Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பயணங்கள் : எட்டயபுரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பயணங்கள் : எட்டயபுரம்

தார் சாலையை இரண்டாக பிரிக்கும் வெள்ளை கோடுகளை முன்பக்கமாக இழுத்து பின்பக்கமாக தள்ளிக்கொண்டிருந்தது வாகனம். எட்டயபுரம் 2 கி.மீ என்பது கண்ணில் பட்டதுமே மனதிற்கு மிக நெருங்கிய உறவினர்கள் வாழும் ஊருக்கும் பயணப்படுவது போலவே இருந்தது. திசை காட்டுக்குறி “பாரதி பிறந்த வீடு” பெயர்பலகையை தாங்கியிருந்தது.வாகனத்தை வீதியில் செலுத்தும் போதே மிக மெல்லிய உணர்வு ஆட்கொண்டிருந்ததை உணர்ந்தேன். பாரதியின் வீடு.

முன்பக்கமாக ஒரு சிறுவனிருந்தான். வாங்க வாங்க செருப்ப அங்கேயே கழட்டி விட்டுருங்க‌ என்றான். முன் அறையிலேயே செல்லம்மாள் பாரதிதான் வரவேற்றார். புகைப்படம் எடுக்கும் போது சிரிக்ககூடாது என்பதை கொள்கையாக கொண்டிருப்பார் போலும். அவரின் புகைப்படத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

170120120972.jpg?w=324&h=489

1951ஆம் ஆண்டு திருச்சி வானொலியில் “என் கணவர்” என்ற தலைப்பில் திருமதி செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரையில் சொன்ன வரிகள் தான் நியாபத்திற்கு வந்தது

“” இன்று என் கணவரின் புகழ் விண்முட்டிச் செல்கிறது. இன்று மகாகவியின் மனைவியாகப் போற்றப்படும் நான் அன்று பைத்தியக்காரன் மனைவியென்று பலராலும் ஏசப்பட்டேன்…”"

செல்லம்மாள் பாரதியின் கடிதத்தை படித்த போது ஏற்பட்ட மனவீச்சை கடந்து செல்வதற்கு நீண்ட நேரம் எடுத்துக்கொண்டேன்.

வரலாற்றூப்பெண்.அமைதியான முகம்.., அடுத்த வேளை சோற்றுக்கு வழியில்லாத போது கிடைத்த அரிசிகளை குருவிகளுக்கு போட்டு விட்டு ” காக்கை குருவி எங்கள் ஜாதி ” என்று பாடுவ‌தை எந்த‌ பெண்ணாலும் ச‌கித்திருக்க‌முடியாது எத்தனை கோவ‌ம் வந்திருக்கும்.இவரால் கோபப்படவே முடியாது என்பது போலத்தான் முகம்.

ப‌க்க‌த்தில் இன்னொரு ப‌ட‌த்தில் பார‌தியார் செல்ல‌ம்மாளுட‌ன் இருந்தார். அதிலும் செல்ல‌ம்மாள் சிரிக்க‌வேயில்லை.இவ‌ர் சிரிக்காத‌து உறுத்தலாக இருந்தது. க‌டைசி வ‌ரை வ‌றுமையும் , துன்ப‌த்தையும் ம‌ட்டுமே அனுப‌வித்த‌தால் புன்ன‌கையே இழந்திருப்பார் போலும்.

1901 ம் ஆண்டு த‌ன்னுடைய‌ 19வ‌து வ‌ய‌தில் செல்ல‌ம்மாளுக்கு எழுதிய‌ க‌டிதத்தில், எனதருமைக் காதலி செல்லம்மாளுக்கு ஆசிர்வாதம் என்று ஆர‌ம்பிப்பார் பார‌தி. பார‌தியை பார்த்து க‌ண்சிமிட்டி சிரித்துக்கொண்டேன். எட்டாம் வ‌குப்பில் ப‌டித்த பாரதிக்கும் என‌க்கும் எந்த‌ ச‌ம்ப‌ந்த‌மும் கிடையாது. இப்போது நான் பார்க்கும் பார‌தி ஆளுமை, என‌க்கு நெருக்க‌மான‌வ‌ர்.

