தமது முடிவில் உறுதியான இளைஞர்கள்
அமிர்தலிங்கம் காங்கேசன்துறையில் நிகழ்த்திய பேச்சு தமிழ் இளைஞர்களிடைய அன்றைய காலத்தில் சிங்கள அரசுமீது எழுந்துவந்த கடுமையான அதிருப்தியைப் பிரதிபலித்திருந்தது. தெற்கின் மக்கள் விடுதலை முன்னணியினரின் பாதையினையும், வங்கதேசத்து அவாமி லீக்கின் பாதையினையும் தமிழர்களும் பின்தொடரவேண்டும் என்று இளைஞர்கள் கடுமையான அழுத்தம் கொடுத்து வந்திருந்தனர்.
மக்கள் விடுதலை முன்னணியினரின் கலகமும், வங்கதேச விடுதலையும் தமிழ் இளைஞர்களை ஆயுதப் போராட்டம் மீதான நம்பிக்கையினையும், அதனையே தாமும் செய்யவேண்டும் என்கிற உற்சாகத்தினையும் கொடுத்திருந்தது. அரசியலமைப்பினை வரைந்தவர்கள் சிங்களவர்களின் நலன்களை மட்டும் முன்னிறுத்தி அதனை வரைந்ததையும், தமிழர்களின் பிரச்சினைகள் குறித்து செவிமடுக்கவே அவர்கள் விரும்பவில்லையென்பதனையும் தமிழ் இளைஞர்கள் நன்றாக உணர்ந்திருந்தார்கள். புதிய அரசியலமைப்பு நகலானது இலங்கையின் ஒற்றையாட்சியை முன்னிறுத்தியதோடு, பெளத்த மதத்திற்கும், சிங்கள மொழிக்கும் நாட்டின் ஏனைய மதங்கள் மொழிகளைக் காட்டிலும் அதீத முக்கியத்துவம் கொடுத்தே வரையப்பட்டிருந்ததை இளைஞர்கள் தெளிவாகப் புரிந்திருந்தார்கள். இவை மூன்றும் சட்டமாக்கப்பட்டு அமுல்ப்படுத்தப்படும்பொழுது தமிழர்கள் இலங்கையில் முக்கியத்துவமற்றை பத்தோடு பதின்றான இனமாக கணிக்கப்படுவார்கள் என்பதனையும் அவர்கள் புரிந்துகொண்டார்கள்.
இது நடப்பதை எப்படியாவது தடுத்து நிறுத்தவேண்டும் என்கிற உணர்வு இளைஞர்களிடையே உருவானது. வங்கதேசத்தில் அவாமி லீக் மக்களை ஒன்றுதிரட்டியதைப் போன்று தாமும் தமிழ் மக்களை ஒன்றுதிரட்ட முடியும் என்று அவர்கள் திடமாக நம்பினார்கள். தமது இலக்கு நோக்கி துரிதமாகவும், உறுதியாகவும் அவர்கள் செயற்படத் தொடங்கினார்கள். தமிழர்கள் அனைவரும் ஒன்றாக இணையவேண்டும் என்றும், அரசியல்த் தலைமைகள் அவர்களுக்கான பாதையினை வகுக்க வேண்டும் என்று அவர்கள் கூறினார்கள். அமிர்தலிங்கம் காங்கேசந்துறையில் பேசியது அன்றைய இளைஞர்களின் மனநிலையைத்தான் : தீவிரமாகப் போராடுவோம், தேவையேற்படின் இரத்தம் சிந்தவும் தயங்கமாட்டோம், தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதே அன்றைய இளைஞர்களின் சுலோகமாகிப் போனது.
