Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னொரு பொங்கல் நாளில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முன்னொரு பொங்கல் நாளில்

யோ.கர்ணன்

இன்றைய பொங்கலைப் போலவே மூன்று வருடங்களின் முன்னரும் ஒரு பொங்கல் நாள் வந்தது. அன்று நாங்கள் யாரும் பொங்கி, சூரியனிற்குப் படைக்கவில்லை. அன்று விடிந்ததன் பின், அது ஒரு பொங்கல் நாளென்றே நினைக்க முடியவில்லை. அது பற்றிய சிந்தனையெதுவுமிருந்திருக்கவில்லை. ஏனெனில், அன்றுதான் நான் அகதியானேன். ஒரு அகதிக்குரிய முழுமையான அர்த்தங்களையுணர்ந்து அகதியானேன். மரணமும், கண்ணீரும், காயமும் நிறைந்த பெரிய நாடோடி வாழ்வின் முதல் அடியை அன்றுதான் எடுத்து வைத்தேன்.

இதுவரையான யுத்த இயல்புகளிற்கு மாறாகவே இறுதியுத்தமிருந்ததினால், யுத்தத்தின் வழமையான அறிகுறிகளெதுவுமின்றியே மன்னாரில் ஆரம்பித்த யுத்தம் ஒவ்வொரு ஊருக்குள்ளும் சத்தமின்றி மெதுமெதுவாக நுழைந்து கொண்டிருந்தது. அடுத்திருந்த ஊர்களிற்கு தெரியாமலேயே ஒவ்வொரு ஊர்களையும் தின்றபடியேதான் வந்து கொண்டிருந்தது. ஒரு மரணமோ, மரணத்தை உண்டாக்கவல்ல குண்டுகளேதாவதோ வாசலிற்கு வந்த போதுதான் சனங்கள் அலறியடித்தபடி இடம்பெயர்ந்தனர்.

2006இன் இறுதிகளில் ‘சொட்டல்’களாக மன்னாரில் ஆரம்பித்தது. சைக்கிளில் சில நிமிடங்களில் சுற்றிவிடக்கூடிய தூரங்களை அடைவதற்கு இரண்டு வருடங்களை அது எடுத்துக் கொண்டிருந்தது. அடம்பன் சந்தியிலிருந்து சில நூறு மீற்றர்களில் நின்ற இராணுவம் சந்தியை அடைய ஆறுமாதங்களை எடுத்துக் கொண்டது. அப்பொழுது நடைபெற்ற கூட்டஙகளில் அது வெற்றிச் செய்தியாக அறிவிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. பத்திரிகைகள் அதனை தலைப்புச் செய்தியாக்கி கொண்டாடிக் கொண்டிருந்தன. அதன் உள்ப்பக்கத்தில் வீரச்சாவடைந்தவர்கள் என எண்ணற்றவர்களின் வர்ணப்புகைப்படங்களும் வெளியாகியபடியிருந்தன. வன்னியின் மத்தியிலும், ஆழத்திலுமிருந்தவர்களிற்கு யுத்தம் ஒரு செய்தியாக மட்டுமேயிருந்து. அல்லது அவர்களின் அன்புக்குரிய யாராவது ஒருவரின் மரணத்தின் மூலம் யுத்தம் தனது வரவை அறிவித்தபடியிருந்தது.

வன்னியின் எல்லா வீதிகளிலும் அலங்கரிக்கப்பட்ட ஊர்திகளில் வித்துடல்கள் வந்து கொண்டிருந்தன. கிராமம், நகரம், ஆண், பெண் என்ற பேதமின்றி உடல்கள் வந்து கொண்டிருந்தன. களத்திற்குக் கொண்டு செல்லப்பட்டவர்களினால் எல்லா வீடுகளிலும் ‘மரணத்தின்வாசனை’ மிதந்தபடியேயிருந்தது. எங்கோ தொலைவில் மனிதச் செறிவற்ற, தரிசு நிலங்களில் பெரும் யுத்தம் நடந்து கொண்டிருப்பதாக சனங்கள் பேசிக்கொண்டனர். மரணங்கள் மட்டுமே யுத்தம் பற்றிய செய்தியை அறிவித்தபடியிருந்தன.