அடுத்த‌ அறை ” பார‌தி பிற‌ந்த‌ இட‌ம் ” அவ‌ர் ஜ‌னித்த‌ இட‌த்தில் ஒரு சிலை இருந்தது.சிலையை தொட்டுப்பார்த்துக்கொண்டிருந்தேன். வெளியின் வெளிச்ச‌ம் த‌ரையில் ப‌ர‌வியிருந்தது.

170120120932.jpg?w=614&h=460

ஆண்டுக‌ள் சென்ற‌ பின் உண‌ர்ச்சிப்பூர்வ‌மாக‌ அவ‌ரின் பிற‌ப்பை அவ‌ர் பிற‌ந்த‌ இட‌த்தில் நின்று நினைத்துப்பார்பார்க‌ள் என்று பார‌திக்கு நிச்ச‌ய‌ம் தெரிந்திருக்காது . எட்ட‌ய‌புர‌த்தில் சாதார‌ண‌மாக‌ பிற‌ந்த‌வ‌ர் ம‌றையும் போது சாதார‌ண‌மான‌வ‌ராக‌ இல்லை. அவ‌ரின் பிற‌ப்பை கொண்டாடிக்கொண்டிருந்தேன். அருகிலேயே அவ‌ர் ப‌ய‌ன்ப‌டுத்திய‌ வேலும் குத்தீட்டியும் இருந்தது, அதைவிட‌ வலிமையானதுஅவ‌ர் ச‌ட்டையில் குத்தியிருக்கும் பேனா என்ப‌தை உண‌ர்ந்துகொண்டேன். ப‌ழ‌மொழிக‌ளை நிஜ‌த்துட‌ன் உள்வாங்கிக்கொள்வ‌து என‌க்கு மிக‌ அரிதாக‌வே நடந்திருக்கிறது.

170120120893.jpg?w=187&h=376

தேடிச்சோறு நிதம் தின்று – பல

சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்

வாடித் துன்பமிக வுளன்று – பிறர்

வாடப் பல செயல்கள் செய்து – நரை

கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்

கூற்றுக் கிரையெனப் பின் மாயும் – பல

வேடிக்கை மனிதரைப் போல – நான்

வீழ்வேனென்று நினைத்தாயோ

( சொல்லில‌ட‌க்க‌முடியாத அகச்‌சீற்ற‌த்தை இந்த‌ப்பாட‌ல் எப்போதும் என‌க்கு த‌ருகிற‌து . நரை கூடிக் கிழப்பருவ எய்த‌மாட்டேன் என்ற‌ இந்த‌ க‌விதையை எழுதினதால் தான் நரை கூடுவதற்கு முன்னமே நம்மை விட்டுச்சென்றாரோ என்னமோ )

ப‌க்க‌த்தில் 1920 ‍ல் பார‌தி சென்னையில் எடுத்த‌ புகைப்ப‌ட‌ம் ஒன்று இருந்தது. அதில் அழ‌காக‌ முண்டாசு க‌ட்டி ப‌ட‌ங்க‌ளில் நாம் பார்க்கும் பார‌தி போல‌ இருந்தார். அவர் அமர்ந்திருந்த இருக்கையின் பின்பக்கம் சற்று சரிவாக வெளியே தெரிந்தது.அதை சுற்றி ம‌ன‌ம் ப‌ல‌ சிந்த‌னைக‌ளை இழுத்துக்கொண்ட‌து. அவ‌ச‌ர‌மாக‌ வ‌ந்து உட்கார்ந்து கொண்ட‌தால் தான் ச‌ரிசெய்ய‌ வேண்டாம் என‌ நினைத்து புகைப்ப‌ட‌ம் எடுத்துக்கொண்டாரா, இல்லை அந்த‌ நாற்காலியின் ஏதோ ஒரு கால் ச‌ரியாக‌ வேலைசெய்ய‌வில்லையா என‌ இடியாப்ப‌ச்சிக்க‌லாக‌ நினைவுக‌ள் ப‌ய‌ண‌ப்ப‌ட்டுக்கொண்டே இருந்தது. நொதிக்கும் சிந்த‌னையை அமைதிப்படுத்திய‌ பிற‌கு தான் உண‌ர்ந்தேன் எட்ட‌ய‌புர‌ம் என்ற‌ பெய‌ர் ப‌ல‌கையை பார்த்த‌ முத‌ல் இப்ப‌டி தான் இருக்கிறேன் என்று. ச‌ம‌ நிலை ப‌டுத்திக்கொண்டேன்.

