Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்தியாவைச் சுற்றி சுருக்குக்கயிறு போன்ற வியூகம் அமைத்து வரும் சீனா!

Featured Replies

இந்தியாவைச் சுற்றி சுருக்குக்கயிறு போன்ற வியூகம் அமைத்து வரும் சீனா!

இலங்கையிலும், இந்து சமுத்திரப் பிராந்தியத்திலும் சீனாவின் செல்வாக்கு யாராலும் கணிப்பிட முடியாதளவுக்கு அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்தில் சீன இராணுவ பிரதித் தளபதி ஜெனரல் மா சியாவோதியன் கொழும்பு வந்திருந்த அதேவேளை, இந்து சமுத்திரத்தில் உள்ள செஷெல்ஸ் தீவில் கடற்படைத்தளம் ஒன்றை அமைக்கும் முடிவை சீனா அறிவித்துள்ளது.

சீனாவில் இராணுவ அதிகாரிகளின் பிரதித் தளபதி ஜெனரல் மா சியாவோதியன் மிகவும் முக்கியமானதொரு இராணுவ அதிகாரி.

அவரது கொழும்பு வருகை சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்படக் கூடியதொன்று அல்ல. சீன விமானப்படையைச் சேர்ந்த அவர் இப்போது ஒட்டுமொத்த இராணுவ அதிகாரிகளுக்கும் பிரதித் தலைவராக இருப்பவர்.

அடுத்து இவர் சீன விமானப்படைக்குத் தளபதியாகப் பொறுப்பேற்கலாம் என்றும் கருதப்படுகிறது. இந்தப் பொறுப்பை ஏற்ற பின்னர் 70 ற்கும் மேற்பட்ட தடவைகள் வெளிநாடுகளுக்கான பயணங்களை மேற்கொண்டுள்ளவர் ஜெனரல் மா சியாவோதியன்.

இலங்கைக்கு மட்டுமே அவர் இந்த ஆண்டில், அதுவும் ஆறு மாதங்களுக்குள் இரண்டாவது தடவை வந்து சென்றுள்ளார். கடந்த ஜுன் மாதம் இந்தியா செல்லும் வழியில் அவர் கொழும்பு வந்திருந்தார். இந்தியாவில் அவர் பாதுகாப்புத் துறையினரை சந்திக்க வேண்டியிருந்தது. ஆனால் தமது பாதுகாப்புத் தரப்பினருக்கு வேறு நிகழ்ச்சி நிரல்கள் இருப்பதாக இந்தியா கூறிவிட்ட நிலையில், ஜெனரல் மா சியாவோதியன் கொழும்புடன் தனது பயணத்தை முடித்துக் கொண்டு போனார்.

அவர் சீனாவில் இருந்து புறப்பட முன்னரே இந்தியப் பயணம் இடைநிறுத்தப்பட்டது தெரிந்திருந்தது.

ஆனாலும் அவர் இலங்கைக்கு வருவதை முக்கியமெனக் கருதினார். வந்தார், பேச்சு நடத்தி பல்வேறு இணக்கப்பாடுகளுடன் திரும்பிச் சென்றிருந்தார். இப்போதும் அவர் இந்தியா சென்று விட்டு கொழும்பு வந்தார்.

ஆறு அதிகாரிகள் சகிதம் வந்த அவர் நான்கு நாட்கள் கொழும்பில் தங்கியிருந்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் முப்படைகளினதும் தளபதிகளைச் சந்தித்துப் பேசி விட்டுச் சென்றுள்ளார்.

இவர் இலங்கை வந்திருந்த போது தான் செஷெல்ஸ் தீவில் கடற்படைத் தளத்தை அமைக்கும் முடிவை சீனா அறிவித்தது.

சீனா தனது எல்லைக்கு அப்பால் அமைக்கப் போகின்ற முதலாவது கடற்படைத்தளம் இதுவாகும். முன்னர் அமெரிக்காவே இத்தகைய தளங்களை அமைத்தது.

