ஜனாதிபதித் தேர்தல் - 1982
ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் நாள் புரட்டாதி 17 ஆம் திகதி என்று அறிவிக்கப்பட்டது. 6 வேட்பாளர்கள் தம்மைப் பதிவுசெய்திருந்தனர். லங்கா சம சமாஜக் கட்சியின் கொல்வின் ஆர் டி சில்வா, ஐக்கிய தேசியக் கட்சியின் ஜெயார் ஜெயவர்த்தன, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஹெக்டர் கொப்பேக்கடுவ, நவ சம சமாஜக் கட்சியின் வாசுதேவ நாணயக்கார, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் குமார் பொன்னம்பலம் மற்றும் ஜனதா விமுர்திப் பெரமுனவின் ரோகண விஜேவீர ஆகியோரே அந்த அறுவரும் ஆகும்.
தேர்தலில் பங்கெடுப்பதில்லை என்கிற முடிவினால் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் மீது குமார் பொன்னம்பலம்மும் ஆயுத அமைப்புக்களும், குறிப்பாக தமிழ் ஈழ விடுதலை முன்னணியும் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்திருந்தன.
அமிர்தலிங்கத்திற்கும் ஜெயவர்த்தனவுக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட இரகசிய ஒப்பந்தம் குறித்த விபரங்களை குமார் பொன்னம்பலம் வெளிக்கொணர்ந்தார். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி தமிழ் மக்களை ஏமாற்றிவிட்டதாகக் கூறி தமிழ் ஈழ விடுதலை முன்னணி எனும் ஆயுத அமைப்பு இரு விடயங்களை முன்வைத்துப் பிரச்சாரம் செய்யத் தொடங்கியது. முதலாவதாக, 1977 ஆம் ஆண்டு தமிழ் மக்களின் ஆணையான தனிநாட்டினை மீள உறுதிப்படுத்த இந்தத் தேர்தலை முன்னணியினர் பாவித்திருக்கலாம், ஆனால் அதனை அவர்கள் வேண்டுமென்றே செய்யாது விட்டார்கள் என்று குற்றஞ்சாட்டியது. இரண்டாவதாக, இத்தேர்தலில் போட்டியிடுவதன்மூலம், தனிநாட்டிற்கான ஆதரவை வடக்குக் கிழக்கிற்கு வெளியே வாழும் தமிழர்களிடமிருந்து பெறக்கூடிய வாய்ப்பிருந்தும், முன்னணி அதனைச் செய்யத் தவறிவிட்டது என்றும் குற்றஞ்சாட்டியிருந்தது.
இந்த விமர்சனங்கள் அமிர்தலிங்கத்தைக் கடுமையாகப் பாதித்திருந்தன. அவரால் எதுவுமே செய்ய முடியவில்லை. ஆகவே, தனது இக்கட்டான நிலையிலிருந்து தப்புவதற்கு தமிழர்கள் அனைவரும் இத்தேர்தல்களைப் புறக்கணிக்க வேண்டும் என்று அவர் திடீரென்று கோரிக்கையொன்றினை முன்வைத்தார். இதற்கு அவர் முன்வைத்த காரணம் மிகவும் பலவீனமானது. 1978 ஆம் ஆண்டின் அரசியல் யாப்பினைத் தமிழர்கள் இதுவரை ஏற்றுக்கொள்ளாததால், அந்த அரசியலமைப்பின்படி நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் வக்களிக்கக் கூடாதென்பதே அவர் முன்வைத்த காரணம்.
குமார் பொன்னம்பலம்
தனது தேர்தல் பிரச்சாரத்தில் அமிர்தலிங்கம் மீது மிகக் கடுமையான விமர்சனங்களை குமார் பொன்னம்பலம் முன்வைத்தார். 1977 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் அவருக்கு வழங்கிய ஆணைக்கெதிராக அமிர்தலிங்கம் செயற்படுவதாக குமார் கூறினார். "அவர் என்னை மட்டும் தோற்கடிக்க முயலவில்லை, தமிழர்களின் கோரிக்கையான தனிநாட்டையும் தோற்கடிக்க முயல்கிறார்" என்று குமார் பிரச்சாரம் செய்தார். வானொலி பேச்சொன்றில் தமிழ் மக்கள் இத்தேர்தலில் பங்கெடுப்பதன் மூலம் தமது ஒற்றுமையையும், பலத்தையும், தமது அபிலாசைகளையும் சர்வதேசச் சமூகத்திற்குக் காட்ட வேண்டும் என்று குமார் பொன்னம்பலம் கோரிக்கை முன்வைத்தார்.