170120120882.jpg?w=288&h=448

அடுத்து அவ‌ரின் குடும்ப‌ப்ப‌ட‌ம், அதிக‌ நேர‌ம் பார்த்த‌து அந்த‌ ப‌ட‌மாக‌த்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.க‌ம்பீர‌மான‌ அப்பாவாக‌, காத‌ல்மிகு க‌ண‌வ‌ணாக‌ செல்ல‌ம்மாளில் தோளில் கை வைத்துக்கொண்டு எடுக்க‌ப்ப‌ட்ட‌து அந்த‌ப்ப‌ட‌ம்.

170120120713.jpg?w=333&h=424

வ‌ல‌து புற‌மாக‌ வீட்டிற்குள்ளேயே கிண‌று. இங்கே தான் செல்லம்மாளின் குர‌லுக்கேற்ப‌ பார‌தி த‌ண்ணீர் இறைத்துக்கொடுத்திருப்பார் என்ற‌ நினைப்பே அலாதியாய் இருந்தது. இந்த‌ கிண‌ற்ற‌டியில் எத்த‌னை பாட்டெழுதியிருப்பார் என்ப‌த‌ற்கு சான்றுக‌ள் இல்லை. என்னை பொறுத்த‌வ‌ரை குறைந்த‌ப‌ட்ச‌ம் ப‌த்து பாட‌ல்க‌ள்.

170120120772.jpg?w=425&h=318

மீண்டும் அதே அறை, பார‌தியின் தொட‌ர்பு கொண்டவர்களின் புகைப்ப‌ட‌ங்க‌ள், முத‌லாவ‌து ரா. க‌ன‌க‌லிங்க‌ம் ஜாதிக‌ள் இல்லைய‌டி பாப்பா என்று பாடிய‌ மகாக‌வியால் பூணுல் அணுவிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர். உய‌ர் சாதியை த‌விர்த்து முத‌ல் முறையாக‌ த‌மிழ‌க‌ வ‌ர‌லாற்றில் பூணூல் அணிந்த‌து இவ‌ராக‌த்தான் இருக்கும். பார‌தி வெறும் வார்த்தைக‌ளால் ஜ‌ல்லிய‌டித்துப்போக‌வில்லை என்ப‌த‌ற்கு க‌ன‌க‌லிங்க‌ம் அவ‌ர்க‌ளே முத‌ல் சாட்சி.

17012012082.jpg?w=281&h=374

அடுத்து சுதேச‌ கீத‌ங்க‌ள் வெளியிட்ட‌ கிருஷ்ண‌சாமி ஐய‌ர், அவ‌ரை அடுத்து புதுவையில் அறிமுக‌மாகி சென்னையில் பார‌தியை காப்பாற்றிய‌ குவ‌ளை க‌ண்ண‌ன்., சுதேச‌ ப‌க்தி உப‌தேச‌ம் செய்த‌ நிவேதிதா தேவியார். இவ‌ர்க‌ள் அனைவ‌ரும் பாரதி என்ற‌ ஆளுமையை அவ‌ர் வாழ்ந்த‌ ச‌ம‌ கால‌த்தில் க‌ண்டுகொண்ட‌வ‌ர்க‌ள்.