ஆசிய பசுபிக் கடற்பகுதியில் மட்டும் அமெரிக்காவுக்கு இத்தகைய பல தளங்கள் உள்ளன. அந்தந்த நாடுகளுடன் பாதுகாப்பு உடன்பாடுகளைச் செய்து கொண்டு கடற்படைத் தளங்களை அமைத்துக் கொள்ளும் அமெரிக்காவின் வழக்கத்தை இப்போது சீனாவும் பின்பற்றத் தொடங்கியுள்ளது.

செஷெல்ஸ் தீவில் அமையப் போகும் சீனக் கடற்படைத்தளம் பிரமாண்டமானதாக இருக்கும் என்றும், அங்கு சீனா கட்டி வரும் பாரிய விமானந்தாங்கிப் போர்க்கப்பல் தரித்து நிற்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே இந்தியாவைச் சுற்றி, சீனா சுருக்குக்கயிறு போன்ற வியூகம் அமைத்து வருகிறது.

மாலைதீவு, இலங்கை, பாகிஸ்தான், மியான்மர் என்று சீனாவின் கால்கள் வலுவாக ஊன்றப்பட்டு வரும் நிலையில் இந்தியாவின் அசைவியக்கம் தடுக்கப்படும் வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன.

சீன ஜெனரல் இந்தியா சென்று பதற்றத்தைக் குறைக்கும் பேச்சுக்களை நடத்தி விட்டு, கொழும்பு வந்த நிலையில் தான், செஷெல்ஸ் தீவில் கடற்படைத் தளம் அமைக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது சீனா. இது இந்தியாவுக்கு கடும் ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கும்.

ஒரு பக்கத்தில் இந்தியாவும், இலங்கையும் இந்து சமுத்திரத்தில் சீனாவின் அதிகரித்த தலையீடுகள் இந்தியாவுக்கு ஆபத்தை ஏற்படுத்தாது என்று கூறிக் கொண்டிருக்கின்றன. ஆனால் சீனாவோ இந்து சமுத்திரத்தில் தனது கால்களை அகல விரித்துக் கொண்டிருக்கிறது.

இலங்கை இராணுவம், விமானப்படை, கடற்படையுடனான நெருக்கத்தை சீனா தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்தவாரம் கொழும்பு வந்த சீன ஜெனரல் இலங்கை இராணுவத்தினருக்கான பயிற்சி வசதிகளை அதிகரிப்பது உள்ளிட்ட பல விடயங்கள் பற்றிப் பேசியுள்ளார்.

அதில் முக்கியமானது, முள்ளிவாய்க்கால் இறுதிப்போரின் போது இலங்கைப் படையினர் பயன்படுத்திய தரைப்போர் உபாயங்கள் பற்றியது. இந்த விபரங்களை இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய சீன ஜெனரலிடம் எடுத்துக் கூறியுள்ளார்.

போர் முடிந்து மூன்றாண்டுகளாகப் போகின்ற நிலையில், இப்போது தான் தரைப் போரின் உபாயங்களை சீனா பெறுகிறது என்பது நம்பமுடியாத கதையாகவே உள்ளது.

ஏனென்றால் போரின் அச்சாணியாக இருந்து உதவிய நாடு சீனா.

அதைவிட உலகளாவிய வல்லரசுக் கனவோடு உலாவும் சீனா, புலிகள் இயக்கத்தைத் தோற்கடித்த உபாயங்கள் பற்றி இதுவரை விசாரித்து அறியாதிருந்தது என்று யாராவது சொன்னால் அதை நம்ப முடியாது. ஏற்கனவே இலங்கை இராணுவம் நடத்திய போர் அனுபவப்பகிர்வு கருத்தரங்கில் இதுபற்றி விளக்கப்பட்டுள்ளது.

அதைவிட இதே, சீன ஜெனரல் ஏற்கனவே கடந்த ஜுன் மாதம் கொழும்பு வந்தபோதும் இதுபற்றிக் கலந்துரையாடப்பட்டது. ஆனாலும், இப்போதும் அந்த விடயம் பற்றிக் கேட்டறிந்து கொண்டுள்ளதாக கூறப்படுவது முக்கியமானது.

போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற பல வெளிவராத தகவல்கள், இரகசியங்கள் உள்ளன. அவையே இந்தச் சந்திப்பில் பரிமாறப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. ஏனென்றால் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான நகர்வுகள் மேற்கொள்ளப்படும் போது, சீனாவே பிரதான கவசமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் தான் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய சம்பவங்கள் தொடர்பான இரகசியங்கள் பரிமாறப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. இவை சீனாவுக்கு அவசியமானவை.

இலங்கையைக் காப்பாற்ற வேண்டுமானால் உண்மையை அறிந்து கொள்ள சீனா முயன்றிருக்கலாம்.

இலங்கைக்கு சீனா தொடர்ந்து நிதியுதவிகளை அள்ளி வழங்கிக் கொண்டிருப்பது வெறுமனே பிரதிபலன் எதிர்பார்த்திராத நட்புசார்ந்த ஒன்று என்று எவராவது கருதினால் அது முட்டாள்தனம். கடந்தவாரம் கொழும்பு வந்த சீனாவின் பிரதி பிரதமர் பல மில்லியன் டொலர் முதலீடுகள் குறித்த உடன்பாடுகளில் கையெழுத்திட்டுள்ளார்.

இந்தளவு உதவிகளையும் சீனா அள்ளிக் கொடுப்பதற்கு ஏதோ ஒரு காரணம் உள்ளது.

இதற்குப் பிரதிபலனாக இலங்கையிடம் இருந்து அனுகூலங்களைப் பெறத் தொடங்கி விட்டது சீனா.

இந்தநிலையில் சீனத் தலையீட்டினால் ஆபத்து இல்லை என்று இந்தியா கூறிக் கொண்டிருப்பதை பார்க்கும்போது, 1961 ல் நேருவின் அப்பாவித்தனம் தான் நினைவுக்கு வருகிறது.

நேரு நேசக்கரம் நீட்டிக் கொண்டிருக்க, அவரது பலவீனத்தைப் பயன்படுத்திக் கொண்டு சீனா இந்திய எல்லைக்குள் கால்களை நீட்டிப் படுத்துக் கொண்டது.

அப்போது சீனா கைப்பற்றிய 90ஆயிரம் சதுர கி.மீ ற்கும் அதிக பரப்பளவுள்ள நிலத்தை இந்தியாவால் இப்போதும் மீட்க முடியவில்லை.

எனவே, இப்போது சீனா விடயத்தில் இந்தியா காட்டும் மெத்தனம், மற்றொரு ஊடுருவலுக்கான அடித்தளமாக அமைந்து விடலாம்.

மூலம்: வீரகேசரி - மார்கழி 19, 2011

பிரசுரித்த நாள்: Dec 19, 2011 13:46:05 GMT

தமிழீழ விடுதலைப் புலிகளளின் கடற்படை வலுவாக இருந்தபோது, பாக்குநீரிணையில் இந்தியாவுக்கு ஒரு பாதுகாப்பு இருந்தது. அது இந்தியாவுக்கு தெரியாத ஒன்றல்ல. தனக்கு மூக்குப்போனாலும் எதிரிக்கு சகுனப்பிழை என்றது மாதிரி அற்பத்தனமாக இந்தியா நினைத்து விடுதலைப்புலிகளின் கடற்படையை அழிக்க உதவியது. இந்தச் செயற்பாட்டால், நாராயணன், சிவசங்கரமேனன் போன்றவர்கள் சீனாவிடம் லஞ்சம் பெற்றார்களோ தெரியளாது, விடுதலைப்புலிகளின் கடற்படையை அழித்த பலன் இந்தியா அனுபவிக்க வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.

இந்தியாவைச் சுற்றி சுருக்குக்கயிறு போன்ற வியூகம் அமைத்து வரும் சீனா!

