கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம் அடி தங்கமே தங்கம்
கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம்
எண்ணம் உரைத்துவிடில் தங்கமே தங்கம் - பின்னர்
ஏதெனிலும் செய்வமடி தங்கமே தங்கம்! (கண்ணன் மனநிலையை..)
கன்னிகை யாயிருந்து தங்கமே தங்கம் -- நாங்கள்
காலங்கள் கழிப்பமடி தங்கமே தங்கம்
அன்னிய மன்னர் மக்கள் பூமியிலுண்டாம்--என்னும்
அதனையும் சொல்லிடடி தங்கமே தங்கம் (கண்ணன் மனநிலையை..)
ஆற்றங்கரை அதனில் முன்னம் ஒருநாள் - எனை
அழைத்துத் தனி இடத்தில் பேசியதெல்லாம்
தூற்றி நகர் முரசு சாற்றுவேன் என்றே
சொல்லி வருவையடி தங்கமே தங்கம்! (கண்ணன் மனநிலையை..)
நேர முழுதிலும் அப்பாவி தன்னையே - உள்ளம்
நினைந்து மறுகுதடி தங்கமே தங்கம்
தீர ஒருசொல் இன்று கேட்டு வந்திட்டால்
பின்பு தெய்வம் இருக்குதடி தங்கமே தங்கம்! (கண்ணன் மனநிலையை..)