170120120762.jpg?w=296&h=385

170120120753.jpg?w=267&h=455

அடுத்து அவ‌ர் ப‌டித்த‌ இந்து க‌ல்லூரி, சென்னையில் வாழ்ந்த‌ வீடு, அவ‌ரின் புத‌ல்விக‌ள், அவர் எழுதிய‌ க‌டித‌ங்க‌ள். இதில் ப‌ர‌லி சு நெல்லைய‌ப்ப‌ருக்கு எழுதிய‌ க‌டித‌த்தில் ” த‌மிழ‌ச்சியை காட்டிலும் ம‌ற்றொரு ஜாதிக்காரி அழ‌காயிருப்ப‌தை க‌ண்டால் என் ம‌ன‌து புண்ப‌டுகிற‌து என்று எழுதியிருக்கிறார்.

170120120662.jpg?w=614&h=460

இதை விட‌ த‌மிழ‌ச்சிக‌ளை யாரும் காதலித்துவிட‌ முடியாது என்றே நினைக்கிறேன். இந்த இரண்டு வரிகள் மிகப்பெரும் நினைவுச்சுழலை ஆரம்பித்துவைத்தன‌‌. தமிழனும் , தமிழச்சியும் தான் எல்லாவற்றிலும் முத‌லிட‌த்தில் இருக்க‌ வேண்டும் என்பதை பாரதியார் பெரிதும் விரும்பியிருக்கிறார்.

மீப்பெரும் ஆளுமைக‌ள் அவ‌ர்க‌ளின் புகைப்ப‌டங்களின் நிழ‌ல் பிம்பத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்க‌ள். பாரதி நிஜத்திலும் கவிதையிலும் ஒருகால‌த்திலும் ச‌ம‌ர‌ச‌ம் செய்து கொள்ளாத‌வ‌ர். பைத்திய‌க்கார‌ன் என்று சொன்ன‌வ‌ரின் வாரிசுக‌ளுக்கு இன்று அவ‌ர் மகாக‌வி.

க‌விதைக்காக‌ அவ‌ர் இழ‌ந்தவைக‌ளின் கூட்டுக்தொகை மிக அட‌ர்த்தியான‌து. இருக்கும் வ‌ரை வார்த்தைக‌ளால் விளையாடிக்கொண்டிருந்த‌வ‌ர் இற‌ந்த‌ பிற‌கு அவரின் வார்த்தைக‌ள் விளையாடிக்கொண்டிருக்கிற‌து.

நேரமாகிவிட்டதாக அண்ணன் சொன்னார் . கிள‌ம்புவ‌த‌ற்கு த‌யாராக‌ சப்பாத்துகள் அணிவதற்கு முதல் அறைக்கு வந்தேன். முதலில் பார்த்த அதே படத்தில் இப்போதும் செல்ல‌ம்மாள் சிரிக்க‌வேயில்லை. அவ‌ரின் சோக‌ம் ப‌டிந்த‌ முக‌ம் என்ன‌வோ செய்த‌து. நிராகரிக்கப்பட்ட‌ கவிஞனுடைய‌ ம‌னைவிக‌ளின் மொத்த‌ பிம்ப‌ம் அவ‌ள்.

“யாருக்கு மனைவியாக வாழ்ந்தாலும் வாய்க்கலாம். ஆனால் கவிஞன் மனைவியாயிருப்பது கஷ்டம்” என்ற‌ துன்பத்தின் மீப்பெரும் வரிகளை செல்லமாள் வ‌லிக‌ளுட‌ன் தான் சொல்லியிருக்கிறார். அவ‌ரின் சிரிக்காத‌‌ முக‌ம் தீர்க்க‌முடியாத‌ ர‌ண‌மாய் உறுத்த‌த்தொட‌ங்கிய‌து. ச‌ட்டென‌ கிள‌ம்பி வெளியேறினேன்.

