Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அறுபது வருட இனஅழிப்பு தொடர்பான முழுமையான விசாரணை தேவை!

Featured Replies

அறுபது வருட இனஅழிப்பு தொடர்பான முழுமையான விசாரணை தேவை! அமெரிக்கத் தூதரக அதிகாரிகளிடம் த.தே.ம.மு மகஜர்

இலங்கை அரசு மேற்கொண்ட போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கையை தமிழ்த் தேசிய முன்னணி வரவேற்கிறது. அதேநேரம் கடந்த அறுபது வருடங்களாக இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பான முழுமையான ஒரு சர்வதேச விசாரணை தேவை என்பதையும் வலியுறுத்துகிறது.

அத்துடன் தமிழ்த் தேசத்தின் இறைமை அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலான தீர்வு சர்வதேச கண்காணிப்பில் வழங்கப்படல் வேண்டும்.

இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பின்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிருக்கும், அமெரிக்கத் தூதரக அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று புதன்கிழமை பிற்பகல் 12.45மணி தொடக்கம் 2.45 மணிவரை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. அமெரிக்கத் தூதரகத்தின் அழைப்பின்பேரில் யாழ்நகரிலுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகளும், கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகளுமாக நான்கு பேர் இச்சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், உபதலைவர் இ.ஆனந்தராஜா, உபதலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமதி பத்மினி சிதம்பரநாதன், உபதலைவரும் இளைஞர் விவகார பொறுப்பாளருமான வி.மணிவண்ணன் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.

தற்போது சர்வதேச சமூகத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் போர்க்குற்ற விவகாரங்கள், மற்றும் அரசாங்கத்துடன் இடம்பெறும் பேச்சுவார்த்தைகள், தமிழ் மக்களது எதிர்பார்ப்புக்கள் தொடர்பான கருத்துக்களை தூதரக அதிகாரிகள் ஆர்வத்துடன் கேட்டறிந்து கொண்டனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் கட்சியின் நிலைப்பாடு மற்றும், சர்வதேச சமூகத்திடமிருந்து தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் விடயங்கள் உள்ளடங்கிய எழுத்து மூல அறிக்கை ஒன்றும் கையளிக்கப்பட்டது. சந்திப்பு மிகவும் சுமூகமாக இடம்பெற்றதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இச்சந்திப்பின்போது அமெரிக்க தூதரக அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்ட அறிக்கையின் விபரம் வருமாறு.

27-04-2011

கௌரவ தூதுவர்

அமெரிக்க தூதுவராலயம்

கொழும்பு

மதிப்பிற்குரிய தூதுவர் அவர்கட்கு

தமிழ் மக்களது நலனில் அக்கறையுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், கல்விமான்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள், சமூக சேவையாளர்கள், துறைசார் வல்லுனர்கள், மக்கள் அமைப்புக்கள் போன்ற தரப்புக்களை உள்ளடக்கிய கூட்டமைப்பே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி(த.தே.ம.மு)யாகும். 2010 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் உருவாக்கப்பட்ட த.தே.ம.மு ஆனது, 2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டது.

த.தே.ம.மு தமிழ் மக்களது அரசியல் பிரச்சினைகள் தொடர்பாக பின்வரும் விடயங்களை தங்களது கவனத்திற்கு கொண்டுவருகின்றது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட 2010 ஆம் ஆண்டுக்கான மனித உரிமைகள் அறிக்கையில் இலங்கை அரசும், அதன் ஆயுதப் படைகள் மற்றும் துணைப்படைகள் தொடர்ச்சியாகத் தமிழ் மக்களுக்கு எதிராக புரியும் குற்றங்கள் தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை த.தே.ம.மு வரவேற்கின்றது.

ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கை இறுதி யுத்தம் இடம்பெற்றபோது இலங்கை அரசாங்கமும், அதன் ஆயுதப்படைகளும், போர்க் குற்றங்களிலும், மனிதத்துவத்திற்கு எதிரான குற்றங்களிலும் ஈடுபட்டுள்ளார்கள் என சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் உண்மையானவை என்பதை ஐ.நா நிபுணர்குழு கண்டறிந்து உறுதிப்படுத்தி, தயாரிக்கப்பட்ட அறிக்கை ஐநா செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா அரசு, மற்றும் அதன் ஆயுதப்படைகள் தொடர்பாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களைத் த.தே.ம.மு வரவேற்கின்றது. காலம் கடந்தாயினும் ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையின் பரிந்துரைகளை காலதாமதமின்றி அமுல்ப்படுத்த ஐ.நா சபை காத்திரமானதும், துரிதமானதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் த.தே.ம.மு கோருகின்றது.

