அவரது கல்வி
தானாகவே பல விடயங்களை அவர் கற்றறிந்து கொண்டாலும்கூட, அவர் மற்றையவர்களைப்போலவே பாடசாலைக் கல்வியினை முறைப்படி கற்றவர்தான். அவரது ஆரம்பக் கல்வி ஆலடிப் பள்ளிக்கூடம் என்றழைக்கப்படும் ஆலடி சிவகுரு வித்தியாலயத்திலே தொடங்கியது. அவர் தனது உயர்கல்வியினை வல்வை சிதம்பராக் கல்லூரியில்யில் பத்தாம் வகுப்பு வரைதொடர்ந்தார், ஆனாலும் இந்த வகுப்பில் நடக்கும் சாதாரணதரப் பொதுப்பரீட்சையில் அவர் பங்கெடுக்கவில்லை.
பாடசாலையில் மிகவும் கலகலப்பாக இருந்த பிரபாகரன் பாணந்துறையில் சைவப் பூசகர் எரியூட்டப்பட்டுக் கொல்லப்பட்ட விடயம் தொடர்பாக மிகுந்த வருத்தம் அடைந்திருந்ததாக அவரது பாடசாலை நண்பர்கள் நினைவுகூர்ந்தனர். தற்போது கொழும்பில் செல்வந்த வர்த்தகராக இருக்கும் பிரபாகரனின் பள்ளிக்கால நண்பர் ஒருவர் இச்சம்பவம் பற்றிக் கூறுகையில், "அதுபற்றிப் பேசும்போதெல்லாம் அவரது கண்களில் கண்ணீர் வழிந்து ஓடுவதை நான் பார்த்திருக்கிறேன்" என்று கூறுகிறார். வீட்டில் தனது தகப்பனாரோடு தான் பேசும் அரசியல் சார்ந்த விடயங்களை தனது பள்ளி நண்பர்களோடு பகிர்ந்துகொள்ள பிரபாகரன் தவறுவதில்லை.
பாடசாலையிலிருந்து வீடு வரும்வழியில் அவருக்கென்று ஒரு பொழுதுபோக்கு இருந்தது. அதுதான் கவணில் கல்லுவைத்து இலக்கு நோக்கி எறிவது. மாம்பழங்களையும், விளாம்பழங்களையும் அவர் கவனால் சுட்டு வீழ்த்துவதில் கைதேர்ந்தவராக இருந்தார். தனது நண்பர்களிடம் கல்லொன்றை மேலே எறியச் சொல்லிவிட்டு அதனை கவனால் இலக்குவைத்து எறிந்து பழகுவார். அவ்வப்போது சில அணில்களும் அவரது கவனுக்கு இரையாகியிருக்கின்றன.
வல்வை சிதம்பராக் கல்லூரியில் அவருக்குக் கல்விகற்பித்த பல ஆசிரியர்கள் அவர் பற்றிக் கூறும்போது அவர் வகுப்பில் சராசரி மாணவனாகவே கல்வியில் விளங்கியதாகக் கூறினார்கள். தான் கற்கும் புத்தகக் கல்வியினை விட அரசியலிலேயே அவருக்கு அதிக ஆர்வம் இருப்பதை தாம் அவதானித்ததாக அவர்கள் கூறுகிறார்கள். தனது மகனை கட்டிட பொறியியலாளனாக உருவாக்க நினைத்த வேலுப்பிள்ளைக்கு பிரபாகரனின் பாடசாலைக் கல்வியின் தரம் கவலையினை ஏற்படுத்தியிருந்தது. அதனால், அவரின் கல்வியறிவினை மேம்படுத்த வல்வை கல்வியியல் நிறுவனம் எனப்படும் தனியாருக்குச் சொந்தமான நிலையத்திற்கு அனுப்பி வைத்தார். 8 ஆம் வகுப்பில் கல்விகற்ற வந்த அவருக்கு அப்போது 14 வயது. அங்கேதான் பிரபாகரனுக்கு வேணுகோபால் எனும் ஆசிரியரின் சிநேகம் கிடைத்தது. சமஷ்ட்டிக் கட்சியின் இளைஞர் பிரிவின் அங்கத்தவராக இருந்த வேணுகோபால், பிரபாகரனுக்குத் தமிழ் சொல்லித் தந்தார். அடிக்கடி அரசியல் பேசும் வேணுகோபாலுக்கு ஒரு கவலை இருந்தது. அதுதான் சமஷ்ட்டிக் கட்சியினரின் அரச எதிர்ப்பு என்பது உயிர்ப்புடன் இல்லையென்பது. அக்காலத்தில் சமஷ்ட்டிக் கட்சியின் முக்கிய உறுப்பினர் ஒருவருடன் சேர்ந்து வேணுகோபால் சுயாட்சிக் கழகம் எனும் தீவிர சுயாட்சிக் கட்சியொன்றை ஆரம்பித்திருந்தார். இவர்களது தீவிர அரசியல் கண்ணோட்டத்தினால் சம்ஷ்ட்டிக் கட்சியிலிருந்து வேணுகோபாலும் அவரது நண்பரும் விலக்கப்பட்டிருந்தார்கள்.
