ஐக்கிய தேசியக் கட்சி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தனியான பகுதியொன்றை தமிழர்களின் பிரச்சினை தொடர்பாக வரைந்திருந்தது. தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் என்கிற தலைப்பில் இது உருவாக்கப்பட்டிருந்தது.
"தமிழ் பேசும் மக்கள் பலதரப்பட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகிறார்கள் என்பதனை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்றுக்கொள்கிறது. இந்தப் பிரச்சினைகள் இதுவரை தீர்க்கப்படாமல் இருப்பதனாலேயே தமிழ் பேசும் மக்கள் தனியான நாட்டினை உருவாக்கும் இளைஞர் அமைப்புக்களுக்கு ஆதரவளிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். இலங்கையின் ஒருமைப்பாட்டினைக் காத்திடவும், பொருளாதார அபிவிருத்தியை அடையவும் இந்தப் பிரச்சினைகள் காலம் தாழ்த்தாது தீர்க்கப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி கருதுகிறது. எமது ஆட்சிக்கு வரும் பட்சத்தில் இந்தப் பிரச்சினைகளையும் கவலைகளையும் தீர்க்கக்கூடிய அனைத்து வழிமுறைகளையும் கைக்கொள்ளும் என்று கூறிக்கொள்வதுடன், பிரச்சினைகள் இருக்கக் கூடிய விடயங்களாக பின்வருவனவற்றை இனங்கண்டுள்ளது",
" கல்வி - தமிழர் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்கள் - தமிழ் மொழியின் பாவனை - அரச மற்றும் தனியார் துறைகளில் தமிழ் பேசும் மக்களுக்கான வேலைவாய்ப்பு"
"நாம் சர்வகட்சி மாநாட்டினைக் கூட்டுவதோடு இந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை வழங்க முயற்சி எடுப்போம்" என்றும் கூறியிருந்தது.
சுதந்திரக் கட்சி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் "தேசிய ஒருமைப்பாடும் தேசியப் பிரச்சினைகள்" என்கிற தலைப்பின் கீழ் பின்வருமாறு கூறுகிறது,
"இலங்கையில் இன, மொழி, சமூக, கலாசார வழிகளில் தேசிய மட்டத்தில் சிறுபான்மையினக் குழுக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை எடுக்கும் வகையில் நாட்டில் இருக்கும் அனைத்து இனங்களின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய ஆலோசனைச் சபை ஒன்றினை எமது அரசு உருவாக்கும்" என்று கூறியிருந்தது.
அதேபோல், இடதுசாரிக் கூட்டணியாகக் களமிறங்கிய கம்மூனிஸ்ட் கட்சி மற்றும் சமசமாஜக் கட்சி ஆகியவற்றின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தேசிய சிறுபான்மையின மக்கள் எனும் தலைப்பின் கீழ் பின்வருமாறு கூறியிருந்தது,
"நாட்டின் ஒருமைப்பாட்டினைக் கடைப்பிடிக்கும் அதேவேளை, பொதுத் தேசிய மாவட்டங்களுக்கான வலையமைப்பின் மூலம் பிராந்தியங்களுக்கான அதிகாரப் பரவலாக்கலினை நாம் ஏற்படுத்துவோம். ஏற்கனவே வழங்கப்பட்டிருக்கும் மொழி தொடர்பான அதிகாரங்களை முழுமையாக அமுல்ப்படுத்தும் அதேவேளை, தமிழ் பிரதேசங்களில் தமிழ் மொழியினை உத்தியோக பூர்வ மொழியாகவும் நாம் ஆக்குவோம். ஏற்கனவே தமிழ் மொழிக்கு வழங்கப்பட்டிருக்கும் நிர்வாக அந்தஸ்த்தினை, குடியரசு யாப்பில் மாற்றங்களைக் கொண்டுவருவதன் மூலம் உறுதிப்படுத்துவோம். அரசியலமைப்பில் சிங்கள மொழிக்கு வழங்கப்பட்டிருக்கும் நாட்டின் உத்தியோகபூர்வ மொழி எனும் அந்தஸ்த்தினை பாதிக்கா வண்ணம் தமிழ் மொழிக்கு யாப்பினூடாக தேசிய மொழி எனும் அந்தஸ்த்தினை நாம் வழங்குவோம். கல்வி, வேலைவாய்ப்பு ஆகிய துறைகளில் இன, மத, குல ரீதியான பாகுபாட்டினை நாம் முற்றாக தடைசெய்வோம். இன மத ரீதியிலான கலகங்களைத் தூண்டுவது தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்படும்".
