கருணாவுக்குப் புலிகளால் அனுப்பப்பட்ட பொதுமன்னிப்புப் பற்றிய தகவல்களை கருணாவிடம் கொண்டுவந்து சேர்த்தவர்களில் மட்டக்களப்பு மாவட்ட அரசியல்வாதியான அலிசாஹீர் மெளலானாவும் ஒருவர். இந்தவிடத்தில் கருணாவின் பிரிவின் பின்னாலிருந்த அலிசாஹீர் மெளலானா - ஐக்கிய தேசியக் கட்சியின் சதிபற்றியும் நான் புரிந்துகொள்ளுதல் அவசியம்.
கருணாவும், அலிசாஹீர் மெளலானாவும் பள்ளிப்பருவத்திலிருந்தே தோழர்கள் என்கிற தவறான கட்டுக்கதைகள் பரப்பட்டு வந்தன. ஆனால், இவர்கள் இருவருக்கும் இடையிலான சிநேகம் 2002 யுத்த நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதன் பின்னரே ஆரம்பமானது என்பதே உண்மை. மெளலானா நெடுங்காலமாக மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியிலே படித்தவர். கருணாவுக்கு பல வருடங்கள் வயதில் மூத்தவர். கருணாவோ கிரானில் ஆரம்பக் கல்வியையும், பின்னர் உயர்தரத்திற்காக மட்டக்களப்பு மத்திய கல்லூரிக்கும் சென்றவர். ஆகவே இவர்கள் இருவரும் பள்ளித்தோழர்கள் என்பது தவறான தகவல்.
2001 இல் கருணா கிழக்கு மாகாணத்தின் சிறப்புத் தளபதியாகப் பதவியேற்று கிழக்கில் செயற்பட ஆரம்பித்திருந்த வேளை, புலிகளின் புலநாய்வுத்துறை தமது அன்றாட தகவல் அறியும் செயற்பாடுகளில் கருணாவுக்கும் இயக்கத்திற்கு வெளியில் இருக்கும் சக்திகளுக்கும் இடையிலான சில தொடர்புகள் பற்றி அறிந்துகொண்டது. யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு சில மாதங்களுக்கிடையில் கிழக்கிலிருக்கும் ஒரு பலம்வாய்ந்த ஐ தே க அரசியல்வாதியூடாக அரசாங்கம் கருணாவுடன் நேரடியாகத் தொடர்பொன்றினை ஏற்படுத்திக்கொள்ள முயற்சித்ததும், இத்தொடர்பிற்கு தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் உதவியினை அரசு கோறியிருந்ததும் புலிகளுக்குத் தெரியவந்தது. அந்தப் பாராளுமன்ற உறுப்பினர் தன்னை ஒரு தமிழ்த் தேசியவாதி என்று கட்டிக் கொண்டாலும், ஐ தே க அரசின் உயர் மட்ட தலைவர்களுடன் நெருக்கமான நட்பினையும் கொண்டிருந்தவர்.
ஆனால், தன் மூலம் கருணாவுக்கும் அரசுக்கும் இடையே உருவாகவிருக்கும் நேரடித் தொடர்பின் தாக்கத்தினை உணர்ந்துகொண்ட அந்த பாராளுமன்ற உறுப்பினர் இறுதிநேரத்தில் ஐ தே க அரசினால் தனக்கு விடுக்கப்பட்ட "கருணாவுடன் நேரடித் தொடர்பு" எனும் வேண்டுகோளினை ஏற்க மறுத்துவிட்டார். அதேநேரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐ தே க சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தவரும், கொழும்பிலேயே தொடர்ச்சியாக வாழ்ந்துவந்தவரும், ஐ தே க வின் உயர்மட்டத்தில் மிகுந்த செல்வாக்குள்ளவருமான ஒரு அரசியல்வாதி கொக்கட்டிச்சோலைக்கு சில கிலோமீட்டர்கள் மேற்கே அமைந்திருக்கும் மறைவிடம் ஒன்றில் கருணாவுடன் ரகசிய பேச்சுக்களில் ஈடுபட்டார்.
இந்தச் சந்திப்புத் தொடர்பாக நன்கு அறிந்துவைத்திருந்த புலிகள், சில மாதங்களுக்குப் பின்னர் ஐ தே க வினர் உங்களோடு தொடர்புகளை ஏற்படுத்த முயற்சிக்கலாம், ஆகவே அவதானமாக இருங்கள் என்று கருணாவை எச்சரித்திருந்தனர், ஆனால் இதற்கான காரணத்தை அவர்கள் அப்போது கருணாவிடம் தெரிவிக்கவில்லை.
ஆனால், புலிகளின் புலநாய்வுத்துறையின் இந்த "ஐ தே க தொடர்பு" எச்சரிக்கையினை கருணா சட்டை செய்யவில்லை. அவரைப்பொறுத்தவரை தலைவர் தன்னை முழுவதுமாக நம்புவதால், தன்பற்றிய புலநாய்வுத்துறையினரின் தகவல்களை தலைவர் ஏற்றுக்கொள்ளமாட்டார் என்றே அவர் நம்பினார். "கருணா அம்மாண் எதைச் செய்தாலும் புலிகளின் நண்மைக்காகவே செய்வார் என்பதை தலைவர் நன்கு அறிவார். அம்மான் பற்றி புலநாய்வுத்துறை காவிச் செல்லும் செய்திகளை தலைவர் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை" என்று கருணாவுக்கு நெருக்கமான கிழக்கு மாகாண போராளி ஒருவர் தெரிவித்தார்.
