தமிழர்களுக்கு மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கு மேலதிகமாக எதனையும் எனால்த் தரமுடியாது பாரத்தசாரதியிடம் திட்டவட்டமாகக் கூறிய ஜெயார்
தமிழர்களின் சட்டபூர்வமான கோரிக்கைகளை, அவர்களின் அபிலாஷைகளை பூர்த்திசெய்யக்கூடிய தீர்வு நோக்கி ஜெயவர்த்தனவின் அரசாங்கத்தை அழுத்துவதற்காகப் பணிக்கப்பட்ட பார்த்தசாரதி உடனேயே செயலில் இறங்கினார். முதலாவதாக, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர்களை தில்லிக்கு அழைத்து அவர்களின் பக்க நியாயங்களைக் கேட்டறிந்தார். சென்னை விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அமிர்தலிங்கம் தமிழரின் பிரச்சினையில் இந்தியாவின் மத்தியஸ்த்தத்தை வரவேற்பதாகக் கூறியதுடன் இந்திரா காந்தி இந்தியப் பாராளுமன்றத்தில் பாவித்த சொற்பிரயோகமான "ஒன்றுபட்ட இலங்கைக்குள்" எனும் பதத்தை ஏற்றுக்கொள்வதில் தனக்கு ஆட்சேபனைகள் ஏதும் இல்லையென்றும் கூறினார். பிரிவினைக்கெதிரான இந்தியாவின் நிலைப்பாட்டினை தான் விளங்கிக்கொள்வதாகவும், ஆகவே இந்தியாவின் மத்தியஸ்த்தத்துடன் முன்வைக்கப்படும் மாற்றுத்தீர்வொன்றினைப் பரிசீலிக்கத் தாம் தயாராக இருப்பதாகவும், அதுவரையில் தனிநாட்டிற்கான கொள்கையினைக் கைவிடப்போவதில்ல என்றும் தெரிவித்தார். மேலும், தமிழர்கள் மீது மேலும் தாக்குதல்கள நடப்பதைத் தடுக்க இந்தியா தனது படைகளை இலங்கைக்கு அனுப்பி உதவ வேண்டும் என்று வெளிப்படையாகவே இந்தியாவைக் கேட்டுக்கொண்டார்.
"தமிழர்கள் இலங்கையைக் கூறுபோட விரும்பவில்லை. சிங்களக் காடையர்களின் அக்கிரமங்களும், அரசாங்கத்தின் கொள்கைகளுமே இலங்கையைக் கூறுபோட எத்தனிக்கின்றன" என்று அமிர்தலிங்கம் கூறினார். "நாம் கேட்பதெல்லாம் தமிழர்களையும் சமவுரிமை உள்ள பிரஜைகளாக வாழவிடுங்கள் என்பதைத்தான்" என்ற் அவர் மேலும் கூறினார்.
பின்னாட்களில் என்னுடன் பேசிய அமிர்தலிங்கமும், நீலன் திருச்செல்வமும் பார்த்தசாரதியுடனான தமது கலந்துரையாடல்கள் பயனுள்ளதாக அமைந்ததாகக் கூறினார்கள். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர்களுடன் பேசிய பார்த்தசாரதி, "தற்போது தனிநாட்டிற்கான மாற்றுத்தீர்வுக்கு நீங்கள் இணங்கியிருக்கிறீர்கள், அப்படியானால் நீங்கள் எதிர்பார்க்கும் தீர்வின் அடிப்படைகள் எப்படி இருக்கவேண்டும் என்பதை நீங்கள் முன்வைக்கவேண்டும்" என்று கேட்டார். "அதனை தெளிவாகச் சொல்லுங்கள், அதுவே உங்களின் பேரம்பேசலின் நிலையாக இருக்கவேண்டும்" என்றும் கூறினார்.
பார்த்தசாரதி பேரம்பேசலின் அடிப்படைகளை இவ்வாறு வரையறை செய்தார்,
1. தமிழர்கள் முன்வைக்கும் தீர்வு உள்நாட்டின் கொள்கைகளின் அடிப்படையில் அமைந்ததாக இருக்கவேண்டும், சூழ்நிலைகளின் உணர்வுகளால் உந்தப்பட்ட தீர்வாக அமையலாகாது.
2. தனிநாட்டுக் கோரிக்கையினைக் காட்டிலும் குறைவான நிலையினை அது கொண்டிருக்கும் அதேவேளை, தமிழர்களின் அபிலாஷைகளையும் அது பூர்த்திசெய்வதாக அமைதல் வேண்டும்.
