பயிற்சியின் நிறைவில் கண்கலங்கிய கிட்டுவும், யதார்த்தை உணர்த்திய பிரபாகரனும்
மூன்று இடங்களில் பயிற்சி வழங்கப்பட்டது. தில்லியின் இதயப்பகுதியில் அமைந்திருந்த ராமகிருஷ்ணபுரம், தில்லி விமான நிலையத்திற்கு அருகில் இருந்த டெஹெரா டன் மற்றும் சக்கிரட்ட ஆகிய பகுதிகளிலேயே பல பயிற்சி முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன.
ஒவ்வொரு அமைப்பிலிருந்தும் சாதாரண பயிற்சிக்கு கொண்டுவரப்பட்ட போராளிகள் தனித்தனியாகத் தங்கவைக்கப்பட்டனர். விசேட பயிற்சிகளுக்கென்று அழைத்துவரப்பட்ட போராளிகளை, அவர்கள் வேறு வேறான இயக்கங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தபோதும் ஒரு முகாமிலேயே தங்கவைக்கப்பட்டனர். ஆனால், புலிகளின் போராளிகளை ஏனைய அமைப்புக்களின் விசேட பயிற்சிப் போராளிகளுடன் தங்கவைப்பதை அதிகாரிகள் தவிர்த்துக்கொண்டனர். புலிகளின் போராளிகளை தொடர்ந்தும் தனியாக வைத்தே பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்தது.
புலிகளை இரகசிய ராணுவப் பயிற்சி நிலையமான சக்கிரட்ட பகுதியில் தங்கவைத்து பயிற்சியளித்தனர். இப்பகுதி இந்திய ராணுவப் புலநாய்வு அதிகாரிகளினால் "கட்டமைப்பு 22 " என்று அழைக்கப்பட்டு வந்தது. இந்த முகாமிலேயே சீன ஆக்கிரமிப்பிற்குட்பட்டிருந்த திபெத்தில் சீன அரசின் நிர்வாகத்திற்கெதிராகப் போராடிவந்த திபெத்தியப் போராளிகளுக்கு ரோவும், அமெரிக்காவின் சி.ஐ.ஏ அமைப்பும் இணைந்து பயிற்சிகளை மேற்கொண்டு வந்திருந்தன. புலிகளின் போராளிகளுக்கு இந்த முகாமினை ஒதுக்குமாறு ரோ வினால் புலிகளைப் பயிற்றுவிக்கென அமர்த்தப்பட்ட அதிகாரியான காவோ தனது உதவியாளர்களுக்குப் பணித்திருந்தார்.
இந்தியப் பயிற்சிக்காக தனது போராளிகளை அனுப்புவது தொடர்பில் தலைவர் தனது சந்தேகங்களைக் கொண்டிருந்தார். சிங்களப் பேரினவாதத்திற்கெதிராக தான் முன்னெடுத்திருக்கும் போராட்டத்திற்கும், இந்தியா போராளிகளுக்கு பயிற்சியளிக்கும் நோக்கத்திற்கும் இடையிலான பாரிய வேற்றுமையினை அவர் தெளிவாக உணர்ந்தே இருந்தார். ஆனாலும், இந்திய பயிற்சியினைப் பாவித்து மாற்றியக்கங்களைக்கொண்டு இந்தியா புலிகளை பிற்காலத்தில் அழித்துவிடும் நிலைமை உருவாகலாம் என்று தலைவரிடம் கூறிய அரசியல் தத்துவாசிரியர் அன்டன் பாலசிங்கம், புலிகளும் இந்தியப் பயிற்சியினைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று பேசி தலைவரைச் சம்மதிக்க வைத்தார். பாலசிங்கம் கூறியதன்படி நிகழுமானால் தமிழரின் தாயக விடுதலைப் போராட்டம் முற்றாகவே அழிக்கப்பட்டுவிடும் என்பதை உணர்ந்துகொண்ட பிரபாகரன் இந்தியப் பயிற்சியை ஏற்றுக்கொள்ள முடிவெடுத்தார்.
