கட்டவிழ்த்து விடப்பட்ட படுகொலைகள்
இக்கட்டத்தில் யாழ்நகர் எரியத் தொடங்கியிருந்தது. பலாலி முகாமிலிருந்து பல ட்ரக்குகளில் கிளம்பிய ராணுவத்தினர் தாக்குதல் நடந்த திருநெல்வேலிப் பகுதியை வந்தடைந்தனர். பலாலியிலிருந்து திருநெல்வேலி வரையான வீதியெங்கும் இருந்த கடைகளை சேதப்படுத்தியவாறே அவர்கள் வந்திருந்தனர். திருநெல்வேலிச் சந்தியை அடைந்ததும், தமது ட்ரக்குகளை சந்தியில் நிறுத்திவிட்டு பொதுமக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதலை ஆரம்பித்தனர். செல்லக்கிளி மறைந்திருந்து கண்ணிவெடித் தாக்குதலை நடத்திய கடையினை உடைத்ததிலிருந்து அவர்களின் பழிவாங்கும் தாக்குதல்கள் ஆரம்பித்தன. அப்பகுதியின் அருகில் புலிகள் பதுங்கியிருந்து தாக்குதலை மேற்கொண்டதாக அவர்கள் கருதிய மதில்களை உடைத்தனர். பின்னர், வீதியின் இரு மருங்கிலும் இருந்த வீடுகளை ஒவ்வொன்றாகக் கொழுத்தத் தொடங்கினர். வீதியில் தாம் எதிர்கொண்ட பொதுமக்கள் மீது கண்மூடித்தனமான துப்பாக்கித் தாக்குதலை நடத்தினர். அன்று தமது வெறியாட்டம் முடிந்து முகாம் திரும்பிய ராணுவத்தினர் திங்கட்கிழமை மீண்டும் தமது தாக்குதல்களை ஆரம்பித்தனர்.
கல்வியங்காட்டுப் பகுதியிலிருந்து திருநெல்வேலி நோக்கி சைக்கிள் ஒன்றில் வந்துகொண்டிருந்த 10 வயதுச் சிறுவனைக் கண்ட இராணுவத்தினர் அவனை நிற்குமாறு உத்தரவிட்டனர். ஒரு கையில் பாண் ஒன்றை ஏந்தியபடி சைக்கிளை மிதித்துவந்த அந்தச் சிறுவனும் உடனடியாக சைக்கிளை விட்டு கீழிறங்கவே, அவனருகில் சென்ற இராணுவ வீரன் ஒருவன் அச்சிறுவனின் தலையில் துப்பாக்கியால் சுட்டான். அச்சிறுவன் அவ்விடத்திலேயே இறந்து வீழ்ந்தான். சிறுவனது உடலும், அவன் மிதித்துவந்த சைக்கிளும், காவி வந்த பாணும் அவ்விடத்திலேயே மாலைவரை கிடந்ததாக சாட்சியங்கள் கூறுகின்றன. "அவனது மூளைப்பகுதி சிதறி தலையின் வெளியே கசிந்துகொண்டிருந்தது" என்று தனது புத்தகத்தின் முனசிங்க குறிப்பிட்டிருக்கிறார். கொல்லப்பட்ட சிறுவனைத் தான் பார்த்தபோது நீண்ட பெருமூச்சு ஒன்றைத்தவிர வேறு எதுவும் தன்னால் செய்ய இயலவில்லை என்று அவர் கூறினார்.
வீதியின் இருபக்கத்திலும் இருந்த பகுதிக்குள் ராணுவ வீரர்கள் ஊடுருவிச் சென்றிருந்தனர். அங்கிருந்த வீடுகளை அவர்கள் எரித்துக்கொண்டே சென்றதுடன் கண்ணில் அகப்பட்டவர்களைச் சுட்டுக் கொன்றபடி சென்றனர். இவ்வாறான வீடொன்றில் ஒரு வயது முதிர்ந்த தம்பதிகள் இருப்பதைப்பார்த்த ராணுவத்தினர் அவர்கள் இருவரையும் சுட்டுக் கொன்றதுடன் வீட்டிற்கும் தீமூட்டினர்.
