பிரபாகரனைச் சந்தித்த இந்திய உளவுத்துறை, ரோ
பாண்டிபஜார் துப்பாக்கிச் சண்டை
தன் கையில் கிடைக்கப்பெற்றிருந்த அபரிதமான அதிகார பலத்தினைக் கொண்டு தமிழ் ஆயுதப் போராட்ட அமைப்புக்களை எப்படியாவது அழித்துவிடவேண்டும் என்று ஜெயார் கங்கணம் கட்டியிருந்தார். ஆனால், இதைச் செய்த்வதற்கு அவர் பாவித்த கருவிகளான அரச பயங்கரவாதமும், மிதவாதிகளை ஓரங்கட்டும் செயற்பாடுகளும் அவரது நோக்கத்தை அடைவதில் தடைகளாக மாறியிருந்தன. பொலீஸாரும் ராணுவத்தினரும் தமிழர்மேல் மேற்கொண்டு வந்த அட்டூழியங்கள் அவர்களை அச்சப்படுத்துவதற்குப் பதிலாக தமிழர்களிடையே தைரியத்தையும், அடக்குமுறைக்கு எதிராகப் போராடும் மனோவலிமையினையும் ஏற்படுத்தியிருந்தன. இராணுவத்தினரினதும், பொலீஸாரினதும் செயற்பாடுகள் தமிழர்களை போராளி அமைப்புக்களை நோக்கித் தள்ளத் தொடங்கின. ஆரம்பத்தில் சிறிய உதவிகளைத் தமது போராளி அமைப்புக்களுக்குச் செய்வதில் ஆரம்பித்து, ஈற்றில் அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் பாதுகாவலர்கள் எனும் நிலைக்கு தமிழ் மக்கள் உயர்ந்தனர்.
மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கு சட்டத்தின்படி வழங்கவேண்டிய அதிகாரங்களையும், நிதியையும் வழங்க மறுத்து, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரைப் பலவீனப்படுத்த ஜெயவர்தன எடுத்த முடிவும் தமிழ் மக்கள் போராளிகளை நோக்கிச் செல்வதை மேலும் ஊக்குவித்திருந்தது. மாவட்ட அபிவிருத்திச் சபைகளின் செயற்பாடுகளினூடாக தனது அரசியல் எதிர்காலத்தைத் தக்கவைத்துக் கொள்ளலாம் என்று எதிர்ப்பார்த்திருந்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு, அச்சபைகளின் செயற்பாட்டுத் தோல்வி பாரிய ஏமாற்றத்தைக் கொடுத்திருந்ததுடன், மக்களின் முன்னால் அவர்களின் நம்பகத்தன்மையினையும் கேள்விக்குள்ளாக்கியிருந்தது. அரசியலில் தமிழ் மக்கள் சார்பாக தாம் சாதித்தது எதுவுமே இல்லை எனும் கையறு நிலைக்கு முன்னணியை இச்சபைகளின் தோல்வி தள்ளிவிட்டிருந்தது.
பொலீஸ் மற்றும் இராணுவத்தின் அழுத்தங்கள் புளொட் அமைப்பில் சில தாக்கங்களை ஏற்படுத்தியிருந்தது உண்மையே. அவ்வமைப்பின் மரியநாயகம், கணேசலிங்கம், ரொபேர்ட், ஞானசேகரம், அரங்கநாயகம், அரபாத் ஆகிய உறுப்பினர்கள் பொலீஸாரினால் அந்நாட்களில் கைதுசெய்யப்பட்டிருந்தனர். அன்று, புளொட் அமைப்பினைக் காட்டிலும் சிறிய அமைப்பாக விளங்கிய புலிகள், பெரும்பாலும் தமது போராளிகளைத் தக்கவைத்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத் தக்கது.
தலைவருடன், யோகரத்திணம் யோகி மற்றும் பின்னாட்களில் இந்திய உளவாளியாக மாறிய மாத்தையா எனப்படும் மகேந்திரராஜா கோபாலசாமி
தமிழ் மக்களின் கலாசாரப் பொக்கிஷமான யாழ் நூலகம் சிங்கள அரசால் எரிக்கப்பட்ட துயர நிகழ்வை, கலாசாரப் படுகொலையை கண்ணுற்று, மிகுந்த வேதனையும், கூடவே வன்மமும் கொண்டு அங்கிருந்து இன்னும் 10 தோழர்களுடன் 1981 ஆம் ஆண்டு ஆனி 6 ஆம் திகதி தமிழ்நாடு நோக்கிப் பயணமானார் பிரபாகரன். தான் தமிழ்நாட்டில் தங்கியிருக்கும் காலத்தில் யாழ்க்குடா நாட்டில் புலிகளின் செயற்பாடுகளுக்குப் பொறுப்பாக மாத்தையா எனப்படும் மகேந்திரராஜா கோபாலசாமியை பிரபாகரன் அமர்த்திவிட்டுச் சென்றிருந்தார்.