சரியான சொற்பிரயோகம். இவ்வளவு நாளும் முத்துமாலை என்று இந்தியாவை அநாவசியாமாக பெருமைப்படுத்தினார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா அமெரிக்காவின் பக்கம் சார்வது தவிர்க்க முடியாது.ஐரோப்பாவும் அமெரிக்காவுடன் தான் நிற்பார்கள். அது பொருளாதாரமாகட்டும் அல்லது போராகட்டும்.

ரஸ்யா, ஈரான் போன்ற நாடுகள் அமெரிக்காவுக்கு எதிரான நாடுகளாயினும் எப்பக்கத்தையேனும் இப்போது எடுப்பார்கள் என நினைக்கவில்லை.

தற்போதைய பொருளாதார மந்த நிலையில் தமக்கு லாபம் ஏதாவது கிடைக்குமா என்பதிலேயே பல நாடுகள் உள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்

சீனா -- மாயவலையும் மந்திர வேலைகளும்

1995 ஆம் ஆண்டு. பெய்ஜிங்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இரண்டு சீன விஞ்ஞானிகள் ஒரு ஆய்வுக்கட்டுரையை சமர்பித்தனர்.அதைத் தொடர்ந்து பல கட்டங்களாக இந்த ஆய்வுக்கட்டுரை சீனாவில் உள்ள பல துறைகளுக்குச் சென்றது. ஒவ்வொரு துறையைச் சார்ந்தவர்களும் அந்த கட்டுரையில் உள்ள சாத்தியக்கூற்றை ஆராய்ந்தனர்.

கடைசியாக "முடியும்" என்றும் நாம் செயலில் இறங்கலாம் என்று சீன அரசாங்கம் பச்சை கொடி காட்டியது. இன்று உலகின் கண்களுக்கு மண்ணைத்தூவி விட்டு, அந்தத் திட்டத்தின் வேலைதான் விரைவாக நடந்து கொண்டிருக்கிறது.

ஆமாம்.

சீனா தனது ஆதிக்கத்தில் உள்ள திபெத்தில் ஓடிவரும் சேங்போ என்றழைக்கப்படும் பிரம்மபுத்ரா நதியின் குறுக்கே அணை ஒன்றை கட்டிக் கொண்டிருக்கிறது. எந்த விளம்பரமும் இல்லாமல் வீண் விவாதங்கள் இல்லாமல் பணிகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

brahmaputra.jpg

ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சிக்கும் சில துறைகள் முக்கிய பங்கு வகிக்கின்றது. நிதி, விவசாயத்துறை, தொழிற்துறை. ஆனால் இந்த மூன்றும் நிலையாக இருக்க உள்நாட்டில் சட்டம் ஒழுங்கு முக்கியமாக இருக்க வேண்டும். அதற்கு உள்துறை முக்கிய பங்காற்றுகின்றது.

இவற்றையெல்லாம் விட அதி முக்கியமானது வெளியுறவுத்துறை.

இந்தியாவின் நிதித்துறையை கையில் வைத்திருக்கும் பிராணாப் முகர்ஜியைப் பற்றி சொல்லவே தேவையில்லை. காலஞ்சென்ற பிரமோத் மகாஜன் எப்படி தன்னை நான் அம்பானிக்கு பிறக்காத மகன் என்று சொல்லியிருந்தாரோ அதனைப் போலவே இன்றைய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கும் நாட்டை விட நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் கார்ப்பரேட் கனவான்களே முக்கியமானவர்கள். நிதித்துறை குளறுபடிகளை கவனிப்பதை விட எப்படி பிரதமர் பதவியை கைப்பற்றுவது என்பதில் தான் அதிக கவனமாக இருக்கிறார். எங்கே மன்மோகன் சிங்கிற்கு அடுத்து ப.சிதம்பரம் வந்து விடுவாரோ என்று அவரால் முடிந்த அத்தனை தகடுகித்த வேலையை செய்து கொண்டிருந்த போதிலும் சோனியா ஆதரவில்லாத காரணத்தால் ஒவ்வொருமுறையும் தோற்றுக் கொண்டேயிருக்கிறார்.