இதை தவிர்த்தால் வன்னியின் தலைநகரிற்கும் புற நகர்களிற்கும் யுத்தத்தின் நெடி வந்திருக்கவில்லை. எப்பொழுதாவது கிபிர் வந்தால் மட்டும் வானத்தை பார்த்துக் கொண்டார்கள். அவை இரணைமடு விமானத்தளத்தை இலக்கு வைத்தபடியிருந்தன. கள நிலவரங்கள் சரியாகவோ மிகையாகவோ வரும் நண்பர்களின் வாய்களிற்காக காத்திருந்தோம். அதிக சுவாரஸ்யமான தகவலெதுவும் வருவது மிகக்குறைவு. தரிசு நிலங்களிற்கு கேந்திரத் தன்மையிருப்பதில்லை என்றும், மாவோ பல்லாயிரம் மைல்கள் நடந்தே பின்வாங்கினார் என்றும் நண்பனொருவன் சொன்னபடியிருந்தான்.

மன்னாரின் எல்லைக்கிராமங்கள், சிறு நகரங்கள் எல்லாம் விழ்ந்து போயிருந்தன. கடந்த காலங்களின் நம்பிக்கையினால் சனங்கள் அதிக தூரம் இடம்பெயர்வதில்லை. மீண்டும் ஊர் திரும்ப வசதியாக அடுத்தடுத்த ஊர்களிற்கே இடம்பெயர்ந்தனர். இந்தச் சனங்கள் வெள்ளாங்குளத்தில் தற்காலிக முகாம் அமைக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டிருந்தனர். இதனை தமிழர் புனர்வாழ்வுக்கழகம் பராமரித்து வந்தது. யு.என்.எச்.ஆர் வழங்கியிருந்த வெள்ளை தறப்பாள்களினால் அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களினால் அந்தப்பகுதி வெள்ளை விரிப்பு விரித்தது போலிருப்பதாக பலரும் பேசிக் கொண்டனர். அப்படி ஒரு காட்சியை வன்னி அதற்கு முன் கண்டிருக்கவில்லை. அது பற்றிய தகவல்கள் புதினமாக பேசப்பட்டுக் கொண்டிருந்தது.

மன்னார் வெள்ளாங்குளத்திற்கு அப்பொழுது இடையிடையே போய் வரவேண்டியிருந்தது. நானிருந்த இடத்திலிருந்து அது நூற்றுப்பத்து கிலோமீற்றர். முப்பது வருடங்களிற்கு மேல் புனரமைக்கப்படாத வீதிகள். ஆழஊடுருவும் அணியின் கிளைமோர்கள் எப்பொழுதும் கண்முன்னால் நிற்கும்.(நாங்கள் அப்பாவி சிவிலியன்கள். மாறிக்கீறி எங்களிற்கு அமத்திப் போடாதையுங்கோ என்று ‘சிம்பொலிக்’காக சொல்வதற்கு வெள்ளை உடைகளைத்தான் இந்த வகையான பயணங்களில் அணிந்து கொள்வொம்) கண்ணைமூடிக் கொண்டு பறப்போம். உள்உறுப்புக்கள் இடம்மாறுவதற்கான சாத்தியங்களுமிருந்தன.