அப்போதிருந்த அரசியல் சூழ்நிலையினை விபரித்து புரட்டாதி 2 ஆம் திகது யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் ஆங்கிலப் பத்திரிகையான சட்டர்டே ரிவியூ, "தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினால் முன்னர் அணியப்பட்ட தமிழ்த் தேசிய போர்வையினைக் களவாடி இன்று அணிந்திருக்கும் குமார் பொன்னம்பலம், முடிக்குரிய இளவரசனைப் போன்று தமிழர் ஐக்கிய முன்னணியின் ஆதரவாளர்கள் முன் தெரிகிறார், அவர்களும் அதனை ஏற்றுக்கொள்ள விரும்புவது போலத் தெரிகிறது" என்று கூறியிருந்தது. மேலும், காலம் காலமாக தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு வாக்களித்து வந்த கிராமப்புறத் விவசாயிகளான தமிழர்கள், தமது விவசாயப் பொருட்களான மிளகாய், வெங்காயம் ஆகியவற்றிற்கு நல்ல சந்தவாய்ப்பினைப் பெற்றுக்கொடுக்க முன்வருவதால், சுதந்திரக் கட்சியின் ஹெக்டர் கொப்பேக்கடுவவை ஆதரித்து நிற்கிறார்கள் போலத் தெரிவதாகவும் கருத்து வெளியிட்டிருந்தது.
ஹெக்டர் கொப்பேக்கடுவ
வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளுக்கு ஹெக்டர் கொப்பேக்கடுவ பிரச்சாரம் செய்யச் சென்றவேளைகளில் அவரை விவசாயிகள் சூழ்ந்துகொண்டதுடன், நல்ல வரவேற்பினையும் வழங்கினர். யாழ்க்குடாநாட்டில் 14 கூட்டங்களில் கலந்துகொண்ட ஹெக்டர் கொப்பேக்கடுவ, யாழ்ப்பாணத்து விவசாயிகளின் உற்பத்திப் பொருடகளுக்கான சந்தை எப்போது பாதுகாக்கப்படும் என்றும், தமிழர்களுக்கெதிராக ஜெயவர்த்தனவினால் கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டத்தை தான் பதவிக்கு வந்தவுடன் இரத்துச் செய்துவிடுவதாகவும் உறுதியளித்தார்.
யாழ்க்குடா நாட்டிற்கு ஒருநாள் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த ஜெயாரை மக்கள் ஆர்ப்பாட்டங்கள் மூலம் வரவேற்றனர். ஜெயாருக்கெதிரான ஆர்ப்பாட்டங்களை தமிழ் ஈழ விடுதலை முன்னணி ஒழுங்கு செய்திருந்தது. கடைகள், பாடசாலைகள், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டதுடன் யாழ்நகரின் சுவர்களின் ஜெயாருக்கெதிரான வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. அவற்றுள் ஒன்று, "யாழ்ப்பாணத் தமிழர்கள் விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்றவர்கள். ஆனால், அந்நிய ஆக்கிரமிப்பாளர்களை அவர்களுக்குப் பிடிக்காது" என்று ஒரு வாசகம் கூறியது.
சுன்னாகத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ஜெயார், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி அகப்பட்டுப்போய் இருக்கும் சிக்கலில் இருந்து அவர்களை மீட்க முயன்றார். "நீங்கள் தேர்தலில் பங்கெடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன். உங்களுக்கு விரும்பியவருக்கு நீங்கள் வாக்களியுங்கள். அது உங்களின் பிரச்சினை. ஆனால், தவறாமல் வாக்களியுங்கள், ஏனென்றால் அது மக்களின் இறையாண்மை ஆகும்" என்று கூட்டத்திற்கு வந்திருந்தவர்களைப் பார்த்துக் கூறினார்.
பட்டிருப்பில் மக்கள் முன் பேசிய ஜெயார், "தேர்தலைப் புறக்கணிக்கவேண்டும் என்று சிலர் உங்களிடம் கேட்டிருக்கிறார்கள். நான் உங்களுக்குச் சொல்வது என்னவென்றால், நீங்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும். அதுவும் எனக்கே வாக்களிக்க வேண்டும். உங்கள் பிரதேசத்தின் அபிவிருத்திக்கும், சுபீட்சத்திற்கும், அமைத்திக்கும் நீங்கள் வாக்களிக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.
