ஆலயப் படுகொலை நடத்தப்பட்டமைக்கான உண்மையான காரணம்
ஆக்கம் : தி நோத் ஈஸ்டேன் மந்த்லி நிருபர், தை 2006
ஆங்கிலத்திலும் தமிழிலும் திரு பரராஜசிங்கத்திற்கு இருந்த புலமையின் நிமித்தம், வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விஜயம் செய்யும் அரசியல் பிரமுகர்கள் ஆகியோருடனான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்துச் சந்திப்புக்களிலும், ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள் தவிர்க்கப்படமுடியாதவராகக் கலந்துகொண்டுவந்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையின் தீவிர விசுவாசியாக அவர் அறியப்பட்டு வந்தது மட்டுமல்லாமல், வடக்குக் கிழக்கு மாகாணங்கள் இணைந்தே இருக்கவேண்டும் என்றும் அவர் தொடர்ச்சியாகக் குரல்கொடுத்து வந்தார். இவ்விரண்டு காரணங்களில் இரண்டாவதான "வடக்கும் கிழக்கும் இணைந்திருத்தல்" எனும் காரணத்திற்காகவே அவரது எதிரிகள் அவரைக் கொல்லவேண்டும் என்று முடிவெடுத்ததாகக் கருதப்படுகிறது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் திரு ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள் நத்தார் ஆராதனையின்பொழுது மட்டக்களப்பு மரியன்னை பேராலயத்தில் அதிகாலை சுட்டுக் கொல்லப்பட்டார். அவரைக் கொன்றவர்கள் யாரென்பது பற்றி ஆரம்பத்தில் பல குழப்பங்கள் நிலவின. இவற்றிற்கும் மேலாக, இலங்கையரச பத்திரிக்கைகள் பரராஜசிங்கத்தின் கொலையினை புலிகளே மேற்கொண்டதாக செய்தி வெளியிட்டன. அண்மையில் நடந்துமுடிந்த ஜனாதிபதித் தேர்தல்களில் தமிழ் மக்களை வாக்களிக்க வேண்டாம் என்று புலிகள் கேட்டுக்கொண்ட நிலையில், பரராஜசிங்கம் அவர்கள் மட்டக்களப்பு வாக்காளர்களை வாக்களிப்பில் பங்குகொள்ளக் கேட்டிருந்தார் என்னும் பொய்யினை தமது செய்திக்கான ஆதாரமாக அவை வெளியிட்டன.
ஆனால், பெரும்பாலானவர்களைப் பொறுத்தவரை பரராஜசிங்கத்தைக் கொன்றவர்கள் ஒன்றில் கருணா குழுவினர் அல்லது ராணுவத்தினராக இருக்கலாம் என்று நம்புகின்றனர். சிலவேளை இப்படுகொலை இவ்விரு பிரிவினரையும் கொண்ட ஒரு குழுவினரால் நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. பரராஜசிங்கம் அவர்கள், கிழக்கிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைக்கு முழுமையான ஆதரவினை வழங்கியவர். கிழக்கு மக்களை "வடக்கு எதேச்சாதிகாரத்திற்கு" எதிராக தான் ஒன்றுதிரட்டுவதாக கருணா கூறிவந்த நிலையில், பரராஜசிங்கமோ தொடர்ந்தும் புலிகளின் தலைமைக்கு தனது விசுவாசத்தினையும் காட்டி வந்தார்.
பரராஜசிங்கத்தின் படுகொலையின் மூலம் கிழக்கு மாகாணத்தில் புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டினை எடுத்திருந்த ஏனைய சில தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவும் பார்க்கப்படமுடியும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இதைவிடவும் இன்னும் இரு காரணங்களுக்காக கருணாவும், அவரை இயக்குவிக்கும் அரசாங்கமும் பரராஜசிங்கம் கொல்லப்படவேண்டும் என்று விரும்பியதாகக் கருதப்படுகிறது.
