தனது தம்பியை இந்திராவிடம் தூதனுப்பிய ஜெயார்
ஜெயாருடன் தொலைபேசியில் பேசிய இந்திரா, ஆவணி 5 ஆம் திகதி காலை பாராளுமன்றத்தில் விவாதித்து சட்டமாக்கிய ஆறாவது திருத்தம் குறித்துப் பேசினார். இத்திருத்தச் சட்டத்தின் மூலம் அனைத்துக் கட்சி மாநாட்டில் தமிழர்கள் பங்குபற்றுவதே கடிணமாகிவிட்டிருப்பதாகக் கூறிய அவர், தீர்வுதொடர்பாக தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருடன் இலங்கையரசு பேசுவதற்கான ஒழுங்குகளை இந்தியா செய்துகொடுக்கத் தயாராக இருப்பதாகவும் கூறினார். இதற்குச் சம்மதித்த ஜெயார், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருடன் தீர்வு தொடர்பாகப் பேசுவதற்கு தனது விசேட பிரதிநிதியாக தனது இளைய சகோதரர் ஹெக்டர் ஜெயவர்த்தனவை ஓரிரு வாரங்களில் அனுப்புவதாக உறுதியளித்தார். மேலும், தனது சகோதரர் பிரசித்திபெற்ற வழக்கறிஞர் என்றும், அரசியல் யாப்பில் வித்தகர் என்றும் புகழுரைத்தார்.
அன்று மாலை இந்திய பாராளுமன்றத்தின் நடவடிக்கைகள் கலையும் மாலை வேளையின்போது ஜெயாருடனான தனது தொலைபேசி உரையாடல் குறித்து இந்திரா உறுப்பினர்களுக்கு அறியத் தந்தார். அங்கு பேசிய இந்திரா, இலங்கையின் ஜனாதிபதி ஒரு வார காலத்திற்குள் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பிராந்தியத்தில் சமாதானம் ஆகியவற்றை தமிழருக்கான தீர்வினூடாக அடைவது குறித்து ஆராய விசேட பிரதிநிதி ஒருவரை அனுப்பவுள்ளதாகக் கூறினார்.
ஆவணி 11 ஆம் திகதி தில்லியைச் சென்றடைந்த ஹெக்டர் ஜெயவர்த்தன, இந்திரா காந்தியுடன் இரண்டு சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார். ஆவணி 11 ஆம் திகதி இடம்பெற்ற முதலாவது சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் பொழுது, அண்மையில் இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களையடுத்து இந்திய மக்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் மிகுந்த கவலை கொண்டிருப்பதாக இந்திரா காந்தி ஹெக்டர் ஜெயவர்த்தனவிடம் தெரிவித்தார். இந்தியா எப்போதும் இவ்வாறான வன்முறைகள், படுகொலைகள், பாகுபாடுகளுக்கெதிராகக் குரல் கொடுக்கும் என்று எடுத்துரைத்த இந்திரா, தம்மைக் காக்க வழியின்றி இருக்கும் அப்பாவிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறினார்.
பின்னர், இலங்கையின் இறையாண்மை, சுதந்திரம் மற்றும் பிரதேச ஒருமைப்பாடு போன்றவற்றை இந்தியா மதிக்கிறது என்று இந்திரா ஹெக்டர் ஜெயவர்த்தனவிடம் உறுதியளித்தார். "இந்தியா இன்னொரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் ஒருபோதும் தலையிடப் போவதில்லை. ஆனாலும், இரு நாட்டிலும் வசிக்கும் மக்கள் சரித்திர காலம் தொட்டு கலாசார தொடர்புகளைக் கொண்டுள்ளதனால், குறிப்பாக இலங்கைத் தமிழர்கள் இந்தியாவுடன் நெருக்கமான பிணைப்புக்களைக் கொண்டிருப்பதனால், அங்கு நடக்கும் சம்பவங்கள் குறித்து இந்தியா பேசாமலிருக்க முடியாது" என்று கூறினார் இந்திரா. இதற்குப் பதிலளித்த ஹெக்டர், நிலைமைகள் வேகமாக வழமைக்குத் திரும்பிவருவதாகவும், பெரும்பாலான அகதிகள் தமது வீடுகளுக்குத் திரும்பியிருப்பதாகவும் கூறினார். மேலும், வீடுகளை இழந்திருக்கும் ஆயிரக்கணக்கான மக்களின் பிரச்சினைகள் குறித்து தமது அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார். வன்முறைகளின்போது அழிக்கப்பட்ட தமிழர்களின் சொத்துக்களை கைய்யகப்படுத்தவென அரசு அமைத்த அதிகார சபையினை தமிழரின் சொத்துக்களை மீள கட்டமைப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு என்று இந்திராவிடம் கூறினார் ஹெக்டர். தமிழர்களுக்குச் சொந்தமான சொத்துக்களை அரசு கையகப்படுத்தி சிங்களவர்களுக்குக் கொடுத்துவருவதாக வந்த செய்திகளை வெறும் வதந்திகள் என்று புறக்கணித்தார் அவர்.
தொடர்ந்து பேசிய இந்திரா, பிரதமரின் தேசிய துயர் துடைப்பு நிதியத்தின் ஊடாக பத்து மில்லியன் ரூபாய்களை இந்திய அரசு பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வழங்க விரும்புவதாக ஹெக்டரிடம் கூறினார் . மேலும், இதற்கு மேலதிகமாக பொதுமக்களின் நன்கொடைகளும் வந்து குவிந்துகொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். "தற்போதிருக்கும் அவலநிலைக்கான உடனடி நிவாரணங்களை வழங்கும் அதேவேளை, தமிழ்ச் சமூகத்தின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த, அவர்களின் நியாயமான அபிலாஷைகளை நிறைவுசெய்ய, நிரந்தரமான தீர்வுபற்றிப் பேசுவதை கால தாமதமின்றி ஆரம்பிக்க வேண்டும்" என்று அவர் ஹெக்டரைப் பார்த்துக் கூறினார். இதற்குப் பதிலளித்த ஹெக்டர், ஜனாதிபதி ஜெயார் இதுதொடர்பாக ஏற்கனவே செயலில் இறங்கியிருப்பதாகக் கூறினார். இவ்வாறான முயற்சி வெற்றியளிப்பதற்கு, அனைத்து மக்கள் கூட்டத்தையும் ஜனாதிபதி அவர்கள் அரவணைத்துச் செல்லவேண்டியிருக்கும் என்றும் அவர் கூறினார். அதன்பின்னர், தமிழர்களின் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வொன்றினை எட்டுவதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஜெயார் முன்வைக்கவிருக்கும் ஐந்து அமசத் திட்டம் குறித்து இந்திராவிடம் விபரித்தார்.