Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மெல்லக் கொல்லும் யாழ்ப்பாணக் குடிநீர்!

Featured Replies

விவசாய இரசாயனங்களின் விபரீதம்!

பொ.ஐங்கரநேசன்

DSC_0001-300x199.jpgநல்ல தண்ணீருக்கு அறிவியலாளர்கள் சுவை இல்லை என்பார்கள். எனினும், யாழ்ப்பாணக் குடா நாட்டு மக்கள் தங்கள் கிணற்று நீரை அமுதச் சுவை என்று சிலாகிப்பார்கள். அந்த அளவுக்கு அவர்களின் கிணறுகள்குறித்துப் பெருமைகள் அதிகம். ஆனால், அந்தப் பெருமித்தில் இடி இறங்கியதைப் போன்று, அவர்களது அமுதமே நஞ்சாக மாறி உயிர் குடித்து வரும் அவலம் அரங்கேறி வருகிறது. ஆம்! யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் உணவுக் குழல் புற்றுநோய் மரணங்களின் காலன் உட்படப் பல்வேறு நோய்களினதும் கர்த்தாக்கள் குடி நீரிலேயே கரந்துறைவது கண்டறியப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏனைய இனத்தவர்களைவிடத் தமிழர்களே அதிகம் புற்றுநோய்க்கு ஆளாகின்றனர். அத்தோடு, ஏனைய மாவட்டங்களைவிட யாழ்.மாவட்டமே அதிக அளவில் புற்றுநோயக்கு இலக்காகி வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் யாழ்.மாவட்டத்தில் புற்றுநோயாளிகள் சடுதியாக அதிகரித்துள் ளார்கள். யாழ். போதனா மருத்துவமனைத் தரவுகளின்படி, 2008இல் 748 ஆக இருந்த புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை 2011ஆம் ஆண்டு 1382 ஆக உயர்ந்திருக்கிறது. இவர்களில் கடந்த ஆண்டு நோய் தீவிரம் பெற்றதில் 206 பேர் பலியாகியுள்ளனர்.

இப்படி, ஏதோ சாபக்கேடு போன்று புற்றுநோய் தனது நண்டுக் கரங்களால் யாழ்ப்பாணத்தை இறுக்கப் பற்றியிருப்பது இன்று நேற்றுத் தெரிய வந்த ஒன்றல்ல. யாழ்.போதனா மருத்துவமனையில் புற்றுநோய்ச் சிகிச்சைப் பிரிவு ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் புற்றுநோயாளிகள் அனைவரும் தெற்கில் மஹரகம மருத்துவமனைக்கே செல்லவேண்டியிருந்தது. அங்கு மேற்கொள்ளப்பட்ட பதிவுகளில் இருந்து, 1970களிலேயே, இலங்கையின் தேசிய அளவுடன் ஒப்பிடுகையில் யாழ்ப்பாணத்தில் தொண்டை மற்றும் இரைப்பைப் புற்றுநோய் இரட்டிப்பு மடங்கு அதிகம் என்ற விழுங்கமுடியாத அவலம் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. அப்போதிருந்தே, இந்த விபரீதங்களுக்கெல்லாம் யாழ்ப்பாணத்தவர்கள் அளவு கணக்கில்லாமல் அள்ளி வீசுகின்ற வேளாண் இரசாயனங்களே சூத்திரதாரிகளாக இருக்கலாம் என்ற ஊகம் வெளியிடப்பட்டு வந்துள்ளது.

IMG_8526.jpgயாழ்ப்பாணக் குடாநாட்டில் செறிவு வேளாண்மை (Intensive agriculture) நெடுங்காலமாக மேற்கொள்ளப்படுகிறது. குறைந்த நிலப்பரப்பில், கூடுதலான வேளாண் இடுபொருட்களைப் பயன்படுத்தி குறுகிய காலத்தில் அமோக விளைச்சலை அறுவடை செய்யும் வேளாண்முறைமையே செறிவு வேளாண்மை. இதனால், விவசாய நிலங்களின் மீது அனுதினமும் இரசாயன உரங்கள், பீடை கொல்லி இரசாயனங்கள் மழையாகப் பொழியப்படுகின்றன. இதில் சோகம் என்னவெனில் வேளாண் இரசாயனங்கள் பயன்படுத்தவேண்டிய அளவுகணக்கு, காலநேரம், அவற்றின் பக்க விளைவுகள் குறித்துப் பெரிதும் விழிப்புணர்வற்ற நிலையில் தேவைக்கு அதிகமாகப் பிரயோகிக்கப்படுகின்றன என்பதுதான். யாழ் குடா நாட்டின் அடித்தளம், ‘மயோசின்;’ காலத்துச் சுண்ணாம்புச் பாறைகளால் ஆனது. இப்பாறைகள் மூட்டுகளையும், உடைவுகளையும், நுண்துகளையும் கொண்டிருப்பாதல் வேளாண் இரசாயனங்கள் மழை நீருடன் சேர்ந்து வடிந்தோடி சுலபத்தில் நிலத்தடி நீருடன் கலந்துவிடுகின்றன.

வேளாண்மையில் பயன்படுத்தப்படும் நைதரசன் உரங்களில் இருந்து நைத்திரேற்று (NO3-) அதிக அளவில் தண்ணீரில் கலக்க நேருகிறது. இது குடிநீருடன் உடலை அடையும்போது, குடல் வாழ் பக்ரீறியங்களினால் நைத்திரைற்றாக (NO2-)  மாற்றப்படுகிறது. ஆபத்து இங்கேதான் ஆரம்பம். நைத்திரைற்று சமிபாட்டு நொதியங்களுடன் வினைபுரிந்து நைத்திரோசமைன்கள் (Nitrosamines) எனப்படும்; வேதிகளாக உருமாறுகின்றன. இவை படுதீவிரமான புற்றுநோய்த் தூண்டிகள். தொண்டை, இரைப்பை, பெருங்குடல், சிறுநீர்ப்பை உட்படப் பல்வேறு உறுப்புக்களிலும் புற்றுநோயை ஏற்படுத்த வல்லவை. அத்தோடு, நைத்திரைற்று குழந்தைகளின் செங்கலங்களில் உள்ள ஈமோகுளோபினை மெதீமோகுளோபினாக (methemoglobin) மாற்றிவிடக் கூடியது. இதன்மூலம் ஒட்சிசன் கொண்டு செல்வதில் இடையூறுகளை ஏற்படுத்தி நீலக் குழந்தைகளின் (blue babies) பிறப்புக்கும் காரணமாக அமைகிறது.

நைத்திரேற்றின் கெடுதலைக் குணம் தெரிய வந்ததையடுத்து, உலக சுகாதார நிறுவனம் நைத்திரேற்றை ஓர் ஆபத்தான குடிநீர் மாசாக அறிவித்திருக்கின்றது. ஒரு இலீற்றர் குடிநீரில் 50 மில்லிகிராம்களுக்கும் மேலாக நைத்திரேற்றைக் கொண்டுள்ள (50mg NO3-/L) கொண்டுள்ள குடிநீர் அருந்துவதற்கு உகந்ததல்ல என்று எச்சரித்திருக்கிறது. நைத்திரேற்று மாசின் அளவைச் சுட்டும்போது நைத்திரேற்றில் உள்ள ஒட்சிசனைத் தவிர்த்து நைதரசனின் அளவை மட்டும் கருத்தில் எடுக்கும் நடைமுறையும் உள்ளது. இம்முறையில் இலீற்றரில் 10 மில்லிகிராம்களுக்கும் மேலாக நைத்திரேற்றின் நைதரசன் இருப்பது (10mg NO3- -N/L) ஆபத்தானதாகக் குறிப்பிடப்படுகிறது. சமீபத்தில் யாழ்.பல்கலைக்கழக விவசாயபீடப் பேராசிரியை கலாநிதி திருமதி துஷ்யந்தி மிகுந்தன் குழுவினர் மேற்கொண்ட ஆய்வில் குடாநாட்டுத் தண்ணீரில் நைத்திரேற்று அளவு மீறிக் குடியேறியிருப்பதும், புற்றுநோயைத் தூண்டி வருவதும் ஐயமறத் தெரிய வந்துள்ளது. யாழ்.போதனா மருத்துவமனையில் 2000-2009ஆம் ஆண்டு வரையான 10 வருட காலப் பகுதியில் பல்வேறு புற்றுநோய்களுக்காகவும் 2300 பேர் சிகிச்சைபெற்றுள்ளனர். தொண்டை மற்றும் இரைப்பைப் புற்றுநோய்களுக்காகச் சிகிச்சை பெற்றவர்கள் 159 பேர். இவர்களின் பதிவுகளில் இருந்து சுன்னாகம் வடமராட்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மூன்று பிரதேசங்களைச் சேர்ந்த புற்றுநோயாளிகளின் தரவுகள் சேகரிக்கப்பட்டு, அவர்கள் பயன்படுத்திய கிணறுகளின் நீரில் நைத்திரேற்றுகளின் அளவும் துணியப்பட்டன.

