"இல்லை, கருணா இதற்குப் பின்னர் மட்டக்களப்பில், முக்கியமாகக் கிரானில் தென்படவில்லை. வாழைச்சேனை, கல்க்குடா, கிரான் ஆகிய பகுதிகளில் புலிகளில் பலம் அதிகரித்துக் காணப்படுகிறது. அதிலும் கிரான் என்பது புலிகளின் பலமான பகுதியென்று நம்பப்படுகிறது. கருணா புலிகளின் தளபதியாகவிருந்த காலத்தில் கிரானின் மைந்தன் என்பதனால் அவர் இப்பகுதியில் பலராலும் மதிக்கப்பட்டிருந்தார். புலிகளினது இலட்சியத்திற்கும், தமிழர்களின் விடுதலைக்கு புலிகளின் சேவைக்காகவும் கிடைத்த ஆதரவே கருணாவையும் அவர்கள் ஆதரிக்கும் நிலைக்கு இட்டுச் சென்றிருந்தது. தனிமனிதனாக, புலிகளின் தொடர்பில்லாத கருணாவுக்கு மக்கள் ஆதரவென்பது ஒருபோதுமே இருக்கப்போவதில்லை. புலிகளுக்கும் தமிழினத்திற்கும் துரோகமிழைத்து அவர் வெளியேறியபின் கிரானில்க் கூட அவருக்கு ஆதரவென்பது இருக்கப்போவதில்லையென்பது திண்ணம்".
"மட்டக்களப்பு நகரப்பகுதி ராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் முற்றாக வந்ததையடுத்து, புலிகளுக்கெதிரான துணை ராணுவக்குழுக்களான புளொட், ஈ பி ஆர் எல் எப், ராஸீக் குழு மற்றும் ஈ என் டி எல் எப் ஆகிய குழுக்கள் மட்டக்களப்பு நகரின் புளியந்தீவுப் பகுதியில் தமது முகாம்களை நிறுவியுள்ளன. நீரால் சூழப்பட்ட தீவுப்பகுதியான மட்டக்களப்பு நகரை பெருநிலத்துடன் இணைக்கும் மூன்று முக்கிய பாலங்களில் ராணுவம் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்கிறது. அத்துடன் இத்துணைராணுவக் குழுக்களின் குடும்ம்பங்களையும் நகரினுள் அழைத்துவந்திருக்கும் ராணுவம் அவர்களுக்கான பாதுகாப்பினையும் வழங்கிவருகிறது. புலிகளுக்கான வெளிப்படையான ஆதரவினை இதுவரை வழங்கிவந்த பொதுமக்கள் இக்குழுக்களின் பிரசன்னத்தினையடுத்து தற்போது மெளனமாகிவிட்டதுபோலத் தெரிகிறது. இத்துணைராணுவக் குழுக்களின் பிரசன்னம் மட்டக்களப்பு நகருக்கு வெளியே காணக்கிடைப்பதில்லையென்று மக்கள் கூறுகிறார்கள்".
"ஆகவே, வெளியிலிருந்து நகருக்குள் வரும் ஒருவருக்கு இத்துணை ராணுவக் குழுக்களின் அதிகரித்த பிரசன்னம் ஆச்சரியத்தைக் கொடுக்கலாம். மேலும், புலிகளுக்கெதிரான குழுக்களின் தலைவனாக கருணாவே பார்க்கப்படுவதால், நகருக்கு வரும் ஒருவர் கருணாவே நகரினைக் கட்டுப்பாட்டினுள் வைத்திருப்பதாக எண்ணுவதற்குச் சாத்தியம் இருக்கிறது. இவ்வாறு வெளியிலிருந்து வருவோர், நகரில் இருக்கும் நிலையே மட்டக்களப்பின் ஏனைய பகுதிகளிலும், அம்பாறையிலும் இருக்கலாம் என்று தவறாகக் கணிக்கிறார்கள். மட்டக்களப்பு நகரை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இவர்கள் வெளியிடும் புனைவுகள் மிகவும் தவறான செய்தியினையே வெளிக்காவிச் செல்கின்றன".