இலங்கை ஜனாதிபதித் தேர்தல் 1982
தேர்தல் வன்முறைகள், சட்ட மீறல்கள், கம்மியூனிஸ்ட் கட்சியின் பத்திரிக்கை அச்சகமும், சுதந்திரக் கட்சியின் தேர்தல் பிரச்சாரங்களை அச்சிட்ட அச்சகங்களும் அரசால் மூடப்பட்டமை ஆகிய சம்பவங்கள் நடந்தபோதும் ஐப்பசி 20 ஆம் திகதி நடந்த தேர்தலில் ஜெயவர்த்தன மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுக்கொண்டார். சுமார் 81 இலட்சம் பதிவுசெய்யப்பட்ட வாக்களர்களில் 65 இலட்சம் பேர் வாக்களிப்பில் கலந்துகொண்டிருந்தனர். தேர்தல் முடிவுகள் பின்வருமாறு அமைந்திருந்தது,
1. ஜே ஆர் ஜெயவர்த்தன - ஐ.தே.க 3,450,811 வாக்குகள் , 52.91 %
2. எச்.எஸ்.ஆர்.பி. கொப்பேக்கடுவ - சிறிலங்கா சு.க - 2,548,438 வாக்குகள், 39.07 %
3. ரோகண விஜேவீர - மக்கள் விடுதலை முன்னணி 273,934 வாக்குகள், 4.19 %
4. குமார் பொன்னம்பலம் - அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 173,934 வாக்குகள், 2.67 %
5. கொல்வின் ஆர் டி சில்வா - லங்கா சம சமாஜக் கட்சி 57,532 வாக்குகள், 0.88 %
6. வாசுதேவ நாணயக்கார - நவ சம சமாஜக் கட்சி 17,005 வாக்குகள், 0.26 %
902,373 அதிகப்படியான வாக்குகளினால் ஜெயவர்த்தன வெற்றிபெற்றார். ஹெக்டர் கொப்பேக்கடுவவைத் தவிர மற்றைய அனைவரும் கட்டுப்பணத்தை இழந்தனர்.
22 தேர்தல் மாவட்டங்களில் 17 சிங்கள மாவட்டங்களிலும், ஒரு முஸ்லீம் பெரும்பான்மை மாவட்டமான அம்பாறையிலும் ஜெயார் வெற்றிபெற்றிருந்தார். குமார் பொன்னம்பலம் யாழ்ப்பாண மாவட்டத்தில் வெற்றிபெற்றிருந்தார்.
குமார் பொன்னம்பலத்திற்கு யாழ்ப்பாண மாவட்டத்தில் 87,263 வாக்குகள் கிடைத்த அதேநேரம் ஹெக்டர் கொப்பேக்கடுவவிற்கு யாழ்ப்பாணத் தமிழர்கள் 77,300 வாக்குகளை அளித்திருந்தனர். ஜெயாருக்கும் 44,780 வாக்குகள் கிடைக்கப்பெற்றிருந்தன. 533,478 பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களைக் கொண்ட யாழ்ப்பாண மாவட்டத்தில் 228,613 வாக்காளர்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரின் தேர்தலைப் புறக்கணிக்கும் கோரிக்கையை நிராகரித்து தேர்தலில் வாக்களித்தனர். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி எதிர்கொள்ளும் அபாயத்தை இத்தேர்தல் அமிர்தலிங்கத்திற்கு உணர்த்தியிருந்தது. தனிநாட்டிற்கான கோரிக்கையினை முன்வைத்து தேர்தலில் நின்ற குமார் பொன்னம்பலத்திற்கு கிடைத்த ஆதரவினால் உந்தப்பட்ட ஆயுத அமைப்புக்களான புளொட்டும், ஈரோஸும் 1983 ஆம் ஆண்டில் நடக்கவிருந்த பொதுத் தேர்தலில் இணைந்து, சுயேட்சைக் குழுவாகப் போட்டியிடுவதென்று தீர்மானித்தன. இந்த முடிவும் தனக்கும், கட்சிக்கும் சவாலாக உருவாகிவருவதாக அமிர்தலிங்கம் உணரத் தொடங்கினார்.