2G+Cartoons.jpg

கடந்த தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள சிவகங்கை தொகுதியில் தோற்ற போதிலும் குளறுபடிகள் செய்து குறுக்குவழியில் சென்ற ப.சிதம்பரத்திற்கு உள்துறை அமைச்சர் பதவியென்பது வேப்பங்காய் போன்றது. அவர் எதிர்பார்த்திருந்தது நிதித்துறையே.

ஆனாலும் வேண்டா வெறுப்பாகவே காலம் தள்ளிக் கொண்டிருக்கிறார். காங்கிரஸின் முதல் ஐந்தாண்டு காலத்தில் ப.சிதம்பரம் நிதியமைச்சராக பதவியில் இருந்து ஆசியாவின் சிறந்த நிதியமைச்சர் என்ற பெரும்புகழை அடைந்தார். அத்துடன் உள்நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களை பஞ்சம் பிழைக்க வைத்ததில் முக்கிய பங்காற்றினார். இப்போது கூட பாகிஸ்தானிடம், மாவோஸிட்களிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறார்.

அடுத்து தியாகச் செம்மல் சரத்பவார். இவர் பெயர் சொன்னாலே போதும். தரம் எளிதில் விளங்கும். அடுத்து 50 ஆண்டுகள் கழித்து கூட வரக்கூடிய விவசாயிகள் மறக்க முடியாத நபர்.

ஆனால் இவர்களுக்கு அப்பாற்பட்டு ஒரு திறமைசாலி தான் நம்முடைய வெளியுறவுத்துறை அமைச்சர் கர்நாடகாவைச் சேர்ந்த எஸ்.எம். கிருஷ்ணா. வெளியுறவுத்துறை என்றால் என்ன? என்று கேட்கக்கூடிய அதிபுத்திசாலி. அதிகாரிகள் எழுதிக் கொடுக்கும் அறிக்கையை கூட மாற்றி படித்து சிறிது கூட வெட்கப்படாமல் இந்தியாவின் அயலுறவுக் கொள்கையை அற்புதமாக கையாண்டு கொண்டிருக்கிறார்.

sharad+pawar.JPG

இதைவிட இந்தியாவிற்கு என்ன பெருமை வேண்டும். இவர்களை தேர்ந்தெடுத்த சோனியாவிற்கு தான் நாம் நன்றி சொல்ல வேண்டும்.

இந்த கிருஷ்ணா தான நாம் சீனாவைப் பார்த்து பயம் கொள்ளத் தேவையில்லை பாப்பா என்று பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்.

ஆனால் சீனாவின் தொழிற் புரட்சி, உள்கட்டமைப்பு வளர்ச்சி கற்பனைக்கு எட்டாத வகையில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. இத்துடன் விவசாயத்துறையும் கூட.

உடனடி திட்டங்கள், அடுத்து வரும் திட்டங்கள், நீண்ட கால திட்டங்கள் என்று மூன்று விதமாக பிரித்து ஒவ்வொன்றையும் உடனடியாக போர்க்கால நடவடிக்கையாக சீன ஆட்சியாளர்கள். செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவிற்கு எதிர்காலத்தில் வரக்கூடிய உணவுப் பஞ்சம் எப்படி சவாலைத் தரப்போகின்றதோ அதே சவால் சீனாவுக்கு உண்டு என்ற போதிலும் அதற்கான முயற்சியை 15 ஆண்டுகளுக்கு முன்னே தொடங்கி விட்டனர் என்பது தான் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.

ஆப்ரிக்க நாடுகளில் நிலங்களை குத்தகை அடிப்படையில் வாங்கி அதில் பயிர் செய்து தங்கள் நாட்டுக்கு கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள்.

சீனாவின் செயல்பாடுகள் அத்தனையும் நம் அமைச்சர்களுக்கு கண்களுக்கு தெரிவதில்லை. காரணம் இவர்களுக்கு உண்மையான வேலை பல இருக்கிறது. இது போன்ற விசயங்களில் கவனம் செலுத்த நேரம் இருப்பதில்லை.