DSC_0047-copy-300x199.jpgஅதிர்ச்சியளிக்கும் விதமாகச் சுன்னாகம் பிரதேசக் கிணறுகளில் நைத்திரேற்று அனுமதிக்கப்பட்ட அளவைவிட மிக உயர்வாக இருப்பதும்,  இப்பிரதேசத்திலேயே தொண்டை மற்றும் இரைப்பைப் புற்றுநோயாளர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்ததும் தெரியவந்தது. சுன்னாகம் பெருமளவில் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்படுகின்ற ஓர் ஊர் என்பது அறிந்ததே. இந்த ஆய்வுக்கு முன்னர் யாழ்.பல்கலைக் கழகத்தின் இரசாயனபீடம் மேற்கொண்ட ஓர் ஆய்விலும் கோண்டாவில், உரும்பிராய், வல்வெட்டித்துறை, வேலணை போன்ற விவசாயக் கிராமங்களிலும் கிணற்று நீரில் நைத்திரேற்று அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வின் முடிவுகளையே, குடாநாட்டில் பெருமெடுப்பில் வேளாண்மை மேற்கொள்ளப்பட்டு வரும் ஏனைய பிரதேசங்களும் வழிமொழியக் கூடும்.

வேளாண்மையில் இரசாயன உரங்கள் மாத்திரமன்றி, பூச்சிகள் – பூஞ்சணங்கள் – களைகளைக் கொல்வதற்கும் பல்வேறு இரசாயனங்களைப் பயன்படுத்தி வருகிறோம். இவையே பீடை கொல்லிகள் (Pesticides) எனப்படுகின்றன.  உலக சுகாதார நிறுவனம் குடிநீரில் பீடை கொல்லி நஞ்சுகளுக்கும் ஒரு அளவை நிர்ணயித்து வைத்திருக்கிறது. ஒரு பீடைகொல்லி நஞ்சு இலீற்றருக்கு 0.001 மில்லி கிராம் வரையில் இருக்கலாம். பல்வேறு பீடை கொல்லிகளினது கூட்டு அளவு 0.005 மில்லி கிராமுக்கும் மேற்படலாகாது. அதாவது, ஐந்து மில்லி கிராம்களில் ஆயிரத்தில் ஒரு பங்கைத் தாண்டினால் உடல் நலத்துக்குக் கேடாகும். யாழ்ப்பாணத்துத் தண்ணீரில் பீடை கொல்லிகள் குறித்து இதுவரையில் விரிவான ஆய்வுகள் எதுவும் இடம்பெறாத போதும் அவையும் அளவுக்கு அதிகமாகக் குடிகொண்டிருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை.

IMG_8538.jpgயாழ்.குடாநாட்டில் 60க்கும் அதிகமான பீடை கொல்லிகள் பயன்பாட்டில் உள்ளன. இவற்றில் ஒன்றான கார்போஃபியூறன் (carbofuran) பூச்சிகொல்லி நஞ்சாக நீண்ட காலமாகப் பயன்படுத்தப்படுகிறது. கென்யாவில் விவசாயிகள் தங்கள் கால்நடைகளைக் கவருகின்ற சிங்கங்களைக் கார்போஃபியூறன் நஞ்சு வைத்தே சாகடிக்கிறார்கள் என்பதில் இருந்து இதன் கொல்திறனைப் புரிந்துகொள்ள முடியும். யாழ் குடாவைப் போலவே கற்பிட்டிக் குடா விவசாயிகளும் கார்போஃபியூறனை அதிகளவுக்குப் பயன்படுத்தி வருகிறார்கள். அங்கு மேற்கொண்ட ஆய்வுகளில், தண்ணீரில் கார்போஃபியூறின் கலந்திருப்பது தெரியவந்துள்ளது. கற்பிட்டிக் குடாவின் ஒத்த மண்அமைப்பைக் கொண்ட யாழ்ப்பாணத்திலும் நிலத்தடி நீரில் கார்போஃபியூறன் ஊடுருவியிருக்கும் என்பது திண்ணம்.

