துரோகத்தின் நாட்காட்டி : நாள் 3 ஆனி, 2008
மேசன் தொழிலாளிகளிடமிருந்து கப்பம் கோரும் பிள்ளையான் கொலைக்குழு
அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் கட்டப்பட்டுவரும் குறைந்த வருமானம் உள்ள குடும்பங்களுக்கான வீடுகளில் பணிபுரிந்துவரும் மேசன் தொழிலாளிகளிடமிருந்து பெருந்தொகையான பணத்தினை பிள்ளையான் கொலைக்குழுவின் உறுப்பினர்கள் கப்பமாக அறவிட்டு வருவதாக அவர்கள் புகார் அளித்துள்ளனர்.
அவுஸ்த்திரேலியா மற்றும் சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகளின் உதவியோடு பலாச்சோலை, தளவாய், சித்தாண்டி, ஏறாவூர்ப்பற்று, செங்கலடி ஆகிய பகுதிகளில் சுமார் 750,000 பெறுமதிகொண்ட 700 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.
வெளிநாட்டு உதவியுடன் இவ்வீடுத்திட்டத்திற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டபோது இத்திட்டம் முழுமையாகத் தம்மிடம் கையளிக்கப்படவேண்டும் என்று பிள்ளையான் கொலைக்குழு வற்புறுத்தி வந்தது நினைவிருக்கலாம். ஆனால், இத்திட்டத்திற்கான நிதியினை வழங்க முன்வந்த நாடுகள் ஒரு துணைராணுவக் கொலைப்படையினரின் கைகளில் தமது நாட்டு மக்களின் வரிப்பணம் சென்றடைவதை விரும்பாதலால் பிள்ளையானின் அன்றைய முயற்சி வெற்றிபெறவில்லை.
பின்னர், இவ்வீடுகளைக் கட்டும் பொறுப்பு அப்பகுதி மேசன் தொழிலாளிகளுக்கு வழங்கப்பட்டு ஒவ்வொருவரும் தலா மூன்று வீடுகளைக் கட்டி முடிக்கவேண்டும் என்றும், அதற்கான செலவினை அரச சாரா நிறுவனம் நேரடியாகவே அவர்களிடம் வழங்கும் என்று தீர்மானிக்கப்பட்டது.
இதையறிந்துகொண்ட பிள்ளையான் கொலைக்குழு இவ்வாறு கட்டப்படும் ஒவ்வொரு வீட்டிலிருந்து குறைந்தது 10,000 முதல் 15,000 ருபாய்கள்வரை தமக்குக் கப்பமாகத் தரப்படவேண்டும் என்று இத்தொழிலாளிகளைக் கட்டாயப்படுத்திப் பண வசூலிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். இவ்வாறு கப்பம் தரப்படாதவிடத்து கட்டப்படும் வீட்டிற்கும், கட்டுமானத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்குமான பாதுகாப்பினை தம்மால் உறுதிப்படுத்தமுடியாதென்றும், மறுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அம்மக்கள் மிரட்டப்பட்டுள்ளனர்.
சுமார் 525 வீடுகள் கட்டப்பட்டு முடிக்கப்பட்ட நிலையில் பிள்ளையான் கொலைக்குழு சுமார் 50 லட்சம் ரூபாய்கள்வரை இதுவரையில் கப்பமாக அறவிட்டுள்ளதாகத் தெரிகிறது.