துரோகத்தின் நாட்காட்டி : நாள் 25, மார்ச் 2004
கிழக்கு மாகாணப் போராளிகளுக்கு கருணாவின் துரோகத்தனம் பற்றிய விளக்கத்தினை அளிக்கும் புலிகள்
கருணாவின் முறைகேடுகள் பற்றி கிழக்கு மாகாணப் போராளிகளுக்கும் பிரிவுத் தலைவர்களுக்கும் புலிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
"தனது முறைகேடுகளையும், இயக்கத்திற்கெதிரான செயற்பாடுகளையும் மூடி மறைப்பதற்காக கிழக்கு மாகாண மக்களையும், போராளிகளையும் கருணா திட்டமிட்டே தேசியத் தலைமையிடமிருந்து பிரித்து வைத்திருந்ததுடன், அவர்கள் தலைமையினைத் தொடர்புகொள்வதையும் தடுத்து வந்திருக்கிறார். மனச்சாட்சிக்கு விரோதமான அவரது நடவடிக்கைகள் பற்றியும், போராட்டத்திற்கு மக்களால் அளிக்கப்பட்ட பெருமளவு பணத்தினை அவர் களவாடியது பற்றியும், இயக்கத்தினுள் பலரைத் தனது சுயநலனிற்காகக் கொன்றுதள்ளியதுபற்றியும் விசாரிப்பதற்காகவே அவரை வன்னிக்கு அழைத்திருந்தோம்".
"தனது முறைகேடுகளுக்கான தண்டனைகளுக்குப் பயந்தே கருணா வன்னிக்குச் செல்லாது தேசியத் தலைமை பற்றியும், விடுதலைப் புலிகள் பற்றியும் மிகவும் தவறான பிரச்சாரத்தை கிழக்கில் மேற்கொண்டு வருகிறார்".
"கருணா எனும் துரோகிக்கெதிரான தண்டனை நடவடிக்கைகளை எதிர்க்கும் எவரும் தமிழ்த் தேசிய இலட்சியத்திற்கெதிரான துரோகியாகவே கருதப்படுவீர்கள். தேசியத் தலைமைக்கு எப்பொழுதும் விசுவாசமாக இருப்போம் என்று உறுதிப்பாடு எடுத்து இயக்கத்தினுள் சேர்ந்த அனைத்துப் போராளிகளும் அதனை நினைவிலிருத்தி, தமது அறியாமையினால் இதுவரை கருணாவுக்கு ஆதரவாக இருப்பின், உடனடியாக அவரிடமிருந்து தூர விலகி விடுமாறும் கேட்டுக்கொள்கிறோம்". என்றும் கேட்கப்பட்டிருக்கிறது.
புலிகளின் அறிக்கையின் முழு வடிவமும் இதோ.
"அன்பிற்குறிய மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட பிரிவுத் தலைவர்களே, போராளிகளே"
"கருணாவின் முறைகேடான நடத்தைகள் எமது மண்ணிற்கும் மாவீரர்களுக்கும் அபகீர்த்தியை உண்டுபண்ணியிருக்கும் என்பதை இப்போது புரிந்துகொண்டுள்ள நீங்கள், சரியான பாதையினைத் தெரிவுசெய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். தனது முறைகேடுகளை மூடிமறைப்பதற்காக கருணா பிரதேசவாதம் எனும் நஞ்சினைக் கையிலெடுத்திருப்பதோடு, அழிவினைத் தரும் யுத்தம் ஒன்றிற்குள் மொத்த தமிழினத்தையும் தள்ளியிருக்கிறார்"
"தனது முறைகேடுகளையும், இயக்கத்திற்கெதிரான செயற்பாடுகளையும் மூடி மறைப்பதற்காக கிழக்கு மாகாண மக்களையும், போராளிகளையும் கருணா திட்டமிட்டே தேசியத் தலைமையிடமிருந்து பிரித்து வைத்திருந்ததுடன், அவர்கள் தலைமையினைத் தொடர்புகொள்வதையும் தடுத்து வந்திருக்கிறார். மனச்சாட்சிக்கு விரோதமான அவரது நடவடிக்கைகள் பற்றியும், போராட்டத்திற்கு மக்களால் அளிக்கப்பட்ட பெருமளவு பணத்தினை அவர் களவாடியது பற்றியும், இயக்கத்தினுள் பலரைத் தனது சுயநலனிற்காகக் கொன்றுதள்ளியதுபற்றியும் விசாரிப்பதற்காகவே அவரை வன்னிக்கு அழைத்திருந்தோம்".