எகிப்தில் அலெக்ஸாண்டரா பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில் முயல்களில் விந்துகளின் உற்பத்தியை கார்போஃபியூறன் வெகுவாகப் பாதிப்பது கண்டறியப்பட்டுள்ளது. கார்போஃபியூறன் மாத்திரம் அல்லளூ யாழ்ப்பாணத்தில் பாவனையில் உள்ள டயாசினோன் (diazinon) பூச்சி கொல்லி, அலகுளோர் (alachlor), அட்ராசின் (atracin) களைகொல்லி நஞ்சுகளும் விந்து கொல்லிகளாகச் செயற்படுவது அறியப்பட்டுள்ளது. அண்மைக் காலமாக ஆண்கள் மலடாகும் போக்கு உலகளாவ அதிகரித்திருக்கிறது. கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்தவர்களில் விந்துகளின் எண்ணிக்கையைவிடத் தற்போதுள்ளவர்களில் விந்துகள் குறைவாகவே உற்பத்தியாகின்றன. அது மாத்திரமல்லாது வீரியம் குறைந்த, உருத்திரிபுற்ற, கருமுட்டையைத் துளைக்க இயலாதவாறு ஈட்டிமுனை மழுங்கிய வி;ந்துகளும் தலைகாட்டத் தொடங்கியுள்ளன. இப்படி விந்துகள் அளவிலும் தரத்திலும் தாழ்ந்து போவதன் சூத்திரதாரிகளில் தலையாயது பீடைகொல்லி நஞ்சுகள்தான். குடிநீருடன் உடலைச் சென்றடையும் இவை ஈஸ்திரோஜன் (estrogen) என்ற பெண் ஓமோன்போலப் பாசாங்கு செய்து ஆண்மையைப் பறித்து வருகிறது.

நாம் எமது நோய்களைக் குணப்படுத்துகின்ற மருந்துகளைத் தகுந்த மருத்துவரின் பரிந்துரைச் சிட்டைகள் இன்றிக் கொள்வனவு செய்ய முடியாது. ஆனால் உயிர் குடிக்கும் பீடைகொல்லி நஞ்சுகளை இங்கு எவரும் எவ்வளவு வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ள முடிகிறது. யாழ் குடாநாட்டில் ஆண்டுதோறும் விற்பனையாகும் வேளாண் இரசாயனங்களின் உண்மையான அளவை விற்பனை முகவர்களிடமிருநு;து பெறுவது இலகுவான காரியமன்று. எனினும், வேளாண் இரசாயனங்களின் நுகர்வில் யாழ்ப்பாணக் குடாநாடு முன்னணியில் இருக்கிறதென்பது பலரதும் கணிப்பாக உள்ளது. யுத்தம் முடிந்ததும் இடம்பெயர்ந்த விவசாயிகள் மீள்குடியேறுவதற்கு முன்பாகவே வேளாண் இரசாயங்களின் விளம்பரத் தட்டிகள் குடாநாட்டின் விளைநிலங்களில் குடியேறிவிட்டன. ஆனால், இது குறித்து எந்த விழிப்புணர்வும் அற்றவர்களாக நிலத்தடி நீரை மேலும் மேலும் மாசுபடுத்தி நாமும் நஞ்சுண்ட கண்டர்களாக ஆகி வருகிறோம்.