சீனா பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே அணை கட்டுவதன் முக்கிய நோக்கம் மின்சாரத்திற்கு என்றபோதிலும் இந்த திட்டத்தின் மூலம் ஆற்றின் நீரை சீனாவின் வறண்ட பகுதிகளுக்கு திசை திருப்புவதே மற்றுமொரு நோக்கமாகும். ஆனால் இன்று வரைக்கும் இந்த செய்தியை சீனா உறுதிப்படுத்தவில்லை. ஊடகங்களில் இது குறித்து வரும் செய்திகள் அத்தனையும் அரசல்புரசல் தான். காரணம் சீன ஆட்சி என்பது இரும்புக்கோட்டையில் இருக்கும் முரட்டுச் சிங்கம்.

எவருக்கு அருகில் சென்று பார்க்கத் தைரியம் வரும்?.

david_breashrears.jpg

இமயமலையில் இருந்து உற்பத்தியாகும் 19 ஆறுகளில் பிரம்மபுத்திராவும் ஒன்று. செமமயுங்டங் பனிப்பாறைகளில் இருந்து உற்பத்தியாகும் இந்த ஆறு சீனா, பூடான்,இந்தியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் 2900 கிலோ மீட்டர் நீளத்திற்குப் பாய்கிற்து. திபெத்தில் யார்லாஸ் சாங்க்போ என்று அழைக்கப்படுகின்றது. உலகத்திலேயே மிக உயரத்தில் இருந்து பாயும் ஆறுகளில் இதுவும் ஒன்று என்று கூறலாம். இந்த ஆறு பலவிதமான நிலப்பரப்புகளையெல்லாம் கடந்து காடுகளையும் கடந்து பயிர்விளையும் நிலத்தை அடைந்து செழிக்கச் செய்கின்றது.

பிரம்மபுத்திரா டெல்டாப் பகுதி 580000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவாகும். இதில் 50 சதவிகிதம் அளவு சீனாவிலும். 33.6 சதவிகிதம் இந்தியாவிலும் 6 சதவிகிதம் பங்களாதேஷ் பகுதியிலும் 7.8 சதவிகிதம் பூடானிலும் உள்ளது.

திபெத்திலிருந்து இந்த ஆறு 3500 மீட்டர் உயரத்திலிருந்து பாய்ந்து வருகின்றது. இந்த ஆறு ஓடி வரும் மலைகளுக்கு இடையே உள்ள இடைவெளி என்பது உலகிலேயே மிகப் பெரியதாகும். இந்த நதி இறுதியாக அருணாசலப் பிரதேசத்தில் உள்ள பாஸிகட் என்ற இடத்தில் முடிவடைகின்றது.

3500 மீட்டர் உயரத்தில் இருந்து வரும் இந்த ஆறு இறுதியாக 155 மீட்டர் உயரத்திற்கு வருகின்றது. இதில் மற்றொரு ஆச்சரியம் என்னவென்றால் இந்த ஆறு ஒரு கிலோ மீட்டர் தொலைவில் 17 மீட்டர் என்ற அளவில் சாய்நது பயணித்துக் கொண்டு வருகின்றது. கவுகாத்தி பகுதியில் இதன் அளவு ஒரு கிலோ மீட்டருக்கு 10.செ.மீட்டர் என்ற அளவில் உள்ளது. இந்த நதியை தடுத்து நீரை தங்கள் நாட்டுக்கு திருப்பி விடத்தான் சீனா இப்போது முழுமூச்சாக செயலில் இறங்கியுள்ளது.

ஏற்கனவே நாம் பார்த்தோமே?

கங்கை காவேரி ஆற்றுகளை இணைத்தால் தேசிய பேரழிவு என்று நம்மவர்கள் சொன்னார்களே?

