துரோகத்தின் நாட்காட்டி : நாள் 11, கார்த்திகை 2012
கருணாவினதும் பிள்ளையானினதும் உதவியுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் குடியேறும் 25,000 சிங்களக் குடும்பங்கள்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கருணா மற்றும் பிள்ளையான் அகியோரின் உதவியுடன் சுமார் 25,000 சிங்களக் குடும்பங்களை குடியேற்றும் நடவடிக்கைகளில் அரசு இறங்கியிருப்பதாக மட்டக்களப்பிலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
இதன் முதற்கட்டமாக குறைந்தது 5,000 சிங்களக் குடும்பங்கள் 16 கிலோமீட்டர்கள் நீளமான கடற்கரைப் பகுதியான பாசிக்குடா மற்றும் ஏறாவூர்ப்பற்று பகுதியான சவுக்கடி ஆகிய பகுதிகளில் ஏற்கனவே குடியமர்த்தப்பட்டிருக்கின்றனர்.
முன்னால் கிழக்கு மாகாண முதலமைச்சரும் துணைராணுவக் கொலைக்குழு தலைவருமான பிள்ளையான் மற்றும் அரச துணையமைச்சரும் இன்னொரு துணைராணுவக் கொலைக்குழுத் தலைவருமான கருணா ஆகியோரின் உதவியுடன் இப்பகுதிகளில் வாழ்ந்த தமிழர்கள் விரட்டப்பட்டு, சிங்களவர்கள் மட்டக்களப்பின் மேற்கிலும் கிழக்கிலும் குடியமர்த்தப்பட்டு வருகின்றனர்.
இதேவேளை கோரளைப்பற்று தெற்குப் பகுதியில் அமைந்திருக்கின்ற பெரியமாதவணை பகுதியில் அத்துமீறி நுழைந்து தமிழர்களின் மேய்ச்சல் நிலங்களைக் கையகபடுத்தியிருக்கும் சிங்களக் குடும்பங்களின் எண்ணிக்கை தற்போது 450 இலிருந்து 500 வரை இருக்கலாம் என்று அப்பகுதி மக்கள் கணிப்பிட்டுள்ளனர். அம்பாறை மாவட்டத்தின் தெகியத்தைக்கண்டிய எனும் பகுதியிலிருந்து தற்காலிக விவசாய செய்கைக்கு வருகிறோம் என்கிற பெயரில் இதுவரை இப்பகுதிக்கு வந்த சிங்களக் குடும்பங்கள் ராணுவத்தினரின் உதவியுடன் இப்பகுதிகளில் நிலையான வீடுகளையும், களஞ்சியங்களையும் கட்டிவருவதாகவும் பாதிக்கப்பட்ட தமிழ்ப் பண்ணையாளர்கள் கூறுகின்றனர்.
இதுபற்றி மட்டக்களப்பு அரச அதிபர் ஊடாக மக்கள் ராணுவ அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்தபோது இவ்வாறான சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறவில்லை என்று மறுத்த பிரிகேடியர் ஒருவர், தமது ராணுவம் தற்காலிகமாகத் தங்கியிருக்கும் சிங்கள மக்களுக்கான உதவிகளையே வழங்குவதாக கூறினாலும், தமிழர்களின் நிலங்கள் தொடர்ச்சியாக சிங்கள விவசாயிகளாலும் ராணுவத்தினராலும் நாளாந்த ரீதியில் கையகப்படுத்தப்பட்டுவருவதை பார்த்துக்கொண்டு எதுவும் செய்யமுடியாத கைய்யறு நிலையிலேயே தமிழர்கள் இருக்கின்றனர்.
இதுபற்றி சமூக ஆர்வல்களும், கிழக்கின் கல்விமான்களும் ராணுவ அதிகாரியிடம் பேசியபோது, "தமிழர்களின் காணிகளில் சிங்களவர்கள் குடியேறுவது உண்மைதான். இதனை நீங்கள் அரசாங்கத்திடம் தான் கேட்கவேண்டும். எங்களுக்கு இடப்பட்ட கட்டளையைத்தான் நாம் பின்பற்றமுடியும், முடிந்தால் உங்களின் அரச அதிபரை அரசுடன் பேசச் சொல்லுங்கள்" என்று ஏளனமாகக் கூறியதாகச் சொல்லப்படுகிறது.
ஏறாவூர்ப்பற்று - செங்கலடிப் பகுதியில் புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் சிங்களக் குடியேற்றக் கிராமமான மங்களகம எனும் பகுதியில் குடியேறியுள்ள சிங்களவர்கள் தமிழர்களின் கால்நடைகளைக் கொன்றுவருவதாகவும், புதிதாக ஈணும் கன்றுக்குட்டிகளை களவாடிச் செல்வதாகவும் முறையிடும் தமிழர்கள், தமது முறைப்பாடுகளை பொலீஸார் ஏற்கமறுப்பதோடு, தம்மை விரட்டியடிப்பதாகவும் கவலையுடன் தெரிவித்திருக்கிறார்கள்.
இதேவேளை கோரளைப்பற்று தெற்கு, வெள்ளாவெளி, பட்டிப்பழை, ஏறாவூர்ப் பற்று ஆகிய எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள தமிழக் கிராமங்களில் அத்துமீறிக் குடியேறியுள்ள சிங்களவர்கள், இப்பகுதி அம்பாறை மாவட்டத்தினுள் உள்ளடக்கப்பட்டிருப்பதால், தமிழர்களை இங்கிருந்து அடித்துவிரட்டுவோம் என்று மிரட்டிவருவதாகவும் அப்பகுதிமக்கள் தெரிவிக்கின்றனர்.