மாதகல் முகாமிலிருந்து கிளம்பிச் சென்ற ராணுவத்தினரும் இதேவகையான படுகொலைகளில் ஈடுபட்டனர். மானிப்பாய் நகர்ப்பகுதிக்குச் சென்ற அவர்கள் வீதியால் சென்றுகொண்டிருந்த பஸ் வண்டியொன்றினை மறித்து, அதிலிருந்தவர்கள் கீழே இறங்குமாறு பணித்தனர். பஸ்ஸினுள் இருந்து கீழே இறங்கிய ஒன்பது பாடசாலை மாணவர்களை வரிசையில் நிற்குமாறு கட்டளையிட்டனர். பின்னர் அம்மாணவர்கள் மீது திடீரென்று துப்பாக்கிப் பிரயோகம் செய்தபோது ஆறு மாணவர்கள் அவ்விடத்திலேயே இறந்துவிழ, ஏனைய மூவரும் கடுமையாகக் காயப்பட்டனர். இவ்வாறே வல்வெட்டித்துறை முகாமிலிருந்து கிளம்பிச் சென்ற இராணுவத்தினரும் கடைகளையும் வீடுகளையும் எரிக்க ஆரம்பித்தனர்.
ஒரு நாளில் மட்டும் இந்த மூன்று இடங்களிலும் 51 தமிழர்கள் கொல்லப்பட்டதுடன் நூற்றுக்கணக்கானோர் காயப்பட்டனர். யாழ்ப்பாண அரசாங்க அதிபரினால் தயாரிக்கப்பட்ட விசாரணை அறிக்கையில் இப்படுகொலைகள் ஆவணப்படுத்தப்பட்டு இருந்தன. குறைந்தது நூறு வீடுகளும் கடைகளும் அன்று இராணுவத்தால் எரியூட்டப்பட்டன என்று அந்த அறிக்கை மேலும் கூறியது.
யாழ்ப்பாணத்தில் இராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழ் மாணவர்கள்
ஆடி 24 ஆம் நாளன்று இரவு ராணுவத் தளபதி வீரதுங்க குருநகர் முகாமிலேயே தங்கியிருந்தார். அவர் தொடர்ச்சியாக தொலைபேசி அழைப்புக்களை மேற்கொண்டிருந்தார். கொழும்பில் நடக்கும் கலவரம் குறித்த அறிக்கைகள் அவருக்கு வந்துகொனண்டிருந்தன. யாழ்ப்பாணத்தில் தனது இராணுவத்தினரால் கட்டவிழ்த்து விடப்பட்ட படுகொலைகளை அவர் திங்கட்கிழமை காலை 10 மணிக்குப் பின்னரே பார்க்கச் சம்மதித்தார்.
திருநெல்வேலிப் பகுதிக்கு தான் மேற்கொண்ட பயணம் குறித்து முனசிங்க இவ்வாறு குறிப்பிடுகிறார்,
"1983 ஆம் ஆண்டு, ஆடி 25 ஆம் நாள், காலை 10 மணியிருக்கும். நாம் எமது வாகனங்களில் ஏறி திருநெல்வேலி நோக்கிச் சென்றுகொண்டிருந்தோம். தளபதி வீரதுங்கவும் எம்முடன் இணைந்துகொண்டார். எல்லாத்திசைகளிலிருந்தும் துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்படுவதை நாம் அனைவரும் கேட்டோம். திருநெல்வேலியை அடைந்த நாம், சிறு குழுக்களாகப் பிரிந்து ஒவ்வொரு திக்கில் நடக்கத் தொடங்கினோம். வீதியின் இரு பகுதியிலும் இருந்த பகுதிகளுக்குள் நுழைந்து துப்பாக்கிப் பிரயோகம் செய்துகொண்டிருந்த இராணுவத்தினரை நோக்கி அனைத்தையும் நிறுத்திவிட்டு உடனடியாக வீதியை நோக்கி வருமாறு உரக்கக் கத்தினோம்".
