிள்ளி ஓடிவிடுவான்' என்று பலரும் சொன்னார்கள். ஆனால். குறிப்பிட்ட நேரத்தில் போர்வையைப் போர்த்திக் கொண்டு ஊர் மத்தியிலிருந்த மற்போர்க் கூடத்துக்கு வந்து சேர்ந்தான் நற்கிள்ளி. மக்கள் அவனை வியப்புடன் பார்த்தார்கள். ஆமூர் மல்லன் எல்லோரும் கேட்கக் கூவினான்" "ஐயோ! சோழன் மகனே! விதி உன்னைப் பிடர் பிடித்து உந்த இங்கு வந்தனை. வேண்டுமானால் ஓடிவிடு," என்று.

பெருநற்கிள்ளி மெல்லப் போர்வையை எடுத்தெறிந்தான். தனது உடலின் மீதிருந்து. உள்ளே சல்லடம் மட்டுமே தரித்திருந்த அவன் தேக காந்தி, இளமை, விழிகளில் இருந்த அசட்டை இவற்றைக் கண்ட மக்கள் "இந்த வயதில் இவனுக்கு ஏன் இந்த விதி?" என்று கேட்டார்கள்.

சிலர் பெருங்கோழியூர் நாயகனைத் தூற்றினார்கள். "இந்தச் சிறு பிள்ளையை இவன் ஏன் காவு கொடுக்கிறான்?" என்று. இவையனைத்தும் சற்று எட்ட இருந்த பனைமரத்தில் சாய்ந்திருந்த நக்கண்ணையின் காதில் விழ, அவள் தனது நளின நயனங்கள் பனிப்ப நின்றாள். ஆனால், மற்போர் துவங்கியதும் விழிகளைத் துடைத்துக் கொண்டாள். வேதனை இருந்த இடத்தில் வியப்பு ஆட் கொண்டது. ஆமூர் மல்லன் மும்முறை இளவலைப் பிடித்தான் தனது முரட்டுப் பிடியில் மும்முறையும் மிக லாவகமாக நழுவினான் நற்கிள்ளி. நான்காம் முறை இருவரும் அணுகிய போது பிடித்தவன் ஆமூர் மல்லனல்ல. நற்கிள்ளியின் மெல்லிய கரங்கள் மல்லன் கரங்களைப் புதுப் பாணியில் சுழற்றி மடக்கிப் பிடித்தன. திடீரென அக்கைகள் திரும்பிய வேகத்தில் மல்லன் இரு முறை சுழன்றான்.

இந்தப் புதுப் பிடியைக் கண்டிராத மல்லன் இதயத்தில் சந்தேகம் எழுந்தது. "இவன் உண்மையில்கோழை தானா? சோழன் மகன் தானா?"என்ற கேள்விகள் சித்தத்தில் பிறந்தன. ஆகவே தனது வலிமையை எல்லாம் உபயோகிக்க நெருங்கினான் இளவலை. இளவலும் தயாராக நின்றான். இம்முறை காலுதைப்பில் ஈடுபட்டான் மல்லன். அதை எதிர்பார்த்த நற்கிள்ளி சற்று விலகித் தனது காலால் அவன் கணுக் காலுக்கு மேல் உதைக்க, மல்லன் மண்ணில் புரண்டான். அடுத்த வினாடி யானை மீது பாயும் சிங்கம் போலப் பாய்ந்த இளவரசன், மல்லன் மார்பில் தன காலை ஊன்றி அவன் தலையை எடுத்துப் பிடித்து, "இது உன் மமதைக்கு, இது ஏன் வீரத்துக்கு, இது நக்கண்ணையை வழி மறித்ததற்கு," என்று மும்முறை தரையில் மோதிவிட்டு எழுந்தான்.. மல்லன் வாயில் ரத்தம் வந்தது. அத்துடன் ஒரு பெருமூச்சு, அவன் உயிரும் பிரிந்தது.

ஆமூர் மக்கள் பிரமை பிடித்து நின்றனர். ஏதும் நடவாதது போல சல்லடத்துடனும் உடம்பில் புழுதியுடனும் நக்கண்ணை நின்றிருந்த பனை மரத்தை நோக்கி நடந்தான் நற்கிள்ளி. அத்தனை புழுதியுடன் அவளைத் தழுவியும் கொண்டான். நக்கண்ணை மறுக்கவில்லை. ஊர் மக்கள் காண அவன் உடற்புழுதிகளைத் தன் புடவைத் தலைப்பால் துடைத்தாள்.