-0O0-

பின் இணைப்பு :

என் கணவர் – திருமதி. செல்லம்மாள் பாரதி

(1951ஆம் ஆண்டு திருச்சி வானொலியில் “என் கணவர்”என்ற தலைப்பில் திருமதி செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரை.)

வறுமை, கவிஞனின் தனி உடைமை. கவிஞனுக்கு இந்த மண்ணுலகில் இன்பம் அளிப்பது கவிதை; ஆனால் வயிற்றுக்குணவு தேடி வாழும் வகையை அவன் மனைவிதான் கண்டுபிடிக்க வேண்டி வருகிறது. காதல் ராணியாக மனைவியைப் போற்றும் கவிஞன் அவளுக்குச் சாதமும் போடவேண்டும் என்ற நினைவேயின்றிக் காலம் கழித்தானேயானால், என்ன செய்ய முடியும்?.

ஊருக்குப் பெருமை என் வாழ்வு. வையகத்தார் கொண்டாட வாழவேண்டும் என்ற என் கனவு ஓரளவு பலித்ததென்னவோ உண்மைதான். இன்று என் கணவரின் புகழ் விண்முட்டிச் செல்கிறது. இன்று மகாகவியின் மனைவியாகப் போற்றப்படும் நான் அன்று பைத்தியக்காரன் மனைவியென்று பலராலும் ஏசப்பட்டேன்… விநோதங்கள் என் வாழ்க்கையில் அதிகம்.

உலகத்தோடொட்டி வாழ வகை அறியாத கணவருடன் அமர வாழ்வு வாழ்ந்தேன் என்றால் உங்களுக்குச் சிரிப்பாகத்தான் இருக்கும். யாருக்கு மனைவியாக வாழ்ந்தாலும் வாய்க்கலாம். ஆனால் கவிஞன் மனைவியாயிருப்பது கஷ்டம்.

கவிஞர்கள் போக்கே ஒரு தனி. உண்பதிலும் உறங்குவதிலும் வட சாதாரண மனிதரைப்போல் அவர்கள் இருப்பதில்லை. கற்பனைச் சிறகு விரித்துக் கவதை வானில் வட்டமிடும் பறவை, பூலோகத்திலே இருண்ட வீட்டிலே மனைவிக்கும் மற்றவருக்கும் சம்பாத்தியம் செய்துபோட்டு, சாதாரண வாழ்க்கை வாழ முடியுமா?

வறுமை, கவிஞனின் தனி உடைமை. கவிஞனுக்கு இந்த மண்ணுலகில் இன்பம் அளிப்பது கவிதை ஆனால் வயிற்றுக்குணவு தேடி வாழும் வகையை அவன் மனைவிதான் கண்டுபிடிக்க வேண்டி வருகிறது. காதல் ராணியாக மனைவியைப் போற்றும் கவிஞன் அவளுக்குச் சாதமும் போடவேண்டும் என்ற நினைவேயின்றிக் காலம் கழித்தானேயானால், என்ன செய்ய முடியும்?

கவிஞன் விசித்திரமான தன்மை நிறைந்தவன்; அவனுக்கு எதுவும் பெரிதில்லை. ஆனால் கவலை நிறைந்த வாழ்நாளைக் கழிக்க வேண்டும் என்று எந்தப் பெண்தான் நினைக்க முடியும்? சிறு வயதில் ஆசாபாசங்களும் அபிலாஷைகளும் ஒவ்வொரு பெண்ணின் மனத்திலும் நிறைந்திருப்பது இயற்கைதானே? சுகமாக வாழுவதற்கு சொர்க்கலோகம் சென்றால்தான் முடியும் என்ற நிலை கவிஞன் மனைவிக்கு ஏற்பட்டு விடுகிறது.