"இலங்கை இலகு கலாட்படையின் தளபதி லெப்டினன்ட் ரஜீவ் வீரசிங்க என்னுடன் நடந்து வந்துகொண்டிருந்தார். கொல்லப்பட்ட மக்களின் உடல்கள் அங்கும் இங்குமாகச் சிதறிக் கிடந்தன. சுமார் 10 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவனது உடலைக் கண்டபோது பெருமூச்சொன்றினை விடுவதைத் தவிர வேறு எதுவும் என்னால் செய்ய முடியவில்லை. அவன் ஓட்டிவந்த சைக்கிளும், காவிவந்த ஒரு இறாத்தல் பாணும் அவனது சடலத்திற்கருகில் அப்படியே கிடந்தன. அவனது தலைப்பகுதி சிதறிக் கிடக்க மூளை வழிந்து வீதியில் ஓடிக் கிடந்தது. அவனை மிக அருகில் வந்து சுட்டிருப்பது தெளிவாகத் தெரிந்தது".
"அதேவேளை, நாம் நின்றிருந்த இடத்திலிருந்து சுமார் 100 மீட்டர்கள் தொலைவில் ராணுவ வீரர் ஒருவர் பதுங்கியிருந்து எம்மை நோக்கித் தனது துப்பாக்கியை திருப்புவதை நான் கண்டேன். என்னிடம் பிஸ்ட்டல் ஒன்று மாத்திரமே இருந்தது. லெப்டினன்ட் வீரசிங்கவிடம் அவரது பிரத்தியேக துப்பாக்கி இருந்தது. ஒருகணம் அந்த ராணுவ வீரன் எம்மைக் கொல்வதற்காகவே பதுங்குவதாக நான் நினைத்தேன். தெய்வாதீனமாக வீரசிங்கவுக்கு அந்த ராணுவ வீரனை நன்கு தெரிந்திருந்தது. ஆகவே, வீரசிங்க அவனைப் பார்த்து "வீதிக்கு வா" என்று கட்டளையிட, அவனும் வெளியே வந்தான். திருநெல்வேலிச் சந்திப்பகுதியில் அக்கிரமங்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இராணுவத்தினரை மீள வெளியே இழுத்துவர எமக்கு குறைந்தது ஒரு மணித்தியாலமாவது எடுத்திருக்கும். தளபதி வீரதுங்க மிகுந்த ஆத்திரத்துடன் காணப்பட்டார். படுகொலைகளிலும், சொத்தழிப்புக்களிலும் ஈடுபட்ட ராணுவத்தினர் கைதுசெய்யப்பட்ட அதேவேளை சில இடைநிலை அதிகாரிகளின் பதவிகள் பறிக்கப்பட்டன. அன்று மாலையே கைதுசெய்யப்பட்ட இராணுவத்தினரை அநுராதபுரம் தடுப்புச் சிறைச்சாலைக்கு நாம் அனுப்பி வைத்தோம்".
"இதேவகையான படுகொலைகள் வல்வெட்டித்துரை மற்றும் மாதகல் முகாம்களைச் சுற்றியிருந்த பகுதிகளிலும் அரங்கேறின. பின்னர், மாதகல் முகாம் அதிகாரியான மேஜரும் அவரது ராணுவத்தினரும் தம்மை வேறு முகாம்களுக்கு மாற்றவேண்டாம் என்றும், தாம் மாதகல் முகாமிலேயே தங்கியிருப்பதற்கு அனுமதி தருமாறு வேண்டிக்கொண்டதாகவும் நாம் அறிந்தோம். மாதகல் முகாமின் பொறுப்பதிகாரியான ராணுவ மேஜர் முகாமை விட்டு ராணுவத்தினர் வெளியே செல்லக்கூடாது என்று வாயிலின் முன்னால் நீட்டிப் படுத்துக்கொண்டதாகவும், ஆனால் அவரைத் தூக்கி வாயிலின் வெளியே எறிந்துவிட்டு தமது ட்ரக்குகளில் ஏறிச்சென்ற ராணுவத்தினர் படுகொலைகளில் ஈடுபட்டதாகவும் எமக்குக் கூறப்பட்டது".
இராணுவத் தளபதி இந்த நாட்களில் நடந்துகொண்ட விதம் குறித்து பல வினாக்கள் எழுந்தன. அப்பாவித் தமிழர்களை தனது இராணுவத்தினர் படுகொலை செய்துவருகிறார்கள் என்கிற செய்தி அவருக்கு மீண்டும் மீண்டும் ரேடியோ அறையிலிருந்து அறிவிக்கப்பட்டே வந்தது. ஆனால், மறுநாள் காலை 10 மணிவரை அவர் அட்டூழியங்களில் ஈடுபட்டு வரும் இராணுவத்தினரைக் கட்டுப்படுத்த எந்த முயற்சியிலும் இறங்கவில்லை. ஏன்?