இந்த இரண்டு பிரச்சனைகளும் தீர்ந்து போவதெனில் வெள்ளாங்குளத்தை அண்மித்த இடத்தில்தான். அங்குதான் பாதையும் சீராகும். இராணுவ அச்சுறுத்தலும் இல்லாமலப்; போகும். நொந்து போன உடலை சீர்படுத்தி, சரியாக இருக்க மாட்டாமல் பாதியுடம்பை மட்டும் மோட்டார் சைக்கிளில் பொருத்தி பயணிக்க தொடங்குகையில், அந்த வெள்ளைக் கூடாரத் தொகுதி எதிர்ப்படும். அப்பொழுது அதொரு ஆச்சரியமாகயிருந்தது. நெருக்கமாக அடிக்கப்பட்டிருந்த கூடாரங்கள். அவர்களின் வாழ்க்கை எந்த ரகசியங்களுமற்று திறந்த புத்தகமாகயிருந்தது. அந்த முகாம் நீளத்திற்கும் வீதியில் தண்ணீர்த்தாங்கியில் நீர் நிறைக்கப்பட்டிருந்தது. நாங்கள் போனது ஒரு வெயில் ஏறிய பின் காலையில். குஸி நாயகி ஜோதிகா ‘மேகம் கறுக்குது’ என்று பாடி ஆடும் பாணியில் அனேக இளம் பெண்கள் வீதிக்கரையில் ஒருவர் மேல் ஒருவர் தண்ணீர் அடித்துக் குளித்துக் கொண்டிருந்தனர். சில குறும்புக்காரிகள் எங்களிற்கும் தண்ணீர் அடிப்பது போல பாவனை செய்தனர். சில குளியலிடங்கள் மட்டுமே, சாதாரணமாக மறைக்கப்பட்டிருந்தன. ஓன்றிரண்டு பின்னிய தென்னோலைகளை செங்குத்தாக வைத்ததுதான் மறைப்பு. மிகச்சில பெண்கள் மட்டுமே இதற்குள் குளித்தபடியிருந்தனர். பெண்மையின் இலட்சணங்கள் மிகுந்த பதிவிரதையர்களாயிருக்கக் கூடும். பெரும்பாலான பெண்களை பார்த்த நண்பன் சொன்னான்- ‘மன்னாhப்; பிகருகள் ஓப்பின மைன்ட் ஆன ஆட்கள்’ என. (இப்பொழுதும் அதே நிலைப்பாட்டில்தானிருக்கிறான்)

அந்த முகாம் கொஞ்ச நாட்கள்தானிருந்தது. ஒரு இயல்பான செயற்பாட்டைப் போல யுத்தம் மெதுவாக முன்னகர முன்னகர அவர்களும் வன்னியின் மத்தியை நோக்கி நகரத் தொடங்கினர்.

வெள்ளாங்குளம். ஜெயபுரம், நாச்சிக்குடா போன்ற இடங்களில் விடுதலைப்புலிகள் அமைத்திருந்த மண்ணணைகள் காரணமாக யுத்தம் சில மாதங்கள் தாமதப்பட்டது. அந்த இடைவெளியில் புலிகள் தம்மை நிலைநிறுத்திக் கொள்வார்கள் என ஆய்வாளர்கள் எழுதிக் கொண்டிருந்தனர். இப்போதைய இராணுவத்தளபதியும் அப்போதைய வன்னிக் கட்டளைத்தளபதியமான ஜெகத் ஜெயசூரியா வெள்ளாங்குள மண்ணணைக்கு நேரடியாகவே வந்திருந்தார். அப்போதைய இராணுவ நகர்வை வாய்க்காலில் ஓடும் தண்ணீருடன் ஒப்பிட்டனர். ஓட முடியாமல் தடை வரும் இடங்களில்த்; தேங்கி, வழி கிடைக்கும் பள்ளமான (பலவீனமான பகுதிகள்) பகுதிகளினூடாக ஓடியபடியிருந்தது. தகர்க்கப்பட முடியாதவையென நம்பப்பட்ட மண்ணணைகள் இப்படித்தான் வீழ்ந்தன.

