Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

நாலைந்து நாட்களாக மண்டை பிளக்கும் வெயில். மத்தியான வெயிலில் சன சந்தடி குறைந்துவிட்டது. சின்னப் பெடி பெட்டைகளுக்கு மட்டும் வெயில் என்று ஒன்று இருப்பதாகத் தெரியவில்லை. புதிதாக விழுந்த கமுக மடல் ஒன்று அவர்களிடம் அகப்பட்டுவிட்டது. கமுகம் மடலை இழுத்துக் கொண்டு இரண்டு பொடிசுகள், மடலின் அடிப்பகுதியில் மூன்றுபேர் நெருக்கியடித்துக் கொண்டு இருந்தார்கள். "பீப் பீப்" என்று சத்தமிட்டுக் கொண்டு கற்பனைக் காரில் பயணம் செய்து கொண்டிருந்தார்கள்.ஒருவன் மட்டும் வேலிக்கரையில் நிழலில் நின்றுகொண்டு பூவரசம் இலையிற் செய்த குழலை ஆனந்தமயமாக ஊதிக்கொண்டிருந்தான். அவன் பாவனைகளும் அங்க சேஷ்டைகளும் முந்தநாள் அம்மன் கோவிற்திருவிழாவில் நாதஸ்வரம் வாசித்த வித்துவானை ஞாபகப்படுத்தியது. திடீரென வாயில் இருந்த பீப்பீப் குழலை எறிந்துவிட்டு மேளக்காரனாக மாறி விட்டான்.

"அட நாசமறுவானே வேலியை ஏண்டா தட்டுறாய்?" என்று வேலிக்கு அந்தப் புறமிருந்து கோபமான ஒரு குரல் கேட்டது. இவன் பாய்ந்து விழுந்து ஓடினாலும், அந்த அவசரத்திலும் வேலிக் கதியால்களில் இருந்து இரண்டு மூன்று கிளுவங் கொப்புகளை முறித்தெறிய மறக்கவில்லை. அந்த வீட்டிலிருந்த கிழவி கோபத்தோடு வெளியே வந்து இன்னொரு சிறுவனுக்கு திட்டத் தொடங்க அவன் தன்பங்குக்கு "ஆச்சி, பூச்சி, மதவாச்சிக் கோச்சி" என்று எதுகை மோனையுடன் நெளித்துக் காட்டி விட்டு ஓடத்தொடங்கினான். கிழவி 'தூய' செம்மொழியில் திட்டத் தொடங்கியது. அவா சொன்ன வசனங்களின் உண்மை அர்த்தம் புரிய அவனுக்கு இன்னும் பத்துப் பன்னிரண்டு வருடங்கள் கழியவேண்டியிருக்கும். தாய் மொழியில் கிழவிக்கு இருக்கும் புலமை அப்படி.

ஓடத்தொடங்கிய இரண்டு பேரும் போய் நின்றது பள்ளிக்கூடத்தில் நின்ற வேப்பமரங்களின் கீழே. மிச்சப்பேரும் சரியாக ஊகித்து அங்கே வந்து சேர்ந்தார்கள்.

