ஜெயாருக்கெதிராகத் திரும்பிய சிங்களவரின் கோபம்
http://ahfesl.free.fr/Images/Image_blak_july_1983_04.jpg
ஆத்திரத்துடனும், உணர்வு மேலீட்டுடனும் கனத்தைப் பகுதியில் குழுமியிருந்த சிங்களவர்களுக்கு முதன்முதலாக கட்டளைகளைப் பிறப்பித்துத் தலைமை தாங்கியவர்கள் நாரஹேன்பிட்ட ராணுவ முகாமிலிருந்து வந்த ராணுவத்தினரே. தோண்டப்பட்டிருந்த குழிகளுக்கருகில் சென்ற அவர்கள், அருகிலிருந்த மண்ணை அக்குழிகளுக்குள் தள்ளி அவற்றினை மூடினார்கள். பின்னர், "கொல்லப்பட்ட ராணுவத்தினரின் உடல்கள் எம்மிடம் தரப்பட வேண்டும், அவர்களை நாய்களைப் போல்ப் புதைக்க விடமாட்டோம்' என்று உரக்கக் கோஷமிடத் தொடங்கினார்கள். இந்தக் கோஷங்கள் அங்கே குழுமியிருந்த சிங்களவர் கூட்டத்தின் உணர்ச்சி நரம்புகளை உசுப்பிவிட, அவர்களும் ராணுவத்தினருடன் சேர்ந்து கோஷமிடவும் கலகத்தில் ஈடுபடவும் தொடங்கினர். "கொல்லப்பட்ட ராணுவத்தினரின் உடல்களை அவர்களிடம் உறவினர்களிடம் கொடுத்துவிடு" என்று அரசாங்கத்தை நோக்கிக் கோஷமிடத் தொடங்கினர். மரணச் சடங்கினை மேற்பார்வையிட அங்கு அனுப்பப்பட்டிருந்த உதவிப் பொலீஸ் அத்தியட்சகர் கபூர், மயானத்தின் ஒரு பகுதியில் மக்கள் கோஷமிட ஆரம்பித்ததையடுத்து, அப்பகுதிக்குச் சென்றார். அவர் அப்பகுதியை அடைந்தபோது, கூட்டத்திலிருந்தவர்கள் மரப்பலகை ஒன்றினால் அவரை இடிக்கவே அவர் நிலை தடுமாறி கீழே வீழ்ந்தார். அதிஷ்ட்டவசமாக, தோண்டப்பட்ட குழிகளுக்குள் அவரைத் தள்ளி வீழ்த்த அவர்கள் எடுத்த முயற்சியை அவரால் தடுக்க முடிந்தது.
கனத்தை மயானத்தில் கலவரத்தில் ஈடுபட்ட சிங்களக் காடையர்களைத் துரத்தும் உதவிப் பொலீஸ் அத்தியட்சகர் கபூர் 24, ஆடி, 1983
அங்கு குழுமியிருந்த சிங்கள ஆர்ப்பாட்டக்காரர்களின் கலகம் கட்டுக்கடங்காமல்ப் போனது. ரேமண்ட் மலர்ச்சாலையின் ஊழியர்களால் மரணச் சடங்கிற்காக கொண்டுவரப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்த பித்தளையிலான கட்டமைப்புக்களும், வளைவுகளும் கலவரக் காரர்களால் அடித்து நொறுக்கப்பட்டன. மயானத்தின் அப்பகுதியிலிருந்த ஏனையவர்களின் கல்லறைகளை அவர்கள் உடைத்து நாசம் செய்தார்கள். பல கல்லறைகளின் நினைவுக் கற்கள் பிடுங்கி எறியப்பட்டன. கலவரக்காரர்கள் வந்திருப்பது தமது கொல்லப்பட்ட உறவுகளுக்கு வணக்கம் செலுத்துவதற்காக அல்ல என்பதை உணர்ந்துகொண்ட கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் அங்கிருந்து அகன்று சென்றுவிட, அவர்களுடன் பிரித் ஓதவென்று அழைக்கப்பட்டிருந்த பிக்குகளும் அச்சத்தில் மெல்லக் கழன்றுகொண்டனர்.
மாலை 7 மணி ஆகிக்கொண்டிருந்தது. உதவிப் பாதுகாப்பு அமைச்சர் வீரப்பிட்டியவும், பாதுகாப்புச் செயலாளர் சேபால ஆட்டிகலவும் மீண்டும் கனத்தை மயானத்திற்கு வருகை தந்தனர். தனது நுவரெலிய விடுமுறையினைப் பாதியில் கலைத்துவிட்டு கனத்தைக்கு வந்திருந்த பொலீஸ் அத்தியட்சகர் ருத்ரா ராஜசிங்கத்திடம் அவர்கள் நேராகச் சென்றனர். மயானத்தில் நிலவரம் எப்படியிருக்கிறது என்று அவர்கள் கேட்கவும், நிலைமை சிறிது சிறிதாக மோசமாகிக்கொண்டு வருகிறது என்று அவர் பதிலளித்தார். இதனையடுத்து, "நீங்கள் இங்கேயே இருந்து நிலைமையினைக் கட்டுக்குள் வைத்திருங்கள், நாங்கள் உடனடியாக ஜனாதிபதிக்கு தற்போதைய நிலைமையினை நேரடியாகச் சென்று அறிவிக்கிறோம்" என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பி ஜெயாரின் வாசஸ்த்தலம் அமைந்திருந்த வோர்ட் பிளேசுக்குச் சென்றனர்.