வாக்கெடுப்பு
ஆகவே அனைத்துச் சிங்களக் கட்சிகளும் தமிழருக்குப் பிரச்சினைகள் இருக்கிறது, அவற்றினைத் தீர்க்க அரசியல் ரீதியில் நடவடிக்கை எடுப்போம் என்று கூறியபடியே 1977 ஆம் ஆண்டிற்கான தேர்தலை எதிர்கொண்டன. வடக்குக் கிழக்கு மாகாணங்களில் போட்டியிட்ட தேசியக் கட்சிகள் இந்த அடிப்படையிலேயே தேர்தலில் பங்குகொண்டன. இதேவேளை இத்தேர்தலில் பங்குகொண்ட தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ் மக்கள் தொடர்ந்தும் சிங்கள மக்களுடன் சேர்ந்து வாழ விரும்புகிறார்களா அல்லது தனிநாட்டினை நோக்கி நகரப்போகிறார்களா என்பதனை உறுதிப்படுத்த இத்தேர்தலினை தமிழ் மக்கள் பாவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.
ஆனி 1 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடத்திய பொதுக்கூட்டத்தில் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி, அதனைத் தொடர்ந்து பாரிய பேரணி ஒன்றையும் நடத்தியது. மக்களின் முன் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பேசிய அமிர்தலிங்கம், இத்தேர்தல் தமிழர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப்போகிறதென்றும், இத்தேர்தலின் மூலம் தமிழ் மக்கள் சுதந்திர மக்கள் கூட்டமாக வாழவிரும்புகிறார்களா இல்லையா என்பதை தீர்மானிப்பார்கள் என்றும் கூறினார்.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் தமிழ் மக்கள் மீது 1956 ஆம் ஆண்டிலிருந்து அரச ஆதரவிலான குண்டர்கள் நடத்திவரும் தாக்குதல்கள் குறித்து தொடர்ச்சியாகப் பேசியிருந்ததுடன், இதன் விளைவாக தமிழர்கள் உரிமைகளோ, பாதுகாப்போ அற்ற இரண்டாம்தர குடிமக்களாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிற வாதத்தினை முன்வைத்திருந்தார்.
"தமிழர்களும் முஸ்லீம்களும் சிங்களக் காடையர்களாலும், அரச ஆதரவுடனான சிங்கள அமைப்புக்களாலும், ராணுவ பொலீஸ் பிரிவுகளாலும் தொடர்ச்சியாக இலக்குவைக்கப்படு தாக்கப்பட்டு வருகின்றனர். திட்டமிட்ட இத்தாக்குதல்கள் மூலம் தமிழர்களும் முஸ்லீம்களும் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்து வருவதுடன், அவர்களது சொத்துக்கள், வியாபார நிலையங்கள், வாழிடங்கள் முற்றாக அழிக்கப்பட்டும் வருகின்றன. உயிரிழப்புக்கள், உடல்ரீதியிலான துனுபுருத்தல்கள், பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வுகள் என்று மிகவும் கொடூரமானஅட்டூழியங்களுக்கு அவர்கள் முகங்கொடுத்து வருகின்றனர்" என்று அந்தத் தேர்தல் விஞ்ஞாபனம் கூறியது.
