துரோகத்தின் நாட்காட்டி : நாள் 15, கார்த்திகை 2005
தமிழர் தாயகக் கோட்பாடு, சுயநிர்ணய உரிமை ஆகியவற்றை நிராகரித்த ராஜபக்ஷ
நாட்டின் ஜனாதிபதியாகப் பதவியேற்றிருக்கும் மகிந்த ராஜபக்ஷ தமிழரின் தாயகக் கோபாட்டையும், சுயநிர்ணய உரிமையினை அடியோடு நிராகரிப்பதாகக் கூறியிருப்பதுடன் இனவாதக் கட்சிகளான ஜாதிக ஹெல உறுமய மற்றும் ஜனதா விமுக்திப் பெரமுன ஆகியவற்றுடன் தான் செய்துகொண்ட ஒப்பந்தத்துக்கு அமைய மகிந்த சிந்தனையின் கீழேயே ஆட்சிசெய்யப்போவதாகவும் பாராளுமன்றத்தில் நாட்டு மக்களுக்கு தான் ஆற்றிய முதலாவது உரையில் தெரிவித்தார்.
நடைமுறையில் இருக்கும் புலிகளுடனான சர்வதேச சமாதான ஒப்பந்த முயற்சிகளை முற்றாக மறுதலித்த அவர், புலிகளுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடப்போவதாகவும் தெரிவித்தார்.
"பூர்வீகத் தாயகம், சுயநிர்ணய உரிமை என்பவற்றின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட இனம் தனக்கான பகுதியை இந்த நாட்டிலிருந்து பிரித்து எடுத்துச் செல்வதை நான் ஒருபோதும் அனுமதியேன். நாட்டின் அரசியல் சட்டத்திற்கு அமைவாக எந்தவொரு இன மக்களும், நாட்டின் எப்பகுதியிலும் சுதந்திரமாகச் சென்று வாழவும், அனைத்து உரிமைகளை அனுபவிக்கும் கூடிய வகையில் இந்நாட்டினை அமைக்கப்போகிறேன்" என்று தெரிவித்தார்.
"தேசிய இனப்பிரச்சினைக்கு சமாதானத் தீர்வொன்றினை ஏற்படுத்தும் நோக்கத்திற்கு எனது அரசு முன்னுரிமை வழங்கும். போர் இல்லாமல் பேச்சுவார்த்தை மூலமே தீர்வினைப் பெற விரும்புகிறோம். அவ்வாறான பேச்சுவார்த்தைகள் சுலபமானதாகவோ அல்லது எளிமையானதாகவோ இருக்காதென்பது எனக்குத் தெரியும். ஆனால், வேறு வழியில்லை. புலிகளுடன் நேரடியாகப் பேசுவதற்கு நாம் தயாராகவே உள்ளோம்".
"இனப்பிரச்சினைக்கான தீர்வு இப்பிரச்சனையில் சம்பந்தப்பட்டுள்ள அனைத்துத் தரப்பினருடனான கலந்துரையாடல்கள் மூலமும், விருப்பங்களின் மூலமே கொண்டுவரப்படமுடியும் என்பதுடன், இந்தத் தீர்வு நாட்டின் பெரும்பான்மை மக்களினது ஆதரவினையும் பெற்றிருப்பது அவசியமானதாகும்".
"எமது தீர்வினை அடைவதற்கான வழிமுறைகளாக பின்வருவனவற்றை நாம் முன்வைக்கிறோம்".
"நிரந்தர அமைதியினை அடைவதற்கு, நாட்டின் அனைத்துத் மக்களினதும் விருப்பங்கள் அறியப்படல் அவசியம். அதனடிப்படையிலேயே எமது சமாதான நகர்வுகள் அமையப்பெறுகின்றன".
"தற்போது நடைமுறையில் உள்ள யுத்த நிறுத்த ஒப்பந்தம் மீள்பரிசீலினை செய்யப்பட்டு மனிதவுரிமைகளைப் பேணுவதற்கும், சிறுவர்களைப் படையில் இணைப்பதைத் தடுப்பதற்கும், தேசியப் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கும், பயங்கரவாத நடவடிக்கைகளைத் தடுப்பதற்கும், போரினாலும் சுனாமியினாலும் பாதிக்கப்பட்ட மக்களை மீளக் கட்டியெழுப்புவதற்கும் ஏற்றவகையில் மீள அமைக்கப்படுவதோடு, யுத்தநிறுத்த கண்காணிப்பினை தெளிவான , வெளிப்படையான முறையில் செய்யவிருக்கின்றோம்".
"முன்னைய அரசாங்கத்தின் சமாதான நடவடிக்களின் தோல்வியென்பது அது வெறுமனே அரசுக்கும் புலிகளுக்கும் இடையில் மட்டுமே செய்துகொள்ளப்பட்டதனால் உருவானது. ஆகவே , நாம் பிரச்சினையில் சம்பந்தப்பட்ட அனைவரையும் இம்முயற்சிகளில் ஈடுபடுத்தவிருக்கிறோம்".
"இம்முயற்சிகளில் பங்குபற்றுவதற்கு உண்மையானதும், வெளிப்படையானதுமான வரவேற்பினை நாம் இந்நாட்டின் எதிர்க்கட்சிக்கு விடுக்கிறோம். முஸ்லீம்களுக்கும் இப்பேச்சுவார்த்தைகளில் பங்குகொள்ள சந்தர்ப்பம் அளிக்கப்படும். ஒரு வரையறுக்கப்பட்ட காலத்திற்குள் அனைத்துத் தரப்பினரையும் உள்வாங்கிக்கொண்டே இந்த பேச்சுவார்த்தை நடைபெறும். இந்தியா, சர்வதேசம், ஐ நா ஆகிய அமைப்புக்கள் மற்றும் நாடுகளின் இப்பேச்சுவார்த்தைகளிலான பங்களிப்பென்பது சரியான முறையில் பாவிக்கப்படுவதோடு, அவர்களின் பங்களிப்பு பேச்சுவார்த்தையினை சரியான வழியில் நகர்த்திச் செல்ல பயன்படுத்தப்படும்".
"பிரிக்கப்படாத இறமையுள்ள நாட்டிற்குள், எல்லாச் சமூகத்தினரும் சமமான வழியில் உரிமைகளை அனுபவிக்கும் வகையில் நாட்டின் பாதுகாப்பும், இறைமையும், பிராந்திய ஒருமைப்பாடும் பேணப்படும் வகையில் நாட்டின் கட்டுமாணங்கள் பலப்படுத்தப்படும்".
"பூர்வீகத் தாயகம், சுயநிர்ணய உரிமை ஆகியவற்றைப் பாவித்து ஒரு இனம் எமது தாய்நாட்டைக் கூறுபோட அனுமதிக்காத அதேவேளை, அனைத்து மக்களும் நாட்டின் எப்பகுதியிலும், தமது வாழ்வை அமைத்திடவும், உரிமைகளை அனுபவிக்கவும் வழிசெய்யப்படும்".
"இன்று நடைமுறையில் இருக்கும் புலிகளுடனான சுனாமி செயற்த்திட்டங்களுக்குப் பதிலாக, அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் கட்டமைப்பொன்றை மாகாணசபைகள், பிரதேச சபைகள், அரசியல் கட்சிகள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் உருவாக்குவோம்".
"வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மீள்கட்டுமாணத்தை ஆரம்பிக்கும் அதேவேளை, இப்பகுதிகளில் இனரீதியிலான பாகுபாடின்றி அனைத்து மக்களையும் மீளக் குடியமர்த்துவோம்" என்றும் அவர் கூறினார்.