மகன் நாடு கடத்தப்பட்ட ஓராண்டுக்குப் பின்னர் பெருஞ்சாத்தன் இல்லத்தை அடைந்த சோழ மன்னன் தித்தன், "பெருஞ்சாத்தனாரே! என் மகன் ஆமூர் மல்லனைக் கொன்று விட்டானாம்." என்றான்.

"ஆம்" என்றார் பெருஞ்சாத்தனார்..

"அப்படியானால் அவனுக்கு மற்போர் கற்றுக் கொடுத்தது யார்?" என்று வினவினான் மன்னன்.

"நான் தான்!"

"விற்போரும் தெரியுமா?"

"சகலமும் தெரியும்!"

"அப்படியானால் அவன் கோழையல்லவே?"

"சிங்கத்தின் வயிற்றில் நரி எப்படிப் பிறக்கும்?"

பெருஞ்சாத்தனாரின் இந்தக் கேள்வி மன்னனைத் திகைக்க வைத்தது. "பிறகு, கோழையாக வேடந்தான் போட்டானா நற்கிள்ளி?" என்று வினவினான்.

"ஆம்! உலகத்தைத் தனிப்படப் பார்க்க விரும்பினார் இளவரசர். ஒரே மகனானதால் நீங்கள் அனுமதிக்க மாட்டீர்களென்று எண்ணினார். ஆகையால்....!"

"நாடகமாடினான்?"

"ஆம்!"

"அதற்கு நீரும் உடந்தை?"

பெருஞ்சாத்தனார் பதில் கூறவில்லை. வாயிலில் எதையோ கண்டு விழித்தார். "என்ன விழிக்கிறீர்?" எனச் சீறினான் மன்னன்.

வாயிலைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் நற்கிள்ளி. " தந்தையே! சாத்தனாரிடம் குற்றம் காணாதீர்கள்! குற்றம் என்னுடையது." என்றான்.

தித்தன் ஒரு வினாடி தாமதித்தான். பிறகு மைந்தனை அணைத்துக் கொண்டு "நற்கிள்ளி! இன்று நான் புத்திரப் பேறு பெற்றேன்." என்று கூறிவிட்டு, "இனி அந்தப்புரம் சென்று விளையாடுவதில்லை என்று உறுதி சொல்" என்று கையை நீட்டினான்.

"அந்த உறுதி சொல்ல முடியாது."

"அப்படியானால்...?"

"இப்பொழுதே அந்தப்புரம் போக வேண்டும்!"

"காரணம்?"

"இவள்" என்ற இளவல் "இதோ உங்கள் மருமகள்!" என்று வாயிலை நோக்க, நக்கண்ணை அன்ன நடை நடந்து வந்து மன்னனை வணங்கினாள்.

மன்னன் நகைத்தான்! " சரி, சரி! போ அந்தப் புரத்துக்கு!" என்றான்.

அன்றிரவு மணவறையிலும் நற்கிள்ளி போர்வை போர்த்தி வந்தான். "புடவையை எடுத்து எறிகிறீர்களா, நான் எறியட்டுமா?" என்றாள் நக்கண்ணை.

"அது உன் தொழில் அல்ல! என் தொழில்!" என்று சீலையை நீக்கிப் பஞ்சணையை அணுகினான் நற்கிள்ளி.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சகோதரி! நீண்ட நாட்களின் பின் ஒரு சரித்திரக் கதை படித்தேன்! :D

எழுதியவர் யாரென போடவில்லை.நல்ல கதை.

சரித்திரகதைகள் சில மிக நன்றாக இருக்கும்.எனக்கு பிடித்த படம் காஞ்சித்தலைவன்.

சோ.பத்மநாதனின் சரித்திர நாடகமொன்று வானொலியில் கேட்டு அழுத ஞாபகம்.

தொடர்ந்து கதைகளை இணையுங்கள்.

  • தொடங்கியவர்

எழுதியவர் யாரென போடவில்லை.நல்ல கதை.

சரித்திரகதைகள் சில மிக நன்றாக இருக்கும்.எனக்கு பிடித்த படம் காஞ்சித்தலைவன்.

சோ.பத்மநாதனின் சரித்திர நாடகமொன்று வானொலியில் கேட்டு அழுத ஞாபகம்.

தொடர்ந்து கதைகளை இணையுங்கள்.

sandilyan.....

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி வீணா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.