சர்வதேசத்திற்கும் அரசு ஒரு செய்தியைச் சொல்லியிருக்கிறது. அதாவது, சிங்கள மக்கள் மீது தாக்குதல்களை நடத்துவதன் மூலம், சிங்களவர்களைக் கோபப்படுத்தி, தமிழர்கள் மீது இனரீதியான பழிவாங்கல் தாக்குதல்களை நடத்தி, தமது தனிநாட்டிற்கான கோரிக்கைக்கு வலுச்சேர்ப்பதே புலிகளின் நோக்கம். ஆனால், சிங்களவர்களைச் சாந்தப்படுத்தி, அவர்கள் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடாவண்ணம் அவர்களை அமைதிப்படுத்தி, சமாதானத்தின் மகானான மகிந்தவும் அவரது அரசும் இப்பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நடைபெற்று நிரந்தர சமாதானம் இந்நாட்டில் மலர அயராது உழைக்கிறார்கள் என்பதுதான்.
அதேவேளை அமெரிக்க ராஜாங்கச் செயலகத்தின் பேச்சாளரான ஷோன் மக்கோர்மக் இத்தாக்குதல் பற்றிப் பேசும்போது, "இது நிச்சயமாக புலிகளால் நடத்தப்பட்ட தாக்குதல்தான். புலிகளின் மிலேச்சத்தனமான தாக்குதல் உத்திகள் எல்லாமே இந்தத் தாக்குதலின்போது பாவிக்கப்பட்டிருக்கின்றன. தாம் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு முன்னுரிமை கொடுப்பவர்கள் என்று கூறிக்கொண்டே புலிகள் இத்தாக்குதலினை நடத்தியிருக்கிறார்கள். பேச்சுவார்த்தைகளைக் கடுமையாகப் பாதிக்கப்போகும் இத்தாக்குதல்கள் உடனடியாக அவர்களால் நிறுத்தப்பட்டு, உடனடியாக தமது வன்முறைகளை அவர்கள் கைவிட்டு, இலங்கை அரசுடன் நேரடியான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவேண்டும் " என்று கூறியிருந்தார்.
அதுசரி, இத்தாக்குதலினைப் புலிகள்தான் நடத்தியதாக இவர் எப்படி இவ்வளவு உறுதியாகக் கூறுகிறார்? இத்தாக்குதலினைப் புலிகளே நடத்தினார்கள் என்பதை இலங்கை அரசாங்கத்தைத் தவிர இவருக்கு வேறு யார் சொல்லியிருக்கக் கூடும்? ஆகவே, அரசின் அறிக்கையினை அப்படியே முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளதுடன், மகிந்தவின் சமாதானத்திற்கான முயற்சிகளை முழு மனதோடு வரவேற்பதாகவும் கூறியிருக்கும் அமெரிக்கா, வன்னி மீதான அரச விமானப்படையின் கொடூரமான குண்டுவீச்சுக்கள் பேச்சுவார்த்தையினைப் பாதிக்காதெனும் நிலைப்பாட்டினையும் எடுத்திருப்பதுபோலத் தெரிகிறது.
ஆனால், இதில் குறிப்பிடப்படவேண்டிய் செய்தி என்னவென்றால், இலங்கையில் அமெரிக்காவின் பாதுகாப்புத் தொடர்பாக அவர்களுக்கு இருக்கும் அக்கறைகள், தமது நலன் தொடர்பான செயற்பாடுகள், தமது திட்டங்கள் ஆகியனவும் மகிந்த தலைமையிலான சிங்களவர்களின் அக்கறைகளும், நலன்களும் ஒன்றில் ஒத்துப்போகலாம் அல்லது வேறுபடலாம், அல்லது தமிழர்களைப் பாவித்து தனது நலன்களைப் பாதுகாத்துக்கொள்ள அது முயலலாம்.
ஆனால், அண்மைக்காலமாக தமிழரின் பிரச்சினைகள், அவலங்கள் பற்றி அமெரிக்கா நடுநிலையான நிலைப்பாட்டினை எடுத்திருப்பதையும் மறுப்பதற்கில்லை. அது மட்டுமல்லாமல், தமிழர்கள் தம்மைத்தாமே ஆளும் உரிமையினைக் கொண்டிருக்கிறார்கள் என்று அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான செயலாளர் ரிச்சார்ட் பெளச்சர் அண்மையில் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது.
ஆனால், தனது நலன்கள் என்று வரும்போது அமெரிக்கா சந்தர்ப்பத்திற்கேற்றவாறு காய்நகர்த்தி வருகின்றது என்பதுதான் இதிலிருந்து நாம் விளங்கிக்கொள்ளக் கூடியது.
இத்தாக்குதலின் பின்னர் கருத்து வெளியிட்ட கொழும்பு மாவட்ட முன்னாள் கத்தோலிக்க ஆயர் துலீப் டி சிகேராவும் மகிந்தவின் பிரச்சார வண்டிமீது தாவி ஏறி பின்வருமாறு கூறுகிறார், " அப்பாவிச் சிங்கள மக்கள் மீது கெப்பிட்டிக்கொல்லாவைப்பகுதியில் புலிகளால் வேண்டுமென்று நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலினை அனைவரும் வேறுபாடுகளைக் களைந்து கண்டிக்க முன்வரவேண்டும். தமது நாளாந்த அலுவல்களைப் பார்க்கப் பயணித்துக்கொண்டிருந்த சிறுவர்கள் உட்பட அப்பாவிப்பொதுமக்கள் 64 பேரின் படுகொலைகள் மனித நேயத்திற்கு எதிரான குற்றமாகும்" என்று கூறுகிறார். தனது இக்கூற்று இனங்களுக்கிடையே பகைமையினை உருவாக்கும் என்று தெரிந்தும், தமிழர்மீதான பகையுணர்வுடன் கருத்திட்ட அவர், "இத்தாக்குதலின்போது பாவிக்கப்பட்ட தொழிநுட்பமும், இத்தாக்குதலின் துல்லியமும் நிச்சயமாக இதனைப் புலிகள் தான் செய்திருப்பதாகத் தெரிகிறது" என்றும் அவர் கூறினார்.
