கேள்வி : புணர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள்ப் போராளிகள் இன்றுவரை வாழ்வாதாரத்திற்காக அல்லற்பட்டு வருவதாகக் கூறியிருந்தீர்கள். புலம்பெயர் தமிழர்களிடமிருந்து இவர்களுக்கான உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கு எவ்வகையான திட்டங்களை வைத்திருக்கிறீர்கள்?
கருணா : ஆம், நான் இதுதொடர்பாக அவர்களுடம் பேசவிருக்கிறேன். வடக்கையும் கிழக்கையும் அபிவிருத்திசெய்யும் பாரிய பொறுப்பு அவர்களுக்கிருக்கிறது. புலம்பெயர் தமிழர்களிடையே பெரிய தொழிலதிபர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இங்குவந்து பல தொழில் முயற்சிகளை ஆரம்பிப்பதன் மூலம் பல முன்னாள்ப் போராளிகளுக்கு வாழ்வாதார உதவியினை வழங்க முடியும்.
பிரண்டிக்ஸ் நிறுவனம் கிழக்கில் பாரிய தொழிற்சாலையொன்றினை நிறுவவிருக்கிறது. இதன்மூலம் 5000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும். கிழக்கு மாகாணத்தில் 40,000 விதவைகள் வாழ்கிறார்கள், இவர்களுக்கும் இதில் பணிபுரியும் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படும். போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு ஒரு சிங்கள தொழிலதிபர் வேலைவாய்ப்பு வழங்கமுடியும் என்றால், உலகெங்கும் பரந்து வாழும் பல புலம்பெயர் தமிழ் தொழிலதிபர்கள் தமது மக்களுக்கு ஏன் இந்த உதவியினைச் செய்யமுடியாது?
மலேசியாவின் இரு பெரிய கோபுரங்களுக்கு உரிமையாளராகவிருக்கும் யாழ்ப்பாணத்தில் பிறந்த ஆனந்த கிருஷ்ணன் போன்ற பல கோடீஸ்வரரத் தமிழர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தமது மக்களுக்காக உதவிசெய்யும் காலம் வந்துவிட்டது.
நான் இவர்களுடன் விரைவில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்து இங்குவந்து முதலீடுகளை செய்ய ஊக்குவிக்கப்போகிறேன். வடக்கினை கொழும்பினைக் காட்டிலும் அபவிருத்திசெய்து நவீனமயப்படுத்தும் பணபலம் அவர்களுக்கு இருக்கிறது. இந்த முதலீட்டு வாய்ப்புகளுக்கிருக்கும் ஒரே முட்டுக்கட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் செய்துவரப்படும் புலிசார்பு அரசியலும், அரசுக்கெதிரான போலிப் பிரச்சாரமும் ஆகும். பெரிய தமிழ்ச் செல்வந்தர்கள் இந்த பரப்புரைகளுக்கு அஞ்சியே கொழும்பிற்கு வரப் பயப்படுகிறார்கள். நான் அவர்களுடன் பேசி நாட்டின் சுமூக நிலைமையினை விளக்கி, தெற்கு அரசியலின் நேசக்கரத்தை அவர்களுக்கு நீட்டி மீண்டும் அழைத்துவரப்போகிறேன்.
கேள்வி : ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பல அனுபவம் மிக்க தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்களால் நிச்சயமாக தமிழ் முதலீட்டாளர்களை ஊக்குவித்து இங்கு அழைத்துவரமுடியும். ஆனால் அவர்கள் அதனை ஏன் இதுவரை செய்யவில்லை என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
கருணா : ஆம், கூட்டமைப்பில் சம்பந்தன், மாவை சேனாதிராஜா போன்ற மூத்த அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். இவர்களுக்கிருக்கும் முக்கிய பிரச்சினை என்னவென்றால், இலங்கையிலிருக்கும் அனைத்து இனங்களையும் பாதிக்காவண்ணம் தமது கருத்துக்களை முன்வைக்கத் தெரியாமல் இருப்பதுதான். அதுமட்டுமல்லாமல், இலங்கையில் நிலவும் சுமூக நிலை, நல்லிணக்கம், அமைதி பற்றி புலம்பெயர் தமிழர்களிடம் எடுத்துரைக்கும் திறமையும் இவர்களிடம் இல்லை.