இதன் பின் மீளவும் அகதிகள் வரத் தொடங்கினர். நிலப்பரப்பு சுருங்கிச் சுருங்கி மல்லாவியும் யுத்தவலயமாக, அகதிகளின் உழவுஇயந்திரங்கள் கிளிநொச்சி நகரத்தினூடாக கிழக்கு வன்னியின் உட்கிராமங்களை நோக்கிச் செல்லத் தொடங்கின. உழவு இயந்திரங்கள் முழுவதும் வீட்டுத் தளபாடங்கள், அத்தியாவசியப் பொருட்கள், வளர்ப்புப்பிராணிகள், கூரைத்தகரம், கிடுகு போன்றவற்றால் நிறைந்திருந்தது. அதன் உச்சத்தில் மனிதர்கள் இருந்தனர். வீட்டுப்பெண்கள் சேலையால் தலையை மூடியபடி தொலைவையே வெறித்தபடியிருப்பார்கள். இளம்பெண்கள் அகதியாக தங்களை அடையாளப்படுத்த வெட்கப்பட்டவர்களாக முகத்தை மறைத்தபடியிருப்பார்கள். உழவுஇயந்திரத்தின் பின்னால் கோழி, லாந்தர், வாளிகள் தொங்கியபடியிருக்கும். அகதிகளிற்குரிய பிசகாத அட்சரமாக இதுவே இருந்தது. இந்தக் காட்சிகள்தான் யுத்தத்தின் வரவை மெதுவாக கிளிநொச்சிக்கு அறிவித்தபடியிருந்தன. சில நாட்களின் பின், ஊரடங்கிய அமைதியில் காதைக் கொடுத்துக் கேட்க, மிகத் தொலைவில் துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டபடியிருந்தன.

இப்படித்தான் ஒரு முன்னிரவில் கருணாகரன் அண்ணை வீட்டிலிருந்த போது வீட்டிற்கு வெளியில் கூட்டி வந்த வேலிக்கரையில் நின்று தொலைவிலக்; காதைக் கொடுத்துக் கேட்கச் சொன்னார். இடைவிடாத நீண்ட துப்பாக்கி வேட்டொலிகள் கேட்டபடியிருந்தன. அந்த நிலவொளியிலும் அவரது முகத்திலிருந்த கலவரத்தைக் கண்டேன். யுத்தம் மிக விரைவில் தன்னையும் அகதியாக்கும் என்ற அச்சமாகவுமிருந்திரக்கலாம். களத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட பிள்ளை குறித்த ஒரு தந்தையின் அச்சமாகவுமிருந்திருக்கலாம். அப்பொழுது மல்லாவி யுத்த அரங்காகயிருந்தது.

அந்த யுத்த அரங்கு கிளிநொச்சியின் மேற்காகயிருந்த காடுகளின் ஒவ்வொரு அங்குலத்தினூடாகவும் மெதுமெதுவாக வந்து அந்த நகரையும் சூழ்ந்து கொண்டது. அப்பொழுது கிளிநொச்சியும் சொல்லாமல்க்; கொள்ளாமல் திடீரென இடம்பெயர்ந்தது. நகரெல்லாம் எறிகணை வீழ்ந்தபடியிருந்தது. இலையுதிர்ந்த பெருவிருட்சம் போலிருந்தது அந்த நகரம்.

குடும்பத்தினரை பாதுகாப்பான இடங்களில் இருத்திவிட்டு வீட்டுப்பொருட்களை எடுக்க வரும் சிலருக்காகவும், போராளிகளிற்காகவும், எங்களைப் போன்ற சில தனியன்களிற்காகவும் இரண்டு தேனீர்க்;கடைகள் மட்டுமிருந்தன. தவிரவும். ஏன் என்றே தெரியாமல் கிளிநொச்சி பஸ் தரிப்பிடத்தில் இருந்த தொலைபேசி நிலையம் இடம்பெயராமல் அப்படியேயிருந்தது. அதனைத் தவிர்த்தால் விசுவமடுவிலும், புதுக்குடியிருப்பிலுமே தொலைத்தொடர்பு நிலையங்கள். தொலைபேசியில் பேசுவதெனில் அதிகாலை மூன்று மணிக்கே சென்று வரிசையில் காத்திருந்து, ஐந்து நிமிடம் பேசலாம். அவ்வளவு கூட்டம். இந்த ஒரு காரணத்திற்காகவே கிளிநொச்சிக் கடை இடம்பெயரும் வரை அங்கு செல்வோம். சன நடமாட்டமில்லாத நகரத்தின் மையத்தில் ஒரே ஒரு சீவனாக-தொலைபேசி நிலையத்தின் பொடியன் இருப்பான். எப்பொழுதும் விழுந்து படுக்கத் தயாராக, தொடர்ந்து ஒரு நிமிடம் கூட பேசாமல,; காதைக் கூர்மையாக்கி வைத்தபடியிருப்பான். ஒரு வறுமையான பெரிய குடும்பத்தை அவன்தான் உழைத்துப் பராமரிப்பவனாக இருக்க வேண்டும்.