இனவெறி ஊட்டப்பெற்று, தமிழர்களுக்கெதிராக இனவாதம் கக்கிக் கொண்டிருந்த சிங்கள ஊடகங்கள் இலங்கையின் நலன்களும், அரசியலும் எனப்படுவது சிங்களவரின் நலன்களும் அரசியலும்தான் என்று நிறுவுவதற்கு மும்முரமாக முயன்றுவந்த சூழ்நிலையிலேயே அமிரின் காங்கேசந்துறை பேச்சும் இடம்பெற்றிருந்தது. ஆகவே, அமிர்தலிங்கத்தை நாட்டுப்பற்றில்லாதவர் என்று அவை விழித்து எழுதிவந்தன. குறிப்பாக சண் எனும் பேர்போன இனவாதப் பத்திரிக்கை அமிரின் பேச்சு அவரின் தனிப்பட்ட கருத்தேயன்றி சமஷ்ட்டிக் கட்சியில் அரசியல் நிலைப்பாடு அல்ல என்று எழுதியது. ஆனாலும், அமிரின் பேச்சினை இந்தியா வங்கதேசத்து விடுதலைப்போரில் வங்காளிகளுக்கு ஆதரவாக களமிறங்கிய பின்னணியில் வைத்து அணுகப்பட வேண்டிய ஒரு விடயம் என்று ஆசிரியர்த் தலையங்கமும் தீட்டியது சண். ஆனால், இங்கே சண் உட்பட இனவாதப் பத்திரிக்கைகளோ அல்லது சிறிமாவின் அரசோ கவனிக்கத் தவறிய ஒருவிடயம் என்னவென்றால், அமிர் அன்று பேசியது ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தினதும் அரசியல் அபிலாஷையும், அன்று அந்த இனம் அடைந்திருந்த விரக்தியையும் தான் என்பது.
அமிரின் காங்கேசந்துறை பேசு நடந்த சில தினங்களுக்கு பின்னர் அக்கூட்டத்தில் பங்குபற்றியவர்களிடமிருந்து வாக்குமூலங்களைப் பெறுமாறு சிறிமாவின் அரசு யாழ்ப்பாணாப் பொலீஸாருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன்படி அந்த கூட்டத்தில் பங்கேற்ற பலரிடமிருந்து பொலீஸார் வாக்குமூலங்களை பதிவுசெய்துகொண்டனர். மேலும், அமிருக்கெதிராக கடுமையான விமர்சனத்தைக் கட்டவிழ்த்து விட்ட சிறிமாவோ அரசு அவரை நாட்டுக்கு எதிரானவர் என்றும், இரட்டை நாக்குக் கொண்டவர் என்றும், தெற்கில் சிங்களவரிடம் ஒரு கருத்தையும், வடக்கில் தமிழரிடம் ஒரு கருத்தையும் முன்வைக்கும் பொய்யர் என்றும் வசைபாடியது. அதேவேளை அமிர்தலிங்கத்தின் அரசியல் நடவடிக்கைகள் மிகவும் மேலோட்டமனாவை, தீவிரமற்றவை என்று இளைஞர்களும் தம் பங்கிற்கு அவருக்கெதிரான விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கியிருந்தனர்.
அரசியலமைப்பு உருவாக்கச் சபையினரால் வரையயப்பட்ட நகலினை ஆராய்வதற்கென்று சமஷ்ட்டிக் கட்சி 1972 ஆம் ஆண்டு தை 30 ஆம் திகதி ஒரு மாநாட்டைக் கூட்டியிருந்தது. யாழ்ப்பாணத்தில் கூட்டப்பட்ட இந்த மாநாட்டின் நோக்கத்திற்கெதிராக இளைஞர்கள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்தனர். சிங்கள அரசியல்த் தலைவர்கள் தமிழருக்கான நீதியை ஒருபோதுமே தரப்போவதில்லையென்பதனால், அவர்களின்பின்னால் பிச்சையெடுக்கப் போகாதீர்கள் என்று அவர்கள் சமஷ்ட்டிக் கட்சியினரைப் பார்த்துக் கூறினர். தமிழ் மக்கள் மீதான அடிமைச் சாசனமே இந்த புதிய அரசியலமைப்பு என்று விழித்த இளைஞர்கள் இந்த நகலை சமஷ்ட்டிக் கட்சியினரின் மாநாட்டில் முற்றாக புறக்கணிக்க வேண்டும் என்றும் கோரினர். இளைஞர்களின் அழுத்தத்திற்குச் செவிசாய்த்து சமஷ்ட்டிக் கட்சியும் அந்த நகலை தாம் நிராகரிப்பதாக அறிவித்தது. மேலும், அந்த புதிய அரசியலமைப்பு தமிழர் மீதான அடிமைச் சாசனம் என்பதனால் அதனை முற்றாக தாம் நிராகரிப்பதாகவும் உத்தியோகபூர்வமாக அறிவித்தது.
உத்தேச அரசியல் யாப்பு நகலை நிராகரித்த அதேவேளை தனது மாநாட்டின் தீர்மானங்களாக 4 அம்சக் கோரிக்கையினையும் சமஷ்ட்டிக் கட்சி முன்வைத்தது,
1. சிங்கள மக்களுக்கான அதே அந்தஸ்த்து தமிழ் மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.
2. இலங்கை மதச்சார்பற்ற நாடாக அறிவிக்கப்பட வேண்டும்.