இதேவேளை, கருணாவுக்கும், ஐ தே க வின் தலைவர் ரணிலின் ஆலோசகரான மெளலானாவுக்கும் இடையிலான நெருக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் இவர்கள் இருவரும் குடும்ப நண்பர்களாகப் பழகத் தொடங்கினர். கருணாவின் மனைவி நிராவும் அவரது இரு பிள்ளைகளும் மெளலானாவின் மனைவியான தனுஜாவைச் சந்திக்க அடிக்கடி கொழும்பிற்குச் சென்றுவரத் தொடங்கினர். இவர்களுக்கிடையிலான நெருக்கம் நாளடைவில் மட்டக்களப்பு நகரில் அமைக்கப்பட்ட சர்வதேச பாடசாலை ஒன்றினைத் திறந்துவைக்கும் நிகழ்விற்கு திருமதி மெளலானாவைக் கருணா குடும்பம் அழைத்துவந்ததுவரை நீண்டு சென்றது. இந்தச் சர்வதேசப் பாடசாலையின் மிக பிரபலமான மாணவர்களாக கருணாவின் பிள்ளைகளும், அவரின் சகாக்களான துரை மற்றும் ராபேர்ட் ஆகியோரின் பிள்ளைகளும் இருந்தனர் என்பதும், இவ்விரு சகாக்களும் தற்போதுவரை (2004) அங்கேயே இருப்பதும் குறிப்பிடத் தக்கது.
கருணாவின் பிள்ளைகளும், ஏனைய தலைவர்களின் பிள்ளைகளும் சொகுசு வாகனங்களில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான மட்டக்களப்பின் மேற்குப்புற காட்டுப்பகுதியிலிருந்து இந்தப் பாடசாலைக்கு வந்துசெல்லத் தொடங்கினர். இந்த நிகழ்வு கருணாவினாலும், அவரது சகாக்களாலும் பலவந்தமாக இயக்கத்தில் சேர்க்கப்பட்ட பிள்ளைகளின் பெற்றோரைக் கடுமையாகப் பாதித்திருந்தது. பல பெற்றோர்கள் இதுதொடர்பான முறைப்பாடுகளை புலிகளின் தலைமைப் பீடங்கள் அமைந்திருந்த கிளிநொச்சிக்கும், புதுக்குடியிருப்பிற்கும் தொடர்ச்சியாக அனுப்பி வந்தனர்.
கிளிநொச்சியிலும் புலிகளால் ஒரு ஆங்கில மூலப் பாடசாலை ஒன்று நடத்தப்பட்டு வந்தது. இயக்கத்தின் தளபதிகளினதோ அல்லது மூத்த உறுப்பினர்களினதோ பிள்ளைகளை இப்பாடசாலையில் அனுமதிப்பதில்லையென்கிற கடுமையான கட்டுப்பாடும் அங்கு நிலவிவந்தது. சமர்களில் கொல்லப்பட்ட போராளிகளின் குடும்பங்களிலிருந்து திறமையுள்ள பிள்ளைகள் தெரிவுசெய்யப்பட்டு இந்தப்பாடசாலைக்குச் சேர்க்கப்பட்டு வந்தனர். ஆகவே, மட்டக்களப்புச் சர்வதேச பாடசாலையில் தனது பிள்ளைகளைக் கருணா இணைத்துக் கற்பித்துவருவது பற்றி கருணாவிடம் பேசிய தலைவர், இது இயக்கத்தின் கட்டுப்பாடுகளுக்கு முரணானது என்பது மட்டுமல்லாமல், கருணாவின் பிள்ளைகள் மற்றும் அவர்களைக் கொண்டு வரும் புலிகளின் போராளின் பாதுகாப்பிற்கும் அச்சுருத்தலான விடயமாக இருக்கும் என்றும் கூறியிருந்தார். புலிகளின் மூத்த தளபதியொருவரின் பிள்ளைகள் பூரண அரச கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிக்குச் சென்றுவருவதும், அரச புலநாய்வுத்துறையினால் அவர்கள் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்படுவதும் பாரதூரமான விடயம் என்பதையும் தலைவர் கருணாவிற்குச் சுட்டிக் காட்டியிருந்தார்.
ஆனால், புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தரமான பாடசாலைகள் இல்லாமயினாலேயே தான் தனது பிள்ளைகளை சர்வதேசப் பாடசாலைக்கு அனுப்பிவருவதாகக் கருணா கூறியபோது, "உனது பிள்ளைகளையும் மனைவியையும் வெளிநாடொன்றிற்கு அனுப்பி அங்கு படிக்கவை, நாட்டில் நிலமை சுமூகமாகி, பிள்ளைகளின் படிப்பிற்குச் சரியான ஒழுங்குகள் செய்யப்பட்ட பின்னர் அவர்களை மீண்டும் இங்கு அழைத்து வா" என்று தலைவர் கருணாவிடம் கூறியிருக்கிறார். கருணாவுக்காக இயக்கத்தின் விதிகளை அவ்வப்போது தளர்த்திய தலைவர், தொடர்ச்சியாக கருணாவின் மனம் கோணாதபடி பார்த்துவந்தார் என்று அவருடன் நெருங்கியவர்கள் கூறுகிறார்கள். தலைவரால் வெளிநாடொன்றிற்கு பிள்ளைகளையும் மனவியையும் அனுப்புமாறு கோரப்பட்டதன் பின்னரே கருணா தனது குடும்பத்தினை மலேசியாவுக்கு அனுப்பிவைத்தார் என்றும், ஆனால் இது தவறுதலாக கருணா இயக்கத்திற்குத் தெரியாமல் குடும்பத்தை அங்கு அனுப்பியதாகவும், செல்லையா ராசதுரை இதற்கு உதவியதாகவும் சில செய்திச் சேவைகள் செய்திவெளியிட்டு வந்திருந்தன.