தனது தமிழ் ஆசானான வேணுகோபால் தனது அரசியல் வாழ்வில் பெருமளவு தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்ததாக பிரபாகரன் ஒருமுறை கூறியிருந்தார்.
"ஆயுதப் போராட்டமே தமிழருக்கான ஒரே தீர்வு எனும் நம்பிக்கையினை என்னில் முதன்முதலில் ஏற்படுத்தியவர் எனது ஆசிரியர் வேணுகோபால் தான். எனது கிராமம் ஒவ்வொருநாளும் ராணுவ அழுத்தத்தினைச் சந்தித்து வந்தது. உலகின் பல நாடுகளிலும் சுதந்திரத்திற்காகப் போராடிவரும் மக்கள் கூட்டங்கள் பற்றி என்னுடன் பேசும் அவர், பாராளுமன்ற அரசியலினால் எதனையும் சாதிக்க முடியாது எனும் கருத்தினை தீவிரமாக முன்வைத்து வந்தார். 14 வயது நிரம்பிய எனக்கும் நாமும் எம்மை தயார்ப்படுத்திக்கொண்டு திருப்பித் தாக்க வேண்டும் என்கிற எண்ணம் தோன்றியது. அத்துடன், தமிழர்களுக்கென்று தனியான நாடு நிச்சயம் எமக்கு வேண்டும் என்கிற உணர்வும் அப்போதிருந்து எனக்கு ஏற்பட்டிருந்தது".
தனது தீர்மானத்தில் உறுதியான பிரபாகரன்
தமிழர்கள் திருப்பித் தாக்குவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை என்று பிரபாகரன் கொண்டிருந்த கருத்தினை வேணுகோபால் ஆசிரியரின் பாராளுமன்ற அரசியலால் தமிழருக்கு எதுவுமே கிடைக்கப்போவதில்லை என்கிற கருத்து மேலும் உறுதிப்படுத்தியிருந்தது. 14 வயதே நிரம்பியிருந்த பிரபாகரன் எனும் அந்தச் சிறுவன் ஆயுதப் போராட்டத்திலும், தனிநாட்டிற்கான தேவையிலும் மேலும் மேலும் நம்பிக்கை வைக்கத் தொடங்கினார்.