"நான் அங்கு தங்கியிருந்த இரு மாத காலத்தில் மட்டக்களப்பின் பல பகுதிகளுக்கும் விஜயம் செய்து பல பொதுமக்களையும், நண்பர்களையும் சந்தித்து உரையாடினேன். அரச உத்தியோகத்தர்கள், பண்ணையாளர்கள், விறகு வியாபாரம் மசெய்வோர் என்று பலதரப்பட்டவர்களுடனும் உரையாடியபோது எனக்குக் கிடைத்த செய்தி ஒன்றுதான், அதாவது இவர்களுள் எவருமே கருணாவின் செயலினை சரியென்று ஏற்றுக்கொள்ளவுமில்லை, அவரை ஆதரிக்கவுமில்லை".
"மேலும், கிழக்கு மக்களின் நலனுக்காகவே புலிகளை விட்டுப் பிரிந்து செல்கிறேன் என்று கருணா கூறிச் சென்றபின்னர் இந்த மக்களுக்காக கருணா இதுவரையில் செய்தது என்ன? தமிழர்களுக்குத் துரோகமிழைத்து, தமிழர்களை 2002 வரை வேட்டையாடிய கொடிய ராணுவத்துடனும், விசேட அதிரடிப்படையுடனும் கருணா இன்று கொஞ்சிக் குலாவுவதை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். புலிகளின் முன்னாள் தளபதியாகவிருந்த கருணா இனிமேல் கிழக்கிலோ அல்லது எந்தவொரு நிலத்திலோ மக்கள் முன் வெளிப்படையாக வரும் யோக்கியதையினை இழந்துவிட்டதாகவே அவர்கள் நினைக்கிறார்கள். ஆக, ஜெயராஜ் மற்றும் பீ ராமன் போன்ற கற்பனை உலகில் வாழும் புனைகதையாளர்களின் காதல் நாவல்களில் உலாவருவதுடன் கருணாவின் பிரசன்னம் முடிந்துவிடுகிறது".
"மட்டக்களப்பில், லேக் வீதியில் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரின் அலுவலகமும், அதன் மிக அருகே ராஸீக் குழுவின் முகாமும் அமைக்கப்பட்டிருக்கிறது. கண்காணிப்புக் குழுவினரின் அலுவலக வாயிலின் ஒரு பக்கத்தில் ராஸீக் குழுவினரின் காவலரண் கட்டப்பட்டிருக்கிறது. பதின்ம வயதுச் சிறுவர்கள் கைகளில் தானியங்கித்துப்பாக்கிகளை ஏந்தியபடி மரக்குற்றிகளுக்குப் பின்னால் அமர்ந்திருக்க அவர்களைக் கடந்து கண்காணிப்புக் குழுவினர் சென்று வருகின்றனர். முன்னாள் ஈ பி ஆர் எல் எப் பாராளுமன்ற உறுப்பினர் சாம் தம்பிமுத்துவுக்குச் சொந்தமான காணியிலேயே ராஸீக் குழு முகாமிட்டிருப்பதாகத் தெரிகிறது".
"ஒருநாள் காலை கருணாவின் மாமனார் குமரகுருவைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. முன்னர் அவர் வாழைச்சேனை காகித ஆலையில் பாரம் நிறுக்கும் பகுதியில் வேலைபார்த்து வந்திருந்தார். 1980 களில் ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்கமான ஜாதிக சேவக சங்கமய எனும் அமைப்பின் தலைவராக அவர் இருந்தார். நான் அவரை காலை 6 மணிக்குச் சந்தித்தேன். அடிடாஸ் உடற்பயிற்சி ஆடையுடன் அவர் காலை நடைப்பயிற்சிக்காகச் சென்றுகொண்டிருந்தார். மிகக் கவனமாக தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பாவித்து அவரதும், அவர் குடும்பத்தினதும் சுகம் பற்றி விசாரித்துக்கொண்டேன். கருணா பற்றி அவரிடம் எதையுமே கேட்கும் தேவை எனக்கு இருக்கவில்லை".
"முடிவாக, என்னைப்பொறுத்தவரை கருணா என்பவர் முகமற்ற நிழலாகவே மட்டக்களப்பில் இருக்கிறார், பன்றிகள் பறக்கும் புனைவுகளில் கதாநாயகனாக வலம் வருவதைத்தவிர அவரை அங்கே நான் காணவில்லை".