சுமார் மாலை 7:30 மணியளவில் எமது புகைப்பிடிப்பாளர் பியதாசவும் ஊடகவியலாளர் ஒருவரும் லேக் ஹவுஸ் நிலையத்திற்குத் திரும்பியிருந்தனர். அவர் வரும்போது கனத்தைப் பகுதியில் தன்னால் எடுக்கப்பட்ட பல புகைப்படங்களைக் காண்பித்தார். கலவரபூமியாகக் காட்சியளித்த கனத்தை மயானத்தை அவர் தத்ரூபமாகப் படமாக்கியிருந்தார். இரண்டாவது பதிப்பிற்குச் செல்லும் பத்திரிக்கைகளில் அப்புகைப்படங்களை உள்ளடக்குவதே அவரது விருப்பமாக இருந்தது. ஆனால், லேக் ஹவுஸ் நிறுவனத்தில் தலைவர் ரணபால போதினாகொட, டெயிலி நியூஸின் ஆசிரியர் அலுவலகத்திற்கும், ஜெயாரின் வீட்டிற்கும் இடையே தொடர்ச்சியாகப் போய்வந்துகொண்டிருந்ததுடன், கனத்தைக் கலவரத்தை பெரிதாகப் பிரசுரிக்க வேண்டாம் என்று கட்டளையிட்டதுடன், டெயிலி நியூஸ் ஆசிரியர் மணிக் டி சில்வாவிடம், "அபாயகரமான சூழ்நிலையொன்று வலுப்பெற்று வருகிறது" என்று தலைப்பிட்டால்ப் போதும் என்று பணித்தார்.
ஆனால், பியதாசவுக்கோ நிறுவனத்தின் தலைவரின் செயல் அமைதியைத் தரவில்லை. தான் எடுத்துவந்த புகைப்படங்களை போதினாகொடவிடம் காட்டிய அவர், "நிலைமை எல்லை மீறிப் போய்க்கொண்டிருக்கிறது" என்று ஆவேசத்துடன் கூறினார். பின்னர் என்னிடம் வந்து பின்வருமாறு கூறினார், "சபா, கவனமாக இருங்கள். இப்போது சிங்களவர்களின் கோபம் அரசாங்கத்தின் மீதே இருக்கிறது. ஆனால், இந்த கோபத்தை தமிழர்களின் மீது திருப்பிவிட முக்கியமான சிலர் முயற்சித்து வருகிறார்கள்".
பியதாசவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் உயர் அரசியல்த் தலைமைப் பீடத்துடன் நெருங்கிய தொடர்புகளிருந்தன. அவற்றினூடாகவே நிலைமையினை அறிந்துகொண்ட அவர் என்னிடம் கூறினார் என்பதை நான் உணர்ந்துகொண்டேன்.
மேலும் என்னுடன் பேசும்போது, "கொல்லப்பட்ட ராணுவத்தினரின் உடல்களை எரித்துச் சாம்பலாக்கி விட்டார்கள் அவர்கள்" என்றும் கூறினார். ராணுவத்தினரின் உடல்களைத் தம்மிடம் தருமாறு உறவினர்கள் தொடர்ச்சியாக ராணுவ அதிகாரிகளைக் கேட்டுவந்ததனால், அவர்களை எரித்துச் சாம்பலாக்கி விட்டோம் என்று அதிகாரிகள் பதிலளித்தைத் தான் பார்த்ததாக பியதாச கூறினார். மேலும், கனத்தை மயானத்தில் கூட்டு மரணச் சடங்கினை அரசு நடத்தத் தீர்மானித்தன் நோக்கம், தாக்குதலில் அகப்பட்ட ராணுவத்தினரின் உடல்கள் முற்றாகச் சிதைந்து சேதமடைந்து விட்டதனால், அவற்றினைத் தனித்தனியாக அடையாளம் கண்டு உறவினர்களிடம் ஒப்படைப்பது கடிணம், ஆகவேதான் கூட்டு மரணச்சடங்கினை அரசு நடத்த முடிவெடுத்தது என்றும் அவர்கள் உறவினர்களிடம் கூறியிருக்கின்றனர்.
