கருணாவின் அரசியல் : புரூட்டஸிலிருந்து லெப்பிடஸ் வரை
ஆக்கம் : சச்சி சிறிகாந்தா, பங்குனி 20, 2009
தளம் : இலங்கை தமிழ் சங்கம்
கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரனின் பலவீனங்களுக்கும், அவரது திருகுதாலங்களுக்கும் பணமே முக்கியமான காரணமாக அறியப்பட்டாலும் கூட, அதுபற்றி ஆழமாக சிந்திப்பது அவசியமாகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலமைக்கும் கருணாவுக்குமிடையிலான பிணக்கின் அடிப்படைக் காரணமே தனது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தின் நிதி மீதான தனக்கிருக்கும் தங்குதடையின்றிய அதிகாரம் தொடர்பானது என்று கூறப்படுகிறது. ஆனால், தனது நிதிக் கையாடல்களை மறைப்பதற்கும், அந்த நிதிமீதான தனது பிடியினைத் தொடர்ந்து பேணுவதற்கும் அவர் பாவித்த காரணமே பிரதேசவாதம் என்றால் அது மிகையில்லை.
அப்படியானால், தான் உருவாக்கிய கட்சியிலிருந்து, தனது அடியாளினால் கருணா தூக்கியெறியப்பட்டு, கிழக்கிலிருந்து துரத்தப்படுவதற்குக் காரணம் என்னவாக இருக்கலாம்? அதுகூடப் பணம் தான் !
2002 இலிருந்து 2003 வரையான சமாதானப் பேச்சுவார்த்தைகளில் புலிகளின் சமாதானத் தூதுக்குழுவின் ஒரு உறுப்பினராக கருணா செயற்ப்ட்டுவந்தபோது, சில முக்கிய நாடுகளின் புலநாய்வுத்துறையினரால் விரிக்கப்பட்ட பணத்தின் அடிப்படையிலான தந்திர வலையில் பணத்தாசை பிடித்த கருணா வீழ்ந்தார் என்பது விளங்கிக் கொள்ளக்கூடியதுதான்.
தனது இனத்திற்குத் துரோகம் இழைத்த கருணாவின் அரசியல் வரலாறு கடந்த 5 வருட காலத்தில் எவ்வாறு மாற்றமடைந்திருக்கிறது? கருணா எனப்படும் முரளீதரன் நான்கு குறிப்பிடத்தக்க பெறுபேறுகளைப் பெற்றிருக்கிறார்.
அவற்றில் முதலாவது, புலிகள் இயக்கத்தின் தொடர்ச்சிக்கு தானே தலைமை தாங்குவதெனும் மாயையினைத் தோற்றுவித்திருப்பது. இதில் ஈழத்தமிழருக்கான புதிய தலைவராக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டதும் அடங்கும்.
இரண்டாவது, தானே உருவாக்கிய கட்சியிலிருந்து தனது அடியாளினால் மிகவும் கேவலமான முறையில் வெளியேற்றப்பட்டது.
மூன்றாவது, போலியான கடவுச் சீட்டினைப் பாவித்து இங்கிலாந்திற்குச் சென்று அங்கே குடிவரவுத்துறையினரால் கைது செய்யப்பட்டு 9 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தது.
நான்காவது, இனக்கொலையாளி மகிந்த ராகபக்ஷவைத் தொடர்ச்சியாகத் துதிபாடிவருவதால் மகிந்தவின் பெருத்துவரும் கோமாளிகளின் அமைச்சரவையில் அவர் அடைந்த பிரதியமைச்சர் எனும் பதவி.
ஐந்து வருடங்களுக்கு முன்னர் கருணா பற்றி நான் எழுதியதை ஒருமுறை நினைவுபடுத்த விரும்புகிறேன்,
"தென்னாசியாவின் அரசியலில், அரசியல் சுயநலம் கொண்டவர்கள் தமது சுயநலத்தினை மறைக்கும் ஒரு கோவணமாக புது அரசியல் கட்சிகளைத் தொடங்குவார்கள். தமிழர்களில் புதிதாக கட்சி தொடங்கி, தமிழரின் நம்பிக்கையினைப் பெற்றுக்கொண்டவர் தந்தை செல்வ்நாயகத்திற்குப் பின்னர் எவருமில்லை. ஆனால், செல்வாகூட 1949 இலிருந்து 1956 வரையான காலப்பகுதியில் தனது நம்பகத்தன்மையினை நிலைநாட்ட கடிணமாகப் போராடவேண்டியிருந்தது. ஆனால், மக்கள் நலன் மீது அவருக்கிருந்த அசைக்கமுடியாத அக்கறையும், அதனைப் பெற்றுக்கொடுக்க அவர் பூண்டிருந்த உறுதிப்பாடும் அவருக்கு உதவின. ஆனால், அவருக்குப் பின்னால் வந்த அனைவருமே செல்வாவின் அரசியலைப் போன்று செய்யப் புறப்பட்டு படுதோல்வியையே அடைந்தார்கள் என்பது வரலாறு".