3. தமிழர்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் உணர்வுரீதியாக கட்டமைக்கப்படலாகாது என்பதுடன், அவை சிங்களவர்களின் உணர்வுகளையும் பாதிக்காது அமைதல் அவசியம்.
4. தமிழர்கள் முன்வைக்கும் தீர்வு இலங்கையின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பூகோள
உறுதிப்பாடு ஆகியவற்றினை எந்தவகையிலும் பாதிக்கக்கூடாது.
பார்த்தசாரதியின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்ட முன்னணியினர் இருநாட்களின் பின்னர் தமது தீர்வுடன் வந்து அவரை மீண்டும் சந்தித்தனர். ஆனாலும், அவர்கள் முன்வைத்த தீர்வு பார்த்தசாரதியைத் திருப்திப்படுத்தவில்லை. "பிராந்தியங்களின் ஒன்றியம்" என்று முன்னணியினர் பாவித்த சொற்பதத்தை பார்த்தசாரதி நிராகரித்தார். இச்சொற்பதம் முற்றான சமஷ்ட்டி அமைப்பொன்றினை நோக்கி செல்லும் சாத்தியத்தைக் கொண்டிருப்பதனால் சிங்களவர்கள் நிச்சயமாக இதனை எதிர்ப்பார்கள் என்று அவர் கூறினார். டட்லியுடனான செல்வாவின் பேச்சுக்களின்போது பிராந்தியங்கள் எனும் சொற்பதத்தினை டட்லி ஏற்றுக்கொண்டிருந்தமையினால், அதனையே முன்னணியினர் பாவிக்கவேண்டும் என்று அவர் கூறினார். பின்னர், முன்னணியினர் தமது உத்தேச தீர்வு நகலில் இருந்து "பிராந்தியங்களின் ஒன்றியம்" எனும் சொற்பதத்தினை நீக்க அழுத்தம்கொடுத்து அதனை நீக்கிவிட்டார். மேலும், இலங்கையின் இறையாண்மை, பிரதேச ஒருமைப்பாடு, ஒற்றுமை ஆகியவற்றினை மீறமாட்டோம் எனும் கூற்றினையும் முன்னணியினரை அழுத்தி நகலில் சேர்த்துக்கொண்டார்.
மேலும், முன்னணியின் தலைவர்களுடன் பேசிய பார்த்தசாரதி, தமிழர்கள் தமது பிராந்தியங்களின் விவகாரங்களில் மட்டுமே கரிச்ணை கொள்ளாது மத்திய அரசாங்கத்தின் விவகாரங்களிலும் பங்கெடுத்து தேசிய அபிவிருத்தியிலும் பங்களிப்பைச் செலுத்தவேண்டும் என்றும் கூறினார். அத்துடன் மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற இராணுவம், பொலீஸ் மற்றும் பொதுச் சேவைகள் ஆகியவற்றிலும் தமிழர்களின் சனத்தொகை விகிதாசாரத்திற்கேற்ப பிரதிநிதுத்துவத்தைக் கோரலாம் என்றும் அறிவுரை வழங்கினார்.
தனது அழுத்தங்களுக்கமைய தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் தயாரித்துக் கொடுத்திருந்த "தமிழர்களின் கோரிக்கை" நகலை எடுத்துக்கொண்டு ஆவணி 25 ஆம் திகதி கொழும்பை வந்தடைந்தார் பார்த்தசாரதி. அன்று மாலையே அவர் ஜெயவர்த்தனவைச் சென்று சந்தித்தார். ஜெயவர்த்தனவுடனான பேச்சுகளின்போது தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருடன் தான் மேற்கொண்ட பேச்சுக்கள் குறித்து விளக்கிய பார்த்தசாரதி, முன்னணியினர் தன்னிடம் கொடுத்திருக்கும் தமிழர்களின் பேரம்பேசலின் நிலை குறித்த உத்தேச நகல் குறித்தும் விபரித்தார். மேலும், தான் கொண்டுவந்த நகலை ஜெயாரிடம் கையளித்த பார்த்தசாரதி, அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து தன்னிடம் அறியத்தருமாறும் கேட்டுக்கொண்டார்.