அந்த நாளிலிருந்த சத்திமுத்தப் புலவரின் மனைவியிலிருந்து இன்று என்வரை சுகவாழ்வு ஒரே விதமாகத்தான் அமைந்திருக்கிறது. ஏகாந்தத்தில் அமர்ந்துவிட்டால் முனிவரும்கூட அவரிடம் பிச்சைதான் வாங்கவேண்டும். ஆனால் மனைத் தலைவியாகிய நான் அவ்வாறு நிஷ்டையிலிருக்க முடியுமா?

கவிஞர்களில் பலதரப்பட்டவர்கள் இருக்கிறார்கள். கடவுளைப் பக்தி செய்யும் கவிஞன், காவியம் எழுதும் கவிஞன், இவர்களைப் புற உலகத் தொல்லைகளை சூழ இடமில்லை. எனது கணவரோ கற்பனைக் கவியாக மட்டுமல்லாமல் தேசியக் கவியாகவும் விளங்கியவர். அதனால் நான் மிகவும் கஷ்டப்பட்டேன்.

கவிதை வெள்ளைத்தை அணை போட்டுத் தடுத்தது அடக்கு முறை. குடும்பமே தொல்லைக்குள்ளாகியது. ஆனால் நுங்கும் நுரையுமாகப் பொங்கிவரும் புது வெள்ளம் போல அடக்குமுறையை உடைத்துக்கொணடு பாய்ந்து செல்லும் அவர் கவிதை.

காலையில் எழுந்ததும் கண்விழித்து, மேநிலை மேல், மேலைச்சுடர் வானை நோக்கி வீற்றிருப்பார். ஸ்நானம் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு விதத்தில் அமையும். ஸூரிய ஸ்நானம்தான் அவருக்குப் பிடித்தமானது. வெளியிலே நின்று நிமிர்ந்து ஸூரியனைப் பார்ப்பதுதான் வெய்யற் குளியல். ஸூரியகிரணம் கண்களிலேயுள்ள மாசுகளை நீக்கும் என்பது அவர் அபிப்பிராயம். காலைக் காப்பி, தோசை பிரதானமாயிருக்க வேண்டும் அவருக்கு. தயிர், நெய், புது ஊறுகாய் இவைகளைத் தோசையின் மேல் பெய்து தின்பார்.

அவருக்குப் பிரியமான பொருளைச் சேகரித்துக் கொடுத்தால், அவரது நண்பர்களான காக்கையும் குருவியும் அதில் முக்கால் பாகத்தைப் புசித்து விடுவார்கள். எதை வேண்டுமானாலும் பொறுக்க முடியும்; ஆனால் கொடுத்த உணவைத் தாம் உண்ணாமல் பறவைகளுக்குப் போட்டுவிட்டு நிற்கும் அவருடைய தார்மிக உணர்ச்சியை மட்டும் என்னால் சகிக்கவே முடிந்ததில்லை.

சிஷ்யருக்குக் குறைவு இராது.செய்திகளுக்கும் குறைச்சல் இல்லை. கானாமுதமோ காதின் வழியே புகுந்து உடல் எங்கும் நிறைந்துவிடும். களிப்பை மட்டும் பூரணமாக அனுபவிக்க முடியாமல் உள்ளிருந்து ஒன்று வாட்டும். அதுதான் கவலை!

இச்சகம் பேசி வாழும் உலகத்தில் எப்பொழுதும் மெய்யே பேச வேண்டும் என்பது அவரது கட்டளை. எக்காரணத்தைக் கொண்டும் பொய் பேசக் கூடாது. இது எத்தனை சிரமமான காரியம் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தான்.

புதுவை எனக்குச் சிறைச்சாலை ஆகியது. சிறைச்சாலை என்ன செய்யும்? ஞானிகளை அது ஒன்றும் செய்ய முடியாதுதான். எதையும் ஏற்றுக்கொள்ளும் மனத்திண்மை அவர்களுக்கு உண்டு. ஆனால் என்னைப்போன்ற சாதாரணப் பெண்ணுக்கு, இல்லறத்தை நல்லறமாக்க வேண்டும் என்ற ஒரே விஷயத்தை லட்சியமாகக் கொண்ட ஒருத்திக்குச் சிறைச்சாலை நவநவமான துன்பங்களை அள்ளித்தான் கொடுத்தது.