மேலும், ஜனாதிபதி ஜெயவர்த்தனவைப் பொறுத்தவரை யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட படுகொலைகளை சுமார் இருவாரங்கள் முடிந்தபின்னரே தாம் அறிந்துகொண்டதாகக் கூறினார்.
மஞ்செஸ்ட்டர் கார்டியன் பத்திரிக்கையின் நிருபர் டேவிட் பெரெஸ்ஃபபோர்ட் ஜெயாரிடம் யாழ்ப்பாணப் படுகொலைகள் குறித்து ஆவணி 7 ஆம் திகதி வினவுகையில், "யாழ்ப்பாணத்தில் பொதுமக்களைப் படுகொலை செய்த ராணுவத்தினரை இதுவரை நீங்கள் விசாரிக்காதது ஏன்?" என்று கேட்க, "எனக்கு ஒரு சில நாட்களுக்கு முன்னர்தான் இந்தப் படுகொலைகள் பற்றித் தெரியவந்தது. இப்போது நாட்கள் சென்றுவிட்டன, இனிமேல் விசாரிப்பதில் பயனில்லை" என்று வெகு சாதாரணமாகத் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்து வீடு 2001
ஜெயாரிடம் பேசிய பெரெஸ்போர்ட், "யாழ்ப்பாணதில் சிறுவர்கள் வயோதிபர்கள் உட்பட 51 பொதுமக்களை உங்கள் இராணுவத்தினர் படுகொலை செய்திருக்கின்றனரே?" என்று கேட்டபோது, "அத்தனை பேர் சாகவில்லை சுமார் இருபது வரையிலான மக்கள் இறந்திருக்கிறார்கள், அவ்வளவுதான்" என்று அலட்சியமாகப் பதிலளித்தார்.
மேலும், யாழ்ப்பாணத்துப்படுகொலைகள் நடத்தப்பட்டு இரு வாரங்களுக்குப்பின்னரே தான் அதுகுறித்து அறிவிக்கப்பட்டதாகக் கூறிய ஜெயார், இராணுவத்தினர் தன்னிடமிருந்து இவ்விடயத்தை மறைத்துவிட்டார்கள் என்றும் கூறினார்.
அப்படியானால், ஜனாதிபதி ஜெயாரிடமிருந்து இந்த படுகொலைகளை இராணுவத் தளபதி வீரதுங்க மறைத்தது ஏன்?
யாழ்ப்பாணத்துப் படுகொலைகளும், தெற்கில் சமாந்தரமாக முன்னெடுக்கப்பட்ட படுகொலைகளும் உண்மையாகவே ஜெயாரினால் பிரஸ்த்தாபிக்கப்பட்ட "தமிழருக்கான இறுதித் தீர்வு" எனும் திட்டமிட்ட இனக்கொலைக்குள் அடக்கமா என்கிற கேள்வி எழுகிறது.
இந்த வினாக்களும், சந்தேகங்களும் இன்றுவரை தமிழர்களின் மனங்களில் இருந்துகொண்டே இருக்கின்றன.
இந்த சந்தேகங்களே பிரபாகரனை போராடும்படி முந்தள்ளி விட்டிருந்தன.
1984 ஆம் ஆண்டு பங்குனி மாதம், தமிழினக்கொலை நடத்தப்பட்டு கிட்டத்தட்ட ஒருவருடம் ஆகும் நிலையில் இந்தியச் செய்தியாளர் அனித்தா பிரத்தாப்பிடம் பேசிய பிரபாகரன், "எமது பார்வையில் 1983 ஆடியில் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இனக்கொலையானது நன்கு திட்டமிட்ட ரீதியில், ஒருமித்த வழிநடத்துதலில், அதிகாரத்திலிருந்த கட்சியின் இனவாத முக்கியஸ்த்தர்களால் நடத்தப்பட்டதாகவே உணர்கிறோம்" என்று கூறினார்.