இந்த நாட்களில் நாங்களிருந்த விசுவமடு தொடக்கம் புதுக்குடியிருப்பு வரையில்தான் தமிழீழத்தின் பெரும்பகுதி சனங்கள் அடைந்திருந்தார்கள். வட்டக்கச்சி இரண்டும் கெட்டான் நிலைக்கு வந்து விட்டது. கிரிக்கெட் நிலவரம் மாதிரி ஊர்கள் பறிபோகும் செய்திகள் வந்து கொண்டிருந்தன. ‘வட்டக்கச்சியும் இடம் பெயருதாம்’ என்பது ஒரு சாதாரண செய்தியாகவேயிருந்தது. ஆனாலும் அதுவரை நான் அகதியாகவில்லை. அகதியாவேன் என்பது பற்றி சிந்தித்துமிருக்கவில்லை. அது பற்றி சிந்திக்கவும் விரும்பியிருக்கவில்லை.

நித்திரை கொள்ள முடியாமல் தவித்தபடியிருந்த ஒரு அகாலத்தில் எனது காதுகளில் முதல் முறையாக தொலைவில் துப்பாக்கி வேட்டொலிகள் கேட்டன. சென்ற மாதம் கிளிநொச்சியில் கருணாகரன் அண்ணை வீட்டில் கேட்டது மாதிரியே தொலைவில்-மிக மெதுவாகக் கேட்டது. இதுவரை அகதிகளை தேடிச்சென்று சிலவேளைகளில் வேடிக்கையாகவும், அதன் முழு அர்த்தம் புரியாமலும் பார்த்து வந்த எனக்கு, எனது வீட்டிலிருந்து காதைக் கொடுக்கவும் துப்பாக்கி வேட்டொலிகள் கேட்கத் தொடங்கின.

பிறகு வாய்வழித்தகவல் மட்டுமே ஒரே தகவலாதாரமாகயிருந்தது. முரசுமோட்டையில் ஆமியாம், கட்டைக்காட்டில ஆமியாம்;, புளியம்பொக்கணையின் பின் பகுதியிலிருக்கும் திடலில் ஆமியாம், தர்மபுரம் பள்ளிக்கூடத்திற்கருகில் செல் விழுந்ததாம் என்ற செய்திகள் அச்சம் தருவனாவாயிருந்தன. இதற்கடுத்ததாக வழமை போலவே தர்மபுரமும் மெதுமெதுவாக இடம்பெயரத் தொடங்கியது. மெதுமெதுவாகக் கரைந்து போகும் ஒன்று மாதிரி அது இருந்ததினால் பெரிய விடயமாக யாருக்கும் பட்டிருக்காது. எல்லோரும் இயல்பாகவேயிருந்தோம்- தர்மபுரம் ஆஸ்பத்திரிக்குக் கிட்டவாக இராணுவத்தின் ‘ராங்’ வந்து நின்று செல் அடித்த போதும் கூட.

2009 பொங்கல் நாள். பொதுவாக யாரும் பொங்குவதற்கான சூழலும் மனமுமில்லாத காலம். சில வீடுகளில் பொங்குவதற்கான ஆயத்தங்கள் செய்திருக்கலாம். ஆனால் அன்றைய காலை, சனங்களை வீடுகளிலிருந்து கலைத்தபடி விடிந்தது. கடந்த இரவில் தனது நிலைகளிலிருந்து முன்னேறி நெத்தலியாற்றங்கரைக்குக் கிட்டவாக இராணுவம் வந்து விட்டிருந்தது. இறுதியில் நாங்களிருந்த விசுவமடுவும் இடம்பெயர்ந்தது.