3. இலங்கையைத் தமது தாய்நாடாகக் கொண்ட அனைவருக்கும் இந்நாட்டின் பிரஜாவுரிமை வழங்கப்பட வேண்டும்.
4. தமிழர்கள் தமது பூர்வீக தாயகத்தில் தம்மைத்தானே ஆள்வதற்கான உரிமை வழங்கப்பட வேண்டும்.
என்பவையே சமஷ்ட்டிக் கட்சியினால் முன்வைக்கப்பட்ட நான்கு அமசக் கோரிக்கைகள் ஆகும்.
சமஷ்ட்டிக் கட்சியினால் முன்வைக்கப்பட்ட இந்த நான்கு அம்சக் கோரிக்கையினை இளைஞர்கள் கடுமையாக விமர்சித்தனர். சிங்கள யாப்புருவாக்கிகளால் நிராகரிக்கப்பட்ட தமிழரின் கோரிக்கைகளையே மீண்டும் சமஷ்ட்டிக் கட்சி தனது நான்கு அம்சக் கோரிக்கையாக முன்வைத்திருக்கிறது என்று அவர்கள் எள்ளி நகையாடினர்.
" இந்த வயோதிப அப்புக்காத்துமாருக்கு தமது பழமைவாதப் பழக்கங்களை அவ்வளவு இலகுவில் விட்டுவிடமுடியாது போலிருக்கிறது" என்று அவர்கள் கூறினர். சமஷ்ட்டிக் கட்சியினரின் செயற்பாடுகள் நம்பிக்கையிழந்த இளைஞர்கள் தாமே நேரடியாக மக்களிடம் செல்வதென்று முடிவெடுத்தனர். ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலும் மக்கள் கூட்டங்களையும் பேரணிகளையும் அவர்கள் ஒழுங்கு செய்தார்கள். தமது உணர்வுகளை கிராமம் கிராமமாக அவர்கள் எடுத்துச் சென்றார்கள். வீதி நாடகங்களையும், பேரணிகளையும் நடத்திய இளைஞர்கள் சிங்களவர்கள் தமிழரை அடிமைகொள்ளப் போகிறார்கள், ஆகவே எதிர்த்துப் போராடுவதற்குத் தயாராகுமாறு மக்களை உணர்வேற்றினர்.
இளைஞர்களின் வழிக்கே வந்த தலைவர்கள்
இளைஞர்களால் மக்கள் மத்தியில் உருவாக்கப்பட்ட உணர்வு அலையினால் தலைவர்களும் ஆட்கொள்ளப்பட்டுப் போயினர். தனியான நாட்டிற்கான போராட்டத்திற்கு இரு வழிகளை அவர்கள் பின்பற்றத் தீர்மானித்தனர்.
கோவை மகேசன் (படத்தின் வலதுபக்கத்தில்) , செல்வநாயகம், அமிர்தலிங்கம் மற்றும் திருமதி அமிர்தலிங்கம் ஆகியோர் அண்ணாத்துரையின் இல்லத்தில். மற்றையவர்கள் தி. மு. க வின் மாணவர் தலைவர் ஜனார்த்தனம், மலையகத் தமிழ்த் தலைவர் மாவைத்தம்பி ஆகியோர்.
முதலாவதாக இந்த போராட்டத்திற்கான தமிழ்நாட்டின் தார்மீக ஆதரவினைப் பெற்றுக்கொள்வதென்பது. தமிழகத் தலைவர்களின் ஆதரவினை ஒருங்கிணைக்க தந்தை செல்வாவும், அமிர்தலிங்கமும் 1972 ஆம் ஆண்டு, மாசி மாதம் 20 ஆம் திகதி தமிழ்நாட்டிற்குச் சென்றனர். அவர்கள் தமிழக முதல்வராக இருந்த முத்துவேல் கருனாநிதி, கல்வியமைச்சர் வி. ஆர். நெடுஞ்செழியன், முன்னாள் முதலமைச்சர் எம். பக்தவச்சலம், திராவிடர் கழகத் தலைவர் பெரியார் ஈ. வி. ராமசாமி நாயக்கர், இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் கே. காமராஜ், தமிழர் கழகம் தலைவர் எம். பி. சிவஞானம் மற்றும் முஸ்லீம் லீக்கின் தலைவர் காயித்தே மில்லத் ஆகியோரைச் சந்தித்தனர்.