பிரபாகரனை உருவமைத்த அவரது சிந்தனையின் வெளிப்பாடான இந்தக் கேள்வி பதில் பகுதியை இங்கே இணைக்கிறேன்,
அனித்தா பிரதாப் : 1983 ஆம் ஆண்டு ஆடி 23 ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகள் பதுங்கியிருந்து தாக்கியதில் இலங்கை இராணுவத்தின் 13 வீரர்கள் கொல்லப்பட்டனர். அப்பாவித் தமிழர்கள் மீது பழிவாங்கும் தாக்குதல்களை இராணுவத்தினர் நடத்துவதற்கு உங்களின் தாக்குதல் காரணமாக முன்வைக்கப்பட்டது. இவ்வாறான பாரிய பழிவாங்கும் தாக்குதல்கள் நீங்கள் நஎதிர்பார்த்தீர்களா?
பிரபாகரன் : ஜூலை இனக்கொலையினை தமிழ்ப் போராளிகளின் பதுங்கித் தாக்குதலுக்கான வெறும் பழிவாங்கலாக நீங்கள் பார்க்கக் கூடாது. இப்படிப் பார்ப்பது நடத்தப்பட்ட இனக்கொலையினை மிக இலகுவாக கடந்துசெல்லக் காரணமாகிவிடும். ஆண்டாண்டு காலமாக தமிழருக்கெதிரான இன வன்முறைகளை இந்த நாடு தொடர்ச்சியாக அரங்கேற்றியே வந்திருக்கிறது. எமது போராளி இயக்கம் ஆரம்பிக்கும் முதலே தமிழர் மீதான இனக்கொலைகள் நடந்தே வந்திருக்கின்றன. எமது தாக்குதல் நடத்தப்படுவதற்கு இரு வாரங்களுக்கு முன்னரும் திருகோணமலயில் தமிழர்கள் மீது திட்டமீட ரீதியில் படுகொலைகளும், சொத்தழிப்புக்களும் நடந்திருந்தன. ஆகவே, தமிழர் மீதான திட்டமிட்ட இனவன்முறைகளை ஒரு தாக்குதல் சம்பவத்துடன் முடிச்சுப் போட்டுப் பார்ப்பது தவறு.
நாங்கள் நீண்ட நெடிய கெரில்லாப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறோம். பல கெரில்லாத் தாக்குதல்கள், பதுங்கித் தாக்குதல்களை நாம் நடத்தி பல சிங்கள இராணுவத்தினரையும், பொலீஸாரையும் கொன்றிருக்கிறோம். ஆடியில் எம்மால் நடத்தப்பட்ட பதுங்கித் தாக்குதல்கூட எமது போரட்டத்தின் இன்னொரு சம்பவமே அன்றி வேறில்லை. ஒட்டுமொத்த வன்முறைகளுக்கும் ஒரு தாக்குதல் நிகழ்வே காரணமானது என்று எண்ணுவது மிகவும் தவறானது. ஆடியில் எம்மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை பார்க்கும்போது, அவை எம் மக்களை கொல்வதற்காக மட்டுமே நடத்தப்படவில்லையென்பதும், கொழும்பில் எம்மக்களின் பொருளாதாரப் பலத்தினைச் சிதைக்கவும், வாழ்வாதாரத்தை அழிக்கவும் மிகவும் திட்டமிட்ட முறையில் நடத்தப்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்துகொள்வீர்கள். எமது பார்வையில் ஆடியில் நிகழ்த்தப்பட்ட படுகொலையென்பது மிகவும் திட்டமிட்ட வகையில், ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் ஆட்சியதிகாரத்தில் இருந்த இனவாத சக்திகளால் அரங்கேற்றப்பட்ட இனக்கொலையாகவே பார்க்கிறோம். ஆரம்பத்தில் இப்படுகொலைகளுக்கான ஒட்டுமொத்தப் பழியினையும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீது சுமத்திவிடவே சிங்கள இனவாத அதிகார மையம் முயன்றது. பின்னர் திடீரென்று இடதுசாரி கட்சிகளை நோக்கி இனவாதிகள் தமது விரலை நீட்டினர். ஆனால், இன்றும் ஆட்சியிலிருக்கும் அரசாங்கத்தின் இனவாத தலைமைப்பீடமே இப்படுகொலைகளுக்குப் பொறுப்பானவர்கள்.