ஆனைக்கோட்டைத் தாக்குதல்
தமிழ் மக்களின் சரித்திரத்தில் சிங்களவர்களால் நிகழ்த்தப்பட்ட இன்னொரு அவமானமான நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் முடிவடைந்து மூன்று நாட்களுக்குப் பின்னர், புளொட் அமைப்பின் தலைவர் உமாமகேஸ்வரன் மற்றும் அவ்வமைப்பின் உதவித்தலைவர் சுந்தரம் தலைமையில் அவ்வமைப்பினர் யாழ்ப்பாணத்திலிருந்து 9 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்திருந்த ஆனைக்கோட்டை பொலீஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் இரு பொலீஸ்காரர்கள் கொல்லப்பட்டதோடு பொலீஸ் நிலையத்திலிருந்த அனைத்து ஆயுதங்களையும் புளொட் அமைப்பினர் எடுத்துச் சென்றிருந்தனர். சிங்கள அதிகார மமதைக்கு விழுந்த முதலாவது குறிப்பிடும்படியான அடியாக இத்தாக்குதலைக் குறிப்பிட முடியும்.
மிகச் சிறப்பாக திட்டமிடப்பட்ட இத்தாக்குதல் ஆடி மாதம் 27 ஆம் திகதி இரவு 10 மணிக்கு நடத்தப்பட்டது. வான் ஒன்றைக் கடத்திக்கொண்டு பொலீஸ் நிலையத்திற்குச் சென்ற புளொட் போராளிகள், வாயிற்கதவை தட்டினார்கள். காவலுக்கு நின்ற கொன்ஸ்டபிள் கதவைத் திறக்கவே அவர்மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட அவர் அவ்விடத்திலேயே விழுந்து இறந்தார். வாசலில் சூட்டுச் சத்தங்கள கேட்டதையடுத்து உள்ளேயிருந்த கொன்ஸ்டபிள்களான ஜயரத்ண, குருசாமி மற்றும் பந்துலசேன ஆகியோர் வாயிலை நோக்கி ஓடிவந்தார்கள். அவர்கள் மீதும் துப்பாக்கித்தாக்குதல் நடத்தப்பட்டது. அங்கிருந்த பதினேழு 0.303 ரைபிள்கள், ஒரு உப இயந்திரத் துப்பாக்கி, ஐந்து ஷொட் கண்கள், சுமார் 1500 ரவைகள் என்பன புளொட் போராளிகளால் கைப்பற்றப்பட்டன. தாக்குதல் முடிந்ததும் தாம் வந்த வாகனத்திலேயே அவர்கள் தப்பிச் சென்றுவிட்டார்கள். காயப்பட்ட நிலையிலிருந்த பொலீஸாரை யாழ் மருத்துவமனையில் அனுமதித்தபோது, கொன்ஸ்டபிள் ஜயரத்ண சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
1971 ஆம் ஆண்டில் தெற்கில் மக்கள் விடுதலை முன்னணியினரால் பொலீஸார் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பின்னர் நடைபெற்ற மிகவும் துணிகரமான இத்தாக்குதலால் ஜெயாரும், பொலீஸாரும் நிலைகுலைந்து போயினர். இலங்கைப் பாதுகாப்புத்தரப்பும் கடுமையான அதிர்ச்சிக்குள்ளானது. தேசிய பாதுகாப்புச் சபையினைக் கூட்டிய அன்றைய பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் டி.வி. வீரப்பிட்டிய இரு முக்கியமான முடிவுகளை எடுத்தார். முதலாவதாக யாழ்ப்பாணத்தில் மீளவும் ராணுவத் தலைமைக் காரியாலயம் ஒன்றினை நிறுவுவது. இரண்டாவது சிறிய பொலீஸ் நிலையங்களை மூடிவிடுவதுடன், ஓரளவு பெரிய பொலீஸ் நிலையங்களின் பாதுகாப்பினை அதிகப்படுத்துவது.
ஜெயாருடன் சிறில் ரணதுங்க
ஆனைக்கோட்டை பொலீஸ் நிலையம் மீதான தாக்குதல் நடைபெற்று சரியாக இரு நாட்களுக்குப் பின்னர், அதாவது ஆடி 29 ஆம் திகதி பிரிகேடியர் சிறில் ரணதுங்க வடமாகாணத்தின் ராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்றதுடன், அவர் தனது தலைமைக் காரியாலயத்தை பலாலி இராணுவ முகாமில் உருவாக்கினார். அவருக்கு உதவியாக லெப்டினண்ட் ஜெனரல் டென்சில் கொப்பெக்கடுவ எனும் உயர் அதிகாரி நியமிக்கப்பட்டார். இந்தத் தலைமைக் காரியாலயம் ஆவணி 11 ஆம் திகதி குருநகரில் அமைந்திருந்த இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது.