"மீனகத்தில் சில போராளிகள் முன்னிலையிலும், சில பொதுமக்கள் முன்னிலையிலும் தான் புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து செயற்படப்போவதாகவும், இனிமேல் தானே கிழக்கு மாகாணத்தின் தலைவராக இயங்கப்போவதாகவும் அறிவித்திருக்கிறார். தேசியத் தலைமைக்கு தமது விசுவாசத்தினைக் காட்டும் உறுதிமொழியினை பல்லாண்டுகளாக மாவீரரகளும், போராளிகளும் எடுத்துவரும் வழிமுறையினை இனிமேல் செயற்படுத்தப்போவதில்லையென்றும் அறிவித்திருக்கிறார்".
"கருணா எமது தேசியக் கொடியினை அவமதித்துள்ளதோடு, உலகெங்கும் தமிழர்களால் வணக்கப்படும் மாவீரர்களையும் கொச்சைப்படுத்தியிருக்கிறார். தேசியத்தலைவரின் உருவப்படத்தினையும், உருவ பொம்மையினையும் எரிக்குமாறும் போராளிகளை வற்புறுத்தியிருக்கிறார். தனது அண்மைய செவ்விகளில் தமிழ்த் தேசியத்தை இழிவாகவும், மிகவும் அபத்தமாகவும் பேசிவருகிறார். தனது நலனுக்காகவும், பாதுகாப்பிற்காகவும் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான தமிழர்களை கொன்றுகுவித்த எதிரிகளுடனும், ராணுவ அதிகாரிகளுடனும் மிக நெருக்கமான சிநேகத்தை அவர் இப்போது கொண்டிருக்கிறார். தமிழ்த் தேசியத்தினை ஆதரிக்கும் பத்திரிக்கைகளைக் கொழுத்தியும் முற்றாகத் தடைசெய்தும் தனது துரோகத்தனத்தினை மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட மக்களிடமிருந்து மறைக்க கருணா முயன்று வருகிறார்".
"மேற்சொன்ன முறைகேடுகள் எமது இயக்கக் கொள்கைகளுக்கும், விதிகளுக்கும் முரணானது என்பதால் இவற்றுக்குச் சரியான தண்டனை வழங்கப்படவேண்டும் என்பது நீங்கள் அறிந்ததே. எமது தலைவரால் கருணாவுக்கு வழங்கப்பட்ட மன்னிப்பினை கருணா உதாசீனம் செய்திருக்கிறார். மட்டக்களப்பு - அம்பாறை மக்களை இல்லாத பிரதேசவாதச் சிந்தனையில் ஆழ்த்திவைத்திருக்கும் கருணா தனது சுகபோக வாழ்வினை அனுபவித்துவருகிறார்".
" தனது முறைகேடுகளை மறைக்க கருணா தொடர்ந்தும் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட மக்களை ஏமாற்றுவதை எமது தேசியத் தலைமை இனிமேலும் அனுமதிக்கப்போவதில்லை. மானிடத்தின் முன்னால் ஒரு குற்றவாளியாகவும், துரோகியாகவும் நிற்கும் கருணா, தனது தவறுகளை மறைக்க உங்களைப் பகடைக் காய்களாகவும், கவசமாகவும் பாவிக்கிறார். கருணாவின் சூழ்ச்சிக்கு ஒரு போராளியேனும் பலியாகிவிடக் கூடதெனும் எமது தேசியத் தலைமையின் உண்மையான கரிசணையினைப் புரிந்துகொள்வீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்".
" தனது சூழ்ச்சிபற்றித் தெரியாத அப்பாவிப் போராளிகளையும், மக்களையும் பாவித்து எமது தேசிய விடுதலைப் போராட்டத்திற்கெதிராகச் செயற்பட்டுவரும் கருணா எம்மக்களின் விடுதலைக்கெதிரான துரோகிகளோடும், எதிரிகளோடும் கைகோர்த்திருக்கிறார். எமது மாவீரர்களினதும் போராளிகளினதும் தியாகங்களும், குருதியும் கருணாவினால் இன்று கேவலப்படுத்தப்பட்டு வருகின்றது. எமது தேசத்தையும் மக்களையும் காப்பதற்காக கருணாவை எமது மண்ணிலிருந்து அகற்றும் முடிவினை நாம் எடுத்திருக்கிறோம்".