தமிழகத்தில் அரசியல்த் தலைவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடல்களில் ஈடுபட்ட தந்தை செல்வா, இலங்கையில் சிங்களவர்கள் தமிழர்களை அடிமைகளாக்க முயற்சிப்பதால், தமிழர்கள் தனிநாட்டினைக் கேட்பதைத்தவிர வேறு வழியில்லை என்று கூறினார். தமிழரின் தனிநாட்டுப் போராட்டம் அகிம்சை முறையிலேயே நடத்தப்படும் என்றும் அவர் அங்கு கூறினார். செல்வாவும் காமராஜரும் 1961 ஆம் ஆண்டின் சத்தியாக்கிரகப் போராட்டம் மற்றும் இந்திய சுதந்திரப் போராட்ட நிகழ்வுகள் குறித்து பரஸ்பரம் உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டார்கள். ஆனால், தந்தை பெரியார் மட்டுமே தந்தை செல்வாவின் வன்முறையற்ற விடுதலைப் போராட்டம் குறித்து சந்தேகத்தினை எழுப்பினார். "தர்மத்திற்கு மதிப்பளிக்கத் தெரியாத ஒரு அதிகாரத்துடன் அகிம்சை வழியில் போராடி உங்களுக்கான நீதியினை வென்றுவிட உங்களால் முடியுமா?" என்று அவர் தந்தை செல்வாவைப் பார்த்துக் கேட்டார். பெரியாரின் கேள்விக்குப் பதிலளிக்க முடியாமல்த் தடுமாறிய செல்வா ஒருவாறு தன்னைச் சுதாரித்துக்கொண்டு, "ஈற்றில் தர்மமே வெல்லும்" என்று கூறி முடித்தார்.
செல்வா தலைமையிலான தமிழ்த் தலைவர்களின் கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட தமிழகத் தலைவர்கள் , தமிழரின் தனிநாட்டிற்கான அகிம்சை வழிப்போராட்டத்திற்கான தார்மீக ஆதரவை நல்குவதாக ஒப்புக்கொண்டதோடு, இதுகுறித்துப் பிரதமர் இந்திரா கந்தியுடனும் பேசப்போவதாகவும் தெரிவித்தனர்
சென்னை மேயர் காமாட்சி ஜெயராமனினால் தமிழ்த் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட மக்கள் வரவேற்பில் பேசிய அவர், தமிழக மக்கள் இலங்கைத் தமிழ்மக்களின் போராட்டத்தில் உற்றதுணையாக இருப்பார்கள் என்று கூறினார். அவர்களிடம் பேசிய தந்தை செல்வா தமிழர்களின் போராட்டம் வன்முறையற்ற அகிம்சை ரீதியிலேயே நடைபெறும் என்றும், தமிழ்நாட்டுத் தமிழர்களின் தார்மீக ஆதரவே தாம் வேண்டி நிற்பதாகவும் அவர் மீண்டும் கூறினார்.
சுமார் 3 மாதங்களுக்குப் பின்னர், வைகாசி 14 அன்று தந்தை செல்வா மக்களை இன்னொரு போராட்டத்திற்குத் தயார்ப்படுத்தத் தொடங்கினார். தமிழ் அரசியல்த் தலைவர்களையும், முக்கிய தமிழ் தலைவர்களையும் திருகோணமலை நகர மண்டபத்தில் கூடுமாறு அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார். சமஷ்ட்டிக் கட்சித் தலைவர்கள், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தலைவர்கள், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஈழத் தமிழர் ஒற்றுமை முன்னணி, அகில இலங்கை தமிழ் மாநாடுக் கட்சியினர் மற்றும் தமிழ் தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியட் கட்சி சாரா செயற்பாட்டாளர்கள் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் பங்கேற்ற இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் தொண்டைமான் பின்னர் பேசும்போது, இக்கூட்டம் ஒழுங்குசெய்யப்பட்டதன் நோக்கம் மொத்த தமிழ்ச் சமூகத்தினதும் ஒருமித்த அபிலாஷைகளைப் பிரதிபலிக்கும் ஒற்றை அரசியல் அமைப்பான தமிழர் ஐக்கிய முன்னணி எனும் கட்சியை ஸ்த்தாபிக்கவே என்று கூறினார். இலங்கைத் தமிழரின் போராட்டங்களிலிருந்து அதுவரைக்கும் தனது கட்சியான தொழிலாளர் காங்கிரஸை விலத்தியே வைத்திருந்த தொண்டைமான் புதிய அரசியலமைப்பினால், தமிழர்கள் தமது பேதமைகளைக் கைவிட்டு புதிய முடிவுகளை எடுக்கும் தேவை ஏற்படுள்ளதாகக் கூறினார். தந்தை செல்வா பேசும் போது பக்கச் சார்பாக வரையப்பட்டிருக்கும் இந்த அரசியல் அமைப்பிற்கு எதிராக தமிழர்கள் ஒருங்கிணைந்து போராட வேண்டும் என்று கூறினார்.