**************************

ரங்கனின் அரைக்காற்சட்டைப் பொக்கற்றில் ஒரு நெருப்புப் பெட்டி இருக்கும். அதற்குள் நெருப்புக்குச்சி இருக்காது. பதிலாக உயிருள்ள ஒன்று இருக்கும். இன்றைக்கு சில்வண்டு . இவன் நடக்க நடக்க சில்வண்டு "ரீஈஈஈஈஈ, ரீற், ரீஈஈஈஈ" என்று விட்டுவிட்டுச் சத்தம் போட்டது. இவனைக் கண்ட எல்லோரும் சத்தத்தைக் கேட்டு விட்டுக் கேள்விக்குறியோடு பார்க்க, ஒன்றும் நடவாததுபோல் முகத்தை அப்பாவியாக வைத்துக்கொண்டு நடந்தான். இந்த 'அச்சாப்பிள்ளை' முகம் இவனுக்கு ஒரு கொடை. யார் வீட்டையாவது போய் 'ஆச்சி/அப்பு/மாமி உங்கடை வீட்டை மாங்காய் ஆயலாமா?" என்று கேட்டால் யாரும் மறுக்கப்போவதில்லை. ஆனால் களவாக மாங்காய், புளியங்காய் நெல்லிக்காய் ஆய்ந்து தின்பதின் சுகம் சொல்லித் தெரியவேண்டியதில்லை. இவன் முதல்நாள்தான் குஞ்சிப் பெரியாச்சி வீட்டில் மாங்காய் திருடியிடுப்பான். அடுத்தநாள் பெரியாச்சி இவனிடமே "ஆரோ கள்ளப் பெடியள் மாங்காய் ஆஞ்சு போட்டாங்கள். உனக்கு ஆரெண்டு தெரியுமே?" என்று விசாரிப்பா. இவனும் முகத்தைச் சீரியஸ் ஆக வைத்துக்கொண்டு ஏதோ ஒரு சடையல் பதில் சொல்லிக்கொண்டிருப்பான். அவாவும் "நீ நல்ல பெடியன், பதிவாக இருக்கிற ஒரு மாங்காய் ஆஞ்சு கொண்டு போய்த் தின்னேன்" என்பா. என்றாலும் இவனுக்குக் கனகாலம் ஒரு குழப்பம், "ஆச்சிக்கு என்னிலை சந்தேகமா?" என்று. கடைசிவரை அந்த 'டவுட்' கிளியர் ஆகவில்லை. ஆனால் இந்த அச்சாப்பிளை சொந்த ஆச்சி வீட்டிலேயே அப்பப்ப நெல்லிக்காய் களவாகப் புடுங்கும். கொஞ்சம் சோம்பலாக இருந்தால் மட்டும் ஆச்சியிடம் 'அனுமதி' வாங்கி நெல்லிக்காய்கள் பறிப்பான். அன்றைக்கு இவன் பாடு சோகம். ஆச்சி இவனை மரத்தில் ஏறவிடா. நீளத் தடியொன்றைக் கொடுத்துப் 'பத்திரமாகப்' பழுத்த நெல்லிக்காய்களை மட்டும் தட்டி விழுத்தச் சொல்லுவா. 'கிழவி' மறக்காமல் அன்று பின்னேரம் இவன் வீட்டை போய் அம்மாவிடம் 'இவன் நாசமறுவான் பச்சை நெல்லிக்காய்களை நாசம் பண்ணிப்போட்டான் ' என்று புகார் கொடுக்கும். அம்மாவிற்குத் தன்மகனை 'நாசமறுவான்' என்று ஆச்சி சொன்னது பிடிக்காது. அந்தக் கோபத்தையும் இவனிடம்தான் காட்டுவா.

eraser.jpg

இதெல்லாம் இப்படி இருந்தாலும், இன்றைய நாயகன் என்னவோ சொறியன் எனச் செல்லமாக அழைக்கப்படுகிற சிறியன் தான். சேட்'டுப் பொக்கற்றில் இருந்து "அதை" ஒரு நளினமாக எடுத்துப் போட்டான். அது அப்போதுதான் பிரபலமாகத் தொடங்கிய 'வாசம்' மணக்கிற அழிறப்பர். ஒரு றப்பரால் கெப்பரானது வரலாற்றில் இவனாகத்தான் இருப்பான். அதுக்குப் பின்னால் ஒரு கதை இருந்தது.

"சுகந்தி தந்தவள்" என்றான் சிறியன், ரத்தினச் சுருக்கமாக. சுகந்தி பள்ளிக்கூடத்தில் புதுப்பெட்டை. புத்தம்புது அரை லேடீஸ் பைக்கில் வருவாள். தலைமுடியைக் குட்டையாக வெட்டியிருப்பாள். "நீர்" என்றும் மற்றவர்களை விளிக்கலாம் என்று பட்டிக்காட்டுப் பெடி பெட்டைகளுக்குச் சொல்லிக் கொடுப்பவள். கொஞ்சம் கறுப்பு என்றாலும் கூடப்படிக்கிற பெடியள் எல்லாருக்கும் அவளில் ஒரு 'இது' இருந்தது. கற்பனையைச் சிறகடிக்க விடவேண்டாம். இப்பதான் இவர்கள் ஆறாம் வகுப்பிற் படிக்கிறார்கள். அக்காலங்களில் ரவுணிலை ஷெல் விழத் தொடங்கிவிட்டது. அதுதான் அவள் ரவுண் கொன்வென்ட் இலிருந்து உள்ளூர் மகாவித்தியாலத்திற்கு வந்த வரலாறு.