“எமது போராளிகள் கருணாவின் சூழ்ச்சிகளைப் புரிந்துகொண்டு அவரை விட்டு விலகியிருக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். கருணாவின் துரோகத்திற்கெதிராக தேசியத்தலைமை எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக நிற்போர் தேசியத்திற்கெதிரான துரோகிகளாகக் கணிக்கப்படுவர் என்பதையும் கூறிக்கொள்கிறோம். தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரனுக்கு விசுவாசமாக இருப்போம் என்கிற உறுதிப்பாடுடன் நீங்கள் இணைந்திருக்கிறீர்கள் என்பதும், உங்களின் பெற்றோர் இதனடிப்படையிலும்தான் உங்களை எம்மோடு இணைத்திருக்கிறார்கள் என்கிற வகையிலும் உண்மையினை அறியது கருணாவுடன் இன்று நிற்கும் போராளிகள் உடனடியாக அவரை விட்டு விலகுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கருணாவை விட்டு வெளியேறும் போராளிகள் தங்களது குடும்பங்களோடு இணைவதற்கான அனுமதியினை எமது தேசியத் தலைவர் வழங்கியிருக்கிறார் என்பதையும் இத்தாள் அறியத்தருகிறோம்.
“எமது வேண்டுகோள்களுக்குப் பின்னர் எந்தவொரு போராளியோ கருணாவின் சூழ்ச்சிகளுக்கும் துரோகத்தனங்களுக்கு ஆதரவாக நிற்பதென்று முடிவெடுத்தால், அவர்களின் முடிவிற்கு அவர்களே பாத்திரவான்களாக இருப்பார்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம். கருணாவின் துரோகத்திற்கு ஆதரவாக நின்று மரணிக்கும் எந்தவொரு போராளிக்கும் மாவீரருக்கான அந்தஸ்த்து ஒருபோதும் வழங்கப்படமாட்டட்து என்பதனையும் கூறிக்கொள்ள விரும்புகிறோம்".
“தாயக விடுதலைக்காக இயக்கத்தில் இணைந்த போராளிகள் கருணா எனும் துரோகியினதும், அவரது கொலைக்குழுவினதும் நலத்திற்காக மரணிக்க வேண்டுமா என்பதை ஒருகணம் சிந்தியுங்க்கள். இன்று கருணாவுக்கு ஆதரவாக நிற்கும் பிரிவுத்தளபதிகள் பொறுப்புணர்வுடன் சிந்தித்து அவரிடமிருந்து விலகும் முடிவினை உடனடியாக எடுக்கவேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் சரித்திரத்தில் அவர்கள் மேல் விழவிருக்கும் பழிச்சொல்லிலிருந்து அவர்கள் தப்பித்துக்கொள்ள முடியும்.
“மட்டக்களப்பு - அம்பாறைப் போராளிகளின் வீரம்செறிந்த போராட்டச் சரித்திரம் கருணா எனும் இனத்துரோகியினால் களங்கப்படுவதை அனுமதிக்கக் கூடாது. நாம் அனைவரும் ஒன்றாகச் செயற்படுவதன் மூலம் கெளரவத்துடனும் தன்மானத்துடனுன் தலைநிமிர்ந்து வாழ்வோம்"
துரோகத்தின் நாட்காட்டி : நாள் 26, மார்ச் 2004
யோசேப் பரராஜசிங்கத்தை தேர்தலில் நிற்கவேண்டாம் என்று மிரட்டிய கருணா துணை ராணுவக்குழு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான வேட்பாளரான யோசேப் பரராஜசிங்கத்தை மட்டக்களப்பில் தேர்தல் பிரச்சாரத்தை உடனே நிறுத்துமாறு கருணா துணை ராணுவக்குழு அச்சுருத்தல் விடுத்திருக்கிறது.
தமது கோரிக்கையினை ஏற்றுக்கொண்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதை நிறுத்தாவிட்டால் விபரீத விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று இவ்வாயுதக்குழு மிரட்டியிருக்கிறது.