ஈரோஸின் பாலக்குமார்
"இந்தியாவும் ஈழத்தமிழர்களும்" எனும் தலையங்கத்துடன் 1988 - 1989 ஆம் ஆண்டுகளில் புலிகளால் வெளியிடப்பட்ட பதிவில் இதுகுறித்த விபரங்கள் பகிரப்பட்டிருந்தன. இப்பதிவில் தமிழ்ப்போராளிகளுக்கு பயிற்சியளிப்பதில் இந்தியா கொண்டிருந்த உறுதியை பிரபாகரன் உணர்ந்திருந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், இந்தியப் பயிற்சியை புலிகள் ஏற்றுக்கொள்ள மறுக்குமிடத்து இந்தியாவினால் பயிற்சியளிக்கப்படும் ஏனைய இயக்கங்கள் தாம் புதிதாகப் பெற்றுக்கொண்ட பயிற்சியினைப் புலிகளை அழிக்கப் பயன்படுத்தலாம் என்பதை உணர்ந்துகொண்டார். புலிகளின் அழிப்பென்பது தமிழரின் தாயக விடுதலைப் போராட்டத்தினை முடிவிற்குக் கொண்டுவந்துவிடும் என்று அவர் அஞ்சினார் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
"மட்டுப்படுத்தப்பட்ட பயிற்சியே எமக்கு வழங்கப்பட்டது. ஆனாலும், எமது சக்தியைப் பாவித்து நாம் பல பயிற்சி முகாம்களை அமைத்துக்கொண்டு எமது இராணுவ பலத்தினை வளர்த்துக்கொண்டோம். இந்தியாவிடம் தங்கியிருக்காமல் எமது வளங்களைப் பாவித்து எமக்குத் தேவையான ஆயுதங்களையும் நாம் பெற்றுக்கொண்டோம்" என்று புலிகளின் அப்பதிவு மேலும் கூறுகிறது.
பிரபாகரன் பற்றிய இந்தப் பதிவு மேலும் தொடரும்போது அவர் கொண்டிருந்த சிந்தனையும், மதிநுட்பமான முடிவுகளும் போராட்டத்தினை முன்கொண்டு சென்றது குறித்து நாம் மேலும் மேலும் அறிந்துகொள்ள முடியும்.
தனது போராளிகளைத் தனியான முகாம் ஒன்றில் வைத்து பயிற்சியளிக்குமாறு பிரபாகரன் ரோ அதிகாரிகளிடம் கேட்டிருந்தார். ரோவும் அதற்குச் சம்மதித்திருந்தது. பயிற்சிகளின் ஆரம்பத்திலிருந்தே போராளி அமைப்புக்களில் புலிகளே திறமையானவர்கள் என்பதை ரோ அதிகாரிகள் அறிந்திருந்தனர். ரோ வின் கைக்கூலிகளாக தனது போராளிகள் மாற்றப்படுவதைத் தடுப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் பிரபாகரன் எடுத்திருந்தார்.
அக்காலத்தில் போராளி அமைப்புக்களில் இணைந்துகொண்ட இளைஞர்களுக்கு இயக்கப் பெயர் வழங்கப்படுவது வழமையாக இருந்தது. இதற்கு இரு காரணங்கள் இருந்தன. முதலாவது போராளியின் குடும்பம் இலங்கை இராணுவத்தினரிடமிருந்தோ அல்லது பொலீஸாரிடமிருந்தோ துன்புருத்தல்களை எதிர்கொள்வதைத் தடுப்பது. இரண்டாவது போராளிகளுக்கு புதியதொரு அடையாளத்தைக் கொடுப்பது. புதிய அடையாளத்தைப் பெற்றுக்கொள்ளும் ஒருபோராளி அவ்வியக்கத்திற்கும், இலட்சியத்திற்கும் எப்போதும் விசுவாசமாக செயற்படுவார் என்கிற எதிர்ப்பார்ப்பு இருந்தது. மேலும், தமது முன்னைய வாழ்விலிருந்து முற்றான விலகலையும் இயக்கப் பெயர்கள் போராளிகளுக்கு வழங்கின. புலிகள் இயக்கத்தில் இந்த நடைமுறை ஒரு மதத்தைப் போல பின்பற்றப்பட வேண்டும் என்று பிரபாகரன் விரும்பினார். போராளிகள் தமது இயக்கப் பெயர்களையே பாவிக்கவேண்டும் என்றும் ஏனைய போராளிகளின் இயற்பெயரை எக்காரணத்தைக் கொண்டும் அறிந்துகொள்ள முயலக் கூடாது என்கிற கடுமையான கட்டளையும் இருந்தது. போராளிகளின் குடும்பங்களின் விபரங்கள் எதிரிகளுக்குக் கிடைக்கப்பெறுவதைத் தடுக்கவே இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டது.