டென்சில் கொப்பெக்கடுவ
பிரிகேடியர் சிறில் ரணதுங்க இராணுவப் புலநாய்வு அமைப்பை உருவாக்கியதுடன் ராணுவத்தினதும், பொலீஸாரினதும் புலநாய்வு வலையமைப்புக்களை ஒருங்கிணைந்து செயற்படப் பணித்தார்.
மேலும், பலவீனமான, சிறிய பொலீஸ் நிலையங்களை மூடிவிடும் நடவடிக்கையும் உடனடியாகவே ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இயங்கிவந்த 16 பொலீஸ் நிலையங்களில் 9 நிலையங்கள் மூடப்பட்டதோடு, மீதி 7 நிலையங்களினதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. கால்நடையாகப் பொலீஸார் ரோந்துசெல்வதை நிறுத்திய சிறில் ரணதுங்க, வாகனங்களில் மட்டுமே குழுக்களாக ரோந்தில் ஈடுபடமுடியும் என்று பொலீஸாரைப் பணித்தார். பெரும்பாலான நேரங்களில் பொலீஸ் வாகனங்களுக்குப் பாதுகாப்பாக இராணுவ வாகனங்களும் ரோந்துகளில் இணைந்துகொண்டன. பொலீஸாரின் இந்த நடவடிக்கைகளைக் கண்ணுற்ற வெளிநாட்டுச் செய்தியாளர்கள் பலர், பொலீஸார் சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டுவதைக் கைவிட்டு இராணுவ வீரர்கள் போல் செயற்படுகிறார்கள் என்று எழுதத் தொடங்கினர்.
ஆனைக்கோட்டைத் தாக்குதலால் கடுமையான சிற்றமடைந்த அமைச்சர் சிறில் மத்தியூ, அதுபற்றிப் பேசுவதற்காக ஜெயாருக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தினார். "அதை என்னிடம் விடுங்கள், நான் பார்த்துக்கொள்கிறேன்" என்று மறுமுனையிலிருந்து பதில் வந்தது.
ஆனால், மத்தியூவிற்கோ அந்தப் பதிலினை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆகவே, மறுநாள் காலை , 28 ஆம் திகதி, ஆவணி 1981 ஆம் ஆண்டு அவர் ஜெயாருக்குக் கடிதம் ஒன்றினை எழுதினார்.
கனம் ஜனாதிபதி அவர்களுக்கு,
தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியினரை மகிழ்விக்க நீங்கள் தேவைக்கதிகமாக வளைந்து கொடுப்பதாக நான் உணர்கிறேன். இந்த வளைந்துகொடுத்தல்கள் இன்னும் அதிகமானால், நீங்கள் உங்களின் சமநிலையினை இழந்து கீழே மல்லாக்காக விழுந்துவிடப்போகிறீர்கள். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி உங்களைத் திரும்பிக் கூடப் பார்க்கப்போவதில்லை. அவர்கள் அடுத்து ஆட்சிக்கு வரும் கட்சியோடு புதிய ஒப்பந்தங்களைச் செய்யச் சென்றுவிடுவார்கள்.
இப்படிக்கு சிறில் மத்தியூ
தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை மகிழ்விப்பதையே ஜெயார் தனது தலையாய கடமையாகச் செய்துவருவதாக மத்தியூ குற்றஞ்சாட்டுவதற்கு அமிர்தலிங்கத்தின் மீதான தண்டனைக்கு தான் பரிந்துரை செய்தவற்றினை ஜெயார் ஏற்றுக்கொள்ளவில்லை என்கிற கோபமே காரணமாக இருந்தது. ஆனால், அரசியல் யாப்பில் ஒரு பாராளுமன்ற உறுப்பின்பர் மீது கடுமையான தண்டனைகளை வழங்குவதற்கான அதிகாரம் அப்போது இருந்தது.
மத்தியூவின் கடிதம் ஜெயவர்த்தனவுக்கு கடும் சினத்தினை ஏற்படுத்தியிருந்தது. தன்னிடம் எழுத்துமூலமாக சிறில் மத்தியூ மன்னிப்புக் கோரவேண்டும் என்று ஜெயார் கோரினார். மத்தியூவும் அப்படியே செய்திருந்தார். தனது ஏவலாளிகளைத் தேர்வு செய்வதிலும், அவர்களுக்கான பணிகளை வழங்குவதிலும் ஜெயவர்த்தன மிகவும் அவதானமாகச் செயற்பட்டு வந்தார். ஜெயாரினால் மத்தியூவிற்கு வழங்கப்பட்ட பணி சிங்கள இனவாதிகளை மகிழ்வாக வைத்திருப்பதே.