தமிழர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லையென்றால் அவர்கள் மீண்டும் ஆயுதம் தூக்க நேரிடலாம் என்று மாவையார் சொல்கிறார். நான் புலிகளுடன் இணைவதற்கு அவரும் ஒரு காரணம். இவர்களின் பசப்பு வார்த்தைகளை உண்மையென்று நம்பி பல்லாயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் வெற்றுகனவான ஈழம் தேடிப் போராடக் கிளம்பியிருந்தோம். இந்த அனுபவம் மிக்க அரசியல் வாதிகளால் நாம் தவறாக வழிநடத்தப்பட்டோம். ஆனால், நாங்கள் எமது இலட்சியத்திற்காகப் போராடியபோது, இவர்கள் தமது சொந்தப் பாதுகாப்பிற்காக இந்தியாவுக்கு ஓடிவிட்டார்கள்.
பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் அநியாயமாகக் கொல்லப்பட்ட போர் முடிந்தவுடன், தமது இந்திய மறைவிடங்களில் இருந்து வெளியே வந்த இந்த மூத்த அரசியல்வாதிகள் இன்று மீண்டும் அதே போர் முழக்கங்களை முன்வைக்கிறார்கள். தமிழர்களை மீண்டும் மூடர்களாக்கி, வெற்று கனவுகளை முன்வைத்து, இனவாதக் கருத்துக்களை பரப்பி மீண்டு தமிழர்களை ஒரு இரத்தகளரி மிக்க போரிற்குள் தள்ளும் இந்தக் கைங்கரியத்தைச் செய்யவேண்டாம் என்று அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன். போர்முடிந்த கடந்த 10 வருடங்களாக அவர்கள் அரசியல் செய்கிறார்கள், ஆனால் இன்றுவரை தமிழ் மக்களுக்காக ஒரு துரும்பைத்தன்னும் இவர்களால் நகர்த்த முடியவில்லை. குறைந்த பட்சம் தமிழர்களின் நிலங்களில் இருந்து ராணுவமுகாம்களை நகர்த்தும் முயற்சியைக் கூட இவர்களால் எடுக்க முடியவில்லை.
தமது பேசும் தொனியினை மாற்றி, இனவாத அரசியலைக் கைவிட்டு, தேசிய அரசியலில் கைகோர்க்கும் நிலையினை அவர்கள் அடையவேண்டும். ராணுவ முகாம்களை அகற்றுமாறு அரசினைக் கோருவதை நிறுத்திவிட்டு, அம்முகாம்களை அரச காணிகளுக்கு நகர்த்துவதன்மூலம் அப்பகுதிகளில் ராணுவப் பிரசன்னத்தை அவர்கள் நீட்டிக்க முன்வரவேண்டும். நான் அங்கம் வகித்த அரசாங்கம் முதற்கொண்டு எந்தவொரு தேசிய அரசாங்கமும் தனது ராணுவ நிலைகளை நாட்டின் எப்பாகத்திலிருந்தும் அகற்ற ஒருபோதும் இடம்கொடுக்கப்போவதில்லை. இவர்களின் கோரிக்கையினை ஏற்றுக்கொண்டு, பயங்கரவாதம் மீளவும் தலைதூக்கி நாட்டின் பாதுகாப்பு அச்சுருத்தலுக்கு ஆளாகும் நிலையினை அரசு ஒருபோதும் கொண்டுவராது என்கிற நம்பிக்கை எனக்கிருக்கிறது. ஏனெறால், எமது நாட்டின் பாதுகாப்பு எனக்கு மிகவும் முக்கியமானது.