ஓரு அகதியாவதற்குரிய எந்த முன் தயாரிப்புக்களும் என்னிடமிருக்கவில்லை. அன்றைய காலையில் இடம்பெயர்ந்து விட வேண்டுமென்ற சூழலை எதிர் கொள்வது மிகுந்த சிரமமாகயிருந்தது. தனியர்களாகவும், குடும்பங்களாகவுமிருந்த நாங்கள் சில நண்பர்கள் ஒன்றாகச் சேர்ந்து புறப்படத் தீர்மானித்தோம்(எல்லா இன்பத்திலும் துன்பத்திலும் ஒன்றாயிருந்த இந்தக்கூட்டம் சில ஆளிழப்புக்களுடன் அங்கிருந்து வெளியேறும் வரை பிரியாமலேயிருந்தது). போகுமிடத்தில் கூடாரமடித்துக் கொள்ள எனக்கு ஒரு கூடாரம் தேவையாகயிருந்தது. பிளாஸ்ரிக் விரிப்பு இருக்கிறதா எனத் தேடித்திரிந்து, இறுதியில் ஒருவரிடமிருந்து பெற்றுக் கொண்டேன். அதன் அன்றைய பெறுமதி ஆயிரத்துஐநூறு ரூபா. சில பெட்டிகள் நிறைய புத்தகங்களும், வாழ்வைக் கொண்டு செல்லத் தேவையான பொருட்களும், இரண்டு சீட்டுக்கட்டுகளும் கொண்டு அன்று காலை பத்துமணியளவில் நானும் ஒரு அகதியாவதற்கான முதலடியை எடுத்து வைத்தேன்.

நான் மீண்டும்; திரும்பிச் செல்லவே அஞ்சும் அந்தச் செம்மண் தெருக்களை விட்டு இன்றுபோலொரு பொங்கல் நாளிலேயே புறப்பட்டிருந்தேன்.

மரணமும், கண்ணீரும், காயமும் நிறைந்த பெரிய நாடோடி வாழ்வின் முதல் அடியை இன்றுதான் எடுத்து வைத்தேன்.

கனவுப்பூமியிலிலிருந்து வேர்கள் அறுந்த கதைகள் எல்லாம் இப்படித்தானிருந்திருக்கும்.

http://yokarnan.com/?p=171

  • கருத்துக்கள உறவுகள்

யோ.கர்ணனின் பதிவுகளில் என்னை இது மிகவும் பாதித்தது.."திரும்பிச் செல்லவே அஞ்சும் அந்தச் செம்மண் தெருக்களை விட்டு இன்றுபோலொரு பொங்கல் நாளிலேயே புறப்பட்டிருந்தேன்.மரணமும், கண்ணீரும், காயமும் நிறைந்த பெரிய நாடோடி வாழ்வின் முதல் அடியை இன்றுதான் எடுத்து வைத்தேன்.கனவுப்பூமியிலிலிருந்து வேர்கள் அறுந்த கதைகள் எல்லாம் இப்படித்தானிருந்திருக்கும்."நல்ல எழுத்து நடை...அவரின் புளொக்கில் வாசித்து முடித்துவிட்டு மிகவும் பிடித்துப்போய் யாழில் இணைப்பம் என்று வந்தபோது சாந்தி அக்கா இணைத்திருந்தா..நன்றி அக்கா..

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

மரணமும், கண்ணீரும், காயமும் நிறைந்த பெரிய நாடோடி வாழ்வின்

முதல் அடியை இன்றுதான் எடுத்து வைத்தேன்.

யோ ........கர்ணனுக்கு பாராட்டுக்கள்.............பகிர்வுக்கு நன்றி சாந்தி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.