தமிழ் இனஅழிப்பு (Genocide) தொடர்பாக சர்வதேச, பக்கச் சார்பற்ற விசாரணை மேற்கொள்ளப்படல் வேண்டுமென, இலங்கைத் தீவிலிருந்து த.தே.ம.மு மட்டுமே சர்வதேச சமூகத்தை வலியுறுத்தி வந்தது. அந்தவகையில், ஆரம்பக்கட்டமாக மேற்படி ஐ.நா செயலாளரின் அறிக்கை வெளிவருமளவுக்கு தேவையான அழுத்தங்களைப் பிரயோகித்திருந்த அமெரிக்காவுக்கும், ஏனைய சில சர்வதேச நாடுகளுக்கும், சர்வதேச மனித உரிமை அமைப்புக்களுக்கும், ஊடகங்களுக்கும், கருத்துச்சுதந்திரம் உட்பட அனைத்து சுதந்திரமும் மறுக்கப்பட்ட நிலையில் வாழும் தமிழ் மக்கள் சார்பாக த.தே.ம.மு நன்றி கூறுகின்றது.

ஐ.நா செயலாளரின் அறிக்கையின்படி ஸ்ரீலங்கா அரசும், அதன் படைகளும் மேற்கொண்டதாகக் கண்டறிந்துள்ள போர்க்குற்றங்கள், மற்றும் மனிதத்துவத்திற்கு எதிரான குற்றங்களானவை, கடந்த 60 வருடங்களாக தமிழ் மக்களுக்கு எதிராக, அரசினால் (State) திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையின் ஓர் அங்கம் மட்டுமே என்பதனை த.தே.ம.மு மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றது.

விசாரணைக்கான பொறிமுறை விசாரணை செய்வதற்கான குழு:

ஸ்ரீலங்கா அரசாங்கத்தினது தலையீடுகள் எதுவுமற்ற வகையில், சர்வதேச சமூகத்தினால் நியமிக்கப்படும், சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணைக் குழு ஒன்றினால் மட்டுமே விசாரணை மேற்கொள்ளப்படல் வேண்டும்.

விசாரணைப்பரப்பு

- இறுதி யுத்தத்தில் புரியப்பட்டதாக ஐ.நா அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள குற்றங்களை மட்டும் விசாரிப்பதான மட்டுப்படுத்தல்களை விசாரணைக்குழு கொண்டிருக்கக் கூடாது.

- இறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிக்கு வெளியேயும் இடம்பெற்ற கடத்தல்கள், கொலைகள், சித்திரவதைகள் தொடர்பாகவும் முழுமையான விசாரணை தேவை.

- ஸ்ரீலங்கா அரசு (State) கடந்த அறுபது வருடங்களாக தமிழ்த் தேசத்தின் மீது இனஅழிப்பை மேற்கொண்டு வருகிறது. அந்த இனஅழிப்புத் தொடர்பாகவும் முழுமையான, பக்கச்சார்பற்ற விசாரணை மேற்கொள்ளப்படல் வேண்டும்.

சாட்சியங்கள்

- மேற்படி விசாரணைகளில் சாட்சியமளிப்பவர்களது பாதுகாப்பு ஐ.நா அமைப்பினால் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.

அவ்வாறான விசாரணையை மேற்கொள்ளுவதற்குத் த.தே.ம.மு முழுமையான ஆதரவை எவ்வேளையிலும் வழங்கத் தயாராகவுள்ளது. அவ்வாறானதொரு விசாரணை ஆரம்பிக்கப்படுவதற்கான அழுத்தங்களை அமெரிக்கா பிரயோகிக்க வேண்டுமென பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் சார்பாக த.தே.ம.மு கோருகின்றது.

இறுதிப் போரில் தமிழ் மக்கள் மீது, போர்க் குற்றங்களும், மனிதத்துவத்திற்கு எதிரான குற்றங்களும், புரியப்பட்டுள்ளன என்றும் அவை தொடர்பாக சர்வதேச விசாரணை நடாத்தப்படல் வேண்டுமென்றும், சர்வதேச சமூகத்தினாலும், த.தே.ம.மு வினாலும்; கடந்த பல மாதங்களாக வலியுறுத்தப்பட்டு வருகின்ற நிலையிலும் சரி, மேற்படி குற்றச் சாட்டுக்கள் தொடர்பாக ஐ.நா நிபுணர்குழு ஆராய்ந்து கொண்டிருந்த நிலையிலும்சரி, நிபுணர்குழுவின் அறிக்கை கையளிக்கப்பட்டுள்ள நிலையிலும்சரி, அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் எதனையும் பொருட்படுத்தாது, புறந்தள்ளியவாறு ஸ்ரீலங்கா அரசாங்கமானது தமிழ்த் தேசத்திற்கு எதிரான ஒடுக்குமுறைகளை தெளிவான நிகழ்ச்சிநிரல் ஊடாக சகல வழிகளிலும் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றது.

தமிழ்த் தேசத்தின் இருப்பை அழிப்பதற்கான திட்டமிட்ட செயற்பாடுகள்

அவசரகாலச் சட்டம், மற்றும் பயங்கரவாதத் தடைச்சட்டம் என்பவற்றை வாய்ப்பாகப் பயன்படுத்தி:

- பாதுகாப்பு என்ற போர்வையில் சோதனைக் கெடுபிடிகளை மேற்கொள்வதன் மூலமும், மக்களது அன்றாட வாழ்வியல் நடவடிக்கைகளிலும், அரச நிர்வாக செயற்பாடுகளிலும் கடுமையான இராணுவத் தலையீடுகளை மேற்கொள்வதன் மூலமும் துணை இராணுவக் குழுக்களை தொடர்ந்தும் மக்களுக்கு எதிராகப் பயன்படுத்துவதன் மூலமும் மக்களை மரணபயத்தில் வைத்திருக்கின்றது. அத்தோடு

- ஒன்றுகூடி அரசியல் விடயங்களை பேசும் மக்கள் மீது இராணுவம் தாக்குதல்களை நடாத்துதல், கொலை மிரட்டல் விடுதல் மூலம் பேச்சுச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் என்பவற்றை நசுக்குதல்.

- விடுவிக்கப்பட்ட போராளிகள் அரசியல் உரிமைகள் பற்றி சிந்திக்கவே கூடாதென மிரட்டப்படுதல் ஊடாக அவர்கள் அரசியலில் ஈடுபடும் உரிமை மறைமுகமாக மறுக்கப்பட்டுள்ளமை. மேலும் அவர்கள் தொடர் கண்காணிப்புக்கு உள்ளாக்கப்படுவதன் மூலம் இயல்பு வாழ்வுக்கு திரும்ப முடியாதவாறு தடுத்தல்.

- உயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள மக்கள் குடியிருப்புக்கள், பொதுக் கட்டடங்கள், விவசாய நிலங்கள், வணக்கத்தலங்களை தொடர்ந்தும் ஆயுதப்படைகளின் பயன்பாட்டில் வைத்திருத்தல்

- தமிழ் மக்கள் தமது சொந்த இடங்களில் குடியமர்வதை தடுத்தல்

- மீள் குடிமர்ந்த மக்களுக்குத் தேவையான வசதிகளை வழங்காதிருத்தல்

- மீள் குடியமர்ந்தவர்கள் சுயதொழிலை மேற்கொள்வதற்கு தேவையான உதவிகளை வேண்டுமென்றே வழங்காதிருத்தல்

- அடிப்படை வருமானம் ஏதுமற்ற குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை நிறுத்தியுள்ளமை

- எந்தவொரு தொழில் தொடங்குவதாக இருந்தாலும் இராணுவத்தினரிடம் அனுமதிபெற வேண்டும் என்ற நிபந்தனைகளை விதித்திருத்தல்

- மனித உரிமைகளுக்காக குரல் கொடுப்போர் மீதும், உண்மைகளை வெளியிடும் ஊடகங்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளுதல்.

- சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைத்து வைத்திருக்கும் இளைஞர், யுவதிகள் மீது உடல் உள ரீதியான சித்திரவதைகளை புரிதல்

- தமிழர் பிரதேசங்களில் அரச ஆதரவுடன் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை உருவாக்குதல், பௌத்த விகாரைகளை நிறுவுதல்.

- தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை உருவாக்கி, தாயகத்திலுள்ள தமிழ் மக்கள் புலம்பெயர் தமிழ் மக்களிடமிருந்து நிதி உதவிகளைப் பெற்று அழிவடைந்த தாயகத்தை மீளக் கட்டியெழுப்பும் செயற்பாட்டுக்கு தடைகளை ஏற்படுத்தல்.

- தமிழரது பொருளாதார ஆதிக்கத்தை சிங்கள மயமாக்கல்.

- நிர்வாக ரீதியான சிங்கள மயமாக்கல்.

- தமிழ்த் தேசத்தில் திட்டமிட்ட காலாசாரச் சீரழிவை ஏற்படுத்தல்.

- தமிழ்த் தேசத்தின் வரலாற்று ஆதாரங்கள், புனித இடங்கள், தொல்லியல் சான்றுகளை அழித்தல்.

- சனத்தொகைப் பரம்பலை மாற்றியமைத்தல், சனத்தொகையை குறைத்துக் காட்டுதல்.