வேளாண் நஞ்சுகளை விட யாழ்ப்பாணத்தவர்களின் அமுதம் முகத்தைச் சுழிக்க வைக்கும் இன்னுமொரு அசிங்கத்தையும் சுமந்தவாறே தொண்டையினுள் இறங்குகிறது. யாழ். மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் (RDHS) உத்தியோகபூர்வ தகவல்களின்படி, 2011ஆம் ஆண்டு யாழ் மாவட்ட சனத்தொகை 6,14,431. இவர்களில் கிராமங்களில் 66.9 விழுக்காடு மக்களுக்கும் நகரங்களில் 73 விழுக்காடு மக்களுக்கும் மாத்திரமே மலசலகூட வசதிகளுன் கூடிய வீடுகள் வாய்க்கப் பெற்றுள்ளன. குடா நாட்டின் சனத்தொகையில் இன்னமும் 30 விழுக்காடு மக்கள் அடிப்படைத் தேவையான மலசலகூட வசதிகளைக் கொண்டிருக்கவில்லை என்பது வேதனை அளிக்கும் உண்மை. இவர்கள் நாள்தோறும் குறைந்தது 35,000 கிலோ எடையுள்ள மலத்தை வெளிகளில் கழித்துக் கொண்டிருக்கின்றனர். இதில் பெரும்பங்கின் போக்கிடம் கடைசியில் நிலத்தடி நீராகவே இருக்கிறது.

DSC_0054-300x199.jpgபயன்பாட்டில் உள்ள நீர்த்தடுப்பு மலசலகூடங்களும் பாதுகாப்பானவை அல்ல. கழிவுக்குழிக்கும் கிணற்றுக்கும் இடையே 15 மீற்றர்களாவது இருக்க வேண்டும். ஆனால், குடா நாட்டின் குடி அடர்த்தி அதற்கு இடம் தராததால் இடைவெளி மிகக் குறைவாகவே உள்ளது. குடி அடர்த்தி ஒரு சதுர கிலோ மீற்றர் பரப்பளவில் 2500 பேர்களுக்கு மேல் தாண்டும்போது கழிவுக்குழிகளின் நம்பகத்தன்மை சரியாகத் தொடங்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நுண்துளைகளைக் கொண்ட சுண்ணாம்புக் கற்கள் ஒரு சிறந்த வடிகட்டி அல்ல என்பதால் கழிவு நீர் தடையின்றிக் கிணற்று நீருடன் சங்கமமாகிறது. குடி நீரில் நைத்திரேற்றின் அளவு அதிகரித்துச் செல்வதற்கு இந்த மலக்கழிவு நீரும் ஒரு காரணமாகும். அத்தோடு மலக் கிருமிகளான இ.கோலி, கோலிஃபோர்ம்கள் போன்றனவும் குடிநீரில் தாராளமாகக் குடியேறுகின்றன. பாசையூர், குருநகர், கொட்டடி, நாவாந்துறைப் பகுதிகளில் கிணற்று நீரைக் குடிப்பதற்கு மாத்திரமல்லளூ வேறு எந்தத் தேவைகளுக்கும் பயன்படுத்த முடியாத அளவுக்கு இந்தக் கிருமிகள் ஆக்கிரமித்துள்ளன.