"நீ களவெடுத்திருப்பாய்" என்றான் ரங்கன்.

"நீ அழுதிருப்பாய், அவள் பரிதாபப்பட்டுக் கொடுத்திருப்பாள்" என்றான் ரவி.

"நீ உன்ரை ஆட்டுப் புழுக்கைப் பென்சிலைக் கொடுத்து இதை ஏமாத்திப் பண்டமாத்துச் செய்திப்பாய்" என்றான் காந்தன்.

"சுப்பர் கடையில வாங்கிப்போட்டுக் கதை விடுகிறாய் என்ன?" என்றான் அளாப்பல் குஞ்சன்.

"சத்தியமாக அவள் ரண்டு றப்ப்ர் வச்சிருந்தவள், ஒண்டை எனக்குத் தந்தவள்" என்ற சிறியன் அதை கையில் வைத்து ஒரு சுண்டு சுண்டிவிட்டு ஏந்திப் பிடித்தான். பிறகு பொக்கற்றில் போட்டுவிட்டு ஒரு 'மிதப்புப்' பார்வை பார்த்தான்.

இந்த இடத்தில் சீன் கொஞ்சம் மாறுகிறது. அந்த நாட்களில் இலங்கை வானொலியில் "அடுத்து... நிலைய வித்துவான்கள் வாசிக்கக் கேட்கலாம்" என்றபின் வித்துவான்கள் இஷ்டம்போல வெளுத்துவாங்குவார்கள். அந்த இசையைக் கற்பனை செய்து பார்க்கவும்.

"சிறியன் சொறியன்" என்றன் ரவி

"சொ ஓஓஓஓ றீஈஈஈஈஈஈஈ யன் சீஈஈஈஈறீஈஈஈஈ யன்" என்று டீ.ஆர்.மகாலிங்கம் ஸ்டைலில் இழுத்துப் பாடினான் ரங்கன்.

"கொப்பர் ஏன் உனக்கு நேற்று அடிச்சவர்?" என்று ஒரு இடைச்செருகல் போட்டான் ரவி.

"நல்ல வெறி போலை.." ஏற்றினான் குஞ்சன்.

எல்லாரும் "ஹா ஹா" "ஹீ ஹீ.., "ஈ ஈ" என்று வகை வகையாகச் சிரிக்க அழுதுகொண்டு வீட்டை ஓடினான் சிறியன்.

**************************

குஞ்சிப் பெரியாச்சி வீட்டின் பின்பக்கம் பெரிய மாமரம். மாங்காய்கள் கைக்கெட்டும் உயரத்திலும் இருக்கும். வீட்டின் முன்பக்கம் ஆட்டுக் கொட்டில். உள்ளே ஒரு ஒரே ஒரு ஆடு கட்டப்பட்டிருந்தது. குட்டிகள் அண்மையில்தான் பிறந்திருக்கவேண்டும். அவை கட்டப்பட்டிருக்கவில்லை. தாயாடு, கூரையிலிருநது தொங்கிய கயிற்றில் கட்டியிருந்த கிளுவங் குழைகளைக் 'கறுக் முறுக்' என்று கடித்துக்கொண்டிருந்தது. குட்டிகளுக்குப் பொழுதுபோகாமல் இருந்திருக்க வேண்டும். ரங்கன் என்கின்ற ரங்கநாதன் வளவுக்குள் நுழைய இவனது கால்களில் ஈரமான மூக்குகளால் உரசிப்பார்த்தன. பிறகு இவனைப் பின்தொடர்ந்தன. ஒரு குட்டியை மட்டும் தூக்கி நெஞ்சோடு அணைத்துக் கொண்டு நடந்தான். மற்றக் குட்டி இன்னும் பின் தொடர்ந்தது.