மத்தியூவை ஜெயவர்த்தனா சிங்கள இனவாதிகளை மகிழ்வாக வைத்திருக்கப் பணித்திருந்தபோதும், அவர் தன்னைக் காட்டிலும் மக்களிடையே பிரபலமாவதை அவர் விரும்பியிருக்கவில்லை. மத்தியூவின் குறைந்த குலத்தினால் அவரை ஒருபோதுமே பெளத்த மகாசங்கத்தினர் சிங்கள பெளத்தர்களின் தலைவராக ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதை ஜெயவர்த்தனா நன்கு அறிந்தே இருந்தார். இதனாலேயே அவரை பெளத்த சாசன அமைச்சராக ஆக்குவதை ஜெயவர்த்தன தவிர்த்து வந்தார்.
மத்தியூவும், ஏனைய சிங்கள இனவாதிகளும் நாட்டில் தமிழருக்கெதிரான வன்மத்தை உருவேற்றிக்கொண்டு வந்தனர். அமிர்தலிங்கத்திற்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தான் நிகழ்த்திய பேச்சின் 20,000 பிரதிகளை அவர் பெளத்த விகாரைகள், பொலீஸ்நிலையங்கள், இராணுவ முகாம்கள், அரச கூட்டுத்தாபனங்கள், பொது அமைப்புக்கள் என்பவற்றிற்கு அனுப்பி வைத்தார். அவரது பேச்சின் பிரதிகளோடு, தமிழ் ஈழம் அமையும் பட்சத்தில் எத்தனை பெளத்த விகாரைகள் தமிழர்கள் வசமாகும் என்கிற விபரங்களோடு வரைபடங்களையும் அவர் அனுப்பிவைத்தார். நாடெங்கிலும் சிங்களவர்களை விழித்து, "சிங்கள மக்களே" எனும் தலைப்பில் சுவரொட்டிகள் மத்தியூவினால் ஒட்டப்பட்டு வந்தன.
"திராவிடர்களுக்கெதிராக கிளர்ந்தெழுங்கள்" என்கிற வாசகங்கள் நாடெங்கிலும் ஒட்டப்பட்டன. மேலும், தமிழ் பிரதேசங்களில் சிங்களவர்கள் கட்டாயம் குடியேறவேண்டும் என்றும், அதன்மூலமே பெளத்த சின்னங்களும், விகாரைகளும் பாதுகாக்கப்பட முடியும் என்றும் அவர் சிங்கள மக்களை வேண்டிக்கொண்டார். இவ்வாறான இனவாதத் தூண்டுதல்களின் ஒரு கட்டமாக தமிழர்களுக்கு கூட்டுத்தண்டனை ஒன்றினை நிச்சயம் வழங்கியே தீர்வேண்டும் என்கிற வெறி அரச அமைச்சர்களிடையே சுடர்விட்டு எரிய ஆரம்பித்திருந்தது.
விமலா கன்னங்கர
கிராமப்புற அபிவிருத்தி அமைச்சர் விமலா கன்னங்கர ஒரு கூட்டத்தில் பேசும்பொழுது, "நாங்கள் ஆட்சி செய்கிறோம் என்றால், நாமே ஆட்சி செய்ய வேண்டும். நாம் ஆளுகிறோம் என்றால், நாமே ஆள வேண்டும். சிறுபான்மையினத்தினருக்கு நாம் எதையுமே கொடுக்கக் கூடாது. நாம் சிங்கள பெளத்தர்களாக இந்நாட்டில் பிறந்திருக்கிறோம். நாம் பெரும்பான்மையின மக்களாக இருந்தபோதும் கூட, கடந்த நான்கு வருடங்களாக சிறுபான்மையினத்தவருக்கு அடிபணிந்தே வாழ்ந்து வருகிறோம். நாம் மீண்டு பெரும்பான்மையின மக்களாக இந்த நாட்டினை ஆளவேண்டும்" என்று அறைகூவல் விடுத்தார்.
தமிழருக்கெதிரான வன்மம் மொத்தச் சிங்கள இனத்திற்குமே பற்றிக்கொண்டது. ஆங்காங்கே தமிழருக்கெதிரான வன்முறைகள் எட்டிப்பார்க்கத் தொடங்கின. ஆனைக்கோட்டை பொலீஸ் நிலையத்தின் மீதான தாக்குதலை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் உடனடியாகவே கண்டித்திருந்தனர். பொலீஸாரைக் கொல்வது உணர்வற்ற ஒரு நடவடிக்கை என்று அவர்கள் விமர்சித்திருந்தனர். ஆனால், நாட்டில் தமிழர்களுக்கெதிராக சூழ்கொண்டுவந்த வன்மத்தை அவர்களால் தணிக்க முடியவில்லை. ஆனைக்கோட்டைத் தாக்குதலில் கொல்லப்பட்ட கொன்ஸ்டபிள் ஜயரத்ணவின் உடல் அவரின் ஊரான இரத்திணபுரிக்குக் கொண்டுவரப்பட்டபோது வன்முறைகள் வெடித்துக் கிளம்பின.