நான் முன்னர் கூறியதுபோல, தமிழர்களுக்கு என்போன்ற மிதவாத அரசியல்த் தலைவர்களே இப்போது தேவை. பழமைவாத அரசியல்த் தலைவர்களின் இனவாதச் சிந்தனை ஒருபோதும் மாறப்போவதில்லை. போர் முடிந்தபின்னர் ஏற்படுத்தப்பட்டிருக்கும் யதார்த்த நிலையினை அவர்கள் ஒருபோதும் உணரப்போவதில்லை. தமிழர்களுக்கு அடிப்படைவாத இனவாதத் தலைவர்கள் இனிமேல்த் தேவையில்லை. முழு நாட்டிற்குமே நாட்டினை அபிவிருத்துசெய்து, மக்களை முன்னேற்றுகின்ற அரசியல்த் தலைமையே இன்று தேவை. நாம் கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் அவர்கள் பாடிய அதே பல்லவியினையே இன்றும் அவர்கள் பாடுகிறார்கள். எமக்கு அது அலுத்துவிட்டது.
கேள்வி: தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கு கூட்டமைப்பு மகிந்த அரசாங்கத்துடன் சேர்ந்து செயற்பட முன்வந்ததா?
கருணா : நான் மகிந்த ராஜபஹ்க்ஷவின் அரசில் அமைச்சராக இருந்தபொழுது சம்பந்தன் அவர்களை அரசுடன் இணைந்து செயற்பட வருமாறு அழைத்திருந்தேன். கூட்டமைப்பு எம்முடன் சேருமிடத்து எமக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைப்பதோடு, தேவையான முயற்சிகளை முன்னெடுக்கவும் வாய்ப்பிருந்தது. மக்களின்மேல் உண்மையான அக்கறைகொண்ட, செயல்திறன் மிக்க தலைவரான மகிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நாம் தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளும் சந்தர்ப்பம் ஒன்று இருந்தது. மகிந்த ராஜபக்ஷவைப்போன்ற நேர்மையான, துணிவான செயல்த்திறன் மிக்க ஒரு தலைவரை நான் என் வாழ்நாளில் பார்த்ததில்லை. அவர் தான் சொல்வதைச் செய்யவும், செய்வதைச் சொல்லவும் வல்லமை மிக்க ஒரு பெரும் தலைவராக எனக்குத் தெரிகிறார்.
சம்பந்தன் மகிந்த ராஜபஹ்க்ஷவின் ஆதரவு தனக்குத் தேவையென்று கோரிவருவதாக நான் அண்மையில் அறிந்துகொண்டேன். அவர் எதற்காக எனது தலைவரின் ஆதரவினை இப்போது எதிர்பார்க்க வேண்டும்? மகிந்த போன்ற துணிவான, திறமையான தலைவர்கள் எமக்குத் தேவை. அரசாங்கம் பழிவாங்கும் படலத்திலிருந்து, நாட்டினை அபிவிருத்தி செய்யும் படலத்திற்கு மாறவேண்டும் என்பதே எனது விருப்பம்.
கேள்வி : இன்றைய நல்லிணக்க அரசாங்கம் தாம் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லையென்றும், ஆனால் நீங்கள் அமைச்சராகவிருந்த மகிந்த அரசாங்கத்தில் நடைபெற்ற பாரிய முறைகேடுகள் பற்றியே விசாரிக்கப்போவதாகவும் கூறியிருக்கிறார்களே?
கருணா : நான் ஒருபோதுமே அக் குற்றச்சாட்டினை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. தவறான பிரச்சாரத்தினை முன்னெடுத்து எனது முன்னாள் அரசாங்கத்தின் பல உறுப்பினர்களை அது கைதுசெய்து வைத்திருக்கிறது. இரண்டு வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் இதுவரை எந்த ஆதாரங்களும் கண்டுபிடிக்கப்படவில்லை. சட்டத்திற்குப் புறம்பான நீதிவிசாரனை அமைப்பொன்றினை உருவாக்கி தமது அரசியல் எதிரிகளை இந்த அரசாங்கம் பழிவாங்கி வருகிறது.
