துரோகத்தின் நாட்காட்டி : நாள் 16, தை 2007
ஆரையம்பதியில் நிலைகொண்டிருந்த கருணா துணைப்படையினரை வேறு இடத்திற்கு அழைத்துச் சென்ற ராணுவ அதிகாரி
அண்மையில் ஆரையம்பதி - காத்தான்குடி எல்லையில் முஸ்லீம்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைகளையடுத்து தமது ஊரினூடாக கருணா துணை ராணுவக் கூலிகள் சென்றுவருவதனை காத்தான்குடி முஸ்லீம்கள் எதிர்த்ததனையடுத்து அவர்களை வேறு பகுதியொன்றிற்கு மாற்றியிருக்கிறார் இலங்கை ராணுவத்தின் 23 - 3 படையணியின் தளபதி கேர்ணல் முனசிங்க. இப்பகுதியில் விசேட அதிரடிப்படை முகாமுக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த கூலிகளின் முகாமுக்கு வேறு இடத்திலிருந்து இன்னுமொரு தொகுதி கூலிகள் கொண்டுவரப்பட்டிருக்கின்றனர்.
முஸ்லீம் மக்களின் பிரதிநிதிகள், சமயத் தலைவர்கள் ஆகியோர் மட்டுநகர் ராணுவத் தளபதியுடனும், மக்கள் தொடர்பாட்டு அதிகாரியுடனும் சுமார் 3 மணித்தியாலங்கள் இத்துணைப்படைக் கூலிகளை அகற்றுவதுபற்றிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர்.
முஸ்லீம் மக்களுடனான இந்தச் சந்திப்பிற்கு துணைப்படைக் கூலிகளின் முக்கியஸ்த்தர்களும் இராணுவத்தால் அழைத்துவரப்பட்டிருந்தனர்.
காத்தான்குடியில், இராணுவத்தில் அரவணைப்பில் துணைப்படைக் கூலிகள் தங்கவைக்கப்படுமிடத்து, அவர்களின் முகாம்கள் புலிகளின் தாக்குதலுக்கு உள்ளாகலாம் என்றும், அதனை துணைப்படைக் கூலிகளும் ராணுவமும் முஸ்லீம்களுக்கெதிரான நடவடிக்கைகளில் இதனைப் பாவித்து ஈடுபட முயலலாம் என்றும் அச்சம் தெர்வித்தனர். மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பில் துணைப் படைக் கூலிகளால் கடத்தப்பட்டு பின்னர் தலை துண்டிக்கப்பட்ட தமிழ் இளைஞர் ஒருவரின் உடலை துணைப்படையினர் வேண்டுமென்றே காத்தான்குடியில் எறிந்துவிட்டுச் சென்றதைக் குறிப்பிட்ட முஸ்லீம்கள், தமிழர்களுக்கும் முஸ்லீம்களுக்குமிடையிலான மோதல் ஒன்றினை உருவாக்கவே துணைப்படைக் கூலிகள் முயல்வதாக தெரிவித்தனர்.
கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து முஸ்லீம் மக்களும் உடனடியாக இந்த துணைப்படை கூலிகளின் முகாம் அகற்றப்பட வேண்டும் என்று கோரிக்கையினை ராணுவத் தளபதியிடம் முன்வைத்தனர். இதனையடுத்தே அங்கு முகாமிட்டிருந்த துணைப்படையினரை வேறு முகாம்களுக்கு மாற்றிய தளபதி இன்னொரு தொகுதி துணைக் கூலிகளை அங்கே நிறுத்தியுள்ளதாகத் தெரிகிறது.