அப்படி என்றால் பிரம்மபுத்திரா நதியை அதன் போக்கில் இருந்து மாற்றினால் என்ன ஆகும்?

அதனைப் பற்றி பின்னால் பார்க்கலாம்.

கங்கை காவேரி இணைப்புத்திட்டத்தில் உள்ளதை விட ஆயிரம் மடங்கு சவால் நிறைந்த வேலை.

எது குறித்தும் அச்சப்படாத வீரனைப் போலத்தான் இந்த நதியின் பயணமும் வேகமும் இருக்கிறது. இந்த வீரனைத் தான் சீனா அணுக்கதிர் என்ற மாயவித்தையைக் கொண்டு தன் வசமாக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். மொத்தத்தில் நம்மவர்களுக்கு எந்த திட்டத்தில் கைவைத்தால் தனக்கு என்ன கிடைக்கும் என்பதில் குறியாக இருப்பவர்கள். ஆனால் சீனாவில் லஞ்சம் ஊழல் இருந்தபோதிலும் ஒவ்வொன்றிலும் தன் நாட்டு நலனை முன்னிறுத்தி முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள்.

water+wars.jpg

2000வது ஆண்டில் "சீனாவின் தானியப் பிரச்சினை" என்றதொரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் "எதிர்கால சீன விவசாயம் மற்றும் உணவு பற்றாக்குறை" குறித்த விபரங்களை தெளிவாக எடுத்துரைக்கப்பட்டு இருக்கிறது. இதன் அடிப்படையிலேயே பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே அணைகட்டும் பணி விரைவாக நடந்து கொண்டிருக்கிறது.

ஆனால் சர்வதேச சமூகத்தின் பார்வையில் தங்கள் ஆதிக்கத்தில் உள்ள திபெத்க்கு சாலை வசதிகளை உருவாக்கும் பொருட்டே வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது என்று மழுப்பலாக பதில் அளித்துக் கொண்டிருக்கிறது.

தென் சீனப்பகுதி 700 மில்லியன் மக்கள் தொகை கொண்டது. அங்கு பயிரிடும் நிலப்பகுதி மூன்றில் ஒரு பங்கு என்றும் ஐந்தில் நான்கு பகுதி நீர்வளம் உள்ளதாகவும் உள்ளது. ஆனால் வடக்குச் சீனப் பகுதியில் 550 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். இங்கு பயிரிடும் நிலப்பரப்பு மூன்றில் இரண்டு பங்கு என்றும், நீர்வளம் ஐந்தில் ஒரு பங்கு உள்ளதாகவும் இருப்பதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

உலக மக்கள் தொகை கண்க்கெடுப்பின்படி எதிர்காலத்தில் சீனாவின் ஜனத்தொகை 141 கோடி என்று கணித்துள்ளார்கள். ஆனால் சீனா எடுத்துள்ள கணக்கு 160 கோடி மக்கள். இதன் அடிப்படையில் பயிர் செய்யப்பட வேண்டிய நிலத்தின் அளவையும் அதிகப்படுத்தப்பட வேண்டும் என்பதே இப்போதைய சீனாவின் குறிக்கோள். ஆகவே சீனாவின் வட மேற்குப் பகுதியின் பல பகுதிகள் (கோபிப் பாலைவனம் உட்பட) பயிரிடப்படும் நிலமாக மாற்றப்பட வேண்டும்.

ஆனால் இந்த பகுதி துரதிஷ்டவசமாக சீனாவின் மொத்தப் பரப்பளவில் 45 சதவிகித அளவில் உள்ளது. ஆனால் நீர்வளம் 7 சதவிகித அளவுக்கு தான் உள்ளது. இதனை கருத்தில் கொண்டே சீனா தனது நாட்டின் எதிர்கால நலனுக்காக பிரம்மபுத்திரா நதியை திசை திருப்புவதற்கான திட்டத்தை தொடங்கி ஆரம்ப கட்ட பணிகளை நடத்தி வருகின்றது. இங்கு அணை கட்டப்படுவதோடு மட்டுமல்லாமல் இமயமலையின் பல பகுதிகளை குடைநது நீர் செல்ல பாதைகளை அமைக்கவும் திட்டமிட்டு உள்ளனர்.

water+pollution.jpg

இதற்காக சீன அரசு தனியாக ஒரு அமைப்பு ஒன்றை நிறுவி உள்ளது. இவர்களின் மேற்பார்வையில் இது நடந்தேறி வருகின்றது.