திரு வேணுகோபால் இருவகையான கருத்தாடல்களை முன்வைத்தார். முதலாவது, எண்ணிக்கையில் சிறுபான்மையினராக தமிழர்கள் இருந்தாலும் கூட அவர்கள் தனியான தேசம் ஒன்றிற்கு சொந்தக்காரர்கள். ஒரு தனியான தேசம் ஒன்றிற்கான சகல இலக்கணங்களையும் அவர்கள் கொண்டிருக்கிறார்கள். தனித்துவமான அடையாளம், தனித்துவமான மொழி, மதம், கலாசாரம், வரலாறு, பண்பாடு, தனியான பூர்வீகத் தாயகம் மற்றும் இவையெல்லாவற்றிற்கும் மேலாக தமது அடையாளத்தை எப்பாடு பட்டாவது காத்துக்கொள்ளவேண்டும் என்கிற அணையாத அவா ஆகியன தமிழர்கள் தமக்கான தேசம் ஒன்றிற்கு உரித்துடையவர்கள் என்பதை உறுதிப்படுத்துவதாக அவர் வாதிட்டார். தமது அடையாளத்தை எவ்விலை கொடுத்தாவது காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே சரித்திர காலத்திலிருந்து அவர்களின் தாயகம் மீது நடத்தப்பட்ட பல சிங்களப் படையெடுப்புக்களை அவர்கள் தோற்கடித்து வந்ததுடன், அவற்றிற்கான முயற்சிகளையும் முளையிலேயே கிள்ளி எறிந்தும் வந்திருந்தனர். சில சமயங்களில் தெற்கிலிருந்து தமிழர் தாயகம் மீது மேற்கொள்ளப்பட்ட பல சிங்கள படையெடுப்புக்களை தோற்கடித்து தெற்குநோக்கியும் தமது தாயகத்தை சற்றே விரிவுபடுத்தியும் இருந்தனர்.
வேணுகோபால் முன்வைத்த இரண்டாவது கருதுகோள், பாராளுமன்ற அரசியலினை நம்பி அன்றைய தமிழ்த் தலைமை முன்னெடுத்துவரும் எந்த நடவடிக்கையும் தமிழர்களின் அரசியல் உரிமைகளைப் பெற்றுத்தரப்போவதில்லை என்பதனால், தமிழருக்கு இருக்கும் ஒரே தெரிவு ஆயுதப் போராட்டமே என்பதுதான்.
தனது மாணவர்களிடையே பேசும்போது வேணுகோபால் ஒரு விடயத்தினை அடிக்கடி முன்வைத்து வந்தார். அதாவது, பல்லின சமூகங்கள் வாழும் நாடொன்றில், ஒற்றையாட்சிக் கோட்பாட்டினைப் பாவிப்பதன் மூலம் எண்ணிக்கையில் பெரும்பான்மயான இனம் தனது நிலையினை ஸ்த்திரப்படுத்தி ஏனைய சிறுபான்மையினங்களை அடக்கியாண்டு அடிமைப்படுத்தி விடும் என்றும், இதற்கு இலங்கையே சிறந்த உதாரணம் என்றும் கூறிவந்தார்.
தமிழரின் நிலங்களை பலாத்காரமாக வல்வளைத்து அவற்றில் தனது இனமக்களை குடியேற்றிய சிங்கள அரசுகள், அப்பகுதியின் தேர்தல் வாக்கு பலத்தைத் தமக்குச் சார்பானதாகவும் மாற்றிக்கொண்டனர். பாராளுமன்றத்தில் உள்வாங்கப்படும் தமிழ் உறுப்பினர்களின் எண்ணிக்கையினைத் திட்டமிட்டுக் குறைப்பதன்மூலம், அரசாட்சியில் தமிழரின் பங்களிப்பைக் குறைப்பதே இதன் நோக்கமாக இருந்தது. அத்துடன், சுமார் 10 லட்சம் மலையகத் தமிழரின் வாக்குரிமையினைப் பறித்ததன் மூலம் அவர்களை நாடற்றவர்கள் ஆக்கியதோடு, அரசியல் அநாதைகளாகவும் மாற்றிவிட்டிருந்தனர். இதற்கு மேலதிகமாக, சிங்களம் ஒன்றே ஆட்சி மொழி என்று சட்டம் கொண்டுவந்ததோடு, தமிழ் மொழியின் முக்கியத்துவத்தைச் சிதைத்து, அரச உத்தியோகஸ்த்தர்களாக வர விரும்பின் தமிழர்கள் கட்டாயம் சிங்கள மொழியினைக் கற்கவேண்டும் எனும் சட்டத்தையும் கொண்டுவந்தனர்.