புதுவையில்தான் புதுமைகள் அதிகம் தோன்றின. புது முயற்சிகள், புதிய நாகரிகம், புதுமைப் பெண் எழுச்சி, புதுக் கவிதை இவை தோன்றின. இத்தனை புதுமைகளும் எழுவதற்கு நான்தான் ஆராய்ச்சிப் பொருளாக அமைந்தேன். பெண்களுக்குச் சம அந்தஸ்து வழங்க வேண்டுமா வேண்டாமா என்று வெகுகாலம் ஆராய்ந்த பின்னரே, பெண் விடுதலை அவசியம் என்ற முடிவு கண்டு, நடைமுறையில் நடத்துவதற்குத் துடிதுடித்தார் என் கணவர். இந்த முடிவை அவர் காண்பதற்குள் நான் பட்ட பாடு சொல்லுந்தரமன்று.

புதுவையில் அரசியலில் கலந்துகொள்ள ஒரு வசதியும் இல்லாதிருந்த போதிலும், தமிழ் இலக்கியத் தொண்டு செய்ததனால் ஒருவாறு மன அமைதி பெற்றிருந்தார். நமது பொக்கிஷங்கள் என்று கருதத் தகும்படியான அவரது கவிதைகள் எல்லாம் அங்குதான் தோன்றின.

மனிதரை அமரராக்க வேண்டும் என்று தவித்த என் கணவர், எத்தனை இடையூறுகளுக்கும் எதிர்ப்புகளும் ஏற்பட்ட போதிலும், அவற்றையெல்லாம் மோதிமிதித்துவிட்டுத் தம் லட்சியத்தில் முன்னேறும் துணிவு கொண்டு செயலாற்றினார்.

மகாகவி நாட்டிற்காக, அதன் சுதந்திரத்திற்காக வாழ்ந்தார். தமிழ் பண்பாட்டில் சிறந்த அவர் ஈகை, அன்பு, சகிப்புத்தன்மை முதலான பண்புகளைக் கடைப்பிடித்து வாழ்ந்தது ஓர் அதிசயமன்று.

தூங்கிக் கிடந்த தமிழரை விழிப்புறுத்தியதும் அதிசயமன்று; ஆனால் இன்று அவரது பூத உடல் மறைந்த பின்பும் தமிழ் பேசும் ஒவ்வோர் உயிரினிடத்தும் அவர் கலந்து நிற்பதுதான் அதிசயம் என்று எனக்குத் தோன்றுகிறது. “விண்டுரைக்க மாட்டாத விந்தையடா!” என்று அவரது கவிதை மொழியில்தான் இந்த மகிழ்ச்சியைத் தெரிவிக்க வேண்டியிருக்கிறது.

( சின்னஞ்சிறுகிளியே செல்லம்மா பாடல் கேட்க வேண்டும் போல உள்ளது )

பின் இணைப்பு படங்கள் :

170120120962.jpg?w=614&h=460

170120121002.jpg?w=614&h=460

170120120942.jpg?w=614&h=460

170120120922.jpg?w=614&h=460

170120120742.jpg?w=614&h=818

170120120732.jpg?w=614&h=818

170120120722.jpg?w=614&h=460

170120120682.jpg?w=614&h=818

170120120852.jpg?w=614&h=460

170120120672.jpg?w=614&h=818

170120120842.jpg?w=614&h=460

மகாகவியின் சிறந்த நினைவு மீட்டல்கள் . மிக்க நன்றிகள் நுணாவிலான் இணைப்பிற்கு :):):) .

இணைப்பிற்கு நன்றி நுணாவிலான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.