இச் செயற்பாடுகளானது, யுத்தம் முடிவடைந்த பின்னரும் இனஅழிப்புச் செயற்திட்டத்தை சாத்தியமான சகல வழிமுறைகள் ஊடகவும் அரசு தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதனை தெளிவாக வெளிப்படுத்துகின்றது.

இனப்பிரச்சினைத் தீர்வுக்கு சாத்தியமான அணுகுமுறை

ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையையும், ஏனைய சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் அறிக்கையையும், தமிழ் மக்களது கோரிக்கையையும் அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்படும் சர்வதேச விசாரணை பொறிமுறை அமைப்பினூடாக, இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான நீதியான அரசியல் தீர்வு சர்வதேச சமூகத்தினால் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.

இன அழிப்புக்கு உள்ளாகிக் கொண்டிருக்கும் தமிழ் மக்களையும், தமிழ்த் தேசத்தையும் பாதுகாப்பதற்கும், இனங்களுக்கிடையில் நீடித்த, நிலையான புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கும், தமிழ்த் தேசத்தின் இறைமை அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையில் உருவாகும் சமத்துவமான நிலையில், ஒரு நாட்டுக்குள் இறைமையுள்ள தமிழ்த் தேசமும், இறைமையுள்ள சிங்கள தேசமும் புரிந்துணர்வுக்கு வருவதன் அடிப்படையில் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுதியான நிலைப்பாடாகும்.

இவ்வாறான தீர்வை அடைவதற்கு அமெரிக்காவும், ஏனைய சர்வதேச நாடுகளும் உதவ வேண்டும் எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோருகின்றது. இவ்வாறு கட்சியின் உபதலைவர் மற்றம் பொதுச் செயலாளரினால் கையெழுத்திடப்பட்டுள்ள இம்மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={B1581A60-D004-4080-974A-74B84778E536}

  • கருத்துக்கள உறவுகள்

வரவேற்கத்தக்கவிடையம் தொடருங்கள் உங்கள் பணியினை. புலம்பெயர்தோசத் தமிழர்களது ஆக்கபூர்வமான ஒத்துழைப்பு தங்களுக்கு எப்போதுமுண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்தில் இருந்து கொண்டும் தமிழ் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் தொலைநோக்கோடும் காத்திரமாகவும்... யதார்த்தத்தை தழுவியும் எப்போதும் அறிக்கை தருவதோடு கிரமமாக அதை தூதரக மட்டத்தில் சொல்லி வருவதும் த.தே.ம.மு ஆகும்.

உண்மையில் சிறீலங்கா சிங்கள இராணுவம், அதன் புலனாய்வு கொலைப் பிரிவு மற்றும் சிங்கள அரச ஆதரவு தமிழ் ஆயுதக் கும்பல்களான.. ஈபிடிபி.. ரி எம் வி பி, புளொட், ஈபிஆர் எல் எவ் (வரதர்), ஈ என் டி எல் எவ்.. கருணா அணி இப்படியான கொடூர அமைப்புக்கள் தொடர்ந்து இயங்கும் நிலையிலும் ஆனந்த சங்கரி போன்ற எலும்பு பொறுக்கிகள் செயற்படுத்தப்படும் சூழலிலும் துணிந்து தனித்து நின்று மக்களின் நலன் நாடி செயற்படும் கட்சியாக இவர்கள் இருப்பது உண்மையில் பாராட்டக் கூடியது.

தொடர்ந்தும் உங்கள் காத்திரமான பங்களிப்பை நல்கும் படி கேட்டுக் கொள்வதோடு உங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய தூதர்களின் ஐநாவின் உதவியையும் நாடிக் கொள்வது அவசியம்.

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

உலகம் போர்குற்றம் என்று சொன்ன நிலையில், அடுத்தகட்டமாக அங்கு நடப்பது ஒரு இனப்படுகொலை என்று உணரவைக்க மேலே தரப்பட்டுள்ள நடவடிக்கை காத்திரமானது.

உலகம் தாயகத்தில் நடப்பது இனப்படுகொலை என்று ஏற்கும் பொழுது அதை தடுக்க ஒரு பொறிமுறையை ஏற்படுத்த வழிசமைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

மாலுமியில்லாத கப்பல் கடலில் அடித்துச்செல்லப் படுவது போல அடித்துச் செல்லப்படும் எங்கள் கருத்துக்களைத் தெளிவாக ராஜதந்திரிகளுக்கு எடுத்துச் செல்ல ஒரு ஊடகம் தேவை. அந்த வெறுமையைக் கொஞ்சமாவது நிரப்ப முயலும், உங்களுக்கு எங்கள் ஆதரவு என்றும் உண்டு!!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.