எதிர்பார்த்ததைப்போலவே உத்தியோகபூர்வ மொழிச் சட்டம், வேலைவாய்ப்பில் பாரபட்சம் ஆகிய இனவாத நடவடிக்கைகளை தமிழர்கள் முழுமூச்சாக எதிர்த்தனர். தமிழரின் அகிம்சை ரீதியிலான போராட்டங்களை அரசு ஒருங்கமைக்கப்பட்ட சிங்களக் காடையர் கூட்டங்களைக் கொண்டும், அரச ராணுவத்தினரைப் பாவித்தும் ஆயுதமுனையில் மிகவும் மூர்க்கத்தனமாக அடக்கி வந்தது. தமிழர்களால் முதன்முதலாக மேற்கொள்ளப்பட்ட காலிமுகத்திடல் சத்தியாக் கிரக நடவடிக்கையினை அரச ஆதரவுபெற்ற சிங்களக் காடையர்களை அனுப்பி கலைத்தததுடன், தமிழர்கள் இனிமேல் அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டங்களை, குறிப்பாக தலைநகர் கொழும்பில் செய்வதற்கான எண்ணங்களையும் முற்றாகவே அடித்து நொறுக்கியிருந்தது. அதுமட்டுமல்லாமல், தமிழர்களின் எந்தவொரு பிற்கால ஜனநாயக ஆர்ப்பாட்டமும் மிகவும் மூர்க்கத்தனமாக சிங்கள அரசுகளால் அடக்கப்படும் எனும் எச்சரிக்கையினையும் இந்த அராஜகம் மூலம் சிங்கள அரசு விடுத்திருந்தது.
சமாதான முறையில் பொதுமக்கள் அரசியல் நோக்கத்திற்காக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட முடியாது எனும் பிரகடனத்தை 1961 ஆம் ஆண்டிலிருந்து மேலும் 5 வருடங்களுக்கு அப்போதைய அரசு நீடித்தது. இந்தச் சட்டம் தமிழரின் தாயகமான வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கும் கொண்டுவரப்பட்டதுடன், இந்தச் சட்டத்தை நிலைநாட்டவென பெருமளவு சிங்கள ராணுவமும் தமிழரின் தாயகத்திற்கு அனுப்பிவைக்கப்படது. இதே வருடத்தில் சமஷ்ட்டிக் கட்சியின் தலைவர் செல்வநாயகம் தனிச்சிங்களச் சட்டத்திற்கெதிராக அமைதிவழிப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தார். தமிழர் தாயகத்தில் ஐந்து அரச கச்சேரிகளுக்கு தமிழ் அதிகாரிகள் சிங்கள மொழியில் தமது அலுவல்களைச் செய்வதற்குச் செல்வதனைத் தடுத்தே இந்த ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்ட செயலகங்களுக்கு முன்னால் தந்தை செல்வா தலைமையிலான சமஷ்ட்டிக் கட்சியினர் வாயில்களை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக அவசர காலச் சட்டத்தினை நடைமுறைப்படுத்திய சிங்கள அரசு, ஊரடங்கு உத்தரவினையும் பிரயோகித்தது. அவசர காலச் சட்டத்தின் அதிகாரங்களைப் பாவித்து இந்த அமைதிவழி ஆர்ப்பாட்டங்களை ராணுவத்தைக் கொண்டு மிகவும் கொடூரமாக அடக்கிய அரசு, பல தமிழ் அரசியல்த் தலைவர்களையும் சிறையில் அடைத்தது.
1961 ஆம் ஆண்டு திருகோண்மலையில் சத்தியாக் கிரகத்தில் ஈடுபடும் தந்தை செல்வா, தம்பையா ஏகாம்பரம், ராஜவரோதியம் ஆகியோர்.
