துரோகத்தின் நாட்காட்டி : 25 ஆனி 2006
ராஜபக்ஷ முன்வைக்கும் நேரடி ஒப்பந்தத்தினை ஏற்றுக்கொண்டால் கருணா குழுவின் ஆயுதங்களைக் களைய அரசு தயார் - சண்டே லீடர் கட்டுரை
கொழும்பிலிருந்து வெளிவரும் பிரபல வார பத்திரிக்கையான சண்டே லீடரில் வந்திருக்கும் கட்டுரையின்படி, யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன் பத்திரிக்கையின் ஆசிரியரான வித்தியாதரனூடாக புலிகளுக்கு மகிந்த ராஜபக்ஷ ஒரு செய்தியினை அனுப்பியிருப்பதாகவும், அச்செய்தியின்படி தன்னால் முன்வைக்கப்படும், நோர்வேயின் மத்தியஸ்த்தத்தினை தவிர்த்து அரசும் புலிகளும் நேரடியாக ஈடுபடக்கூடிய சமாதான ஒப்பந்தத்தினை ஏற்றுக்கொண்டு இருவாரங்களுக்கு வன்முறைகளை முழுமையாகக் கைவிட்டால் கருணா குழுவினரின் ஆயுதங்களைத் தான் களைந்துவிடத் தயாராக இருப்பதாக மகிந்த கூறியிருப்பதாகத் தெரியவருகிறது.
மகிந்தவுக்கும், ஆசிரியர் வித்தியாதரனுக்கும் இடையே நடத்தப்பட்ட இந்த பேரம்பேசல் பற்றி உதயன் அலுவலகமும் உறுதிப்படுத்தியிருக்கிறது. அத்துடன், மகிந்தவின் செய்தியை புலிகளுக்கு உதயன் தலைமைப்பீடம் தெரியப்படுத்திவிட்டதாகவும், அதற்குரிய பதிலினை புலிகளிடமிருந்து பெற்றுக்கொண்டதாகவும் அது மேலும் உறுதிப்படுத்தியிருக்கிறது. புலிகளின் பதில்பற்றிப் பேசமறுத்த உதயன் நிர்வாகம், அப்பதில் மகிந்தவிடம் திங்கள் காலை கையளிக்கப்படும் என்றும் கூறியிருக்கிறது.
"புலிகளும் இராணுவமும் இரண்டு வாரங்களுக்கு அனைத்து வன்முறைகளையும் கைவிட்டால், அவர்கள் புதிதாக பேச்சுவார்த்தைமுயற்சிகளைத் தொடங்கமுடிவதோடு, நம்பிக்கையினை மீளவும் கட்டியெழுப்பலாம், நாம் நேரடியாகப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட இது உதவுவதோடு, தேவையற்ற மூன்றாம் தரப்பான நோர்வேயின் பிரசன்னத்தையும் இல்லாதொழிக்கலாம்" என்று மகிந்த வித்தியாதரனிடம் கூறியதாக சண்டே லீடர் தெரிவிக்கிறது.
"நாம் மிகவும் பலமான நிலையிலேயே இருக்கிறோம், எம்மால் புலிகளிடமிருந்து வரக்கூடிய எந்தச் சவாலையும் வெற்றிகொள்ளமுடியும், ஆனால் தேவையற்ற இரத்தம் சிந்துதலைத் தடுக்கவே நான் புலிகளுக்கு இந்த சந்தர்ப்பத்தினை அளிக்கிறேன்" என்று மகிந்த மேலும் கூறியதாக சண்டே லீடர் தெரிவிக்கிறது.
"புலிகள் அரச தரப்பிடம் இருந்து எதை எதிர்பார்க்கிறார்கள் என்பதை காலதாமதமின்றி உடனடியாக எமக்கு அறிவிக்கவேண்டும், அத்துடன் இரு வாரகாலத்திற்கு தமது அனைத்து வன்முறைகளையும் கைவிடவேண்டும்" என்றும் மகிந்த வித்தியாதரனிடம் கூறியதாகத் தெரியவருகிறது.
"கருணா குழுவினரின் ஆயுதங்களை உடனடியாகக் களைந்து அவர்களை ரோட்டில் விடவேண்டும் என்று கேட்கவேண்டாம் என்று புலிகளிடம் சொல்லுங்கள், ஏனென்றால் நான் அபடி அவர்களை வீதியில் விட்டால் புலிகள் உடனேயே அவர்களைக் கொன்றுவிடுவார்கள்.முதல் இரு வாரகால யுத்த நிறுத்தத்தின் பின்னரே, நிலைமையினை ஆராய்ந்து அவ்வாறானதொரு முடிவினை என்னால் எடுக்கவியலும். இந்த இருவார காலத்தில் கருணா குழுவும் புலிகள் மீதான தாக்குதல்களை நடத்ததாதவாறு என்னால் ஏற்பாடு செய்யமுடியும்" என்றும் வித்தியாதரனிடம் அவர் கூறியதாகத் தெரிகிறது.
"கணம் ஜனாதிபதி அவர்களே, புலிகளுக்கும் ராணுவத்திற்கும் இடையே அகப்பட்டு நசுக்கப்படுகிறீர்கள் என்று நீங்கள் கூறியதை நான் இங்கு வருமுன்னர் அன்டன் பாலசிங்கத்துடன் தொலைபேசியில் கூறினேன். அதற்குச் சிரித்துக்கொண்டே பதிலளித்த அன்டன் பாலசிங்கம், முப்படைகளின் தளபதியும் நீங்கள்தான், ராணுவமும் நீங்கள்தான், பாதுகாப்புச் செயலாளரின் சகோதரரும் நீங்கள்தான், அப்படியிருக்க, நீங்கள் எப்படி ராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையில் அகப்பட்டு நசுங்கிவிடமுடியும் என்று அவர் உங்களிடம் கேட்கச் சொன்னார்" என்று வித்தியாதரன் மகிந்தவிடம் கூறியதாகவும் சண்டே லீடர் கூறுகிறது.
திரு பாலசிங்கம் அவர்களுடன் இச்செய்திபற்றி தமிழ்நெட் இணையம் கேட்டபோது, அவரும் இதனை உறுதிப்படுத்தினார்.
ஆனால், மே மாதம் 23 ஆம் திகதி சமயத் தலைவர்களுடனான சந்திப்பில் தமிழ்ச்செல்வன் கூறும்போது, சிறிலங்கா அரசாங்கத்துடனான எந்தவிதத் தொடர்பாடல்களும் நோர்வேயின் மூன்றாம்தரப்பு மத்தியஸ்த்துடனேயே முன்னெடுக்கப்படும் என்கிற புலிகளின் நிலைப்பாட்டினை மீண்டும் உறுதிப்படுத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது.