உச்சநீதிமன்றத்தைப் பணியவைத்த ஜெயார்
இவையெல்லாவற்றைக் காட்டிலும் உச்சநீதிமன்றத்துடன் ஜெயார் நடந்துகொண்ட விதமே மிகவும் மோசமாகக் காணப்பட்டது. 1978 ஆம் ஆண்டு விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை ஜெயார் அமைத்ததிலிருந்தே இந்தப் பிணக்கு உருவானது. இந்த ஆணைக்குழு சிறிமாவையும், அவரது அமைச்சரவையில் முக்கியவராகக் கருதப்பட்ட பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கவையும் விசாரிக்கவே உருவாக்கப்பட்டிருந்தது. இந்த ஆணைக்குழுவின் சட்டபூர்வமான தன்மையினைக் கேள்விகேட்டு சிறிமாவோ உச்ச நீதிமன்றில் வழக்கொன்றைத் தாக்கல் செய்திருந்த அதேநேரம், பீலிக்ஸ் பண்டாரநாயக்கவோ இந்த ஆணைக்குழுவிற்கும் அதன் நீதிபதிகளுக்கும் எதிரான அதிகார வினாப் பேராணைகளை தாக்கல் செய்திருந்தார். இந்த ஆணைக்குழுவின் நீதிபதிகளில் ஒருவரான அல்விஸ், ஊழலில் ஈடுபட்டு நிரூபிக்கப்பட்ட கொழும்பு நகர மேயரான ஏ எச் எம் பெளசியுடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டார் என்பதை முன்வைத்து, விசாரணைக் குழுவில் இடம்பெற அல்விஸுக்குத் தகமை கிடையாதென்று வாதிட்டிருந்தார். அல்விஸின் மகனிடமிருந்து பெளசியின் மகளுக்கு கொள்வனவுசெய்யப்பட்ட நிலத்திற்கு பெளசி பணம் செலுத்தியது மற்றும் அல்விஸின் மகனின் வீடொன்றில் வாடகைக்கு பெளசியின் மனைவி அமர்ந்துகொண்டது ஆகிய இரு நடவடிக்கைகளிலும் அல்விஸே பெளசியின் மகன் சார்பில் சட்டத்தரணியாகச் செயலாற்றியிருந்தார்.
ஏ எச் எம் பெளசி
பீலிக்ஸின் வழக்கினை விசாரித்த பிரதம நீதியரசர்களான சமரகோன், விமலரட்ண மற்றும் கொலின் தொம்மே ஆகியோர் அளித்த தீர்ப்பின்படி ஜெயாரின் விசேட ஆணைக்குழுவின் நீதிபதி அல்விஸ் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஒரு நீதிபதியாகத் தொழிற்பட தகுதியற்றவர் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஜெயார், அல்விஸை நீதியரசர்கள் விமலரட்னணைக்கும், கொலின் தொம்மேக்கும் எதிராக, "தன்மீதான தனிப்பட்ட காரணங்களுக்காக தனக்கெதிராகத் தீர்ப்பளித்தார்கள்" என்கிற குற்றச்சாட்டுடன் ஜனாதிபதியான தன்னிடம் முறைப்பாட்டு மனுவொன்றினைத் தருமாறு கூறினார். தனது எடுபிடியான காமிணி திசாநாயக்காவைக் கொண்டு பாரளுமன்றத்தில் அல்விஸின் மனுவை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று தீர்மானம் ஒன்றையும் ஜெயார் கொண்டுவந்தார். மேலும், ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டில் பேசும்போது, தான் நீதித்துறைக்கும் சட்டங்களுக்கும் மேலானவர் என்றும், தான் விரும்பியதைச் செய்யும் அதிகாரம் தனக்கிருப்பதாகவும் பேசினார்.
ஈவிரக்கமற்ற கொலைகாரன் என்று அறியப்பட்ட பொலீஸ் அத்தியட்சகர் பிரேமதாச உடுகம்பொல
தான் கூறியதுபோலவே செய்யவும் தலைப்பட்டார் ஜெயார். 1982 ஆம் ஆண்டு சர்வஜன வாக்கெடுப்பிற்கான பிரச்சாரங்கள் நடைபெற்றுவந்த வேளையில் மதகுருக்களின் குரல் எனும் பெயரில் சில பெளத்த பிக்குகளும், கத்தோலிக்க குருக்களும் எதிர்க்கட்சியின் வேட்பாளரான ஹெக்டர் கொப்பேக்கடுவவுக்கு ஆதரவாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த அமைப்பின் தலைவராக தெரமிடிபொல ரட்னசார தேரோ எனும் பிக்கு கடமையாற்றினார். இந்த அமைப்பால் வெளியிடவென அச்சடித்து வைக்கப்பட்டிருந்த 20,000 துண்டுப்பிரசுரங்களையும், அச்சகத்தையும் இழுத்து மூடினார் பொலீஸ் அத்தியட்சகர் உடுகம்பொல. இதற்கெதிராக உச்ச நீதிமன்றில் வழக்கொன்றைத் தாக்கல் செய்த ரட்னசார தேரர், பேச்சுச் சுதந்திரத்தின் மீதான தலையீடு என்று தனது அமைப்பின் துண்டுப்பிரசுரங்கள் பொலீஸாரால் கையகப்படுத்தப்பட்டதைக் குற்றஞ்சாட்டியிருந்தார். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், உடுகம்பொல செயல்ப்பட்ட விதம் பேச்சுச் சுதந்திரத்திரத்தைப் பறிக்கும் செயல் என்றும், பாதிக்கப்பட்ட மனுதாரருக்கு நட்ட ஈடாக 10,000 ரூபாய்களையும், வழக்கிற்கான செலவுகளையும் உடுகம்பொல செலுத்தவேண்டும் என்றும் தீர்ப்பளித்தது. இதற்குப் பதிலளிக்கும் விதமாகச் செயற்பட்ட ஜெயார், உடுகம்பொலவை சிரேஷ்ட்ட பொலீஸ் அத்தியட்சகராகப் பதவியுயர்வு கொடுத்ததுடன், வழக்கின் இழ்ப்பீட்டுச் செலவுகளை அரசே வழங்கும் என்றும் கூறினார்.
விவியேன் குணவர்த்தன
ஜெயாரின் இந்த செயல், அரசுக்குச் சார்பாக தாம் எதைச் செய்தாலும், அரசு தமக்குப்பின்னால் நிற்கும் எனும் தைரியத்தைப் பொலீஸாருக்குக் கொடுத்திருந்தது. இதன்படி, சரியாக ஒரு வாரத்திற்குப் பின்னர் கொள்ளுப்பிட்டிய பொலீஸார் சட்டத்தை தம் கைகளில் எடுத்துச் செயற்பட்டிருந்தனர். 1982 ஆம் ஆண்டு, பங்குனி 8 ஆம் நாள், உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு லங்கா சம சமாஜக் கட்சியின் உறுப்பினர் விவியேன் குணவர்த்தன தலைமையிலான பெண்கள் குழுவினர் கொள்ளுப்பிட்டியில் அமைந்திருந்த அமெரிக்க தூதுவராலயத்திற்கு மனுவொன்றைனைக் கையளிக்கச் சென்றிருந்தனர். அது ஒரு அமைதியான ஊர்வலமாகத்தான் இடம்பெற்றிருந்தது. தமது மனுவினை அமெரிக்க உயர்ஸ்த்தானிகரின் பிரதிநிதியிடம் கையளித்துவிட்டு திரும்பும் வழியில் அவர்கள் மேல் பாய்ந்து தாக்குதல் நடத்திய கொள்ளுப்பிட்டிய பொலீஸார், அவர்கள் கொண்டுவந்திருந்த பதாதைகளைப் பறித்து கிழித்தெறிந்தனர். பெண்கள்மீது பொலீஸாரால் நடத்தப்பட்ட தாக்குதலைப் படம்பிடித்த புகைப்படக் காரர் ஒருவரும் கடுமையாகத் தாக்கப்பட்டுக் கைதுசெய்யப்பட்டார். பேரணியில் பொலீஸார் நடந்துகொண்ட விதம் பற்றிப் பேசுவதற்காக விவியேன் கொள்ளுப்பிட்டிய பொலீஸ் நிலையத்திற்குச் சென்றார். பொலீஸ்நிலையத்தில் கடுமையாகத் தாக்கப்பட்ட விவியேன், பொலீஸாரினால் கீழே விழுத்தப்பட்டு கால்களால் உதைக்கப்பட்டார். பின்னர் அவரையும் பொலீஸார் கைதுசெய்திருந்தனர். உச்ச நீதிமன்றில் பொலீஸாரின் அடாவடித்தந்திற்கெதிராக வழக்கொன்றைத் தாக்கல் செய்தார் விவியேன். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்று, விவியேனின் கைது சட்டத்திற்குப் புறம்பானதென்றும், இழப்பீடாக 2500 ரூபாய்களை பொலீஸார் செலுத்த வேண்டும் என்றும் மேலும் விவியேன் மீதும், பேரணி மீதும் தாக்குதல் நடத்திய பொலீஸார் அனைவரின்மீதும் பொலீஸ் மா அதிபர் சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறித் தீர்ப்பளித்தது. ஆனால், உச்ச நீதிமன்று தீர்ப்பளித்த மறுநாளான ஆனி 9 ஆம் திகதி, பேரணி மீது தாக்குதல் நடத்திய பொலீஸ் குழுவின் அதிகாரியான உதவிப் பொலீஸ் பரிசோதகர் ஜெயாரின் உத்தரவின் பெயரில் பதவியுர்வு வழங்கப்பட்டது.
தீர்ப்பு வழங்கப்பட்டு இருநாட்களின் பின்னர், தீர்ப்பினை வழங்கிய மூன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளினதும் வீடுகளுக்கு அரச வாகனங்களில் சென்ற காடையர்கள், அவர்களைக் கொல்லப்போவதாக மிரட்டியதுடன், ஆபாசமாகவும் திட்டிவிட்டுச் சென்றனர். காடையர்கள் தமது வீடுகளைச் சுற்றி கோஷமிட்டுக்கொண்டிருக்கும்பொழுது, பொலீஸாரின் உதவியினை நீதிபதிகள் தொலைபேசி மூலம் கேட்க எத்தனித்தபோது, பொலீஸாரின் அனைத்துத் தொலைபேசி இணைப்புக்களும் மெளனமாக காணப்பட்டன.
சர்வதேச நீதிபதிகளின் அமைப்பின் தலைவர் போல் சைகிரெட் இந்த பொலீஸ் அத்துமீறல்கள் குறித்தும், நீதித்துறை எதிர்நோக்கியிருந்த அச்சுருத்தல்கள் குறித்தும் ஜெயாரிடம் வினவினார். இதற்குப் பதிலளித்த ஜெயார், இரு பொலீஸ்காரர்களினதும் பதவியுயர்விற்கு தானே பரிந்துரை செய்ததாகவும், நட்ட ஈடுகளை செலுத்தும்படி அரச திறைசேரிக்கு தானே உத்தரவிட்டதாகவும் கூறியதுடன், பொலீஸாரின் மனவுறுதியை நிலைநாட்ட இவை அவசியமாகச் செய்யப்படவேண்டியன என்றும் வாதிட்டிருந்தார்.
போல் சைகிரெட்டின் கூற்றுப்படி, உச்ச நீதிமன்ற நீதியரசர்களுக்கு சரியான பாடமொன்றினைப் புகட்டவேண்டும் என்று ஜெயார் திடசங்கற்பம் பூண்டிருந்ததுடன், தனது நிறைவேற்றதிகாரம் பொருந்திய ஜனாதிபதிப் பதவிக்கு உச்ச நீதிமன்றும், நீதியரசர்களும் அடிபணிந்திருக்கவேண்டும் என்றும் எதிர்ப்பார்த்தார் என்றும் கூறினார்.
இந்த நிகழ்வுகளின் அடிப்படையிலிருந்தே தமிழர்கள் மீது ஜெயார் கட்டவிழ்த்து விடவிருக்கும் அக்கிரமங்கள் நோக்கப்படல் வேண்டும்.
தலைவருடன் இந்தியச் செய்தியாளர் அனித்தா பிரதாப்
ஜெயாரை ஆதரிப்பவர்கள், பாராளுமன்றத்தில் இருக்கும் கழுகுகள் சிலவற்றின் அழுத்தத்தினாலேயே ஜெயார் தமிழருடன் கடுமையாக நடந்துகொள்ள வேண்டியதாகியது என்று ஜெயாரின் கொடுங்கோண்மையினை நியாயப்படுத்தி வந்தனர். ஆனால், ஜெயார் குறித்த பிரபாகரனின் கணிப்போ மிகவும் வித்தியாசமானது. 1984 இல் முதன் முதலாக பிரபாகரன் சர்வதேச ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில், "ஜெயார் தனது விருப்பத்தின்படியே நடக்கிறார். அவரிடம் எல்லா அதிகாரங்களும் குவிந்து கிடக்கின்றன. பாராளுமன்றத்தில் இருக்கும் கழுகுகளும், பெளத்த பிக்குகளும் அவருக்குப் பக்கபலமாக பின்னால் நிற்கின்றனர்" என்று அந்தச் செய்தியாளரான அனீட்டா பிரதாப்பிடம் கூறியிருந்தார்.
மேலும், "ஜெயவர்த்தனா உண்மையான பெளத்தனாக இருந்திருந்தால், நான் ஆயுதம் தூக்கவேண்டிய தேவை இருந்திருக்காது " என்றும் அவர் கூறினார். பிரபாகரனின் கணிப்பு எவ்வளவு உண்மையானது என்பது இத்தொடரினைத் தொடர்ந்து படிக்கும்போது தெளிவாகும்.