பாராளுமன்றத்திற்கு வெளியேயான அமைதிவழி ஆர்ப்பாட்டங்களைச் செய்யும் உரிமை தமிழ் மக்களிடமிருந்து முற்றாகப் பறிக்கப்பட்டது. அத்துடன் பாராளுமன்றம் ஊடாக தமிழர்கள் தமக்கான உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்கிற கனவும் சிங்களவர்களால் மிகவும் திட்டமிட்டுத் தோற்கடிக்கப்பட்டது. தமிழ்த் தலைவர்களால் இருவேறு சிங்கள அரச தலைவர்களின் சம்மதத்துடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களும் அவர்களாலேயே கிழித்தெறியப்பட்டது. 1957 இல் செல்வாவுடன் பண்டாரநாயக்கா செய்துகொண்ட ஒப்பந்தம், தனது வீட்டின் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெளத்த துறவிகளுக்குப் பயந்து முற்றாகக் கைவிடப்பட்டது. இதன் அடையாளமாக பெளத்த துறவிகளின் முன்னிலையில் தான் செல்வாவுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் மூலத்தை பண்டா சிறு சிறு துண்டுகளாகக் கிழித்தெறிந்து, பெளத்த துறவிகளுக்கான தனது விசுவாசத்தைக் காட்டிக்கொண்டார். அவ்வாறே, 1965 இல் செல்வாவுடன் டட்லி சேனநாயக்க செய்துகொண்ட ஒப்பந்தமும் கிழித்தெறியப்பட்டது. 3 வருடங்கள் ஆகியும் ஏன் ஒப்பந்தத்தில் நீங்கள் ஒத்துக்கொண்ட விடயங்களை இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை என்று தந்தை செல்வா டட்லியிடம் கேட்டபோது, "பெளத்த துறவிகளின் எதிர்ப்பினை மீறி இந்த ஒப்பந்தத்தினை என்னால் நடைமுறைப்படுத்த முடியாது" என்று மிகச் சாதாரணமாக டட்லி கூறினார்.
பாராளுமன்ற ஆசனங்களை வைத்துக்கொண்டு சிங்கள அரசுகளை பதவியில் அமர்த்தியும், தேவைப்படின் பதவியிலிருந்து அகற்றியும் தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமைகளைப் பெற்றுவிடலாம் என்று தந்தை செல்வா முன்னெடுத்த எந்தச் சதுரங்க ஆட்டமும் வெற்றியளிக்கவில்லை. 1960 இல் இலங்கை சுதந்திரக் கட்சியுடன் சேர்ந்துகொண்ட செல்வா அவர்கள், டட்லியின் அரசை வீட்டிற்கு அனுப்புவதன் மூலம் சுதந்திரக் கட்சியின் தலைமையில் தமிழர்களுக்கான உரிமைகளைப் பெற்றுவிடலாம், அவர்களின் அவலங்களைத் தீர்த்துவிடலாம் என்று நம்பினார். ஆனால், ஆட்சிக்கு வந்த சுதந்திரக் கட்சியின் புதிய பிரதமர் சிறிமா, ஒப்பந்தத்தில் கூறப்பட்ட எதனையும் நடைமுறைப்படுத்த முடியாது என்று திட்டவட்டமாக மறுத்து விட்டார். அத்துடன் நின்றுவிடாமல், தனிச்சிங்களச் சட்டத்தை மிகத் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்போவதாக சூளுரைத்தார். 1965 இல் கட்சி மாறிய தந்தை செல்வா, டட்லி சேனநாயக்க மீண்டும் ஆட்சியமைக்க உதவினார். ஆனால், மீண்டுமொருமுறை அவர் சிங்களத் தலைவர்களால் எம்மாற்றப்ப்ட்டுப் போனார்.
இந்த அரசியல் ரீதியான தமிழரின் நடவடிக்கைகளின் படு தோல்வியினை அடிக்கடி விமர்சித்து வந்த வேணுகோபால், பாராளுமன்ற அரசியலோ, அமைதிவழி ஆர்ப்பாட்டங்களோ தமிழரின் அவலங்களுக்கு ஒருபோதுமே தீர்வாக அமையப் போவதில்லை என்று தனது மாணவர்களிடம் கூறிவந்தார்.
"பாராளுமன்ற ஜனநாயகத்தின்மூலம் உலகின் எந்தவொரு இனச் சிக்கலும் இதுவரை கெளரவமாகத் தீர்த்து வைக்கப்படவில்லை. ஆயுதப் போராட்டங்களின் மூலமே இனப்பிரச்சினைகள் தீர்த்துவைக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுதந்திரம் கிடைத்திருக்கிறது, பாராளுமன்றம் மூலமான அரசியல்ச் செயற்பாடுகள் ஒருபோதும் வெற்றிபெற்றிருக்கவில்லை" என்று கூறிவந்திருந்தார் வேணுகோபால்.