திண்ணையில் ஆச்சி, அவித்த பனங் கிழங்குகளை உரித்து, நார்க் கடகமொன்றிற்குள் போட்டுக்கொண்டிருந்தா. இவன் ஆட்டுக் குட்டியை இறக்கிவிட்டான். பிறகு அதன் செவிகளைச் செங்குத்தாக உயர்த்திப் பிடித்து. "நீ இப்ப முயல்" என்றான். இம்சை தாங்காத குட்டி ஆடு ஓடித்தப்பியது.

"என்னடா பொறுக்கி இந்தப் பக்கம்?" ஆச்சி வரவேற்றா.

" ....... " இவன் கொஞ்சம் தயங்கி நின்றான்.

"இந்தா பனங் கிழங்கு சாப்பிடு" ஆச்சி பனங் கிழங்கொன்றை சரி இரண்டாகப் பிளந்து நடுவில் இருந்த 'ஈர்க்கை' எறிந்துவிட்டு, பிறகு நுனிப்பக்கதால் சின்னதாக முறித்துத் தும்புகளை இலாவகமாக நீக்கி விட்டுக் கொடுத்தா.

"ஆச்சி ... " இவன் எச்சிலை விழுங்கிக் கொண்டு எதையோ சொல்ல வெளிக்கிட்டான். நாக்குக் கொஞ்சம் உலர்ந்தது. நெஞ்சு கொஞ்சம் பட பட என்று அடித்தது.

"உனக்கு முந்தநாள் மாங்காய் ஆஞ்சது ஆரெண்டு தெரியுமே?" ஒருமாதிரிச் சொல்லத் தொடங்கினான்.

"அதைச் சொல்லத்தான் துரை வந்திருக்கிறார் போல, சொல்லு ராசா"

african-mango-3.jpg

"உவன் கள்ளச் சிறியன்தான்!"

ஆச்சி கொஞ்சமும் அதிசயப்பட்டதாகத் தெரியவில்லை. கொஞ்சநேரம் வாய்க்குள் இருந்த வெத்திலை, பாக்குச் சமாச்சாரங்களைக் குதப்பத் தொடங்கினா. இவன் பொறுமை இழக்கத் தொடங்கிய நேரத்தில் பொழிச் என்று வெற்றிலைச் சாற்றை திண்ணைக்கு வெளியே எட்டித் துப்பினா.

"அவன் கள்ளன், எனக்கும் அவனிலைதான் சந்தேகம்.... நீ நல்ல பெடியன்; சரி சரி கறுத்தைக் கொழும்பான் காய்ச்சிருக்குது; அதிலை பதிவாக இருக்கிற ஒரு மாங்காயை ஆஞ்சு கொண்டு போய்த் தின்னேன்" என்றாவாம்.

இவன் மினக்கெடாமல் வளவுக்குப் பின்புறம் மாமரத்தடிக்கு வந்தான். நாலைந்து மாங்காய்களைச் கணநேரத்திற் பிடுங்கி வேலிக்குக் கீழே ஒளித்துவைத்தான். பிறகு ஆச்சி சொன்ன 'ஒரு' மாங்காயை ஆயும்போது திரும்ப அந்த டவுட் வந்தது "ஆச்சிக்கு என்னிலைதான் சந்தேகமா?" என்று.

Source:

http://www.ssakthivel.com/2012/02/blog-post_25.html

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதோர் கதையை இணைத்தமைக்கு நன்றி. :)

  • கருத்துக்கள உறவுகள்

நினைவில் அழியாத மலரும் நினைவுகள் . பகிர்வுக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்..நல்ல கதை..இணைப்புக்கு நன்றி கறுவல்... :)

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

அழிறப்பராலும் அழிக்க முடியாத நினைவுகளுக்கு நன்றி கறுவல்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.