லேக் ஹவுஸின் இரண்டாவது நிருபரும், அவரது உதவியாளரும் இரவு 8:30 மணிக்கு நிலையத்திற்குத் திரும்பினர். கனத்தையில் நடக்கவிருந்த மரணச் சடங்குகள் அரசாங்கத்தால் இரத்துச் செய்யப்பட்டு விட்டதாக மயானம் முழுவதிலும் ஒலிபெருக்கியால் அறிவிக்கப்பட்டதாகவும், இதனால் ஆத்திரமடைந்த மக்கள் கூட்டம் கடுமையான கலவரங்களில் ஈடுபட்டு வருவதாகவும் அவர்கள் கூறினார்கள். "மக்கள் ஜனாதிபதிக்கெதிராகவும், அரசாங்கத்திற்கெதிராகவும் கோஷமிட்டபடி வலம் வந்துகொண்டிருக்கிறார்கள்" என்று அவர்கள் கூறினர்.
நாம் இதுகுறித்து மேலும் விசாரித்தபோது, கொழும்பு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மாணவர் கூட்டமொன்று இரவு 8:30 மணியளவில் மயானத்திற்குள் நுழைந்திருக்கிறது. அவர்கள் கம்மியூனிஸ்ட் கட்சியின் அதிருப்தியாளர்கள். அந்த மாணவர் கூட்டத்திலிருந்த இருவர் அங்கு குழுமியிருந்த சிங்களவர்கள் மத்தியில் உரையாற்றும்போது , "ராணுவத்தினரின் மரணங்களுக்கு ஜனாதிபதி ஜெயவர்த்தனவும் அரசாங்கமுமே முழுப் பொறுப்பினையும் ஏற்றுக்கொள்ளவேண்டும்" என்று ஆவேஷமாகக் கூறினர். பின்னர் ஆத்திரத்துடனும் உணர்வு மேலீட்டுடனும் காணப்பட்ட மக்கள் கூட்டத்தை ஜனாதிபதியின் வாசஸ்த்தலம் அமைந்திருந்த வோர்ட் பிளேஸ் நோக்கி வழிநடத்திச் சென்றனர்.
ஆனால், ஜனாதிபதியின் இல்லம் நோக்கிய சிங்களவரின் பேரணியை பொலீஸார் இடைமறித்தனர். அரசுக்கெதிரான உணர்வு மேலீட்டு வருவதை உணர்ந்துகொண்ட உதவிப் பொலீஸ் மா அதிபர் எட்வேர்ட் குணவர்த்தன, ஜனாதிபதியில் இல்லத்தை ஆர்ப்பாட்டக் காரர்கள் அடைவதைத் தடுக்கும் நோக்கில் வேர்ட் பிளேசுக்கான தொடக்கப் பகுதியிலும், கின்ஸி வீதியிலும் தடைகளை ஏற்படுத்தி பொலீஸாரை காவலுக்கு அமர்த்தினார்.
உணர்வு மேலீட்டுடன் ஆவேசமாக கணத்தையை விட்டு வெளியேறி வந்துகொண்டிருந்த கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் குழு, தம்மை எதிர்கொள்ள பொலீஸார் தயாராகி வருவதை அறிந்ததும், கூட்டத்திலிருந்து மெல்ல நழுவிச் சென்றுவிட்டனர். இவர்களுள் பலர் தமது வீடுகளுக்கே திரும்பியிருந்தனர்.
சுமார் இரவு 10 மணியிருக்கும். லேக் ஹவுஸில் அந்நேரம் பணிபுரிந்துகொண்டிருந்த எல்லோரும் பொரள்ளைப் பகுதியிலிருந்து ஆகாயம் நோக்கிப் புகைமண்டலம் மேலெழுந்துவருவதைக் கண்ணுற்றோம். நான் உடனடியாக தீயணைப்புப் படையினருடன் தொடர்புகொண்டேன். மறுமுனையில் பேசிய தீயணைப்புப் படையின் அதிகாரி, கனத்தையிலிருந்து வெளியேறி வந்த ஆர்ப்பாட்டர்க் காரர்கள் பொரள்ளைச் சந்தியிலிருக்கும் தமிழர்களுக்குச் சொந்தமான கடைகளை எரிக்கத் தொடங்கியிருப்பதாகக் கூறினார். சிறிது நேரத்தில் அப்பகுதியிலிருந்து பாரிய தீச்சுவாலைகள் மேலெழுந்துவருவதை எம்மால் காண முடிந்தது. டெயிலிநியூஸ் ஆசிரியர் அறையிலிருந்து பார்க்கும்போது, கோட்டைப் புகையிரத நிலையம், புறக்கோட்டை சந்தைப்பகுதி மற்றும் அதற்கு அப்பாலுள்ள பல பிரதேசங்களை எம்மால் தெளிவாகப் பார்க்கமுடியும். கொழும்பு எரியத் தொடங்கியிருந்தது !