பார்த்தசாரதியிடம் பேசிய ஜயவர்த்தன, தமிழர்களுக்கிருக்கும் பிரச்சினை குறித்து 1977 ஆம் ஆண்டுத் தேர்தல்களின்போது தொண்டைமானின் உதவியுடன் இடம்பெற்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருடனான பேச்சுக்களின்போதே தனது அரசாங்கம் அறிந்துகொண்டுவிட்டதாகக் கூறினார். ஆகவே, இப்பிரச்சினைகளைக் களையும் நடவடிக்கைகளினை தனது அரசாங்கம் நடமுறைப்படுத்திவருவதாக அவர் குறிப்பிட்டார். தமிழர்கள் மீதான ஜூலைக் கலவரத்தின் பின்னணியினை பார்த்தசாரதிக்கு விளக்கிய ஜெயார், இவற்றுக்கான மூல காரணம் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரும், தமிழ்ப் பயங்கரவாதிகளும், இடதுசாரிகளும்தான் என்று அவர் குற்றஞ்சாட்டினார். தானோ, தனது அரசாங்கமோ, நாட்டுமக்களோ நாடு பிரிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார். மாவட்ட அபிவிருத்திச் சபைகளைப் பலப்படுத்துவதும், அவற்றினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கும் அப்பால் வேறு எந்த விட்டுக் கொடுப்பினையும் செய்ய தனது அரசாங்கம் தயாரில்லை என்று கூறிய ஜெயவர்த்தன, தனது அரசின் பேரம் பேசலின் நிலைகூட அதுதான் என்று உறுதியாக பாரத்தசாரதியிடம் கூறினார். ஜெயாருடனான சந்திப்பினையடுத்து, எதிர்க்கட்சித் தலைவராகவிருந்த சிறிமாவைச் சந்திக்கச் சென்றார் பார்த்தசாரதி. இலங்கையின் ஒருமைப்பாட்டை எக்காரணத்தைக் கொண்டும் விட்டுக் கொடுக்க முடியாது என்று கூறிய சிறிமா, சமஷ்ட்டி அடிப்படையிலான தீர்வொன்றின்மூலம் தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கமுடியும் என்கிற கருத்தையும் முற்றாக நிராகரித்தார்.
சிறிமாவைச் சந்தித்த பின்னர் இரண்டாவது முறையாகவும் ஜெயாரைச் சந்திக்கச் சென்றார் பார்த்தசாரதி. அவர் சிறிமாவைச் சந்தித்ததையும், சிறிமா அவரிடம் கூறியதையும் அறிந்துவைத்திருந்த ஜெயார், பார்த்தசாரதியைப் பார்த்து, "இப்போது, தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதுகுறித்த சிங்களவரின் நிலைப்பாட்டினைத் தெளிவாக உணர்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்" என்று கூறினார். அரசாங்கத்தையும் எதிர்க்கட்சியையும் பொறுத்தவரையில் தமிழரின் பிரச்சினை தொடர்பாக ஒரே நிலைப்பாடிலேயே இருந்தார்கள். அதாவது, எக்காரணத்தைக் கொண்டும் இலங்கையின் ஒருமைப்பாட்டினை விட்டுக்கொடுக்க முடியாது என்பதே அது. இதுவே சிங்கள மக்களின் பேரம்பேசலின் அடிப்படையாகவும் இருந்தது. பார்த்தசாரதியிடம் பேசிய ஜெயார், "தமிழர்களுக்கு மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கு மேலதிகமாக வேறு எதனையும் நான் தரப்போவதில்லை, இதுவே எனது அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு" என்று மீண்டும் உறுதியாகக் கூறினார்.
மேலும், "அரசியல் அமைப்பில் விசேட சரத்துக்களைச் சேர்ப்பதனூடாக தமிழர்களுக்குத் தீர்வெதனையும் வழங்குவதை சிங்கள மக்கள் முழுமையாக எதிர்க்கிறார்கள். நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் பொதுவான திட்டங்களினூடாக மட்டுமே தமிழரின் பிரச்சினைகளுக்கான தீர்வையும் நாம் கண்டறிய வேண்டும்" என்றும் ஜெயார் பார்த்தசாரதியிடம் தெரிவித்தார். ஜெயவர்த்தனவின் நிலைப்பாட்டினைத் தெளிவாக உணர்ந்துகொண்ட பார்த்தசாரதி, ஆவணி 26 ஆம் திகதி தனது கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழக நண்பரான பீட்டர் கியுனுமென்னைச் சந்தித்தவேளை தமிழரும் சிங்களவரும் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்று தாம் கருதும் விடயங்களில் மிகவும் வேறுபாடான நிலைப்பாட்டில் இருப்பதாகவும், தத்தமது நிலைப்பாடுகள் குறித்து ஆளமான மனோவியாதியினால் ஆட்கொள்ளப்பட்டிருப்பதாகவும் கூறினார். "இவர்களுக்கிடையில் பொதுவான தளம் ஒன்றினை என்னால்க் காண முடியவில்லை" என்று தனது கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழக நண்பர்களான டி சாரம் மற்றும் ராஜு குமாரசாமி ஆகியோருடன் பேசும்போது சலித்துக்கொண்டார்.