இத்தாக்குதல் தொடர்பாக எந்தவிதமான விசாரணைகளையும் நடத்த விரும்பாத அரசு உடனடியாகவே புலிகள் மீது பழியைச் சுமத்தியதைப் போன்றே முன்னாள் ஆயரும் உடனடியாகவே இத்தாக்குதலினைப் புலிகளே நடத்தியதாகக் கூறியதுடன், போகிற போக்கில், "சிங்களவர்கள் எவரும் பதில் தாக்குதலில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்றும் இறுதியாகக் கூறியிருந்தார். ஆகவே, மகிந்த, ரம்புக்வெல்ல, சிறிபால டி சில்வா, அமெரிக்க பேச்சாளர் ஆகியோர் வரிசையில் முன்னாள் ஆயரும் புலிகள் எதற்காக இத்தாக்குதலினை நடத்தினார்கள் என்பதனை மிகத் தெளிவாகவே தெரிந்திருந்ததாகத் தெரிகிறது. அதாவது, சிங்களவர்களைக் கோபப்படுத்தி தமிழர்கள் மீது இனச்சுத்திகரிப்பொன்றினை நடத்தி, அதன்மூலம் புலிகளுக்கான தாயகத்தை அடைவதே புலிகளின் இத்தாக்குதலின் பின்னாலிருந்த நோக்கம் என்று அனைவருமே சொல்லிவைத்தாற்போல் புரிந்துகொண்டிருப்பது வியப்புத்தான்.
இதிக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய விடயம் யாதெனில், முன்னாள் ஆயரின் அறிக்கைக்குப் பின்னர் அவரை மேற்கோள்காட்டி பேசிய பலரும், அவரைப் போன்றே அரசை உறுதியாக ஆதரித்ததுடன், இத்தாக்குதலுக்குப் பழிவாங்கலாக சிங்களவர்கள் சார்பில் அவர்களின் அரசு வன்னிமீது கட்டவிழ்த்து விட்டிருந்த கொடூரமான வான்வழித் தாக்குதல்களைனை சரியான நடவடிக்கைதான் என்றும், சமாதானதிற்குப் புலிகளை இழுத்துவரும் ஒரு முயற்சியென்றும் கூறியிருந்தனர்.
இன்னொரு வகையில் சொல்லப்போனால், புலிகளால் கொல்லப்பட்டதாக அரசு கூறும் 64 சிங்களப் பொதுமக்களுக்கு மேலதிகமாக அரசின் பழிவாங்கல்த் தாக்குதல்களில் இன்னும் பல நூற்றுக்கணக்கான தமிழர்களும் கொல்லப்படுவதை இவர்கள் சரியென்று ஏற்றுக்கொண்டிருப்பதும் தெளிவாகிறது.
"ஆயரே சொல்லிவிட்டார், ஆகவே இத்தாக்குதலைச் செய்தது புலிகள்தான், ஆகவே வன்னிமீது விமானத் தாக்குதல் நடத்துவது நியாயமானதுதான்" என்று சாதாரண சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்வதற்கு ஏதுவாக இலங்கையில் அரசியற்களம் ஒன்றி மிகவும் திட்டமிட்ட ரீதியில் உருவாக்கப்பட்டு வருவது கண்கூடு.
ஆக, இதுஅவரை அரசினாலும் அதன் ஆதரவாளர்களாலும் இத்தாக்குதலினை புலிகள் ஏன் நடத்தினார்கள் என்பதற்கான காரணங்களாக பின்வருபவை மீண்டும் மீண்டும் தொடர்ச்சியாக பலவிடங்களிலும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
- பேரூந்தில் பயணிப்பது அப்பாவிச் சிறார்களும், பொதுமக்களும்தான் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டே புலிகள் இத்தாக்குதலினை நடத்தினார்கள்
- இத்தாக்குதலின்மூலம் சிங்களவர்களைக் கோபப்பட வைத்து தமிழர் மீது இனரீதியான பழிவாங்கும் வன்முறைகளை அவர்கள் நடத்த ஊக்குவிப்பது.
- இலங்கையரசை வலிந்து ஒரு போருக்குள் இழுப்பது
- அப்பாவிகளைக் கொல்வதன்மூலம், தமது நிபந்தனைகளை அரசு ஏற்றுக்கொள்ளும்படி நிர்ப்பந்தம் செய்வது.
- சிங்களவர் மீது இனச்சுத்திகரிப்பொன்றை நடத்துவது.
ஆனால், எழுந்தமானமாக, எதுவித விசாரணைகளோ அல்லது சாட்சியங்களோ இல்லாமல் அரசாலும், பரந்த சிங்களச் சமூகத்தின் தலைவர்களால் முன்வைக்கப்பட்டுவரும் ஆதாரமற்ற இக்குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கான ஏதுநிலைகள் இலங்கையில் இன்று காணப்படுகின்றனவா?