தனது வவுனியா முகாமில் தங்கியிருந்த உமா மகேஸ்வரன், கிளிநொச்சி வங்கிக்கொள்ளையின் பின்னர் 20 தங்க நகைகள் கொண்ட பைகளையும் எடுத்துக்கொண்டு, இன்னும் நான்கு தோழர்களுடன் 1982 ஆம் ஆண்டு மாசி மாதம் 25 ஆம் திகதி தமிழ்நாட்டிற்குத் தப்பிச் சென்றார். சென்னையில் தங்கிக்கொண்ட அவர் தமிழ்நாடு கம்மியூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்த் தேசிய இயக்கங்களூடாக தனக்கான வலையமைப்பொன்றினையும் ஏற்படுத்திக்கொண்டார்.
தனது நெருங்கிய சகாக்களில் பலர் தன்னை விட்டுப் பிரிந்து உமா மகேஸ்வரனின் புளொட் அமைப்பில் இணைந்துகொண்டதால், பிரபாகரன் அன்று டெலோ அமைப்பினரோடு சேர்ந்தே இயங்கிவந்தார். 16 வயதில் தனது வீட்டை விட்டு வெளியேறிய பிரபாகரன், தனது வாழ்க்கையை முழுமையாகவே தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்காக அர்ப்பணித்திருந்தார். 1984 ஆம் ஆண்டு அனீதா பிரதாப்புடனுனான அவரது செவ்வியில் தன்னை விட்டு விலகிச் செல்ல பலர் எடுத்த முடிவினை "துரோகம்" என்று அவர் வர்ணித்திருந்தார்.
கேள்வி : உங்கள் வாழ்க்கையில், உங்களை அதிகம் ஏமாற்றியிருந்த விடயம் எது?
பிரபாகரன் : "அப்படியொரு தனியான விடயத்தை என்னால் துல்லியமாகக் கூறமுடியாது. ஆனால், மிகுந்த ஏமாற்றமளித்த விடயங்களில் ஒன்று, நான் நம்பியிருந்த, எனது இலட்சியத்தின்பால் பற்றுக்கொண்டவர்களாகக் காட்டிக்கொண்ட, எனது நெருங்கிய தோழர்களில் சிலர் என்னைவிட்டுப் பிரிந்து சென்றது. ஆனால், அவர்கள் ஈற்றில் சுயநலம் மிக்க சந்தர்ப்பவாதிகள் என்று தம்மை வெளிப்படுத்திக்கொண்டார்கள்".
மதுரைக்குச் சென்ற பிரபாகரன் அங்கு முகாம் ஒன்றில் தங்கியிருந்தார். சென்னையின் மேற்குப்புறப் பகுதியான வளசரவாக்கத்தில் வீடொன்றினை வாடகைக்கு ஒழுங்குசெய்யுமாறு கிட்டுவையும் பொன்னம்மானையும் பிரபாகரன் கேட்டுக்கொண்டார். சில நாட்களின் பின்னர் அவ்வீட்டிலேயே அவர்கள் தங்கிக்கொண்டனர். அடேலும் பாலசிங்கமும் இதே பகுதியில்த்தான் தாம் இரண்டாவது முறை தமிழ்நாட்டிற்கு 1981 ஆம் ஆண்டு வந்தபோது தங்கியிருந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. "விடுதலை வேட்கை" எனும் தனது நூலில் எழுதும் அடேல் பாலசிங்கம், கிட்டுவின் இளமைத்தனமான குறும்புகள் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். "ஒருமுறை கிட்டு பிராமணரைப் போன்று வெண்ணிற மேலாடையும் கூடவே பூணுலும் அணிந்துகொண்டார். அதே ஆடையுடன் அசைவ உணவகம் ஒன்றிற்குச் சென்ற கிட்டு, அங்கே ஆட்டுக்கறியையும், பொறித்த கோழியையும் பலரும் பார்த்திருக்க ருசித்து உண்டார். அவரைப் பார்த்துக்கொண்டிருந்த உணவக ஊழியர்களினதும், உரிமையாளரினதும் முகங்கள் அதிர்ச்சியில் உறைந்திருந்தன" என்று எழுதுகிறார்.