இக்கூட்டத்தின் முடிவில் தமிழர் ஐக்கிய முன்னணி பின்வரும் முடிவுகளி எடுத்தது,
1. புதிய அரசியலமைப்பை முற்றாக நிராகரிப்பது.
2. பாராளுமன்றத்தின் முதலாவது உத்தியோகபூர்வ் அமர்வை புறக்கணிப்பது.
3. புதிய அரசியலமைப்பு சட்டமாக்கப்படும் வைகாசி 22 ஆம் திகதியை துக்கதினமாக அனுஷ்ட்டிப்பது.
4. 1972 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் வரையான மூன்று மாத காலப்பகுதிக்குள் தமிழர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்ய தாம் முன்வைக்கும் 6 அம்சக் கோரிக்கையினை ஏற்றுக்கொண்டு அவற்றினைப் பூர்த்தி செய்வது.
அந்த 6 அம்சக் கோரிக்கைகளாவன,
1. அரசியலமைப்பில் சிங்கள மொழிக்குக் கொடுக்கப்படும் அதே அந்தஸ்த்து தமிழ் மொழிக்கும் வழங்கப்பட வேண்டும்.
2. இந்த நாட்டினை தமது தாய்நாடாகக் கொண்ட அனைத்து தமிழ்பேசும் மக்களுக்கும் முழுமையான பிரஜாவுரிமை வழங்குவதாக இந்த அரசியல் அமைப்பில் மாற்றம் கொண்டுவரவேண்டும். இந்த நாட்டின் எந்தவொரு குடிமகனினதும் பிரஜாவுரிமையினை இரத்துச் செய்யும் அதிகாரம் அரசாங்கத்திற்கு வழங்கப்படக் கூடாது.
3. மதச்சார்பற்ற நாடாக இலங்கை இருப்பதோடு, அனைத்து மதங்களுக்கும் சமமான அந்தஸ்த்து வழங்கப்பட வேண்டும்.
4. மத, இன, மொழி வேறுபாட்டிற்கு அப்பால் ஒவ்வொரு குடிமகனுக்கும் அடிப்படை உரிமைகள் சமமாக வழங்கப்பட வேண்டும்.
5. சாதி வேறுபாட்டினையும், தீண்டாமையினையும் முற்றாக இல்லாதொழிக்கும் ஏற்பாடுகள் அரசியலமைப்பில் சேர்க்கப்பட வேண்டும்.
6. அதிகாரங்களைப் பகிர்வதன் ஊடாகவே ஜனநாயக சோசலிச சமூகத்தில் மக்களின் பங்களிப்புடன் ஜனநாயகத்தின் பலத்தினை நிலைநாட்டவேண்டுமே அன்றி அரச பலத்தினால் அல்ல என்பது யாப்பில் கூறப்பட வேண்டும்.