அதன்படி, கருணாவின் வீரப்பிரதாபங்களை புளகாங்கிதப்பட்டு பறைசாட்டுவர்களின் கருத்தைப் பார்க்கலாம்,
2004 ஆம் ஆண்டு பங்குனி மாதத்தில் கருணா புலிகளின் புதிய தலைமை இனிமேல் தானே என்று உரிமை கோரியிருந்தார். கருணாவின் பேச்சாளரின் வாயிலிருந்து வந்து விழுந்த வார்த்தைகளை முழுவதுமாக விழுங்கிக்கொண்ட கொழும்பையும், சென்னையையும் தளமாகக் கொண்டு இயங்கும் கருணா ஆதரவுப் பத்திரிக்கை ஜாம்பவான்கள் புலிகளை இரு பிரிவுகளாக உடைத்து "வன்னிப் புலிகள்" என்றும் மட்டு புலிகள்" என்றும் அழைத்து சுய இனபம் அடைந்துகொண்டார்கள்.
பாங்கொக்கை தளமாகக் கொண்டியங்கும் ஏசியன் ட்ரிபியூன் பத்திரிக்கையின் கே டி ராஜசிங்கம், கருணாவின் ஊதுகுழல் வரதன் ஆகியோர் கருணாவின் தலமையிலான "மட்டு புலிகள்" பிரபாகரன் தலைமையிலான "வன்னிப் புலிகள்" ஐக் காட்டிலும் பலமானவர்கள் என்று பிரச்சாரங்களை ஏவிக்கொண்டிருந்தார்கள். கருணாவின் பேச்சாளரான வரதன் என்பவர் கருணாவுடன் குறைந்தது 6,000 போராளிகள் இருப்பதாக சத்தியம் செய்துவந்தார்.
அவ்வருடத்தின் ஐப்பசி மாதத்தில் கருணா தான் ஒரு அரசியல் கட்சியை ஆரம்பிக்கப்போவதாகவும், அதன் பெயர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்றும் அறிவித்தார். கருணாவின் கட்சியின் பெயரில் இருக்கும் சொற்கள் மிகக் கவனமாக தெரிவுசெய்யப்பட்டிருப்பதை நீங்கள் அவதானித்திருக்கலாம். கருணாவை அன்று வழிநடத்தி வந்தவர்கள் இப்பெயரின் மூலம், புலிகளுக்கான புதிய தலைவராக கருணாவைப் பிரகடனப்படுத்தியதுடன், தமிழரின் இலட்சியமான ஈழம் எனும் சொல்லையும் கருணா நிராகரித்துவிட்டார் எனும் கருத்துருவாக்கத்தையும் ஏற்படுத்தியிருந்தனர். ஆனால், இவை எதுவுமே தமிழ் வாக்காளர்களைக் கவரவில்லை என்பது வேறுவிடயம்.
இலங்கையில் தனது ஆதரவாளர்களுக்கு ஒரு முகத்தினையும், எதிராளிகளுக்கு இன்னொரு முகத்தினையும் காட்டி பத்தி எழுதும், அரசியல் வியாபாரியான தயான் ஜயதிலக்க தான் கருணா பற்றி பெருமையாக எழுதிய பந்தியொன்றில் இவ்வாறு குறிப்பிடுகிறார்,
"கருணா நான்குவகையான வெற்றிகளைப் பெற்றிருக்கிறார். முதலாவது இன்றுவரை உயிருடன் இருப்பது. இரண்டாவது சித்திரை மாதத்தில் கொழும்பிற்குப் பின்வாங்கிச் சென்றது, கொட்டாவைப் பகுதியில் தனது சகாக்காளில் எண்மரைப் பலிகொடுத்தது, தனது சகோதரர் ரெஜியை இழந்தது ஆகிய பின்னடைவுகளுக்குப் பின்னரும் கூட தொடர்ந்தும் இயங்கிவருவது. மூன்றாவது சர்வதேசத்தில் பிரபலமானவராக, பலராலும் பேசப்படுபவராக மாறியது. நான்காவது தனது ராணுவ வல்லமையினையும், சாதுரியத்தையும், அரசியல் வெற்றிக்காகப் பயன்படுத்துவது".
ஆனால், 5 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அன்று கருணா ஆரம்பித்த அவரது அரசியல் கட்சி இன்று அவரிடம் இல்லை. அவரது அடியாளான பிள்ளையான் அக்கட்சியைக் கையகப்படுத்தியிருக்கிறார். இதன் மூலம் கருணாவின் ராணுவ வல்லமையும், சாதுரியமும் போலியானவை என்று அவரது அடியாளினூடாகவே நிரூபிக்கப்பட்டிருக்கிறது. கருணாவைப் பற்றிச் சர்வதேசத்தில் பேசப்படும் ஒரே விடயம் போலியான கடவுச் சீட்டினைப் பாவித்து இங்கிலாந்திற்குத் தப்பியோடி, அங்கே கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது மட்டும் தான். ஆனால், தயான் ஜயதிலக்க கூறுவதில் ஒரு உண்மையிருக்கிறது, அதாவது கருணா இன்றுவரை உயிருடன் இருப்பது. ஆனால் உயிருடன் இருப்பதற்காக அவர் கொடுத்த விலை அவரது சுய கெளரவம், தன்மானம், தமிழர் எனும் அடையாளம் என்று இப்படிப் பல. இன்று அவர் உயிருடன் இருந்தாலும் அவரது கழுத்தைச் சுற்றியும், விதைப்பைகளை இறுக்கியும் சுற்றியிருக்கும் சுருக்குக் கயிறுகளை அவர் அறியாமல் இருக்கமாட்டார் என்று நம்புகிறேன்.