2004 சித்திரை பொதுதேர்தல்களுக்குப் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலம்பெற்று வருவதாகக் கணிக்கப்பட்டதுடன், புலிகளினால் சமாதானப் பேச்சுக்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும் பட்சத்தில் பல்வேறுபட்ட அரசியல் தலங்கலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பி புலிகளால் களமிறக்கப்படும் சாத்தியம் தோன்றியிருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்யக்கூடிய செயற்பாடுகளாக பாராளுமன்றத்தில் தமிழர்களின் நலன்களை முன்னிறுத்திய அரசியல் முன்னெடுப்புக்கள். இலங்கையின் தெற்கை மையமாகக் கொண்டியங்கும் அரசியல் கட்சிகளுடனான கலந்துரையாடல்கள் மற்றும் தொடர்புகள், இலங்கையினுள்ளும், வெளியேயும் தமிழ் மக்கள் நலன் சார்ந்த அபிவிருத்திகளை வெளிக்கொண்டுவருதல் ஆகியவை அடங்கியிருந்தன. ஆக, இதனடிப்படையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கான உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்கள்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளைச் சர்வதேச மயப்படுத்துதலில் முன்னின்று செயற்பட்டு வந்தவர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள். கூட்டமைப்பின் மிக மூத்த உறுப்பினராக அவர் இருந்தாலும்கூட, கிழக்கு மாகாணத்தை அடிப்படையாகக் கொண்டு, புலிகளின் தலைமைக்கு மிகவும் விசுவாசமாக அவர் இருந்தமையினால் அவர் மற்றைய உறுப்பினர்களைக் காட்டிலும் தனித்தன்மையுடையவராக விளங்கினார். மட்டக்களப்பை மையப்படுத்திய கருணாவின் ஆதரவாளர்களால் கூறப்பட்டு வந்த "வடக்கின் மேலாதிக்கத்திற்கு எதிராக செயற்படுதல்" எனும் வாதத்தினை பரராஜசிங்கம் பல அரசியல் தளங்களில் கடுமையாக விமர்சித்து வலுவற்றதாக்கி வந்தார்.
பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கும்பொழுதே, முதலில் ஐக்கிய தேசியக் கட்சியும் பின்னர் சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசும் சர்வதேச வலைப்பின்னல் ஒன்றுக்குள் புலிகளை முடக்கி, சர்வதேசத்தில் பயங்கரவாதிகள் எனும் பட்டத்தையும், சர்வதேசத் தடைகளையும் ஏற்படுத்தி வருகின்றனர் என்பதை உணர்ந்துகொண்ட புலிகளும், தமிழ் மக்களும் இந்த நாசகார நடவடிக்கைகளுக்கு எதிரான செயற்பாடுகள் முன்னெடுக்கத் தலைப்பட்டனர்.
பேச்சுவார்த்தைக் காலத்தினைப் பாவித்து தம்மை சர்வதேசத்தில் தனிமைப்படுத்த சிங்களம் எடுத்துவந்த முயற்சிகளை முறியடிக்கும் நோக்கிலேயே சர்வதேசத்திற்கு தமது தரப்பு நியாயங்களை எடுத்துரைக்கக் கிடைத்த சந்தர்ப்பங்கள் அனைத்தையும் புலிகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் முழுமையாக உபயோகிக்கத் தொடங்கினர். புலிகளினதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் அயராத இந்த முயற்சியினாலேயே சர்வதேசத்தில் சிங்கள அரசாங்கம் செய்துவந்த தமிழருக்கெதிரான பலமான பரப்புரைகளின் முனை மழுங்கடிக்கப்பட்டு, இருபக்க நியாயங்களையும் சர்வதேசம் செவிமடுக்கும் நிலை உருவாக்கப்பட்டது. போர்நிறுத்த மீறல்கள், வடக்குக் கிழக்கின் ராணுவப் பிரசன்னம் , உயர் பாதுகாப்பு வலயங்களில் இருந்து விலகப்போவதில்லை என்கிற அரசின் பிடிவாதம், அரசியல் ரீதியிலான அழுத்தங்கள், சுனாமி நிவாரணத்தில் பாகுபாடு என்று பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக சர்வதேசத்திற்கு தமிழர் தரப்பின் நியாயங்களை புலிகளும் கூட்டமைப்பும் முன்வைத்து வந்தன. இவ்வாறான தொடர்ச்சியான பரப்புரைகளினூடாக தமிழ்மக்களின் ஏக பிரதிநிதிகள் புலிகள்தான் என்கிற நிலைப்பாடும் சர்வதேசத்தில் மெது மெதுவாக உருப்பெறத் தொடங்கியிருந்தது.
பரராஜசிங்கம் அவர்களின் இரு மொழிப்புலமையும், சரளமான பேச்சும் அவரை பல சர்வதேச ராஜதந்திரிகள் சந்தித்துக் கலந்தாலோசிக்கவும், சர்வதேச தூதரக அதிகாரிகள் சந்திக்கவும் ஏதுவாக்கியிருந்தது. அதுமட்டுமல்லாமல் புலம்பெயர் நாடுகளில் புலிகளாலும், புலம்பெயர் தமிழர்களாலும் ஒழுங்குசெய்யப்பட்ட கூட்டங்கள் மற்றும் பேரணிகளில் கலந்துகொண்டு தமிழர் தரப்பின் நியாயங்களையும், அரச பிரச்சாரத்திற்கெதிரான பதிலையும் ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள் தொடர்ச்சியாக வழங்கி வந்தார்.