புலிகளின் புகழ்பூத்த யாழ்மாவட்டத் தளபதி - கிட்டு எனப்படும் சதாசிவம் கிருஷ்ணகுமார்
புலிகளின் வளசரவாக்கம் வீட்டில் தங்கியிருந்த போராளிகள் பற்றிய பல சுவாரசியமான விடயங்களை அடேல் எழுதியிருந்தார். 1976 ஆம் ஆண்டு, பிரபாகரன் புலிகள் அமைப்பை உருவாக்கிய காலத்தில் அவருடன் இணைந்துகொண்டவர், இன்று வன்னியில் கல்விக்குப் பொறுப்பாக இருக்கும் பேபி சுப்பிரமணியம். மிகவும் மென்மையானவராகவும், மற்றையவர்களைப் பற்றி புரணி கூறும் தன்மையற்றவராகவும், அதிகாரப் போட்டியில் நாட்டமில்லாதவருமாக விளங்கிய பேபி சுப்பிரமணியம், மிகுந்த அறிவாற்றலைக் கொண்டிருந்தார். புலிகளின் விடுதலைப் போராட்டம் பற்றியும் ஏனைய போராட்டங்கள் பற்றியும் பல தகவல்களை தன்னிடம் கொண்டிருந்த அவரை நடமாடும் தகவற் களஞ்சியம் என்றே எல்லோரும் அழைத்து வந்தனர்.ஒரு பழைய துணிப்பையினை தன்னோடு எப்போதும் காவித்திரியும் அவர், அதற்குள் பத்திரிக்கைகள் புத்தகங்கள் என்று போராட்ட விடயங்கள் தொடர்பான தகவல்களைக் கொண்டு திரிந்தார். சைவ உணவுகளை மட்டுமே உண்டுவந்த அவர், சிலவேளைகளில் சோற்றுடன் ஐந்து அல்லது ஆறு மோர் மிளகாய்களைக் கடித்துக்கொண்டே தனது உணவை முடித்துக்கொள்வார் என்று அடேல் எழுதுகிறார்.
பிரபாகரனின் மிகவும் நெருக்கத்திற்குரியவராக இருந்த இன்னொருவர் நேசன் எனப்படும் ரவீந்திரன் ரவிதாஸ். தனது மருத்துவக் கல்வியைக் கைவிட்டு விட்டு பிரபாகரனுடன் இணைந்துகொண்டவர் அவர். ஆனால், பிற்காலத்தில் இயக்கத்திலிருந்து விலகிச் சென்று தற்போது வெளிநாடொன்றில் வசித்து வருகிறார். திடகாத்திரமான உடலைக் கொண்ட அவர், தினமும் உடற்பயிற்சிக்காக அவர்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து ஒவ்வொரு நாள் காலையுலும் ஓடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தவர்.
பிரபாகரனின் பாதுகாப்பிற்குப் பொறுப்பாகவிருந்த ரகுவிற்கு ஷங்கர் உதவிவந்தார். ரகுவே பிரபாகரனின் தலைமை மெய்ப்பாதுகாப்பாளராக பல்லாண்டுகள் செயலாற்றி வந்தார். ஆனால், இயக்க விதிகளை மீறியதற்காக பின்னர் இயக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.
வளசரவாக்கம் வீட்டில் தங்கியிருந்த புலிகளின் உறுப்பினர்களில் பண்டிதரும் ஒருவர். கடுமையான ஆஸ்த்த்மா நோயினால் பாதிக்கப்பட்டபோதிலும், தனது அரசியல் நடவடிக்கைகளில் அவரது உடல்நிலை தாக்கம் செலுத்துவதை அவர் ஒருபோதும் அனுமதித்ததில்லை. புலிகளின் அச்சுவேலி முகாமை இராணுவம் 1985 ஆம் ஆண்டு தை மாதம் சுற்றிவளைத்தபோது, இராணுவத்துடனான மோதலில் பண்டிதர் வீரச்சாவடைந்தார்.
பின்னாட்களில் டெலோ இயக்கத்தின் தலைவராக வந்த சிறி சபாரட்ணமும் இதே வளசரவாக்கம் வீட்டிலேயே தங்கியிருந்தார். புலிகளுக்கும் டெலோ அமைப்பிற்கும் இடையே அன்று ஏற்பட்டிருந்த இணக்கப்பட்டிற்கு அமைய சிறி அங்கு தங்கினார்.
இவ்வீட்டிற்கு பிரபாகரன் அடிக்கடி வந்துசெல்வார். தமிழ்நாடு காமராஜர் காங்கிரஸ் என்கிற அரசியற் கட்சியின் தலைவரான நெடுமாறனின் இரு சட்டசபை உறுப்பினர்களுக்கென்று அரசால் ஒதுக்கப்பட்ட விடுதிகளில் ஒன்றிலேயே பிரபாகரன் தங்கியிருந்தார்.