இந்த நாடே சந்தித்த மிகெப்பெரிய ஊழல் இந்த அரசாங்கம் பதவிக்கு வந்ததன் பின்பே நடந்தேறியது. இந்த ஊழல்தொடர்பாக விசாரணைகளை நடத்தி உண்மையினை மக்கள் அறியும்படி இவர்கள் ஏன் இதுவரை செய்யவில்லை? இவர்களுக்குப் பழிவாங்கும் நோக்கமே இருக்கிறது. நிச்சயமாக இவர்களால் 2020 இல் மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாது. மக்கள் இவர்களை வீட்டிற்கு அனுப்புவார்கள்.
பல கடன்களைப் பெற்றுக்கொண்டதாக மகிந்தவின் அரசாங்கத்தினை இன்றைய அரசாங்கம் குறை சொல்கிறது. ஜி எஸ் பி சலுகையினை தான் நாட்டிற்குப் பெற்றுக்கொடுத்துள்லதாக அரசு மார்தட்டுகிறது. ஆனால், நாட்டின் நலனையும், பாதுகாப்பையும் அடகுவைத்து 58 நிபந்தனைகளுக்கு இணங்கியே இந்த வரிச்சலுகையினைஇந்த அரசு பெற்றிருக்கிறது.
இதே வரிச்சலுகையினைத் தருகிறோம், எமது கோரிக்கைகளுக்கு உடன்படுங்கள் என்று மகிந்தவின் அரசாங்கத்திற்கும் தூது அனுப்பினார்கள். ஆனால், இந்த வரிச்சலுகை இல்லாமலேயே நாட்டினை அபிவிருத்தி செய்யமுடியும் என்று நாம் அதனை முற்றாக நிராகரித்திருந்தோம். அதன்பிறகே நாம் சீனாவிடம் கடன்களுக்கு ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினோம்.
நான் எமது ஆட்சியில் வெறும் 750 ஏக்கர்களை மட்டுமே சீனாவுக்கு வழங்கியிருந்தோம். ஆனால், இந்த அரசாங்கமோ சீனாவுக்கு 15,000 ஏக்கர்களை வழங்கியிருக்கிறது. எனக்குத் தெரிந்தவரையில், ஒருவருக்கு உங்கள் நிலத்தினை வழங்கும்போது அதன் வான்பகுதியும் சேர்த்தே வழங்கப்படுகிறது என்று நினைக்கிறேன். இந்த ஒப்பந்தத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் பெருமளவு பெருமளவு நிலப்பரப்பும், வான்பரப்பும் சீனாவுக்கு வழங்கப்படுமிடத்து இந்தியாவின் பாதுகாப்பு அச்சுருத்தலுக்கு உள்ளாவதோடு, இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் பதற்ற நிலைமையும் உருவாகக் காரணமாகிவிடும். மகிந்தவை அன்று ஆட்சியில் இருந்து அகற்ற பின்னாலிருந்து இயங்கிய இந்தியா இன்று அவரையே மீண்டும் ஆட்சியில் அமர்த்தப் பாடுபடுவது தெரிகிறது.
அதேவேளை, மகிந்த அவர்களின் ஆட்சி மீண்டும் அமையும்போது, அவர்களும் பழிவாங்கும் நடவடிக்கையினைத் தொடங்கக் கூடாதென்று அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன். 30 வருடகாலப் போரின் பின்னர் எமக்குக் கிடைத்திருக்கும் இந்த அருமையான சந்தர்ப்பத்தினை சில்லறைப் பிணக்குகளில் செல்வழிப்பதை நிறுத்துவிட்டு நாட்டைக் கட்டியெழுப்புவதற்குப் பாவிக்கவேண்டும் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
முற்றும்.
https://www.ft.lk/article/600192/Karuna-Amman-takes-on-TNA