அத் தேர்தல் விஞ்ஞாபனம் மேலும் கூறுகையில், "தமிழ் மொழிக்கான உரிமைகளைக் கோரி 1961 ஆம் ஆண்டிலிருந்து தமிழர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் அகிம்சை முறையிலான ஒத்துழையாமை போராட்டங்களை ராணுவப் பயங்கரவாதம் கொண்டு சிங்கள அரசுகள் மிகவும் மூர்க்கத்தனமாக அடக்கி வருகின்றன. 1976 ஆம் ஆண்டு புத்தளம் பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த 7 முஸ்லீம்களை சிங்களப் பொலீஸார் மிகவும் குரூரமான வகையில் கொன்றுதள்ளியிருந்தனர். இக்கொலைகள் பற்றி விசாரிக்க அரசாங்கம் இன்றுவரை மறுத்தே வருகிறது. இவ்வாறான சம்பவங்கள் கூறும் செய்தி என்னவென்றால், சிங்கள அரசாங்களின் கீழ் தமிழர்களுக்கோ முஸ்லீம்களுக்கோ சுதந்திரமாக வாழ முடியாதென்பதும், அவர்கள் அடிமைகளாகவே நடத்தப்படுவார்கள் என்பதும் தான்".
மேலும், இந்த விஞ்ஞாபனம் கேள்வியொன்றினையும் வாக்காளர்களை நோக்கி முன்வைத்திருந்தது, "சிங்கள அரசாலும், அதன் காடையர்களாலும் தொடர்ச்சியாக கொலைகளுக்கும், சொத்துச் சூறையாடல்களுக்கும், அழிவுகளுக்கும் முகங்கொடுத்துவரும் தமிழ் பேசும் மக்கள் முன்னால் உள்ள மாற்றுத் தேர்வுதான் என்ன? இருட்டினுள் தமது அடையாளத்தைத் தேடிக்கொண்டும், அழிவின் விளிம்பிலும் நின்றுகொண்டிருக்கும் தமிழர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் தனியான தமிழ்த் தேசத்தினைத் தவிர வேறு மார்க்கம் ஏதாவது இருக்கின்றதா? " என்று கேட்டிருந்தது.
இக்கேள்விக்கான பதிலையும் அந்த விஞ்ஞாபனமே முன்வைத்திருந்தது.
"இதற்கு நம்மிடம் இருக்கும் இறுதியானதும், துணிவானதுமான ஒரே முடிவு, எமது தந்தையர் ஆண்ட எமது தேசத்தை மீண்டும் நாமே ஆள்வதுதான். சிங்கள ஏகாதிபத்தியம் எமது தாயகத்திலிருந்து அகற்றப்பட வேண்டும். 1977 ஆம் ஆண்டுத் தேர்தலின் மூலம் தமிழர்கள் தனிநாட்டு நோக்கிப் பயணிக்கவே முடிவெடுத்திருக்கிறார்கள் என்பதனை தமிழர் விடுதலைக் கூட்டணி சிங்கள அரசுக்குக் கூறிக்கொள்ள விரும்புகிறது. நீங்கள் எமக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் தமிழ் தேசம் சிங்கள ஆக்கிரமிப்பிலிருந்து விடுபட்டு சுதந்திரமாக வாழ விரும்புகிறதென்பதை மேலும் மேலும் உறுதிப்படுத்தும்".
தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி தேர்தலின் பின்னர் எவ்வாறான நடவடிக்கையினை எடுக்கும் எனும் கேள்விக்கான பதிலையும் இத்தேர்தல் விஞ்ஞாபனம் கொடுத்திருந்தது.
"இத்தேர்தலினூடாக பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்வுசெய்யப்படும் தமிழ்பேசும் உறுப்பினர்கள் இலங்கையின் தேசிய சபையில் உறுப்பினர்களாக இருக்கும் அதேவேளை, தேசியத் தமிழ் ஈழச் சபையிலும் உறுப்பினர்களாகத் தொழிற்படுவர். மேலும், இந்த தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் ஈழத்திற்கான அரசியலமைப்பினை வரைவதுடன், அதனை நடைமுறைப்படுத்த அகிம்சை வழியிலும், தேவையேற்பட்டால் நேரடி நடவடிக்கைகள் மூலமாகவும் தமது செயற்பாடுகளை முன்னெடுப்பர்".