யார்லஸ் சாங்க்போ அணை கட்டப்பட்டு அதில் 26 மின் உற்பத்தி சாதனங்களை அமைத்தால், ஒரு மணி நேரத்திற்கு 40 மில்லியன் கிலோ வாட் அளவிற்கு மின் உற்பத்தி செய்யப்படும். யாங்சே என்னும் இடத்தில் உள்ள மூன்று திட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை விட இது இரண்டு மடங்கு அதிகமாகும். இதைத்தவிர பிரம்மபுத்திரா நதியை திசைதிருப்பி விடுவதன் மூலம் வட மேற்குப் பகுதியில் உள்ள வறண்ட நிலப் பகுதிகளுக்கு நீரை அளிக்க முடியும்.

சீனப்பொறியாளர்களும், விஞ்ஞானிகளும் இதன் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து இது முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இவர்களின் திட்டப்படி பிரம்மபுத்ர நதியை நம்சா பர்வா என்ற இடத்திற்கு முன் திசைமாற்ற முடியும் என்றும் கூறுகின்றனர். இதற்காக இமயமலையில் 15 கிலோ மீட்டர் தொலைவுக்கு குடைந்து வழியை உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.

3000 மீட்டர் உயரத்தில் இருந்து தண்ணீர் விழுவதால் மின் உற்பத்தியை மிகுந்த அளவில் ஏற்படுத்த முடியும் என்பதோடு ஆற்று நீர் பயணித்து வரும் 100 கிலோ மீட்டர் தொலைவை 15 கிலோ மீட்டர் தொலைவாகவும் குறைந்துள்ளது. உபரி நீரை 800 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பகுதிகளுக்கு வழங்கவும் முடியும்.

இந்த ஆறு உற்பத்தியாகும் இடத்திலிருந்து வழியெங்கும் நிலவி வரும் சுற்றுச் சூழல் மற்றும் அவற்றைப் செழிப்பாகும் முறை ஆகியவை வியக்கத்தக்க வகையில் உள்ளது. சீனாவின் திட்டத்தால் மொத்தமாக மாறிவிடும். மேலும் இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்கள் மற்றும் பங்களாதேஷ் ஆகிய இடங்களில் பருவமழை இல்லாத போது பிரம்மபுத்திரா நதியில் இருந்து வரும் நீரே ஆதாரமாக இருக்கிறது. சீனாவின்

இந்த திசை திருப்பலால் இந்த பகுதியின் மொத்த வளமும் பாதிக்கப்படும்

ஆற்றின் கீழ் மட்டத்தில் உள்ள நாடுகளுக்கு இதனால் ஏற்படும் பாதிப்புகளை சீனா கண்டு கொள்ளத்தயாராய் இல்லை. சர்வதேச அளவில் நாடுகளுக்கான நதிநீர் பங்கீடு குறித்து எவ்விதமான சட்டங்களும் இல்லாத காரணத்தால் பிரம்மபுத்ரா ஆற்றின் குறுக்கே அமைக்கப்படும் அணையினால் சுற்றுசூழல் பாதிக்கப்படுவதோடு 200 மில்லியன் மக்களுக்கும் பாதிக்கப்படும் சூழ்நிலையும் எதிர்காலத்தில் உருவாகும்.

ஆனால் இந்தியா எப்போதும் போல 2020 வல்லரசு இந்தியா என்ற கனவில் திளைத்துக் கொண்டிருக்கிறது. காரணம் நாம் கனவு காண பிறந்தவர்கள். சீனா கனவுகளை செயலில் காட்ட பிறந்தவர்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.