மக்கள் ஆரோக்கியம் தேடி ஓடி வரும் மருத்துவமனைகளும் குடா நாட்டில் ஆரோக்கியமாக இல்லை. இதற்கு யாழ் போதனா மருத்துவமனையே சாட்சி. இங்கு காணப்படுகின்ற ஐந்து கிணறுகளில் நான்கில் மலக் கிருமிகளே வாசம் செய்வதாக யாழ் பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் முன்னாள் பேராசிரியர் வைத்தியகலாநிதி ந.சிவராஜா தெரிவித்துள்ளார். மருத்துவமனைகளில் நோயாளிகள் பரிசோதிப்புக்காக சேர்ப்பிக்கும் மலம், சிறுநீர், சளி மற்றும் பயன்படுத்தி வீசப்படும் கட்டுத் துணிகள், ஊசிக் குழல்கள், சத்திரசிகிச்சைகளில் அகற்றப்படும் உடல் இழையங்கள் என்று தினமும் ஏராளமான மருத்துவக் கழிவுகள் குவிந்து கொண்டிருக்கின்றன. ஆபத்தான கிருமிகளைக் கொண்டிருக்கக் கூடிய இக்கழிவுகள் எரித்து அகற்றப்பட வேண்டும் (incineration) என்பதும், கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டே வெளியேற்றப்பட வேண்டும் என்பதும் பொதுச் சுகாதார நியதி. ஆனால், யாழ் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அரச மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இத்தகைய கழிவகற்று வசதிகள் இல்லை. இவ்வாறு மலக் கிருமிகள் குடிநீர்க் குவளைகள் வரை வந்து சேர்வதால் தைபோயிட்டு, செங்கண்மாரி, வயிற்றோட்டம் போன்ற நீரினால் காவப்படும் நோய்களின் தாக்குதலில் குடாநாடு முதலிடத்தில் உள்ளது. இலங்கையில் தைபோயிட்டுக் காய்ச்சலால் அவதிப்படுபவர்களில் மூன்றில் ஒருவர் யாழ்ப்பாணத்திலேயே நெருப்பாகக் கொதித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் பொங்கிப் பாய்கின்ற பேராறுகளோ, நிரம்பித் ததும்புகின்ற குளங்களோ இல்லாத நிலையில், வரலாற்றுக் காலம் முதலே ஈழத் தமிழர்கள் அடர் குடியேறியமைக்கும் அவர் தம் நாகரிக நிமிர்வுக்கும் காரணமாக அமைந்தது ‘தொட்டனைத்து ஊறும்’ நிலத்தடி நீர்தான். ஆனால் நாமோ நன்றி மறந்தவர்களாக அந்நீர்மடந்தையை வேளாண் இரசாயனங்களாலும், மலக்கழிவுகளாலும் வன்புணர்வு செய்து வருகின்றோம். இயற்கையின் நீதிமன்றில் அதற்கான தண்டனையாக உயிர் குடிக்கும் நோய்களை அனுபவிக்கத் தலைப்பட்டுள்ளோம்.

குடாநாட்டின் சனத்தொகை இந்நூற்றாண்டின் நடுப்பகுதியில் பத்து இலட்சங்களைத் தொடவிருக்கும் நிலையில், குடாநாட்டின் நீர்வளத்தின் தூய்மையை மீட்புச் செய்யும் நடவடிக்கைகளை விரைந்து செயற்படுத்தாவிடின் மிகப்பெரும் நீரியல் அவலத்தை நாம் சந்திப்பது தவிர்க்க முடியாது போகும்.

- நங்கூரம்

http://www.imainet.org/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/

 

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கட்டுரை. பகிர்வுக்கு நனறி.

 

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
நன்றி.
 
பயனுள்ள தகவல்  
  • கருத்துக்கள உறவுகள்

mika mukkiyamana kaddurai. virivaka karuththu ezutha thamiz velaiseyyavillai.

 

 

மிக முக்கியமான கட்டுரை. விரிவாக கருத்து எழுத தமிழ் வேலை செய்யவில்லை.

 

Edited by nunavilan

தண்ணீர் மாசுபடுதல் பெரிய பிரச்சனை. அத்துடன் அடுத்த பிரச்சனை அதிகரித்த நீர் பாவனையால் உவர் நீர் ஆதல்.  இந்த ஆய்வு கட்டுரைகளை வாசித்திருந்தேன். அங்கிருக்கும் மிக குறைந்த வசதிகளை வைத்து சில பிரச்சனைகளை அணுக முற்பட்டதற்கு ஆய்வு செய்தவர்களை பாராட்ட வேண்டும். ஆனால் இன்னும் ஆய்வுகளும் சுழல் மாசுபடல், அதனால் வரும் பிரச்சனைகளை மக்களுக்கு அறிய தர செய்யும் நடவடிக்கைகளும் தேவை.  

 

மேலே உள்ள கட்டுரையில் குறிப்பிட்ட ஆய்வாளரின் கட்டுரை ஒன்றை முன்னர் எழுதிய தண்ணீர் உவராதல் பற்றிய பதிவில் இணைத்தாக நினவு.

நீண்ட கால யாழ்ப்பான பிரச்னை பற்றிய இந்த விழிப்புணர்வுக் கட்டுரைக்கு நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.