துரோகத்தின் நாட்காட்டி : நாள் 9, சித்திரை 2004
தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணிகள் வாகரை நோக்கி முன்னேற்றம்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணிகள் வெருகல் ஆற்றினைக் கடந்து வாகரை நோக்கி முன்னேறிவருவதாக அப்பகுதியிலிருந்து வாழைச்சேனையை வந்தடைந்த வாகரை வாசிகள் தெரிவித்தனர். விசேட தாக்குதல் அணிகள் தலைமைதாங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் புலிகளின் தாக்குதல் அணிக்கு பின்புலத்திலிருந்து ஆட்டிலெறிச் சூட்டாதரவும் வழங்கப்பட்டிருக்கிறது. கருணா - துணைராணுவக் குழுவினருக்கெதிரான நடவடிக்கைகளின்பொழுது, இக்குழுவின் வாகரைப் பொறுப்பாளர் ஜெயம் காயப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வாகரையிலிருந்து வடக்கே ஆறு கிலோமீட்டர்கள் தொலைவிலுள்ள பால்ச்சேனைப் பகுதியில் புலிகள் தற்போது தமது நிலைகளை அமைத்துவருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
கருணா துணை ராணுவக்குழு - பிள்ளையான் - கருணா - ஜெயம்
கருணா துணை ராணுவக்குழுவுக்கெதிரான நடவடிக்கை தொப்டங்கியதிலிருந்து இதுவரையில் 300 இற்கு அதிகமான இளவயதுப் போராளிகள் சண்டையிடாது புலிகளிடம் சரணடைந்திருக்கிறார்கள். இவர்கள் ஆற்றின் தென்பகுதியிலும், வாகரைப்பகுதியிலும் கருணாவினால் பலவந்தமாக நிலைவைக்கப்பட்டிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. புலிகளின் அணிகளின் தளபதிகளில் ஒருவர் இச்சிறுவர்கள் பற்றி கூறுகையில், "அவர்களின் பெற்றோருடன் தொடர்புகொண்டிருக்கிறோம், விரைவில் அனைவரும் அவர்களது வீடுகளுக்குத் திரும்பவிருக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.
இதேவேளை கருணா துணை ராணுவக்குழுவினரால் வாகரைப் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டிருந்த பல மோட்டார் செலுத்திகளும் சரணடைந்த போராளிகளால் புலிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. அதேவேளை, வாகரையிலிருந்து 12 கிலோம்மீட்டர்கள் தொலைவில் கடலையண்டி அமைந்திருந்த கருணாவின் பாரிய தளம் ஒன்றும் புலிகளால் கைப்பற்றப்பட்டிருக்கிறது. கதிரவெளிப்பகுதியில் முகாமிட்டிருந்த கருணா துணைராணுவக்குழுவின் முக்கியஸ்த்தர் "மார்க்கானின்" நிலைபற்றி இதுவரை தகவல்கள் வரவில்லை.
இதேவேளை கருணாவின் சகோதரரான, துணை ராணுவக்குழு முக்கியஸ்த்தர் ரெஜி இந்தத் தாக்குதல்களிலிருந்து தப்பிவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கருணா துணை ராணுவக்குழுவின் வாழைச்சேனைக்கு வடக்கேயான மாங்கேணியிலிருந்து வெருகல் வரையான பிரதேசத்தின் பொறுப்பாளராக இவர் கருணாவால் நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. தாக்குதல்களின் பொழுது தப்பிவந்த துணை ராணுவக் குழுவினருடன் இவரும் சேர்ந்து காலையில் வாகரைப் பகுதியை வந்தடைந்தார் என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதுவரை நடந்த மோதல்களில் புலிகள் தரப்பிலும், துணை ராணுவக் குழு தரப்பிலும் மொத்தமாக எட்டுப்பேர் மரணமடைந்ததாகச் செய்திகள் கூறுகின்றன.
காயப்பட்ட துணைராணுவக்குழுவினரில் 7 பேர் வாழைச்சேனை வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்டதாகவும், அதில் இருவர் மரணிக்க, மீதிப்பேரை கருணா குழு மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு ராணுவத்தினரின் உதவியுடன் கொண்டுசென்றதாகவும் வாழைச்சேனை வைத்தியசாலை அதிகாரிகள் கூறினர்.
இதேவேளை வாகரைப்பகுதியில் நடந்த மோதல்களில் காயப்பட்ட 5 பெண்கள் அடங்கலாக 8 துணை ராணுவக்குழுவினர் மட்டக்களப்பு வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்டிருக்கின்றனர்.