இந்தியாவுக்குப் பயிற்சிக்கு அனுப்பிவைக்கப்பட்ட தனது போராளிகளிடம் பேசிய பிரபாகரன் எக்காரணத்தைக் கொண்டும் தமது இயற்பெயர்களை இந்திய அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டாம் என்று பணித்திருந்தார். இயக்கத்தில் அவர்களுக்கு வழங்கப்பட்ட பெயர்களையே போராளிகள் இந்திய அதிகாரிளிடம் கூறி வந்தமையினால் அவர்களது குடும்ப விபரங்கள் குறித்து ரோ அதிகாரிகளால் அறியமுடியாது போய்விட்டது.பொன்னமானின் உண்மையான பெயர் அவரது வீரமரணத்தின் பின்னரே வெளியே தெரியவந்தது. 1987 ஆம் ஆண்டு நாவற்குழியில் ஏற்பட்ட எதிர்பாராத விபத்தொன்றில் அவர் வீரமரணம் அடைந்திருந்தார்.
இந்தியப் பயிற்சி அட்டவணை மிகவும் கடுமையாகக் காணப்பட்டது. காலை 8 மணிக்கு உடற்பயிற்சிகளுடன் நாள் ஆரம்பிக்கும். காலையுணவு ஒன்பது மணிக்கு பரிமாறப்பட்டது. பயிற்சிகளுக்கான தேற்றம் மற்றும் தேற்றத்தினை நடைமுறைப்படுத்திப் பார்க்கும் செயற்பாடுகள் காலை 10 மணியிலிருந்து பிற்பகல் 1 மணிவரை நடத்தப்பட்டன. மரபுவழிப் போர்முறை மற்றும் கரந்தடிப்படைப் போர்முறை ஆகியனவற்றிலும் பயிற்சிகள் வழங்கப்பட்டன. வகுப்புக்களில் நடத்தப்பட்ட பயிற்சிகள் ஆயுதங்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்தே வழங்கப்பட்டு வந்தன.
மதிய உணவு பிற்பகல் 1 மணியிலிருந்து 2 மணிவரை பரிமாறப்பட்டது. பிற்பகல் முழுவதும் துப்பாக்கிச் சூடு நடக்கும் மைதானத்திலேயே கழிக்கப்பட்டது. அனைத்துப் போராளிகளுக்கும் எஸ்.எல்.ஆர், ஏ.கே. 47, எம் 16, ஜி 3, எஸ்.எம்.ஜி, .303, ரிவோல்வர்கள், பிஸ்ட்டல்கள், ரொக்கெட் லோஞ்சர்கள் மற்றும் கிரணேட்டுக்கள் ஆகியவற்றில் பயிற்சியளிக்கப்பட்டது. பயிற்சிகளின்போது திறமையாகச் செயற்பட்டதன் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட சில போராளிகளுக்கு விசேட பயிற்சிகளும் வழங்கப்பட்டன.
