உக்ரேனியப் பொதுமக்கள் மீதான கூட்டுப் படுகொலைகாளும் ஏனைய வன்முறைகளூம்
மாசி மாதம் 27 ஆம் திகதி சேர்னிவ் பிராந்தியத்தின் ஸ்டேரி பைகீவ் கிராமத்தினுள் புகுந்த ரஸ்ஸியப்படையினர் அங்கு தென்பட்ட 6 ஆண்களை கூட்டாக இழுத்து வந்து தலையில் சுட்டுப் படுகொலை செய்துள்ளனர். இப்படுகொலைகளுக்கு சாட்சியாகத் திகழும் டெட்டியானா இப்படுகொலைகள் குறித்து மனிதவுரிமைக் கண்காணிப்பகத்திடம் புகாரளிக்கையில், "எனது கிராமத்திற்கும் ஸ்டேரி பைகீவுக்கும் இடையில் இருந்த ஒற்றைத் தொடர்பான பாலத்தினத் தகர்த்த ரஸ்ஸிய ராணுவம் இவ்விரு கிராமங்கள் மீதும் மிகக் கடுமையான ஏவுகணைத் தாக்குதலை மேற்கொண்டவாறே அப்பகுதியினை ஆக்கிரமித்துக்கொண்டது. ரஸ்ஸிய ராணூவத்தின் கனரக வாகனத் தொடரணி அவ்வூருக்குள் நுழைவதை நான் கண்ணுற்றேன். உள்நுழைந்த சில நிமிடங்களில் இந்தப் படுகொலைகளை ரஸ்ஸிய ராணுவம் புரிந்தது" என்று கூறுகிறார்.
"கிராமத்தின் அநேகமான மக்கள் கடுமையான எறிகணை வீச்சிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள தமது நிலக்கீழ் பதுங்கு குழிகளுக்குள் தஞ்சம் அடைந்திருந்தனர். இதனையடுத்து ஒவ்வொரு வீடு வீடாகச் சென்ற ரஸ்ஸிய ராணுவத்தினர் வீடுகளுக்குள் இருந்த ஆண்களை வெளியே இழுத்து வந்தனர். அவர்களில் அறுவரை தலையில் சுட்டுக் கொன்றனர்" என்று அவர் மேலும் கூறினார்.
இந்த அறுவரில் இருவர் சகோதரர்கள். இன்னொருவருக்கு வெறும் 20 வயதே ஆகியிருந்தது. இந்த ஆண்களை இழுத்துச் செல்லும்போது, பின்னால் அழுது மன்றாடிக்கொண்டு வந்த தாய்மாரையும் சகோதரிகளையும் மிரட்டிய ரஸ்ஸியப் படையினர், "எம்மைப் பின் தொடர வேண்டாம், இவர்களை விசாரித்துவிட்டு உங்களிடமே திருப்பியனுப்புவோம்" என்று கூறியிருக்கின்றனர். ஆனால், கிராமத்தின் சிறிய மூலையொன்றிற்கு தமது பிள்ளைகள் இழுத்துச் செல்லப்படுவதையும் பின்னர் மறைவான இடமொன்றில் நிரலாகச் சுட்டுக் கொல்லப்பட்டதை வேதனையுடன் பலர் பார்த்ததாக டெட்டியானா மேலும் கூறுகிறார்.
தனது 20 வயது மகனைப் பறிகொடுத்த தாயார் கூறுகையில், "அவர்கள் எனது மகனையும் எனது மைத்துனரையும் எங்களிடமிருந்து இழுத்துச் சென்றார்கள். எம்மை மிரட்டி, அங்கேயே இருக்குமாறு அவர்கள் பணித்துவிட்டே அவர்களை இழுத்துச் சென்றார்கள். அவர்களை இழுத்துக்கொண்டு எங்கே சென்றார்கள் என்பதை நான் அறியேன். எனது மகனையும் மைத்துனரையும் போலவே இன்னும் சில ஆண்களை அவர்கள் இழுத்துச் செல்வதை பலர் பார்த்திருக்கிறார்கள். அவர்களுக்கு என்ன நடக்கப்போகிறதென்பதை உணர்ந்துகொண்ட நான் அருகிலிருக்கும் ரஸ்ஸிய ராணுவத்தின் காவலரணுக்கு ஓடிச்சென்று எனது பிள்ளைகள் எங்கே என்று அவர்களிடம் வேண்டினேன். அதற்கு அங்கு நின்ற ரஸ்ஸிய ராணுவத்தினர். "கலங்க வேண்டாம், அவர்களை சும்மா விசாரித்து மிரட்டுவதற்காகவே அழைத்துச் சென்றிருக்கிறார்கள் , விரைவில் அனுப்பிவைப்பார்கள்" என்று ஏளனத்துடன் கூறியிருக்கிறார்கள். அந்தக் காவலரணிலிருந்து ஒரு 50 மீட்டர்கள் போயிருக்கமாட்டோம், எங்களின் பின்னால் தொடர்ச்சியான துப்பாக்கிச் சத்தம் கேட்கத் தொடங்கியது. சத்தம் வந்த திசைநோக்கி ஓடிச்செல்ல எத்தனித்த எம்மை ரஸ்ஸிய ராணுவம் தடுத்துவிட்டது. மறுநாள் காலை அவ்விடத்திற்குச் சென்றபோது, வயல் வெளியொன்றிற்கு அருகிலிருந்த பாழடைந்த கட்டிடம் ஒன்றில் எனது மகனும், ஏனைய ஐந்துபேரும் சடலங்களாகக் கிடந்ததை நாம் கண்டோம்" என்று வேதனையுடன் கூறுகிறார்.
"கட்டிடத்தினுள் மூவரும், அதற்கு வெளியே ஏனைய மூவருமாக அவர்கள் கொல்லப்பட்டுக் கிடந்தார்கள். அவர்களின் தலைப்பகுதியில் சுட்டே ரஸ்ஸிய ராணுவம் அவர்களைக் கொன்றிருக்கிறது. அவர்களின் கைகள் பின்னால் கட்டப்பட்டிருந்தன. எனது மகனின் சடலத்திலிருந்து அவரது தொலைபேசி, பணம், ஏனைய ஆவணங்கள் என்பவற்றை ரஸ்ஸிய ராணுவத்தினர் திருடியிருந்தார்கள்" என்று அவர் மேலும் கூறினார்.