இந்த ஆறு அம்சக் கோரிக்கையினை இணைத்து எழுதப்பட்ட கடிதத்தில் இந்த ஆறு கோரிக்கைகளும் அரசால் குறிப்பிட்ட காலக்கெடுவான 1972, புரட்டாதி 30 இற்கு முன்னர் நிறைவேற்றப்படாவிட்டால் தமிழர் ஐக்கிய முன்னணி தமிழ் மக்களின் சுதந்திரத்தையும் உரிமைகளையும் மீளப் பெற்றுக்கொள்ள வன்முறையற்ற வழியில் போராட்டங்களை ஆரம்பிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
http://www.sundaytimes.lk/180520/uploads/Untitled-112.jpg
சிங்கள இனவாதிகளால் உருவாக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு 1972 ஆம் ஆண்டு வைகாசி 22 ஆம் திகத் உத்தியோகபூர்வமாக பிரகடணப்படுத்தப்பட்டது. 20 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களில் 15 உறுப்பினர்கள் இந்த நிகழ்வினைப் புறக்கணித்திருந்தனர். இந்த நிகழ்வில் பங்கேற்று, புதிய அரசியமைப்பிற்கு ஆதரவாக வாக்களித்த அந்த ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களின் விபரங்கள் வருமாறு,
1. சி. அருளம்பலம் - நல்லூர்
2. ஏ. தியாகராஜா - வட்டுக்கோட்டை (தமிழ்க் காங்கிரஸ்)
3. சி. எக்ஸ். மார்ட்டின் - யாழ்ப்பாணம் (சமஷ்ட்டிக் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்)
4. எம். சி. சுப்ரமணியம் - நியமிக்கப்பட்டவர்
5. சி. குமாரசூரியர் - தபால் & தொலைத்தொடர்பு அமைச்சர் - நியமிக்கப்பட்டவர்
புதிய அரசியலமைப்பு உத்தியோகபூர்வமாக பிரகடணப்படுத்தப்பட்ட இந்த நாளினை வடக்குக் கிழக்குத் தமிழர்கள் துக்க நாளாக கடைப்பிடித்ததோடு, அதிகாலை முதல் மாலைவரையான பூரண ஹர்த்தாலாகவும் அனுட்டித்தனர். வீதிக்கு இறங்கிய இளைஞர்கள் தமது எதிர்ப்பினைக் கறுப்புக் கொடிகளை அசைத்தும், பறக்கவிட்டும் காட்டினர். அனைத்து வியாபார நிலையங்களும் பூட்டப்பட்டதுடன், போக்குவரத்தும் பூரண ஸ்த்தம்பித நிலைக்குக் கொண்டுவரப்பட்டது. இதற்கு முதல் நாளான 21 ஆம் திகதி பாடசாலைகளை மாணவர்கள் புறக்கணித்ததோடு, 22 ஆம் திகது பொதுவிடுமுறை நாளாகவும் அறிவிக்கப்பட்டது. தமிழ் மக்கள் ஹர்த்தாலை பூரணமாகக் கடைப்பிடித்ததோடு, அரச கட்டளையான கூட்டங்கள், பேரணிகளுக்கான தடையினையும் மீறி வீதிகளிலும், சந்திகளிலும் ஒன்றுகூடி தமது எதிர்ப்பை வெளியிட்டதுடன், இலங்கையின் தேசியக் கொடிகளும், புதிய அரசியலமைப்பின் நகல்களும் மக்களால் பரவலாக எரியூட்டப்பட்டன. மக்கள் முன் பேசிய இளைஞர்கள் தமிழர்களை சிங்கள அரசு ஒரு கற்சுவரை நோக்கி நெருக்கித் தள்ளியிருப்பதாகவும், தமிழ் சிங்கள இனங்களுக்கிடையிலான உறவுகள் முற்றான முறிவு நிலையினை அடைந்துவிட்டதாகவும், இதிலிருந்து தமிழர்கள் மீண்டுவருவதற்கான ஒரே வழி வங்கதேச சுதந்திரப் போராட்டத்தைப் பின்பற்றிப் போராடுவதுதான் என்றும் கூறினர்.
அவசரகாலச் சட்டத்தைப் பாவித்து பேரணிகளையும், கூட்டங்களையும் அரசு தடைசெய்திருந்த நிலையில், அதனை மீற விரும்பாத தமிழர் ஐக்கிய முன்னணியின் தலைவர்கள் வண்ணார்பண்ணை நாவலர் ஆச்சிரமத்தினுள் கூட்டமொன்றினை நடத்தினர். அங்கு பேசிய தந்தை செல்வா பின்வருமாறு கூறினார்,
"நாங்கள் ஒரு நாட்டினுள்ளேயே இருக்க விரும்பினோம். கண்ணியமும், மரியாதையும் கொண்ட பங்களிகளாக வாழ விரும்பினோம். ஆனால், இவை எமக்கு மறுக்கப்பட்டிருக்கின்றன. எம்மை தமது அடிமைகளாக வாழவேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். சுயகெளரவமுள்ள எந்த மனிதனும் இதற்கு ஒத்துக்கொள்ள மாட்டான். நாம் சுய கெளரவத்துடன் வாழ விரும்புகிறோம். அது தனியான நாட்டினூடாகவே சாத்தியமென்றால், நாம் அதை நோக்கிப் பயணிக்கத் தயங்கப்போவதில்லை. நான் எனது மக்களுக்கும் இந்த உலகிற்கும் சொல்லிக்கொள்ள விரும்புவது என்னவென்றால், தனிநாட்டிற்கான பாதையினைத் தெரிவுசெய்யும்படி நாம் சிங்கள ஆட்சியாளர்களால் வற்புறுத்தப்பட்டிருக்கிறோம் என்பதைத்தான்".