விசேட பயிற்சிகளின்போது வெடிகுண்டுகளைத் தயாரிப்பது, கண்ணிவெடிகளைப் புதைப்பது, தாங்கியெதிர்ப்பு ஆயுதங்களைக் கையாள்வது, தொலைத்தொடபு மற்றும் புலநாய்வு ஆகிய விடயங்களில் கவனம் செலுத்தப்பட்டது. டெலோ அமைப்பிலிருந்து ரோ அதிகாரிகளினால் தெரிவுசெய்யப்பட்ட குழு ஒன்றிற்கு திருகோணமலைத் துறைமுகத்திற்கு வந்துசெல்லும் கப்பல்கள் பற்றிய தகவல்களைத் திரட்டுவதற்காக பிரத்தியேகப் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
டெலோ அமைப்பின் இந்தப் பிரிவில் பயிற்றப்பட்ட முன்னாள் உறுப்பினர் ஒருவர் என்னுடன் பேசுகையில் ரோ அதிகாரிகளால் தாம் தெரிவுசெய்யப்பட்டதாகவும், கப்பல்களை அடையாளம் காண்பது, அது எந்த நாட்டிற்குரியது என்பதைக் கண்டறிவது, அக்கப்பல் எவ்வகையைச் சார்ந்தது போன்ற விடயங்களை அறிந்துகொள்வதற்கான பயிற்சிகள் தமக்கு வழங்கப்பட்டதாகக் கூறினார். மும்பாய்க்கு அழைத்துச் செல்லப்பட்டு இந்தியக் கடற்படையினரால் பயிற்றுவிக்கப்பட்ட இந்தக் குழுவினர் கப்பல்களைப் புகைப்படம் எடுப்பது, கப்பலுக்கான தொலைபேசி அழைப்புக்களை இடைமறித்து ஒட்டுக் கேட்பது போன்ற புலநாய்வுச் செயற்பாடுகளில் தேர்ச்சி பெற்றனர். இந்த நடவடிக்கைகளுக்குத் தேவையான கருவிகள் இவர்களுக்கு வழங்கப்பட்டதோடு நீருக்கடியில் சென்று உளவுத்தகவல்களை சேகரிப்பது போன்ற விடயங்களிலும் இக்குழுவினர் இந்திய கடற்படையினரால் பயிற்றப்பட்டனர்.
டெலோ அமைப்பைச் சேர்ந்த அந்த முன்னாள்ப் போராளி என்னிடம் பேசும்போது திருகோணமலை துறைமுகத்தினைக் கண்காணிப்பதே இந்தியாவின் முக்கிய குறிக்கோளாகத் தெரிந்ததாக கூறினார். திருகோணமலை அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள்ச் செல்வதைத் தடுப்பதே இந்திய அதிகாரிகளின் ஒரே நோக்கமாக இருந்ததாகவும், இதற்கான பயிற்சியில் தாம் காட்டிய ஈடுபாட்டினையடுத்து ரோ அதிகாரிகள் மகிழ்ச்சியடைந்திருந்ததாகவும் கூறினார்.
ரோ அதிகாரிகளினால் தெரிவுசெய்யப்பட்ட டெலோ அமைப்பின் ஒரு குழுவினர் ஐந்து முக்கியமான புலநாய்வுச் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு பயிற்றப்பட்டனர். அவையாவன,
1. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளிலிருந்து இலங்கைக்குக் கிடைக்கும் இராணுவ உதவிகளை அவதானிப்பது
2. இலங்கையின் உள்நாட்டுப் போரில் பிரித்தானியாவின் முன்னாள் போர்வீரர்களைக் கொண்டியங்கும் கூலிப்படையான கீனி மீனி சேர்விஸஸின் செயற்பாடுகளை அவதானிப்பது
3. பாக்கிஸ்த்தான் மற்றும் சீனாவுடனான இலங்கையின் தொடர்புகளை அவதானிப்பது
4. வொயிஸ் ஒப் அமெரிக்கா எனப்படும் அமெரிக்காவின் வானொலி நிலையத்தின் செயற்பாடுகளை அவதானிப்பது
5. திருகோணமலை துறைமுகத்தினை அவதானிப்பது.
இங்கிலாந்துக் கூலிப்படையான கீனி மீனியின் பயிற்றுவிப்பாளன் ஒருவனுடன் சிங்கள விசேட அதிரடிப்படையினர்
பயிற்சிகளை ஒருங்கிணைத்திருந்தவர்கள் இராணுவ அதிகாரிகள். இவர்கள் ரோவுக்காக வங்கதேசம், சிக்கிம், பாக்கிஸ்த்தான் ஆகிய பகுதிகளில் பணிபுரிந்தவர்கள். ஏனையவர்கள் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள். விசேட பயிற்சிகளுக்கென்றும் தனியான இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்ததுடன், போராளிகள் தில்லியில் இருந்து தமிழ்நாட்டிற்குத் திரும்பிய பின்னரும் இந்த விசேட பயிற்சிகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வந்தன.