ஆனாலும், ஜெயாரின் அழுங்குப் பிடியிலிருந்து அமிர்தலிங்கத்தினால் வெளிவர முடியவில்லை. பாராளுமன்றத்தில் தனக்கிருந்த தகுதியினாலோ அல்லது பாராளுமன்ற உறுப்பினர் என்கிற வகையில் தனக்குக் கிடைத்த சுகபோகங்களுக்காகவோ அவர் இப்படி உணரவில்லை, மாறாக, ஜெயாரின் பிடியிலிருந்து விலகிவந்தால் வேறு ஆபத்துக்கள் வரலாம் என்று அவர் அஞ்சினார். ஜெயவர்த்தனவை ஆத்திரப்பட வைப்பதாலும், அசெளகரியப்படுத்துவதாலும் தான் எதிர்நோக்கவேண்டி வரும் அபாயம் குறித்து அவர் நன்கு அறிந்தே இருந்தார். "அவர் மிகவும் ஆபத்தான மனிதர். அவருடன் நாம் மிகவும் அவதானத்துடனேயே தொடர்பாட வேண்டும்" என்று என்னிடம் பலமுறை அமிர் கூறியிருக்கிறார்.
ஜெயவர்த்தன மீது தனக்கிருந்த அச்சம் குறித்து அமிர்தலிங்கம் 1982 ஆம் ஆண்டு ஆனியில் தன்னைச் சந்தித்த தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரான வைகுந்தவாசனிடமும், ஆதேவருடம் ஆடி மாதம் நியுயோர்க் நகரில் இடம்பெற்ற உலகத் தமிழ் ஈழம் மாநாட்டிலுல் கூறியிருந்தார்.
தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானங்களை வடக்குக் கிழக்கில் நடைமுறைப்படுத்த முயன்றால், வடக்குக் கிழக்குத் தமிழர்களை ஜெயவர்த்தன மொத்தமாகத் தண்டித்துவிடுவார் என்று தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவிடம் கூறினார் அமிர்தலிங்கம். தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பின்வரும் தீர்மானங்கள் இரண்டை நிறைவேற்றியிருந்தது,
1. 1982 ஆம் ஆண்டு தைப்பொங்கல் நாளான தை மாதம் , 14 ஆம் திகதி, ஒருதலைப்பட்சமாக தமிழீழப் பிரகடணத்தை நிறைவேற்றுவது.
2. அதே நாள் நாடுகடந்த தமிழ் ஈழ அரசாங்கத்தின் நடவடிக்கைகள் ஆரம்பிப்பது.
நியோர்க் நகரில் இடம்பெற்ற தமிழ் ஈழத்திற்கான சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டபோதும் இதேவகையான அச்சத்தினை அமிர்தலிங்கம் வெளியிட்டிருந்தார்.
சுமார் 200 பார்வையாளர்கள் கலந்துகொண்ட இந்த மாநாட்டில், இலங்கையில் வாழும் தமிழர்களின் உயிருக்கும், அவர்களின் நலன்களுக்கும் தானே பொறுப்பு என்று அமிர் கூறினார். "மக்கள் எவருமற்ற நிலையில் கிடைக்கப்பெறும் விடுதலையினை யார் அனுபவிக்கப் போகிறார்கள்? வங்கதேசத்தின் சுதந்திரத்தை நாம் முன்மாதிரியாகப் பின்பற்றி போராட வேண்டும் என்று பலர் கூறுகிறார்கள். அந்தப் போரில் மூன்று மில்லியன் வங்காளிகள் கொல்லப்பட்டார்கள். ஆனால், இலங்கையில் வாழும் தமிழர்களின் எண்ணிக்கை அதைவிடவும் குறைவானது என்பது இவர்களுக்குத் தெரியாது" என்று அவர் வாதிட்டார்.
இந்த மாநாட்டினை ஒழுங்குசெய்த வைகுந்தவாசன் அமிரைப் பார்த்து, "ஜெயாரின் முகத்துக்கு நேரே பார்த்து, நரகத்திற்குப் போ என்று கூறுங்கள்" என்று கத்தினார்.
அதற்குப் பதிலளித்த அமிர், "நான் அப்படிச் செய்தால், நரகத்திற்குப் போவது ஜெயார் அல்ல, தமிழ் மக்களே" என்று கூறினார்.