சங்கர் ராஜியும் டக்கிளஸ் தேவானந்தாவும் என்னுடன் பேசும்போது சில அதிகாரிகள் இலங்கை குறித்த தகவல்களைத் திரட்டுவதிலேயே அதிக ஆர்வம் காட்டியதாகக் கூறினர். இலங்கையில் இருக்கும் வீதிகள், புகையிரத பாதைகள், பாலங்கள் மற்றும் முக்கியமான இடங்களில் அமைந்திருக்கும் கட்டுமானங்கள் குறித்த வரைபடங்களைத் தயாரிக்குமாறு அதிகாரிகள் தம்மிடம் பணித்ததாகக் கூறினர். பயிற்சியில் ஈடுபடும் போராளிகள் இந்த விபரங்களை இந்திய அதிகாரிகளிடம் கையளிப்பது அவர்களின் கடமை என்று அவர்களுக்குக் கூறப்பட்டது.
கிட்டு எனப்படும் சதாசிவம் கிருஸ்ணகுமார்
தம்மிடம் பயிற்சி பெறுபவர்களை அவ்வப்போது ரோ அதிகாரிகள் பரீட்சித்துப் பார்ப்பார்கள். அவர்களின் பெறுபேறுகளின் அடிப்படையில் அவர்களுக்கு புள்ளிகள் வழங்கப்பட்டன. உண்மையாகவிருத்தல், நன்னடத்தை மற்றும் குறிபார்த்துச் சுடுதல் போன்றவற்றிற்கு புள்ளிகள் வழங்கப்பட்டன.
புலிகளின் போராளிகளே பயிற்சியாளர்களின்போது இந்திய அதிகாரிகளின் நன்மதிப்பைப் பெற்றனர். பயிற்சி முடிந்தபொழுது நடத்தப்பட்ட விடைபெறுதல் நிகழ்வு மிகவும் உணர்வுபூர்வமாக அமைந்திருந்தது. புலிகளைப் பயிற்றுவித்த இராணுவ அதிகாரிகளில் ஒருவர் இறுதி விடைபெறும் உரையினை ஆற்றிக்கொண்டிருக்கும்போதே அழத்தொடங்கினார். புலிகளின் தரப்பில் பேசிய கிட்டுவும் மிகவும் நெகிழ்ந்து காணப்பட்டார். சொற்கள் தொண்டையில் சிக்கிக்கொள்ள கண்கள் கண்ணீரால் நிரம்பியதாக கூடவிருந்த போராளிகள் கூறியிருந்தனர்.
சென்னைக்குத் திரும்பியபோது இந்த நிகழ்வினை பிரபாகரனிடம் பொன்னம்மான் தெரிவித்தார். சிறிது நேரம் மெளனமாகச் சிந்தித்துவிட்டு பிரபாகரன் பேசத் தொடங்கினார்,
"ஒரு குறிக்கோளுக்காகவே நாம் இந்தப் பயிற்சியில் ஈடுபட்டோம். ஆனால், அவர்களோ (இந்தியர்கள்) வேறொரு நோக்கத்திற்காக எமக்குப் பயிற்சியளித்தார்கள். எமது குறிக்கோளுக்கு எதிராக அவர்கள் தமது இராணுவத்தை இறக்கினால் அவர்களுடன் சண்டையிடுமாறு நான் கிட்டுவைக் கோருவோன். கிட்டுவும் இந்திய இராணுவத்துடன் சண்டையிட்டே ஆகவேண்டும்" என்று கூறினார்.
சுமார் நான்கு வருடங்களுக்குப் பின்னர் இந்திய இராணுவத்தை எதிர்த்துச் சண்டையிடுவது என்று பிரபாகரன் முடிவெடுத்தபோது இந்த நிகழ்வினை கிட்டு நினைவுகூர்ந்தார்.